சிறப்புத் தமிழ் - முதலாமாண்டு முதற்பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்புத் தமிழ் - முதலாமாண்டு முதற்பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 அக்டோபர், 2023

தீக்குச்சி

 

 தீக்குச்சி

கவிஞர் அப்துல் ரகுமான்

 

தீக்குச்சி   

விளக்கை ஏற்றியது. 

எல்லோரும்

விளக்கை வணங்கினார்கள்.

பித்தன் 

கீழே எறியப்பட்ட 

தீக்குச்சியை  வணங்கினான்.

ஏன் தீக்குச்சியை

வணங்குகிறாய்?”

என்று கேட்டேன்.  

ஏற்றப்பட்டதை விட

ஏற்றி வைத்தது

உயர்ந்ததல்லவா என்றான்.

விளக்கம்

தீக்குச்சி விளக்கை ஏற்றியது. அனைவரும் தீபத்தை வணங்கினர். பித்தன் மட்டும் தீபத்தை ஏற்றுவதற்கு மூலகாரணமாகிய தீக்குச்சியை வணங்கினான். தீபத்தை வணங்குவதை விட்டு தீக்குச்சியை ஏன் வணங்கினாய் என்று கேட்டதற்கு, “ஏற்றப்பட்டதை விட ஏற்றியது உயர்வானது” என்று பித்தன் பதில் கூறுகின்றான். இக்கவிதை பிறர் வாழ்வதற்காகத் தன்னைத் தானே தியாகம் செய்து கொள்பவர்களின் சிறப்பை எடுத்துரைப்பதாக அமைகின்றது.

கட்டை விரல் - அண்ணாதுரை

 

கட்டை விரல் - அண்ணாதுரை

(சுருக்கம்)

ஏகலைவன்:

ஏகலைவன் வேடர் குலத்தைச் சேர்ந்தவன். தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன் என்றாலும் நல்ல பண்புகள் பல பெற்றவன். துரோணாச்சாரியாரை நேரில் காணாவிட்டாலும் தன் மனதில் குருவாக நினைத்துக் கொண்டவன். அவன் வில் வித்தையில் வல்லவன்.

அர்ஜுனனின் கோபம்:

இதைக் கேட்ட அர்ஜுனன் தன் குருவான துரோணாச்சாரியாரிடம் ‘தாங்கள் எனக்கு மட்டுமே வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்கள் என்று நம்பி மோசம் போனேன்’ என்று கோபம் கொண்டான். குரு சீடன் உறவே இதனால் முறிந்துபோய் விடுமோ என்று அஞ்சிய குரு அவன் கட்டளையை ஏற்று ஏகலைவனை வீழ்த்த எண்ணினார்.

குரு - ஏகலைவன் சந்திப்பு:

ஏகலைவனைச் சந்தித்த அவர் அவனது குரு பக்தியைக் கண்டு வியந்தார். அவனைச் சோதிக்க விரும்பி ‘ஏகலைவா நீ என்னை குரு என்று அழைக்கிறாய். ஆனால் நான் உனக்கு சிட்சை கொடுத்ததில்லை. நீயும் எனக்குக் குரு காணிக்கை தரவில்லை’ என்று கூறினார். உடனே ஏகலைவன் ‘குருவே தாங்கள் கேட்கும் காணிக்கை எதுவாயினும் நான் தருவேன்’ என்று பணிவுடன் கூறினான். அதைக் கேட்டு சிரித்த குரு ‘உன் வாய் வார்த்தையில் நான் மயங்க மாட்டேன். நீ தர முடியாத காணிக்கையை நான் கேட்பேன். பின்பு அதை தரமுடியாது நீ வருத்தம் கொள்ள நேரிடும்’ என்று எச்சரித்தார். அது கேட்ட ஏகலைவன் ‘இல்லை குருவே தாங்கள் கேட்கும் எந்தக் காணிக்கையையும் நான் தருவேன்’ என்று உறுதி கூறினான்.

கட்டை விரல் காணிக்கை:

 ‘அப்படியானால் குரு காணிக்கையாக உன் கட்டைவிரலை அறுத்துக் கொடு’ என்று கேட்டார். அது கேட்ட ஏகலைவன் ‘சுவாமி இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுகின்றேன்’ என்று கூறிச் சென்று நீர் எடுத்து வந்து தன் குருவின் பாதங்களைக் கழுவி ‘இதோ என் காணிக்கை’ என்று தன் வலது கட்டைவிரலை அறுத்து அவர் பாதங்களில் வைத்தான். அவன் செயலைக் கண்டு திகைத்த குரு மயங்கி விழுந்தார்.

கதையின் நீதி:

  • ஒரு குற்றமும் செய்யாமலேயே தன் வலதுகைக் கட்டைவிரலை இழந்து தன் குரு பக்தியின் மேன்மையை உலகறியச் செய்தான் ஏகலைவன்.
  • ஆனால் நேர்மையான குருவாக இருந்து அனைத்து மாணவர்களையும் சரிசமமாகப் பார்க்காது ஏகலைவனுக்குத் தெரிந்தே துரோகம் செய்தார் துரோணாச்சாரியார்.
  • தன் பொறாமை எண்ணத்தால் தான் மட்டுமே புகழ் பெற வேண்டும் என்று எண்ணி குருவிடம் ஏகலைவனை வீழ்த்துமாறு கட்டளையிட்டதால் ஏகலைவனை விடத் தாழ்ந்து போனான் அர்ஜுனன்.

ஆசிரியர் கருத்து:

இந்தக் கதையை நாளைய சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கதை பின்னாளில் வெவ்வேறு மாற்றங்களைப் பெறலாம்.

  • அர்ஜுனன் பொறாமை குணம் கொள்ளாமல் ஏகலவனைக் கண்டு பெருமை கொள்ளலாம்.
  • கண்ணால் காணாத தன் குருவிற்காக தன் கட்டைவிரலை இழக்கத் தயாரான ஏகலவனைக் கண்டு அவன் கூட்டத்தார் சினம் கொள்கின்றனர். ‘ஏகலைவா நாம் காட்டில் வாழ்வதால் இயல்பாகவே நாம் வில் வித்தையில் வல்லவர்கள். அதை உணராது நீ உன் கட்டைவிரலை இழந்து நம் வேடர் குலத்திற்கு அவமானத்தைச் சேர்க்காதே என அறிவுரை கூறியபோதும், அதை ஏற்காது தன் கட்டைவிரலை இழந்து வந்த ஏகலைவன் மீது கோபம் கொண்டு அவனை வெறுத்து ஒதுக்கலாம்.
  • ஆசிரியர் என்பவர் மாணவர்களின் வாழ்விற்கு வழிகாட்டுபவர் என்ற நிலையிலிருந்து இறங்கி, தன் மாணவனுக்குத் தெரிந்தே துரோகம் செய்த துரோணாச்சாரியரை மக்கள் இழிந்து பேசலாம்.
  • ஆகவே காலம்காலமாக நாம் கூறிக்கொண்டிருக்கும் புராணக் கதைகளை அந்தந்த காலத்திற்குத் தகுந்தாற்போல் சற்று மாற்றியமைத்து நீதி புகட்ட வேண்டியது நம் தலையாய கடமை என்கின்றார் அறிஞர் அண்ணா.

நிலத்தை ஜெயித்த விதை

 

நிலத்தை ஜெயித்த விதை

இரா.வைரமுத்து

அது எப்படி

எட்டயபுரத்தில் மட்டும்

ஒருத்திக்கு

நெருப்பைச் சுமந்த கருப்பை

அதுகூடச் சாத்தியம்தான்

ஆனால் இது எப்படி?

ஏகாதிபத்திய எரிமலையை

ஒரு

தீக்குச்சி சுட்டதே

இது எப்படி?

ஒரு வீரிய விதை

முளைக்கும் போதே

பூமியை ஜெயிக்கிறதே

அப்படித்தான் அது

பாரதீ

உனக்கு என் ராஜ வணக்கம்

சில நூற்றாண்டுகளின்

நித்திரை கலைந்து

தமிழ்

உன் தோளில் தொங்கிச்

சோம்பல் முறித்தது

உன் பேனா

தமிழ்த்தாயின் கூந்தலுக்குச்

சிக்கெடுத்தது

உன் கிழிசல் கோட்டு

கவிதாதேவிக்குப்

பீதாம்பரமானது

உன் எழுத்தில்தான்

முதன்முதலில்

வார்த்தை வாக்கியத்தைப் பேசியது.

உன் பாதங்களுக்குப்

பூச்சொரிவது – எங்கள்

பொறுப்பு.

ஆனால் பொறு.

உன் பாதங்களில்

சொரிவதற்கு

எங்கள்

பூக்களைக் கொஞ்சம்

புனிதப்படுத்திக் கொள்கிறோம்.

பாடல் விளக்கம்

    பாரதியார் சொல்லிலும் செயலிலும் நெருப்புப் போன்றவர். அவரது சுதந்திரப் பாடல்களும் ஆங்கிலேயருக்கு எதிராக நெருப்பாகச் சுடர்விட்டு எரிந்தது. பாரதி என்னும் தீக்குச்சி அந்நிய ஏகாதிபத்திய எரிமலையைத் தனி ஒருவனாக நின்று சுட்டது. நிலத்தை ஒரு சிறிய விதை பிறந்து வெளிவருவது விதைக்கு வெற்றி. பாரதி என்ற விதை இந்திய நாடு என்னும் நிலத்தில் வீரியம் மிக்கதாக முளைத்து எழுந்தது.

         கவிதைகளுக்குரிய வளமையின்றி சில நூற்றாண்டுகளாக உறங்கிக் கிடந்த தமிழன்னை பாரதியின் வருகையால் உறக்கம் கலைந்து எழுந்தாள். உரிமையும் மகிழ்ச்சியும் கண்டுவிட்ட துடிப்பில் பாரதியின் தோள்களில் சோம்பல் முறித்தாள். பாரதியின் எழுதுகோல் எளிமை, இனிமை, இயல்பு ஆகியவற்றைக் கவிதையாகத் தந்தது. அவருடைய கிழிந்த ஆடையே கவிதைத் தாய்க்குப் பட்டாடையாக ஆனது.

        பாரதியைப் போற்ற வேண்டியது கவிஞர்களின் கடமை. கவிதைப் பூக்களால் அருடைய பாதங்களுக்குப் பூசை செய்ய வேண்டும் என்பது கவிஞரின் எண்ணம். ஆனால் பாரதியைக் பாராட்டிப் பாத பூசை செய்வதற்குக் கவிதையில் தூய்மை காண வேண்டும். உண்மை காண வேண்டும் என்று கூறுகின்றார் கவிஞர் வைரமுத்து.

செந்தமிழ் நாடு

 

செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல

காதல் புரியும் அரம்பையர் போல் இளம்

கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி-என

மேவி யாறு பலவோடத்-திரு

மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று

மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு – செல்வம்

எத்தணை யுண்டு புவிமீதே – அவை

யாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட

மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி

ஆரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய

தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை இடிக்கும் தலை இமயம் – எனும்

வெள்பை இடிக்கும் திறனுடையார் – சமர்

பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ்ப்

பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்

தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை

ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு

பாடல் விளக்கம்

  • இப்பாடலில் பாரதியார் தமிழ்நாட்டின் சிறப்புகளை  எடுத்துரைக்கின்றார்.
  • செந்தமிழ் நாடு என்ற சொல் செவிக்கு இனிமை தருகிறது. அது என் முன்னோர்களின் நாடு என்று கூறுவதில் உள்ளம் பெருமிதம் கொள்கின்றது.
  • காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை, பொருநைநதி எனப் பல ஆறுகள் ஓடி வளம் செழித்த நாடு.
  • இறைவனைப் போற்றிக் பரவும் வேதங்கள் பல நிறைந்து, தமிழர்களின் அடையாளமாகத் திகழும் காதலையும் வீரத்தையும் போற்றிய நாடு. தேவலோக மங்கையர் போன்று அழகில் சிறந்த பெண்கள் நிறைந்த நாடு.
  • முத்தமிழ்த் தந்த அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிய மலையை அரணாகப் பெற்று, உலகத்தின் செல்வங்கள் அனைத்தும் நிரம்பிய சிறப்புடையது.
  • தெற்கே கடலால் சூழப்பட்ட கன்னியாகுமரியையும், வடக்கே திருமால் கோயில் கொண்டுள்ள வேங்கடமலையையும் கொண்ட பெரிய நிலப்பரப்புடையது.
  • கல்வியால் சிறந்த நாடு. காலத்தால் அழியாத கம்பனின் கம்ராமாயணத்தால் புகழ் பெற்ற நாடு. கணிதம், வான சாத்திரங்கள், வேத சாத்திரங்கள் உள்ளிட்ட பல கலைகளை உலகுக்குக் கொண்டு சேர்த்த நாடு.
  • வள்ளுவனின் திருக்குறளால் புகழ் பெற்றது. மக்களுக்கு அறமுரைத்த சிலப்பதிகாரத்தைப் பெற்ற நாடு.
  • இலங்கை, சாவகம், புட்பகம் முதலான தீவுகளில் தங்கள் புலிக்கொடியையும், மீன் கொடியையும் நாட்டி, உலகைத் தங்கள் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்த பாண்டியர்களும், சோழர்களும் வாழ்ந்த நாடு.
  • வானத்தை முட்டும் அளவு உயர்ந்து நிற்கின்ற இமயமலையின் சிகரங்களை இடித்துத் தூளாக்கும் ஆற்றல் உடையவர் தமிழ் மன்னர். அத்தகு சிறப்புடைய வீரம் பொருந்திய மன்னர்கள் பலரும் வாழ்ந்த புகழுடையது தமிழ்நாடு.
  • சீனம், எகிப்து, கிரேக்க நாடு எனப் பல நாடுகளில் வாணிகம் செய்து சிறப்புற்ற நாடு. கலை, படைத்தொழில், வாணிகம் என அனைத்து நிலைகளிலும் புகழ் பெற்ற நாடு.


திங்கள், 22 மே, 2023

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

 

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

ஓடிக் கொண்டிருப்பவனே! நில்

எங்கே ஓடுகிறாய்?

எதற்காக ஓடுகிறாய்?

வாழ்க்கையைப் பிடிக்க ஓடினாய்

ஆனால் உன் கண் மூடிய ஓட்டத்தில்

அதைப் பார்க்காமலே ஓடுகிறாய்

நில் கவனி

உன்னிலிருந்தே ஓடுகிறாய்

உன்னை விட்டு ஓடுகிறாய்

குளிர்காயச்

சுள்ளி பொறுக்கத் தொடங்கினாய்

சுள்ளி பொறுக்குவதிலேயே

உன் ஆயுள்

செலவாகிக் கொண்டிருக்கிறது

நீ குளிர் காய்வதே இல்லை

வாழ்க்கை ஒரு திருவிழா

நீயோ அதைக் கொண்டாடுவதே இல்லை

கூட்டத்தில்

தொலைந்து போகிறாய்

ஒவ்வொரு வைகறையும்

உனக்காகவே

தங்கத் தட்டில்

பரிசுகளைக் கொண்டு வருகிறது

நீயோ பெற்றுக் கொள்வதே இல்லை.

ஒவ்வோர் இரவும்

உனக்காகவே

நட்சத்திரப் பூச்சூடி

ரகசிய அழகுகளோடு வருகிறது

நீயோ தழுவிக் கொண்டதே இல்லை

பூர்ணிமை

இரவுக் கிண்ணத்தில்

உனக்காகவே வழிய வழிய

மது நிரப்புகிறது

நீயோ அருந்துவதே இல்லை

ஒவ்வொரு பூவும்

உன் முத்தத்திற்கான இதழாகவே

மலர்கிறது

நீயோ முத்தமிட்டதே இல்லை.

மேகங்களில் கிரணங்கள்

உனக்காக ஏழு வர்ணங்களில்

காதல் கடிதம் எழுதுகின்றன

நீயோ படிப்பதே இல்லை.

உன்னைச் சுற்றிலும் சௌந்தர்ய தேவதை

காதலோடு புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்

நீயோ பார்ப்பதே இல்லை

உன் மனைவியின் கொலுசில்

உன் குழந்தையின் சிரிப்பில்

உன் அண்டை வீட்டுக்காரனின்

கை அசைப்பில்

தெருவில் போகின்ற அந்நியனின்

திரும்பிப் பார்த்தலில்

வாழ்க்கையின் சங்கீதம் ஒலிக்கிறது

நீயோ கேட்பதே இல்லை.

தறி நாடாவைப் போல

இங்கும் அங்கும் அலைகிறாய்

ஆனால்

நீ எதையும் நெய்வதில்லை.

ரசவாதக் கல்லைத்

தேடி அலைகிறாய்

நீதான் அந்தக் கல் என்பதை

நீ அறியவில்லை.

கடிகார முள்ளாய்

சுற்றிக் கொண்டே இருப்பவனே

வாழ்க்கை என்பது

வட்டிமடிப்பதல்ல என்பதை

எப்போது உணரப் போகிறாய்?

நீ அர்த்த ஜீவனுள்ள

எழுத்துக்களால் ஆனவன்

ஆனால் நீயோ

வெறும் எண்ணாகிவிடுகிறாய்.

நீ முத்துக்கள் நிறைந்த சமுத்திரம்

ஆனால் நீயோ

கிளிஞ்சல் பொறுக்க

அலைந்து கொண்டிருக்கிறாய்.

நீ வயிற்றிலிருந்துதான் வந்தாய்

ஆனால் நீ

வயிற்றில் இல்லை.

வயிற்றில் விழுந்து கிடப்பவனே

மேல் இதயத்திற்கு ஏறு

அங்கே

உனக்கான ராஜாங்கம்

காத்திருக்கிறது.

இழந்தவர்கள் - அப்துல் ரகுமான்

கவிதையின் விளக்கம்:

இன்றைய அறிவியல் உலகில் நாம் நம் வாழ்க்கையை இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நடைமுறை வாழ்க்கையில் எத்தகைய இன்பங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் தம் ‘இழந்தவர்கள்என்ற கவிதை மூலம் விளக்குகின்றார்.

  • குளிர் காய சுள்ளி பொறுக்கத் தொடங்கிய நாம், வெறும் சுள்ளி பொறுக்குவதில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவதால் குளிர் காய்வதே இல்லை.
  • வாழ்க்கை என்ற திருவிழாவைக் கொண்டாட நாம் விரும்புவதே இல்லை. மாறாக, திருவிழாவின் கூட்டத்தில் தொலைந்து போகவே விரும்புகின்றோம்.
  • ஒவ்வொரு நாளும் விடியல் நமக்குத் தங்கத் தட்டில் பரிசுகளைக் கொண்டு தருகின்றது. ஆனால் நாம் அதைப் பெற்று கொள்வதே இல்லை.
  • விண்மீண்கள் நமக்காகவே இரவில் பூச்சூடி வருகின்றன. ஆனால் நம் அதன் அழகினைக் கவனிப்பதே இல்லை.
  • பௌர்ணமி நாளில் முழுநிலவின் இனிமையினை நாம் ரசிப்பதே இல்லை.
  • ஒவ்வொரு பூவும் நம் முத்தத்திற்காகவே விரிகின்றன. நாமோ முத்தமிட்டதே இல்லை.
  • மேகங்கள் ஏழு வண்ணங்களில் வானவில்லாய் வளைந்து காதல் கடிதம் தீட்டுகின்றன. நாம் அதைப் படிப்பதே இல்லை.
  • மனைவியின் கொலுசில் ஏற்படும் ஒலியில், குழந்தையின் சிரிப்பில், பக்கத்து வீட்டுக்காரரின் கை அசைப்பில், தெருவில் போகின்ற அந்நியர் திரும்பிப் பார்க்கையில் என நம் வாழ்க்கையைச் சுற்றிலும் சங்கீதம் ஒலிக்கின்றது. நாம்தான் அதைக் கேட்பதேயில்லை.
  • தறியில் ஓடும் நாடாவைப் போல் நாமும் ஓடுகின்றோம். ஆனால் எதையும் நெய்வதில்லை.
  • மண்ணைப் பொன்னாக்கும் ரசவாதக் கல்லைத் தேடி அலைகின்றோம். ஆனால் நாம்தான் அந்தக் கல் என்பதை நாம் அறிவதே இல்லை.
  • கடிகார முள்ளைப் போன்று சுற்றிக் கொண்டே இருக்கின்றோம். வாழ்க்கை வெறும் வட்டமடிப்பது இல்லை என்பதை நாம் உணர்வதே இல்லை.
  • நாம் உயிர் எழுத்துக்களால் உருவானவர்கள். ஆனால் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் முத்துக்கள் நிறைந்த கடலைப் போன்றவர்கள். ஆனால் சிப்பிகளைத் தேடுவதிலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம்.
  • நாம் அனைவரும் வயிற்றிலிருந்து தான் வந்தோம். ஆனால், வயிற்றினால் உண்டாகும் பசியினையும், அதை நிறைவேற்றுவதற்காக பணம் சம்பாதிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம்.
  • இதயம் என்ற ஒன்று நமக்கு உண்டு. அதில் அன்பும் கருணையும் கலந்திருக்கின்றது. அதுதான் நம் வாழ்க்கையை ராஜ வாழ்க்கையாக மாற்றும் திறவுகோல் என்பதை உணர வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் இனிமையை நாம் அனுபவிக்க முடியும் என்று கவிஞர் மிக அழகாக வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்குகின்றார்.

 

 

 

 

கடமையைச் செய் - மீரா

 

கடமையைச் செய் - மீரா

பத்து மணிக்குச்

சரியாய் நுழைந்தேன்.

கூட இருப்போரிடத்தில்

கொஞ்சம் குசல விசாரணை.

தலை வலித்தது

தேநீர் குடிக்க

நாயர் கடைக்கு நடந்தேன்.

ஊரில் இருந்து

யாரோ வந்தார்

ஒரு மணி நேரம்

உரையாடல்.

இடையில்

உணவை மறக்கலாமா?

உண்டு தீர்த்த

களைப்புத் தீர

ஒரு கன்னித் தூக்கம்.

முகத்தை அலம்பிச்

சிற்றுண்டி நிலையம்

சென்று திரும்பினேன்.

வேகமாய்

விகடனும் குமுதமும்

படித்து முடித்தேன்.

மெல்லக்

காகிதக் கட்டை எடுத்துத்

தூசியைத் தட்டித் துடைத்துக்

கடமையைச் செய்யத்

தொடங்கும்போது.

கதவை அடைத்தான்

காவற்காரன்

மணி ஐந்தாயிற்றாம்.

 

கடமையைச் செய் - மீரா

கவிதையின் விளக்கம்:

    கவிஞர் மீரா அவர்கள் ‘கடமையைச் செய்என்ற தம் கவிதையின் மூலமாக, அரசாங்க ஊழியர்கள் அலுவலக நேரத்தில் வேலை செய்யாமல் நேரத்தை எவ்வாறு வீணடிக்கின்றனர் என்பதைத் தெரிவிக்கின்றார். இக்கவிதை அங்கத (கிண்டல், கேலி) முறையில் அமைந்துள்ளது.

  • பத்து மணிக்குச் சரியாக அலுவலகத்தில் நுழைந்த ஊழியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் மற்ற ஊழியர்களிடம் உரையாடி நலம் விசாரிக்கின்றார். 
  • லேசாக தலை வலிப்பது போல் தோன்றியதால், தேநீர் பருக நாயர் கடைக்குச் செல்கின்றார்.
  • தேநீர் அருந்திய பின் ஊரிலிருந்து வந்த யாரோ ஒருவரிடம் ஒரு மணி நேரம் உரையாடுகின்றார்.
  • உணவு இடைவேளை வந்து விட்டது. உணவு அருந்துகின்றார்.
  • உண்ட களைப்பு தீர சிறிது நேரம் உறங்குகின்றார்.
  • பின்பு, முகத்தைக் கழுவிக்கொண்டுச் சிற்றுண்டி நிலையத்திற்குப் புறப்படுகின்றார்.
  • மீண்டும் அலுவலகம் வந்த பின்பு தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விகடன் குமுதம் போன்ற இதழ்களைப் படிக்கின்றார்.
  • அலுவலகம் வந்ததில் இருந்து வேலையைப் பற்றிச் சிறிதும் யோசித்துப் பார்க்காத அவர் மெதுவாக காகிதக் கட்டைகளை எடுத்துத் தூசியைத் தட்டித் துடைத்து கடமையைச் செய்யத் தொடங்கினார்.
  • அப்போது காவல்காரன் வந்து, மணி ஐந்து ஆகிவிட்டது எனக் கூறி கதவை அடைக்கின்றார்.

இவ்வாறு ஊழியர்கள் சிலர் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதால்தான் அரசாங்கப் பணிகளைச் சரியாகச் செய்ய முடிவதில்லை என்ற கருத்து இக்கவிதையின்வழி புலப்படுகின்றது.

 

 

 

ஆடிக்காற்றே - சிற்பி

ஆடிக்காற்றே - சிற்பி

ஆடிக்காற்றே வா! வா!

மண் தூவி விதை தூவி

முளை காண விழை காற்றே

என் சொல் கேளேன்.

நெல்லை நாறப் புழுக்குறானே

அவனைப் படியில் உருட்டிவிடு

இளைத்தவன் வயிற்றில் சொடுக்குறானே

அவனைக் குழியில் இறக்கிவிடு

மஞ்சள் இதழில் பச்சை கிறுக்குறானே

அவனை பனை மரத்தில் தொங்கவிடு

உதைத்துக் கொள்ளட்டும்

துள்ளல் அடங்கட்டும்.

புரட்சிக் காற்றே!

இன்னும் ஒன்றே ஒன்று

இவற்றைக் காண விழைந்த என் துணை

இதோ, இங்கே நிலப்படுக்கையில்,

எனக்காக -

மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா?

மெல்ல -

மெல்லத் தூவு, நோகாமல் தூவு.

 

ஆடிக்காற்றே - சிற்பி

கவிதையின் விளக்கம்:

  • ஆடி மாதத்தில் வீசும் காற்றை கவிஞர் இன்முகத்தோடு வரவேற்கும் வகையில் ‘ஆடிக்காற்றே வா வாஎன்று பாடுகின்றார்.
  • ஆடிக்காற்றைப் புரட்சிக் காற்று என்றும் வர்ணிக்கின்றார்.
  • மண்ணையும் விதைகளையும் தூவி அவை பயிராவதைக் காண விரும்பும் உழவர்களுக்கு உதவும் வகையில், தன் சொல் கேட்குமாறு ஆடிக்காற்றிடம் கூறுகின்றார் கவிஞர். 
  • கல்நெஞ்சம் கொண்டு மக்களைப் பல வகைகளில் துன்புறுத்தும் சில சமுதாய துரோகிகளை எவ்வாறெல்லாம் தண்டிக்க வேண்டும் என்று தன் ஆதங்கத்தை ஆடிக்காற்றிடம் தெரிவிக்கின்றார்.

1.அரிசியைத் துர்நாற்றத்தோடு எடுத்து வழங்குபவனை படியில் உருட்ட வேண்டும்.

2.அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களுக்குப் பணமும் கொடுக்காமல் விளைச்சலில் பங்கும் தராமல் அவர்கள் வயிற்றில் அடித்து பட்டினி போடுகின்றவனைக் குழியில் இறக்க வேண்டும்.

3.பிறரை இழிவுபடுத்தும் வகையில் மஞ்சள் இதழில் ஆபாசமாக எழுதுகின்றவனைப் பனை மரத்தில் தொங்க விட்டு, துள்ளல் அடங்கித் தானே இறந்து போக வேண்டும்.

என்று ஆடிக்காற்றிடம் விண்ணப்பம் செய்கின்றார். இறுதியாக, ‘அவற்றைக் காண விரும்பிய என் மீது மல்லிகை மலர்களைத் தூவ மாட்டாயா? தூவினால் மெல்லத் தூவு, நோகாமல் தூவுஎன்றும் கூறுகின்றார்.


வியாழன், 18 மே, 2023

நாட்டுப்புறப் பாடல் - மானம் விடிவெதெப்போ?

 

நாட்டுப்புறப் பாடல் 

மானம் விடிவெதெப்போ?

மழையில்லாத காலத்தில் கன்னிப் பெண்கள் வருணனை வேண்டிப் பாடும் பாக்கள் இவை.

பூமியை நம்பி புத்திரைத் தேடி வந்தோம்.

பூமி பலி எடுக்க புத்திரர் பரதேசம்,

மானத்தை நம்பி மக்களைத் தேடி வந்தோம்.

மானம் பலியெடுக்க மக்களெல்லாம் பரதேசம்.

ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம் பின்னப் பட்டு நிக்கிறாங்க.

அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ண தேவா...

மேழி பிடிக்கும் தம்பியெல்லாம் முகஞ் சோர்ந்து நிக்கிறாங்க...

அந்தக் குறை கேட்டு வந்திறங்கு வர்ணதேவா....

காட்டுத் தழை பறித்து கையெல்லாம் கொப்புளங்கள்

கடி மழை பெய்யவில்லை கொப்புளங்கள் ஆறவில்லை.

வேலித் தழை பறித்து விரலெல்லாம் கொப்புளங்கள்

விரைந்து மழை பெய்யவில்லை வருத்தங்கள் தீரவில்லை.

மானம் விடிவதெப்போ எங்க மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ?

பூமி செழிப்பதெப்போ எங்க புள்ளைப் பஞ்சம் தீர்வதெப்போ?

ஓடி வெதச்ச கம்பு ஐயோ! வருணதேவா

ஊடு வந்து சேரலையே பாடி வெதச்ச கம்பு

ஐயோ வருணதேவா பானை வந்து சேரலையே.

பாடல் விளக்கம்:

          மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க மழை பெய்யச் செய்யுமாறு வருணனிடம் வேண்டுகின்றனர்.

  • மக்கள் உயிர் பிழைக்க ஊர்விட்டு ஊர் வந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் உணவு நீர் இல்லாமல் தவித்தனர்.
  • மழை வரும் என்று வானத்தை நம்பியதும் வீண்போனது. மழை பெய்யவில்லை. மக்களெல்லாம் உடல் மெலிந்து இறக்கும் சூழ்நிலைக்கு ஆளானார்கள்.
  • ஏர் பிடித்து உழவு செய்பவர்களெல்லாம் தாங்கள் விதைத்த விதை பயிராகவில்லையே என்று வருந்தி முகம் சோர்ந்து நிற்கின்றனர். அவர்கள் குறையைத் தீர்க்க மழையாக வந்திறங்கு வருணதேவா என்று வேண்டுகின்றனர்.
  • தங்களுக்கு உணவு இல்லாமல் போனாலும் தங்களை நம்பியிருக்கும் மாடு, கன்றுக்கு உணவு தரவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு காட்டிலும் வேலியிலும் தழை பறித்ததால், அவர்களின் கைகளிலும், விரல்களிலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. 
  • அப்பொழுதும் மழை பெய்யவில்லை. அவர்களின் குறை தீரவில்லை. கொப்புளங்கள் ஆறவில்லை.
  • மழை வரும் என்று நம்பி வானத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த மக்கள் தங்கள் பஞ்சம் எப்பொழுது தீரும் என்றும், பூமி எப்பொழுது செழிக்கும் என்றும் அழுது புலம்பினர்.
  • ஓடியும் பாடியும் விதைத்த கம்பு பயிராகவில்லையே தாங்கள் விதைத்த பானையளவுகூட விளைச்சல் இல்லையே என்று கவலையோடு கூறி இக்குறையைத் தீர்க்க வந்திறங்கு வர்ணதேவா என்று அவ்வூரிலுள்ள கன்னிப் பெண்கள் வருணதேவனை வேண்டிப் பாடினர்.

 

 

நாட்டுப்புறப்பாடல் - பஞ்சம்

 நாட்டுப்புறப்பாடல்

பஞ்சம்

தாது வருடப் பஞ்சத்திலே  - ஓ சாமியே

தாய் வேறே பிள்ளைவேறே - ஓ சாமியே

அறுபது வருசம் போயி - ஓ சாமியே

அடுத்தாப்போலே தாதுதானே  - ஓ சாமியே

தைப்பொங்கல் காலத்திலே - ஓ சாமியே

தயிருக்கும் பஞ்சம் வந்ததே  - ஓ சாமியே

மாசி மாதத் துவக்கத்திலே   - ஓ சாமியே

மாடுகளும் பட்டினியே - ஓ சாமியே

பங்குனிக் கடைசியிலே  - ஓ சாமியே

பால் மாடெல்லாம் செத்துப் போச்சே - ஓ சாமியே

சித்திரை மாதத் துவக்கத்திலே  - ஓ சாமியே

சீரெல்லாம் குலைந்து போச்சே - ஓ சாமியே

வைகாசி மாதத்திலேதான் - ஓ சாமியே

வயிறு எல்லாம் ஒட்டிப்போச்சே - ஓ சாமியே

ஆனி மாதத் துவக்கத்திலே  - ஓ சாமியே

ஆணும் பெண்ணும் அலறலாச்சே - ஓ சாமியே

ஆடி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே

ஆளுக்கெல்லாம் ஆட்டமாச்சே - ஓ சாமியே

ஆவணி மாசத் துவக்கத்திலே - ஓ சாமியே

ஆட்டம் நின்று ஓட்டமாச்சே - ஓ சாமியே

புரட்டாசிக் கடைசியிலே - ஓ சாமியே

புரண்டுதே உலகம் பூரா - ஓ சாமியே

ஐப்பசித் துவக்கத்திலே  - ஓ சாமியே

அழுகையுண் சீருந்தானே - ஓ சாமியே

கார்த்திகைக் கடையிலே  - ஓ சாமியே

கண்ட இடம் எல்லாம் பிணம் - ஓ சாமியே

மாகாராணி புண்ணியத்திலே - ஓ சாமியே

மார்கழிப் பஞ்சம் நின்றதே - ஓ சாமியே

காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

ரோட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

மேட்டுப் பக்கம் நூறு பிணம்  - ஓசாமியே

ஆற்றிலேயும் தண்ணியில்லை - ஓ சாமியே

கிணற்றில் பார்த்தால் உப்புத் தண்ணி - ஓசாமியே

கிழடு கட்டை குடிக்குந் தண்ணி - ஓ சாமியே

தவறினது கோடி சனம்  - ஓ சாமியே

கஞ்சியில்லா மேதவித்து - ஓ சாமியே

கஞ்சித் தொட்டி போட்டார்களே - ஓ சாமியே

அன்புடனே சலுக்கார்தானே - ஓ சாமியே

காலம்பர கோடி சனம் - ஓ சாமியே

கஞ்சி குடித்துக் களையாத்துச்சே - ஓ சாமியே

பொழுது சாயக் கோடி சனம்  - ஓ சாமியே

பொழைச்சுதே உசிர் தப்பித்து - ஓ சாமியே

கஞ்சிக்குக் கடிச்சிக்கிற - ஓ சாமியே

காணத் துவையல் கொடுத்தாங்களே - ஓ சாமியே

பாடல் விளக்கம்:

நாட்டிற்கு இன்றியமையாத தேவை மழை. மழை பொழியாவிட்டால் ஆறு குளங்கள் வறண்டு விடும். அதனால் விளைச்சல் குறையும். நாட்டில் பஞ்சம் ஏற்படும். நம் நாட்டில் தாது வருடத்தில் ஏற்பட்ட பஞ்சம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்பஞ்ச காலத்தில் நாட்டில் நடைபெற்ற கொடிய நிகழ்வுகளை இந்நாட்டுப்புறப்பாடல் தெளிவாகக் காட்டுகின்றது.

இப்பாடலில் தமிழ் மாதங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு, அம்மாதங்களில் ஏற்பட்ட பஞ்சத்தின் கொடுமைகள் விளக்கப்பட்டிருப்பது இப்பாடலின் தனிச்சிறப்பாகும்.

  • தை மாதத்தில் தயிருக்குப் பஞ்சம் வந்தது.
  • மாசி மாதத் துவக்கத்தில் மாடுகள் பட்டினி கிடந்தன.
  • பங்குனி மாதத்தில் பட்டினியால் பசு மாடுகள் இறந்தன.
  • சித்திரை மாதத்தில் நகரத்தின் அழகும், புகழும் அழிந்து போனது.
  • வைகாசி மாதத்தில் உணவு இல்லாமல் மக்களின் வயிறுகள் காய்ந்து போனது.
  • ஆனி மாதத்தில் ஆண்களும் பெண்களும் பசியால் அலறினார்கள்.
  • ஆடி மாதத்தில் பசியின் கொடுமையால் மனிதர்களின் உடலெல்லாம் நடுங்கியது.
  • ஆவணி மாதத்தில் நடுக்கம் நின்று மக்கள் அங்குமிங்கும் பசியால் ஓடினார்கள்.
  • புரட்டாசி மாதத்தில் மக்களுக்கு உலகமே தலை கீழாகப் போயிற்று.
  • ஐப்பசி மாதத்தில் எல்லா இடங்களிலும் அழுகைக் குரல் ஒலித்தது.
  • கார்த்திகை மாதத்தில் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் பிணங்கள் கிடந்தன.
  • இறைவனின் அருளால் மார்கழி மாதம் பஞ்சம் தீர்ந்தது.

காட்டில், வீட்டில், ரோட்டில், மேட்டில் என காணும் இடங்களில் எல்லாம் நூறு நூறு பிணங்கள் தென்பட்டன. கிணற்றுத் தண்ணீரும் உப்புத் தண்ணீராய் மாறியது. அத்தண்ணீரை வயதானவர்கள் மட்டும் குடித்தனர். கோடி மக்கள் மடிந்தனர். கஞ்சிக்கு வழியில்லாமல் தவித்தனர். பஞ்சத்தின் கொடுமையை அறிந்த அரசாங்கம் கஞ்சித் தொட்டியை வைத்து மக்களின் பசியை ஆற்ற முயற்சி செய்தது. கஞ்சியோடு துவையலையும் கொடுத்தது. காலையும் மாலையும் கஞ்சி குடித்து மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொண்டனர்.