இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
அலகு 1
பாடம் 1 – அறிவியலும் மனித வாழ்வும்
1. அறிவியல் என்றால் என்ன?
அறிவியல் என்பது அறிந்து
கொள்ளுதல் எனப் பொருள்படும். இது scientia என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
தரவுகளின் அடிப்படையில் ஒரு முறையான வழிமுறையைப் பின்பற்றி இயற்கை, உயிர்கள், உலகம்
மற்றும் சமூகத்தைப் புரிந்து கொள்ளுதல் அறிவியல் ஆகும். அதாவது ஒன்று நிகழ்வது ஏன்?
எதனால்? எப்படி? என்பதை அறிவின் அடிப்படையில் உறுதியாக அறிவது அறிவியல் ஆகும்.
2.
அறிவியலின் பிரிவுகள் யாவை?
இயற்கை அறிவியல், சமூக
அறிவியல், முறைசார் அறிவியல் என அறிவியல் மூன்றாகப் பகுக்கப்படுகின்றது.
3.
அரிசி என்ற சொல்லின் விளக்கம் தருக.
அரிசி என்ற தமிழ்ச்சொல்லே
உலகின் அதிக மொழிகளில் நெல் என்ற தானியத்தைக் குறிக்கும் சொல்லாக ரைஸ், ரைஸோ என மருவி
வழங்கி வருகின்றது.
4.
உலகத்தின் பழமையான நெல் எங்குக் கண்டுபிடிக்கப்பட்டது?
பழனியில் இருந்து தென்மேற்கில்
உள்ள பொருந்தல் என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் சுமார் இரண்டு
கிலோ அளவிலான நெல் மணிகள் கிடைத்தன. இதுவே இன்று வரையில் உலகில் கிடைத்துள்ள மிகப்
பழமையான தொல்லியல் நெல் சான்று ஆகும்.
5.
பெரும்பாணாற்றுப்படை கூறும் வேளாண் நுட்பத்தைக் குறிப்பிடுக.
நிலத்தை ஆழ உழ வேண்டும்.
மண் மேல் கீழாகப் புரளும்படி பலமுறை உழ வேண்டும். அவ்வாறு உழுதால் மிகுந்த பயனை அடையலாம்
என்ற தமிழரின் வேளாண் நுட்பத்தைப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.
6.
பருத்திப் பெண்டிர் என்போர் யார்?
நெசவுத் தொழிலில் ஈடுபட்ட
பெண்கள் பருத்திப் பெண்டிர் எனப்பட்டனர்.
7.
தமிழர் உருவாக்கிய துணி வகைளைக் குறிப்பிடுக.
பாம்பின் தோலைப் போன்றும்,
பாலாடை போன்றும், அருவியின் சாரல் போன்றும், மேகம் போன்றும், மூங்கிலின் உள்தோலைப்
போன்றும் தமிழர் உருவாக்கிய துணிகளின் வகைகளைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
8.
பருத்தி நெசவு குறித்து சாண் மார்சல் கூறும் கருத்து யாது?
பருத்தி நெசவு முதன்முதலில்
இந்தியாவில்தான் செய்யப்பட்டதென்றும், அங்கிருந்தே மேலை நாடுகளுக்குப் பரவியதென்றும்
சாண் மார்சல் கூறுகின்றார்.
9.
பஞ்சாடை கருவி எங்குக் கிடைத்தது?
இந்தியாவில் முதன்முதலாக
மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில் நூல் நூற்கப் பயன்படும் பஞ்சாடை எனும் கருவி
கிடைத்துள்ளது.
10. தமிழர் தங்கி வாழ்ந்த இடங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
பழந்தமிழ்ப் பாடல்களில்
தமிழர் தங்கி வாழ்ந்த இடங்கள், அகம், இல், இல்லம், உறையுள், உறைவிடம், கல்லளை, குடில்,
குரம்பை, குறும்பு, நெடுநகர், புக்கில், மனை, மாடம் எனப் பலவாறு குறிக்கப்படுகின்றன.
11. பரிபாடல் கூறும் மதுரையின் நகர வடிவமைப்பை எழுதுக.
மதுரை நகர் தாமரை வடிவில்
அமைந்திருந்ததாகப் பரிபாடல் கூறுகின்றது. தாமரைப் பூவின் அக இதழ்களைப் போன்றவை மதுரைத்தெருக்கள்
என்றும், அவ்விதழ்களின் உட்புறமாக விளங்கும் மையத்தைப் போன்றது பாண்டியனின் அரண்மனை
என்றும், அப்பூவில் பொருந்தியுள்ள தாதினைப் போன்றவர் மக்கள் என்றும், அத் தாதினை உண்ணுகின்ற
வண்டினைப் போன்றவர்கள் பரிசில் பெற்று வாழ்கின்ற புலவர்கள் என்றும் பரிபாடல் காட்டுகின்றது.
12.
திருக்குறள் கூறும் நான்கு வகை மருத்துவக் கூறுகள் யாவை?
நோயுற்றவன், மருத்துவன்,
மருந்து, மருத்துவனுக்கு உதவியாக இருந்து பணியாற்றுபவன் என்ற நான்கு கூறுகளைக் கொண்டது
மருத்துவம் என்று திருக்குறள் கூறுகின்றது.
13. பழந்தமிழர் மருத்துவ வகைகளைக் குறிப்பிடுக.
பழந்தமிழர் மருத்து முறைகளை
இயற்கை மருத்துவம், இசை மருத்துவம், அறுவை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மனவள மருத்துவம்,
கால்நடைகளுக்கான மருத்தும் என வகைப்படுத்திக் காண முடிகின்றது.
14.
பழந்தமிழர் அறுவை மருத்துவம் செய்துள்ள திறத்தை பதிற்றுப்பத்து வாயிலாக விளக்குக.
சிரல் என்னும் மீன்கொத்திப்
பறவை நீருக்குள் பாய்ந்து மீனைக் கொத்திக் கொண்டு மேலே எழுவதைப் போல, நீண்ட ஊசியால்
உடலில் வெட்டுக் காயம்பட்ட பகுதியைத் தைத்துள்ளனர். இதனை, “சிரல் பெயர்ந்தன்ன நெடுவெள்
ஊசி” என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது.
பாடம் 2 – ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும்
1. சூழலியல் என்றால் என்ன?
உயிரினங்களுக்கும் அவை
வாழும் இடங்களுக்கும் இடையேயான தொடர்பு, உறவு, சார்புத்தன்மை போன்றவற்றை அறிவது சூழலியல்
ஆகும்.
2.
உயிரினப் பல்வகைமையை அறிமுகப்படுத்தியவர் யார்?
இ.ஓ.வில்சன்
3.
விழுமியம் – விளக்கம் தருக
சமூகமாகக் கூடி வாழ்கின்ற நிலையில் பன்னெடுங்காலமாக மக்கள் தங்களுடைய வாழ்க்கையில்
தொடர்ந்து பின்பற்றிய ஒழுங்குகள் அல்லது நெறிகள் விழுமியம் ஆகிறது.
4.
உலகத் தோற்றம் குறித்து தொல்காப்பியம் கூறுவது யாது?
உலகமானது நிலம், தீ,
நீர், வளி, விசும்பு என்னும் ஐந்து பூதங்களும் கலந்தது என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
5.
தமிழர் வகுத்த நானிலங்கள் யாவை?
உயிர்கள் வாழத் தகுந்த
நிலத்தை நானிலம் என வகைப்படுத்தினர் தமிழர். அவை, காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல்
உலகம், பெருமணல் உலகம் என்பனவாகும்.
6.
பண்பாட்டுச் சூழலியல் – குறிப்பு வரைக
நிலத்தின் அடிப்படையில் ஐந்து வகையான சூழல் தொகுதிகளை உருவாக்கியதுடன், குறிப்பிட்ட
நிலத்திற்கென முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை வரையறை செய்ததைப் பண்பாட்டுச்
சூழலியல் என்கின்றனர் இன்றைய சூழலியலாளர்.
7.
இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில் சிறுபஞ்சமூலம் கூறும் செய்தி யாது?
குளங்களைத் தோண்டுதல்,
அவற்றைச் சுற்றி மரங்களை நடுதல், கால்வாய்களை அமைத்தல், தரிசு நிலங்களைச் செப்பம் செய்து
உழுவயல் ஆக்குதல், கிணற்றைத் தோண்டுதல் ஆகிய ஐந்து அறங்களைச் செய்வோர் சுவர்க்கம் புகுவர்
என்கிறது சிறுபஞ்சமூலம்.
8.
குறிஞ்சித் திணைக் குடியிருப்பு குறித்து எழுதுக.
குறிஞ்சித் திணைக் குடியிருப்புகள்
குடில்கள் எனப்பட்டன. இடமும் சூழலும் கருதி சிறிய அளவினதாக இவை அமைக்கப்பட்டன. மலைப்பகுதி
என்பதால் குடியிருப்புகளில் அணிலும், எலியும் உள் நுழையாதபடி ஈந்தின் இலைகளைக் கொண்டு
கூரைகள் வேயப்பட்டிருந்தன.
பாடம் 3 – தொழில்நுட்ப மேலாண்மை
1. உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை எழுதியவர் யார்?
சார்லஸ் இராபர்ட் டார்வின்
2.
இயற்கைத் தேர்வு என்றால் என்ன?
வாழ்வதற்கான போராட்டம்,
தகுதியற்றவை அழிந்து போதல், தகுதியுடையவை எஞ்சி வாழ்தல் ஆகியவற்றையே இயற்கைத் தேர்வு
என்ற நிகழ்வாக டார்வின் குறித்தார்.
3.
தொன்மைச் சமூகம் என்ற நூலை எழுதியவர் யார்?
லூயிஸ் ஹென்றி மார்கன்
4.
மார்கன் என்னும் அறிஞர் மனித சமூங்களை எவ்வாறு பிரிக்கின்றார்?
விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி
நிலை, நாகரிக நிலை
5.
வேளாண் புழங்கு பொருட்களுள் முதன்மையானது எது?
கலப்பை
6.
நீர் இறைக்கும் ஏற்றக் கருவிகளின் பல்வேறு பெயர்களைக் குறிப்பிடுக.
ஏற்றம், பட்டை, பன்றிப்பொறி,
ஆம்பி, சால், தொப்பரை, துலா, பரி, பூட்டைப்பொறி போன்ற பெயர்களால் வழங்கப்பட்டன.
7.
கரும்பு பிழி எந்திரம் குறித்து எழுதுக.
பண்டைத் தமிழரின் வேளாண்
தொழில்நுட்பத்தில் கரும்பு பிழி எந்திரத்தின் வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. கரும்பிலிருந்து
சாற்றைப் பிழிந்தெடுத்து வெல்லக் கட்டிகளும் சர்க்கரையும் தயாரிக்கப்பட்டன. இதற்கு
கரும்பு பிழி எந்திரம் பயன்படுத்தப்பட்டது.
8.
சேந்தன் திவாகரம் குறிப்பிடும் மதில் உறுப்பின் ஏழு பெயர்களைக் கூறுக.
பதப்பாடு, எந்திரம்,
சோசம், தோணி, விதப்பு, ஞாயில், நாஞ்சில் ஆகியனவாகும்.
9.
கம்மியர் என்போர் யார்?
கப்பல் கட்டுமானத் தொழில்
புரிவோர் கம்மியர் என அழைக்கப்பட்டனர்.
10. எந்திரப் பாவை – விளக்கம் தருக.
பாவை வைத்து விளையாடுதல்
பழந்தமிழக மகளிர் விளையாட்டுகளுள் ஒன்று. மண்பாவை, மரப்பாவை போன்றவை இவ் விளையாட்டுகளில்
இடம்பெற்றிருந்ததைப் போல, எந்திரத்தாலான பாவையும் பயன்பாட்டிலிருந்தது. இவ் எந்திரப்
பாவை தானே இயங்கும் பொறியில் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.
11. எந்திர வாவி குறித்து எழுதுக.
எந்திர வாவி எனப்படும்
எந்திரம் பொருத்தப்பட்ட நீர்நிறை தொட்டி பழந்தமிழகத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இவ் எந்திர நீர்த்தொட்டியில் இளைஞரும் மகளிரும் நீராடியதையும், எந்திரத் தொட்டியிலிருந்து
வெளியேற்றப்பட்ட நீரினையும் மணிமேகலை காட்டுகின்றது.
12. குறுநீர்க்கன்னல் என்னும் கருவி எதற்குப் பயன்படுத்தப்பட்டது?
பழந்தமிழகத்தில் காலத்தை
அளந்து கணக்கிடுவதற்குக் குறுநீர்க் கன்னல் என்னும் கருவி உருவாக்கப்பட்டிருந்தது.
13. வலவன் என்ற சொல் யாரைக் குறிக்கின்றது?
வானூர்தி ஓட்டுநருக்கான
வலவன் என்ற கலைச் சொல்லைப் புறநானூறு வழங்குகின்றது.
பாடம் 4 – நீர் நில மேலாண்மை
1.
மேலாண்மை என்றால் என்ன?
குறிக்கோளை அடையும் வகையில்
உரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்க மேற்கொள்ளப்படும் செயல்நெறிகள், செயல் திறன்கள்
மேலாண்மை எனப்படுகின்றது.
2.
பழந்தமிழ் மக்கள் மழைப்பொழிவை எவ்வாறு கணக்கிட்டனர்?
வெள்ளி மீன் வடக்குப் பகுதியில் எழுந்தால் மழைப்பொழிவு இருக்கும் என்றும், தெற்குப் பகுதியில் எழுந்தால் மழைப்பொழிவு இருக்காது என்றும் கணக்கிட்டனர் என்பதை புறநானூறு கூறுகின்றது.
3.
கற்சிறை என்றால் என்ன?
மழைக் காலங்களில் பெருக்கெடுத்து
ஓடி ருவம் மழை வெள்ளம் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து நிறுத்துவதற்காக எட்டாம் நாள்
பிறை நிலவைப் போலக் கட்டப்பட்ட தடுப்பணையைக் கற்சிறை என்றனர்.
4.
குடிமராத்துப் பணி – விளக்கம் தருக.
நீர்நிலைகளுக்கு நீர்
வரத்துக் காய்வாகளும் போக்குக் கால்வாய்களும் முதன்மையானவை. அவற்றைப் பராமரிப்பதே தற்போது
குடிமராத்துப் பணி என்று வழங்கப்படுகின்றது.
5.
நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து திரிகடுகம் கூறும் செய்தி யாது?
தாய்ப்பால் அருந்தாத
குழந்தையும், கல்வி அறிவு அற்றோரும் எப்படி சிறக்க முடியாதோ, அது போல் வாய் நன்கு அமையாத
குளமும் பயன்படாது என்று திரிகடுகம் கூறுகின்றது.
6.
கருங்கை என்றால் என்ன?
பூமிக்கடியில் செல்லும்
சிறிய குழாயைக் கருங்கை என்பர்.
7.
கல்லணை கட்டப்பட்டதன் நோக்கம் என்ன?
வெள்ளப் பாதிப்புகளைத்
தடுப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
8.
காப்புடை கயம் என்றால் என்ன?
நீர் நிலைகளைக் காக்க,
அக்காலத்தில் காவலர் அமர்த்தப்பட்டனர். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட நீர்நிலை காப்புடை
கயம் எனப்பட்டது.
அலகு 2
பாடம் 1 – நிலவியல்
1.
சூரிய மண்டிலம் குறித்து அகநானூற்றின் வரிகளைக் குறிப்பிடுக.
வானம் ஊர்ந்த வயங்கு
ஒளி மண்டிலம் என்று அகநானூறு குறிப்பிடுகின்றது.
2.
ஊழிக்காலம் என்றால் என்ன?
அண்டத்தின் தோற்றத்தைச்
சில சுருக்கினாலும், ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதற்கான காலம் பல இலட்சம் ஆண்டுகள்.
இதனை ஊழிக்காலம் என்றனர்.
3.
ஐம்பெரும் பூதங்கள் யாவை?
நிலம், தீ, நீர், வளி,
விசும்பு ஆகியவை ஐம்பெரும் பூதங்கள்
4.
புவியின் நிலப்பரப்பில் பெரிய மலைகள் நிறைந்துள்ளன என்று கூறிய இலக்கியம் எது?
மதுரைக்காஞ்சி
5.
உலகம் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது என்று கூறும் இலக்கியம் எது?
புறநானூறு
6.
தொல்காப்பியம் கூறும் தமிழகத்தின் நில எல்லைகளைக் குறிப்பிடுக.
வடக்கே வேங்கட மலையும்,
தெற்கே குமரியும், கிழக்கு மேற்காக கடல்களையும் தமிழ் வழங்கும் நிலத்தின் எல்லைகளாக
வரையறுக்கின்றார்.
பாடம் 2 – உலோகவியல்
1.
உலோகவியல் என்றால் என்ன?
உலோகங்கள், உலோகக் கலவைகள்
மற்றும் அவற்றின் செயல்முறைகள் முதலியவற்றை ஆய்வு செய்யும் துறை உலோகவியல் எனப்படுகின்றது.
2.
தனித்த உலோகம் எது?
தங்கம் சூழ்நிலைகளால்
பாதிக்கப்படாத, வேறு வேதிப் பொருட்களுடன் வினை புரியாத தன்மையைக் கொண்டது.
3.
கலப்பு உலோகம் – விளக்கம் தருக.
தனித்த உலோகத்திற்குப்
பிறகு, செப்பு மற்றும் வெள்ளீயத்தைக் கலந்து வெண்கலம் என்ற கலப்பு உலோகம் உருவாக்கப்பட்டது.
4.
பொன் விற்கப்பட்ட கடைத்தெருவை எவ்வாறு அழைத்தனர்?
பொன் விற்கப்பட்ட கடைத்
தெருவைப் பொன்னுடை நியமம் என்றனர்.
5.
உலைக்கலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளைக் குறிப்பிடுக.
துருத்தி, சுட்டுக் கோல்,
குறடு, கூடம் அல்லது சம்மட்டி, பட்டைக்கல் அல்லது உலைக்கல், அரம், மிதிதோல், உலை மூக்கு
போன்ற பல்வேறு கருவிகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன.
பாடம் 3 – வானவியல்
1.
புவியைச் சுற்றியுள்ள வாயுக்களாலான காற்று மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
வளி மண்டலம்
2.
வளிமண்டலத்தின் பிரிவுகள் யாவை?
கீழடுக்கு, படுகையடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு, வெளியடுக்கு ஆகியனவாகும்.
3.
மண்டலம் என்னும் சொல்லே மண்புலம் என்றாயிற்று என்று கூறியவர் யார்?
தேவநேயப் பாவாணர்
4.
மண்டிலம் – விளக்கம் தருக.
சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் கோள்கள் இயங்கி வருவதால் அந்த வட்டப்பாதையைக் குறிக்க மண்டிலம் என்ற சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
5.
எழுத்து எவ்வாறு பிறக்கின்றது?
உந்தியில் இருந்து எழுகின்ற காற்று தலை,
கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்று இடங்களிலும் தங்கி எழுத்துகளாகப் பிறக்கின்றன என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
6.
காற்று வழங்கா வானம் – குறிப்பு வரைக.
பூமியில் இருந்து மேலே நோக்கிச் செல்லச் செல்ல குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே காற்று இல்லை என்ற அறிவியல் உண்மையே காற்று வழங்கா வானம் என்று குறிப்பிடப்படுகின்றது. இதனை,
“வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்” என்று புறநானூறு கூறுகின்றது.
பாடம் 4 – உயிரியல்
1.
உயிரியல் என்றால் என்ன?
உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியல் உயிரியல் எனப்படுகின்றது. இது உயிரினங்களின் மரபு,
வகைப்பாடு, வாழ்வியல், உடற்கூற்றியல், தொழிற்பாடு போன்றவை ஆராயப்படுகின்றன.
2.
மரம்சா மருந்தும் கொள்ளார் – விளக்கம் தருக.
தாவரங்களை மருந்துகளாகப் பயன்டுத்தியவர்கள் தமிழர்கள். வேம்பு, மரா போன்வற்றின் தழைகள் மருந்துகளாகவும் கிருமி நாசினிகளாகவும் பயன்பட்டன. மருந்தாகப் பயன்பட்டாலும் மரத்தை முழுவதுமாக அழித்து அதிலிருந்து மருந்தைப் பெறுதல் கூடாது என்பது தமிழர் கொள்கை. அதையே மரம்சா மருந்தும் கொள்ளார் என்று நற்றிணை கூறுகின்றது.
3.
குறிஞ்சி நிலத்தில் காணப்பட்ட 99 மலர் வகைகளைப் பட்டியலிடும் இலக்கியத்தின் பெயர் என்ன?
குறிஞ்சிப்பாட்டு
4.
சங்க இலக்கியத்தில் சில உயிரினங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
அறிஞர் பி.சாமி.எல்
5.
பறவைகளின் இளமைப் பெயர்களைக் குறிப்பிடுக.
பறவைகள் புள் என்ற சொல்லால் அழைக்கப்பட்டன. பார்ப்பு, பிள்ளை,
பறழ், குட்டி ஆகியவை பறவைகளின் இளமைப் பெயர்கள் ஆகும். பெண் இனப்பறவைகள் பெடை, பேடை, பெட்டை, அளகு என்றும், ஆண் இனப்பறவைகள் சேவல், ஏற்றை என்றும் வழங்கப்பட்டன என்பதைத் தொல்காப்பியம் கூறுகின்றது.
6.
திணைசார் பறவைகள் குறித்து எழுதுக.
·
கிளி, மயில், மலையுறை குருவி,
வங்கா –குறிஞ்சி நிலப் பறவைகள்
·
கானக்கோழி, குயில் தூக்கணாங்குருவி, புறா
– முல்லை நிலப் பறவைகள்
·
காக்கை, கோழி, மனையுறை குருவி
– மருத நிலப் பறவைகள்
·
அன்றில், அன்னம்,
வெண் குருகு, நாரை – நெய்தல் நிலப் பறவைகள்
·
ஆந்தை, வானம்பாடி, குரால்,
கூகை, கழுகு, பருந்து – பாலை நிலப் பறவைகள்
7.
மைனா என்னும் பறவையைச் சங்க இலக்கியங்கள் எவ்வாறு குறிப்பிடுகின்றன?
நாகணாவாய்ப் புள் என்று குறிப்பிடுகின்றன.
8.
ஓசனித்தல் என்றால் என்ன?
பறவைகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி சேர்ந்து செல்வதை ஓசனித்தல் என்று கூறுவர்.
பாடம் 5 – உளவியல்
1. உளவியல் – விளக்கம் தருக.
உள்ளத்தைப் பற்றிய அறிவியலே உளவியல் ஆகும்.
2.
உளவியல் துறையின் முன்னாடியாக் கருதப்படுபவர் யார்?
சிக்மண்ட் பிராய்டு
3.
உளவியலின் வகைகள் யாவை?
பொது உளவியல், உடற்கூற்று உளவியல், சமூக உளவியல், மானிட உளவியல், குழந்தை உளவியல்,நெறிபிறழ் உளவியல், மருத்துவ உளவியல், தொழிலாளர் உளவியல் .
4.
உளவியலின் பருவங்களாக மு.அறம் அவர்கள் கூறுவன யாவை?
குழவிப் பருவம், சிறுகுழந்தைப் பருவம்,
முன் குழந்தைப் பருவம்,
பின் குழந்தைப் பருவம்,
முன் குமரப் பருவம்,
பின் குமரப் பருவம்,
முதிர்ச்சிப் பருவம்
5.
தமிழண்ணல் அவர்கள் தமது ஒப்பியல்க்கிய அறிமுகம் என்ற நூலில் உளவியல் அணுகுமுறைகளை எவ்வாறு பிரித்துள்ளார்? படைப்பாளியின் உளவியல், படைப்பின் உளவியல், படைப்பில் உள்ள பாத்திரங்களின் உளவியல்
6.
சிக்மண்ட் பிராய்டு கூறும் மனதின் மூன்று அடுக்குகள் யாவை?
·
மேல் மனம்
– நிகழ்காலத்தில் விழிப்புடன் இருக்கும்
·
இடை மனம்
– தக்கது இது, தகாத்து இது என்று பரித்து அறியக்கூடிய கவன நிலையில் இருக்கும்
·
ஆழ் மனம்
– மேல், நடு மனப்பதிவுகள் அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு அமைதியான கடல் போல இருக்கும். வேளை வரும்போது வெடித்துக் கிளம்பும்.
7.
மனவெழுச்சி என்றால் என்ன?
உணர்ச்சிகள் மேலாங்கி நிற்கும் நனவு நிலையை மனவெழுச்சி என்பர்.
இவை அவசர நிலைகளிலேயே தோன்றும்.
8.
மனவெழுச்சிகளைத் திறம்பட விளக்கும் தொல்காப்பிய இயலின் பெயரைக் குறிப்பிடுக.
மெய்ப்பாட்டியல்
9.
தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகள் யாவை?
நகை,
அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி,
உவகை ஆகியனவாகும்.
10. உளவியல் அறிஞர்கள் கூறும் உணர்ச்சிகளைக் குறிப்பிடுக.
·
அச்சமும் அச்சம் சார் உணர்ச்சிகளும் – அச்சம், கவலை, பீதி, வெட்கம் போன்றவை
·
சினமும் சினம் சார் உணர்ச்சிகளும் – சினம், கொறமை, வெறுப்பு ஆகியவை
·
அன்பும் அன்பு சார் உணர்ச்சிகளும் – அன்பு, காதல், மகிழ்ச்சி, நகை,
உற்சாகம் போன்றவை
அலகு 3
பாடம் 1 – இடைக்கால இலக்கியங்களில் அறிவியல்
1.
அந்தக்கேணி என்றால் என்ன?
ஆழ்துளைக் கிணற்றை அக்காலத்தில் அந்தக் கேணி என்று அழைத்தனர். பெருங்கதையில் அந்தக் கேணி குறித்த பதிவு காணப்படுகின்றது.
2.
காப்பிய காலத்தில் நீச்சல் குளத்திற்கு வழங்கப்பட்ட பெயர்கள் யாவை?
எந்திரக்கிணறு, எந்திரவாவி, இலவந்திகை
3.
காப்பிய காலத்தில் சுரங்கப்பாதைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? காப்பறை வீதி, பொய்ந்நிலம்
4.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் ஐந்து வகை மணிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
மாணிக்கம், நீலம், புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம்
5.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் வேயா மாடம் தற்போது எவ்வாறு அழைக்கப்டுகின்றது?
மொட்டைமாடி என்று அழைக்கப்படுகின்றது.
6.
அரமியம் என்றால் என்ன?
அரமியம் என்றால் நிலா முற்றம் என்பது பொருள்
7.
முதன் முதலாகச் சூரிய கிரகணம் பற்றிக் கூறும் காப்பியம் எது? சீவகசிந்தாமணி
8.
கோளரங்கம் குறித்துக் கூறும் காப்பியம் எது?
பெருங்கதை
9.
அருந்ததி மீன் குறித்து நம்பிக்கையைக் கூறுக.
கண்பார்வை தெளிவாக உள்ளவர்களுக்கே அருந்த்தி மீன் புலப்படும் என்று மக்களின் பெருங்தையும், பதிற்றுப்பத்தும் கூறுகின்றன
10.
அருந்ததி மீன் குறித்த ஜப்பானியர்களின் நம்பிக்கை யாது?
கண்பார்வை தெளிவாக உள்ளவர்களுக்கே அருந்த்தி மீன் புலப்படும் என்ற நம்பிகைள ஜப்பானியர்களிடமும் உள்ளது. ஜப்பானியத் தொன்மத்தில் இந்த மீன் JUMYUBOSHI என்று சுட்டப்பட்டுள்ளது.
11.
பழந்தமிழகப் பெண்கள் தங்கள் கூந்தலை எவ்வாறு பராமரித்ததாக சீவசிந்தாமணி கூறுகின்றது?
பெண்கள் தங்கள் கூந்தலை வளர்க்க மருத்துவ குணமுடைய பசையையும், எண்ணெயையும் பயன்படுத்தினர். முடி வளர்ச்சிக்காக நெல்லிக்காயைப் பயன்படுத்தினர் என்றும், கூந்தலை அகிற்புகையால் காய வைத்தனர் என்றும் சீவகசிந்தாமணி கூறுகின்றது.
12.
பல் பாதுகாப்பு குறித்து சீவக சிந்தாமணி கூறுவது யாது?
கடுக்காய்ப்பழம் சுட்டுத் தூள் செய்து வறுத்து பற்களின் ஆராக்கியத்தைப் பாதுகாத்தனர் என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது.
பாடம் 2 – சிற்றிலக்கியங்களில் அறிவியல்
1.
கலிலியோ கண்டறிந்த இயற்பியல் அறிவு குறித்து கூறும் சிற்றிலக்கியம் எது?
அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்
2.
இமயமலை ஒவ்வாருநாளும் வளர்கின்றது என்ற அறிவியலைக் கூறும் இலக்கியம் எது?
“வளர்சிமய இமயம் என்ற தொடரால் இமயமலை வளர்கின்றது என்று மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் கூறுகின்றது.
3.
வேது கொடுத்தல் என்றால் என்ன?
புண்களை நெருப்பால் சுட்டுக் குணமாக்கும் மருத்துவத்திற்கு வேது கொடுத்தல் என்று பெயர்.
4.
உடலில் தீக்காயம் பட்டால் வாழை இலையில் கிடத்தும் மருத்துவம் குறித்துக்கூறும் சிற்றிலக்கியம் எது?
திருக்குற்றாலக் குறவஞ்சி
பாடம் 3 – உரை நூல்களில் அறிவியல்
1.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்களைக் குறிப்பிடுக.
இளம்பூணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையர்
2.
நிலமும் பொழுதும் எல்லாச் செயல்களுக்கும் முதன்மையானவை என்று குறிப்பிட்டவர் யார்?
நன்னூலுக்கு உரை எழுதிய மாதவச் சிவஞான முனிவர்
3.
அண்டங்களின் செயல்களைக் குறித்து பதிவு செய்த உரையாசிரியர் யார்?
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
4.
ஞாலத்திகிரி – விளக்கம் தருக.
பூமியைப் போல பல கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை ஏதோ ஒரு கணக்குப்படி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் சுற்றுகின்றன. இப்பேரண்டச் சரங்களை ஞாலத்திகிரி என்று வழங்குகின்றார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
5.
முதுநீர் திரள் என்றால் என்ன?
ஒவ்வொரு அண்டத்திலும் உள்ள பொருள்கள் உருமாறி வட்டங்களாகச் சுற்றுகின்றன. சான்றாக, கடல்நீர் கதிரவன் வெப்பத்தால் ஆவியா மாறுகின்றது. நீராவி பூமிக்கும் உணர்ச் சென்று குளிர்ந்து இறுகி மேகமாக உருவமடைகின்றது. இந்த மேகள் சூல் கொண்டு மழையாகப் பொழிகின்றது. இந்த நீர் ஆறாகப் பாய்ந்து கடலோடு கலக்கின்றது. மீண்டும் சக்கரம் சழல்கின்றது. இதை முதுநீர்த்திரள் என்று குறிக்கின்றார் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
அலகு – 4
பாடம் 1 – இணையம் – அறிமுகம்
1.
இணையத்தின் பயன்பாடுகள் எவ்வாறு அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகக் கலந்து விட்டது என்பதை விளக்குக.
நமக்குத் தேவையான செய்திகளைப் பனுவல் அல்லது உரை, படம், ஒலிக்கோப்பு, நிகழ்படம் போன்ற பல்வேறு வடிவங்களில் பெறுதல், பேருந்து, தொடர்வண்டி, திரைப்படம் என எல்லாவற்றிற்கும் முன்பதிவு செயதல், தேர்வு, தேர்தல் போன்றவற்றின் முடிவுகளைப் பெறுதல், இணையவழிக் கலந்துரையாடல்கள், இணைய வகுப்பறையில் கற்றுக் கொள்ளல், வணிகம் செய்தல், வேலை வாய்ப்புக்குப் பதிவு செய்தல், இணைய வங்கி என இணையத்தின் பயன்பாடு வரையறை செய்ய முடியாத அளவுக்கு அன்றாட வாழ்வின பகுதியாகக் கலந்து விட்டது.
பாடம் 2 – இணையத் தமிழ்க் கல்விக் கழகம்
1.
இணையத் தமிழ்க் கல்விக்கழம் – குறிப்பு வரைக
இணையம் வழியாகத் தமிழ்க்கல்வி பெறுவதற்குத் தமிழ் இணையக் கல்விக் கழகம் வழிவகை செய்கின்றது. இந்நிறுவனம் சான்றிதழ்க்கல்வி, மேற்சான்றிதழ்க்கல்வி, பட்டயம், மேற்பட்டயம், பட்டக்கல்வி ஆகிய படிப்புகளை இணையவழிக் கல்வியாகத் தமிழ்க் கல்வியை வழங்கி வருகின்றது.
2.
இணையத் தமிழ்க் கல்விக் கழகத்தின் படிப்புகள் யாவை?
மழலைக்கல்வி, சான்றிதழ்க்கல்வி, மேற்சான்றிதழ்க் கல்வி, பட்டயம், மேற்பட்டயம், இளங்கலைப்பட்டம் ஆகிய படிப்புகளைக் கொண்டுள்ளது.
3.
இணையத் தமிழ்க் கல்விக் கழகத்தின் சான்றிதழ்க் கல்வியின் தேர்வு முறை குறித்து எழுதுக.
சான்றிதழ்க் கல்வியானது வாய்மொழித்தேர்வு, காட்சித் தேர்வு.
இணையவழித் தேர்வு, எழுத்துத் தேர்வ என்பவை மூலம் நடத்தப்படுகின்றது.
4.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலகத்தில் உள்ள பிரிவுகள் யாவை?
நூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியம், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்றும் பிரிவுகள் உள்ளன.
5.
பயணியர் தமிழ் – குறிப்பு வரைக.
வெளிநாட்டுப் பயணியர் தமிழ்நாட்டில் எளிதாகச் சுற்றி வருவதற்கு உதவும் வகையில் பயணியர் தமிழ் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்களைத் தெரிந்து கொள்ளவும், விடுதிகளில் தங்கவும், விரும்பும் இடங்களுக்குச் சென்று சேரவும் வாடகை வணடியை ஏற்பாடு செய்து கொள்ளவும், கடைகளில் பொருட்களைப் பேரம் பேசி வாங்கவும் வசதியாக இது இடம் பெற்றுள்ளது.
பாடம் 3 – இணைய நூலகம் அல்லது மின் நூலகம்
1.
மின் நூல் என்றால் என்ன?
மின் நூல் என்பது அச்சிடப்பட்ட – அச்சுக் கேற்ற நூலின் மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பாகும்.
2.
மின் நூல்கள் கோப்பு வடிவம் மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மின் நூல், மீயுரை நூல்,
புரட்டும் நூல், மென்னூல், கிண்டில் நுல் என்று அழைக்கப்படுகின்றன.
3.
மின் நூலகங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மின் நூலகமானது மெய்நிகர் நூலகம், எண்ணிம நூலகம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
4.
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் குறித்து எழுதுக.
தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த தன்னார்வ உலகளாவிய முயற்சியே மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டமாகும்.
5.
மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தின் தலைவர்கள் யார் யார்?
முனைவர் கு. கல்யாணசுந்தரம், முனைவர் குமார் மல்லிழகார்ஜூனன்
6.
சென்னை நூலகத்தை உருவாக்கியவர் யார்?
திரு கோ.சந்திரசேகரன்
7.
தமிழ் மரபு அறக்கட்டளை எப்போது தொடங்கப்பட்டது?
2001 ஆம் ஆண்டு உலகு தழுவிய ஓர் இயக்கமாக உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் உலகளாவிய தமிழ் வரலாற்றுத் தொன்மங்களை மின்வடிவில் ஆவணப்படுத்திப் பாதுகாப்பதாகும். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதும், வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்குவதுமாகும்.
பாடம் 4 – செயற்கை நுண்ணறிவியல்
1.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
மனிதனைப் போல நடந்துக் கொள்ளக்கூடிய, மனிதனைப்போல சிந்திக்கக்கூடிய மற்றும் சொந்தமாக முடிவுகளை எடுதக்கும் திறன் கொண்ட அறிவார்ந்த இயந்திரங்களை உருவாக்குவதாகும். இது கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும்.
2.
செயற்கை நுண்ணறிவின் தந்தை யார்?
ஜான் மெக்கார்த்தி
3.
செயற்கை நுண்ணறிவின் வகைகள் யாவை?
குறுகிய ஏஐ, பொது ஏஐ,
வலுவான ஏஐ
4.
செயல்பாட்டின் அடிப்படையில் வகைகளைக் குறிப்பிடுக.
எதிர்வினை இயந்திரங்கள், வரையறுக்கப்பட்ட நினைவகம், மனதின் கோட்பாடு, சுய விழிப்புணர்வு
5.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளைக் கூறுக.
இணைய விளையாட்டுகள், ரோபோட்டிக்ஸ், சுகாதாரம், வேளாண்மை, மின் வணிகம்,
சமூக ஊடகங்கள்