ஈரோடு தமிழன்பன்
வாக்குச் சீட்டுகளுக்கு
ஓர் அர்த்தம் வரட்டும்
மதச்சார்பற்ற எமது நாட்டில்
எல்லோர்க்கும் உரிய
மாபெரும் பண்டிகை
தேர்தல்!
ஐந்தாண்டுக்கு
ஒருமுறை – சிலவேளை
காலக்கணக்கு பிசகி
முன்னதாகவும் முகம் காட்டும்!
தேர்தல் கன்னியின் கண்சிமிட்டல்களே
வாக்குச்சீட்டுகள்!
ஜாதி விலங்குகளுக்குப்
புதுமுலாம் பூசும் நாள்கள்!
குப்பென்று மனிதநேயம்
பூத்து..அம்மா, தங்கச்சி,
அண்ணே என்று உறவு மொழிகள்
தோரணம் கட்டும் பருவம்!
சேரிகள் ஒரு
சின்னச் சிங்காரத்தில்
கிறங்கிடும் காலம்!
வாக்குச்சீட்டுகள் ஒருநாள்
ரொட்டிக்கு
டோக்கன்களாக ஏழை இந்தியர்
எல்லோர்க்கும் வழங்கப்படும்!
தாய்க்குலத்துக்குத் தனி மவுசு
எவரெஸ்டுக்கும் அவர்களது
உயரம் காண
அன்றைக்கு ஏணி தேவைப்படும்!
இறுதிவரை மனிதராகாமலேயே
மரணமாகும் சிலரை – இடையில்
தலைவர்களாய் ஆட்சித்
தவிசிலேற்ற குடியாட்சி முறை
கண்டெடுத்த அரிய சாதனம்
வாக்குச்சீட்டு!
நாக்கின் பகட்டு
நாட்டியத்தில் உதிர்ந்துவிடும் – இது
சத்திய கீதத்திற்குத்
தலையசைக்கின்றதா?
இங்கே வயதுகளைக்கூடத்
தேர்தல்களாலேயே
கணக்கிடுவர்!
ஓட்டுப்போடுவதற்கென்றே
பிறந்தவர் நாம்.!
பின் வாழ்வதற்கா?
ஜனநாயகப் புறாவின் சிறகுகள்
என்று வாக்குச் சீட்டுகளை
வருணித்து வரவேற்றோம்.
ஆனந்தக் கண்ணீரால்
அவற்றை முழுக்காட்டியபோது
உள்ளிருந்த உண்மை நிறம்
பீறிட்டது.
வாக்குச் சீட்டுகள் ஜனநாயக மங்கையின்
புன்னகையாக இருந்தால் சரிதான்!
அவளது அதரத்தை அரிக்கும்
புழுக்களானால்?
இமைகளை விழிகளுக்குக்
காவலாக நிறுத்தினோம்.
அவை விழிகளைக்
கொத்தும் கழுகுகளானால்?
வாக்குச் சீட்டுகள் மட்டும்
ஜனநாயகத்தின் மூச்சுக்கு
அத்தாட்சிகள் அல்ல..
அவை அதன் மூக்குத் துளைகளை
மூடியடைக்கும் அபாயம் உண்டு!
பிறகு வாயால் சுவாசித்து
ஜனநாயகம் எத்தனை நாள்கள் வாழும்!
ஜனநாயகம் ஒரு
பூப்பின்னலாகச் சர்வாதிகாரத்தின்
சாளரத் திரைகளிலும் காணப்படும்!
பணநாயகத்தின் படிக்கட்டுகளிலும்
இந்தப் பூக்கோலம் போடப்படுவதுண்டு.
வாழ்க்கை சமமாகாத நாட்டில்
வாக்குரிமை சமமாகும்!
ஜனநாயகம் ஜனங்களோடு
ஏதோ மனம்விட்டுப் பேச
விரும்பும் வேளை..
குரங்குச் சின்னம்
பார்த்துப் போடுங்கம்மா ஓட்டு
என்ற வீங்கிய சத்தம்
மேல் வந்து விழுந்து
அந்தப் பேச்சில் விரிசல்களை
உண்டாக்குகின்றது.
கொடி மரங்களைப் போலவே
கட்சிகளுக்கும் இங்கே
இலட்சிய வேர் இல்லை.
தெருவில் மூலை முடுக்கெல்லாம்
விறைத்து நிற்கும்
அஃறிணைப் பிணங்கள்!
உச்சியில் மரணம், அவற்றின்
பொய்மை நாக்கைப் புறத்தே
தள்ளியது போலக் கொடிகள்! – காற்று
அவற்றை அசைத்துப் பார்த்து
மரணத்தை உறுதிப்படுத்துகிறது!
அழுக்குச் சுவரொட்டிகளை
ஆபாசச் சுவர் வாக்கியங்களைச்
சுவாசித்து வாழும் ஜனநாயகத்திற்கு
ஆரோக்கியம் ஏது? ஜனங்களைக்
காப்பதற்குரிய நிதி ஜனநாயகத்தின்
ஊதாரித்தனத்தால் கரைந்து போகிறது!
எமது பாரதத்திற்கு
எப்போதுமே பாலகாண்டம் தான்
சின்னப் படம் போடாமல்
விளங்காத சின்ன வயசு!
தேர்தல் சுயம்வரம் சுயத்தில்
இல்லை – பணத்தின்
வரத்தில் இருக்கிறது!
மற்றவர் குனியும்போது
ஆகாயத்தையும்
நிமிரும்போது நிலத்தையும்
சுருட்டிக்கொள்ள வல்லமை
படைத்த அரசியல்வாதிகள்..
இந்த வாக்குச் சீட்டுகளை
வழிப்பறி செய்வது கடினமானதல்ல..
திருட்டு ஓட்டுப்பெட்டி ஜனநாயகத்தின்
கருவறையா? கல்லறையா?
நாடு நடத்த வேண்டிய
வழக்காடு மன்றம்
எமது பாரத ஜனநாயகம்
பரந்த நோக்கம் உடையது
செத்தவர்கள் எல்லோரும்
கூட அன்று வந்து
வாக்களித்துவிட்டுப் போகலாம்
காந்தி காமராஜ்
அண்ணா பெரியார்
இவர்கள் கட்சிகளுக்குச்
செத்தும் கொடுத்த சீதக்காதிகள்!
ஒவ்வொரு வாக்குச் சீட்டும்..
இவர்கள் கல்லறையிலிருந்து
இது வருகிறது!
இனி
இனி, இனியேனும்
ஜனநாயகம் கட்சிகளை
விவாகரத்து செய்துவிட்டு
ஜனங்களுக்கு மாலை சூடட்டும்!
வாக்குச் சீட்டுகளுக்கு
ஒரு அர்த்தம் வரட்டும்!
பாடல் விளக்கம்
மதச்சார்பற்ற நம் நாட்டில் அனைவருக்கும் உரிய
பண்டிகையாகத் தேர்தல் அமைகின்றது. அது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். சில வேளைகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலோ, தலைவர்கள் இறந்து விட்டாலோ காலக் கணக்குத் தவறி இடையிலேயே
கூட தேர்தல் வந்து விடும்.
தேர்தல் காலத்தில் நடைபெறும் செயல்கள்
தேர்தல் என்பது அரசியல்வாதிகளைக் கவருகின்ற
ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஓட்டுகளை வாங்க முயற்சி
செய்வர். அதுவரை மறந்திருந்த மனிதநேயம் திடீரென்று
மலர்ந்து அம்மா, தங்கச்சி, அண்ணே என்ற உறவு மொழிகள் கூறி ஓட்டுக் கேட்டு
அரசியல்வாதிகள் வருவர். கவனிக்கப்படாத சேரிகள், குடிசைகள் எல்லாம் தேர்தல் காலத்தில்
அலங்கரிக்கப்பர். பசியோடு இருக்கின்ற ஏழைகள் அனைவருக்கும்
தேர்தல் அன்று, ஒரு நாள் டோக்கனாக உணவு தந்து, அவர்களைத் தம் வசப்படுத்தி, ஓட்டு வாங்குவர். தாய்க்குலத்தைத் தனியாகச் சந்தித்து இலவசமாகப்
பல பொருட்களை வழங்கி, அவர்களை விலை
கொடுத்து வாங்கி விடுவர்.
வாக்குச் சீட்டின் நிலை
மக்களுக்கு நன்மை தருகின்ற செயல்களைச் செய்ய
மறந்து, இறுதிவரை மனிதராகாமலேயே மரணமாகிவிடுகின்ற
சிலரைத் தலைவர்களாக ஆட்சியில் அமரச் செய்ய குடியாட்சி முறை கண்டுபிடித்த சாதனமாக
வாக்குச் சீட்டு அமைந்துவிட்டது. அரசியல்வாதிகளின் நயவஞ்சகப் பேச்சில் குடிமக்கள் மயங்கி
அவர்களை முழுவதுமாக நம்பி ஓட்டுப் போடுகின்றனர். ஆனால் குடிமக்கள் நிம்மதியாக வாழ்வதில்லை.
ஜனநாயகம்
மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கின்ற
தலைவர்களைக் கொண்டதுதான் ஜனநாயகம். அது சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களின்
வாழ்வாதாரத்திற்குப் பாதுகாவலாக இருத்தல் அவசியம். ஆனால், ஜனநாயகம் சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கி
இருக்கின்றது. சுதந்திரமாகச் செயல்படக் கூடிய தன்மையை
இழந்துவிட்டது. மக்களின் வாழ்க்கையைக் குறித்த எந்தவொரு
கொள்கையும் இன்றி செயல்படுகின்றது. அதனால், ஜனநாயகம் மக்களின் புன்னகையை அழிக்கின்ற
புழுக்கள் என்றும், விழிகளைக் கொத்தும் கழுகுகள் என்றும் கவிஞர்
கூறுகின்றார். வாழ்க்கை சமமாகாத நாட்டில் வாக்குரிமை
மட்டும் எப்படி சமமாக இருக்க முடியும். இதையெல்லாம் உணர்ந்து மக்கள் மனம் விட்டுப் பேச விரும்பும்
வேளை, உடனே தேர்தல் வந்து விடுகின்றது. “குரங்குச் சின்னம் பார்த்து போடுங்கம்மா ஓட்டு” என்ற சத்தம் அந்தப் பேச்சில் விரிசல்களை உண்டாக்கி விடுகின்றது. கொடி மரங்களைப் போலவே கட்சிகளுக்கும் இங்கே இலட்சிய வேர்
இல்லை.
மக்களின் அறியாமை
மக்கள் தேர்தலை ஒரு விளையாட்டாகவே
எண்ணுகின்றனர். அது ஒரு பொறுப்பான செயல் என்பதை ஏற்க
மறுக்கின்றனர். மக்களுக்குச் கட்சியின் சின்னம் போட்ட படம்
இல்லையென்றால் தலைவர்களை அடையாளம் காண தெரியவில்லை. அந்த அளவிற்கு அறியாமையில் இருக்கின்றனர்.
அரசியல்வாதிகளின் செயல்கள்
மற்றவர்கள் குனியும்போது ஆகாயத்தையும், நிமிரும்போது நிலத்தையும் சுருட்டிக் கொள்ளும் வல்லமை
படைத்தவர்கள் அரசியல்வாதிகள். பணத்திற்காக மட்டுமே அவர்கள் தேர்தலில்
போட்டியிடுகின்றனர். வாக்குச் சீட்டுகளை விலை கொடுத்து வாங்குவது
அவர்களுக்குக் கடினமான வேலையல்ல. எனவே, திருட்டு ஓட்டுப் பெட்டி ஜனநாயகத்தின் கல்லறையா? கருவறையா? என்று வழக்காடு மன்றம் நடத்த வேண்டிய
நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது. இறந்து போனவர்களின் பெயரால் கள்ள ஓட்டு
போடப்படுகின்றது. காந்தி, காமராஜர், அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களைக் கூறிக் கூறியே
வாக்குச் சீட்டுகளை அள்ள முயல்கின்றனர்.
முடிவுரை
நாட்டின் அவல நிலையை உணர்ந்து, மக்களுக்கு நன்மை தருகின்ற செயலில் அரசியல்வாதிகள் ஈடுபட
வேண்டும். அப்போதான் வாக்குச் சீட்டுகளுக்கு ஓர்
அர்த்தம் வரும் என்று குறிப்பிடுகின்றார். கவிஞர்.