சனி, 20 மார்ச், 2021

ஐங்குறுநூறு - கிள்ளைப்பத்து

 

ஐங்குறுநூறு

கிள்ளைப்பத்து: (குறிஞ்சித்திணை)

   கிள்ளைப் பத்தின் பத்துப் பாடல்களும் குறிஞ்சித் திணையில் அமைந்தவை. குறிஞ்சித்திணையின் கருப்பொருள்களுள் ஒன்று கிளி. கிளியின் செயல்களால் அகமகிழ்ந்த தலைவனின் செயல்களை இப் பத்துப் பாடல்களில் பாடியுள்ளமையால் கிள்ளைப் பத்து எனப் பெயர் பெற்றது. 

1

கூற்று : தலைவன்

தலைவி தன் தோழிகளோடு சோலையில் விளையாடினாள். அப்பொழுது அங்கு வந்த தலைவன் தலைவியைக் கண்டு காதல் கொண்டான். பின்னர் ஒரு நாள் தன்னுடைய காதல் தலைவியைத் தினைப்புனத்தில் சந்தித்தான்.

பாடல்:

வெள்ள வரம்பின் ஊழி போகியும்

கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை

இரும்பல் கூந்தல் கொடிச்சி

பெருந்தோள் காவல் காட்டி யவ்வே. 

பொருள் விளக்கம்:

தலைவி கிளிகளை விரட்ட தினைப்புனக் காவலுக்கு வந்தமையால் கிளிகள் நூறாயிரம் (வெள்ளம்) ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்திற்கு வாழட்டும். கிளிகள் விளைந்திருக்கும் தினையை உண்ண வருவதால்தானே தலைவி கிளிகளை ஓட்டுவதற்காகத் தினைப்புனம் காவலுக்கு வருகின்றாள். அதனால் என்னால் தலைவியைக் கண்டு காதல் கொள்ள முடிகின்றது. எனவே இக்கிளிகளை வாழ்க என்று வாழ்த்துகின்றான் தலைவன்

வெள்ளம் - வெள்ளம் என்பது நூறாயிரம் என்னும் பேரெண் ஆகும். பழந்தமிழ் இலக்கியங்களில் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பன பேரெண்களைக் குறிக்கின்றன. இப்பாடலிலும் வெள்ளம் என்பது நூறாயிரம் என்னும் பேரெண்ணைக் குறிக்கிறது.

2

கூற்று : தோழி

தோழி இரவுக்குறி விலக்குவதற்காகத் தலைவனிடம் கூறியது. இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வரும் வழிகளில் ஏற்படும் துன்பங்களை விளக்கிக் கூறி இரவில் வராதே என்றல். இதன் குறிப்பாகத் தலைவியை விரைவில் திருமணம் புரிந்துகொள்ள தோழி வற்புறுத்துகிறாள்.

பாடல்

சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்

பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்

சோலைச் சிறுகிளி உன்னு நாட

அரிருள் பெருகின வாரல்

கோட்டுமா வாழங்கும் காட்டக நெறியே.   

பொருள் விளக்கம் :

தலைவியை விரும்பும் தலைவனிடம் தோழி “மலைச்சாரலில் பருத்த கதிர்களுடன் தினை விளைந்திருக்கிறது. தலைவியாகிய கொடிச்சி அவற்றைத் தின்ன வரும் கிளிகளை ஓட்டுகிறாள். அவள் தலைவனை விரும்பும் கண்களோடு கிளிகளை ஓட்டுகிறாள். தலைவி இதே மனநிலையில் எப்பொழுதும் கிளி விரட்டவேண்டும் என்று விரும்பும் தலைவனே! தினை முற்றிய நிலையில் அறுவடை நிகழ்வதால் தலைவி தினைப்புனக் காவலுக்கு வரமாட்டாள். தலைவியைச் சந்திக்கும் பொருட்டு இருள் நிறைந்த இரவில் வரவேண்டாம். மலைச்சாரலில் கொம்புகளை உடைய காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த யானைகளால் துன்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இரவில் வந்து தலைவியைச் சந்திப்பதைத் தவிர்ப்பாயாக” என்று தலைவனிடம் வேண்டினாள்.

 

3

தோழி கூற்று

தலைமகன் கேட்கும் வகையில் தோழி கூறியது

கூற்று விளக்கம் :

தோழி வாயில் மறுக்கவும் தலைமகனின் துயரைக் கண்டு தலைவி வேண்ட, தலைவனுக்கு உணர்த்தும் பொருட்டு தோழி பாடிய பாடல்.

பாடல்:

                     வன்கண் கானவன் மென்சொல் மடமகள்

புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்

பைம்புறச் சிறுகிளி கடியும் நாட

பெரிய கூறி நீப்பினும்

பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே.  

பொருள் விளக்கம்:

 தினைப்பயிர்களைக் காவல் செய்யும் தலைவி மிகவும் மென்மையான தன்மை உடையவள். தலைவன் கிளிகள் வாழும் நாட்டில் வாழ்பவன். அவன் தன் விருப்பத்தின் காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான். பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் வந்து தலைவியோடு சேர நினைக்கிறான். தலைவியும் தலைவனை ஏற்றுக்கொள்கின்றாள் இதனால் பலரும் தலைவனைத் தவறாகப் பேசினர். தலைவியிடம் தலைவனோடு பேசி மகிழாதே என்று சுற்றத்தினர் தலைவிக்கு உரைத்தனர். உற்றார் உறவினர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளாத தலைவி, தலைவனின் பொய்மையான அன்பில் மகிழ்ந்திருந்தாள். சங்ககால பெண்கள் கணவனின் தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

4

கூற்று :தோழி

கூற்று விளக்கம்:

தினைப்பயிர்கள் முற்றியமையால் அறுவடை முடிவுற்றது. இந்நிலையில் தலைவி தினைப்புனம் காவலுக்கு வரவில்லை. ஆனால் தினந்தோறும் தலைவியை பார்த்த தலைவன் மீண்டும் தலைவியைப் பார்ப்பதற்காக வந்துள்ளான். தினைப்பயிர்கள் அறுவடை முடிந்தமையால் கிளிகளே இங்கு வரவேண்டாம் என்று கிளிகளுக்குக் கூறுவதுபோல் தலைவனுக்குக் கூறியது.

பாடல்:

அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி

குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்

இருவை நீள்புனங் கண்டும்

பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.

பொருள் விளக்கம்:

குன்றக்குறவர்கள் தங்கள் விளைநிலங்களில் உள்ள கதிர்களை அறுவடை செய்து விட்டனர். கதிர்களை எடுத்த அடிப்பகுதி மட்டுமே நிலங்களில் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் கிளிகள் வந்து செல்கின்றன. அவற்றைப் பிரிய கிளிகளுக்கு மனம் இல்லை. அறுவடை முடிந்தமையால் தலைவி தினைப்புனம் காவல் காக்க வரமுடியாது. எனினும், அக்கிளிகளைப்போல அவளும் உன்னை விட்டுப் பிரிய மனமில்லாதவளாக இருக்கின்றாள் என்பதைக் குறிப்பால் தலைவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி.

5

 

கூற்று : தோழி

கூற்று விளக்கம்:

தலைவன் தலைவியை விட்டுச் சிலகாலம் பிரிந்து சென்றான். மீண்டும் வந்த தலைவனிடம் தோழி கூறியது.

பாடல்:

பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்

மெல்தினை நுவனை யுண்டு தட்டையின்

ஐவனச் சிறுகிளி கடியும் நாட

வீங்குவளை நெகிழப் பிரிதல்

யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே.

பொருள் விளக்கம் :

தலைவி பின்னிய கருமையான கூந்தலையும் அழகிய நெற்றியையும் உடையவள். இவள் குறவர் குலத்தில் உள்ள குறமகள். இவள் மென்மையான தினையின் மாவை உண்டு வாழ்பவள். தினைப்புனம் காவலில் உள்ள தலைவிக்கு நன்மை செய்யும் வகையில் தட்டை என்னும் கருவியால் கிளியை விரட்டும் மலை நாட்டு தலைவன் நீ! இவ்வகையில் தலைவிக்கு நல்ல செயல்களைச் செய்து அன்பு காட்டிய நீ, அவள் அணிந்திருந்த கைவளையல்கள் கழன்று விழும்படி தனியே விட்டுவிட்டு பிரிந்து செல்லுதல் முறையாகுமோ? என்று தோழி தலைவனிடம் வினவுகிறாள்.

தட்டை: கிளியை விரட்டும் கருவி மூங்கில் கம்பின் தடியினைப் பிளந்து உருவாக்கிய கருவி. தட்டி ஒலியெழுப்பிக் கிளியை விரட்டும் கருவி ஆதலால் தட்டை என்னும் பெயர் பெற்றது.

தட்டை - இசைக்கருவி


6

கூற்று : தலைவி

கூற்று விளக்கம் :

திருமணத்திற்காகப் பொருள் தேடிப் பிரிந்து சென்றுள்ள தலைவன் குறித்துத் தலைவி தோழியிடம் கூறியது.

பாடல்:

சிறுதினை கொய்த இருவை வெண்கால்

காய்த்த அவரைப் படுகிளி கடியும்

யாண ராகிய நன்மலை நாடன்

புகரின்று நயந்தனன் போலும்

கவரும் தோழிஎன் மாமைக் கவினே.

பொருள் விளக்கம்:

குறவர்கள் முற்றிய தினைக்கதிர்களை அறுவடை செய்துவிட்டனர்.  தினைப்பயிர்களின் அடிப்பாகங்களின் நடுவே விதைக்கப்பட்ட அவரைச் செடிகள் காய்த்துக் காணப்படுகின்றன. இந்தச் செடிகளிலும் கிளிகள் வந்து அமர்ந்து செல்கின்றன. இவ்வாறு எப்பொழுதும் புதிய வருவாயை உடைய வளமான மலைநாட்டின் தலைவன்,  என்னை விரும்பி என் அழகு நலனைக் கவர்ந்து சென்றுவிட்டான். மீண்டும் விரைவில் வந்து என்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்று தோழியிடம் கூறினாள் தலைவி.          

7

கூற்று: தோழி

கூற்று விளக்கம்:

திருமணத்தை விரைவில் முடிக்காமல் காலம் கடத்திய தலைவனுக்குத் தோழி கூறியது.

பாடல்:

நெடுவரை மிசையது குறுங்கால் வருடை

தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட

வல்லை மன்ற பொய்த்தல்

வல்லாய் மன்றநீ அல்லது செயலே.

பொருள் விளக்கம்:

உயரமான மலை மேல் வாழும் வருடைமான் குறுகிய கால்களை உடையது. கிளிகள் இம்மான்களைக் கண்டு பயந்து செல்கின்றன. இச்சூழலில் வாழும் மலை நாட்டுத் தலைவனே, நீ பொய் சொல்வதில் மட்டுமே வல்லவன். இப்பொய்க்கு மாறாக எதையும் செய்யும் ஆற்றல் உனக்கில்லை என்று இடித்துரைத்தாள். குறிப்பிட்ட நாளில் திருமணம் புரிந்து கொள்வேன் என்று உறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல் மீண்டும் காலம் தாழ்த்துவது நல்லது அல்ல என்று தலைவனிடம் கூறி தலைவியைத் திருமணம் செய்ய  அறிவுறுத்துகின்றாள் தோழி.

8

கூற்று : தலைவன்

கூற்று விளக்கம்:

தலைவி தினைப்புனம் காவலுக்கு வந்துள்ளாள். இச்செய்தியைக் கேட்டு மகிழ்ந்து தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியது.

பாடல்:

நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து

யாம் எவன் செய்குவம் நெஞ்சே

மெல்லியல் கொடிச்சி காப்பப்

பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே.

பொருள் விளக்கம்:

தினைப்பயிர்கள் கதிர்களை விரிக்கத் தொடங்கின, தினைகள் முற்ற ஆரம்பித்தன. கிளிகள் தினைப்பயிர்களை உண்பதற்காகப் பறந்து வந்தன. இதனால் தலைவி கிளி விரட்ட காவலுக்கு வந்தாள். தலைவியின் வரவு தலைவனுக்கு மகிழ்வைத் தந்தது. தலைவியின் வருகைக்குக் காரணமாக அமைந்த கிளிகளுக்கு நன்மை செய்வேன் என்று கூறினான் தலைவன். கிளிகள் செய்த உதவிக்கு எந்த பதிலுதவியும் செய்ய இயலாதே என்று தன் நெஞ்சிடம் கூறி மகிழ்ந்தான்.

9

கூற்று : தோழி

கூற்று விளக்கம்:

தோழி தலைவியின் வீட்டுக்காவல் குறித்த செய்திகளைத் தலைவனுக்குக் கூறியது. தலைவியின் சுற்றத்தினர் தலைவியை இல்லக் காவலில் வைத்தனர். இதனால் தோழி தலைவனைச் சந்தித்து விரைவில் திருமணம் முடிக்கும்படி கூறியது.

பாடல்

கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்

பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக்

காவலும் கடியுநர் போல்வர்

மால்வரை நாட வரைந்தனை கொண்மோ.

பொருள் விளக்கம்:

குறமகளாகிய தலைவியின் குரலானது கிளிகளின் குரலைப் போன்றிருந்தது. தலைவி கிளி விரட்டும்போது எழுப்பும் ஓசையைக் கேட்டுக் கூட்டம் கூட்டமாகத் தினையை உண்ணக் கிளிகள் வரும் என்று அஞ்சிய உறவினர்கள், தலைவியைத் தினைப்புனம் காவலில் இருந்து விலக்குவர். எனவே தலைவியைச் சந்திப்பது அரிதாகலின் விரைவில் திருமணம் முடித்துக் கொள்க என்று அறிவுறுத்தினாள் தோழி.

 

10

கூற்று : தோழி

கூற்று விளக்கம்:

தலைவியின் காதல் நிலை உணர்ந்த உறவினர்கள் அவளை வீட்டின்கண் சிறை வைத்தனர். இந்நிலையில் இரவுக்குறி மறுத்தாள் தோழி. இதனால் வெறுப்படைந்த தலைவன் கேட்கும்படித் தோழி கூறியது.

பாடல்:

அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி

சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய

பூக்கமழ் கூந்தல் கொடிச்சி

நோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே.

பொருள் விளக்கம்:

“அறம் செய்யும் செங்கோல் அரசனால் மக்களுக்கு நன்மை விளையும். கிளியே, நீயும் அவன் போல நன்மை செய்கிறாய். என் காதலி கொடிச்சி போல அழகுடன் திகழ்கிறாய். அவள் தினைப்புனம் காக்க வரும்படித் தினையைக் கவர்கிறாய். நறுமணம் வீசுகின்ற பூக்களை அணிந்த, கொடி போன்ற இடையை உடைய தலைவி மீண்டும் தினைப்புனம் காவல் காக்க வந்து, கிளிகளை விரட்டுவாள்” என்று தலைவன் கேட்கும் வகையில் தோழி கூறினாள்.


ஆக்கத்தில் உதவி

முனைவர் ஜா.கீதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி.

 

2 கருத்துகள்: