உயர்கல்வி மன்றம் பாடத்திட்டம் - இரண்டாம் ஆண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர்கல்வி மன்றம் பாடத்திட்டம் - இரண்டாம் ஆண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

தனிப்பாடல்

 

தனிப்பாடல்

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிப்பாடலுக்குத் தனிச்சிறப்பு உண்டு. பல்வேறு புவலர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுத் தனிப்பாடல் திரட்டு என்று பெயர் பெற்றுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள சில புலவர்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.

ஔவையார்

            தமிழ் இலக்கியங்களில் ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள் காணப்படுகின்றனர். சங்காலத்தில், இடைக்காலத்தில், பிற்காலத்தில் என ஒளவையார் பெயரில் இலக்கியங்கள் இருக்கின்றன. தனிப்பாடல் திரட்டில் இவர் பாடியதாக எண்பது பாடல்கள் காணப்படுகின்றன.

காளமேகப் புலவர்

கும்பகோணத்தை அடுத்த நந்திபுரத்தில் பிறந்தவர். இயற்பெயர் வரதன். காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு. இறைவியின் அருளால் காளமேகம் போன்று கவிதைகள் வழங்கியதால் காளமேகப் புலவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆசு கவி பாடுவதில் (நினைத்தவுடன் பாடுவது) வல்லவர். வசை பாடுவதிலும் வல்லவர். அதனால், “ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்” என்று புகழப்பட்டவர். இவருடைய பாடல்கள் நகைச்சுவை மிகுந்தவை. இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சரசுவதி மாலை, திருவானைக்கா உலா, சித்திர மடல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இரட்டைப் புலவர்கள்

இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற இரட்டையர்களே இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் ஒருவர் முடவர், மற்றொருவர் பார்வை அற்றவர். காலம் கி.பி15ஆம் நூற்றாண்டு. “கண்பாயக் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்று போற்றப்படுகின்றனர். பார்வையற்றவரின் தோளில் முடவர் அமர்ந்து கொண்டு வழிகாட்ட இருவரும் பயணம் செய்வர். பாடல்களில் முதல் இரண்டு அடியை ஒருவர் பாடப் பின்னிரண்டடியை மற்றொருவர் பாடி முடிப்பது இவர்களின் வழக்கமாகும்.  தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகமும், ஏகாம்பரநாதர் உலா, கச்சிக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

அந்தகக் கவி வீரராகவ முதலியார்

தொண்டை நாட்டில் பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். காலம் கி.பி17ஆம் நூற்றாண்டு. வசை பாடுவதில் வல்லவர். பார்வையற்றவர். சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்ற மாலை, திருவாரூர் உலா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

சத்தி முத்தப் புலவர்

            கும்பகோணத்தை அடுத்த சத்திமுத்தம் என்ற ஊரில் பிறந்தவர். வறுமையில் வாடிய இப்புலவர் பாண்டிய மன்னன் மாறன் வழுதியிடம் பரிசில் பெறச் சென்றார். மழையில் மாட்டிக் கொண்டு ஒரு குட்டிச் சுவரின் அருகில் ஒதுங்கியிருக்கும்போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டார். தன் மனைவிக்கு நாரையைத் தூதாக அனுப்புவதுபோல் “நாராய் நாராய் செங்கால் நாராய்” என்ற பாடலைப் பாடினார். நகர சோதனையில் ஈடுபட்டிருந்த மாறன் வழுதி இப்பாடலின் உவமைக்கு மகிழ்ந்து, அப்புலவனின் வறுமை தீர்த்ததாகக் கூறப்படுகின்றது.

           

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

 

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கத்தால் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.  மேடைத்தமிழ், இதழியல் தமிழ், திரைத்தமிழ், அறிவியல் தமிழ், ஆட்சித்தமிழ் உள்ளிட்ட என்ற புதிய இலக்கியச் சிந்தனைகள் உருப்பெற்றன.

திராவிட இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள்

திராவிட இயக்கத்தை வளர்த்தெடுக்க கவிதைகள், உரைகள், மேடைப் பேச்சுகள், சிறுகதைகள், நாடகங்கள் முதலிய இலக்கிய வகைகள் பயன்பட்டன. அவ்வகையில் பேரறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, உவமைக் கவிஞர் சுரதா, நாஞ்சில்நாதன், கண்ணதாசன், வாணிதாசன், முடியரசன், கவிஞர் தமிழ்ஒளி, அப்துல் ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், நிர்மலா சுரேஷ், கவிஞர் கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் சல்மா உள்ளிட்ட பலர் திராவிட இயக்கத்தின் கருத்துகளைத் தங்கள் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தினர். அவர்களுள் குறிப்பிடத்தக்க சான்றோர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் குறித்து பின்வருமாறு காணலாம்.

பெரியாரும் மொழிச் சீர்த்திருத்தமும்.

பெரியார் என்று மதிப்புடன் அழைக்கப்படுகின்ற ஈ.வெ.ராமசாமி அவர்களால் தமிழ் எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. உயிர் எழுத்தான “ஐ“ என்பதை “அய்“ என்றும், “ஔ“ என்பதை “அவ்“ என்றும் எழுதுமாறு வலியுறுத்தினார். சான்றாக, “ஐயா“ என்பதை “அய்யா“ என்றும், “ஔவை“ என்பதை “அவ்வை“ என்றும் எழுதி, அவ்வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். மேலும், மெய் எழுத்துகளில் சில உயிர்மெய்க் குறியீடுகளான ஐ, உ, ஊ, ஒ, ஓ என்ற எழுத்துகளுடன் கூடி வருகின்ற எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றும், அதன் மூலம் தமிழ்க் கற்பதும் தட்டச்சு செய்வதும் எளிதாகும் என்றும் அறிவித்து, அதற்கான வரி வடிவங்களைத் தானே உருவாக்கி தன்னுடைய அச்சகத்திலும் பயன்படுத்தினார். இவருடைய இச்சீர்த்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு 1978ஆம் ஆண்டு அதனை நடைமுறைப்படுத்தியது. மேலும், பெரியாரின் சிந்தனைகள் பல இதழ்களில் தலையங்கங்களாக இடம் பெற்றுள்ளன. மேடையிலும், தலையங்கக் கட்டுரையில் அவர் பயன்படுத்திய எளிய தமிழ், படிப்போரைக் கவர்ந்தது.

மேடைத்தமிழும் பேரறிஞர் அண்ணாவும்

அண்ணாவின் மேடைப் பேச்சுகள் இலக்கியமாக மதிக்கப்படுகின்றன. அவருடைய உரைகள் கவிதை நடையில், இலக்கியச் செழுமை மிக்கதாக அமைந்திருப்பது சிறப்பு. இன்று மேடைப் பேச்சு ஒரு கலையாக மதிக்கப்படுவதற்கு அண்ணாவின் உரைகளும் ஒரு காரணமாகும். மேடைப் பேச்சில் தனக்கென்று ஓரு புதிய வழியை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மனதில் சீர்த்திருத்த கருத்துகளை விதைத்தார். வேலைக்காரி, ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம் உள்ளிட்ட புரட்சி மிகுந்த நாடகங்களையும், செவ்வாழை, சொர்க்கத்தில் நரகம், பிடி சாம்பல் முதலிய சிறுகதைகளையும், இரங்கூன் ராதா, பார்வதி பி.ஏ முதலிய நாவல்களையும் எழுதித் தமிழுலகிற்குப் புத்துயில் அளித்தார். “தம்பிக்கு“ என்ற பெயரில் அவர் எழுதிய கடிதங்கள் சமுதாயத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையை வௌிப்படுத்துகின்றன. திரைப்படங்களில் இவரது உரையாடல் அடுக்கு மொழியில் அமைந்து மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதனால் “அடுக்கு மாழி அண்ணா” என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

திரைத்தமிழும் கலைஞரும்

            தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பல்வேறு படைப்புகள் மூலம் தொண்டாற்றியவர் கலைஞர் கருணாநிதி. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் முதலிய நாவல்கள் அவரது சமத்துவ சிந்தனைகளை வெளிக்காட்டின. விஷம் இனிது, சித்தார்த்தன் சிலை உள்ளிட்ட சிறுகதைகள் சமய மறுப்புக் கொள்கைகளை வலியுறுத்தின. இவருடைய “அணில் குஞ்சு” என்ற சிறுகதை மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. நாடகத்துறையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட கலைஞர் நாடகத்தைப் படைப்தோடன்றி நடிக்கவும் செய்தார். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை மையமாகக் கொண்டு மந்திரிகுமாரி என்ற நாடகத்தைப் படைத்தார். பிற்காலத்தில் இது திரைப்படமாகவம் வெளிவந்தது. உதயசூரியன், நானே அறிவாளி, புனித ராஜ்யம் உள்ளிட்ட நாடகங்கள் அரசியல் பிரச்சார நாடகங்களாக வெளிவந்தன. இவருடைய நாடகங்கள் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும் அங்கத வகையில் அமைந்தவை. திரைத்துறையில் வசனங்களின் மூலம் புதிய வரலாறு படைத்தவர் கலைஞர். மனோகரா, மந்திரிகுமாரி, பூம்புகார், பராசக்தி முதலிய திரைப்படங்களின் வசனங்கள் மாறுபட்ட கோணத்தில் தமிழை அடையாளம் காட்டின. அவருடைய “குறளோவியம்“ மிகச் சிறந்த படைப்பாகப் போற்றப்படுகின்றது. எளிய முறையில் பாமர மக்களும் படித்து இன்புற, “தொல்காப்பியப் பூங்கா“ என்ற நூலை எமுதியுள்ளார்.

மூவரின் தமிழ் மாநாடுகள்

            பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய மூவரும் தங்களின் படைப்பால் தமிழுக்குத் தொண்டு செய்ததோடு, பல்வேறு மாநாடுகளை நடத்தித் தமிழ் மொழியை உலகரங்கிற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்களாகப் போற்றப்படுகின்றனர். பெரியாரின் திருக்குறள் மாநாடு, அறிஞர் அண்ணாவின் உலகத்தமிழ் மாநாடு, கலைஞரின் செம்மொழி மாநாடு ஆகியவை தமிழின் மொழி வளமையை, இலக்கணச் சிறப்பை, இலக்கியச் செழுமையை உலக அறிஞர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. குறிப்பாக, இன்றைய கணினி உலகில் தமிழை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் “தமிழ் இணையம் 1999” என்ற பெயரில் மாநாட்டை நடத்திய பெருமை கலைஞரையே சாரும். கணினித்தமிழை வளர்த்தெடுக்கும் நோக்கில் “தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய பெருமையும் கலைஞருக்கு உண்டு. இதனால் அறிவியல் துறையில் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 

சனி, 9 மார்ச், 2024

தம்பிக்கு - மு.வரதராசனார்

 

தம்பிக்கு - மு.வரதராசனார்

முதல் கடிதம்

முன்னுரை

            டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம்பிக்கு என்ற நூலில், வளவன் என்னும் அண்ணன் தன் தம்பி எழிலுக்கு எழுதுவதுபோல பல கடிதங்களை எழுதியுள்ளார். அக்கடிதங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் இளைஞர்கள் எவ்வாறு காக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. முதல் கடிதத்தில் அவர் இளைஞர்களுக்குக் கூறிய அறிவுரைகளைப் பின்வருமாறு காணலாம்.

நன்மை - வன்மை

 நன்மை, வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு. நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் வாழ்க்கையில் துன்புற்று வீழ்கின்றர். வல்லமை மட்டும் பெற்றவர்கள் எதிர்பாராத வகையில் அழிந்து போகின்றனர். இதற்கு நாடு, வீடு எதுவும் விதிவிலக்கல்ல. அதன்படி தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனி வல்லவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உடல் - உள்ளம்

வாழ்க்கையில் ஒன்றை மட்டும் போற்றுகின்றவன் வெற்றி பெறுவதில்லை. உடலை மட்டும் போற்றி வாழ்ந்தால், உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்தி அழிக்கின்றது. உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றுகின்றவனுக்கு, உடல் பல நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து, அவனுடைய உள்ளத்தின் அமைதியைக் கெடுத்து அழிக்கின்றது. எனவே, உடல், உள்ளம் இரண்டையும் வலிமையாகவும், தூய்மையாகவும் காப்பதே கடமையாகும்.

அறநெறி – பொருள்நெறி

வாழ்க்கையில் அறநெறியும் வேண்டும், பொருள் நெறியும் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். அறத்தை நினைத்து பொருளை மறக்கும்படியாகவோ, பொருளைப் போற்றி அறத்தை மறக்கும்படியாகவோ அவர் கூறவில்லை. வாழ்க்கையின் பல பகுதிகளைப் போற்றி வாழ அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்பது வள்ளுவர் கருத்து. திருக்குறளைப் பெற்ற நாம், திருவள்ளுவரையும் போற்றவில்லை. திருக்குறளையும் போற்றவில்லை. போற்றினால் நம் வாழ்வு வளம் பெறும்.

தமிழ்மொழி – வன்மை மொழி

நல்ல மொழியான தமிழை வன்மை பொருந்திய மொழியாக நாம் ஆக்கவில்லை. தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு அளிக்கவில்லை. நீதிமன்றங்களில் உரிமை தரவில்லை. ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கவில்லை. வல்லமை இல்லாத நன்மை என்றும் வாழாது. நல்ல இசை தந்த யாழ் என்னும் இசைக்கருவி புறக்கணிக்கப்பட்டு நாளடைவில் மக்கள் மனதில் இருந்து நீங்கிவிட்டது. தற்போது தமிழ் மொழிக்கும் அதே நிலைதான் இருக்கின்றது.

பொதுமக்கள் - களிமண்

பொதுமக்களின்  விருப்பம்போலவே ஆட்சி நடக்கின்றது என்று கூறுவது தவறு. காரணம் பொதுமக்கள் போரை விரும்புவதில்லை. அணுகுண்டை விரும்பவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தை, வறுமையை விரும்பவில்லை. தங்களின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் எண்ணித் தங்கள் தேவையை உணரத் தெரியாத களிமண்ணாக பரந்து விரிந்து இருக்கின்றனர். அதனால் யார் யாரோ அவர்களைப் பிசைந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவங்களைச் செய்து கொள்கின்றனர்.

கடமை – மேடைப் பேச்சு

களிமண் பிசைகின்றவர்களின் கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றி கவலைப்படுவதுண்டா? இல்லை. அவர்களை மாற்றுவதற்காக, நாம் ஏதேனும் செய்தோமா? அதுவும் இல்லை. ஒன்றும் செய்யாமல் தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்து விடும் என்று எண்ணிக் கொண்டு காலம் கழிப்பது குற்றம். மேடையில் வீறு கொண்டு பேசுவதைச் சற்று நிறுத்திவிட்டால் இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு உண்டாகும். மேடையின் மகிழ்ச்சி கடமையை மறக்கச் செய்கின்றது. “இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக” என்று கூறிய வள்ளுவரை எண்ணிப் பார்க்க வேண்டும்.

முடிவுரை

இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. ஆனால் தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு என்று இன்றைய இளைஞர்களுக்கு அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

இரண்டாம் கடிதம்

முன்னுரை

மேடைப்பேச்சு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நம்மை சோம்பேறிகளாக்குகின்றது என்பது ஆசிரியரின் கூற்று. ஆகையால் உணரச்சிக் கொந்தளிப்பால் வீரமான வசனங்களைப் பேசுவது வீணான காரியம் என்பதை இக்கடிதத்தின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார் மு.வரதராசனார்.

வீண் கனவு அல்ல

            “திருக்குறள் ஓதியே திருமணம் நடைபெற வேண்டும். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்மறைகள் ஓத வேண்டும். அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆளுநர் தமிழில் கையாப்பம் இட வேண்டும்“ என்ற இவை யாவும் வீண் கனவு என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன்தான் இவற்றை வீண் கனவு என்று குறிப்பிடுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது, இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறுக்கிடுவானானால் அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.

தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; தமிழரின் கடமை. கோயில்களில் தமிழ் மறை ஓதுவது கனவு அல்ல; அவற்றின் பெருமை காத்த சான்றோர்களுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கும் கடமை. அதிகாரிகளும், ஆளுநரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்பது கனவு அல்ல; வங்காளத்திற்குத் தொண்டு செய்ய சென்றபோது, அந்த நாட்டு மொழியில் கையெழுத்திட வேண்டும் என்று வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் நெறி.

தமிழரின் குறை

பிறருடைய சொல்லுக்கு மயங்குவது தமிழரின் மிகப் பெருங் குறையாக இருக்கின்றது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டு, தான் உணர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்றுகின்றனர். தமிழர் நெஞ்சம், உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டு வந்தது. அதனால் சொல்கின்றவர் யார்? உண்மையாக சொல்கிறாரா? நம்மை ஏமாற்றச் சொல்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், அந்த கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொடங்கி விடுவர்.  விளைவு “புறமுதுகு காட்டாத தமிழர்களை இதோ என் சொல்லால் வீழ்த்தி விட்டேன். ஒற்றுமையாக இருந்தவர்களைப் பிரித்து விட்டேன். இனி, தமிழர்களே தமிழர்களை அழித்துக் கொள்வார்கள். நமக்குக் கவலை இல்லை” என்று பகைவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். வாய்ச்சொல் நேர்மையானதாக இருக்கலாம். அதைக் கொண்டு ஒருவரை நம்பிவிடக்கூடாது. அவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகே நம்ப வேண்டும் என்று வள்ளுவரும் குறிப்பிடுகின்றார்.

மொழிப்பற்று

            மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும் நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள்.  இவற்றை எல்லாம் பொய் என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள். நாட்டுப் பற்றையும், இனப்பற்றையும், பொருட்பற்றையும் வல்லரசுகள் முதலில் கைவிட்டால் உலகம் ஒரு குடும்பமாக வாழும் குறுகிய நாட்டுப் பற்று அங்கே ஒழிந்தால், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொதுப் பாடத்தை வாழ்ந்து காட்டத் தொடங்கிவிடுவான் தமிழன். எனவே, தமிழன் மற்றவர் சொல் கேட்கும் பேதை ஆகிவிடக்கூடாது. உலகம் ஒரு குடும்பமாய் அன்பாய் வாழக் கற்றுக் கொள்ளும் வரையில் தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும். தமிழர்களைக் கடமைப்பற்று உடைய செயல் வீரர்களாக ஆக்க வேண்டும்.

முடிவுரை

            இன்று தமிழர்க்கு வேண்டியது அன்றாட கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே. மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்ட முனைவதே சிறப்பு என்று அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

 

 

 

 

 

 

 

திங்கள், 29 ஜனவரி, 2024

அந்தகக்கவி வீரராகவ முதலியார் - இம்பர்வான் எல்லை

 

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

இராமன் பரிசளித்த யானையைப் புகழ்தல்

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி

வம்பதாம் களபமென்றேன், பூசுமென்றாள்

மாதங்கம் என்றேன், யாம் வாழ்ந்தேம் என்றாள்

பம்புசீர் வேழம் என்றேன், தின்னு மென்றாள்

பகடென்றேன், உழுமென்றாள் பழனந் தன்னை

கம்பமா என்றேன், நல்களியாம் என்றாள்

கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே

விளக்கம்

பாடினி என்னும் பாடல் பாடும் பெண், அரசர் வீடுகளில் பாடும் பாணனைப் பார்த்து, “இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும் புகழ் பெற்ற இராமன் என்ற வள்ளலைப் பாடி என்ன பரிசில் கொண்டு வந்தாய்?” என்று வினவினாள். அதற்குப் பாணன் பதில் கூறத் தொடங்கினான்.

  • பாணன் களபம் (மும்மதம் கொண்ட யானைக் கன்று) என்று கூற, அவர் மனைவி அதனை சந்தனம் என்று எண்ணி, உடலில் பூசிக் கொள்ளுங்கள் என்றாள். 
  • மாதங்கம் (சிறப்பினைத் தரும் பொன்) என்று கூற, மிகுதியான பொன் என்று புரிந்து கொண்டு, நாம் எல்லோரும் புகழும் சிறந்த வாழ்க்கையினை அடைந்தோம் என்றாள். 
  • மிக்க புகழுடைய வேழம் என்று கூற, அவள் அதை கரும்பு என்று எண்ணி சாப்பிடுங்கள் என்றாள். 
  • பகடு என்று கூற, அவள் அதை மாடு என்று நினைத்து வயலை உழும் என்றாள். 
  • இறுதியில் கம்பமா என்றுரைக்க, அவள் கம்பு தானியத்தின் மாவு என்று எண்ணி நல்ல களியாகச் செய்யலாம் என்றாள். 
  • புலவர் பொறுமையிழந்து தான் கொண்டு வந்தது கைம்மா என்று கூற, கொண்டு வந்த பரிசில் யானை என்பதை உணர்ந்து, நம் வயிற்றுக்கு உணவில்லாத நிலையில் யானைக்கு எவ்வாறு உணவிடுவது என்று வீணாகக் கலங்கினாள்.
  • இப்பாடலில் யானைக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு பெயர்களைப் பற்றி அறிய முடிகின்றது.

வியாழன், 4 ஜனவரி, 2024

கலிங்கத்துப் பரணி

 

கலிங்கத்துப் பரணி

பாடல் எண் 1

விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகம்மலரும் மேலோர் போலப்

பருந்தினமுங் கழுகினமும் தாமே உண்ணப்

பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின். (478)

விளக்கம்

விருந்தினர்களும், ஏழைகளும் தொடர்ந்து வந்து உணவு உண்பதைக் கண்ட மேன்மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். அதுபோல பருந்துக் கூட்டமும், கழுகுக் கூட்டமும் தம் உடலைக் கொத்தித் தின்பதைக் கண்டு இறந்து கிடக்கும் வீரர்களின் திருமுகங்கள், தாமரை மலர்போல மகிழ்ச்சியால் மலர்ந்திருப்பதைக் காணுங்கள்.

பாடல் எண் 2

சாம் அளவும் பிறர்க்கு உதவா தவரை நச்சிச்

சாருநர்போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி

போம் அளவும் அவர் அருகே இருந்து விட்டுப்

போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின். (479)

விளக்கம்

பிறர்க்கு எதையும் கொடுத்து உதவாதவர் இறக்கும் வரையில் அவரைச் சுற்றிக் காத்திருந்து, அவர் இறந்த பின்பு அவருடைய பொருள்களைக் கவர்ந்து செல்லும் பேதைகளைப் போல, வீரர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்கள் அருகிலேயே இருந்து விட்டு, உயிர் போன பின்பும் கூட அவர்களை விட்டு அகலாமல் இருக்கின்ற நரிக்கூட்டத்தைப் பாருங்கள்.

பாடல் எண் 3

மாமழைபோல் பொழிகின்ற தான வாரி

மறித்துவிழும் கடகளிற்றை வெறுத்து வானோர்

பூமழைபோல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு

பொருட்பெண்டிர் போன்றமையும் காண்மின் காண்மின். (480)

விளக்கம்

யானைகள் உயிருடன் இருந்தவரை, அதன் மதநீரை உண்ட வண்டுகள் மதயானைகள் இறந்ததும், அவற்றை வெறுத்து ஒதுக்கிவிட்டு, வானுலகத்தவர் மன்னன் பெற்ற வெற்றி கண்டு பூ மழை பொழிய, அந்தப் பூக்களில் உள்ள தேனை உண்ண வண்டுகள் எல்லாம் மேலே பறந்து சென்று விட்டன. இது பொருள் உள்ளவரை ஒருவருடன் கூடி இருந்து விட்டு அவன் பொருள் எல்லாம் தீர்ந்தவுடன் அவனை விட்டு நீங்கி வேறு ஒருவனைத் தேடி அடையும் விலைமகளிரைப் போன்றது. அதையும் காணுங்கள்.

பாடல் 4

சாய்ந்துவிழுங் கடகளிற்றி னுடனே சாய்ந்து

தடங்குருதி மிசைப்படியுங் கொடிகள் தங்கள்

காந்தருடன் கனல் அமளி தன்மேல் வைகும்

கற்புடைமாதரை த்தல் காண்மின் காண்மின்.(481)

விளக்கம்

போர்க்களத்தில் உயிர் நீத்து விழுந்து கிடக்கும் மத யானைகளுடன், மன்னர்களின் கொடிகள் பிணைந்து கிடக்கின்றன. இக்காட்சி உயிர் நீங்கிய தங்கள் கணவர்களுடன் நெருப்பில் உடன்கட்டை ஏறிய பெண்கள் போல் இருக்கிறது. அதையும் காணுங்கள்

பாடல் 5

ம் கணவருடன் தாமும் போக என்றே

சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்

ம் கணவர் கிடந்த ம் எங்கே ன்று என்று

டாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்.(482)

விளக்கம்

கற்புடைய மகளிர் போரில் இறந்துவிட்ட தங்கள் கணவருடன் தாமும் வீர சொர்க்கம் போக வேண்டும் என்று எண்ணி, போர்க்களம் முழுவதும் தங்கள் கணவர் உடலைத் தம் கைகளால் தேடவித் தேடுவர். தேடியும் காணா முடியாத நிலையில் பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேயிடம், எம் கணவர் உடல் கிடக்கும் இடம் எங்கே என்று  கேட்பதைக் காணுங்கள்.