இரண்டாமாண்டு மூன்றாம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டாமாண்டு மூன்றாம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஜூலை, 2020

கும்பகருணன் வதைப்படலம் - பாடலும் விளக்கமும்

கும்பகருணன் வதைப்படலம்

பாடலும் விளக்கமும்

கும்பகருணன் வதைப்படலத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்ற 62 பாடல்களே பாடமாக வைக்கப்பட்டுள்ளன. பாடல்களையும், பாடல்களின் விளக்கங்களையும் பின்வருமாறு காணலாம்.


இராவணன் தூதர்களுக்கு இட்ட கட்டளை

பாடல் எண் -1

'நன்று இது கருமம்' என்னா, 'நம்பியை நணுக ஓடிச்

சென்று இவண் தருதிர்' என்றான்; என்றலும், நால்வர் சென்றார்;

தென் திசைக் கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன,

குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மாக் கோயில் புக்கார்.       

விளக்கம்

கும்பகருணனைப் போருக்கு அனுப்புவதே சிறந்த செயல் என்று கூறிய இராவணன், தன் தூதர்களிடம், “நீங்கள் ஓடிச் சென்று கும்பகருணனை இங்கே அழைத்து வாருங்கள்என்று கட்டளையிட்டான். உடனே தூதர் நால்வர், குன்றைக் காட்டிலும் உயர்ந்த தோளை உடைய கும்பகருணனின் அரண்மனைக்குள் நுழைந்தனர்.


இரு கையாலும், இரும்புத் தண்டாலும் எழுப்பினர்

பாடல் எண் - 2

கிங்கரர் நால்வர் சென்று, அக் கிரி அனான் கிடந்த கோயில்

மங்குல் தோய் வாயில் சார்ந்து, 'மன்ன! நீ உணர்தி' என்ன,

 தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க, பின்னும்

வெங்கணான் துயில்கின்றானை வெகுளியால் இனைய சொன்னார்:        

விளக்கம்

தூதர்கள் நால்வரும் அரண்மனையின் வாயிலை அடைந்து, “அரசனே நீ விழித்துக் கொள்என்று கூறி கையில் உள்ள இரும்புத் தண்டினால் அவனுடைய தலையிலும் காதிலும் தாக்கினர். கும்பகருணன் எழுந்திருக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட தூதர்கள் சினம் கொண்டு பின்வரும் சொற்களால் அவனை எழுப்ப முயற்சித்தனர்.


தூதர்கள் கூற்றும் இராவணன் செயலும்

பாடல் - 3

'உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்

இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!

கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,

உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்'!   

விளக்கம்

“உறங்கிக் கொண்டிருக்கும் கும்பகருணனே!  உங்களுடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்று தாழ்வடையத் தொடங்கி விட்டது. அதைக் காண எழுந்திரு. ஆயுதத்தைக் தாங்கியவாறு காற்றாடி போல திரிகின்ற கால தூதர்களின் கையிலே உறங்கு! உறங்கு! இனிப் படுத்து உறங்கு!” என மீண்டும் அசைத்து அசைத்து அவனை எழுப்பினர். அப்போதும் அவன் எழுந்திருக்கவில்லை.


கும்பகருணனைத் துயிலெழுப்பல்

பாடல் எண் - 4

என்று சொல்ல, அன்னவன் எழுந்திராமை கண்டு போய்,

'மன்றல் தங்கு மாலை மார்ப! வன் துயில் எழுப்பலம்'

அன்று, 'கொள்கை கேண்மின்' என்று மாவொடு ஆளி ஏவினான்,

'ஒன்றன்மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர்.'

விளக்கம்

கும்பகருணன் எழுந்திராமை கண்டு பணியாளர்கள் இராவணனிடம் சென்றுமணம் வீசும் மலர்மாலை அணிந்தவனே! கும்பகருணனைக் கடுந்தூக்கத்தில் இருந்து எழுப்ப முடியவில்லைஎன்று முறையிட்டனர். அப்போது இராவணன்யானை, குதிரை, யாளி ஆகியவற்றில் ஒவ்வொன்றையும் ஆயிரக் கணக்கில் செலுத்தி அவனை மிதிக்கச் செய்து எழுப்புங்கள்என்று கூறி அவ்விலங்குகளை அவர்களுடன் அனுப்பினான்.


பாடல் எண் - 5

என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்,

வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி,

நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப,

பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான்.  

விளக்கம்

இராவணன் கூறியபடி விலங்குகளை அவன் மீது ஏவினர். பலன் இல்லாமல் போகவே, ஆயிரம் இராக்கதர்கள் உறங்குகின்ற கும்பகருணனின் அருகே சென்று, அவனுடைய இரண்டு கன்னங்களிலும் நீண்ட உலக்கைகளைக் கொண்டு தாக்கினர். அதனால் கும்பகருணன் இறந்தவன் உயிர் பெற்று எழுந்ததைப் போல தான் தூங்கும் இடத்தை விட்டுப் புரண்டு எழுந்தான்.


பாடல் எண் – 6

மூவகை உலகும் உட்க, முரண் திசைப் பணைக் கை யானை

தாவரும் திசையின் நின்று சலித்திட, கதிரும் உட்க,

பூவுளான், புணரி மேலான், பொருப்பினான், முதல்வர் ஆய

யாவரும் துணுக்குற்று ஏங்க, எளிதினின் எழுந்தான், வீரன். 

விளக்கம்

அவன் எழுந்தபோது மூவகையான உலகங்கள் அதிர்ந்தன. யானைகள் தங்கள் திசைகளிலிருந்து நிலை பெயர்ந்தன. சூரியன் அச்சம் கொண்டது. பிரமன், திருமால், சிவபெருமான் என யாவரும் நடுக்கமடைந்தனர். இவ்வாறு அனைத்தும் அஞ்சுகின்ற வண்ணம் கும்பகருணன் என்னும் வீரன்  எழுந்தான்.


இராவணன் கும்பகருணன் சந்திப்பு

பாடல் எண் - 7

'கூயினன் நும் முன்' என்று அவர் கூறலும்,

போயினன், நகர் பொம்மென்று இரைத்து எழ;

வாயில் வல்லை நுழைந்து, மதி தொடும்

கோயில் எய்தினன், குன்று அன கொள்கையான்.      

விளக்கம்

இராவணன் அனுப்பிய பணியாளர்கள், “உன் அண்ணன் உன்னை அழைத்து வரக் கூறினான்என்று கூறியவுடன், மலை போன்ற தோற்றம் பெற்றவனான கும்பகருணன் நகரம் முழுவதும்பொம்என ஆரவாரம் உண்டாகும்படிப் புறப்பட்டுச் சென்று இராவணனின் அரண்மனையை அடைந்தான்.


பாடல் எண் - 8.

நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து

அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்

கொலை கிடந்த வேல் கும்பகருணன், ஓர்

மலை கிடந்தது போல, வணங்கினான்.  

விளக்கம்

உயர்ந்த மதில்களையும், பல கோபுரங்களையும் உடைய, கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு மன்னனாக விளங்கும் இராவணனை, நிற்கும் ஒரு மலை நிலத்தில் படுத்தது போல பூமியில் விழுந்து வணங்கினான் கும்பகருணன்.


 உணவு அளித்துப் போர்க்கோலம் செய்தல்

பாடல் எண் - 9

வன் துணைப் பெருந் தம்பி வணங்கலும்,

தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்-

நின்ற குன்று ஒன்று, நீள் நெடுங் காலொடும்

சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான்.  

விளக்கம்

தன்னை வணங்கிய தன் தம்பியை, நிலை பெற்ற மலை ஒன்று மிக நீண்ட கால்களுடன் நடந்து வந்து. மற்றொரு மலையைத் தழுவிக் கொண்டது போல. தன் தோளினால், இறுகத் தழுவிக் கொண்டான்.


பாடல் எண் – 10

உடன் இருத்தி, உதிரத்தொடு ஒள் நறைக்

குடன் நிரைத்தவை ஊட்டி, தசைக் கொளீஇ

கடல் நுரைத் துகில் சுற்றி, கதிர்க் குழாம்

புரை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான்.    

விளக்கம்

இராவணன் கும்பகருணனைத் தன்னுடன் உட்கார வைத்துக் கொண்டு, இரத்தத்துடன் கள்ளையும், மாமிசத்தையும் புசிக்கக் கொடுத்தான். வெண்பட்டாடையை உடுத்தச் செய்தான். பல நவமணிகளை அணிவித்தான்.


கும்பகருணன் - இராவணன் உரையாடல்

பாடல் எண் -11

அன்ன காலையின், 'ஆயத்தம் யாவையும்

என்ன காரணத்தால்?' என்று இயம்பினான்-

மின்னின் அன்ன புருவமும், விண்ணினைத்

துன்னு தோளும், இடம் துடியாநின்றான்.

விளக்கம்

மின்னலைப் போன்ற புருவமும், வானத்தை நெருங்கிய தோளும், இடப் புறம் துடிக்கப் பெற்றவனாக நின்ற கும்பகருணன், “போருக்கு ஆயத்தமாகின்ற இச்செயல் எல்லாம் ஏன்? என்ன காரணம்?” என்று இராவணனிடம் கேட்டான். 

 

பாடல் எண் – 12

'வானரப் பெருந் தானையர், மானிடர்,

கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும்

ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர்

போனகத் தொழில் முற்றுதி, போய்' என்றான்.

விளக்கம்

மனிதர் இருவர் பெரிய குரங்குப் படையை உடையவராய் நமது நகர்ப்புறத்தைச் சூழ்ந்து கொண்டனர். இதுவரை நடந்த போரில் அவர்களே வெற்றியும் பெற்றனர். நீ சென்று அவர்களின் உயிரைப் பறிப்பாயாகஎன்றான் இராவணன்.


கும்பகருணனின் அறிவுரை

பாடல் எண் – 13

'ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச்

சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?

வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ்

போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே? 

விளக்கம்

அதைக் கேட்ட கும்பகருணன் மிகுந்த அதிர்ச்சி கொண்டவனாய், ‘கொடிய போர் தொடங்கி விட்டதா? சீதையின் சிறைத்துன்பம் இன்னும் தீரவில்லையா? உனது உயர்ந்த புகழ் அழிந்து விட்டதா? அரக்கர் அழியும் காலம் வந்து விட்டதா?


பாடல் எண் – 14

'கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்

சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்,

திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை

விட்டிலையோ? இது விதியின் வண்ணமே!     

விளக்கம்

போர் நெருங்கி விட்டதா? அப்போர் சீதையின் காரணமாக ஏற்பட்டதா? கற்பினையே செல்வமாகக் கொண்ட சீதையை நீ இன்னும் விட்டு விடவில்லையா? இச்செயல் உன் விதியின் வலிமையால் நடப்பதே.


பாடல் எண் - 15

கொடுத்தனை, இந்திரற்கு உலகும் கொற்றமும்;

கெடுத்தனை, நின் பெருங் கிளையும்; நின்னையும்

படுத்தனை; பல வகை அமரர்தங்களை

விடுத்தனை; வேரு இனி வீடும் இல்லையால்.  

விளக்கம்

உனது அறம் தவறிய செயல் மூலம் இந்திரனுக்கு அவனது அரசாட்சியினையும் வெற்றியினையும் கொடுத்து விட்டாய். அதே சமயம் உன்னுடைய பெரிய சுற்றத்தையும் கெடுத்து விட்டாய். உனக்கும் நீயே அழிவு தேடிக் கொண்டாய். உன் தீச்செயலின் விளைவிலிருந்து வேறு வழியில் நீ விடுதலை பெற முடியாது.


பாடல் எண் -16

'தஞ்சமும் தருமமும் தகவுமே, அவர்

நெஞ்சமும் கருமமும் உரையுமே; நெடு

வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்

உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ?

விளக்கம்

இராமனின் சொல், செயல், மனம் மூன்றுமே அறத்திற்கு உகந்தது. அவரைப் பகைத்துக் கொண்டு, பாவச் செயலும் பொய்யும் நிறைந்த நாம் பிழைக்க முடியுமா? அவ்வாறிருக்க, அவரைப் பகைத்துக் கொள்ள முடியுமா? அவர்களுடைய அறத்துக்கு ஒரு குறை உண்டோகுமோ? உண்டாகாது?


பாடல் எண் – 17

'காலினின் கருங் கடல் கடந்த காற்றது

போல்வன குரங்கு உள; சீதை போகிலன்;

வாலியை உரம் கிழித்து ஏக வல்லன

கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ?'

விளக்கம்

காற்றைப் போல கடந்து வரும் வல்லமை பெற்ற குரங்கு அவர்களுக்குத் துணையாக உள்ளது. வாலியின் மார்பை கிழித்துச் செல்லும் வல்லமை பெற்ற அம்புகள் அவர்களிடம் உள்ளன. அவற்றை ஏற்று இறந்து போக நாமும் இருக்கின்றோம் இனி என்ன குறை?” என்று வருந்தினான்.


பாடல் எண் – 18

என்று கொண்டு இனையன இயம்பி, 'யான் உனக்கு

ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்,

நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின்,

பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய்!

விளக்கம்

நான் உனக்கு அறிவிக்க வேண்டியது ஒன்று உள்ளது. தலைவனே! அதனை நீ உணர்ந்து ஏற்றுக் கொண்டால் நல்லது. ஏற்கவில்லையெனின், உன்னை இறந்தவனாகவே எண்ணிக் கொள்.


பாடல் எண் – 19

'தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின்

ஐயறு தம்பியோடு அளவளாவுதல்

உய் திறம்; அன்று எனின், உளது, வேறும் ஓர்

செய் திறம்; அன்னது தெரியக் கேட்டியால்:    

விளக்கம்

சீதையை விடுதலை செய்து விட்டு, இராமனுடைய திருவடிகளிலே விழுந்து வணங்கி உன் தம்பி வீடணனோடு நட்பு கொண்டு வாழ்வதே நீ உயிர் பிழைப்பதற்குரிய வழியாகும். அவ்வாறு செய்யாவிட்டால் வேறு ஒரு வழி உண்டு. அதையும் சொல்கிறேன் கேள்.


பாடல் எண் – 20

'பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை

சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்

மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்

உந்துதல் கருமம்' என்று உணரக் கூறினான்.    89

விளக்கம்

வரிசை வரிசையாக நம் படைகளை அனுப்பிவிட்டு அவை அழிவதைக் கண்டு நீ இங்கிருந்து வருந்துவது நல்லது அன்று. நம் வலிமை முழுவதையும் ஒரு சேர பகைவர் மீது செலுத்துவதே சிறந்த போர்த்தோழில்என்று இராவணன் மனதில் பதியுமாறு கூறினான் கும்பகருணன்.


இராவணன் சினந்து உரைத்தல்

பாடல் எண் – 21

'உறுவது தெரிய அன்று, உன்னைக் கூயது;

சிறு தொழில் மனிதரைக் கோறி, சென்று; எனக்கு

அறிவுடை அமைச்சன் நீ அல்லை, அஞ்சினை;

வெறுவிது, உன் வீரம்' என்று இவை விளம்பினான்;  

விளக்கம்

இதைக் கேட்ட இராவணன் மிகுந்த சினம் கொண்டு, “இனி நடக்கப் போவதைத் தெரிந்து கொள்வதற்காக உன்னை அழைக்கவில்லை. போய் அற்பச் செயல் செய்யும் அந்த மனிதர்களைக் கொன்று விட்டு வா. எனக்கு அறிவுரை கூற நீ சிறந்த அறிவு பெற்ற என் அமைச்சன் அல்ல. நீ போரிட அஞ்சுகின்றாய். உன் வீரம் வீணாகிவிட்டதுஎன்று  உரைத்தான்.


பாடல் எண் – 22

'மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;

பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;

இறங்கிய கண் முகிழ்த்து, இரவும் எல்லியும்

உறங்குதி, போய்' என, உளையக் கூறினான். 

விளக்கம்

போர் செய்வதற்குரிய உரிமையை உன் சொற்களால் நீ இழந்து விட்டாய். நிறைந்த மாமிசத்தோடு கள்ளையும் குடித்தாய். இனி நீ என்ன செய்ய வேண்டும். உறங்க வேண்டும். அதனால் கண்களை மூடிக்கொண்டு இரவும் பகலும் போய்த் தூங்குஎன்று கும்பகருணனின் மனம் வருந்தும்படியாக இராவணன் உரைத்தான்.


பாடல் எண் – 23

'மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்

கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில்

ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;

யான் அது புரிகிலேன்; எழுக போக!' என்றான்.         

விளக்கம்

மேலும், ‘அற்ப மனிதர் இருவரை வணங்கி, அந்தக் குரங்கைக் கும்பிட்டு உயிர் பிழைத்து வாழும் மானமில்லாத வாழ்க்கை உனக்கும் உன் தம்பிக்குமே பொருந்தும். மானமில்லாத செயலை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். நீ எழுந்து செல்’ என்று கூறினான் இராவணன்.


பாடல் எண் – 24

 'தருக, என் தேர், படை; சாற்று, என் கூற்றையும்;

வரு, முன் வானமும் மண்ணும் மற்றவும்;

இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்

பொருக, வெம் போர்' எனப் போதல் மேயினான்.      

விளக்கம்

வீரர்களே என்னுடைய தேரையும் போர்க்கருவிகளையும் கொண்டு வந்து தாருங்கள். நான் போருக்குச் செல்லும் செய்தியை அனைவருக்கும் சொல்லுங்கள். இராமனும் இலக்குவணனும் என்னுடன் கடும்போர் புரியட்டும்’ என்று சினந்துரைத்து, தானே போருக்குச் செல்லத் தயாரானான்.


கும்பகருணன் போருக்கு எழுதல்

பாடல் எண் - 25.

அன்னது கண்டு, அவன் தம்பியானவன்

பொன் அடி வணங்கி, 'நீ பொறுத்தியால்' என,

வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான்,

'இன்னம் ஒன்று உரை உளது' என்னக் கூறினான்:

விளக்கம்

அவ்வாறு இராவணன் போருக்குப் புறப்பட்டதைக் கண்டு, அவன் பாதங்களை வணங்கி, மனவருத்தமடைந்தவனாய், “என் சொற்களை நீ பொறுத்துக் கொள்என்று கூறிவிட்டு, போருக்குச் செல்வதற்காகத் தனது நீண்ட சூலத்தை வலப்பக்கத்தில் ஏந்தியவனாய், “இன்னும் நான் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளதுஎன்று தொடர்ந்தான்.


பாடல் எண் – 26

'வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி

நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;

பொன்றுவென்; பொன்றினால், பொலன் கொள் தோளியை,

"நன்று" என, நாயக விடுதி; நன்றுஅரோ.

விளக்கம்

“போரில் வெற்றி பெற்று உன்னிடம் திரும்பி வருவேன் என்று சொல்ல மாட்டேன். விதி என் பின்னே நிற்கிறது. அது என் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது.  போரில் நான் இறந்து போவேன். அவ்வாறு இறந்து விட்டால் நீ சீதையை விடுதலை செய்வது நல்லதுஎன்று கூறினான்.


பாடல் எண் – 27

'இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன

குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ!

அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய!

பெற்றனென் விடை' என, பெயர்ந்து போயினான்.    

விளக்கம்

இதுவரை நான் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொள். இனி உன் முகத்தில் விழிக்கும் தகுதி எனக்கில்லை. நான் விடை பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டுத் தன் நீண்ட சூலாயுதத்தை ஏந்திக் கொண்டு போருக்குச் சென்றான்.


கும்பகருணனைப் பற்றி இராமன் வீடணனிடம் வினவல்

பாடல் எண் – 28

பாந்தளின் நெடுந் தலை வழுவி, பாரொடும்

வேந்து என விளங்கிய மேரு மால் வரை

போந்ததுபோல் பொலந் தேரில் பொங்கிய

ஏந்தலை, ஏந்து எழில் இராமன் நோக்கினான். 

விளக்கம்

மேரு என்னும் மலையை ஒத்த பொன் தேரில் தோன்றிய கும்பகருணனை இராமன் கண்டான்.


பாடல் எண் – 29

'தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,

நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர்

தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர்

ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்?

விளக்கம்

இவனுடைய ஒரு தோளில் இருந்து மறுதோளைப் பார்க்க வேண்டும் என்றால் பல நாள் கழிந்து விடும். பூமியின் நடுவில் கால்களுடன் மேரு மலை வந்து நிற்பது போல் நிற்கிறான்.போரை விரும்பி வந்தவன்போல் இல்லை. யார் இவன்?” என்று வினவினான் இராமன்.

 

வீடணன் கும்பகருணனைப் பற்றி எடுத்துரைத்தல்

பாடல் எண் – 30

ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, 'ஐய!

பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னோன்;

கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்

கூரிய சூலத்தான்' என்று, அவன் நிலை கூறலுற்றான்;

விளக்கம்

இராமன் அவ்வாறு கேட்டதும், வீடணன், அவனுடைய திருவடிகளை வணங்கி, “ஐயனே இவன் இலங்கை அரசன் இராவணனின் தம்பி. எனக்கு அண்ணன். கரிய நிறம் பெற்று, கூரிய சூலத்தை ஏந்தி, வீரக்கழல் அணிந்து நிற்கும் இவன் கும்பகருணன்என்று அறிமுகம் செய்தான்.


பாடல் எண் - 31

ஆழியாய்! இவன் ஆகுவான்,

ஏழை வாழ்வுடை எம்முனோன்

தாழ்வு இலா ஒரு தம்பியோன்;

ஊழி நாளும் உறங்குவான்,        

விளக்கம்

சக்கராயுதத்தை உடையவனே! இவன் என் அண்ணன் இராவணனின் வீரத்திற்கு ஒப்பானவன். ஓர் ஊழிக்காலம் வரையிலும் தூங்கும் இயல்புடையவன்.


பாடல் எண் – 32

'ஊன் உயர்ந்த உரத்தினான்,

மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;

தான் உயர்ந்த தவத்தினான்,

வான் உயர்ந்த வரத்தினான்;      

விளக்கம்

மிக்க உடல் வலிமை பெற்றவன். மிகச் சிறந்த மன உறுதி உடையவன். தான் செய்த உயர்ந்த தவத்தினால் மிகச் சிறந்த வரங்களைப் பெற்றவன்.


பாடல் எண் – 33

'திறம் கொள் சாரி திரிந்த நாள்,

கறங்கு அலாது கணக்கு இலான்;

இறங்கு தாரவன் இன்று காறு

உறங்கலால், உலகு உய்ந்ததால்;

விளக்கம்

இவன் இந்த நாள் வரையில் தூங்கிக் கொண்டிருந்ததால் இந்த உலகம் உயிர் தாங்கிப் பிழைத்தது.


பாடல் எண் – 34

"தருமம் அன்று இதுதான்; இதால்

வரும், நமக்கு உயிர் மாய்வு" எனா,

உருமின் வெய்யவனுக்கு உரை

இருமை மேலும் இயம்பினான்.   

விளக்கம்

“பிறன் மனைவியை விரும்புவது தருமம் அன்று இச்செயலால் நமக்கு இழப்பு உண்டாகும்” என்று இராவணனுக்கு இருமுறைக்கு மேல் எடுத்துக் கூறியவன்.


பாடல் எண் – 35

'மறுத்த தம்முனை, வாய்மையால்

ஒறுத்தும், ஆவது உணர்த்தினான்;

வெறுத்தும், 'மாள்வது மெய்' எனா

இறுத்து, நின் எதிர் எய்தினான். 

விளக்கம்

சீதையை விடுதலை செய்ய மறுத்தத் தன் அண்ணனை, வாய்ச் சொற்களால் கண்டித்துத் தன்னால் முடிந்தவரை அவனுக்கு நல்லுரை கூறியவன். அவற்றை இராவணன் ஏற்காததால் மனம் வெறுப்படைந்து நாம் இறப்பது உண்மை என்று உறுதியாகக் கூறிவிட்டு, இப்போது உன் எதிரே வந்து நிற்கின்றான்என்று உரைத்தான்.


பாடல் எண் – 36

"நன்று இது அன்று நமக்கு" எனா,

ஒன்று நீதி உணர்த்தினான்;

இன்று காலன் முன் எய்தினான்'

என்று சொல்லி, இறைஞ்சினான்.

விளக்கம்

பிறர் மனைவியைச் சிறையிடுவது நமக்கு நன்மை தரும் செயல் அன்று” என்று இராவணனுக்கு எடுத்துக் கூறினான். அதற்குப் பயனில்லாமல் போகவே, இப்போது எமனுக்கு எதிரே வந்து சேர்ந்து விட்டான் என்று கூறி, வீடணன் இராமனை வணங்கினான்.


 கும்பகருணனை உடன் சேர்த்துக் கொள்ளல் நலம் எனல்

பாடல் எண் – 37

என்று அவன் உரைத்தலோடும், இரவி சேய், 'இவனை இன்று

கொன்று ஒரு பயனும் இல்லை; கூடுமேல், கூட்டிக்கொண்டு

நின்றது புரிதும்; மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்;

"நன்று" என நினைந்தேன்' என்றான்; நாதனும், 'நயன் இது' என்றான்.     

விளக்கம்

வீடணன் கூறியதைக் கேட்ட சுக்ரீவன், “இன்று இக் கும்பகருணனைக் கொல்வதால் நமக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. இவனைக் கொல்லாமல் நம்முடன் சேர்த்துக் கொண்டால் வீடணனின் துன்பம் தீரும். இதுவே நல்லது என்று நினைக்கின்றேன்” என்று இராமனிடம் கூறினான். இராமனும்நீ கூறிய சொற்கள் நீதியுடையதேஎன்று ஏற்றுக் கொண்டான்.


கும்பகருணனை அழைத்து வர வீடணன் செல்லுதல்

பாடல் எண் – 38

'ஏகுதற்கு உரியார் யாரே?' என்றலும், இலங்கை வேந்தன்,

'ஆகின், மற்று அடியனே சென்று, அறிவினால், அவனை உள்ளம்

சேகு அறத் தெருட்டி, ஈண்டுச் சேருமேல், சேர்ப்பென்' என்றான்;

மேகம் ஒப்பானும், 'நன்று, போக!' என்று விடையும் ஈந்தான்.         

விளக்கம்

       “கும்பகருணனிடம் செல்லத் தகுந்தவர் யார்?” என இராமன் கேட்டான். வீடணன், “நானே சென்று என் அறிவின் ஆற்றலால் அவன் மனதைத் தெளிவு செய்து நம்மோடு சேருவானேயானால் அவனை இங்குக் கொண்டு வந்து சேர்க்கிறேன்என்று கூறினான். இராமனும்நல்லது நீயே அவனிடம் செல்கஎன்று கூறி விடையளித்தான்.

 

கும்பகருணன் வீடணனிடம் 'நீ வந்தது தகுதி அன்று' எனல்

பாடல்  எண் - 39

தந்திரக் கடலை நீந்தி, தன் பெரும் படையைச் சார்ந்தான்;

வெந் திறலவனுக்கு, 'ஐய! வீடணன் விரைவில் உன்பால்

வந்தனன்' என்னச் சொன்னார்; வரம்பு இலா உவகை கூர்ந்து,

சிந்தையால் களிக்கின்றான் தன் செறிகழல் சென்னி சேர்ந்தான்.

விளக்கம்

வீடணன் குரங்குப் படையாகிய கடலைக் கடந்து தன் பெரிய அரக்கர் படையை அடைந்தான். உடனே பணியாளர்கள் கும்பகருணனிடம், “ஐயனே! வீடணன் உன்னைக் காண வந்துள்ளான்என்று கூறினர். அதைக் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான் கும்பகருணன். வீடணன் வீரக்கழல் புனைந்த கும்பகருணனின் திருவடிகளைத் தன் தலையால் வணங்கினான்.       


பாடல் எண் - 40.

'நீதியும், தருமம் நிறை நிலைமையும், புலமைதானும்,

ஆதி அம் கடவுளாலே அருந் தவம் ஆற்றிப் பெற்றாய்;

வேதியர் தேவன் சொல்லால், விளிவு இலா ஆயுப் பெற்றாய்;

சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்,-தக்கோய்!        

விளக்கம்

        தன்னை வணங்கிய வீடணனைத் தன் மார்போடு இறுகத் தழுவினான் கும்பகருணன். “நீதியும் தருமமும் கொண்ட இயல்பினை, நல்ல அறிவினை அரிய பல தவங்கள் செய்து பிரமன் மூலம் அடைந்தாய். அந்தப் பிரமனின் சொல்லால் அழிவில்லாத ஆயுளைப் பெற்றாய். அதன் பின்பும் உன் சாதியின் இழிந்த குணம் இன்னும் உன்னை விடவில்லையா?


பாடல் எண் – 41

ஏற்றிய வில்லோன், யார்க்கும் இறையவன், இராமன் நின்றான்;

மாற்ற அருந் தம்பி நின்றான்; மற்றையோர் முற்றும் நின்றார்;

கூற்றமும் நின்றது, எம்மைக் கொல்லிய; விதியும் நின்ற;

தோற்ற எம் பக்கல், ஐய! வெவ் வலி தொலைய வந்தாய்.     

விளக்கம்

என்னைக் கொல்வதற்காக இராமன் வில்லோடு காத்திருக்கிறான். அவன் தம்பி இலக்குவணனும் தயாராக நிற்கிறான். வானரக் கூட்டங்கள் அவர்களுக்குத் துணையாக நிற்கின்றன. அதற்கேற்ப எமனும் ஆயத்தமாக இருக்கிறான். இந்தச் சூழ்நிலையில் உனது வலிமையைச் சிதைத்துக் கொள்வதற்காகவா தோல்வி கண்ட என்னிடம் வந்தாய்.


பாடல் எண் – 42

'ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே

உய்கிலைஎன்னின், மற்று இல் அரக்கராய் உள்ளோர் எல்லாம்

எய் கணை மாரியாலே இறந்து, பாழ் முழுதும் பட்டால்,

கையினால் எள் நீர் நல்கி, கடன் கழிப்பாரைக் காட்டாய்.    

விளக்கம்

ஐயனே, அரக்கர்களாகிய நாங்கள் இராமன் செலுத்தும் அம்புகளால் அழிந்து விடுவோம். நீ இராமனுக்கு அடைக்கலமாகி உயிர் பிழைத்தால்தான் இறக்கும் எங்களுக்கு எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து நீர்க்கடன் நிறைவேற்ற முடியும். இல்லயெனில் வேறு யார் இருக்கிறார் காட்டுக.


பாடல் எண் – 43

'வருவதும், இலங்கை மூதூர்ப் புலை எலாம் மாண்ட பின்னை;

திருவுறை மார்பனோடும் புகுந்து, பின் என்றும் தீராப்

பொருவ அருஞ் செல்வம் துய்க்கப் போதுதி, விரைவின்' என்றான்,

'கருமம் உண்டு உரைப்பது' என்றான்; 'உரை' என, கழறலுற்றான்; 

விளக்கம்

இலங்கை நகருக்கு நீ மீண்டும் வர வேண்டியது இப்போது அன்று. அரக்கர் அனைவரும் இறந்த பிறகு இலங்கைக்குள் புகுந்து அழியாத செல்வத்தை அனுபவிக்க வரவேண்டும். ஆதலால் இப்போது விரைவாச் செல்வாயாக” என்று கூறினான். அதைக் கேட்ட வீடணன் “வீரனே! நான் உன்னிடம் ஒன்று  கூற வேண்டிய செயல் உண்டு” என்றான். “அதை உரைப்பாயாகஎன்றான் கும்பகருணன்.


இராமனைச் சரண் புகுமாறு கும்பகருணனுக்கு வீடணன் உரைத்தல்

பாடல் எண் - 44

'இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்

அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி,

மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்

உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே.

விளக்கம்

          “இராமனிடம் நீ வந்து சேர்ந்தால் உனக்கும் அருள் புரிவான். உனக்குப் பாதுகாப்பு அளிப்பான். பிறவி என்னும் பிணிக்கு மருந்தாக அமைவான். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் மண்ணுலக வாழ்க்கையை நீக்கி வீடுபேறு இன்பத்தைத் தருவான்.


பாடல் எண் – 45

'எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்

நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்;

உனக்கு இதின் உறுதி இல்லை; உத்தம! உன் பின் வந்தேன்

மனக்கு நோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு வாழி!    

விளக்கம்

எனக்கு இராமன் கொடுத்த செல்வம் கொழிக்கும் இலங்கையையும், அதன் ஆட்சி முதலிய அனைத்தையும் நான் உனக்குக் கொடுப்பேன். உன் ஆணைக்குப் பணிந்து நடப்பேன். உனக்கு இதைக் காட்டிலும் நன்மை தருவது வேறு ஒன்று இல்லை. உன் தம்பியாகிய என் மனத்தின் துன்பத்தை நீக்கி நாம் பிறந்த குலத்தை விளங்கச் செய்வாயாக.


பாடல் எண் – 46

தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார்,

தாய் அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்?

நீ அவை அறிதி அன்றே? நினக்கு நான் உரைப்பது என்னோ?

தூயவை துணிந்த போது, பழி வந்து தொடர்வது உண்டோ ?

விளக்கம்

தருமத்தையே இலட்சியமாகக் கொண்டவர்கள், ஒருவர் தீய செயலைச் செய்வாராயின், அதுவும் நம் சகோதரனாக இருந்தாலும் விட்டுவிட மாட்டார்கள். நீ அந்த நீதிகளை அறிவாய். உனக்கு நான் எடுத்துச் சொல்ல ஒன்றும் இல்லை. தூய செயல்களைச் செய்பவர்களுக்குப் பழி வராது.


பாடல் எண் – 47

'தீவினை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர்

வீவினை உறுதல், ஐய! மேன்மையோ? கீழ்மைதானோ?

ஆய் வினை உடையை அன்றே? அறத்தினை நோக்கி, ஈன்ற

தாய் வினை செய்ய அன்றோ, கொன்றனன், தவத்தின் மிக்கான்?  

விளக்கம்

ஒருவன் தான் இறப்பதற்குக் காரணமான பாவச் செயலைச் செய்ய, அப்பாவத்தில் பங்கு பெறாதோர் அவனோடு சேர்ந்து அழிந்து போவது சிறந்ததா? தாழ்ந்ததா? நீயே எண்ணிக் கொள். எதையும் ஆராய்ந்து செய்யும் ஆற்றல் உடையவன் நீ, தன்னைப் பெற்ற தாய், தீய செயலைச் செய்ததால் பரசுராமன் தாய் என்றும் பாராமல் அவளைக் கொன்றான்.


பாடல் எண் – 48

'உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து, அதன் உதிரம் ஊற்றி,

சுடல் உறச் சுட்டு, வேறு ஓர் மருந்தினால், துயரம் தீர்வர்;

கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால்

மடலுடை அலங்கல் மார்ப! மதி உடையவர்க்கு மன்னோ!     146

விளக்கம்

உடலில் உண்டான ஒரு கட்டியை, அதன் விஷ நீர் உடலில் பரவாத வண்ணம், அதிலுள்ள அசுத்த இரத்தத்தை வெளியேற்றி காரம் பொருத்திச் சுட்டுப் புண்ணை ஆற்றும் மருந்தினால், தான் அடைந்த துன்பத்தை நீக்கிக் கொள்வர். மணம் மிகுந்த கோட்டத்தை கடலிலே வீணாகுமாறு விடுவது அறிவுடையோர் செயல் அன்று.


பாடல் எண் – 49

'முனிவரும் கருணை வைப்பர்; மூன்று உலகத்தும் தோன்றி

இனி வரும் பகையும் இல்லை; "ஈறு உண்டு" என்று இரங்க வேண்டா;

துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்;-

கனி வரும் காலத்து, ஐய! பூக் கொய்யக் கருதலாமோ?        

விளக்கம்

முனிவர்களும் உன்னிடம் கருணை காட்டுவார்கள். மூன்று உலகங்களிலும் இனிப் பகைவராக எழுந்து வருபவர் எவரும் இருக்கமாட்டார்கள். உனக்கு இறப்பு ஏற்படும் என்று துன்பமடைய வேண்டாம். தேவர்கள் யாவரும் நம் நண்பர்களே. ஆதலால் ஐயனே! இனிக்கின்ற பழங்கள் தோன்றும் காலத்தில் வெறும் மலர்களைப் பறிப்பதற்கு நினைக்கலாமோ? கூடாது.


பாடல் எண் – 50

'வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி, விட்டான்;

காதலால், என்மேல் வைத்த கருணையால், கருமம் ஈதே;

ஆதலால், அவனைக் காண, அறத்தொடும் திறம்பாது, ஐய!

போதுவாய் நீயே' என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான்.

விளக்கம்

இராமன் தன் இயல்பான கருணையால், என் மீது கொண்ட அன்பால், உன்னிடம் கொண்ட அருளினால் இவ்வாறு வேண்டிக் கொள்ளுமாறு என்னை அனுப்பினார். ஆகையால் அறநெறியைப் புறக்கணிக்காது இராவணனை நீங்கி இராமனைக் காண வருவாயாகஎன்று கும்பருணனின் திருவடிகளை வணங்கினான் வீடணன்.


கும்பகருணனின் மறுப்புரை

பாடல் எண் – 51

'தும்பி அம் தொடையல் மாலைச் சுடர் முடி படியில் தோய,

பம்பு பொற் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்

தம்பியை எடுத்து, மார்பில் தழுவி, தன் தறுகணூடு

வெம் புணீர் சொரிய நின்றான், இனையன விளம்பலுற்றான்;        

விளக்கம்

வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையும், ஒளி வீசும் மகுடம் மண்ணில் படுமாறு தன் பாதங்களைக் கையால் பற்றிக் கொண்டு புலம்புகின்ற தம் தம்பி வீடணனைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்டு கண்களில் குருதி நீர் வழியப் பேசத் தொடங்கினான் கும்பகருணன்.


பாடல் எண் – 52

'நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்

போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;

தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,

கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி,     

விளக்கம்

நீண்ட காலம் என்னை அருமையாக வளர்த்து இன்று போர்க்கோலம் செய்து போர்க்களத்திற்கு அனுப்பிய இராவணனுக்காக உயிரை விடாமல் நிலையற்ற வாழ்க்கையை விரும்பி இராமனிடம் சேரமாட்டேன். என் துன்பத்தை நீ நீக்க விரும்பினால் அந்த இராமனை விரைந்து சென்று அடைவாயாக.


பாடல் எண் – 53

'மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால், நீ

உலைவு இலாத் தருமம் பூண்டாய்; உலகு உளதனையும் உள்ளாய்;

தலைவன் நீ, உலகுக்கு எல்லாம்; உனக்கு அது தக்கதேயால்;

புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால்.

விளக்கம்

பிரமனின் குற்றமற்ற வரத்தினால் நீ அழிவில்லாத தருமத்தை மேற்கொண்டாய். அதனால் உலகம் உள்ளவரை வாழ்வாய். நீ எல்லா உலகத்திற்கும் தலைவன். எனவே இராமனை அடையும் செயல் உனக்கு ஏற்றதே! இங்கே இழிவான மரணத்தை அடைவது எனக்குப் புகழையே தரும்.


பாடல் எண் – 54

'கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத்

திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின்,

பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி,

ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா.  

விளக்கம்

ஆலாசனை அற்ற தலைவன் ஒரு தீய செயல் செய்ய நினைத்தால் அச்செயல் செய்யாமல் தடுத்து திருத்துவது நல்லது. முடியவில்லையென்றால் அவனுடைய பகைவரை அடைந்து பெறக்கூடிய பயன் உண்டா? இல்லை. ஒருவன் இட்ட சோற்றை உண்டவர்க்கு உரிய செயல் போர்த்தொழிலுக்கு உரியவராகப் போரிட்டு அன்னமிட்டவர்க்கு முன் இறத்தலேயோகும்.


பாடல் எண் – 55

'தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப, சுற்றும்

வெம்பு வெஞ் சேனையோடும், வேறு உள கிளைஞரோடும்,

உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு,

தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல்?

விளக்கம்

மூன்று உலகங்களை ஒரு சேர ஆட்சி செய்த இராவணன், இராமன் சுட்டெரிக்கும் அம்புகளைச் செலுத்தும்போது உடன் பிறந்த தம்பி இல்லாமல் பகைவர் பார்க்குமாறு அனாதையாக மண்மீது மாண்டு கிடப்பதற்கு உரியவனோ?


பாடல் எண் – 56

'செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி,

வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி,

அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, ஐய!

கும்பிட்டு வாழ்கிலேன் யான் -கூற்றையும், ஆடல் கொண்டேன்!    

விளக்கம்

ஐயனே! எமனது வலிமையையே அடக்கியவனாகிய நான் இலங்கையின் செல்வத்தை நிலையானது என்று எண்ணி, என் அண்ணனின் உயிரைப் போக்கிய பகைவனை வாழ்த்திக் கொண்டு புண்பட்ட நெஞ்சோடு அப்பகைவனைக் கைகூப்பி உயிர் வாழ உடன்பட மாட்டேன்.


பாடல் எண் – 57

'அனுமனை, வாலி சேயை, அருக்கன் சேய்தன்னை, அம் பொன்

தனு உடையவரை, வேறு ஓர் நீலனை, சாம்பன் தன்னை,

கனி தொடர் குரங்கின் சேனைக் கடலையும், கடந்து மூடும்

பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென்; பார்த்தி!       

விளக்கம்

அனுமனையும், வாலியின் மகனான அங்கதனையும், சுக்ரீவனையும், இராம இலக்குவணனையும், நீலனையும், சாம்பவானையும், குரங்குச் சேனைகளையும் வென்று உலகத்தைச் சுற்றி வருகின்ற சூரியனைப் போன்று திரிவேன். இதை நீ காண்பாய்.


பாடல் எண் – 58

'செருவிடை அஞ்சார் வந்து, என் கண் எதிர் சேர்வர் ஆகின்,

கரு வரை, கனகக் குன்றம், என்னல் ஆம் காட்சி தந்த

இருவரும் நிற்க, மற்று அங்கு யார் உளர், அவரை எல்லாம்,

ஒருவரும் திரிய ஒட்டேன், உயிர் சுமந்து உலகில்' என்றான்.

விளக்கம்

போர்க்களத்தில் இராமனும் இலக்குமணனும் வந்து என் எதிரே நிற்கட்டும். இவ்விருவரைத் தவிர வேறு யார் என் எதிரே நிற்கும் வல்லமையோடு உள்ளனர். அவர்களை எல்லாம் அழித்து விடுவேன்” என்று கூறினான் கும்பகருணன்.

பாடல் எண் – 59

'ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப்

போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,

ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!'

விளக்கம்

“என்றும் வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும். அழிய வேண்டியது அதற்குரிய காலத்தில் சிதறிப் போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகே இருந்து பாதுகாத்தாலும், அழிந்து போவது உறுதி. இதை உணர்ந்தவர் உன்னைக் காட்டிலும் யார் உள்ளனர்? வருத்தம் கொள்ளாமல் இங்கிருந்து செல்க. எம்மை நினைத்து இரங்க வேண்டாம்என்றான்.


வீடணன் விடை பெறுதல்

பாடல் எண் – 60

என்று, அவன் தன்னை மீட்டும் எடுத்து, மார்பு இறுகப் புல்லி,

நின்று நின்று, இரங்கி ஏங்கி, நிறை கணால் நெடிது நோக்கி,

'இன்றொடும் தவிர்ந்தது அன்றே, உடன்பிறப்பு' என்று விட்டான்;

வென்றி வெந் திறலினானும், அவன் அடித்தலத்து வீழ்ந்தான்.        

விளக்கம்

இவ்வாறு கூறிய கும்பகருணன் வீடணனை மீண்டும் மார்புற அணைத்து, விட்டு விட்டு அழுது ஏக்கம் கொண்டு, நீர் நிறைந்த விழிகளால் நீண்ட நேரம் பார்த்து, “உடன்பிறப்பு என்னும் தொடர்பு இன்றோடு போயிற்று அன்றோ?” என்று கூறி அவனைத் தழுவுவதை விட்டான். வீடணன் கும்பகருணனுடைய பாதங்களில் விழுந்தான்.


பாடல் எண் – 61

வணங்கினான்; வணங்கி, கண்ணும் வதனமும் மனமும் வாயும்

உணங்கினான்; உயிரோடு யாக்கை ஒடுங்கினான்; 'உரைசெய்து இன்னும்

பிணங்கினால் ஆவது இல்லை; பெயர்வது; என்று உணர்ந்து போந்தான்.

குணங்களால் உயர்ந்தான், சேனைக் கடல் எலாம் கரங்கள் கூப்ப.   

விளக்கம்

விழுந்த வீடணன் வணங்கினான். கண்களும் முகமும் மனமும் வாயும் உலரப் பெற்றான். உடல் ஒடுங்கப் பெற்றான். “மேலும் பேசி வாதாடுவதால் விளையக்கூடிய பயன் ஒன்றும் இல்லை. அதனால் இங்கிருந்து திரும்பிச் செல்வதே நல்லதுஎன்று உணர்ந்து நற்குணங்கள் நிறைந்த கும்பகருணனுடைய சேனைகள் கைகூப்பித் தன்னை வணங்க இராமனிடம் சென்றான்.


வீடணன் செல்ல, கும்பகருணன் கண்ணீர் உகுத்து நிற்றல்

பாடல் – 62

'கள்ள நீர் வாழ்க்கையேமைக் கைவிட்டு, காலும் விட்டான்;

பிள்ளைமை துறந்தான்' என்னாப் பேதுறும் நிலையன் ஆகி,

வெள்ள நீர் வேலைதன்னில் வீழ்ந்த நீர் வீழ, வெங் கண்

உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான்.

விளக்கம்

வஞ்சக இயல்பு பொருந்திய வாழ்க்கையை உடைய எங்களை கைவிட்டு தான்பிறந்த அரக்க மரபின் தன்மையையும் விட்டு விட்ட வீடணன், குழந்தைத் தன்மையைத் துறந்து பெரியோரின் சிறந்த அறிவைப் பெற்றான் என்று நினைத்து துன்புறும் மனத்தோடு கும்பகருணன் தன் கண்களில் நீர் முழுவதும் வற்றி இரத்தம் நீராகப் பெருகுமாறு நின்றான்.

 முற்றும்