புதன், 2 செப்டம்பர், 2020

மரபுக்கவிதை - பாரத சமுதாயம்

 பாரத சமுதாயம் - பாரதியார்


பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய (பாரத)

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம்

உலகத் துக்கொரு புதுமை – வாழ்க! (பாரத)

மனித ருணவை மனிதர் பறிக்கும்

வழக்கம் இனியுண்டோ ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும்

வாழ்க்கை இனியுண்டோ ? – புலனில்

வாழ்க்கை இனியுண்டோ ? – நம்மி லந்த

வாழ்க்கை இனியுண்டோ ?

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்

எண்ணரும் பெருநாடு,

கனியும் கிழங்கும் தானி யங்களும்

கணக்கின்றித் தரு நாடு – இது

கணக்கின்றித் தரு நாடு – நித்த நித்தம்

கணக்கின்றித் தரு நாடு – வாழ்க! (பாரத)

இனியொரு விதிசெய் வோம் – அதை

எந்த நாளும் காப்போம்,

தனியொரு வனுக் குணவிலை யெனில்

ஜகத்தினை அழித்திடு வோம் – வாழ்க! (பாரத)

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

என்றுரைத்தான் கண்ண பெருமான்,

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை

இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்

இந்தியா உலகிற் களிக்கும் – ஆம் ஆம்

இந்தியா உலகிற் களிக்கும் – வாழ்க! (பாரத)

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – வாழ்க! (பாரத)

 


பாடல் விளக்கம்


பாரதியின் வாழ்த்து


பாரத சமுதாயம் என்ற தலைப்பில் பாரதியார் பொதுவுடைமைக் கொள்கை குறித்து விளக்கமுரைக்கின்றார். பாரத நாட்டில் வாழும் மக்களை “வாழ்க வாழ்க“ என்று வாழ்த்துகின்றார். பாரத சமுதாயம் என்றென்றும் வெற்றிப் பாதை நோக்கியே செல்லும் என்பதை அறிவிக்க “ஜய ஜய” என்று இசை பாடி மகிழ்கின்றார். 


பொதுவுடைமைக் கொள்கை


தான் வாழ்ந்த காலத்தில் பாரதத்தில் வாழ்ந்திருந்த 30 கோடி மக்களும் பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பதே அவரின் விருப்பம். அக்கொள்கையைப் பின்பற்றும் சமுதாயம் ஒப்பில்லாத சமுதாயமாக, உலகத்திற்குப் புதுமையான சமுதாயமாக விளங்கும் என்று எடுத்துரைக்கின்றார். பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்றினால்,


  1. ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் தட்டிப் பறிக்கும் வழக்கம் இருக்காது எனவும்,


    2. ஒரு மனிதனைத் துன்பப்படுத்தித் தான் மட்டும் சுகமாக  

      வாழும் பழக்கம் இருக்காது எனவும்,


குறிப்பிடுகின்றார். 


இயற்கை வளம் நிறைந்த நாடு


இனிமையான சோலைகளாலும், நெடிய வயல்களாலும் சூழப்பட்ட இயற்கை வளம் பொருந்திய நம் பாரத நாட்டில் கனியும், கிழங்கும், தானியங்களும் கணக்கின்றி கிடைக்கின்றன. எனவே, ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் பறித்து உண்ணும் வழக்கம் இருக்கத் தேவையில்லை என்று கூறுகின்றார். 


புதிய கொள்கை


தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை என்றால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்த உலகத்தினை அழித்திட வேண்டும் என்ற விதியைப் புதிதாக இயற்றுவோம். அதை எப்போதும் கடைபிடிப்போம் ” என்று சினமுடன் உரைக்கின்றார்.


சமத்துவம்


“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்” என்பது இறைத் தத்துவம். ஆகையால் சாதி, இனம், மதம் என்ற கட்டுக்களை அறுத்தெறிய வேண்டும் என்பது பாரதியின் கனவு.


வேற்றுமையில் ஒற்றுமை


மக்கள் அனைவரும் மன அமைதியுடன் வாழ்ந்து, இறைவனை அடைகின்ற வழியை இந்தியா இந்த உலகிற்கே கற்றுக் கொடுக்கும். ஏனெனில், இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு.  சாதி, மதம், இனம் என வெவ்வேறாக இருப்பினும் மனதளவில், இங்கு வாழும் மக்கள் அனைவரும்,

  • ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களே!

  • ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களே!

  • எல்லோரும் ஒரு எடை கொண்டவர்களே!

  • அனைவருக்கும் ஒரு விலையே!

என்று சமதர்மக் கொள்கையை அறிமுகம் செய்கின்றார்.


எல்லோரும் இந்நாட்டு மன்னர்


இந்திய நாட்டில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சுதந்திர மனப்போக்குடன் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் மனநிலை கொண்டவர்களாக, ஒவ்வொருவரும் தங்களை மன்னர்களாக எண்ணி வாழ வேண்டும் என்று சூளுரைக்கின்றார். 


12 கருத்துகள்: