இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம் புதிய பாடப்பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம் புதிய பாடப்பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 நவம்பர், 2022

சிற்றிலக்கிய வரலாறு

சிற்றிலக்கிய வரலாறு

தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் தோன்றியதாகக் கூறுவர். புலவர்கள் தெய்வத்தின் அருளைப் பெறுவதற்காகவும், மன்னனிடம் பொருள் பெறுவதற்காகவும் பாடிய சிறு நூல்கள் அனைத்தையும் சிற்றிலக்கியம் என்பர். வட மொழியில் இதைப் பிரபந்தம் என்று அழைப்பர்.

சிற்றிலக்கியம் – விளக்கம்

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வகை உறுதிப்பொருட்களுள் எவையேனும் ஒன்றைப் பற்றியோ, இரண்டைப் பற்றி மட்டுமோ பாடப்படுபவை சிற்றிலக்கியங்கள் எனப்படுகின்றன. இறைவன், மன்னன், வள்ளல், குரு ஆகியோரின் சிறப்புகளை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தோற்றம்

அக்கால அரசியல் சூழல் காரணமாக, 12ஆம் நூற்றாண்டு தொடங்கி காப்பிய இலக்கியங்கள் படைப்பது குறைந்து போனது. சிற்றிலக்கியங்களின் ஆதிக்கம் பெருகியது. பேரரசர்களைப் பாடிப் பெரும்பொருள் பெற்று பேரிலக்கியங்களைப் படைத்த புலவர்கள், குறுநில மன்னர்களை விரைவாகப் பாடி உடனே பொருள் பெறும் எளிய நிலை ஏற்பட்டது. ஆகவே சிற்றிலக்கியங்கள் பெருகத் தொடங்கின.

சிற்றிலக்கிய வகை

தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களை 96 என்னும் தொகையில் அடக்கிக் கூறுவது மரபு. சிற்றிலக்கியங்களுக்குப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விலக்கியங்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

கலம்பகம்

பல பூக்களைக் கலந்து மாலையாகத் தொடுப்பது போல பல வகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு, அகம் புறப் பொருட்களை கலந்து பாடப்படும் இலக்கியம் கலம்பகம் ஆகும். தெய்வங்கள், மன்னர்கள், மக்களுள் சிறந்து விளங்குபவர்கள் இவ்விலக்கியத்தின் பாட்டுடைத் தலைவர்ளாவர்.

கலம்பக உறுப்புகளும் அமைப்பும்

கலம்பக இலக்கியம் 18 உறுப்புகளைக் கொண்டது. அவை, புயவகுப்பு, அம்மானை, தவம், வண்டு, வாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம், பிச்சியார், கொற்றியார் ஆகியனவாகும்.  இவ்விலக்கியம் அந்தாதித் தொடையால் 100 பாடல்கள் வரை பாடப்படும். கடவுளுக்கு 100, முனிவர்க்கு 95, அரசர்க்கு 90, அமைச்சர்க்கு 70, வணிகர்க்கு 50, வேளாளர்க்கு 30 என்னும் பாடல் எண்ணிக்கை அமைப்பைப் பெற்று பாடப்படுகின்றது.

சில கலம்பக நூல்கள் 

திருவரங்கக் கலம்பகம், நந்திக் கலம்பகம், தில்லைக் கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், திருக்காவலூர்க் கலம்பகம், காசிக் கலம்பகம், அழகர் கலம்பகம் முதலியன குறிப்பிடத்தக்கனவாகும்.

திருவரங்கக்கலம்பகம்

காவிரிக் கரையில் கோயில்கொண்ட ரங்கநாதப் பெருமாளின் மேல் பாடப்பட்டது. இதனை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இந்நூலில் திருமாலின் அவதாரங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 107 செய்யுள்கள் உள்ளன.

தூது

தன் கருத்தைப் பிறிதொருவருக்குத் தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது எனப்படும். இத்தூது அகத்தூது, புறத்தூது என இரண்டு வகைப்படும்.

அகத்தூது – தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி, தனது காதல் துன்பத்தைத் தலைவனுக்குக் கூறி, தூது உரைத்துவா என்றும், மாலை வாங்கி வா என்றும், உயர்திணைப் பொருள்களையோ, அஃறிணைப் பொருள்களையோ தூதாக அனுப்புவது அகத்தூது ஆகும்.

தூது விடுக்கும் பொருட்கள் – அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு ஆகிய பத்துப் பொருட்கள் தூதுக்குரியவை எனக் கூறப்பட்டன. தற்காலத்தில் பணம், தமிழ், புகையிலை, செருப்பு, மான், நெல் ஆகிய எவையும் தூதுக்குரிய பொருள்களாகக் கொண்டு இலக்கியம் படைக்கின்றனர்.

புறத்தூது – போர் காரணமாக மன்னனுக்காக ஒரு புலவரோ, அமைச்சரோ அல்லது வேறு யாரேனுமோ தூது செல்வது புறத்தூது ஆகும். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஔவையார் தூது சென்றமையைப் புறத்தூதிற்குச் சான்றுரைக்கலாம்.

சில தூது நூல்கள் 

உமாபதி சிவாச்சாரியார் பாடிய நெஞ்சு விடு தூது நூலே முதல் தூது இலக்கியமாகக் கருதப்படுகின்றது. அது தவிர தமிழ்விடுதூது, நெஞ்சு விடுதூது, அழகர் கிள்ளை விடுதூது முதலியன குறிப்பிடத்தக்கன.

தமிழ்விடு தூது

இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. நூலின் கருத்தினைக் கொண்டு இதன் ஆசிரியர் தமிழ்ப்பற்று மிக்கவர் என்பதும், சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதும் அறியப்படுகின்றது. மதுரையில் குடி கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட தலைவி, தன் காதல் துன்பத்தை எடுத்துக் கூற, தமிழைத் தூதாக அனுப்புவதே தமிழ்விடு தூது ஆகும்.

உலா

“ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப“என்ற தொல்காப்பிய நூற்பாவே பிற்காலத்தில் உலா இலக்கிய வகைக்கு வழிவகுத்தது எனலாம். அனைத்துப் பண்புகளில் சிறந்து விளங்கும் ஆண்மகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனுடைய குலம், குடிப்பிறப்பு, பெருமை ஆகியனவற்றை விளங்கக்கூறி, அவன் உலா வரும்போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் உள்ளிட்ட ஏழு பருவத்துப் பெண்களும் காதல் கொள்வதாகப் பாடப்படுவது உலா இலக்கியம் ஆகும். உலாக் காட்சிகள் முதன் முதலாக இலக்கிய வடிவம் பெறுவது முத்தொள்ளாயிரம் என்ற நூலில்தான் எனலாம்.

சில உலா நூல்கள் 

திருக்கையிலாய ஞான உலா, மூவருலா, ஏகாம்பர நாதர் உலா, திருக்குற்றலாநாதர் உலா, திருவானைக்கா உலா, திருவிடை மருதூர் உலா முதலியன குறிப்பிடத்தக்கன.

பிள்ளைத் தமிழ்

“குழவி மருங்கினும் கிழவதாகும்“ என்ற தொல்காப்பிய நூற்பா பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்ற இலக்கிய வகைக்கு வித்திட்டது. கண்ணனைக் குழந்தையாக எண்ணித் தாலாட்டுப் பாடல்களைப் பாடி இவ்விலக்கிய வகையைத் தோற்றுவித்தவர் பெரியாழ்வார் என்பர். இவ்விலக்கியம் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக் கவி என்றும் கூறப்படும். புலவர்கள் தாம் விரும்பும் மன்னனையோ, தலைவனையோ, வள்ளலையோ குழந்தையாகப் பாவித்து பாடப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்கள் வகுத்துப் பாடப்படுகின்றது. இது ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில் சிதைத்தல், சிறுபறை கொட்டல், சிறு தேர் உருட்டல் ஆகிய பருவங்கள் ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.

பெண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் ஆகிய பருவங்கள் பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குரியன.

சில பிள்ளைத் தமிழ் நூல்கள் 

கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்கன் பிள்ளைத் தமிழே முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும். கி.பி.17இல் குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் இரண்டும் பக்தி இலக்கிய வரலாற்றில் பெரும்புகழ் படைத்தவை.

பள்ளு

நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” என்ற முதுமொழியைக் கொண்டு பள்ளு இலக்கியப் பெருக்கினை அறியலாம். பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பது பள்ளு இலக்கியமாகும். இதனை உழத்திப்பாட்டு என்றும் பள்ளுப் பாட்டு என்றும் கூறுவர்.

சில பள்ளு நூல்கள் 

திருவாரூர்ப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, சீர்காழிப்பள்ளு, முக்கூடற்பள்ளு, திருச்செந்தூர்ப் பள்ளு ஆகியன குறிப்பிடத்தக்கன.

முக்கூடற்பள்ளு

பள்ளு இலக்கியங்களிலேயே தலைசிறந்து விளங்குவதும் முதன்முதலில் தோன்றியதும் முக்கூடற்பள்ளு ஆகும். இதனை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. காலம் 18ஆம் நூற்றாண்டு. நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் நகரம் உள்ளது. தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் கூடும் இடம் முக்கூடல் எனப்படும்.  இந்நகரில் எழுந்திருளியுள்ள அழகரின் பெருமையை இந்நூல் பேசுகின்றது.

பள்ளர் பெருமை, பள்ளியர் இருவரின் வரலாறு, நாட்டுவளம், மழை வேண்டி நிற்றல், மழைக்குறி அறிதல், பண்ணைக்காரன் வருகை, பள்ளியர் பண்ணையாரிடம் முறையிடல், பண்ணையார் பள்ளனைத் தண்டித்தல், பள்ளியர் புலம்பல், உழவுப்பணி தொடங்கல், பள்ளனைச் சிறையிடல், ஏசிய பள்ளியர் மீண்டும் இணைதல் ஆகியவற்றைப் பாடுவது பள்ளு இலக்கிய அமைப்பு முறையாகும்.

குறவஞ்சி

குறவஞ்சி இலக்கியத்திற்கு “இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலமும் திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே” என்று பன்னிரு பாட்டியல் இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் அரசனையோ, தெய்வத்தையோ தலைவனாகக் கொண்டு பாடப்படுகின்றது.

சில குறவஞ்சி நூல்கள் 

குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, பெத்லகேம் குறவஞ்சி, அர்த்தநாரீசுவரர் குறவஞ்சி ஆகியன குறிப்பிடத்தக்கன.

திருக்குற்றாலக் குறவஞ்சி

குற்றாலம் என்னும் ஊரில் விளங்கும் குற்றாலநாதரைப் போற்றும் வகையில் தெய்வக் காதல் அமையப் பாடப்பட்டது திருக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். இந்நூல் குறவஞ்சி நாடகம் என்றும் போற்றப்படும். திரிகூட ராசப்பக் கவிராயர் இந்நூலை இயற்றியுள்ளார். திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூலுக்கு அன்றைய மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கர் குறவஞ்சி மேடு என்னும் பெருநிலத்தை பரிசாகக் கொடுத்தார்.

இக்கதை குற்றால நாதரின் திருவுலாவோடு தொடங்குகின்றது. குற்றால நாதரின் திரு உலாவைக் காணப் பெண்கள் வருகின்றனர். தோழியின் வாயிலாக இறைவனின் அருளைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல் கொள்கின்றாள். இந்நிலையில் குறத்தி, வசந்தவல்லியின் கைகளைப் பார்த்து குறிசொல்கின்றாள். அதனால் மனம் மகிழ்ந்த வசந்தவல்லி அவளுக்குப் பரிசு கொடுக்கின்றாள். குறவன் குறத்தியைத் தேடி வருகிறான். இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இதுவே குற்றாலக் குறவஞ்சியின் கதை ஆகும். 

பரணி

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரரைச் சிறப்பித்துப் பாடும் இலக்கியம் பரணி ஆகும். கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காளி வழிபாடு உள்ளிட்ட அமைப்புகளுடன் பாடப்படும். “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்ற இலக்கண விளக்கப்பாட்டியல் இலக்கணம் கூறுகின்றது.

அரசனின் படைக் கருவிகளான வில், வாள், வேல் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட போர்ப்பரண் மீதிருந்து போர்க்காட்சியை நேரில் கண்டு புலவர் பாடுவதால் பரணி எனப்பட்டது என்றும் கூறுவர். பரணி நாளில் பேய்கள் கூடி சமைத்து, உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடி போரில் வென்ற மன்னரைப் புகழ்ந்து கூறும் வகையில் இந்நூல் அமைகின்றது.

சில பரணி நூல்கள் 

இரணியவதைப் பரணி, கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, பாசவதைப் பரணி, மோகவதைப் பரணி ஆகியன குறிப்பிடத்தக்கன.

கலிங்கத்துப் பரணி

காலத்தால் முற்பட்ட பரணி கலிங்கத்துப்பரணியாகும். இதனை இயற்றியவர் செயங்கொண்டார். இவர் தீபங்குடியைச் சேர்ந்தவர்.  முதல் குலோத்துங்கனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் அனந்தவர்மன் என்னும் கலிங்க மன்னன் மீது போர்தொடுத்துப் பெற்ற வெற்றியைப் புகழ்ந்து கூறும் வகையில் பாடப்பட்டுள்ளது.  

அந்தாதி

ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர் அடி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்த பாடலின் முதலில் வருவதாக அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். “அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி” என்று யாப்பருங்கலக்காரிகை அந்தாதிக்கு இலக்கணம் கூறுகின்றது. அந்தாதியைத் தனி ஒரு இலக்கியமாக உருவாக்கிய பெருமை காரைக்காலம்மையாரையே சாரும். அவருடைய அற்புதத் திருவந்தாதி என்னும் நூலே முதல் அந்தாதி நூலாகப் போற்றப்படுகின்றது. 

சில அந்தாதி நூல்கள் 

அபிராமி அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி,சடகோபர் அந்தாதி ஆகியன குறிப்பிடத்தக்கன.

அபிராமி அந்தாதி

அந்தாதி இலக்கியங்களில் சிறந்த ஒன்று அபிராமி அந்தாதி ஆகும். இதை இயற்றியவர் அபிராமி பட்டர். திருக்கடையூரில் உள்ள அபிராமி அன்னையை இந்நூல் பாடுகின்றது. 101 பாடல்கள் உள்ளன. இவர் வாழ்ந்த காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை எனக் கணக்கிடப்படுகின்றது.

 

 


சனி, 13 நவம்பர், 2021

கிறித்துவர் தமிழுக்குச் செய்த தொண்டு

 

கிறித்துவர் தமிழுக்குச் செய்த தொண்டு

வணிகம் செய்வதற்காகத் தமிழகம் வந்த ஆங்கிலேயர்கள், மத மாற்றம் செய்வதற்காகத் தமிழகத்தில் காலூன்றிய கிறித்துவர்கள் தங்கள் நோக்கம் நிறைவேற தமிழ் மொழியைக் கற்றனர். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால், தமிழின் மொழிச் சிறப்பால் ஈர்க்கப்பட்டு நாளடைவில் தமிழை வளர்க்கத் தொடங்கினர். அவர்களின் வருகையால் அச்சு இயந்திரம் தமிழகத்தில் அறிமுகமாகியது. முதலில் கிறித்துவ சமயக் கருத்துககள் அச்சேறத் தொடங்கின. காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களும் அச்சேறின. உரைநடை இலக்கியம் வலுப்பெற்றது. சென்னையில் சென்னைக் கல்விச் சங்கம் என்ற அமைப்பு எல்லீஸ், மக்கன்ஸி ஆகிய ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அச்சங்கம் பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. இச்சங்கத்தில் தமிழ் ஆசிரியர்களாக இருந்தவர்களுள் முத்துச்சாமிப் பிள்ளை, தாண்டவராய முதலியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். தமிழ்ப்புலவர்கள் பலர் ஐரோப்பியர்களுடன் பழகிய காரணத்தால் புதிய இலக்கிய வகைகளை அறிந்தனர். ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டு தங்கள் புலமையை வளர்த்தனர். அவர்களோடு தமிழுக்குத் தொண்டாற்றிய மேலைநாட்டுக் கிறித்துவர்கள் சிலரைப் பின்வருமாறு காணலாம்.

1.தத்துவப் போதகர் இராபர்ட் டி நோபிலி

மதுரையில் தங்கித் தமிழ்ப் பிராமணர்களின் கோலம் பூண்டு தமிழராகவே வாழ்ந்த ஐரோப்பியப் பாதிரியார் இராபர்ட் டி நோபிலி ஆவார். வடமொழி கற்று மந்திரங்களை ஓதியவர். தமிழ்மொழி கற்று, ஆத்ம நிர்ணயம், ஞானோபதேச காண்டம், மந்திரமாலை, தத்துவக்கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம் முதலிய பல உரைநடை நூல்களை இயற்றியவர். இன்றைய உரைநடை வளர்ச்சிக்கு இவரே முன்னோடி எனலாம். தமிழ் மீது கொண்ட பற்றால் தம் பெயரைத் தத்துவப்போதகர் என்று மாற்றிக் கொண்டார்.

2.சீகன்பால்கு

இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். தமிழகத்திற்கு வந்து தரங்கம்பாடியில் தங்கி அங்கு அச்சுக் கூடத்தை நிறுவி தமிழ்த்தொண்டு புரிந்தவர். பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டவர்.  இவர் வெளியிட்ட தமிழ் நூல் விவரப் பட்டியல் தமிழ் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு அடிப்படை நூலாக அமைந்தது. தமிழ் இலத்தீன் அகராதி, தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கணம் ஆகியவற்றையும் படைத்தளித்தவர். நீதிவெண்பா, கொன்றை வேந்தன் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவரைத் தமிழ்நூல் பதிப்புத் துறையின் முன்னோடி என்பர்.

3.எல்லிஸ் பாதிரியார்

எல்லிஸ் பாதிரியாரின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு மிகப் புகழ் பெற்றதாகும். திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களை மட்டும் இவர் மொழிபெயர்த்திருந்தாலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் திருக்குறள் பரவுவதற்குக் காரணமாக இருந்தது அவரது மொழிபெயர்ப்பே ஆகும். இவர் இராமச்சந்திரக் கவிராயரிடம் தமிழ் கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

4.வீரமாமுனிவர்

இவர் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர். இயற்பெயர் கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி. மதுரை சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார். சிறுகதைகள் என்ற புதிய இலக்கிய வகையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இவரே. கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய பன்மொழிப் புலமையாளர். இயேசுபிரானின் வரலாற்றைத் தேம்பாவணி என்ற காப்பியமாகப் பாடியுள்ளார். இந்து சமயத்திற்குக் கம்பராமாயணம், இசுலாமியருக்கு சீறாப்புராணம் போன்று கிறித்துவ சமயத்திற்குத் தேம்பாவணி இலட்சியக் காப்பியமாகத் திகழ்கின்றது. இக்காப்பியம் 3 காண்டங்களையும், 36 படலங்களையும், 3615 பாடல்களையும் கொண்டது.

இவர் எழுதிய எழுதிய பரமார்த்த குருகதை தமிழ்க்கதை இலக்கியத்தின் முன்னோடி நூல் என்று கூறலாம்.

உரைநடை நூல்கள் - வேதியர் ஒழுக்கம், வேதவிளக்கம், பேதகம் மறுத்தல், லூத்தர் இயல்பு ஆகிய உரைநடை நூல்களை இயற்றியுள்ளார்.

இலக்கண நூல் - தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலை இயற்றியுள்ளார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படுகின்றது. உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் காணப்படும் தமிழ் மொழி இலக்கணத்தை முறையே கொடுந்தமிழ் இலக்கணம் செந்தமிழ் இலக்கணம் என்று எழுதி அதனை இலத்தீன் மொழியிலும், ஆங்கில மொழியிலும் மொழிபெயர்த்துள்ளார்.

மொழிபெயர்ப்பு நூல் - திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்துள்ளார். இது உலகப் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாக விளங்குகின்றது.

அகராதி நூல்கள் - சதுகரகராதி எனும் அகராதி நூலை வெளியிட்டுப் பிற்கால அகராதி நூல்களுக்கெல்லாம் வழிகாட்டினார். போர்த்துக்கீசியம் – தமிழ் – இலத்தீன் அகராதி ஒன்றும் இயற்றியுள்ளார்.

சிற்றிலக்கியங்கள் - திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானை, அடைக்கலநாயகி வெண்பா முதலிய சிற்றிலக்கியங்களையும் இயற்றியுள்ளார்.

எழுத்துச் சீர்த்திருத்தம்

அகரத்தையும் ஆகாரத்தையும் வேறுபடுத்தல்

வீரமாமுனிவர் காலத்தில் ஆகாரத்தை எழுதும் பொழுது அகரத்தின் மேல் புள்ளியிட்டு எழுதியதை விடுத்து அகரத்திற்கு சுழியிட்டு ஆகாரத்தை எழுதினார். சான்று - அ் => ஆ

எகரத்தையும் ஏகாரத்தையும் வேறுபடுத்தல்

வீரமாமுனிவர் காலத்திற்கு முன்னால் "எ" என்னும் எழுத்து குறிலாகவும் நெடிலாகவும் ஒலிப்புப் பெற்றது. அவர் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு காண்பிக்க எகரத்தில் வருகின்ற மேல் கோடு நீட்டிச் சுழித்தால் அதை நெடிலாக ஒலிக்கலாம் என்று சீர்திருத்தம் கொணர்ந்தார். சான்று -  எ் => ஏ

ஒகரத்தையும் ஓகாராத்தையும் வேறுபடுத்தல்

குறிலையும் நெடிலையும் வேறுபடுத்த வீரமாமுனிவர் ஒகரத்தின் கீழே சுழி சேர்த்து அதை நெடிலாக்கினார். சான்று -  ஒ் => ஓ

உயிர்மெய்யெழுத்துச் சீர்திருத்தம்

தேன் என்பதைத் தென் என்பதிலிருந்து வேறுபடுத்த எகர ஒலி ஏகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட வீரமாமுனிவர் எகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஏகார ஒலி பெறச் செய்தார். சான்று - தெ்ன் => தேன்.

கோல் என்னும் சொல்லைக் கொல் என்னும் சொல்லிலிருந்து வேறுபடுத்த ஒகர ஒலி ஓகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட முனிவர் ஒகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஓகார ஒலி பெறச் செய்தார். சான்று - தெ்ால் => தோல்

இம்முறையே இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றமை இவரின் தமிழ்த் தொண்டிற்குச் சிறந்த சான்றாகும்.

ஜி.யு.போப்

ஆங்கில நாட்டைச் சேர்ந்த இவர் திருநெல்வேலி, தஞ்சாவூர், உதகமண்டலம் முதலிய இடங்களில் தங்கித் தமிழ்த்தொண்டு புரிந்தார். தமிழ்நாட்டின் பல்வுறு பகுதிகளிலும், பள்ளிக்கூடங்களையும், சமயப்பள்ளிகளையும் நிறுவினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகப் பணி புரிந்து மேலை நாட்டவர்க்கும் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தினார். திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை ஆகிய நூல்களில் சில பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ்ச் செய்யுள்கள் பலவற்றைத் திரட்டி தமிழ்ச்செய்யுள் கலம்பகம் என்னும் நூலாக வெளியிட்டார். ஆங்கில இலக்கிய இதழ்களில் தமிழின் பெருமையை விளக்கும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ் மொழிபெயர்ப்புத் துளைக்கு அடிக்கல் நாட்டியவர் இவரே. ஆங்கில நாட்டில் பிறந்தவராயினும் தமிழ் மாணவனாகளே இறுதிவரை வாழ்ந்து மறைந்த இவர், தனது கல்லறையிலும் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதக் கூறினார்.

கால்டுவெல்

இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். திருநெல்வேலி சரித்திரம் ன்னும் ஆங்கில நூலையும், நற்கருணைத் தியானமாலை, தாமரைத்தடாகம் முதலிய தமிழ் நூ்களையம் இயற்றியுள்ளார். இலத்தீன், கிரேக்கம், ஜெர்மானியம், துளு போன்ற பல மொழிகளைக் கற்றறிந்த மொழியறிஞர். இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் இவரது புகழை உலகிற்குப் பறை சாற்றி வருகின்றது.

இரேனியஸ்

இவர் ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர். தமிழ் புசவும் எழுதவும் நன்கு அறிந்தவர். புதிய ஏற்பாடு முழுமையையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். வேத உதாரணத் திரட்டு, தமிழ் ஞான நூல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

தமிழ்க்கிறித்துவர்கள்

வேதநாயகம் பிள்ளை

         ஐரோப்பியர் வருகையால் கிறித்துவ மதத்திற்கு மாறிய அறிஞர்களில் இவரும் ஒருவர். இவரது சொந்த ஊர் குளத்தூர் ஆகும். இவர் மாயூரம் நீதிமன்றத்தில் முன்சீப்பாக இருந்தவர். அதனால் இவரை மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைப்பர். தமிழ் இலக்கியத்தின் முதல் புதினமாகக் கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற புதினத்தை இயற்றியவர். இவரைத் தமிழ் நாவலின் தந்தை என்றும் அழைப்பர். மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் தமிழ் கற்றவர். நீதிமன்ற சங்டங்களை முதன்முதலில் தமிழ் எழுதினார். பெண்மதிமாலை, சர்வசமய சமரசக்கீர்த்தனை, சத்திய வேதக் கீர்த்தனை, திருவருள்மாலை, தோத்திரமாலை என்பவை இவருடைய படைப்புகளாகும்.

ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

இவருடைய ஆசிரியர் திருப்பாற்கடல் நாதகவிராயர். இரட்சண்ய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக் குறள் என்ற நூல்களை இயற்றியுள்ளார். இவரைக் கிறித்துவக் கம்பர் என்று புகழ்வர்.

வேதநாயக சாஸ்திரியார்

பெத்லேகம் குறவஞ்சி, ஞானக்கும்மி, ஞானஏற்றப்பாட்டு, சென்னைப் பட்டினப் பிரவேசம், ஞான தச்சன் நாடகம் என்ற பல நூற்களை இயற்றியுள்ளார். தஞ்சை சரபோஜி மன்னனின் அவைப் புலவராகத் திகழ்ந்தார். இவருடைய கீர்த்தனைகள் இன்றும் கிறித்துவ ஆலயங்களில் இசையுடன் பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆபிரகாம் பண்டிதர்

தமிழ் இலக்கியங்களை முறையாகப் பயின்றவர். தமிழ் இசைக்கும், மேலைநாட்டு இசைக்கும் உள்ள வேற்றுமை, ஒற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு கருணாமிர்த சாகரம் என்னும் இசைப் பேரிலக்கண நூலை உருவாக்கினார். இவரது நூலின் மூலம் மறைந்து போகும் நிலையில் இருந்து வந்த தமிழ் இசைக்கு எழுச்சி ஏற்பட்டது எனலாம்.

சாமுவேல் பிள்ளை

தொல்காப்பிய நன்னூல் என்னும் நூலை இயற்றியுள்ளார். இதில் தொல்காப்பியத்திற்கும், நன்னூலுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் விளக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மேலை நாட்டுக் கிறித்துவர்களும், தமிழ்க்கிறித்துவர்களும் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கரியன. அவர்களால் தமிழ்ப் புத்துயிர் பெற்றது. பல புதிய இலக்கிய வகைகள் தோன்ற வழி வகுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

இசுலாம் வளர்த்த தமிழ்

 

இசுலாம் வளர்த்த தமிழ்

எண்ணற்ற அரசியல் காரணங்களால் தமிழகத்தில் வாழ்ந்த பல இசுலாமியர்கள் தமிழைப் போற்றி வளர்த்தனர். தமிழின் மரபு அறிந்து தமிழ் இலக்கியத்தில் புதுமையைப் புகுத்தினர். அரபு, உருது ஆகிய மொழிகளில் காணப்படும் இலக்கிய வகைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தினர். நபிகள் நாயகத்தின் வரலாற்றையும், அவர்தம் புகழையும் விளக்கி எழுதவே அவர்கள் தலைப்பட்டனர். தமிழ் வளர்த்த இசுலாமியப் புலவர்களுள் சிலரின் தமிழ்ப்பணியைப் பின்வருமாறு காணலாம்.

1.உமறுப்புலவர்

         இவரது இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். தமிழில் இயற்றப்பட்ட சீறாப்புராணம் என்ற காப்பியத்தின் ஆசிரியர் இவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

2.சேகனாப்புலவர்

இவர் இரத்தின வணிகரின் மகன். குணங்குடி மஸ்தான் சாகிபு இவருடன் பயின்றவர். சாகுல் அமீது ஆண்டகை வரலாற்றையும், முகைதீன் ஆண்டவர் வரலாற்றையும் காப்பியங்களாக இயற்றியுள்ளார். முகைதீன் வரலாற்றை குத்பு நாயகம் என்னும் புராணமாக்கினார். நபி வரலாற்றை 2044 பாக்களில் திருமணிமாலையாகப் பாடியுள்ளார். அரபி, பார்ஸி, வடமொழி, தமிழ் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.

3.சர்க்கரைப்புலவர்

இவர் மெக்கா மதினா மீது அந்தாதி பாடியுள்ளார். சேதுபதி சமஸ்தானத்தில் புலவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.சவ்வாதுப் புலவர்

இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவராக விளங்கியவர். நபிகள் நாயகத்தின் மீது முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலையும், நாகைக் கலம்பகம், ஏகத்திருப்புகழ் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

5.குணங்குடி மஸ்தான் சாகிபு

         இவர் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இயற்பெயர் சுல்தான் அப்துல் காதர். காயல்பட்டினத்தில் பிற்நத இவர் துறவு பூண்டு சென்னையில் உள்ள இராயபுரத்தில் வசித்து வந்தார். தாயுமானவர் போன்று சமய சமரச நிலையை வலியுறுத்தியவர். அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம், நிராமயக்கண்ணி, குருவணக்கம் ஆகியவற்றைப் பாடியுள்ளார்.

6. காசிம்புலவர்

இவர் திருப்புகழ் மீது ஈடுபாடு கொண்டு அருணகிரியார் போலவே பாடல்கள் இயற்றி மகிழ்ந்தவர். இவரை வரகவி என்று போற்றுவர். நபிகள் நாயகம் பகரும் என அடியெடுத்துக் கொடுக்க இவர் திருப்புகழைப் பாடினார் என்பர்.

7.குலாம் காதிறு புலவர்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்க்கல்வி பயின்றார். அரபுத்தமிழ் அகராதி, உமறுபாஷாவின் புத்த சரித்திரம், சமுத்திர மாலை, நாகூர்ப்புராணம் மதீனாக்கலம்பகம், மதுரைக் கலம்பகம் முதலியன இவருடைய படைப்புகள். நபிகளின் மீது இவர் பாடிய மும்மணிக்கோவை புகழ் பெற்ற நூலாகும்.

8.வண்ணக்களஞ்சியப்புலவர்

         இவருடைய இயற்பெயர் அமீது இபுராஹீம் என்பதாம். இஸ்லாமியப் பாடல்களில் பல வண்ணங்களை அமைத்துப் பாடியதால் வண்ணக்களஞ்சியப் புலவர் என்று அழைக்கப்படுகின்றார். நபிகளின் வரலாற்றை இராச நாயகம் என்னும் காப்பியமாக இயற்றியுள்ளார். இது 2240 பாடல்களைக் கொண்டது. தீன் விளக்கம் என்னும் புராணத்தையும் பாடியுள்ளார்.

9. கல்விக் களஞ்சிப் புலவர்

இவர் சின்னச் சீறாப்புராணம், சித்திரக் கிவத்திரட்டு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

10.செய்குத்தம்பிப் பாவலர்

         இவர் ஒரே நேரத்தில் 100 செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவர். அதனால் இவரைச் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் என்று அழைத்தனர். திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி, நீதி வெண்பா, அழகப்பக்கோவை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இசுலாமியப் புத்திலக்கிய வகை

இசுலாமியர் வரவால் பல புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றின. கிஸ்ஸா என்னும் கதை இலக்கிய வகை, படைப்போர் என்ற போர்க்களம் பாடும் இலக்கியம், மஸ்அலா என்ற இறைத்தத்துவக் கேள்விகள் அடங்கிய இலக்கியம், பதினாயிரப்படி, முப்பத்திரண்டாயிரப்படி என்ற வைணவ இலக்கியங்கள்   போன்று ஆயிர மசலா, நூறு மசலாஎன்றவாறு பல நூல்கள் தோன்றி தமிழை வளர்த்தன.

 

        

 

சித்தர் இலக்கியம்

 

சித்தர் இலக்கியம்

மனிதர்களிடம் காணப்படாத வியக்கத்தக்க ஆற்றல் கொண்டவர்களைச் சித்தர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மெய்ஞ்ஞானம் நிரம்பியவர்கள். மருத்துவம், மந்திரம், இரசவாதம் தெரிந்தவர்கள். இறப்பை வென்றவர்கள். கூடுவிட்டுக் கூடு பாயும் வல்லமை மிக்கவர்கள். யோகமும், ஞானமும் பற்றிப் பல பாடல்களைப் பாடியவர்கள். இவர்களின் பாடல்கள் ஆழமான பொருள் கொண்டவை.

சித்தர்கள் பலர் இருப்பினும் வழக்கில் பதினெண்சித்தர்கள் என்று கூறப்படும் மரபு காணப்படுகின்றது.

1.அகத்தியர் 2.இடைக்காடர் 3.உரோமமுனி  4.கருவூரார்   5.காகபுண்டர் 6.கொங்கணர் 7.கோரக்கர் 8.சட்டைமுனி 9.மச்சமுனி 10.போகர் 11.திருமூலர் 12.நந்தி 13. புண்ணாக்கீசர்   14. தேரையர் 15. யூகிமுனி 16.  காலாங்கி நாதர் 17.புலத்தியர் 18. தன்வந்திரி

ஆகியோர் பதினெண் சித்தர்கள் ஆவர். இவர்களை வகைப்படுத்துவதில் அறிஞர்களுக்கிடையே பல வேறுபாடுகள் உண்டு. அறிஞர் இரா.மாணிக்காவசகம் அவர்கள்,

1.நந்தி 2.அகத்தியர் 3.திருமூலர் 4.புண்ணாக்கீசர்  5.புலத்தியர் 6. பூனைக்கண்ணர் 7.இடைக்காடர் 8.போகர் 9.புலிப்பாணி 10.கருவூரார் 11.கொங்கணர் 12.காலங்கி   13.அழுகண்ணர் 1 4.அகப்பேயர் 15.பாம்பாட்டி 16.தேரையர் 17.குதம்பை 18.சட்டைச்சித்தர்  

என பதினெண்சித்தர்களை வகைப்படுத்தியுள்ளார். சித்தர்களின் பட்டியலில், கடுவெளிச் சித்தர், அகப்பேய்ச்சித்தர், சிவவாக்கியர், பட்டினத்தடிகள், திருவள்ளுவர், சண்டேசர் ஆகியோரும் இடம் பெறுகின்றனர். இவர்களுள் சில சித்தர்களைக் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

திருமூலர்

இவர் சித்தர் தத்துவத்தின் மூலமுதல்வர். இவர் பாடிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் சித்தர் இலக்கியங்களில் முதன்மையான நூலாகக் கருதப்படுகின்றது. இவர் 3000 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்றும், அரச மரத்தடியில் யோகத்தில் இருந்தார் என்றும், ஆண்டுக்கு ஒருமுறை கண்விழித்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு பாடலாக இயற்றி 3000 பாடல்கள் இயற்றினார் என்றும் கூறப்படுகின்றது. இத்திருமந்திரம் நிலையாமை உண்மைகளை வலியுறுத்துகின்றது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பன போன்ற புகழ் பெற்ற தொடர்கள் இந்நூலில் இடம்பெற்றவையே.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவம் என்று ஆரும் அறிகிலார்

அன்பே சிவம் என்று ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்தி ருந்தாரே

என்பன போன்ற பாடல்கள் இறைத்தத்துவத்தை உணர்த்துகின்றன.

சிவவாக்கியர்

இவர் 10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராகக் கருதப்படுகின்றார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தின் தத்துவத்தை மிக எளிமையான பாடல்களில் மக்களுக்கு உணர்த்தியவர் இவரே.

                        ஆன அஞ்செழுத்துகளே அண்டமும் அகண்டமும்

ஆன அஞ்செழுத்துகளே ஆதியான மூவரும்

ஆன அஞ்செழுத்துகளே அகாரமும் மகாரமும்

ஆன அஞ்செழுத்துகளே அடங்கலாவல் உற்றவே

என அஞ்செழுத்துகளின் பெருமையைப் பாடுகின்றார். உருவ வழிபாட்டைக் கடிந்து பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

அகப்பேய்ச் சித்தர்

            அலைபாயும் மனத்தின் இயல்பை பேய்க்கு உவமை காட்டிப் பாடியதால் இவர் அகப்பேய்ச்சித்தர் என அழைக்கப்படுகின்றார். தான் என்னும் அகங்கார உணர்வைக் கண்டு கிள்ளி எறிந்து விட்டால் மனம் அமைதியாகும் என்பதை, “நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய்” என்று பாடியுள்ளார்.

பாம்பாட்டிச் சித்தர்

            பாண்டிய நாட்டில் பிறந்தவர். பாம்பாகிய குண்டலினி சக்தியை இவர் எழுப்பியதால் இப்பெயர் பெற்றார் என்பர். மனிதனின் நிலையாமையை இடித்துரைத்துப் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே

வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்

வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே        

என்று மனித உடலை மண்பாண்டத்தின் ஓட்டிற்கு உவமை கூறுகின்றார்.

அழுகுணிச்சித்தர்

இவரது பாடல்கள் இரக்க உணர்வினைத் தூண்டும் பாங்கில் அமைந்தமையால் அழுகுணிச்சித்தர் என்று அழைக்கின்றனர். சொல்லியழுதால் குறை தீரும் என்பது இவரது கொள்கை.

பையூரிலே இருந்து பாழூரிலே பிறந்து

மெய்யூரிலே போவதற்கு வேதாந்த வீடறியேன்

என்று பாடுகின்றார்.

இடைக்காட்டுச் சித்தர்

காட்டில் ஆடு மாடு மேய்க்கும் இடையர்கள் பாடுவது போன்று இவரது பாடல்கள் அமைந்துள்ளமையால் இடைக்காட்டுச் சித்தர் எனப்படுகின்றார்.

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி

வாய்த்தது என்று எண்ணேடா தாண்டவக்கோனே

என்பன போன்று பல பாடல்களைப் பாடியுள்ளார். நெஞ்சோடு கிளத்தல், அறிவோடு கிளத்தல், குயிலோடு கிளத்தல் போன்ற பல நிலைகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

குதம்பபைச் சித்தர்

குதம்பை என்பது காதணி. குதம்பை எனும் காதணி அணிந்த மகளிரை விளித்துக் குதம்பாய் என்று இவர் தம் பாடல்களைப் பாடியுள்ளதால் குதம்பைச் சித்தர் எனப்படுகின்றார். மெய்ப்பொருள் ஒன்றே கைப்பொருள்”, “கற்றவர்க்கு எத்திசைச் சென்றாலும் புகழுண்டுஎன்பன போன்ற கருத்துகளைக் கூறியுள்ளார்.

மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பவர்க்குத்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி – குதம்பாய்

என்றவாறு தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியதாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கடுவெளிச்சித்தர்

கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.

நல்வழிதனை நாடு – எந்த

நாளும் பரமனை நந்தியே தேடு

என்ற பாடலில் ஐம்புலன்களுக்கு அடிமையாகக் கூடாது என்று அறிவுறுத்துகின்றார்.

போகர்

இவர் போகர் ஏழாயிரம், நிகண்டு, பதினேழாயிரம், சூத்திரம் எழுநூறு, போகர் திருமந்திரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவரை அதிசயிக்கத்தக்க ஆற்றல்கள் நிறைந்தவர் என்று கூறுகின்றனர்.

சட்டைமுனி

இவர் போகரின் மாணவர். சட்டைமுனி ஞானம், சடாட்சரக் கோவை, கலம்பகம் நூறு, ஞானநூறு, வாதநிகண்டு ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.

கொங்கணச் சித்தர்

இவர் பெண்களைச் சக்தியின் வடிவமாகக் கண்டவர். தாய்த் தெய்வ வழிபாட்டைப் பெரிதும் போற்றியவர்.

கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற

கற்பை யளித்தவரே வாழ்க

என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர்.

பட்டினத்தார்

இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்ககோடு திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.

பத்திரகிரியார்

இவர் பட்டினத்தாரின் சீடர். பத்திரிகிரியார் புலம்பல் என்ற பெயரில் இவர் பாடியுள்ள பாடல்கள் உலக துன்த்தை வெறுத்து வீட்டுலக இன்பத்தை அடைவதற்கான வழிகளைக் காட்டுகின்றன.

சித்தர்களின் இலக்கியம் பிற்காலத்தில் தாயுமானவர், இராமலிங்க அடிகளார், பாரதியார் போன்றோர் தங்கள் கருத்துகளை எளிய வடிவில் மக்களுக்கு வழங்குவதற்கு அடிப்படையாக அமைந்தது. தமிழ் இலக்கிய உலகில் சித்தர் இலக்கியம் ஒரு புதிய நெறியை வகுத்துத் தந்துள்ளது எனலாம்.

நன்றி - தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் சி.சேதுராமன்