திங்கள், 22 மே, 2023

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

 

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

ஓடிக் கொண்டிருப்பவனே! நில்

எங்கே ஓடுகிறாய்?

எதற்காக ஓடுகிறாய்?

வாழ்க்கையைப் பிடிக்க ஓடினாய்

ஆனால் உன் கண் மூடிய ஓட்டத்தில்

அதைப் பார்க்காமலே ஓடுகிறாய்

நில் கவனி

உன்னிலிருந்தே ஓடுகிறாய்

உன்னை விட்டு ஓடுகிறாய்

குளிர்காயச்

சுள்ளி பொறுக்கத் தொடங்கினாய்

சுள்ளி பொறுக்குவதிலேயே

உன் ஆயுள்

செலவாகிக் கொண்டிருக்கிறது

நீ குளிர் காய்வதே இல்லை

வாழ்க்கை ஒரு திருவிழா

நீயோ அதைக் கொண்டாடுவதே இல்லை

கூட்டத்தில்

தொலைந்து போகிறாய்

ஒவ்வொரு வைகறையும்

உனக்காகவே

தங்கத் தட்டில்

பரிசுகளைக் கொண்டு வருகிறது

நீயோ பெற்றுக் கொள்வதே இல்லை.

ஒவ்வோர் இரவும்

உனக்காகவே

நட்சத்திரப் பூச்சூடி

ரகசிய அழகுகளோடு வருகிறது

நீயோ தழுவிக் கொண்டதே இல்லை

பூர்ணிமை

இரவுக் கிண்ணத்தில்

உனக்காகவே வழிய வழிய

மது நிரப்புகிறது

நீயோ அருந்துவதே இல்லை

ஒவ்வொரு பூவும்

உன் முத்தத்திற்கான இதழாகவே

மலர்கிறது

நீயோ முத்தமிட்டதே இல்லை.

மேகங்களில் கிரணங்கள்

உனக்காக ஏழு வர்ணங்களில்

காதல் கடிதம் எழுதுகின்றன

நீயோ படிப்பதே இல்லை.

உன்னைச் சுற்றிலும் சௌந்தர்ய தேவதை

காதலோடு புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்

நீயோ பார்ப்பதே இல்லை

உன் மனைவியின் கொலுசில்

உன் குழந்தையின் சிரிப்பில்

உன் அண்டை வீட்டுக்காரனின்

கை அசைப்பில்

தெருவில் போகின்ற அந்நியனின்

திரும்பிப் பார்த்தலில்

வாழ்க்கையின் சங்கீதம் ஒலிக்கிறது

நீயோ கேட்பதே இல்லை.

தறி நாடாவைப் போல

இங்கும் அங்கும் அலைகிறாய்

ஆனால்

நீ எதையும் நெய்வதில்லை.

ரசவாதக் கல்லைத்

தேடி அலைகிறாய்

நீதான் அந்தக் கல் என்பதை

நீ அறியவில்லை.

கடிகார முள்ளாய்

சுற்றிக் கொண்டே இருப்பவனே

வாழ்க்கை என்பது

வட்டிமடிப்பதல்ல என்பதை

எப்போது உணரப் போகிறாய்?

நீ அர்த்த ஜீவனுள்ள

எழுத்துக்களால் ஆனவன்

ஆனால் நீயோ

வெறும் எண்ணாகிவிடுகிறாய்.

நீ முத்துக்கள் நிறைந்த சமுத்திரம்

ஆனால் நீயோ

கிளிஞ்சல் பொறுக்க

அலைந்து கொண்டிருக்கிறாய்.

நீ வயிற்றிலிருந்துதான் வந்தாய்

ஆனால் நீ

வயிற்றில் இல்லை.

வயிற்றில் விழுந்து கிடப்பவனே

மேல் இதயத்திற்கு ஏறு

அங்கே

உனக்கான ராஜாங்கம்

காத்திருக்கிறது.

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

கவிதையின் விளக்கம்:

இன்றைய அறிவியல் உலகில் நாம் நம் வாழ்க்கையை இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நடைமுறை வாழ்க்கையில் எத்தகைய இன்பங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் தம் ‘இழந்தவர்கள்என்ற கவிதை மூலம் விளக்குகின்றார்.

  • குளிர் காய சுள்ளி பொறுக்கத் தொடங்கிய நாம், வெறும் சுள்ளி பொறுக்குவதில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவதால் குளிர் காய்வதே இல்லை.
  • வாழ்க்கை என்ற திருவிழாவைக் கொண்டாட நாம் விரும்புவதே இல்லை. மாறாக, திருவிழாவின் கூட்டத்தில் தொலைந்து போகவே விரும்புகின்றோம்.
  • ஒவ்வொரு நாளும் விடியல் நமக்குத் தங்கத் தட்டில் பரிசுகளைக் கொண்டு தருகின்றது. ஆனால் நாம் அதைப் பெற்று கொள்வதே இல்லை.
  • விண்மீண்கள் நமக்காகவே இரவில் பூச்சூடி வருகின்றன. ஆனால் நம் அதன் அழகினைக் கவனிப்பதே இல்லை.
  • பௌர்ணமி நாளில் முழுநிலவின் இனிமையினை நாம் ரசிப்பதே இல்லை.
  • ஒவ்வொரு பூவும் நம் முத்தத்திற்காகவே விரிகின்றன. நாமோ முத்தமிட்டதே இல்லை.
  • மேகங்கள் ஏழு வண்ணங்களில் வானவில்லாய் வளைந்து காதல் கடிதம் தீட்டுகின்றன. நாம் அதைப் படிப்பதே இல்லை.
  • மனைவியின் கொலுசில் ஏற்படும் ஒலியில், குழந்தையின் சிரிப்பில், பக்கத்து வீட்டுக்காரரின் கை அசைப்பில், தெருவில் போகின்ற அந்நியர் திரும்பிப் பார்க்கையில் என நம் வாழ்க்கையைச் சுற்றிலும் சங்கீதம் ஒலிக்கின்றது. நாம்தான் அதைக் கேட்பதேயில்லை.
  • தறியில் ஓடும் நாடாவைப் போல் நாமும் ஓடுகின்றோம். ஆனால் எதையும் நெய்வதில்லை.
  • மண்ணைப் பொன்னாக்கும் ரசவாதக் கல்லைத் தேடி அலைகின்றோம். ஆனால் நாம்தான் அந்தக் கல் என்பதை நாம் அறிவதே இல்லை.
  • கடிகார முள்ளைப் போன்று சுற்றிக் கொண்டே இருக்கின்றோம். வாழ்க்கை வெறும் வட்டமடிப்பது இல்லை என்பதை நாம் உணர்வதே இல்லை.
  • நாம் உயிர் எழுத்துக்களால் உருவானவர்கள். ஆனால் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் முத்துக்கள் நிறைந்த கடலைப் போன்றவர்கள். ஆனால் சிப்பிகளைத் தேடுவதிலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் அனைவரும் வயிற்றிலிருந்து தான் வந்தோம். ஆனால், வயிற்றினால் உண்டாகும் பசியினையும், அதை நிறைவேற்றுவதற்காக பணம் சம்பாதிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம்.
  • இதயம் என்ற ஒன்று நமக்கு உண்டு. அதில் அன்பும் கருணையும் கலந்திருக்கின்றது. அதுதான் நம் வாழ்க்கையை ராஜ வாழ்க்கையாக மாற்றும் திறவுகோல் என்பதை உணர வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் இனிமையை நாம் அனுபவிக்க முடியும் என்று கவிஞர் மிக அழகாக வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்குகின்றார்.

 

 

 

 

கடமையைச் செய் - மீரா

 

கடமையைச் செய் - மீரா

பத்து மணிக்குச்

சரியாய் நுழைந்தேன்.

கூட இருப்போரிடத்தில்

கொஞ்சம் குசல விசாரணை.

தலை வலித்தது

தேநீர் குடிக்க

நாயர் கடைக்கு நடந்தேன்.

ஊரில் இருந்து

யாரோ வந்தார்

ஒரு மணி நேரம்

உரையாடல்.

இடையில்

உணவை மறக்கலாமா?

உண்டு தீர்த்த

களைப்புத் தீர

ஒரு கன்னித் தூக்கம்.

முகத்தை அலம்பிச்

சிற்றுண்டி நிலையம்

சென்று திரும்பினேன்.

வேகமாய்

விகடனும் குமுதமும்

படித்து முடித்தேன்.

மெல்லக்

காகிதக் கட்டை எடுத்துத்

தூசியைத் தட்டித் துடைத்துக்

கடமையைச் செய்யத்

தொடங்கும்போது.

கதவை அடைத்தான்

காவற்காரன்

மணி ஐந்தாயிற்றாம்.

 

கடமையைச் செய் - மீரா

கவிதையின் விளக்கம்:

    கவிஞர் மீரா அவர்கள் ‘கடமையைச் செய்என்ற தம் கவிதையின் மூலமாக, அரசாங்க ஊழியர்கள் அலுவலக நேரத்தில் வேலை செய்யாமல் நேரத்தை எவ்வாறு வீணடிக்கின்றனர் என்பதைத் தெரிவிக்கின்றார். இக்கவிதை அங்கத (கிண்டல், கேலி) முறையில் அமைந்துள்ளது.

  • பத்து மணிக்குச் சரியாக அலுவலகத்தில் நுழைந்த ஊழியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் மற்ற ஊழியர்களிடம் உரையாடி நலம் விசாரிக்கின்றார். 
  • லேசாக தலை வலிப்பது போல் தோன்றியதால், தேநீர் பருக நாயர் கடைக்குச் செல்கின்றார்.
  • தேநீர் அருந்திய பின் ஊரிலிருந்து வந்த யாரோ ஒருவரிடம் ஒரு மணி நேரம் உரையாடுகின்றார்.
  • உணவு இடைவேளை வந்து விட்டது. உணவு அருந்துகின்றார்.
  • உண்ட களைப்பு தீர சிறிது நேரம் உறங்குகின்றார்.
  • பின்பு, முகத்தைக் கழுவிக்கொண்டுச் சிற்றுண்டி நிலையத்திற்குப் புறப்படுகின்றார்.
  • மீண்டும் அலுவலகம் வந்த பின்பு தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விகடன் குமுதம் போன்ற இதழ்களைப் படிக்கின்றார்.
  • அலுவலகம் வந்ததில் இருந்து வேலையைப் பற்றிச் சிறிதும் யோசித்துப் பார்க்காத அவர் மெதுவாக காகிதக் கட்டைகளை எடுத்துத் தூசியைத் தட்டித் துடைத்து கடமையைச் செய்யத் தொடங்கினார்.
  • அப்போது காவல்காரன் வந்து, மணி ஐந்து ஆகிவிட்டது எனக் கூறி கதவை அடைக்கின்றார்.

இவ்வாறு ஊழியர்கள் சிலர் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதால்தான் அரசாங்கப் பணிகளைச் சரியாகச் செய்ய முடிவதில்லை என்ற கருத்து இக்கவிதையின்வழி புலப்படுகின்றது.

 

 

 

ஆடிக்காற்றே - சிற்பி

ஆடிக்காற்றே - சிற்பி

ஆடிக்காற்றே வா! வா!

மண் தூவி விதை தூவி

முளை காண விழை காற்றே

என் சொல் கேளேன்.

நெல்லை நாறப் புழுக்குறானே

அவனைப் படியில் உருட்டிவிடு

இளைத்தவன் வயிற்றில் சொடுக்குறானே

அவனைக் குழியில் இறக்கிவிடு

மஞ்சள் இதழில் பச்சை கிறுக்குறானே

அவனை பனை மரத்தில் தொங்கவிடு

உதைத்துக் கொள்ளட்டும்

துள்ளல் அடங்கட்டும்.

புரட்சிக் காற்றே!

இன்னும் ஒன்றே ஒன்று

இவற்றைக் காண விழைந்த என் துணை

இதோ, இங்கே நிலப்படுக்கையில்,

எனக்காக -

மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா?

மெல்ல -

மெல்லத் தூவு, நோகாமல் தூவு.

 

ஆடிக்காற்றே - சிற்பி

கவிதையின் விளக்கம்:

  • ஆடி மாதத்தில் வீசும் காற்றை கவிஞர் இன்முகத்தோடு வரவேற்கும் வகையில் ‘ஆடிக்காற்றே வா வாஎன்று பாடுகின்றார்.
  • ஆடிக்காற்றைப் புரட்சிக் காற்று என்றும் வர்ணிக்கின்றார்.
  • மண்ணையும் விதைகளையும் தூவி அவை பயிராவதைக் காண விரும்பும் உழவர்களுக்கு உதவும் வகையில், தன் சொல் கேட்குமாறு ஆடிக்காற்றிடம் கூறுகின்றார் கவிஞர். 
  • கல்நெஞ்சம் கொண்டு மக்களைப் பல வகைகளில் துன்புறுத்தும் சில சமுதாய துரோகிகளை எவ்வாறெல்லாம் தண்டிக்க வேண்டும் என்று தன் ஆதங்கத்தை ஆடிக்காற்றிடம் தெரிவிக்கின்றார்.

1.அரிசியைத் துர்நாற்றத்தோடு எடுத்து வழங்குபவனை படியில் உருட்ட வேண்டும்.

2.அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களுக்குப் பணமும் கொடுக்காமல் விளைச்சலில் பங்கும் தராமல் அவர்கள் வயிற்றில் அடித்து பட்டினி போடுகின்றவனைக் குழியில் இறக்க வேண்டும்.

3.பிறரை இழிவுபடுத்தும் வகையில் மஞ்சள் இதழில் ஆபாசமாக எழுதுகின்றவனைப் பனை மரத்தில் தொங்க விட்டு, துள்ளல் அடங்கித் தானே இறந்து போக வேண்டும்.

என்று ஆடிக்காற்றிடம் விண்ணப்பம் செய்கின்றார். இறுதியாக, ‘அவற்றைக் காண விரும்பிய என் மீது மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா? தூவினால் மெல்லத் தூவு, நோகாமல் தூவுஎன்றும் கூறுகின்றார்.


வியாழன், 18 மே, 2023

நாட்டுப்புறப் பாடல் - மானம் விடிவெதெப்போ?

 

நாட்டுப்புறப் பாடல் 

மானம் விடிவெதெப்போ?

மழையில்லாத காலத்தில் கன்னிப் பெண்கள் வருணனை வேண்டிப் பாடும் பாக்கள் இவை.

பூமியை நம்பி புத்திரைத் தேடி வந்தோம்.

பூமி பலி எடுக்க புத்திரர் பரதேசம்,

மானத்தை நம்பி மக்களைத் தேடி வந்தோம்.

மானம் பலியெடுக்க மக்களெல்லாம் பரதேசம்.

ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம் பின்னப் பட்டு நிக்கிறாங்க.

அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ண தேவா...

மேழி பிடிக்கும் தம்பியெல்லாம் முகஞ் சோர்ந்து நிக்கிறாங்க...

அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ணதேவா....

காட்டுத் தழை பறித்து கையெல்லாம் கொப்புளங்கள்

கடி மழை பெய்யவில்லை கொப்புளங்கள் ஆறவில்லை.

வேலித் தழை பறித்து விரலெல்லாம் கொப்புளங்கள்

விரைந்து மழை பெய்யவில்லை வருத்தங்கள் தீரவில்லை.

மானம் விடிவதெப்போ எங்க மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ?

பூமி செழிப்பதெப்போ எங்க புள்ளைப் பஞ்சம் தீர்வதெப்போ?

ஓடி வெதச்ச கம்பு ஐயோ! வருணதேவா

ஊடு வந்து சேரலையே பாடி வெதச்ச கம்பு

ஐயோ வருணதேவா பானை வந்து சேரலையே.

பாடல் விளக்கம்:

          மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க மழை பெய்யச் செய்யுமாறு வருணனிடம் வேண்டுகின்றனர்.

  • மக்கள் உயிர் பிழைக்க ஊர்விட்டு ஊர் வந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் உணவு நீர் இல்லாமல் தவித்தனர்.
  • மழை வரும் என்று வானத்தை நம்பியதும் வீண்போனது. மழை பெய்யவில்லை. மக்களெல்லாம் உடல் மெலிந்து இறக்கும் சூழ்நிலைக்கு ஆளானார்கள்.
  • ஏர் பிடித்து உழவு செய்பவர்களெல்லாம் தாங்கள் விதைத்த விதை பயிராகவில்லையே என்று வருந்தி முகம் சோர்ந்து நிற்கின்றனர். அவர்கள் குறையைத் தீர்க்க மழையாக வந்திறங்கு வருணதேவா என்று வேண்டுகின்றனர்.
  • தங்களுக்கு உணவு இல்லாமல் போனாலும் தங்களை நம்பியிருக்கும் மாடு, கன்றுக்கு உணவு தரவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு காட்டிலும் வேலியிலும் தழை பறித்ததால், அவர்களின் கைகளிலும், விரல்களிலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. 
  • அப்பொழுதும் மழை பெய்யவில்லை. அவர்களின் குறை தீரவில்லை. கொப்புளங்கள் ஆறவில்லை.
  • மழை வரும் என்று நம்பி வானத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த மக்கள் தங்கள் பஞ்சம் எப்பொழுது தீரும் என்றும், பூமி எப்பொழுது செழிக்கும் என்றும் அழுது புலம்பினர்.
  • ஓடியும் பாடியும் விதைத்த கம்பு பயிராகவில்லையே தாங்கள் விதைத்த பானையளவுகூட விளைச்சல் இல்லையே என்று கவலையோடு கூறி இக்குறையைத் தீர்க்க வந்திறங்கு வர்ணதேவா என்று அவ்வூரிலுள்ள கன்னிப் பெண்கள் வருணதேவனை வேண்டிப் பாடினர்.

 

 

நாட்டுப்புறப்பாடல் - பஞ்சம்

 நாட்டுப்புறப்பாடல்

பஞ்சம்

தாது வருடப் பஞ்சத்திலே  - ஓ சாமியே

தாய் வேறே பிள்ளைவேறே - ஓ சாமியே

அறுபது வருசம் போயி - ஓ சாமியே

அடுத்தாப்போலே தாதுதானே  - ஓ சாமியே

தைப்பொங்கல் காலத்திலே - ஓ சாமியே

தயிருக்கும் பஞ்சம் வந்ததே  - ஓ சாமியே

மாசி மாதத் துவக்கத்திலே   - ஓ சாமியே

மாடுகளும் பட்டினியே - ஓ சாமியே

பங்குனிக் கடைசியிலே  - ஓ சாமியே

பால் மாடெல்லாம் செத்துப் போச்சே - ஓ சாமியே

சித்திரை மாதத் துவக்கத்திலே  - ஓ சாமியே

சீரெல்லாம் குலைந்து போச்சே - ஓ சாமியே

வைகாசி மாதத்திலேதான் - ஓ சாமியே

வயிறு எல்லாம் ஒட்டிப்போச்சே - ஓ சாமியே

ஆனி மாதத் துவக்கத்திலே  - ஓ சாமியே

ஆணும் பெண்ணும் அலறலாச்சே - ஓ சாமியே

ஆடி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே

ஆளுக்கெல்லாம் ஆட்டமாச்சே - ஓ சாமியே

ஆவணி மாசத் துவக்கத்திலே - ஓ சாமியே

ஆட்டம் நின்று ஓட்டமாச்சே - ஓ சாமியே

புரட்டாசிக் கடைசியிலே - ஓ சாமியே

புரண்டுதே உலகம் பூரா - ஓ சாமியே

ஐப்பசித் துவக்கத்திலே  - ஓ சாமியே

அழுகையுண் சீருந்தானே - ஓ சாமியே

கார்த்திகைக் கடையிலே  - ஓ சாமியே

கண்ட இடம் எல்லாம் பிணம் - ஓ சாமியே

மாகாராணி புண்ணியத்திலே - ஓ சாமியே

மார்கழிப் பஞ்சம் நின்றதே - ஓ சாமியே

காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

ரோட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

மேட்டுப் பக்கம் நூறு பிணம்  - ஓசாமியே

ஆற்றிலேயும் தண்ணியில்லை - ஓ சாமியே

கிணற்றில் பார்த்தால் உப்புத் தண்ணி - ஓசாமியே

கிழடு கட்டை குடிக்குந் தண்ணி - ஓ சாமியே

தவறினது கோடி சனம்  - ஓ சாமியே

கஞ்சியில்லா மேதவித்து - ஓ சாமியே

கஞ்சித் தொட்டி போட்டார்களே - ஓ சாமியே

அன்புடனே சலுக்கார்தானே - ஓ சாமியே

காலம்பர கோடி சனம் - ஓ சாமியே

கஞ்சி குடித்துக் களையாத்துச்சே - ஓ சாமியே

பொழுது சாயக் கோடி சனம்  - ஓ சாமியே

பொழைச்சுதே உசிர் தப்பித்து - ஓ சாமியே

கஞ்சிக்குக் கடிச்சிக்கிற - ஓ சாமியே

காணத் துவையல் கொடுத்தாங்களே - ஓ சாமியே

பாடல் விளக்கம்:

நாட்டிற்கு இன்றியமையாத தேவை மழை. மழை பொழியாவிட்டால் ஆறு குளங்கள் வறண்டு விடும். அதனால் விளைச்சல் குறையும். நாட்டில் பஞ்சம் ஏற்படும். நம் நாட்டில் தாது வருடத்தில் ஏற்பட்ட பஞ்சம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்பஞ்ச காலத்தில் நாட்டில் நடைபெற்ற கொடிய நிகழ்வுகளை இந்நாட்டுப்புறப்பாடல் தெளிவாகக் காட்டுகின்றது.

இப்பாடலில் தமிழ் மாதங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு, அம்மாதங்களில் ஏற்பட்ட பஞ்சத்தின் கொடுமைகள் விளக்கப்பட்டிருப்பது இப்பாடலின் தனிச்சிறப்பாகும்.

  • தை மாதத்தில் தயிருக்குப் பஞ்சம் வந்தது.
  • மாசி மாதத் துவக்கத்தில் மாடுகள் பட்டினி கிடந்தன.
  • பங்குனி மாதத்தில் பட்டினியால் பசு மாடுகள் இறந்தன.
  • சித்திரை மாதத்தில் நகரத்தின் அழகும், புகழும் அழிந்து போனது.
  • வைகாசி மாதத்தில் உணவு இல்லாமல் மக்களின் வயிறுகள் காய்ந்து போனது.
  • ஆனி மாதத்தில் ஆண்களும் பெண்களும் பசியால் அலறினார்கள்.
  • ஆடி மாதத்தில் பசியின் கொடுமையால் மனிதர்களின் உடலெல்லாம் நடுங்கியது.
  • ஆவணி மாதத்தில் நடுக்கம் நின்று மக்கள் அங்குமிங்கும் பசியால் ஓடினார்கள்.
  • புரட்டாசி மாதத்தில் மக்களுக்கு உலகமே தலை கீழாகப் போயிற்று.
  • ஐப்பசி மாதத்தில் எல்லா இடங்களிலும் அழுகைக் குரல் ஒலித்தது.
  • கார்த்திகை மாதத்தில் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் பிணங்கள் கிடந்தன.
  • இறைவனின் அருளால் மார்கழி மாதம் பஞ்சம் தீர்ந்தது.

காட்டில், வீட்டில், ரோட்டில், மேட்டில் என காணும் இடங்களில் எல்லாம் நூறு நூறு பிணங்கள் தென்பட்டன. கிணற்றுத் தண்ணீரும் உப்புத் தண்ணீராய் மாறியது. அத்தண்ணீரை வயதானவர்கள் மட்டும் குடித்தனர். கோடி மக்கள் மடிந்தனர். கஞ்சிக்கு வழியில்லாமல் தவித்தனர். பஞ்சத்தின் கொடுமையை அறிந்த அரசாங்கம் கஞ்சித் தொட்டியை வைத்து மக்களின் பசியை ஆற்ற முயற்சி செய்தது. கஞ்சியோடு துவையலையும் கொடுத்தது. காலையும் மாலையும் கஞ்சி குடித்து மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொண்டனர்.

 

 


சனி, 13 மே, 2023

பராபரக் கண்ணி (11 ஆம் பாடல் முதல் 40ஆம் பாடல் வரை)

 

குணங்குடி மஸ்தான் சாகிபு

பராபரக் கண்ணி

(11 ஆம் பாடல் முதல் 40ஆம் பாடல் வரை)

முதல் பத்துப் பாடல்களின் விளக்கம்

 https://arangameena.blogspot.com/2021/10/blog-post_48.html

 11. மந்திரத்துக்கு எட்டா மறைப் பொருளே மன்னுயிரே

சேர்ந்த எழு தோற்றத்தின் சித்தே பராபரமே

விளக்கம்

எந்தவிதமான மந்திரத்திற்கும் எட்டா மறைபொருளாக விளங்குபவனே! நிலை பெற்ற உயிராக இருப்பவனே! உலகத்தின் எழுவகைப் பிறவிகளிலும் நிறைந்த சித்துப் பொருளே! பராபரமே!

12. தனியேனுக்கு ஆதரவு தாரணியில் இல்லாமல்

அனியாயம் ஆவதும் உனக்கு அழகோ பராபரமே

விளக்கம்

இந்த உலகத்தில் யாருடைய ஆதவும் இல்லாமல் தனியா இருக்கின்ற நான் உன் அருளைப் பெறாமல் அநியாயமாய் அழிவது உனக்கு அழகாகுமோ! பராபரமே!

13. ஓடித் திரிந்து அலைந்து உன்பாதம் காணாமல்

வாடிக் கலங்குகிறேன் வராய் பராபரமே

விளக்கம்

எங்கெங்கோ ஓடித் திரிந்து அலைந்து உன் திருவடியைக் காணாமல் வாடுகின்றேன். நீ வந்து எனக்கு அருள் செய்ய வேண்டும். பராபரமே!

 

14. தூராதி தூரம் தொலைத்து மதி உன் பாதம்

பாராத பாவத்தாற் பயந்தேன் பராபரமே

விளக்கம்

கடக்க வேண்டிய தூரங்களை எல்லாம் கடந்து, என் அறிவினால் உன் திருவடியை நோக்காத பாவத்தினால் அச்சம் கொண்டேன். பராபரமே!

15. தேடக் கிடையாத் திரவியமே தேன் கடலே

ஈடுனக்கு உண்டோ இறையே பராபரமே

விளக்கம்

தேடியும் கிடைக்காத திரவியம் போன்றவன் நீ! உன்னை நம்பியிருக்கும் அடியவர்களுக்கு தேன் கடலாக விளங்குபவன் நீ! இவ்வுலகில் உனக்கு ஈடாக ஒருவம் இல்லை இறைவனே! பராபரமே!

16.அரிய பெரும்பொருளே அன்பாய் ஒருவார்த்தை

பரிபூரணமாய்ப் பகராய் பராபரமே

விளக்கம்

அருமையான பெரும்பரம்பொருளே! அன்போடு என்னிடம் ஒரு வார்த்தை பேசினால் மகிழ்வேன்! பராபரமே!

17.  ஐயோஎனக்கு உதவும் ஆதரவை விட்டுவிட்டுத்

தையலரைத் தேடித் தவித்தேன் பராபரமே

விளக்கம்

அந்தோ! அடியேனுக்கு உதவி செய்கின்ற உன்னை வணங்காமல், பெண்களைத் தேடிச் சென்று பரிதவித்தேன்! பராபரமே!

18. எத்திசையும் நோக்கி விசையாத் திருக் கூத்தாய்

வித்தை விளையாட்டு விளைப்பாய் பராபரமே

விளக்கம்

எந்நத் திசையைப் பார்த்தாலும் பொருந்தாத திருக்கூத்தாய் வித்தை செய்யும் விளையாட்டைச் செய்கின்றவனே! பராபரமே!

19. எப்பொழுது முன்பதத்தில் என் கருத்தே பெய்துதலுக்கு

இப்பொழுதே கைப்பிடித்தான் இறையே பராபரமே

விளக்கம்

எக்காலத்திலும் உன்னுடைய திருவடிகளில் என்னுடைய மனம் பதிவடைய இப்போதே அடியேனைக் கைப்பிடித்து அருள வேண்டும்! பராபரமே!

20. வாதுக் கடாவரும் வம்பரைப்போலே் தோஷி மனம்

ஏதுக் கடாவதியான் எளியேன் பராபரமே

விளக்கம்

துன்பம் செய்யும் தொழில்களைச் செய்கின்ற வீண் வம்புக்காரர்களைப் போல என் மனம் எதை விரும்புகிறது? எதை நாடுகின்றது எனத் தெரியவில்லை. நான் எளியவனாக இருக்கின்றேன். நீ அருள் செய்வாய்! பராபரமே!

21. கண்ணே மனோன்மணியே கண்பார்வைக்கு எட்டாத

விண்ணடங்கா வெட்ட வெளியே பராபரமே

விளக்கம்

என் கண்ணாக விளங்குபவனே! மனோன்மணியே! கண்களின் பார்வைக்கு எட்டாமல் இருக்கும் ஆகாயத்திற்கு அடங்காத வெட்ட வெளியாக நிற்பவனே! பராபரமே!

22. அடக்கவரி தாமாயி லைம் பொறியைக் கட்டிப்

படிக்கப் படிப்பெனக்குப் பகராய் பராபரமே

விளக்கம்

ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வது என்பது மிகக் கடினம். அதனால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவை எனக்கு அருள வேண்டும்! பராபரமே!

23.எத்தவங்கள் செய்தாலும் இன்பமுடன் துன்பத்தை

முத்தர் ஒருபோதும் உற்றார் பராபரமே

விளக்கம்

ஆன்மா முக்திநிலை அடைந்த முத்தர்கள் எப்படிப்பட்ட தவங்களைச் செய்தார்களானாலும் உன்னுடைய திருவடிகளை ஒருநாளும் மறக்க மாட்டார்கள். பராபரமே!

24. சொல்லுக்கு இணங்காத சூத்திரத்தைப் பார்த்திருக்கு

அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே

விளக்கம்

வார்த்தைகளுக்கு அடங்காத உம் மறைபொருளை அறிவது ஒன்றே எனக்கு இரவும் பகலும் விருப்பமாக இருக்கின்றது! பராபரமே!

25. நாற்றச் சடிலமதை நம்பார் முகத்திருக்கப்

பூத்து மலர்ந்திருக்கும் பூவே பராபரமே

விளக்கம்

நாற்றம் வீசுகின்ற உடல் நிலையற்றது. இதை உணர்ந்து உன்னை அறிந்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை இன்பமடையும். அப்படிப்பட்டோர் முகரக்கூடிய மலர்ந்திருக்கும் பூவாக இருக்கின்றவனே! பராபரமே!

26. சோற்றுப் பொதியைச் சுமந்தே திரிந்தலைந்தே

ஆற்றாமல் நின்று களைத்தழுதேன் பராபரமே

விளக்கம்

சோற்றை மட்டுமே விரும்புகின்ற இந்த உடலைச் சுமந்து திரிந்து அலைந்து, வாழ்வின் உண்மைப் பொருளை அறியாது களைத்து அழுதேன்! பராபரமே!

27. காற்றுத் துருத்திதனைக் கல்லா யணைந்திருக்கச்

சூத்திரமாய் நின்றாய் சுழியே பராபரமே

விளக்கம்

காற்றை உள்வாங்கிக் கொண்டு உயிர் பிழைத்திருக்கும் உடலை, கல் போன்று நிலையானது என்று எண்ணி நான் அதைச் சேர்ந்திருந்தேன். நீ அதன் உட்பொருளாக நின்றிருந்தாய்! பராபரமே!

28. கோலத் திருவடிவு கோதையர்கள் ஆசையினால்

ஆலைக் கரும்பு போலானேன் பராபரமே

விளக்கம்

பெண்களின் மீது கொண்ட ஆசையினால் அழகிய என்னுடைய வடிவானது ஆலையில் இட்ட கரும்பு போலச் சக்கையானது! பராபரமே!

29. கேளாயோ என்கவலை கேட்டிரங்கி அடிமைதனை

ஆளாயோ வையாபா லானேன் பராபரமே

விளக்கம்

நீ என்னுடைய துன்பத்தைக் கேட்க மாட்டாயா? அவ்வாறு கேட்டு மனம் இரங்கி அடிமையாகிய என்னை ஆண்டு அருள மாட்டாயா? நான் உன்பாற்பட்டவன் என்பதை உணர மாட்டாயா? பராபரமே

30. எத்தனைதான் குற்றம் எதிர்த்து அடிமை செய்தாலும்

அத்தனையும் நீ பொறுப்பது அழகே பராபரமே

விளக்கம்

நான் எவ்வளவு குற்றங்கள் செய்தாலும் அவ்வளவு குற்றங்களையும் நீ பொறுத்துக் கொள்வது அழகாகும். பராபரமே!

31. அல்லல் வியைால அறிவு கெட்டல் ஆன்மாவாய்

நெல்லும் பதரும் என நின்றேன் பராபரமே

விளக்கம்

நான் துன்பம் விளைவிக்கின்ற நல்வினை தீவினைகளால் அறிவின் கேட்டை அடைந்து ஆன்மாவாக, நல்லும் பதரும்போல நிலை கெட்டு இருந்தேன்! பராபரமே!

32. சொல்லரிய ஞானச் சுடரே ஒரு வார்த்தைச்

செல்வம் பொழிந்திட நீ செப்பாய் பராபரமே

விளக்கம்

சொல்வதற்கு அருமையான ஞான அழகாக விளங்குபவனே! ஒரு வார்த்தையால் என் செல்வம் செழிக்கும்படித் திருவருள் செய்தால் மகிழ்வேன்! பராபரமே!

33. நித்தம் உனைத் தொழா நிர்மூடனாயிருக்கும்

பித்தனாய் ஏன் காண் பிறந்தேன் பராபரமே

விளக்கம்

அனுதினமும் உன்னை வணங்காத நிர்மூடனாயிருக்கும் பித்துக் கொண்டவனாய் நான் ஏன் பிறந்தேன்! பராபரமே!

34. உற்றார்களாலும் உறவின் முறையராலும்

பெற்றார்களாலும் உனைப் பிரிந்தேன் பராபரமே

விளக்கம்

பாச பந்தத்தில் கட்டுப்பட்டு, என் சுற்றத்தார்களாலும், உறவினர்களாலும், என்னைப் பெற்றவர்களாலும் உன்னைப் பிரிந்திருந்தேன்! பராபரமே!

35. ஏழை முகம் பார்த்து எளியேனை எப்பொழுதும்

அழாமல் ஆண்டருள் என்னழகே பராபரமே

விளக்கம்

அழகின் வடிவமாக விளங்குபவனே! நீ ஏழையாகிய என்னுடைய முகத்தைப் பார்த்து அடியேனை எக்காலத்திலும் தீவினையில் அழிக்காமல் ஆண்டருள வேண்டும்! பராபரமே!

36. பாவிஉடலெடுத்துப் பாதகனாய் யான் பிறந்துஉள்

ஆவி கெடுவதுனக் கழகே பராபரமே

விளக்கம்

பாவமாகிய இந்த உடலை நான்அடைந்து உயிருக்குத் தீவினை தரும் செயல்களால் நான் மடிந்து போவது உனக்கு அழகாகுமோ? பராபரமே!

37.வாராயோ என்னிடத்தில் வந்தொருக்கால் என்றன்முகம்

பாராயோ சற்றே பகராய் பராபரமே

விளக்கம்

நீ என்னிடத்தில் எழுந்தருளி வரமாட்டாயோ? வந்து ஒருமுறை என் முகம் பார்த்து நல்வார்த்தைகளைக் கூற மாட்டாயோ? அதை நீயே சொல்லிவிடு! பராபரமே!

38. பார்க்கப் பலவிதமாய்ப் பல்லுயிருக்கு உள்ளிருந்தும்

ஆர்க்கும் தெரியால் ஆனாய் பராபரமே

விளக்கம்

இந்த உலகில் உலாவிக் கொண்டிருக்கும் பல ஆன்மாக்களுக்குள் நீயே நிறைந்திருக்கிறாய் என்ற செய்தியை யாருக்கும் தெரியாதபடி வைத்திருக்கின்றாய்! பராபரமே!

39.ஆனாலும் பொல்ல் தரும் பாவியாக உடல்

எனோ எடுத்தேன் எந்தாய் பராபரமே

விளக்கம்

என்னுடைய தந்தையாக விளங்குபவனே! பொல்லா கொடும்பாவியாக நான் ஏன் இந்த உடலைச் சார்ந்து பிறவி எடுத்தேன் என்று விளங்கவில்லை! பராபரமே!

40.கர்ப்பூர தீபக்கனல் ஒளிபோல் காட்சிதர

முப்பாழும் பாழாய் முடித்தாள் பராபரமே

விளக்கம்

கற்பூரத்தில் உண்டாகும் ஒளிபோல எனக்கு உன்னுடைய திருக்காட்சியை அருளி, ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படுகின்ற மும்மலத்தையும் அழித்து என்னை ஆட்கொள்ள வேண்டும்! பராபரமே!

 

வெள்ளி, 12 மே, 2023

திருஆசிரியம் – நம்மாழ்வார்

 

திருஆசிரியம் – நம்மாழ்வார்

பாடல் 1

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல்
பீதகவாடை முடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து  சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப  மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப
நச்சு வினைக்கவர்தலை அரவினமளி ஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை உந்தி தனிப் பெரு நாயக!
மூவுலகளந்த சேவடியோயே!

விளக்கம்

மேகங்களை இடுப்பில் கட்டி, சூரியனைத் தலையிலே வைத்துக்கொண்டு, சந்திரனை அணிந்து, நட்சத்திரங்களாகிய பல ஒளிபிழம்புகளைக் கொண்டுள்ள, பவளம் போன்று ஒளிவிடும் பச்சை நிறத்தில் இருக்கும் மரகத மலை ஒன்று உள்ளது. அந்த மலை, வருணனுடைய கைகளின் மேலே படுத்துக் கொண்டிருப்பதுபோல் உள்ளது. பல்வேறு ஆபரணங்களை அணிந்து, உதடுகளும், திருக்கண்களும் சிவந்திருக்கும்படியாக, திருமேனியில் பச்சை நிறம் ஒளிவிடும்படியாக, எதிரிகளை அழிப்பதில் நச்சுத் தன்மை வாய்ந்த செயல்களையுடையவனாக, கவிழ்ந்திருக்கும் தலைகளை உடையவனுமான ஆதிசேஷன் என்கின்ற பாம்பின் படுக்கையில் ஏறிப் படுத்திருப்பவனாக, அலை வீசும் திருப்பாற்கடலின் நடுவே உலகத்தைக் காப்பதற்கான உணர்வுடன் யோகநித்திரையில் படுத்துள்ளான் எம் பெருமானாகிய திருமால். அந்த எம்பெருமான் சிவன், பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களுடைய கூட்டம் கைகூப்பி வணங்கும்படி படுத்திருக்கின்றான். அவன் ஒப்பற்றவன், எல்லோரையும் விடப் பெரியவன்! மூன்று உலகங்களையும் அளந்த திருவடிகளை உடையவன்!

பாடல் 2

உலகுபடைத்துண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவார்
உயிருருகி உக்க, நேரிய காதல்
அன்பிலின்பீன் தேறல் அமுத
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய
இயற்கை, மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

விளக்கம்

அனைத்து உலகங்களையும் படைத்து, பின்பு ஊழிக்காலத்தின்போது அவற்றை விழுங்கியவன் எம்பெருமான். அவனுடைய திருவடிகளாகிய தாமரைப் பூவை அணிவதற்காக என் ஆன்மா உருகி விழுகின்றது. அவன் மீதான பக்தியின் உருவில் இருக்கும் அன்பென்ன, பக்தியினால் ஏற்படும் இனிமை என்ன, இவைகளிலுள்ள இனிமையின் உயர்ந்த நிலையான அமுதக் கடலில் மூழ்கியிருக்கும்படியான மேன்மையை விட்டு அல்லல்படுபவர்கள் அலையட்டும். செல்வத்துடன் கூடிய தன்மையொடும், அழியாத மிகுந்த வலிமையொடும், மூன்று உலகங்களுடனும் கூட மேலான வீடுபேற்றைப் பெற்றாலும், தெளிந்த ஞானத்தையுடைய பெரியோர்களுடைய எண்ணம் இவைகளைப் பெற நினைப்பதில்லை. மாறாக, எம்பெருமானின் அன்பினை எதிர்பார்த்து நிற்பர்.

பாடல் 3

குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகிச் சுடர் விளங்ககலத்து
வரைபுரை திரைபொரு பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடல் படவர
வரசு உடல் தடவரை சுழற்றிய, தனிமாத்    
தெய்வத்தடியவர்க்கினிநாம் ஆளாகவே
இசையும் கொல், ஊழிதோறூழி ஓவாதே

விளக்கம்

மூன்று உலகங்களையும் நல்வழியில் செலுத்துபவன். அவ்வுலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு நிலையில் இருந்து வணங்கக்கூடிய தகுதி கொண்டவன். வேதத்தில் பரமனாகக் காட்டப்பட்டதின் மூலம் புகழையுடையவன். தன் ஆணையை மிக நன்றாக செயல்படுத்துபவன். பிரம்மா, உருத்திரன், இந்திரன் ஆகிய தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன். ஆபரணங்களின் ஒளியையுடைய திருமார்பையுடையவனாய் இருப்பவன் எம்பெருமான். மலை போன்ற உயரமான அலைகள் மோதுகின்ற குளிர்ந்த கடலை, மிகப்பெரிய மந்திர மலையில் சுற்றிக் கடைந்த எம்பெருமானை அடைய வேண்டுமெனில் அவன் மீது அன்பும் பக்தியும் கொண்ட அடியவர்களுக்கே அப்பேறு கிடைக்கும்.

பாடல் 4

ஊழிதோறூழி ஓவாது வாழிய!
என்று யாம் தொழ இசையும் கொல்,
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும் பாழ் காலத்து, இரும் பொருட்கு
எல்லாம் அரும்பெறல் தனி வித்து, ஒருதான்
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனோடு தேவுபல
நுதலி மூவுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுதல் அடியே

விளக்கம்

அனைத்து உலகங்களும், அனைத்து விலங்குகளும் வணங்கத்தக்கவன். உலகம் அழிந்திருந்த காலத்தில், கணக்கிலடங்காத உயிரினங்களுக்கெல்லாம் பெறுவதற்கு அரியவனாய் இருந்தவன். அந்நிலையில் இவ்வுலகில் சிறந்த தேவதையான பிரம்மாவையும், மூன்று கண்களையுடைய உருத்திரனையும், பல தேவதைகளையும் படைத்து, அவர்களுக்குண்டான பணிகளுக்கு ஆற்றலைக் கொடுத்து, மூன்று உலகங்களையும் படைத்தஎம்பெருமானின் திருவடிகளை, ஊழிதோறும் இடைவிடாமல் “வாழி” என்று நாம் தொழும் பாக்யம் கிடைக்க வேண்டும்.

பாடல் 5

மாமுதல் அடிப் போது ஒன்று கவிழ்த்தலர்த்தி,
மண் முழுதும் அகப்படுத்து, ஒண் சுடர் அடிப்போது
ஒன்று விண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடு வியந்துவப்ப, வானவர் முறை முறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க் கண்ணோடு கனிவாய் உடையது
மாய், இருநாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன,
கற்பகக் காவு பற்பல வன்ன,
முடி தோள் ஆயிரம் தழைத்த,
நெடியோய்க்கு அல்லதும் அடியதோ உலகே

விளக்கம்

உன்னுடைய திருவடியாகிற ஒரு பூவைக் கவிழ்த்துப் பரப்பி பூமி முழுவதையும் கைக்கொண்டாய். அழகிய ஒளிமிகுந்த பூவைப் போன்ற மற்றொரு திருவடியை பிரம்மாவின் உலகமானது அதிசயப்பட்டு மகிழும்படி செய்தாய். தாமரைப்பூக்கள் நிறைந்த காடு மலர்ந்தது போல் இருக்கும் திருக்கண்களோடு கூட, சிவந்த திருப்பவளத்தை (உதடுகளை) உடையதாய், பரந்த ஆயிரம் சூரியர்கள் உதித்தாற்போல் இருக்கிற பல கிரீடங்களையும், கற்பகச் சோலை போலிருக்கிற ஆயிரம் திருத்தோள்களையும் உடையவனாய், எல்லாரையும்விட உயர்ந்தவனாய் விளங்குகிற எம்பெருமானுக்கு இவ்வுலகம் அடிமையாகும்.

பாடல் 6

ஓ ஒ உலகினதியல்வே, ஈன்றோளிருக்க
மணை நீராட்டிப், படைத்து  இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து, தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும்   
கடவுள் நிற்பப் புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது   
புல்லறிவாண்மை பொருந்தக்காட்டிக்,  
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை இன்பு துன்பு அளித்
தொன்மா மாயப் பிறவியுள் நீங்காப்
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே

விளக்கம்

எம் பெருமானாகிய நாராயணன், இந்தப் பூமியை உண்டாக்கி, வராக அவதார காலத்தில் பூமியைப் பிரளயத்திலிருந்து காப்பாற்ற,ப அதை அமுது செய்து, மீண்டும் வெளியே உமிழ்ந்தான்.  பின்பு வாமன அவதாரத்தில் பூமியை அளந்து, அதற்கு மேல் இவ்வுலகை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்தை செய்கின்றவன். அவனை விட்டு வேறு தெய்வங்களை ஆதரிப்பது என்பது, பெற்ற தாயிருக்க அவளைவிட்டு ஒரு பலகையை நீராட்டுவது போலிருக்கிறது.

பாடல் 7

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,
யாவகை உலகமும் யாவரும் அகப்பட,
நிலம் நீர் தீ கால் சுடர் இருவிசும்பும்,
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓராலிலை சேர்ந்த எம்
பெருமா மாயனை அல்லது,
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே

விளக்கம்

குளிர்ந்த சந்திரனைத் தலையில் வைத்திருக்கும் உருத்திரனையும், படைப்புக் கடவுளான பிரம்மாவையும், தேவர்களின் தலைவனான இந்திரனையும், அனைத்து உலகங்களையும், பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும், உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும், தன் திருவயிற்றிலே மறைத்து வைத்துக் கொண்டு, ஓர் ஆல் இலையின் மேல் படுத்திருக்கின்ற, அளவிட முடியாதவனாக இருக்கின்ற திருமாலைத் தவிர, வேறு பெரிய ஒரு  இறைவன் இல்லை.