வியாழன், 29 பிப்ரவரி, 2024

சிறுத்தையே வெளியில்வா - பாரதிதாசன்

சிறுத்தையே வெளியில்வா

பாரதிதாசன்

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!

எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

நம்பினை பகலினை நள்ளிருள் என்றே

சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!

சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!

இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?

கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்

பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,

வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?

மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்

புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்

வையம் ஆண்ட வண்டமிழ் மரபே

கையிருப்பைக் காட்ட எழுந்திரு!

குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?

மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!

பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!

மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!

கைக்குள திறமை காட்ட எழுந்திரு!

வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!

வாழ்க திராவிட நாடு!

வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

பாடல் விளக்கம்

தமிழரின் உரிமை காக்க, தமிழ் மொழியை மேம்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் இப்பாடலில் வலியுறுத்துகின்றார். இளைஞர்களைப் பார்த்து,

  • “இதுவரை அடிமைத்தளத்தில் இருந்த கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு விட்டன. அதனால் சிறுத்தை போன்ற இளைஞர்களே! வெளியே வாருங்கள்! எலி என நினைத்து இகழ்ந்தவர்களுக்கு முன்பாக, புலி என காட்டிட செயல் வீரர்களாக புறப்படுங்கள்!
  • நள்ளிரவை பகல் என நம்பியது போதும். பறவை போல சிறகை விரித்து உயர பறக்க முயற்சி செய்யுங்கள்!
  • சிங்கம் போன்ற இளைஞர்களே! உங்கள் சிந்தனைகளை, தாய் நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கச் செயல்படுத்துங்கள்! உங்கள் அறிவுக் கண்களைத் திறந்து பாருங்கள்!
  • தாய்நாட்டைக் கழுதை போன்ற சிந்தனை கொண்டவர்கள் ஆட்சி செய்ய அனுமதிக்கலாமா? 
  • வெறும் கையை ஏந்தி வந்த கயவர்கள், பொய்களை உரைத்து, அறிவை மழுங்கச் செய்து, தமிழ் மொழிக்குத் தடை விதித்து, நாட்டைக் கைப்பற்றி விட்டனர். 
  • நம் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, அவற்றை அவர்களுடையது என்று கூறுகின்றனர். காலங்காலமாக வீரத்துடன் வாழ்ந்த நாம் அதைக் கேட்டுக் கொண்டு இருக்கலாமா? உங்கள் மொழிப் பற்றைப் புதுப்பித்துக் கொண்டு விழித்தெழுங்கள்!
  • மானத்திற்கு அஞ்சி வாழ்ந்த தமிழினம், புகழ்ச்சியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும். அப்படிப்பட்ட வலிமை மிகுந்த மரபில் வந்த இளைஞர்களே! உங்கள் கைகளின் செயல்திறனைக் காட்ட வாருங்கள்! உயர்ந்த குறிக்கோள்கள் நிறைந்த இளைஞர் கூட்டத்தைக் கூட்டுங்கள்!
  • கடல் போல பகை வளர்ந்துள்ளது. ஆகவே, தாய்மொழிக்கு விடுதலை தரவும், தமிழ் மொழிக்குப் புதுமை சேர்க்கவும் மக்களை ஒன்று சேர்த்து இணைத்து வாருங்கள்! அதன் மூலம் தமிழர்களின் வாழ்வை உயர்த்திடுங்கள்!” என்று இளைஞர்களைத் தம் பாடல் மூலம் வீறு கொள்ளச் செய்கின்றார் பாரதிதாசன்.