சனி, 19 செப்டம்பர், 2020

மரபுக்கவிதை - உடல் நலம் பேணல்


உடல் நலம் பேணல் 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை


உடலின் உறுதி உடையவரே

உலகின் இன்பம் உடையவராம்

இடமும் பொருளும் நோயாளிக்கு

இனிய வாழ்வு தந்திடுமோ?

 

சுத்த முள்ள டமெங்கும்

சுகமும் உண்டு நீ அதனை

நித்தம் நித்தம் பேணுவையேல்

நீண்ட ஆயுள் பெறுவாயே!

 

காலை மாலை உலாவிநிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் போவானே.

 

ஆளும் அரசன் ஆனாலும்

ஆகும் வேலை செய்வானேல்

நாளும் நாளும் பண்டிதர்கை

நாடி பார்க்க வேண்டாமே.

 

 

கூழையே நீ குடித்தாலும்

குளித்த பிறகு குடி அப்பா!

ஏழையே நீ ஆனாலும்

இரவில் நன்றாய் உறங்கப்பா!

 

மட்டுக் குணவை உண்ணாமல்

வாரி வாரித் தின்பாயேல்

திட்டு முட்டுப் பட்டிடுவாய்

தினமும் பாயில் விழுந்திடுவாய்.

 

தூய காற்றும் நன்னீரும்

சுண்டப் பசித்தபின் உணவும்

நோயை ஓட்டி விடும் அப்பா!

நூறு வயதும் தரும் அப்பா!

 

அருமை உடலின் நலமெல்லாம்

அடையும் வழிகள் அறிவாயே!

வருமுன் நோயைக் காப்பாயே

வையம் புகழவாழ்வாயே.


பாடல் விளக்கம்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள், இக்கவிதையில் உடலுக்கு நன்மை தருகின்ற வழிகளையும்,  தனிமனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கமுறைகளையும் குறிப்பிட்டுச் செல்கின்றார்.

எவ்விதமான நோயும் தாக்காதவாறு உடலை உறுதியாக வைத்துக் கொள்பவர்களே   இந்த உலகில் நிலையான இன்பத்தை அடைகின்றனர்.
வசதி மிக்க இடங்களும், செல்வச் செழிப்பும் கொண்ட ஒருவன் நோயாளியாக  இருப்பின் அந்த வாழ்க்கை அவனுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை.
நோய்கள் நம்மை அணுகாது இருக்க வேண்டுமாயின், நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள இடத்தை அனுதினமும் தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழகினால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
கதிரவன் உதிக்கின்ற அதிகாலையிலும், கதிரவன் மறைகின்ற மாலைப் பொழுதிலும் தூய்மையான காற்று நிரம்பி இருக்கும். அச்சமயங்களில் உடற்பயிற்சி செய்தால் நம் உடலுக்கு நன்மை விளையும். நோய்கள் நம்மை நெருங்காது.
வாழ்வில் எத்தகைய உயரத்தில் இருந்தாலும், அரசனாகவே வாழ்ந்தாலும், அவரவர் வேலையை அவரவரே செய்யப் பழகிக் கொண்டால், மருத்துவரின் உதவியை நாம் நாட வேண்டிய அவசியம் இருக்காது.
எத்தகைய உணவாக இருந்தாலும் குளித்த பிறகே உணவு உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இரவில் எவ்வித சலனமும் இன்றி நன்றாக உறங்க வேண்டும்.
மனம் விரும்புகின்றதே என்று எண்ணி, உணவுகளை வரைமுறையின்றி உண்ணுதல் கூடாது. அப்படி உண்டால் நோய்கள் தானாகவே நம்மை வந்தடையும்.
தூய்மையான காற்றும், தூய்மையான நீரும், நன்கு பசித்த பின் உண்ணுகின்ற உணவும் நோய்களை விரட்டிவிடும். நூறு வயது வரை  நோயின்றி வாழ்கின்ற வரத்தையும் தரும்.
உடலுக்கு நன்மை தருகின்ற வழிகள் எதுவோ அவற்றை முறையாக கடைபிடித்தால் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்துடன் இந்த உலகம் புகழ வாழலாம்.

என்று கவிமணி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

 

திங்கள், 14 செப்டம்பர், 2020

மரபுக்கவிதை - ஒற்றுமைப்பாட்டு

 

 ஒற்றுமைப்பாட்டு

பாரதிதாசன்


மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

மதத்தின் நலத்துக்கு மக்களா சொல்வீர்!


திக்கெட்டும் உள்ளவர் யாரும் – ஒன்று

சேராது செய்வதே மதமாகுமானால்

பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் – அப்

பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்.


எக்கட்சி எம்மதத்தாரும் – இங்கு

எல்லாம் உறவினர் என்றெண்ண வேண்டும்.


எல்லா மதங்களும் ஒன்றே – அவை

எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே

சொல்லால் முழங்குவது கண்டீர் – அவை

துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ?


எல்லோரும் மக்களே யாவர் – இங்கு

எல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்

எல்லாரும் ஒரு தாயின் செல்வர் – இதை

எண்ணாத மக்களை மாக்களென்போமே! 


வழிகாட்டும் மதமெல்லாம் இங்கே – நல்

வழிகாட்டி யானபின் வழிகாட்டிடாமல்

பழிகூட்ட வைத்திருப்பீரோ? – நீர்

பகைகூட்ட மதமென்ற மொழி கூட்டலாமோ?


பிழியாக் கரும்பினிற் சாற்றை – நீர்

பெற்றபின் சக்கையை மக்கட்களித்தே

அழிவைப் புரிந்திடுதல் நன்றோ? – நல்

அன்பால் வளர்த்திடுக இன்ப நல்வாழ்வை.


பாடல் விளக்கம் 

மக்களின் ஒற்றுமை நலனைக் கருத்தில் கொண்டு பாரதிதாசன் பாடிய பாடல் இது. 

மதம் - மக்கள்

மதம் என்பது மக்களின் நலத்திற்காக உருவாக்கப்பட்டதா? அல்லது மதத்தின் நலனிற்காக மக்கள் செயல்பட வேண்டுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.  அனைத்துத் திசையில் உள்ள மக்கள் யாவரையும் ஒன்று சேர்க்கக் கூடிய ஆயுதமாக மதங்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு ஒன்று சேர்க்காத மதங்களின் பெயரால் கூறப்படும் பொய்ச்செய்திகள் களையப்பட வேண்டும். அப் பொல்லாங்கான செய்திகளிலிருந்தும், மதங்களிலிருந்தும் மக்கள் விடுபட வேண்டும். 

அனைவரும் உறவினர்களே

எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பினும், எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அவர்கள் யாவரும் நம் உறவினர்களே என்ற எண்ணம் கொண்டு வாழ வேண்டும். 

மக்கள் யாவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதைத்தான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. மக்களோடு வேற்றுமை பாராட்டித் துன்பமுற்று வாழ வேண்டும் என்று எம்மதமும் கூறவில்லை. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

  • இந்தப் பூமியில் வாழ்கின்ற யாவரும், மக்கள் இனம் என்ற ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களேயாவர். 

  • இங்கு அனைவரும் ஒருவர்க்கொருவர் நிகரானவர்களேயாவர். 

  • எல்லோரும் உறவினர்களேயாவர்.

  • எல்லோரும் பாரதத்தாயின் புதல்வர்களேயாவர்.

இதை உணராத மக்களை ஐந்தறிவு உடைய விலங்குகளுக்குச் சமமாக எண்ண வேண்டும். 


நல்வழி காட்டுவதே மதம்

மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்ட மதங்கள் எல்லாம், நல்வழியைக் காட்டாமல், பிற மதத்தின்மீது  பழி உண்டாக்கவே செயல்படுகின்றன. ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் பிற மதங்களைச் சேர்ந்த மக்களைப் பகைக் கூட்டங்களாகக் கருதும் செயலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

மதங்கள் கூறிய நன்மை தரும் நெறிமுறைகளை நன்குக் கற்றுக் கொண்ட மதத்தலைவர்கள், அந்நற்கருத்துகளை மக்களுக்குக் கூறாமல், வேற்றுமையை உருவாக்கும் கருத்துகளைக் கூறித் தவறாக வழிகாட்டுதல் மக்களுக்கு நன்மை தரும் செயலன்று. இச் செயல் கரும்புச் சாற்றின் இனிமையைத் தான் மட்டும் பெற்றுக் கொண்டு, ஒன்றுக்கும் உதவாத கரும்புச் சக்கையை  மக்களுக்கு அளிப்பது போன்றதாகும். இது அழிவை உண்டாக்கும் செயலாகும். 

அன்பே நல் ஆயுதம்

அன்பு ஒன்றே மக்களை ஒன்று சேர்க்கும் ஆயுதம் ஆகும். ஆகவே மதத்தின் பெயரால் சண்டையிடுவதைத் தவிர்த்து, மதங்கள் வலியுறுத்தும் நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றி, அன்பு நிறைந்த வாழ்க்கையைப் வளர்த்தெடுப்போம் என்று அறிவுறுத்துகின்றார் பாரதிதாசன்.

  

  

 


புதன், 2 செப்டம்பர், 2020

மரபுக்கவிதை - பாரத சமுதாயம்

 பாரத சமுதாயம் - பாரதியார்


பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய (பாரத)

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம்

உலகத் துக்கொரு புதுமை – வாழ்க! (பாரத)

மனித ருணவை மனிதர் பறிக்கும்

வழக்கம் இனியுண்டோ ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும்

வாழ்க்கை இனியுண்டோ ? – புலனில்

வாழ்க்கை இனியுண்டோ ? – நம்மி லந்த

வாழ்க்கை இனியுண்டோ ?

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்

எண்ணரும் பெருநாடு,

கனியும் கிழங்கும் தானி யங்களும்

கணக்கின்றித் தரு நாடு – இது

கணக்கின்றித் தரு நாடு – நித்த நித்தம்

கணக்கின்றித் தரு நாடு – வாழ்க! (பாரத)

இனியொரு விதிசெய் வோம் – அதை

எந்த நாளும் காப்போம்,

தனியொரு வனுக் குணவிலை யெனில்

ஜகத்தினை அழித்திடு வோம் – வாழ்க! (பாரத)

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

என்றுரைத்தான் கண்ண பெருமான்,

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை

இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்

இந்தியா உலகிற் களிக்கும் – ஆம் ஆம்

இந்தியா உலகிற் களிக்கும் – வாழ்க! (பாரத)

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – வாழ்க! (பாரத)

 


பாடல் விளக்கம்


பாரதியின் வாழ்த்து


பாரத சமுதாயம் என்ற தலைப்பில் பாரதியார் பொதுவுடைமைக் கொள்கை குறித்து விளக்கமுரைக்கின்றார். பாரத நாட்டில் வாழும் மக்களை “வாழ்க வாழ்க“ என்று வாழ்த்துகின்றார். பாரத சமுதாயம் என்றென்றும் வெற்றிப் பாதை நோக்கியே செல்லும் என்பதை அறிவிக்க “ஜய ஜய” என்று இசை பாடி மகிழ்கின்றார். 


பொதுவுடைமைக் கொள்கை


தான் வாழ்ந்த காலத்தில் பாரதத்தில் வாழ்ந்திருந்த 30 கோடி மக்களும் பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பதே அவரின் விருப்பம். அக்கொள்கையைப் பின்பற்றும் சமுதாயம் ஒப்பில்லாத சமுதாயமாக, உலகத்திற்குப் புதுமையான சமுதாயமாக விளங்கும் என்று எடுத்துரைக்கின்றார். பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்றினால்,


  1. ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் தட்டிப் பறிக்கும் வழக்கம் இருக்காது எனவும்,


    2. ஒரு மனிதனைத் துன்பப்படுத்தித் தான் மட்டும் சுகமாக  

      வாழும் பழக்கம் இருக்காது எனவும்,


குறிப்பிடுகின்றார். 


இயற்கை வளம் நிறைந்த நாடு


இனிமையான சோலைகளாலும், நெடிய வயல்களாலும் சூழப்பட்ட இயற்கை வளம் பொருந்திய நம் பாரத நாட்டில் கனியும், கிழங்கும், தானியங்களும் கணக்கின்றி கிடைக்கின்றன. எனவே, ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் பறித்து உண்ணும் வழக்கம் இருக்கத் தேவையில்லை என்று கூறுகின்றார். 


புதிய கொள்கை


தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை என்றால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்த உலகத்தினை அழித்திட வேண்டும் என்ற விதியைப் புதிதாக இயற்றுவோம். அதை எப்போதும் கடைபிடிப்போம் ” என்று சினமுடன் உரைக்கின்றார்.


சமத்துவம்


“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்” என்பது இறைத் தத்துவம். ஆகையால் சாதி, இனம், மதம் என்ற கட்டுக்களை அறுத்தெறிய வேண்டும் என்பது பாரதியின் கனவு.


வேற்றுமையில் ஒற்றுமை


மக்கள் அனைவரும் மன அமைதியுடன் வாழ்ந்து, இறைவனை அடைகின்ற வழியை இந்தியா இந்த உலகிற்கே கற்றுக் கொடுக்கும். ஏனெனில், இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு.  சாதி, மதம், இனம் என வெவ்வேறாக இருப்பினும் மனதளவில், இங்கு வாழும் மக்கள் அனைவரும்,

  • ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களே!

  • ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களே!

  • எல்லோரும் ஒரு எடை கொண்டவர்களே!

  • அனைவருக்கும் ஒரு விலையே!

என்று சமதர்மக் கொள்கையை அறிமுகம் செய்கின்றார்.


எல்லோரும் இந்நாட்டு மன்னர்


இந்திய நாட்டில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சுதந்திர மனப்போக்குடன் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் மனநிலை கொண்டவர்களாக, ஒவ்வொருவரும் தங்களை மன்னர்களாக எண்ணி வாழ வேண்டும் என்று சூளுரைக்கின்றார்.