செவ்வாய், 30 ஜூன், 2020

நமச்சிவாயத் திருப்பதிகம்

திருநாவுக்கரசர் - நமச்சிவாயத் திருப்பதிகம்

பாடலும் விளக்கமும்

பாடல் எண் - 1

சொல் துணை வேதியன் சோதி வானவன்
பொன்துணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கல்துணைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
நல்துணையாவது நமச்சிவாயவே

விளக்கம்

சொற்களுக்கெல்லாம் வேதமாக விளங்கக்கூடியவன் சிவபெருமான். அவன் சோதி வடிவமாகக் காட்சியளிக்கின்றான். அவனுடைய பொன் போன்ற திருவடிகளை மனதில் பொருத்திக் கைதொழுது வணங்கினால், நம்மைக் கல்லில் கட்டிக் கடலில் வீசினாலும் நமசிவாய என்ற மந்திரம் கல்லைத் தெப்பமாக மாற்றி நம்மைக் கரை சேர்க்கும்.


பாடல் எண் - 2

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்

இறைவிகள் யாவரும் தாமரையில் வீற்றிருக்கின்ற காரணத்தால் பூக்களுக்கெல்லாம் அணிகலனாகத் திகழ்கின்றது தாமரை. இறைவனுக்குரிய அபிடேகப் பொருட்களான பால், தயிர், நெய், கோசலம் (சாணம்), கோமியம் ஆகியவற்றைத் தருகின்ற காரணத்தால் விலங்குகளுக்கெல்லாம் அணிகலனாக பசு திகழ்கின்றது. நீதி தவறாது ஆள்கின்ற காரணத்தால் அரசனுக்கு அணிகலன் செங்கோன்மை. அதுபோல நம் நாவினுக்குச் சிறந்த அணிகலன் நமசிவாய என்னும் மந்திரமாகும்.

பாடல் - 3

விண்உற அடுக்கிய விறகின் வெவ்ழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுபப்து நமச்சிவாயவே

விளக்கம்

வானளவிற்கு விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்திருப்பினும் ஒரு சிறிய தீக்குச்சி அவற்றைச் சாம்பலாக்கி விடும். அதுபோல இந்த உலகத்தில் நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் நமசிவாய என்ற மந்திரம் நீக்கிவிடும்.

பாடல் - 4

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கல்கீழ்க் கிடக்கினும் அருளினாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே

விளக்கம்

வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும், வேறு ஒரு கடவுளிடம் சென்று  யாசித்து “என்னைக் காப்பாற்று” என்று கூற மாட்டோம். மலையின்கீழ்ச் சிக்குண்டு கிடப்பினும் எமக்கு உண்டான நடுக்கத்தைக் கெடுத்துக் காப்பாற்றும் வல்லமை கொண்டது நமசிவாய என்னும் மந்தரமாகும். 

பாடல் - 5

வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறு அங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும்நீள் முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்

சிவபெருமானை எண்ணி விரதம் இருப்பவர்களுக்குத் திருநீறு அணிகலனாக விளங்குகின்றது.  நான்கு மறை, ஆறு அங்கம் ஓதுதல் அந்தணர்களுக்கு அணிகலனாகும். திங்களுக்கு அணிகலன் சிவபெருமான் திருமுடி. அதுபோல நம் அனைவருக்கும் அணிகலன் நமசிவாய என்னும் மந்திரமாகும்.

பாடல் - 6

சலம்இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலம்இலன் நாள்தோறும் நல்குவான் நலம்
குலம் இலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர் 
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே

விளக்கம்

சிவருமானைச் சரணடைந்தவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. அனைவருக்கும் நாள்தோறும் நலத்தை அளிப்பவன். நல்ல குலத்தில் பிறவாதிருப்பினும் சிவபெருமானின் நாமத்தை ஓதினால் அவர்களுக்கும் நன்மை அளித்துக் காப்பாற்றும் தன்மை கொண்டது நமசிவாய என்னும் மந்திரமாகும்.

பாடல் - 7

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே

விளக்கம்

வீடு பேறு அடைய விரும்பிய தொண்டர்கள் ஒன்று கூடிச் சிவநெறியைப் போற்றினர். நானும் அந்நெறியைத் தேடிச் சென்று, நமசிவாய மந்திரத்தை நாடினேன். அம்மந்திரம் என்னைப் பற்றிக் கொண்டு நன்மைகள் பலவற்றை அளித்தது.

பாடல்  - 8 

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே

விளக்கம் 

இல்லத்தில் ஏற்றி வைக்கப்படும் விளக்கு புற இருளை நீக்கும். சொல்லின் அகத்தே நின்று ஒளியுடையதாக விளங்கிப் பலரும் காணுமாறு திகழ்கின்ற நமசிவாய விளக்கு நம் அக இருளை நீக்கிவிடும்.


பாடல் - 9 

முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்நெறியே சரண்ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்நெறியாவது நமச்சிவாயவே

விளக்கம்

சைவநெறியே முதல் நெறி. அந்நெறியின் தலைவன் மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமான். அவருடைய நெறியில் சரணடைந்தவர்களுக்கு நல்ல வழியைக் காட்டுவது நமசிவாய என்னும் மந்திரமாகும்.


பாடல் - 10

மாப்பிணைத் தழுவிய மாது ஓர் பாகத்தான்
பூப்பிணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே

விளக்கம்

மான் போன்ற அழகிய உமா தேவியைத் தன் இடப்பாகத்தில் வைத்திருக்கும் சிவபெருமானின் பூப்போன்ற திருவடிகளை மனதில் பொருத்திக் கைதொழுது வணங்கி, நமசிவாய மந்திரத்தைக் கூறினால் வாழ்நாளில் எத்தகைய துன்பங்களும் நம்மைத் தொடர்வதில்லை.


சனி, 27 ஜூன், 2020

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடப்பட்டவை. பத்தாம் நூற்றாண்டில் இராசராசச் சோழன்கோவில்களில் வாய்மொழியாகப் பாடப்பட்ட தேவாரப் பாடல்களைத் தொகுக்க எண்ணினார். நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோயிலில் தேவாரப் பாடல்கள் இருப்பதை அறிந்தார். தேவாரம் பாடிய மூவர் வந்தால் மட்டுமே அறையின் கதவைத் திறக்க முடியும் என்ற நிலையில்தேவார மூவரையும் சிலை வடிவில் அங்குக் கொண்டு வந்து நிறுத்தி அறையின் கதவைத் திறக்கச் செய்தார். அங்கே ஓலைச்சுவடிகள் பல செல்லரித்திருந்ததைக் கண்டு மனம் வருந்தி எஞ்சியவற்றைப் பாதுகாத்து நம்பியாண்டார் நம்பியிடம் ஒப்படைத்தார். கி.பி.பதினோராம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி அவற்றை பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார். பின்னர் அநபாயச் சோழனின் வேண்டுகோளுக்கிணங்கிச் சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் பன்னிரெண்டாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.

 திருமுறை - விளக்கம்

     திரு என்றால் தெய்வீக நூல் என்று பொருள்படும். முறை என்றால்  வாழ்வினை நெறிப்படுத்தக்கூடிய நூல் என்று பொருள்படும்.  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பல கருத்துகள் தாங்கிய தெய்வீக நூல் என்ற பொருள்பட திருமுறை என்ற பெயர் விளங்குவதாயிற்று. 

தேவாரம் - விளக்கம்

    தே + ஆரம் = தேவாரம். தேன் போன்ற இனிமையான பாடல்களை இறைவனுக்கு அணிகலனாகச் சூட்டியமையால் தேவாரம் எனப்பட்டது.

 தேவார மூவர் 

       திருநாவுக்கரசர்திருஞானசம்பந்தர்சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடிய பெரியோர்கள் ஆவர். இவர்கள் பாடிய பதிகங்கள் யாவும் தேவாரம் என்ற பெயரால் அறியப்படுகின்றன.

 

ன்னிரு திருமுறைகளின் தொகுப்பு

1,2,3ஆம் திருமுறைகள்

திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1,2,3ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. 

4,5,6 ஆம் திருமுறைகள்

திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 4,5,6ஆ-ம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இவரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.

7ஆம் திருமுறை

சுந்தரர் பாடிய பாடல்கள் 7ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. 

8ஆம் திருமுறை

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும்திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 

9ஆம் திருமுறை

திருமாளிகைத்தேவர்கருவூர்த்தேவர்பூந்துருத்தி நம்பிகண்டராதித்தர்வேணாட்டடிகள்திருவாலியமுதனார்புருசோத்தம நம்பிசேதிராயர்சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பாதிருப்பல்லாண்டு ஆகியவை ஆகும். 

10ஆம் திருமுறை

திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பக்தியோடு யோகாசன முறைகளையும் எடுத்துக் கூறுகிறது. 

இந்நூலுக்குத் திருமந்திர மாலைதமிழ் மூவாயிரம் என்னும் வேறு பெயர்களும்உண்டுதிருமந்திரம் 9 தந்திரங்களும் 232 அதிகாரங்களும் கொண்டுள்ளதுஇந்நூலை இயற்றிய திருமூலர் திருவாவடுதுறை அரச மரத்தடியில் யோகம் இருந்தார்ஆண்டுக்கு ஒருமுறை விழித்தெழுந்து ஒரு பாடல் வீதம் 3000 பாடல்கள் பாடியதாகக் கூறப்படுகிறது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற புகழ் பெற்ற தொடர் இந்நூலில் இருந்தே பெறப்பட்டது.

11ஆம் திருமுறை

திருஆலவாயுடையார்காரைக்கால்அம்மையார்ஐயடிகள்காடவர்கோன்,சேரமான்பெருமான்நக்கீரர்கல்லாடர்கபிலர், பரணர்,இளம்பெருமாள்அடிகள்அதிராவடிகள்,பட்டினத்தடிகள்நம்பியாண்டார் நம்பி ஆகிய பதினோரு நபர்களால் பாடிய பாடல்கள் 11-ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 11-ஆம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

12ஆம் திருமுறை

63 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றி சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 12-ஆம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்உத்தமச் சோழப் பல்லவன் என்ற பட்டம் பெற்றவர்அநபாயச் சோழன் சிந்தாமணி நூலின் மேல் விருப்பம் கொண்டிருந்ததைக் கண்டு அம்மன்னனைச் சைவத்தின் மீது திருப்ப சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடினார் என்பர்திருத்தொண்டர் புராணமே நாளடைவில் பெரியபுராணம் என வழங்கப்பட்டு வருகிறது.

சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகவும்நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு சேக்கிழார் பெரியபுராணம்பாடியுள்ளார்இந்நூல் 3 சருக்கங்களையும் 4286 பாடல்களையும் கொண்டுள்ளது


பன்னிரு திருமுறைகளின்

சிறப்புப் பெயர்கள்

·      முதல் திருமுறையின் முதல் பாடல் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ‘’ என்பது பிரவண மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது. பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் ‘உலகெல்லாம்’ என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ‘ம்’ என்பது பிரவண மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது. எனவே, இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன. 

         பன்னிரு திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 10ஆம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.   11ஆம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.   12ஆம் திருமுறை பாடல்கள் 63 நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.

 

 



 

 

 

 

சைவ சமயக் குரவர்கள்

சைவ சமயக் குரவர்கள் 

  திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரர்மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயக் குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களின் சிறப்பைப் பின்வருமாறு காணலாம்.

திருஞானசம்பந்தர்

இவர் பாடிய பதிகங்கள் 16,000 என்பர். ஆனால்  384 பதிகங்களே நமக்குக் கிடைத்துள்ளனஅவை யாவும் தேவாரம் என்ற பெயரில் பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை திருக்கடைக்காப்பு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 

     கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர்தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோதுதந்தையாருடன் கோயிலுக்குச் சென்றார்அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார்சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம்தந்தையைக் காணாத குழந்தை அம்மை அப்பா என்று கூவி அழஅப்போது உமாதேவியார் சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டினார்இறை தரிசனம் பெற்ற ஞானசம்பந்தர் “தோடுடைய செவியன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.  இவர் காழி வள்ளல்,  ஆளுடைய பிள்ளை என்றும் வழங்கப்படுகிறார். 16 ஆண்டுகளே மட்டுமே வாழ்ந்தவர்தம் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்கள திருநல்லூர் நம்பாண்டார் மகள் சொக்கியாரை மணம் முடிக்கச் சம்மதித்தார்திருப்பெருமணநல்லூரில் திருமணத்திற்கு முன் ஒரு பதிகம் பாடி திருமணக் கோலத்துடன் சுற்றம் சூழ இறை ஒளியில் கலந்து விட்டார்.

சிறப்புப் பட்டங்கள்

பண்ணோடு கூடிய பாடல்களைப் பாடியமையால் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என்று பாராட்டப்பட்டார்.
ஆதிசங்கரர் தனது சௌந்தர்யலகரியில் “திராவிடசிசு” என்று குறிப்பிடுகிறார்.
அற்புதங்கள்

  • மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டார்
  • சிவனிடம் பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும் பெற்றார்.
  • வேதாரணியத்தில் திருக்கதவு அடைக்கப்பாடினார்.
  • பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கினார்.
  • தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தார்.
  • வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தார். 
  • சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றார். 
  • விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தார்.

பின்பற்றிய நெறி

·    திருஞானசம்பந்தர் சத்புத்ர மார்க்கத்தால் இறைவனை வழிபட்டார்அது மகன்மை நெறி என்றும்கிரியை நெறி என்றும் கூறப்படுகிறது.

 திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் 4900 என்பர்

ஆனால் இன்று 313 பதிகங்களே கிடைத்துள்ளனஅவை யாவும் பன்னிரு திருமுறைகளுள் தேவாரம் என்ற பெயரில் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன  தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்ற கருத்தை இவர் பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

   இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் பிறந்தவர்தந்தை புகழனார்தாயார் மாதினியார்பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் மருள்நீகியார்

இளமையிலேயே பெற்றோரை இழந்து தமக்கை திலகவதியாரால் வளர்க்கப்பட்டார்தொடக்கத்தில் சமண மதம் சார்ந்து தருமசேனர் என்ற பட்டம் பெற்றார்தம் சகோதரன் வழி தவறிச் செல்வதைக் கண்ட திலகவதியார் சிவபெருமானிடம் மனமுருகி வேண்டஇறைவன் நாவுக்கரசருக்குச் சூலை நோய் தந்தார்நோயால் துன்பமடைந்த நாவுக்கரசர் எவ்வித சிகிச்சையும் பலனளிக்காமல் போகவே தம் தமக்கை திலகவதியாரிடம் வந்து சேர்ந்தார்திலகவதியார் திருவதிகை அழைத்துச் சென்று திருநீறு அணிவித்தார்பின் வீரட்டானேசுவரம் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பதிகம் பாட நோய் தீர்ந்து நலம் பெற்றார்சைவ மதமே சிறந்தது என்றெண்ணி சமணம் தவிர்த்து சைவத்திற்கு மாறினார்.

அதைக் கண்ட சமணர்கள் வெகுண்டுபல்லவ மன்னன் மகேந்திரவர்மனிடம் நாவுக்கரசர் மீது புகார் கூறினர்மன்னனும் பலவாறு அவருக்குத் துன்பங்களைக் கொடுக்கசிவனின் திருவருளால் நாவுக்கரசர் உயிர் பிழைத்தார்பின்பு பல்லவ மன்னனையும் சைவனாக்கினார். 80 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்இவரது காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என்பர்.

வேறு பெயர்கள்

        வாகீசர்தாண்டக வேந்தர்அப்பர்

அற்புதங்கள்

  •  திருமறைக்காட்டில் திருக்கதவு திறக்கப் பாடினார்.
  •  சிவனிடம் படிக்காசு பெற்றார்.
  • பாம்பின் விடத்தினால் உயிர்நீத்த அப்பூதி அடிகளின் மகன் மூத்தத் திருநாவுக்கரசரை உயிர்ப்பித்தார்.
  • மகேந்திர பல்லவனைச் சைவனாக்கினார்.
தொண்டு

   உழவாரப்படை கொண்டு கோயில்கள்தோறும் உழவாரப் பணி செய்து இறைவக்குத் தொண்டு செய்தார்.

பின்பற்றிய நெறி

    இவர் இறைவனுக்கு முன் தன்னைச் தாசனாகப் (அடிமைபாவித்துக் கொண்டார்எனவே இவருடைய நெறியைத் தாச மார்க்கம் என்று அழைப்பர்இது சரியை என்றும் கூறப்படும்.

சுந்தரர் 

  சுந்தரர் பாடிய பதிகங்கள்  38000 என்பர். இன்று நமக்குக் கிடைப்பவை 100 பதிகங்கள். அவை பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.  அவை திருப்பாட்டு என்று வழங்கப்படுகிறது. 

இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் பிறந்தவர்தந்தை சடையனார்தாயார் இசைஞானியார்இவரது இயற்பெயர் நம்பி ஆரூரர்இவரது இளமை எழிலில் மயங்கிய அரசன் நரசிங்க முனையரையன் இவரைத் தன் பிள்ளையாக எடுத்து வளர்த்தான்.

கயிலையில் சிவபெருமானின் அணுக்கத் தொண்டராக இருந்த ஆலால சுந்தரரே இந்த நம்பிஆரூரர் ஆவார்கயிலையில் உமையம்மையின் தோழிகளான கமலினிஅனிந்ததை என்ற பெண்களைக் கண்டு மனம் மயங்கியதால் பூவுலகில் பிறந்து அவர்களை மணந்து இல்லறம் நடத்திப் பின் கயிலை வந்தடையுமாறு இறைவனால் பூவுலகிற்கு அனுப்பப்பட்டார்அப்போது பிற மாதரை மணக்க நேரின் தன்னை வந்து தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று ஆலால சுந்தரர் சிவனிடம் வேண்டிக் கொண்டார்அதன்படி பூவுலகில் பிறந்த நம்பி ஆரூரருக்குச் சடங்கவிச் சிவாசாரியர் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதுஅவ்வமயம் இறைவன் முதியவர் வேடத்தில் வந்து சுந்தரரைத் தன் அடிமை என்று வாதிட்டுதிருமணத்தை நிறுத்தித் தடுத்தாட் கொண்டார். திருவெண்ணெய் நல்லூரில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர் இறைவனின் ஆணைப்படி பித்தா பிறைசூடி என்ற பாடலைப் பாடினார்.

இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டுப் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடிப் பதிகம் இயற்றி வந்தார்திருவாரூரில் பரவை நாச்சியாரையும்திருவொற்றியூரில் சங்கலி நாச்சியாரையும் மணந்து வாழ்ந்து தனது பதினெட்டாம் வயதில் இறைவனோடு ஒன்றறக் கலந்தார்.  இவரது காலம் கி.பி 7 அல்லது 8 ஆம்  நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.

வேறு பெயர்கள்

தம்பிரான் தோழர்வன் தொண்டர்திருநாவலூரார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

அற்புதங்கள்

  • 12,000 பொன்னை மணிமுத்தாறில் போட்டு கமலாலயத்தில் எடுத்தார்.
  • அவிநாசியில் முதலையுண்ட பிள்ளையை  உயிர்த்தெழச் செய்தார்.
  •  தம் காதலுக்காக இறைவனையே தூது   விடுத்தார்.
பின்பற்றிய நெறி

இவர் இறைவனைத் தன் தோழனாகப் பாவித்தார்ஆகவே அந்நெறி சகமார்க்கம் என்றும்யோக நெறி என்றும் கூறப்படுகிறது.

சிறப்பு

நம்பியாண்டார் நம்பி அவர்களின் திருத்தொண்டர் திருவந்தாதிக்கும்சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்திற்கும் மூலமாகத் திகழ்வது இவர் எழுதிய திருத்தொண்டர் தொகையே ஆகும்.

மாணிக்கவாசகர்

பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்தவர்இவரது இயற்பெயர் தெரியவில்லைஊர்ப்பெயரால் திருவாதவூரார் என்று அழைக்கப்படுகிறார்கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அறிவாற்றலில் சிறந்து விளங்கிய இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராகப் பணி புரிந்தார்அப்போது மன்னனால் தென்னவன் பிரமராயன் என்ற பட்டமளித்துப் பாராட்டப்பட்டார்.

மன்னனுக்காகக் குதிரை வாங்க வேண்டி நிறையப் பொன்னுடன் கீழைக்கரைக்குச் சென்றபோது வழியில் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் ஞானாசிரியனாக வெளிப்பட்டு உபதேசம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றார்அதனால் தன் வேலையை மறந்தார்கொண்டு வந்த பொன்னையெல்லாம் இறை பணியில் செலவிட்டார்இதனையறிந்த மன்னன் இவரைச் சிறையிலிடுமாறு அறிவித்தான்அப்போது இறைவன் தன் அடியவனைக் காப்பாற்ற நரியைப் பரியாக்கியும்வைகையில் வெள்ளப் பெருக்கினை உண்டாக்கியும்பிட்டுக்கு மண் சுமந்தும்பிரம்படிபட்டும் மாணிக்கவாசகரை ஆட்கொண்டார். இதனால் மாணிக்கவாசகரின் பெருமையை உணர்ந்த மன்னன் மாணிக்கவாசகரைச் சிறையிலிருந்து விடுவித்து இறைவனிடம் தஞ்சம் அடைந்தான்அன்று முதல் மாணிக்கவாசகர் முழு மூச்சுடன் சிவத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பாடிய பாடல்கள்

வர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவாசகம் என்னும் பெயர் பெற்றதுஇதன் கருத்துகள் கற்போரின் ஊனை உருக்கியதால் “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்னும் பழமொழி வழங்கப்படுவதாயிற்று. ஆண்டாள் கண்ணனைக்
கணவனாக எண்ணிப பாடியதுபோல் மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு திருவெம்பாவை பாடியுள்ளார்.
      திருவெம்பாவையில் மனம் பறிகொடுத்த இறைவன் பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று வேண்டியதற்கிணங்க 400 பாக்களைக் கொண்ட திருக்கோவையார் பாடினார்.  இவரது திருவாசகமும்திருக்கோவையாரும் பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
பின்பற்றிய நெறி

இவர் இறைவனைத் தன் ஞான ஆசிரியனாக எண்ணி வழிபட்டார்ஆகவே இவர் பின்பற்றிய நெறி சன்மார்க்கம் என்று கூறப்படுகிறதுஇது ஞானநெறி என்றும் வழங்கப்படும்.

சிறப்பு

சிவபெருமானே மனித வடிவில் வந்து திருவாசகம் முழுவதையும் எழுதியதாகக் கூறப்படுகின்றது

 

 

 

 

 

 

 

 

பல்லவர் கால பக்தி இலக்கியங்கள்

தமிழிலக்கிய வரலாறு

 

பல்லவர் கால பக்தி இலக்கியங்கள்

முன்னுரை

     பக்தி இலக்கியங்கள் பல்லவர் காலத்தில் சிறந்தோங்கி இருந்தன. இக்காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்களை,

  • சைவ இலக்கியங்கள்
  • வைணவ இலக்கியங்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.


பக்தி இலக்கியம் தோன்றக் காரணம்

         சங்ககாலத்திற்குப் பிறகு சமண, பௌத்த சமயங்கள் தோன்றின. அவையாவும் இன்பத்தை வெறுத்து மறுமையைத் தேடுவதொன்றே இறைவனை அடையும் வழி என்று பறை சாற்றின. அதனால் மக்கள் காதலை வெறுத்துத் துறவறம் நோக்கிச் சென்றனர். ஆடல் பாடல் இறைவனுக்கு எதிரானவை என்ற அச்சமயங்களின் கருத்துரையால், நாட்டில் கலைகள் தோன்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அச்சமயத்தில் சைவப் பெரியோரும் ஆழ்வார்களும் இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்றும், உலக இன்பங்களை அனுபவித்துக் கொண்டே இறைவனின் அருளைப் பெற முடியும் என்றும், ஆடலும், பாடலும் இறைவனுக்குரியவை என்றும் கருத்துரைத்தனர். சமயங்களில் புரட்சி ஏற்பட்டது, மக்கள் சைவ, வைணவ சமயத்தை ஏற்றனர்.

 பக்தி இலக்கியங்களின் சிறப்பு

நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிய பதிகங்களும், பிரபந்தங்களும் இசைப் பாடல்களாக அமைந்திருந்தமையால் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. 

திருமுறைகளும் பிரபந்தங்களும்

சைவ நாயன்மார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்றும், ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்கள் நாலாயிரதிவ்யப் பிரபந்தங்கள் என்றும் தொகுக்கப்பட்டுள்ளன. 

இந்நூல்களின் சிறப்புகளை, 

    பன்னிரு திருமுறைகள், 

    பன்னிரு ஆழ்வார்கள், 

என்ற தலைப்பில் விளக்கமாகக் காணலாம்.

 

 

 

 

சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டம் மூன்றாம் பருவம்

சென்னைப் பல்கலைக்கழகம்

அடித்தளப்படிப்புபகுதி - 1 தமிழ்

மூன்றாம் பருவத்திற்குரியது

அனைத்துப் பட்டப்படிப்புப் பிரிவுகளுக்கும்ஐந்தாண்டு ஒருங்குமுறை பட்ட மேற்படிப்புப் பிரிவுகளுக்கும் பொதுவானது

தாள் - 1 செய்யுள் திரட்டு 

அலகு - 1

தமிழிலக்கிய வரலாறு 
  • பல்லவர்கால பக்தி இலக்கியங்கள்
  • பிற்காலச் சோழர்காலப்  பேரிலக்கியங்கள்
  • காப்பிய இலக்கிய வரலாறு
அலகு - 2 


  • தேவாரம்  - திருநாவுக்கரசர் (நமச்சிவாயத் திருப்பதிகம்)


  • திருவாசகம் - மாணிக்கவாசகர் (திருவெம்பாவை)


  • நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் - ஆண்டாள் (வாரணம் ஆயிரம்)

அலகு - 3

  •  கம்பராமாயணம் - கம்பர் (கும்பகர்ணன் வதைப்படலம்)
அலகு - 4 


  • பெரியபுராணம் - சேக்கிழார் ( காரைக்காலம்மையார் புராணம்)
அலகு 5 


  • மனுமுறை கண்ட வாசகம் - இராமலிங்க அடிகளார்
அலகு - 6

மொழிப்பயிற்சி 
  1. தனியார் நிறுவனத்திற்கு வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பம் எழுதுதல்
  2. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு
    • தெருக்குழாய் குடிநீர் வேண்டி
    • வீட்டுக்குக் குடிநீர் இணைப்பு வேண்டி
    • தெருக்குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டி
    • கொசுத் தொல்லையை நீக்க மருந்து தெளிக்க வேண்டி
    • வெறிநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டி
    • தெருச்சாலைகளைச் செப்பனிட வேண்டி
    • இரயில் பாதையின் மேல் மேம்பாலம் கட்ட வேண்டிக் கடிதம் எழுதுதல்