சனி, 4 மே, 2024

இளையான்குடி மாற நாயனார் புராணம்

இளையான்குடி மாற நாயனார் புராணம்

அறிமுகம்

          வேளாளர் குலத்தினர் செய்த தவத்தின் பயனாக இளையான்குடி என்னும் நகரில் மாறனார் பிறந்தார். அவர் தில்லையில் திருநடனம் புரியும் சிவபெருமானின் திருவடியை வணங்குபவர். ஏரினால் உழுது பயிர் செய்யும் தொழிலில் ஈடுபட்டவர் ஆகையால் மிக அதிகமான செல்வத்தை உடையவராக விளங்கினார்.

சிவனடியார்களுக்கு உணவளிக்கும் தொண்டு புரிபவர்

இறைவனின் அன்பர்கள் யாராக இருப்பினும் அவர்களைக் கண்டவுடன் இரு கைகளையும் குவித்து வணங்கி, அவர் செவி குளிர அன்பு மிக்க வார்த்தைகளைக் கூறுவார். அவ் அடியவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்து, அவரின் திருவடிகளை நீரினால் தூய்மை செய்து மிக்க அன்புடன் உரிய இருக்கையில் அமரச் செய்து, அவர்களுக்கு அறுசுவையுடன் உணவளிக்கும் தொண்டினைப் புரிந்து வந்தார்.

ஈசன் வறுமையை உண்டாக்குதல்

இத்திருத்தொண்டின் பயனாக மாறனார்க்குச் செல்வம் பெருகியது. இளையான் குடியில் அவர் குபேரனைப் போல் வாழ்ந்து வந்தார். செல்வம் இருந்த காலத்தில் மட்டுமன்றி வறுமையிலும் அடியவர்களுக்கு அமுது படைக்கும் தொண்டினைச் செய்வதில் மாறனார் மன உறுதி உடையவர் என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அதனால் மாறனார்க்கு வறுமை உண்டாயிற்று.

மன உறுதியுடன் திருத்தொண்டு புரிதல்

இறைவனின் திருவிளையாடலால் வளம் குறைந்து வறுமையுற்ற போதிலும் மாறனாரின் மனம் தான் மேற்கொண்ட திருத் தொண்டினைச் செய்வதில் சோர்வடையவில்லை. தம் பொருள்களை விற்றும், கடன் வாங்கியும் தம் தொண்டை நிறைவேற்றினார்.

ஈசன் தவ வேடம் புனைந்து வருதல்

 ஒருநாள் நள்ளிரவில் இளையான்குடி மாறனார் உண்ண உணவின்றி, பசியால் களைத்திருந்தார். உறக்கம் வராமல் நீண்ட நேரம் தனியே விழித்திருந்தார். அவ்வேளையில் சிவபெருமான் அடியவர் போல வேடம் பூண்டு மாறனாரின் வீட்டுக் கதவைத் தட்டினார். அடியவரான விருந்தினர் கதவைத் தட்ட மாறனார் உடனே கதவைத் திறந்தார். துறவியின் கோலத்தில் வந்த சிவபெருமானை உள்ளே அழைத்துச் சென்ற மாறனார் மழையில் நனைந்த அவருடைய உடலைத் துடைத்து இருக்கையில் அமரச் செய்தார்.

மனைவியுடன் ஆலோசித்தல்

அடியார்க்கு உணவு படைக்க விரும்பிய மாறனார் தன் மனைவியிடம், “இத்துறவியார் பசியால் களைத்து வந்துள்ளார். நாம் உண்பதற்கு இங்கு உணவு இல்லை. ஆனாலும், இவ்வடியவர்க்கு நாம் இனிய உணவை எவ்வாறு தருவது?“ என கவலையுடன் கேட்டார். அவருடைய மனைவி கணவரை நோக்கி, “வீட்டில் ஒரு பொருளும் இல்லை. இன்று வயலில் விதைக்கப்பட்ட நெல்லை வாரிக் கொண்டு வந்தால் கூடியவரை அமுதாக்கலாம். இதைத் தவிர வேறொரு வழியும் எனக்குத் தெரியவில்லை” என்றார். மனைவியின் சொல்லைக் கேட்ட மாறனார் பெருஞ்செல்வம் பெற்றது போல மகிழ்ந்து ஒரு கூடையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு வயலை நோக்கிச் சென்றார்.

நெல்விதைகளை உணவாக்குதல்

அந்நள்ளிரவில் கால்களினால் தடவி தடவிச் சென்று மாறனார் தம் வயலை அடைந்து மழை நீரில் மிதந்திருந்த நெல் முளைகளை வாரிக் கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தார். கணவரின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்த துணைவியார், கணவர் கொண்டு வந்த கூடையை அன்புடன் வாங்கி நெல்முளைகளைக் கழுவி விட்டு, “அடுப்பெரிக்க விறகில்லையே” என்றார். உடனே மாறனார் தம் வீட்டுக் கூரையின் மரச்சட்டங்களை அறுத்தெடுத்துத் தம் மனைவியிடம் கொடுத்தார். துணைவியார் அவற்றை அடுப்பில் வைத்து நெல்முளைகளை வறுத்து அரிசி கொண்டு சோறாக்கினார். சோற்றுடன் கலந்துண்ணும் கறிக்கு என்ன செய்வது என கணவரை வேண்ட, மாறனார் தம் வீட்டின்கண் வளர்த்திருந்த கீரைகளைப் பறித்துக் கொண்டு வந்து தம் மனைவியிடம் கொடுத்தார். துணைவியார் அவற்றைத் தூய்மைப்படுத்தித் தம் கைத்திறத்தால் பலவகைப்பட்ட கறியமுதாக்கி விட்டுத் தம் கணவரிடம் தெரிவித்தார்.

ஈசன் உமையம்மையோடு அருள் புரிதல்

          மாறனார் உறங்கிக் கொண்டிருக்கும் அடியரை அணுகிச் சென்று, “பெரியவரே திருவமுது செய்ய எழுந்தருள்க” என்று கூறினார். அவ்வேளையில் அடியவர் சோதியாக எழுந்து தோன்ற நாயனாரும், அவர் துணைவியாரும் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமாதேவியுடன் எழுந்தருளி, “அன்பனே அறுசுவை உணவை அடிவர்களுக்கு நாள்தோறும் ஊட்டிய ஐயனே நீ உன் மனைவியோடு நம் உலகை அடைந்து தேவர்கள் உன் ஆணையைக் கேட்டுப் பணி செய்யும் விதத்தில் நிறைவான இன்பத்தைப் பெற்றிடுக” என்று அருள் செய்தார்.

 

 இளையான்குடி மாற நாயனார் புராணம்

1

அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்

தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்

நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்

இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார்

2

ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்

நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்

சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்

பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் 

3       

ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால்

நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்

கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப் புலத்து

ஈரம் மென் மதுரப் பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின்

4       

கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே

மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின்

உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா

அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார்

5

ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே

நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால்

நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்

தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள்

6

செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால்

அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே

மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து

ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்         

7

இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி

மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்

தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்

முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்

8

மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்

கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்

பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர்

நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்  

9

மாரிக் காலத்து இரவினில் வைகியோர்

தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது

பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற

வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன்

10

ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து

ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால்

தார மாதரை நோக்கித் தபோதனர்

தீரவே பசித்தார் செய்வது என் என்று    

11

நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்

இமக் குலக்கொடி பாகர்க்கு இனியவர்

தமக்கு நாம் இன் அடிசில் தகவுற

அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என       

12

மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்

ஏதிலாரும் இனித் தருவார் இல்லை

போதும் வைகிற்றுப் போம் இடம் வேறில்லை

தீது செய்வினை யேற்கு என் செயல்      

13

செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்

மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்

வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று

அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற       

14

மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்

பெற்ற செல்வம் எனப் பெரிது உள் மகிழ்ந்து

உற்ற காதலினால் ஒருப் பட்டனர்

சுற்று நீர் வயல் செல்லத் தொடங்குவார்         

15

பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து

அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான்

கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு

உருகு கின்றது போன்றது உலகு எலாம்

16     

எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்

துண்ணெனும்படி தோன்ற முன் தோன்றிடில்

வண்ண நீடிய மைக்குழம்பாம் என்று

நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து  

17     

உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக்

கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்

புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார்

வள்ளலார் இளையான் குடி மாறனார்

18     

காலினால் தடவிச் சென்று கைகளால்

சாலி வெண் முளை நீர் வழிச் சார்ந்தன

கோலி வாரி இடா நிறையக் கொண்டு

மேல் எடுத்துச் சுமந்து ஒல்லை மீண்டார்

19     

.வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்

சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி

வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்

அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார்         

20     

முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள

வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து

வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார்

கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினார் கணவனாரை

21

வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே

அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று

குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்

பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க

22

மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து

புனல் இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை

வினையினால் வேறு வேறு கறி அமுது ஆக்கிப் பண்டை

நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று

23

கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி

இணை இலாதாரை ஈண்ட அமுது செய்விப்போம் என்ன

உணவினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி

அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார்     

24

அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால்

எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று

தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்துத் தோன்றச்

செழுந் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார்

25

மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச்

சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே

ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய் தோன்றிச்

சீலமார் பூசை செய்த திருத் தொண்டர் தம்மை நோக்கி

26

அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்

என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே

முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப

இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான்

27

இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி

முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்து அருளிப் போனார்

அப் பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு

மெய்ப் பொருள் சோதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன்.


திங்கள், 22 ஏப்ரல், 2024

திருமந்திரம்

 திருமந்திரம்

உபதேசம்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே

சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா

சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே

விளக்கம்

சூரியக் காந்தக் கல், பஞ்சு இவற்றை ஒன்றாக சுற்றினால், சூரியக்காந்தகல் பஞ்சை எரித்து விடாது. சூரியகாந்தக் கல்லின் மேல் சூரியனின் கதிர்கள் பட்டு அவை பஞ்சின் மேல் குவிக்கப்பட்டால் மட்டுமே பஞ்சு எரியும். அதுபோலவே ஆன்மாக்களைச் சூழ்ந்திருக்கும் குற்றங்களை ஆன்மாக்களால் நீக்க முடியாது. ஆன்மாக்களின் இருளை அகற்றும் பேரொளியாகிய இறைவனின் அருள் கிடைத்தால் மட்டுமே ஆன்மாக்களின் குற்றங்கள் நீங்கும்.

 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

விளக்கம்

இறைவனின் திருமேனி காண்பதும், நாளும் இறைவின் திருப்பெயரை கூறுவதும், நமசிவாய என்னும் ஐந்தெழுத்தைக் கேட்பதுமே சிறந்த அறிவாகும்.

யாக்கை நிலையாமை

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

விளக்கம்

ஒருவருடைய உடலில் இருந்து உயிர் போன பின்பு, அதுவரை அவனுடன்  வாழ்ந்த மனைவி குழந்தைகள் உறவினர்  என யாவரும் ஒன்றாகக்கூடி அழுகின்றனர். அவனுடைய பேரை நீக்கிவிட்டுப் பிணம் என்று பெயர் இடுகின்றனர். பின்பு அவனுடைய உடலை எடுத்துச் சென்று ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டு நீரினில் மூழ்கி எழுகின்றனர். மெல்ல மெல்ல அவன் நினைவுகளையும் மறந்து விடுகின்றனர். இதுவே உலக இயல்பு.

 

மதுவூர் குழலியும் மாடும் மனையும்

இதுவூர் ஒழிய இதணம தேறிப்

பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி

மதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே

விளக்கம்

ஒருவன் இறந்து விட்டால், அவனுடைய மனைவி, சேகரித்த செல்வங்கள் என யாவும் வீட்டிலேயே தங்கிவிட, அவன் மட்டுமே பாடையில் ஏற்றப்பட்டு சுடுகாட்டுக் கொண்டு செல்லப்பட்டுவான். அங்கே அவன் பிள்ளைகளும் உறவினர்களும் அன்பு கலந்த சோகத்தோடு அவனது உடலைப் பாடையிலிருந்து வாங்கி சுடுகாட்டில் வைத்து சுட்டெரித்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்று விடுவார்கள். இதுவும் உலக இயல்பே.

செல்வம் நிலையாமை

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே

மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்

கூற்றன் வருங்காலில் குதிக்கலு மாமே

விளக்கம்

உலகில் நிலையான செல்வம் எது என்று தெளிவான அறிவு இல்லாதவர்கள் கேட்டுத் தெளிவடையுங்கள். தெளிவடைந்துவிட்டால் துன்பங்கள் இருக்காது. ஆற்று வெள்ளம் போல திரண்டு வரும் பெருஞ் செல்வங்களைக் கண்டு அறிவிழந்து நிற்காதீர்கள். அந்தச் செல்வங்களை பிறருக்குக் கொடுத்து உதவுங்கள். ஏனென்றால், நீங்கள் இறக்கும்போது இறைவன் வந்து அழைக்கும்போது, இந்தச் செல்வங்கள் எதையும் காட்டி அவனைத் தடுக்க முடியாது. இந்தச் செல்வங்களை எல்லாம் விட்டு விட்டு வரமாட்டேன் என்று கூறவும் முடியாது. நீங்கள் பிறருக்குக் கொடுத்து உதவிய தருமங்களே உங்களோடு நிலைத்து நிற்கும்.

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே

கிவழ்கின்ற நீர்மிசைச் சலெ்லும் கலம்போல்

அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபேறாகச்

சிமிழொன்று வைத்தனை தேர்ந்தறி யாரே

விளக்கம்

நாம் சேமித்து வைக்கின்ற செல்வங்களும், சொத்துக்களும் நிலையில்லாதவை. ஆற்றில் வெள்ளம் வந்தால் படகுகள் எவ்வாறு மூழ்கிவிடுமோ அது போல செல்வங்களும் போய்விடும். அலை வீசுகின்ற கடலாக இருந்தாலும் அதிலிருக்கும் சிப்பிக்குத் துன்பங்கள் ஏற்படுவது இல்லை. அதுபோலவே அழிந்து போகின்ற இந்த உடலுக்கு உள்ளே முக்தியை அடையும் வழியாக குண்டலினி சக்திளை இறைவன் வைத்திருப்பதை ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்வதே சிறந்த ஞானமாகும்.

அன்புடைமை

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

விளக்கம்

அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.

 

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்

அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி

என்போல் மணியினை எய்தவொண் ணாதே.

விளக்கம்

உயிர்கள் யாவும் தம் உடலை வருத்திக் கொண்டு தவம் புரிந்தாலும், தமது உடலைத் தீயில் இட்டு யாகம் புரிந்தாலும், உண்மையான அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அவர்கள் என்ன செய்தாலும் இறைவனை அடைய முடியாது. தூய்மையான அன்பே இறைவனை அடையும் மிகச் சிறந்த வழியாகும்.

நடுவு நிலைமை

நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை

நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை

நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்

நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே.

விளக்கம்

தன் வாழ்வில் எது நடந்தாலும், எல்லாம் இறை செயல் என்று எண்ணி, விருப்பு வெறுப்பு இல்லாமல், இறை நெறியில் இருந்து சிறிதும் மாறாமல் நடுநிலைமையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. நடுநிலைமையான மனம் கொண்டவர்களுக்கு நரகமும் இல்லை. அவர்கள் தேவர்களைப் போன்று இருப்பர். அவர்களின் வழியில் நானும் நிற்கின்றேன்.

 

நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர்

நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர்

நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர்

நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே.

விளக்கம்

எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத நடுநிலைமையான மனதுடன்  இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகி தேவர்களாகி சிவமாகவே வாழ்கின்றார்கள். நானும் அத்தகைய நடுநிலைமையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.

 

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

தனிப்பாடல்

 

தனிப்பாடல்

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிப்பாடலுக்குத் தனிச்சிறப்பு உண்டு. பல்வேறு புவலர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுத் தனிப்பாடல் திரட்டு என்று பெயர் பெற்றுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள சில புலவர்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

ஔவையார்

            தமிழ் இலக்கியங்களில் ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள் காணப்படுகின்றனர். சங்காலத்தில், இடைக்காலத்தில், பிற்காலத்தில் என ஒளவையார் பெயரில் இலக்கியங்கள் இருக்கின்றன. தனிப்பாடல் திரட்டில் இவர் பாடியதாக எண்பது பாடல்கள் காணப்படுகின்றன.

காளமேகப் புலவர்

கும்பகோணத்தை அடுத்த நந்திபுரத்தில் பிறந்தவர். இயற்பெயர் வரதன். காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு. இறைவியின் அருளால் காளமேகம் போன்று கவிதைகள் வழங்கியதால் காளமேகப் புலவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆசு கவி பாடுவதில் (நினைத்தவுடன் பாடுவது) வல்லவர். வசை பாடுவதிலும் வல்லவர். அதனால், “ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்” என்று புகழப்பட்டவர். இவருடைய பாடல்கள் நகைச்சுவை மிகுந்தவை. இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சரசுவதி மாலை, திருவானைக்கா உலா, சித்திர மடல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இரட்டைப் புலவர்கள்

இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற இரட்டையர்களே இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் ஒருவர் முடவர், மற்றொருவர் பார்வை அற்றவர். காலம் கி.பி15ஆம் நூற்றாண்டு. “கண்பாயக் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்று போற்றப்படுகின்றனர். பார்வையற்றவரின் தோளில் முடவர் அமர்ந்து கொண்டு வழிகாட்ட இருவரும் பயணம் செய்வர். பாடல்களில் முதல் இரண்டு அடியை ஒருவர் பாடப் பின்னிரண்டடியை மற்றொருவர் பாடி முடிப்பது இவர்களின் வழக்கமாகும்.  தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகமும், ஏகாம்பரநாதர் உலா, கச்சிக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

அந்தகக் கவி வீரராகவ முதலியார்

தொண்டை நாட்டில் பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். காலம் கி.பி17ஆம் நூற்றாண்டு. வசை பாடுவதில் வல்லவர். பார்வையற்றவர். சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்ற மாலை, திருவாரூர் உலா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

சத்தி முத்தப் புலவர்

            கும்பகோணத்தை அடுத்த சத்திமுத்தம் என்ற ஊரில் பிறந்தவர். வறுமையில் வாடிய இப்புலவர் பாண்டிய மன்னன் மாறன் வழுதியிடம் பரிசில் பெறச் சென்றார். மழையில் மாட்டிக் கொண்டு ஒரு குட்டிச் சுவரின் அருகில் ஒதுங்கியிருக்கும்போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டார். தன் மனைவிக்கு நாரையைத் தூதாக அனுப்புவதுபோல் “நாராய் நாராய் செங்கால் நாராய்” என்ற பாடலைப் பாடினார். நகர சோதனையில் ஈடுபட்டிருந்த மாறன் வழுதி இப்பாடலின் உவமைக்கு மகிழ்ந்து, அப்புலவனின் வறுமை தீர்த்ததாகக் கூறப்படுகின்றது.

           

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

 

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கத்தால் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.  மேடைத்தமிழ், இதழியல் தமிழ், திரைத்தமிழ், அறிவியல் தமிழ், ஆட்சித்தமிழ் உள்ளிட்ட என்ற புதிய இலக்கியச் சிந்தனைகள் உருப்பெற்றன.

திராவிட இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள்

திராவிட இயக்கத்தை வளர்த்தெடுக்க கவிதைகள், உரைகள், மேடைப் பேச்சுகள், சிறுகதைகள், நாடகங்கள் முதலிய இலக்கிய வகைகள் பயன்பட்டன. அவ்வகையில் பேரறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, உவமைக் கவிஞர் சுரதா, நாஞ்சில்நாதன், கண்ணதாசன், வாணிதாசன், முடியரசன், கவிஞர் தமிழ்ஒளி, அப்துல் ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், நிர்மலா சுரேஷ், கவிஞர் கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் சல்மா உள்ளிட்ட பலர் திராவிட இயக்கத்தின் கருத்துகளைத் தங்கள் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தினர். அவர்களுள் குறிப்பிடத்தக்க சான்றோர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் குறித்து பின்வருமாறு காணலாம்.

பெரியாரும் மொழிச் சீர்த்திருத்தமும்.

பெரியார் என்று மதிப்புடன் அழைக்கப்படுகின்ற ஈ.வெ.ராமசாமி அவர்களால் தமிழ் எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. உயிர் எழுத்தான “ஐ“ என்பதை “அய்“ என்றும், “ஔ“ என்பதை “அவ்“ என்றும் எழுதுமாறு வலியுறுத்தினார். சான்றாக, “ஐயா“ என்பதை “அய்யா“ என்றும், “ஔவை“ என்பதை “அவ்வை“ என்றும் எழுதி, அவ்வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். மேலும், மெய் எழுத்துகளில் சில உயிர்மெய்க் குறியீடுகளான ஐ, உ, ஊ, ஒ, ஓ என்ற எழுத்துகளுடன் கூடி வருகின்ற எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றும், அதன் மூலம் தமிழ்க் கற்பதும் தட்டச்சு செய்வதும் எளிதாகும் என்றும் அறிவித்து, அதற்கான வரி வடிவங்களைத் தானே உருவாக்கி தன்னுடைய அச்சகத்திலும் பயன்படுத்தினார். இவருடைய இச்சீர்த்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு 1978ஆம் ஆண்டு அதனை நடைமுறைப்படுத்தியது. மேலும், பெரியாரின் சிந்தனைகள் பல இதழ்களில் தலையங்கங்களாக இடம் பெற்றுள்ளன. மேடையிலும், தலையங்கக் கட்டுரையில் அவர் பயன்படுத்திய எளிய தமிழ், படிப்போரைக் கவர்ந்தது.

மேடைத்தமிழும் பேரறிஞர் அண்ணாவும்

அண்ணாவின் மேடைப் பேச்சுகள் இலக்கியமாக மதிக்கப்படுகின்றன. அவருடைய உரைகள் கவிதை நடையில், இலக்கியச் செழுமை மிக்கதாக அமைந்திருப்பது சிறப்பு. இன்று மேடைப் பேச்சு ஒரு கலையாக மதிக்கப்படுவதற்கு அண்ணாவின் உரைகளும் ஒரு காரணமாகும். மேடைப் பேச்சில் தனக்கென்று ஓரு புதிய வழியை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மனதில் சீர்த்திருத்த கருத்துகளை விதைத்தார். வேலைக்காரி, ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம் உள்ளிட்ட புரட்சி மிகுந்த நாடகங்களையும், செவ்வாழை, சொர்க்கத்தில் நரகம், பிடி சாம்பல் முதலிய சிறுகதைகளையும், இரங்கூன் ராதா, பார்வதி பி.ஏ முதலிய நாவல்களையும் எழுதித் தமிழுலகிற்குப் புத்துயில் அளித்தார். “தம்பிக்கு“ என்ற பெயரில் அவர் எழுதிய கடிதங்கள் சமுதாயத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையை வௌிப்படுத்துகின்றன. திரைப்படங்களில் இவரது உரையாடல் அடுக்கு மொழியில் அமைந்து மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதனால் “அடுக்கு மாழி அண்ணா” என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

திரைத்தமிழும் கலைஞரும்

            தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பல்வேறு படைப்புகள் மூலம் தொண்டாற்றியவர் கலைஞர் கருணாநிதி. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் முதலிய நாவல்கள் அவரது சமத்துவ சிந்தனைகளை வெளிக்காட்டின. விஷம் இனிது, சித்தார்த்தன் சிலை உள்ளிட்ட சிறுகதைகள் சமய மறுப்புக் கொள்கைகளை வலியுறுத்தின. இவருடைய “அணில் குஞ்சு” என்ற சிறுகதை மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. நாடகத்துறையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட கலைஞர் நாடகத்தைப் படைப்தோடன்றி நடிக்கவும் செய்தார். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை மையமாகக் கொண்டு மந்திரிகுமாரி என்ற நாடகத்தைப் படைத்தார். பிற்காலத்தில் இது திரைப்படமாகவம் வெளிவந்தது. உதயசூரியன், நானே அறிவாளி, புனித ராஜ்யம் உள்ளிட்ட நாடகங்கள் அரசியல் பிரச்சார நாடகங்களாக வெளிவந்தன. இவருடைய நாடகங்கள் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும் அங்கத வகையில் அமைந்தவை. திரைத்துறையில் வசனங்களின் மூலம் புதிய வரலாறு படைத்தவர் கலைஞர். மனோகரா, மந்திரிகுமாரி, பூம்புகார், பராசக்தி முதலிய திரைப்படங்களின் வசனங்கள் மாறுபட்ட கோணத்தில் தமிழை அடையாளம் காட்டின. அவருடைய “குறளோவியம்“ மிகச் சிறந்த படைப்பாகப் போற்றப்படுகின்றது. எளிய முறையில் பாமர மக்களும் படித்து இன்புற, “தொல்காப்பியப் பூங்கா“ என்ற நூலை எமுதியுள்ளார்.

மூவரின் தமிழ் மாநாடுகள்

            பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய மூவரும் தங்களின் படைப்பால் தமிழுக்குத் தொண்டு செய்ததோடு, பல்வேறு மாநாடுகளை நடத்தித் தமிழ் மொழியை உலகரங்கிற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்களாகப் போற்றப்படுகின்றனர். பெரியாரின் திருக்குறள் மாநாடு, அறிஞர் அண்ணாவின் உலகத்தமிழ் மாநாடு, கலைஞரின் செம்மொழி மாநாடு ஆகியவை தமிழின் மொழி வளமையை, இலக்கணச் சிறப்பை, இலக்கியச் செழுமையை உலக அறிஞர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. குறிப்பாக, இன்றைய கணினி உலகில் தமிழை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் “தமிழ் இணையம் 1999” என்ற பெயரில் மாநாட்டை நடத்திய பெருமை கலைஞரையே சாரும். கணினித்தமிழை வளர்த்தெடுக்கும் நோக்கில் “தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய பெருமையும் கலைஞருக்கு உண்டு. இதனால் அறிவியல் துறையில் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 

ஞாயிறு, 31 மார்ச், 2024

தொல்காப்பியப் பூங்கா

 

தொல்காப்பியப் பூங்கா - கலைஞர் கருணாநிதி

எழுத்து – முதல் நூற்பா

தொல்காப்பியப் பூங்கா என்ற நூலில் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொல்காப்பியத்தின் நூற்பாக்களுக்குப் புதுமையான முறையில் விளக்கம் அளிக்கின்றார். அவற்றுள் எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவிற்குக் கலைஞர் இயற்றியுள்ள கற்பனை நயத்தைப் பின்வருமாறு காணலாம்.

தொல்காப்பியரின் கனவில் அணிவகுத்த எழுத்துகள்

தொல்காப்பியர் “எழுத்து“ என ஓலையில் எழுதிவிட்டு, சிந்தனை உறக்கத்தில் இருந்தார். எல்லா மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதால் தொல்காப்பியரின் கனவில் ஒலி எழுப்பியவாறு எழுத்துகள் நடந்து வந்து அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அணிவகுத்து நின்றன. முன்வரிசையில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய எழுத்துகளும், பின்வரிசையில் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகிய எழுத்துகளும் அணிவகுத்தன.

குற்றியலிகரமும் குற்றியலுகரமும்

அப்போது சுவர் ஓரமாக இரு நிழல்கள் தோன்றி ஒலி எழுப்பின. அவற்றின் ஒலி சற்று குறுகியதாகக் கேட்டமையால் தொல்காப்பியர் விழி திறந்து நோக்கினார்.

ஒரு நிழல் – என் பெயர் இகரம் என்றது

மற்றொரு நிழல் – என் பெயர் உகரம் என்றது.

தொல்காப்பியர் அந்த நிழல்களைப் பார்த்து “நீங்கள் குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற வரிசையில் இடம் பெறுவீர்கள். முதல் எழுத்துகள் முப்பதின் வரிசையில் உங்களை அமர வைக்க முடியாது” என்று கூறிவிட்டார்.

ஆய்த எழுத்து

அப்போது கம்பு ஒன்றை ஏந்திக் கொண்டு ஒரு புதுமையான உருவம் தோன்றி, “இந்த முப்பதோடு என்னை இணைக்க ஒப்புகிறீர்களா?” என்று கேட்டது. தொல்காப்பியர், “நீ ஆயுதம் ஏந்தி ஆய்த எழுத்தாக வந்தாலும் உன்னை முதல் வரிசையில் நிற்க வைத்து விடுவேன் என்று நினைப்பா?” என்று கேட்டார். அவரது கோபம் உணர்ந்த ஆய்த எழுத்து, “ஐயனே என்னை முதல் வரிசையில் வைக்காவிட்டாலும், முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன்” என்று அடக்கமாகக் கூறியது. தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக் கொண்டே எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை எழுதி முடித்துவிட்டு, “நீ எனக்கு உதவிட வருகிறேன் என்றாயா? நல்ல வேடிக்கை” என்று புன்னகை புரிந்தவாறு கூறினார். “ஆமாம்! தாங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டீர்களே! என்று மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதித்தது. தொல்காப்பியர் தாம் எழுதியதைத் திரும்பப் படித்தார்.

“எழுத்தெனப் படுப

அகர முதல் னகர ஈறுவாய்

முப்பஃதென்ப

சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே” (எழுத்து, நூல் மரபு- 1)

“அவைதாம்

குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் அவற்றோர் அன்ன” (எழுத்து, நூல் மரபு – 2)

அதில் “முப்பஃ தென்ப” என்ற தொடரில் ஆய்த எழுத்து அமர்ந்து கொண்டதை அவரும் வியப்புடன் நோக்கி நிறைவான மகிழ்ச்சி கொண்டார்.

விளக்கம்

தமிழ் எழுத்துகளுள், உயிர் எழுத்துப் பன்னிரெண்டும், மெய் எழுத்து பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள் முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. குறுகிய ஒலியைக் கொண்ட இகரம் குற்றியலிகரம் என்றும், குறுகிய ஒலியைக் கொண்ட உகரம் குற்றியலுகரம் என்றும், “ஃ“ என்ற எழுத்து ஆய்த எழுத்து என்றும் கூறப்படுகின்றன. இவை மூன்றும் சார்பெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல், பிற எழுத்துகளோடு பொருந்தி வரும் தன்மை கொண்டவை.

செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

இதழியல் - முரசொலி கடிதம்

செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

தமிழின் சிறப்புகளை உலகோர் அறியும் வண்ணம் “உலகத் தமிழ் மாநாடு” என்ற பெயரில் பல மாநாடுகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு“ என்ற பெயரில் முதன் முதலாக கோவையில் தமிழ்மொழி மாநாட்டை நடத்திய பெருமை கலைஞர் கருணாநிதி அவர்களையே சாரும். இம்மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவையில் ஜூன் மாதம் 23 ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது. அம்மாநாடு நடப்பதற்கு முன்னர் தம் முரசொலி இதழில் “உடன்பிறப்பே“ என்ற தலைப்பில் எட்டுக் கட்டுரைகளை வழங்கினார் கலைஞர்.  “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற முதல் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள செய்திகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு காணலாம்.

கட்டுரையின் கருப்பொருள்

தமிழ் மொழியைச் செம்மொழி என அடையாளப்படுத்துவதற்கு உழைத்த அறிஞர்கள் பலர். அவர்களுள் தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்த முதல் அறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். தமிழைச் செம்மொழி என அறிவிக்க அவர் எடுத்துக் கொண்ட தொடர் முயற்சிகளை கலைஞர் கருணாநிதி அவர்கள் இக் கட்டுரையில் விவரிக்கின்றார்.

பரிதிமாற் கலைஞரின் கருத்துகள்

1902 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட செந்தமிழ் என்னும் இதழில் “உயர்தனிச் செம்மொழி“ என்ற தலைப்பில், “தென்னாட்டின்கண் சிறந்தொளிரா நின்ற நம் அமிழ்தினும் இனிய தமிழ்மொழி எவ்வாற்றால் ஆராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியே என்பது திண்ணம்” என்று விளக்கியுள்ளார். 1903 ஆம் ஆண்டு “தமிழ் மொழியின் வரலாறு“ என்ற தமது நூலில், “தமிழ் – தெலுங்கு முதலியவற்றிற்கெல்லாம் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழி என்க” என்று பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்தக் கருத்துகள் அறிஞர் பலரின் கவனத்திற்குச் சென்றன. தமிழைச் செம்மொழி என அழைக்க வேண்டும் என்று பல அறிஞர்கள் வாதிட்டனர். ஆயினும், தமிழ் மொழியைச் செம்மொழி என நூறாண்டுகளுக்கு முன்பே உறுதியாக நிலைநாட்டிய பெருமை பரிதிமாற்கலைஞரையே சாரும்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்த அரசு மரியாதை

தனியார் பொறுப்பில் இருந்த பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்தி, புதுப்பித்து நினைவு இல்லமாக்கினார். நினைவு இல்லத்தின் முகப்பில் பரிதிமாற் கலைஞரின் மார்பளவு சிலையை நிறுவினார். அந்த இல்லத்தைத் திறந்து வைத்து, “தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரிக் குரல் கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் புகழ் வாழ்க” என்று பார்வையாளர் புத்தகத்தில் கையொப்பமிட்டார். பரிதிமாற்கலைஞரின் அனைத்து நூல்களையும் அரசுடைமையாக்கினார். அவரது மரபுரிமையாளர்களுக்கு 2006ஆம் ஆண்டு 15 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கினார். 2007 ஆம் ஆண்டு பரிதிமாற்கலைஞர் நினைவு சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டார்.

பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்பணி

தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையைப் போக்க “நாடகவியல்“ என்னும் நூல் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழி உட்பட உள்நாட்டு மொழிகளைப் பாடப் பகுதியிலிருந்து நீக்கத் திட்டமிட்டபோது, திரு பூர்ணலிங்கம் அவர்களோடு இணைந்து, தமிழறிஞர்களின் வீடுதோறும் சென்று, முயன்று பல்கலைக்கழகத்தின் திட்டத்தைத் தடுத்தார். தமிழ்மொழி தொடர்ந்து பல்கலைக்கழகப் பாடமொழியாக நீடித்தது. தமிழ் மொழியின் வரலாறு என்ற தம் நூலில், வடமொழியாளர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களுடைய வேஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.  அக்கருத்துகள் யாவும், தமிழர் அனைவராலும், குறிப்பாக பெரியார், அண்ணா வழி வந்தவர்கள் அனைவராலும் நினைவு கூரத்தக்கதாகும். ஆகவேதான், சூரியநாராயண சாஸ்திரியார் அவர்களை முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் என்று அழைத்து அவர் புகழ் வாழ்க என்று தன் நெஞ்சத்து உணர்வு கலந்து வாழ்த்துவதாக இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.


குறிப்பு - முரசொலி இதழில் கலைஞர் கருணாநிதி அவர்கள் “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்ட கடிதம், மாணவர்கள் தேர்வுக்கு எளிதாகப் படிப்பதற்காகச் சுருக்கி எழுதப்பட்டுள்ளது. இதன் மூலப்பகுதி பின்வரும் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காண்க.

https://library.cict.in/uploads/files/books/4.pdf

இந்நூலை வெளியிட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மிக்க நன்றி.

வேலைக்காரி – அறிஞர் அண்ணா

 

வேலைக்காரி – அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவால் 1947 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாடகம், 1949ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. இத்திரைப்படத்தில் கே.ஆர்.இராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், எம்.வி.இராஜம்மா, வி.என்.ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

வட்டியூர் ஜமீன்தார் வேதாச்சலம் பணவெறியும் ஜாதி வெறியும் பிடித்தவர். அவருக்கு சரசு, மூர்த்தி என இரண்டு பிள்ளைகள். சரசு தான் செல்வந்தரின் மகள் என்ற ஆணவம் கொண்டு, தன் வீட்டு வேலைக்காரியாகிய அமிர்தத்தை எப்போதும் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கின்றாள். மூர்த்தி நல்ல பண்புள்ளம் கொண்டவன். சரசு அமிர்தத்தைக் குறை கூறும்போதெல்லாம் மூர்த்தி அவளுக்காகப் பரிந்து பேசுகின்றான்.

அமிர்தம் – மூர்த்தி காதல் கொள்ளுதல்

அமிர்தத்தின் தந்தை முருகேசன் வேதாச்சலத்தின் நம்பிக்கையான பணியாள். அவர் தன் மகளுக்கு வயதான ஒருவரை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்கின்றார். அமிர்தம் அத்திருமணத்தை மறுக்கின்றாள். வேதாச்சலமும், சரசுவும் முருகேசனுக்கு ஆதரவாக பேச, மூர்த்தி அமிர்தத்திற்கு ஆதரவாக பேசுகின்றான். மாப்பிள்ளை வீட்டினர் அமிர்தத்தைப் பெண் பார்க்க வருகின்றனர். அப்போது மூர்த்தி தந்த யோசனையின் பேரில் தன் முகத்தை அலங்கோலமாக்கிக் கொண்டு நிற்கின்றாள் அமிர்தம். இப்படிப்பட்ட பெண் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்தை நிறுத்துகின்றனர். நாளடைவில் மூர்த்தியும் அமிர்தமும் காதல் கொள்கின்றனர்.

சுந்தரம் பிள்ளை தற்கொலை செய்து கொள்ளுதல்

          அந்த ஊரில் மானத்திற்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுந்தரம் பிள்ளை வேதாச்சலத்திடம் கடன் வாங்குகின்றார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் வேதாச்சலம் சுந்தரம் பிள்ளையின் வீட்டிற்கு வந்து அவரைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுப்பதாக மிரட்ட, சுந்தரம்பிள்ளை அவரிடம் கெஞ்சுகின்றார். வேதாச்சலம் மனம் இரங்காதது கண்டு, அவமானம் தாங்காமல் தன் வீட்டு மரக்கிளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கின்றார்.

சுந்தரம் பிள்ளையின் மகன் ஆனந்தன் வருகை

          தேயிலைத் தோட்டத்தில் இரவும் பகலும் உழைத்து, 200 ரூபாய் சம்பாதித்துக் கொண்டு, தன் தந்தை சுந்தரம் பிள்ளைக்கு ஒரு கடை வைத்துக் கொடுக்கும் ஆவலோடு தன் சொந்த ஊருக்குத் திரும்பும் ஆனந்தன் வழியில் தன் நண்பன் மணியோடு உரையாடிக் கொண்டு வருகின்றான். வீட்டிற்குச் சென்றபோது தன் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு கதறுகின்றான். தன் தந்தையின் கையில் இருநு்த கடிதத்தைக் கண்டு, இதற்கெல்லாம் காரணம் வேதாச்சலம் என்பதை அறிகின்றான். அவரைப் பழிவாங்கத் துடிக்கின்றான்.

மணி ஆனந்தனுக்கு அறிவுரை கூறுதல்

ஆனந்தன் வேதாச்சலத்தைக் கொலை செய்வதற்காகக் கத்தியைத் தீட்டுகின்றான். இதைக் கண்ட மணி ஆனந்தனுக்கு அறிவுரை கூறுகின்றான். “பழி வாங்கும் திட்டத்தை விட்டுவிடு. அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைக்க வேண்டும். ஊரார் முன்பாக அவனைத் தலைகுனிய வைக்க வேண்டும். அதற்கான வழியை நாம் செய்ய வேண்டும்” என்று கூற, ஆனந்தனும் மணி சொல்வது சரி என்று ஒப்புக் கொள்கின்றான்.

ஆனந்தன் தற்கொலைக்கு முயலுதல்

வேலை செய்யும் இடத்தில் ஆனந்தன் ஒருவனிடம் கடன் வாங்க, கடன் கொடுத்தவர் ஆனந்தனைத் தகாத வார்த்தையில் பேசி, உன் தந்தைபோல நீயும் எங்கேயாவது சாக வேண்டியதுதானே” என்று கூற மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கின்றான் ஆனந்தன். ஆனால் அவன் மனசாட்சி அவனைக் கேள்வி கேட்கின்றது. அந்த சமயத்தில் மணியும் வந்து விட, மணியிடம் புலம்புகின்றான் ஆனந்தன். அப்போது “காளியின் அருள் வேதாச்சலம் போன்ற செல்வந்தனுக்குத் தான் கிடைக்கும் உன்னைப்போன்ற ஏழைக்கு எப்படி கிடைக்கும்” என்று கூற, ஆனந்தன் நேரே காளியின் கோயிலுக்குச் சென்று, காளியிடம் ஆவேசமாகப் பேச ஆட்கள் வந்து அவனை விரட்டுகின்றனர். பொதுமக்கள் ஆனந்தனை துரத்துகின்றனர். இதைக் கண்ட மணி, ஒரு பாழுங்கிணற்றைக் காண்பித்து அதில் நீ ஒளிந்து கொள் என்று கூற ஆனந்தனும் ஒளிந்து கொள்கின்றான்.

ஆனந்தனைத் தேடி மணியும் வர, இருவருக்கும் ஒரு மூட்டை கண்ணில் படுகின்றது. அம்மூட்டையில் இறந்த உடல் ஒன்றைக் காண்கின்றனர். மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் அதில் உள்ள மனிதன் ஆனந்தன் மாதிரியே இருக்கின்றார். கூடவே அவரது நாட்குறிப்பும் கிடைக்கின்றது. அதன் மூலம் அவருடைய பெயர் பரமானந்தம் என்றும், அவர் மிகப் பெரும் செல்வந்தர் என்றும், அவருடைய தாயார் கண் பார்வை அற்றவர் என்றும், விலை உயர்ந்த வைரங்கள் அவனிடம் இருந்தததால் அதை அறிந்த எவனோ அவனைக் கொலை செய்துள்ளான் என்றும் அறிகின்றனர்.

ஆனந்தன் பரமானந்தனாக மாறுதல்

வேதாச்சலத்தைப் பழிவாங்க இதுவே சரியான வழி என்று எண்ணிய மணி, ஆனந்தனைப் பரமானந்தனாக மாற்றுகின்றான். இருவரும் பரமானந்தன் வீட்டிற்குச் செல்கின்றனர். பரமானந்தனின் தாயாரைச் சந்திக்கின்றனர். வெளியூருக்குச் சென்ற மகன் திரும்பிவிட்டான் என்று எண்ணி அந்தத் தாய் மகிழ்ச்சி கொள்கின்றாள். தன் மகனுக்கு வேதாச்சலத்தின் மகள் சரசாவை மணம் பேச வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கின்றாள். அதனை ஏற்ற மணி, வெளிநாட்டுக்குச் சென்ற பரமானந்தன் சொந்த ஊர் திரும்பியிருக்கின்றான் என்பதைச் செல்வந்தர் பலருக்குத் தெரியப்படுத்த ஒரு பார்ட்டி நடத்தலாம் என்று யோசனை கூற, தாயும் சம்மதிக்கின்றாள். அதன்படி வேதாச்சலம் அந்த பார்ட்டியில் கலந்து கொள்கின்றார். அவனுடைய செல்வமும், பரமானந்தனின் அழகும் அவரை ஈர்க்கின்றது. தன் மகள் சரசாவைப் பரமானந்தனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்.  

பரமானந்தன் வேதாச்சலத்தைப் பழி வாங்குதல்

 பரமானந்தன் வேடத்தில் இருக்கும் ஆனந்தன் வேதாச்சலத்தின் மீதான தன் பழியைத் தீர்த்துக் கொள்ள தன் மனைவியைப் பலவாறு கொடுமைப்படுத்துகின்றான். பொய்யாகக் குடித்து, பல பெண்களுடன் தொடர்பு இருப்பது போல நடித்துத் தன் மாமனார் வேதாச்சலத்தின் நற்பெயரைக் கெடுக்கின்றான். அமிர்தத்திடம் தவறாக நடப்பதுபோல காட்டி, மூர்த்திக்கும் தன் மாமனாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகின்றான். இதனால் மூர்த்தி வீட்டை விட்டு வெளியேறுகின்றான். சென்னை சென்று தன் நண்பரின் உதவியைப் பெற்ற பிறகு அமிரத்தத்தைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து விட்டுச் செல்கின்றான்.

அமிர்தம் பாலுவின் மகளாக மாறுதல்

அமிர்தத்தைத் தனது கிராமத்திற்கு அழைத்துச் சென்று யாருக்காவது மணமுடிக்கலாம் என்று அவரது தந்தை திட்டமிடுகின்றார். அதைக் கவனித்த அமிர்தம் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். தான் ஏறி வந்த லாரியின் முதலாளி சொல்லுக்கிணங்க பழம் விற்கும் தொழிலைச் செய்கின்றாள். அப்போது ஒரு நாள் தெருவில் பழம் விற்றுக் கொண்டிருக்கும்போது, பாலு முதலியார் என்பவர், அவளைக் கண்டு தன் மகள் சுகிர்தம் நீதான் என்று கூறி, வலுக்கட்டாயமாக அவளை ஒரு மருத்துவமனைக்கு இழுத்துச் செல்கின்றார். அங்கே மருத்துவர் இருவரையும் புரிந்து கொண்டு, அமிர்தத்திடம், “இவர் ஒரு விபத்தில் தன் மகளை இழந்து விட்டார். அதனால் அவருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டு உன்னைத் தன் மகளாக எண்ணுகின்றார்” என்று கூற, அமிர்தம் அவரைத் தன் தந்தைபோல பாவித்து, தன்னால் ஆன உதவி செய்து அவரைக் குணமாக்குகின்றாள். குணமான பின்பு பாலு முதலியார் அவளுடைய வாழ்க்கையின் அவல நிலையைக் கேட்டு, தன் மகளாக அவளை ஏற்றுத் தன் வீட்டிலேயே வாழச் செய்கின்றார்.

மூர்த்தியின் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்றல்

தங்களிடம் உதவி கேட்டு வந்த மூர்த்தியை அவனுடைய  நண்பர்கள் நிராகரிக்கின்றனர். அமிர்தம் இறந்துவிட்டதாகத் தவறான செய்தியைக் கேள்விப்படுகின்ற மூர்த்தி மனமுடைந்து போகின்றான். நண்பர்களின் நிராகரிப்பும், காதலித்தவளின் மரணமும் அவனைத் துன்புறுத்துகின்றது. அதனால் மன அமைதி பெற யோகி நடத்துகின்ற ஆசிரமத்திற்குச் செல்கின்றார். யோகி உண்மையான ஆன்மிகவாதி அல்ல என்பதைக் கண்டுபிடிக்கின்றார். இருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் யோகி இறந்து விட, மூர்த்தி கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றார். இதை அறிந்த ஆனந்தன் வட இந்திய வழக்கறிஞராக மாறுவேடத்தில் வந்து, “யோகி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்றும், நடந்தது கொலை அல்ல தற்காப்புக்காக நடந்த சண்டையில் அவர் உயிரிழக்க நேரிட்டது“என்று வாதிடுகின்றார். நீதிமன்றம் மூர்த்தியை விடுதலை செய்கின்றது.

மகிழ்ச்சியான முடிவு

பாலு முதலியாரின் வீட்டில் இருக்கும் சுகிர்தம், வேதாச்சலம் வீட்டின் பணிப்பெண் அமிர்தம்தான் என்பதை மணியின் மூலமாக ஆனந்தன் தெரிந்து கொள்கின்றான். ஆனந்தன் தன் வழக்காடியதற்குக் கட்டணமாக பாலுவின் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். சுகிர்தம் என்ற பெயரில் இருக்கும் அமிர்தத்தை மூர்த்தி திருமணம் செய்து கொள்கின்றார்.

இறுதியாக, வேதாச்சலத்திடம், தான் யார் என்பதையும், தன் தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்பதற்காகவே சரசாவை திருமணம் செய்து கொண்டு அவளைக் கொடுமைப்படுத்தியதாகவும், ஜாதி வெறியை அடக்கவே, அமிர்தத்திற்கும் மூர்த்திக்கும் திருமணத்தை நடத்தினேன் என்றும் ஆனந்தன் விவரிக்கின்றான். இவற்றையெல்லாம் கேட்ட வேதாச்சலம் தன் தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்கின்றார். யாரும் தன்னை ஒதுக்கிவிட வேண்டாம் என்று கூறி, தன் ஜாதி வெறியும், பணத்திமிரும் ஒழிந்து விட்டது என்பதை வெளிப்படுத்த, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று நாட்டு மக்களுக்கு உரைப்போம்” என்று கூறுவதோடு நாடகம் நிறைவுறுகின்றது.