முதலாமாண்டு - முதற்பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலாமாண்டு - முதற்பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 டிசம்பர், 2022

பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் - சிறுகதை

 

பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்

அறிமுகம்

தனக்கென்று ஒரு தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்கின்ற ஒரு பெண்ணின் மனநிலையை இச்சிறுகதை சித்தரிக்கின்றது.

கதைக்கரு

கணவனை இழந்த ஒரு பெண் தான் தனி மரமான பின்பு வெளிநாட்டில் வசிக்கும் தன் பிள்ளைகளிடம் வாழ்ந்திடச் செல்கின்றாள். தன் உடமையென அவள் கொண்டு போவது பராசக்தி முதலிய சில கடவுள்களின் உருவச்சிலைகளை உள்ளடக்கிய ஒரு பிளாஸ்டிக் டப்பா. வெளிநாட்டுச் சூழ்நிலை, வெவ்வேறான மனிதர்கள், விலங்குகள் எவையும் அவளைப் பாதிக்கவில்லை. எங்கு சென்றாலும் எப்போதும் ஒரே மனநிலையில் இருந்து தன் இயல்பான ஆளுமைப் பண்பை, இரக்கக் குணத்தை வெளிக்காட்டுகின்றாள். எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்புக்குட்படாத அவளின் இந்நிலையைக் கண்டு வியந்து போன மகள்கள் தன் தாயின் சுதந்திரத்தைத் தடை செய்ய விரும்பாமல் சொந்த ஊரிலேயே ஒரு வீடு கட்டித் தர முடிவு செயகின்றனர். இதுவே இக்கதையின் கரு.

கதைச் சுருக்கம்

தனம், பாரதி, தினகரன் ஆகியோரின் தாய் குமுதா. தன் கணவனின் வேலை மாற்றங்களால் அசாம், அகமதாபாத், ஒரிசா எனப் பல மாநிலங்களில் வாழ்ந்தவர். ஆனால் எங்கு சென்றாலும், உணவை ஆதாரமாக வைத்து, தான் இருக்குமிடத்தில் அன்பால் தனக்குப் பிடித்த சூழலைக் கட்டியெழுப்பிக் கொள்கிறவர். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தனக்கான தெய்வங்களை உடன் வைத்துக் கொண்டு, திருமணமாகி விவாகரத்தான தன் மகள் பாரதிக்கு ஆதரவாக இருக்க, தன் கணவனின் வேண்டுகோளுக்கு இணங்கி அமெரிக்கா செல்கின்றார்.

பாரதியின் கடிதம்

அமெரிக்க வீட்டிற்கு வந்துள்ள தங்கள் தாயைப் பற்றி, தன் சகோதரி தனத்திற்குக் கடிதம் எழுதுகின்றாள் பாரதி. அதில், விமானப் பரிசோதனையின் போது அவள் கொண்டு சென்ற நாரத்தங்காய் ஊறுகாயைச் சுவைத்துப் பார்த்த விமானக் கம்பெனிக்காரர்கள் ஊறுகாய் செய்ய காண்ட்ராக்ட் தருவதாக சொல்லி பாரதியை நச்சரித்த நிகழ்வு, பக்கத்து வீடுகளில் தாய்மையடைந்திருக்கும் பெண்களுக்குப் பால்கோவா செய்து தருவது, குங்குமப்பூவின் மருத்துவக் குணங்களை எடுத்துரைப்பது எனத் தன் தாய் செய்கின்ற செயல்களை விவரிக்கின்றாள். சில நேரங்களில் அவை தொல்லையாகத் தெரிந்தாலும் அவளுடைய வரவு தனக்கு இன்பம் அளிப்பதாகக் கூறுகின்றாள். அவள் பாடுகின்ற பாரதியார் பாடல், அவள் அழைத்ததும் வருகின்ற அணில் கூட்டங்கள், அவள் செய்து தரும் சுவையான உணவுகள், விவாகரத்து பெற்ற தன் கணவனைச் சந்தித்துத் தனக்குத் திருமணமான பொழுது கொடுக்கப்பட்ட சீர் வரிசைகளைத் திரும்ப வரைவழைத்தல் எனத் தன் சோர்வான நம்பிக்கையிழந்த வாழ்வை மீண்டும் சுவையாக்கிவிட்டாள் என்று மகிழ்ந்து கடிதத்தை நிறைவு செய்கின்றாள்.

தனத்தின் கடிதம்

தன் கணவன் இறந்த பிறகு தன் மற்றொரு மகள் தனத்தின் வீட்டில் தங்க வேண்டிய சூழல் குமுதாவிற்கு ஏற்படுகின்றது. வீட்டைக் காலி செய்துவிட்டு, அவளை அழைத்துப் போக வந்த தனம், இதுவரை அவள் வாழ்ந்திருந்த வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்திலும் தன் தாயின் சுவடுகள் இருப்பதை அறிந்து அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல், இரண்டு வீடு தள்ளி உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் ஒரு கார்ஷெட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன் தாயின் அனைத்து உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு, அவளின் வீணையை மட்டும் எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றாள் தனம். அப்போதும் தன் கையில் பிளாஸ்டிக் டப்பாவில் சில தெய்வங்களை எடுத்து வைத்துக் கொண்டு செல்கின்றாள் அவளுடைய தாய். கடவுள் நம்பிக்கை இல்லாத அவர்களின் வீட்டில், புத்தகத்திற்காக அடித்த பலகையில் தன் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள தெய்வங்களை வைத்து வழிபடுகின்றார். இச்சூழலில் தனம் பாரதிக்குக் கடிதம் எழுதுகின்றாள். அக்கடித்ததில், மழைக்காலத்திற்கு ரசப்பொடி, சாம்பார் பொடி அரைப்பது, ஊறுகாய் போடுவது, செம்பருத்திப் பூ போட்டு எண்ணெய் காய்ச்சுவது, பக்கத்து வீட்டின் உறவினர்களுக்குச் சித்த மருத்துவம் தயாரிப்பது எனத் தன் தாய் செய்த செயல்களை விவரிக்கின்றாள். இறுதியாக, தன் சகோதரியிடம், நம் தாய் எங்கிருந்தாலும் தன் இயல்பை விட்டுவிடுவதில்லை. நம் வீட்டில் தங்கியிருந்தாலும் அவள் மனதில் தனக்கென்று ஓர் இடம் இல்லை என்று அவள் மனம் துன்பமடைகின்றது. எனவே நீயும் நானும் நம்முடைய நகைகளை விற்று இதுவரை அவள் வாழ்ந்திருந்த வீட்டை விலைக்கு வாங்கி அவளுக்குக் கொடுத்துவிடுவோம். விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் தன் பேரப்பிள்ளைகளுடன் அவள் பொழுது மிக இனிமையாகக் கழியட்டும் என்று கடிதத்தை முடிக்கின்றாள்.

முடிவுரை

         இக்கதையில் குமுதாவிற்குத் தேவை தன் மன விருப்பம் போல் செயல்பட தனக்கென்று ஒரு வீடு. தனக்கான ஒன்றைக் கண்டடைந்து அதன்வழி மகிழ்கின்ற உள்ளம் தான் நிறைவான வாழ்க்கை என்ற கருத்தை உள்ளடக்கியதாக இச்சிறுகதை காணப்படுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் எந்தவிதச் சூழலும் தன்னைப் பாதிப்பதில்லை என்ற மனப்போக்கில், தன்இயல்பிலேயே நிறைவுகாணும் ஆளுமையாகக் குமுதா என்ற கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார் எழுத்தாளர் அம்பை அவர்கள்.

 

 

 

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

நாற்காலிக்காரர்

 

நாற்காலிக்காரர் - ந.முத்துசாமி

ஆசிரியர் குறிப்பு

          ந.முத்துசாமி அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். நடேசன் முத்துசாமி என்ற பெயரில் சிறுகதைகள் படைத்தவர். 'யார் துணை' என்பது இவருடைய முதல் சிறுகதை. 'காலம் காலமாக' என்பது இவருடைய முதல் நாடகம். 1977ஆம் ஆண்டு கூத்துப் பட்டறையை நிறுவினார். இவருடைய 'அப்பாவும் பிள்ளையும்', 'சுவரொட்டிகள்', 'படுகளம்', 'கட்டியக்காரன்', 'நாற்காலிக்காரர்' ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. நீர்மை என்னும் சிறுகதைத் தொகுப்பையும், பூட்டிய வண்டி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். சங்கீத நாடக அகாதெமியின் விருது, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவை இவர் பெற்ற சிறப்புகள் ஆகும்.

நாற்காலிக்காரர்

            நாற்காலிக்காரர் என்னும் நாடகம் அரசியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்நாடககத்தில் நாற்காலிக்காரர், வேடிக்கைப் பார்ப்பவன், சீட்டுக் கட்டுக் குழுவினர் ஒன்பது பேர், கோலி குண்டு குழுவினர் ஒன்பது பேர் ஆகியோர் கதை மாந்தர்களாக அமைகின்றனர்.

நாற்காலிக்காரர் - கதைக்கரு

        பொது மக்களால் அரசியல் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்பதே இந்நாடகத்தின் கதைக்கருவாகும்.

இந்நாடகத்தில் நாற்காலிக்காரர் பொதுமக்களாகவும், வேடிக்கைப் பார்ப்பவர் ஊடகமாகவும், சீட்டுக் கட்டுக் குழுவினர் மற்றும் கோலி குண்டு குழுவினர் இருவேறு அரசியல் கட்சிகளாகவும் குறிக்கப்படுகின்றனர்.

கதைச் சுருக்கம்

            அரங்கில் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருக்கின்றார். அரங்கின் இடது புறத்தில் சீட்டுக்கட்டுக் குழுவினர் ஒன்பது பேரும், வலது புறத்தில் கோலிக்குண்டு குழுவினர் ஒன்பது பேரும் இருக்கின்றனர். அவர்கள் விளையாடுவதை ஒருவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

நாற்காலிக்காரரும் வேடிக்கைப் பார்ப்பவரும்

வேடிக்கைப் பார்ப்பவர் கோலி குண்டு குழுவினரிடம் “இந்த விளையாட்டு நல்ல விளையாட்டு. இந்தச் சீட்டுக் கட்டு நம் பரம்பரையே இல்லை” என்று கூற, நாற்காலிக்காரர் அவரிடம், “நீ காட்டும் ஆர்வத்தில் அவர்கள் வேட்டி விலகுவது கூட தெரியாமல் ஆடுகின்றனர். அமைதியாக இருந்து விளையாட்டைப் பார். ஆர்வம் காட்டாதே” என்று கூறுகின்றார். அதைக் கேட்ட வேடிக்கைப் பார்ப்பவர், “உன்னால் அமைதியாக இருக்க முடிகின்றதா. ஊருக்கு அறிவுரை சொல்வதை நிறுத்து” என்று வாதிடுகின்றார்.

கோஷம் போட வலியுறுத்தல்

அதே வேளையில் சீட்டுக் கட்டுக் குழுவினரிடம் “சீட்டு மூளைக்கு வேலை கொடுக்கும். இதில் தோற்பவன் முட்டாள். வெற்றி பெறுபவன் அறிவாளி” என்று தூண்டி விடுகின்றார். அதைக் கேட்ட சீட்டுக் கட்டுக் குழுவினரில் ஒருவன், வேடிக்கைப் பார்ப்பவனைப் பார்த்து “போயா போயா” என்று கூறு, கோலிக் குண்டு குழுவினரும் “போயா போயா” என்று கேலி பேசுகின்றனர். உடனே வேடிக்கைப் பார்ப்பவர் “போயா போயா என்று கூறுவதெல்லாம் ஒரு விளையாட்டா?” என்று கூற, சீட்டுக் கட்டுக் குழுவில் ஒருவன் ‘பேசாமல் வாழ்க ஒழிக என்று கோஷம் போடலாம்’ என்று ஆலோசனை வழங்குகிறான். உடனே அது தொடர்பாக விவாதங்கள் எழுந்தன.

கோஷம் வேறு காரியம் வேறு

வேடிக்கைப்பார்ப்பவன் “உங்களுடைய விவாதத்தில் யாரும் கவனிக்காதபோது தவறு நடந்துவிட்டது” என்று கூற, இரண்டு குழுவினரும் ஒருவருக்கொருவர் அடுத்தவரைச் சுட்டிக் காட்டினர். உடனே வேடிக்கைப் பார்ப்பவன் “அடுத்தவரைக் கைகாட்டும் உங்கள் ஆட்காட்டி விரல்களை எல்லாம் இணைத்தால் குறுக்கும் நெடுக்குமாகப் பல கோடுகள் உருவாகும். அனைவரும் தவறு செய்துள்ளீர்கள். கோஷம் வேறு காரியம் வேறு” என்று கூற, கோஷம் காரியம் இரண்டுமே செய்யலாமா என்று விவாதித்து இறுதியில், கோஷமே போடலாம் என்று முடிவாகின்றது. ஆனால், “வாழ்க ஒழிக” என எதைக் கூறுவது என்று கூட்டத்தில் ஒருவன் கேள்வி எழுப்பினான்.

கவிதை எழுதுவதிலும் விவாதம்

வேடிக்கைப் பார்ப்பவர், “சீட்டுக்கட்டு குழுவினர் கோலிகுண்டு குழுவினரை ஒழிக என்றும், கோலிகுண்டு குழுவினர் சீட்டுக் கட்டுக் குழுவினரை ஒழிக என்றும் கோஷம் போடலாம். இருவரும் தங்களைத் தாங்களே வாழ்க என்று கூறிக் கொள்ளலாம் என்றும், வாழ்க ஒழிக கவிதை போல இல்லை” என்று அவர்களை மேலும் தூண்டி விடுகின்றார். கவிதை எழுதுவதிலும் இரு குழுவினருக்கும் சண்டை ஏற்படுகின்றது. இருவரையும் அமைதிப் படுத்துகின்றார் வேடிக்கைப் பார்ப்பவர்.

வெற்றியைத் தீர்மானிக்கும் தண்ணீர் கூஜா

அந்நேரத்தில் தாகம் ஏற்பட்டு சிலர் தண்ணீர் தண்ணீர் என்று கோஷம் போடத் தொடங்கினர். “கோஷம் போட வேண்டிய இடத்தில் காரியம் செய்கின்றீர்கள். காரியம் செய்ய வேண்டிய இடத்தில் கோஷம் போடுகின்றீர்கள், தண்ணீர் வேண்டுமென்றால் நாம் தான் போய் எடுத்துக் கொண்டு வரவேண்டும்” என்று வேடிக்கைப் பார்ப்பவர் கூற, ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒருவர் சென்று தண்ணீர் கூஜாவைக் கொண்டு வந்தனர். வேடிக்கைப் பாரப்பவன், “ஆளுக்கொரு கூழாங்கல்லை எடுத்து கூஜாவில் போடுவோம். யாருடைய கூஜா முதலில் தண்ணீரால் நிரம்புகின்றதோ அவரே வெற்றியாளர்” என்று கூற, அனைவரும் ஏற்கின்றனர். நாற்காலியில் அமர்ந்திருப்பவரிடமும் ஒரு கல் தரப்படுகின்றது.

பிரச்சாரம் தொடங்குகின்றது

இரு குழுவினரும் தத்தம் கூஜாவில் பால் உள்ளது, இளநீர் உள்ளது, தேன் உள்ளது, பதநீர் உள்ளது என்று கூறி பிரச்சாரம் செய்ய முற்படுகின்றனர். “திக்கெட்டும் சென்று வெற்றி வாகை சூடுங்கள்” என்று வேடிக்கைப் பார்ப்பவர் அவர்களை வெவ்வேறு திசைக்கு அனுப்பி வைக்கின்றார்.

நாற்காலிக்காரரின் தீர்ப்பினால் உண்டான அவலம்

இறுதியில் இரண்டு கூஜாக்களும் சமமமாக இருப்பதைக் கண்ட வேடிக்கைப் பார்ப்பவர், நாற்காலிக்காரரிடம் சென்று, “உன்னிடம் உள்ள ஒரு கல்லை யாருக்காவது போட்டு வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டும்” என்று கூற, நாற்காலிக்காரர் அச்சம் கொண்டு மறுக்கின்றார். நாற்காலிக்காரருக்கு எந்த ஆபத்தும் வராது என்று இரண்டு குழுவினரும் வாக்குறுதி கொடுக்குமாறு வேடிக்கைப் பார்ப்பவர் கூறுகின்றார். அவர்களும் வாக்குறுதி அளிக்கின்றனர். அந்த வாக்குறுதியை நம்பி, “சீட்டுக் கட்டு நம் மரபில் இல்லை. கோலிதான் நம் பாரம்பரிய விளையாட்டு” என்று கூறி கோலி குண்டு குழுவினரின் கூஜாவில் கல்லைப் போடுகின்றார். வெற்றி பெற்ற கோலி குண்டு குழுவினர் சீட்டுக் கட்டு குழுவினரைக் கேலி செய்து பாடத் தொடங்கினர். வேடிக்கைப் பார்ப்பவன் சீட்டுக் கட்டு குழுவினரிடம் “அடுத்த முறை வெற்றி பெறலாம்” என்று சமாதானம் கூற, அவர்கள் கோபம் கொள்கின்றனர். அவர்களின் கோபத்தைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கின்றார் வேடிக்கைப் பார்ப்பவர்.

 சீட்டுக் கட்டுக் குழுவினரின் கோபம் நாற்காலிக்காரர் மேல் திரும்புகிறது. “சீட்டுக் கட்டு நம் மரபில் உண்டு என்றும், மனைவியை வைத்து ஆடுவது மரபு” என்றும் கூறி அவரை அடித்தனர். “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்ற நாற்காலிக்காரரின் அறைகூவலுடன் நாடகம் முடிவடைகின்றது.

கருத்து

பொதுமக்களை மையப்படுத்தியே அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளின் விவாதங்களுக்கும், சண்டைகளுக்கும் ஊடகமே காரணியாக அமைகின்றது. அவர்களுக்குள் சிக்கல்கள் பெரிதாகும்போது ஊடகம் காணாமல் போய்விட, பொதுமக்கள் மாட்டிக் கொள்கின்றனர் என்ற கருத்தை மையப்படுத்தி இந்நாடகம் அமைகின்றது.

           

 

 

புதன், 12 அக்டோபர், 2022

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

 

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது 'மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்' என்கிறார் முனைவர் சு.சக்திவேல். எனவே நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமைப்பாட்டிற்குப் பல வகையினைக் காண முடியும். அவை,

1) நாட்டுப்புறப் பாடல்கள்

2) நாட்டுப்புறக் கதைகள்

3) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

4) நாட்டுப்புறப் பழமொழிகள்

5) விடுகதைகள்

6) புராணங்கள்

முதலியனவாகும். இனி இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள் முன்னைப் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குகின்றன. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து, செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. இப்பாடல்கள் என்று பிறந்தவை, எவரால் பாடப்பெற்றவை என்று உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல முடியாத பெருமையினைக் கொண்டவை. இப்பாடல்கள் எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று எதுகை, மோனை, இயைபு, இரட்டைக் கிளவி என்ற யாப்பிலக்கணத்தின் கட்டுக் கோப்பில் அமைந்துள்ளன.

நாட்டுப்புறப் பாடல் வகைப்பாடு

நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன. முனைவர் சு. சக்திவேல் சூழல் அடிப்படையில் எட்டாகப் பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும் வகைப்படுத்தியுள்ளார்.

தாலாட்டுப் பாடல்கள்

தாலாட்டுப் பாடல் என்பது தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும். அப்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளின் தன்மையினை நான்கு கூறுகளாகப் பிரித்துள்ளார்.

1) குழந்தை பற்றியன.

2) குழந்தைக்குரிய பொருள்கள் பற்றியன.

3) குழந்தைகளின் உறவினர் பெருமை பற்றியன.

குழந்தைப் பாடல்கள்

குழந்தைப்பாட்டுகள் குழந்தை உள்ளத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்திருக்கும். அதில் பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அதிகமாகக் காணப்படும். இப்பாடல்களை மேலும்,

1) குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள்.

2) (குழந்தைப் பாடல்கள்) மற்றவர்கள் பாடுவது.

3) சிறுவர் பாடல்கள்.

என்றும் பிரித்துப் பார்க்கலாம்.

காதல் பாடல்கள்

காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். 1) காதலர்களே பாடுவது, 2) காதலர்கள் அல்லாதவர்கள் தொழில் செய்யும் போது பாடுவது. ஆனால் பெரும்பாலும் நாட்டுப்புறக் காதல், தொழில் செய்யுமிடங்களில் தான் பிறக்கிறது. வண்டிக்காரன் பாடும் தெம்மாங்குப் பாடல்களில் காதல் சுவையைக் காணலாம். உறவில் இன்பம் காண்பதும், பிரிவில் வேதனையடைவதும் பாடலின் பொருளாக அமையும்.

தொழில் பாடல்கள்

மனிதர்கள் கூடித் தொழில் செய்யும்போது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில் பாடல்கள். தொழில் பாடல்களிலே அன்பு மலர்வதையும், பாசம் பொங்குவதையும், உழைப்பின் ஆர்வத்தையும், நன்மையில் ஈடுபாட்டையும், தீமையில் வெறுப்பையும் காணலாம். தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு, வெறுப்புகளையும் வெளியிடுகின்றன. தொழில் பாடல்களை ஏலோலங்கிடி பாட்டு, தில்லாலங்கடி பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, ஏற்றப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்றெல்லாம் வழங்குவர்.

 கொண்டாட்டப் பாடல்கள்

மனிதன் தன் மகிழ்ச்சியினை ஆடியும் பாடியும் பலரோடு கலந்து கொண்டாடுகிறான். அவ்வெளியீட்டில் தொன்மையான கலைச் சிறப்பையும் மக்களது பண்பாட்டின் சிறப்பினையும் அறியமுடியும். மனிதனின் உழைப்பிற்குப்பின், அவனது மனமானது ஆடல், பாடல்களில் ஈடுபடுகிறது. இப்பாடல்களை அகப்பாடல், புறப்பாடல் என்று பிரிக்கலாம்.

அகப்பாடல்

சமூகத்திலுள்ள பலரும் இணைந்து குழுவாகப் பாடப்படுவது. பூப்புச் சடங்குப் பாடல், திருமணம், பரிகாசம், நலுங்கு, ஊஞ்சல், வளைகாப்புப் பாடல்கள் போன்றவற்றைக் கூறலாம்.

புறப்பாடல்

பலரும் கலந்தாடும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் பாடப்படும் பாடல்களைப் புறப்பாடல்கள் எனலாம்.

பக்திப் பாடல்கள்

ஆதி காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். இயற்கையின் சக்திகளைத் தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர். அதிலிருந்து விழாக்களும், பண்டிகைகளும், பலிகளும் தோற்றம் பெற்றன. இவ்வழிபாடுகளை மூன்று நிலைகளில் மக்களிடையே காணமுடியும்.

1) இயற்கை வழிபாட்டுப் பாடல்கள்.

2) சிறுதெய்வப் பாடல்.

3) பெருந்தெய்வப் பாடல்.

சான்று : இயற்கை வழிபாட்டுப் பாடல்

சந்திரரே சூரியரே

சாமி பகவானே

இந்திரரே வாசுதேவா

இப்பமழை பெய்யவேணும்

மந்தையிலே மாரியாயி

மலைமேலே மாயவரே

இந்திரரே சூரியரே

இப்பமழை பெய்யவேணும்

இப்பாடலில் தொன்று தொட்டு வரும் இயற்கை வழிபாட்டைக் காணலாம். நிலா, மழை, ஒளி, பாம்பு, பசு ஆகியவற்றை நாட்டுப்புற மக்கள் வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடும்போது இத்தகைய இயற்கைப் பாடல்களைப் பாடுகின்றனர்.

ஒப்பாரிப் பாடல்கள்

இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களை ஒப்பாரி என்பர். இறந்தவர்களின் இழப்பை எண்ணி, இறந்தவர்களையும் தம்மையும் ஒப்புச் சொல்லி அதாவது ஒப்பிட்டுப் பாடுவது ஒப்பாரியாகும். இறந்தவரின் பெருமையும் அவரது குணநலன்களும் பிறரால் போற்றப்பட்ட முறையும், ஒப்பாரி பாடுகின்றவர்கள் இறந்தவரை நேசித்த முறையும், தன்னுடைய நிலைமை, குடும்பத்தின் நிலைமை, ஈமச் சடங்குகள் பற்றிய விவரங்களும் அப்பாடல்களில் கூறப்படுவதுண்டு.

 

நாட்டுப்புறக் கதைகள்

நாட்டுப்புற மக்களிடையே கதை கூறுவது என்பது பொதுவான பண்பாகும். மக்கள் தங்களது வாழ்வியல் நீதிகளுக்காகவும், பொழுது போக்கிற்காகவும் கதைகளை உரைத்தனர். இன்றளவும் உரைத்து வருகின்றனர். நாளையும் கதையினைக் கூறுவார்கள். ஏனென்றால் கதையினைக் கூறுபவரும், கதையினைக் கேட்பவரும் அந்தந்தக் கதைகளோடு தங்களையும் இணைத்துக் கதை கேட்கின்றனர்.

கதைகளின் வகைகள்

முனைவர் சு. சக்திவேல் நாட்டுப்புறக் கதைகளை 6 வகையாகப் பிரிக்கின்றார்.

1) மனிதக் கதைகள்

2) மிருகக் கதைகள்

3) மந்திர - தந்திரக் கதைகள்

4) தெய்வீகக் கதைகள்

5) இதிகாச புராணக் கதைகள்

6) பல்பொருள் பற்றிய கதைகள்

கதைகளின் சிறப்புக் கூறுகள்

இக்கதைகளின் முக்கிய நோக்கம் மக்களுக்கு அறக்கோட்பாட்டை உணர்த்துவதே ஆகும். வளரும் குழந்தைகளுக்கு அது நீதி போதனைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. வாழ்க்கைப் பிரச்சனை, ஆசை, துன்பம், சாதிப் பூசல், காதல், ஒழுக்கம், வேதனை, முட்டாள்தனம், பொறாமை, மன உணர்வெழுச்சி, கள்ள நட்பு, மந்திரம், புத்திசாலித்தனம், நீதி முதலியவற்றைக் கூறுவதாக அமையும். மொத்தத்தில் இக்கதைகள் பயன்பாட்டு இலக்கியம் ஆகின்றன. சமூக வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. பண்பாட்டுக் கூறுகளை மீட்டுருவாக்கம் செய்கின்றன. பழங்காலச் சமுதாயச் செய்திகளையும், சமகாலச் செய்திகளையும் இவற்றால் அறிய முடிகின்றது.

 

நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

தனிமனித வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை - பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் - கதையினைப் போன்று அதே சமயம் பாடலாகப் பாடுவது கதைப் பாடலாகும். காப்பியத்தில் தன்னிகரில்லாத் தலைவனின் வளப்பம் மிகுந்த செயல்பாடுகள் எழுதப்படுகின்றன அல்லவா? அதைப் போல நாட்டுப்புறக் கதைப்பாடலில் கதைத் தலைவனின் வீர தீரச் செயல்கள் பாடப்படும். கதைப் பாடல்கள் வரலாறுகள் அல்ல. அவை வீரக் காவியங்கள், மனிதப் பண்பின் உயர்ந்த அம்சங்களைப் போற்றுபவை என்கிறார் நா. வானமாமலை. இவை கதைப்பாடல்களின் இயல்புகள் என்றே கூறலாம்.

கதைப் பாடலின் தன்மை

கதைப் பாடலில் கீழ்க்காணும் முக்கியக் கூறுகள் காணப்படுகின்றன.

1) கதையில் நிகழ்ச்சிப் போக்கு உண்டு. (Action)

2) பாத்திரங்கள் வாயிலாக விளக்கப் பெறும். (Characters)

3) கதைக் கரு உண்டு (Theme)

4) வீரப்பண்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெறும். (Prominence of Heroism)

5) உரையாடல் (Dialogue) உண்டு,

6) திரும்பத் திரும்ப வரல் (Repetition)

கதைப் பாடலின் அமைப்பு

கதைப் பாடலின் அமைப்பில் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. அவையாவன,

1) காப்பு அல்லது வழிபாடு.

2) குரு வணக்கம்

3) வரலாறு

4) வாழி

என்பவையாகும்.

சான்று : கதைப் பாடல்கள்

1) முத்துப்பட்டன் கதை

2) நல்லதங்காள் கதை

3) அண்ணன்மார் சுவாமி கதை

கதைப் பாடலின் வகைகள்

முனைவர் சு. சக்திவேல் கதைப் பாடல்களை மூன்றாக வகைப்படுத்துகிறார்.

1) புராண, இதிகாச தெய்வீகக் கதைப் பாடல்கள்

2) வரலாற்றுக் கதைப் பாடல்கள்

3) சமூகக் கதைப் பாடல்கள்

 

நாட்டுப்புறப் பழமொழிகள்

பழமொழி என்ற சொல்லே மிகப் பழமையானவற்றை உணர்த்துவதாகும். பலரது அறிவையும் ஒருவரது நுண்ணுணர்வையும் அதிலிருந்து பெறுகின்றன. அறிவின் சுருக்கமே பழமொழி எனலாம். பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்துள்ளன. மக்களின் வாழ்வில் நாளும் பழக்கத்தில் உள்ள மொழி, எதுகை மோனையுடன் ஒரு கருத்தினைக் கூறுதல், விளக்கம் செய்யும் வகையில் எடுத்துக் கூறுதல் ஆகியவற்றைக் கொண்டதே பழமொழியாகும். இவை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் மிக்கவைகளாகும்.

பழமொழியின் இயல்புகள்

1) பழமொழியின் முக்கிய இயல்பு, சுருக்கம், தெளிவு, பொருத்தமுடைமை.

2) அறவுரையையும், அறிவுரையையும் கொண்டிருக்கும்.

3) ஒவ்வொரு பழமொழியும் விளக்கக் கூறு (Descriptive element) ஒன்றினைப் பெற்றிருக்கும்.

4) பழமொழிக்கு ஒரு சொல்லில் அமைவதில்லை.

பழமொழி வகைப்பாடு

முனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.1) அளவு அடிப்படை (Size Basis)

2) பொருள் அடிப்படை (Subject Basis)

3) அகரவரிசை அடிப்படை (Alphabetical Basis)

4) அமைப்பியல் அடிப்படை (Structural Basis)

5) பயன் அடிப்படை (Functional Basis)

 

விடுகதைகள்

விடுகதை என்பது ஏதாவது ஒரு கருத்தைத் தன்னிடம் மறைத்துக் கொண்டு கூறுவது. இதனை அறிவுத்திறத்தோடு ஆராய்ச்சி செய்யும் பொழுது, குறைந்த பட்சம் சிந்தனை செய்யும் பொழுதுதான் புலப்படும். மேலும் ‘விடுகதைஎன்ற நாட்டுப்புற வழக்காற்றில் ஈடுபாடும் விருப்பும் உடையவர்களால் விடுகதையிலுள்ள ‘புதிருக்கு (புரியாத நிலையிலுள்ளது) விடையினைக் கூறமுடியும். இவ்வாறு விடுகதை என்பது,

1) அறிவு ஊட்டும் செயல்

2) சிந்தனையைத் தூண்டுதல்

3) பயனுள்ள பொழுது போக்கு

என்ற வகையில் அமைந்து மக்களின் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.

விடுகதையின் வகைகள்

விடுகதைகளை, பயன்பாட்டு அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கின்றார் டாக்டர் ச. வே. சுப்ரமணியம் அவர்கள். அவை,

1) விளக்க விடுகதைகள் (Descriptive Riddles)

2) நகைப்பு விடுகதைகள் (Witty question Riddles)

3) கொண்டாட்ட விடுகதைகள் (Ritualistic Riddles)

4) பொழுதுபோக்கு விடுகதைகள் (Recreative Riddles)

விடுகதையை அமைப்பியல் ஆய்வின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தலாம். அவை,

1) உருவகமில்லாதது (Literal)

சான்று :

சிவப்புச் சட்டிக்குக் கறுப்பு மூடி - என்பது குன்றி மணியைக் குறிக்கும்.

2) உருவகமுடையது.

சான்று :

செத்துக் காய்ந்த மாடு சந்தைக்குப் போகுது - என்பது கருவாட்டினைக் குறிக்கிறது.

இவ்வாறு விடுகதைகளும் பழமொழிகளும் மக்களின் வாழ்வில் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிப்பதற்கும், சிந்திப்பதற்கும் துணை நின்று உள்ளன. இன்றும் விடுகதை, பழமொழி இவற்றை, தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட வானொலியின் பண்பலை ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில், நிலையத்தார் வானொலி கேட்பவர்களிடம் தொலைபேசி வழிக் கேட்பதையும் கேட்க முடியும். நாட்டுப்புற வழக்காறும் நாகரிகம் மிகுந்த மக்களின் வாழ்க்கையில் மக்கள் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

 

புராணங்கள்

புராணக் கதைகள் மனித மனத்தின் அடித்தளத்தில் உள்ள எண்ணங்களை மையமாகக் கொண்டவை. அத்தகைய புராணக்கதைகள் அன்று முதல் இன்றுவரை வாழ்ந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில் மனித வாழ்வில் அனுபவித்த முரண்பாடுகள், விந்தைகள், சிக்கல்கள் ஆகியவற்றுக்குத் தீர்வாகப் புராணக்கதைகள் இருந்துள்ளன. சடங்குகள் தான் புராணங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன. சமயத்தின் ஆழ்ந்த நோக்கு, அடிப்படைக் கருத்துகள் புராணங்களில் தோய்ந்து கிடக்கின்றன.

புராணங்களின் வகைகள்

தமிழிலுள்ள புராணங்களை மக்களிடையேயுள்ள,

1) வாய்மொழிப் புராணங்கள் (Oral Puranas)

2) எழுத்திலக்கியப் புராணங்கள் (தல புராணங்கள்) என்று பகுத்து ஆராயலாம்.

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

       காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் அனைத்து மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்தபோது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.

தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.

தொல்காப்பியர் கூறும் கதை மரபு

கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

                            ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

                               பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’ 

என்று உரைப்பார்.

சிறுகதைக்கான இலக்கணம்

  • அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. 
  • சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை.
  • குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். 
  • புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி.

சிறுகதை தோன்றிய சூழல்

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில் வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’. அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.

தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்

  • வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது விவேக போதினி என்னும் இதழ் ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்க்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம். 
  • செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 
  • ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர்.  இவரது ‘குசிகர் குட்டிக்கதைகள்ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.
  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். 
  • கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில்  கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.
  • சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
  • மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்

 இதழ்களால் வளர்ந்த சிறுகதை

தமிழ்ச் சிறுகதையின் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி,  தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகள்

இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதைப் போலவே சிறுகதை தொகுப்பு முயற்சிகளாலும் அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

 தொழில்நுட்பத்தில் சிறுகதை

   இதழ்களால் வளர்ந்த சிறுகதை இணையத்தாலும் வளர்ச்சியினைப் பெற்றது. சிறுகதைக்கெனவே பல இணையதளங்களும் வலைப்பூக்களும் உயிர்ப்பெறுகின்றன. மேலும் அலைபேசியிலும் வாட்பேட், பிரதிலிபி போன்ற செயலிகளும் சிறுகதைகளைப் பதிப்பித்து சிறுகதை தேயாது வளம் பெறும் பங்கினைச் செவ்வனே செய்கின்றன.

முடிவுரை

காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு  இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம் என்றும் மறக்காது.




தமிழ் நாடக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்

 

தமிழ் நாடக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.

தமிழ்நாடகத்தின் தொன்மை

     தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.    சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது. கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே என்ற குறள் வழி நாடக அரங்கம் இருந்த செய்தியினை அறியலாம். அகத்தியம், கூத்தநூல், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற  நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனைச் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் அவர்கள் குறிப்பிட்டுச் செல்கிறார். குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்து வகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது.

இருவகை நாடகங்கள்

வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை அக்காலத்தில் இருவகையாகப் பகுத்திருந்தனர். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக் காட்டப்படுவதாகும், பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக் காட்டப்படுவதாகும்.

பல்லவர் கால நாடகங்கள்

சமண, புத்த சமயங்கள் கலைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருண்ட காலத்தில் நாடகத்தமிழ் ஒளியிழந்தது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும் நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லை. எனினும் இக்காலத்தில் மகேந்திர வர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்என்ற நாடக நூல் புகழ் பெற்றிருந்தது. இன்னிசைக் கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.

சோழர் கால நாடகங்கள்

சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச் சிறப்பைப் பாராட்டும்  “இராஜராஜவிஜயம்  நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

 தமிழ் நாடகத்தின் எழுச்சி

இசுலாமியர் படையெடுப்புக்குப் பிறகு கலைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளர ஆரம்பித்தன. குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

      காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன் முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூக நாடகமாகும்.

தமிழ் நாடக முன்னோடிகள்        

பம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.

1.பம்மல் சம்பந்தம் – இவர் எழுதிய மொத்த நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும். இவர் சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார். இக்குழுவினரால் நடத்தப்படும் நாடகத்தில் கற்றவர்களையும் அறிஞர்களையும் நடிக்கச் செய்தார். நாடகக் கலைக்குத் தம் 81 ஆவது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண் பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார். பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட், ஆஸ் யூ லைக் இட் உள்ளிட்ட நாடகங்களை அமலாதித்யன், நீ விரும்பியபடியே என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார். சதி சுலோச்சனா, யயாதி, சந்திர ஹரி, தாசிப் பெண், சபாபதி போன்ற இவரது நாடகங்களில் சில திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன.

 

2.பரிதிமாற் கலைஞர் – நாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.

 

3.சங்கரதாசு சுவாமிகள்-  முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர்.  ஆரம்ப காலத்தில் எமன், இராவணன் போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் நாடக ஆசிரியரானார். இவர் சமரச சன்மார்க்க சபை என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார். இக்குழு சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு நடத்தப்பெற்ற முதல் பாலர் நாடக சபையாகும். அதன் பிறகு தத்துவ மீனலோசனி வித்துவ பால சஎ என் நாடகக்குழுவினை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார். அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன், நல்லதங்காள், பிரகலாதன்  உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்.

நாடகங்களின் வகை

தமிழ்நாடகங்களை அதன் கருப்பொருளைக் கொண்டு புராண நாடகம், இலக்கிய நாடகம்,  துப்பறியும் நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என வகைப்படுத்தாலாம். சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய தோன்றின. பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும். இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவு கிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம், பாரதிதாசனின் – பிசிராந்தையார், மறைமலையடிகளின்- அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.

தற்கால நாடகங்கள்

       காலங்கள் மாற நாடக வளர்ச்சியும் மாற்றத்தினைக் கண்டது. விடுதலைப் போராட்டித்தில் எழுச்சியூட்டும் நாடகங்கள் தம் பங்கினைச் சிறப்பாகவே செய்தன.காந்தி குல்லாய், சர்க்கா, மூவர்ணம் போன்ற நாடகங்கள் அக்காலத்தில் விடுதலை உணர்வினைத் தூண்டின. தொழில்நுட்ப வளர்ச்சி திரையிலக்கியத்திற்குத் துணை புரிந்தனவே அன்றி நாடகத் துறை நலிவடைய காரணமாயின. என்றாலும் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்ர் நகைச்சுவை நாடகங்களை நடத்தி வருகின்றனர். மதுவந்தி அருண் அவர்கள் தியேட்டர் ஆஃப் மகம் என்ற அமைப்பின் மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாடகம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

  முடிவுரை

இன்றைய சூழலில் கல்விச் சாலைகளில் ஓரங்கநாடகம், நாட்டிய நாடகங்கள் நடித்துக் காட்டப்படுகின்றன, வார, மாத இதழ்களிலும், வானொலி தொலைக்காட்சிகளிலும் நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன. இன்று அதிகமான தொழில்நுட்பங்களோடு நிறைய படங்கள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மேற்கண்ட நாடகங்களையும் அக்கலையை வளர்த்த சான்றோர்களையும் தமிழுலகம் என்றும் மறவாது.

வியாழன், 24 டிசம்பர், 2020

மரபுக் கவிஞர்கள்

  

பாரதியார்

  • பிறந்த இடம் – எட்டையபுரம், பெற்றோர் – சின்னசாமி, இலக்குமி அம்மாள்

  • இயற்பெயர் சுப்பிரமணியன் (சுப்பையா)

  • பிறப்பு – திசம்பர் 11, 1882, இறப்பு – செப்டம்பர் 11, 1921

  • 11 ஆம் வயதிலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றதால் எட்டயபுர அரச சபையினரால் பாரதி என்ற பட்டம் பெற்றார்.

  • தமிழ், ஆங்கிலம் இந்தி, சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.

  • சுதேசமித்திரன், இந்தியா, பால பாரதம், சக்கரவர்த்தினி, சூரியாதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

  • கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய முப்பெரும் படைப்புகளை இயற்றியவர்.

  • தேசிய கீதங்கள், விநாயகர் நான்மணி மாலை, புதிய ஆத்திசூடி, சந்திரிகையின் கதை முதலிய படைப்புகளின் உரிமையாளர்.

  • கவிஞர், விடுதலை போராட்ட வீரர், இதழியலாளர், சமூக சீர்த்திருத்தவாதி என்ற பன்முக ஆளுமை கொண்டவர்.  பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்.

  • தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது.

  • பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.


பாரதிதாசன்

  • பிறந்த ஊர் பாண்டிச்சேரி. பெற்றோர் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள்.

  • பிறப்பு – ஏப்ரல் 29, 1891.  இறப்பு – ஏப்ரல் 21, 1964.

  • இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.   சிறப்புப் பெயர் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர்,

  • கிறுக்கன், கண்டழுதுவோன், கிண்டல்காரன் எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

  • குயில் என்னும் திங்களிதழை நடத்தி வந்தார்.

  • கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1969இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.

  • இசையமுது, அழகின் சிரிப்பு, அமிழ்து எது?, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, குயில் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாண்டியன் பரிசு முதலானவை பாரதிதாசன் படைப்புகள்.

  • விதவைத் திருமணம், கலப்புத் திருமணத்தை ஆதரித்தவர். குழந்தை மணத்தை எதிர்த்தவர். பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்டவர்.

  • திராவிட இயக்கத் தலைவர்களுள் திரைத்துறையில் முதன்முதலாக நுழைந்தவர்.


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

  • இயற்பெயர் -  விநாயகம், பெற்றோர்: சிவதாணுப்பிள்ளை,   ஆதிலட்சுமி, மனைவி - உமையம்மை

  •  பிறப்பு : 27.7.1876,  இறப்பு : 26.9.1954

  • தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர்.

  • தமிழ்க்கவிதை, கல்வெட்டாராய்ச்சி, சமூகச் சீர்திருத்தம், நூற்பதிப்பு, பெண்விடுதலை முதலியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

  • நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, குழந்தைச் செல்வம், கீர்த்தனைகள், மலரும் மாலையும், கதர் பிறந்த கதை, தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச் செல்வம், கவிமணியின் உரைமணிகள் முதலியவற்றைப் படைத்துள்ளார்.

  • எட்வின் ஆர்னால்டின் THE PILGRIMS OF PROGRESS என்ற நூலை ஆசிய ஜோதி எனத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

  • பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவியும் தமிழில் எழுதினார். 1922 இல் மனோன்மணீயம் மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.

  • கம்பராமாயணம், திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.  காந்தளூர்ச் சாலை என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

  • சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24.12.1940 இல் கவிமணி என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தது.

  • 1952 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. 2005 இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.


நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை

  • பெற்றோர்:  வெங்கடராமன், அம்மணியம்மாள்

  •  பிறப்பு: 19.10.1888, இறப்பு: 24.8.1972

  • தமிழ்ப் புலமை மட்டுமின்றி ஓவியத்திலும் புலமை பெற்றவராக திகழ்ந்தார்.

  • தேசபக்திப் பாடல்கள், பிரார்த்தனை, தமிழன் இதயம், காந்தி அஞ்சலி, சங்கொலி, கவிதாஞ்சலி, மலர்ந்த பூக்கள், தமிழ்மணம், தமிழ்த்தேன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், அவனும் அவளும் என்ற கவிதைப் படைப்புகளையும்,

  • தமிழ்மொழியும் தமிழரசும், இசைத்தமிழ், கவிஞன் குரல், ஆரியராவது திராவிடராவது, பார்ப்பனச் சூழ்ச்சியா, திருக்குறள் – உரை, கம்பன் கவிதை இன்பக் குவியல் முதலிய உரைநடைப் படைப்புகளையும், மலைக்கள்ளன், தாமரைக்கண்ணி, கற்பகவல்லி, மரகதவல்லி, காதல் திருமணம், மாமன் மகள் முதலிய புதினங்களையும் படைத்துள்ளார்.


கண்ணதாசன்

  • கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.

  •  இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி.

  • ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்.

  •  இவர் புகழ் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த கவிஞர்

  • நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். 

  • சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

  • தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர்.

  • தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.

  • அவர் படைப்புகளுள் சில பின்வருமாறு

 கவிதை நூல்கள் – காப்பியங்கள் -   ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு         காவியம், ஐங்குறுங்காப்பியம்,கல்லக்குடி மகா காவியம், கிழவன்                 சேதுபதி.

சிற்றிலக்கியங்கள் - அம்பிகை அழகுதரிசனம், ,கிருஷ்ண அந்தாதி கிருஷ்ண கானம், கிருஷ்ண மணிமாலை, ஸ்ரீகிருஷ்ண கவசம்

சமயம்  - அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)

சிறுகதைகள் - ஈழத்துராணி, ஒரு நதியின் கதை, கண்ணதாசன் கதைகள், பேனா நாட்டியம், மனசுக்குத் தூக்கமில்லை,

புதினங்கள் - அரங்கமும் அந்தரங்கமும், ,அதைவிட ரகசியம் ஒரு கவிஞனின் கதை, கடல் கொண்ட தென்னாடு, சேரமான் காதலி (சாகித்ய அகாதெமி விருதுபெற்றது)


பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரனார்

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.

  • எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

  • தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர்.

  • இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

  • பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை.

  • 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

  • நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார்.

  • தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர்.

  • இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார்.  பின்னர் நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொண்டார்.

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடித்து ஐந்து மாதங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார்.

  • தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

  • இவர் எழுதிய திரைப்படப்பாடல்கள் சில பின்வருமாறு

திருடாதே பாப்பா திருடாதே (திருடாதே 1961),     உன்னைக் கண்டு நானாட (கல்யாண பரிசு), செய்யும் தொழிலே தெய்வம் (ஆளுக்கொரு வீடு 1960), தை பொறந்தா வழி பொறக்கும் (கல்யாணிக்கு கல்யாணம் 1959), சின்னப்பயலே...சின்னப்பயலே (அரசிளங்குமரி 1958), தூங்காதே தம்பி தூங்காதே (நாடோடி மன்னன் 1958)

கவிஞர் தமிழ் ஒளி

  •  தென்னாற்காடு மாவட்டத்தில் ஆரூர் என்னும் சிற்றூரில் 21.9.1924 அன்று சின்னையா, செங்கேணி அம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

  • விஜயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர். இவர் 24.3.1965 அன்று இயற்கை எய்தினார்.

  • பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கிக் கவிதைகளைப் படைத்தார்.

  • கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பலவும் இயற்றினார்.

  • தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சாதி சமய வேறுபாடுகளையும் தனது படைப்புகளில் வெளிப்படுத்தியவர்.

  • நிலைபெற்ற சிலை, வீராயி, மேதின ரோஜா ஆகிய மூன்று காவியங்களை இயற்றியுள்ளார். ஐந்து சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார்.

  • முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை  போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார்.   திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

  • சக்தி நாடக சபாவிற்காகச் சிற்பியின் காதல் என்னும் நாடகம் எழுதினார். அது 'வணங்காமுடி’  என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகியது.

முடியரசன் 

  • தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். 
  •  இயற்பெயர்: துரைராசு
  • தேனி மாவட்டம்பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு, அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். 
  • துரைராசு என்ற தன் பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். 
  • பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர்.
  • தந்தை பெரியார்அண்ணா ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்றவர்.
  • சாதி-சமய, சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர்.
  • இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். 
  • சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • இவரது கவிதைகளைச் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

சிறப்புகள்

  • 'திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம் - பேரறிஞர் அண்ணாவால்       வழங்கப்பட்டது.
  •  பற ம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டமம், பொற்பதக்கமும் பெற்றவர்.
  • தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்றவர்
  • இவருடைய படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

படைப்புகள்

  •        காப்பியங்கள் - பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல்
  •  கவிதைகள் - முடியரசன் படைப்புகள், காவியப்பாவை, நெஞ்சு பொறுக்கவில்லையே, தமிழ் முழக்கம், நெஞ்சிற் பூத்தவை, ஞாயிறும் திங்களும், பதியதொரு விதி செய்வுாம், தாய்மொழி காப்போம்
  •        கட்டுரைகள் - எப்படி வளரும் தமிழ், பாடுங்குயில்கள்
  •        சிறுகதை - எக்கோவின் காதல்
  •        தன் வரலாறு - பாட்டுப்பறவையின் வாழ்க்கைப் பயணம் 

 நன்றி - விக்கிபீடியா.