திங்கள், 14 செப்டம்பர், 2020

மரபுக்கவிதை - ஒற்றுமைப்பாட்டு

 

 ஒற்றுமைப்பாட்டு

பாரதிதாசன்


மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

மதத்தின் நலத்துக்கு மக்களா சொல்வீர்!


திக்கெட்டும் உள்ளவர் யாரும் – ஒன்று

சேராது செய்வதே மதமாகுமானால்

பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் – அப்

பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்.


எக்கட்சி எம்மதத்தாரும் – இங்கு

எல்லாம் உறவினர் என்றெண்ண வேண்டும்.


எல்லா மதங்களும் ஒன்றே – அவை

எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே

சொல்லால் முழங்குவது கண்டீர் – அவை

துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ?


எல்லோரும் மக்களே யாவர் – இங்கு

எல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்

எல்லாரும் ஒரு தாயின் செல்வர் – இதை

எண்ணாத மக்களை மாக்களென்போமே! 


வழிகாட்டும் மதமெல்லாம் இங்கே – நல்

வழிகாட்டி யானபின் வழிகாட்டிடாமல்

பழிகூட்ட வைத்திருப்பீரோ? – நீர்

பகைகூட்ட மதமென்ற மொழி கூட்டலாமோ?


பிழியாக் கரும்பினிற் சாற்றை – நீர்

பெற்றபின் சக்கையை மக்கட்களித்தே

அழிவைப் புரிந்திடுதல் நன்றோ? – நல்

அன்பால் வளர்த்திடுக இன்ப நல்வாழ்வை.


பாடல் விளக்கம் 

மக்களின் ஒற்றுமை நலனைக் கருத்தில் கொண்டு பாரதிதாசன் பாடிய பாடல் இது. 

மதம் - மக்கள்

மதம் என்பது மக்களின் நலத்திற்காக உருவாக்கப்பட்டதா? அல்லது மதத்தின் நலனிற்காக மக்கள் செயல்பட வேண்டுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.  அனைத்துத் திசையில் உள்ள மக்கள் யாவரையும் ஒன்று சேர்க்கக் கூடிய ஆயுதமாக மதங்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு ஒன்று சேர்க்காத மதங்களின் பெயரால் கூறப்படும் பொய்ச்செய்திகள் களையப்பட வேண்டும். அப் பொல்லாங்கான செய்திகளிலிருந்தும், மதங்களிலிருந்தும் மக்கள் விடுபட வேண்டும். 

அனைவரும் உறவினர்களே

எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பினும், எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அவர்கள் யாவரும் நம் உறவினர்களே என்ற எண்ணம் கொண்டு வாழ வேண்டும். 

மக்கள் யாவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதைத்தான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. மக்களோடு வேற்றுமை பாராட்டித் துன்பமுற்று வாழ வேண்டும் என்று எம்மதமும் கூறவில்லை. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

  • இந்தப் பூமியில் வாழ்கின்ற யாவரும், மக்கள் இனம் என்ற ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களேயாவர். 

  • இங்கு அனைவரும் ஒருவர்க்கொருவர் நிகரானவர்களேயாவர். 

  • எல்லோரும் உறவினர்களேயாவர்.

  • எல்லோரும் பாரதத்தாயின் புதல்வர்களேயாவர்.

இதை உணராத மக்களை ஐந்தறிவு உடைய விலங்குகளுக்குச் சமமாக எண்ண வேண்டும். 


நல்வழி காட்டுவதே மதம்

மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்ட மதங்கள் எல்லாம், நல்வழியைக் காட்டாமல், பிற மதத்தின்மீது  பழி உண்டாக்கவே செயல்படுகின்றன. ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் பிற மதங்களைச் சேர்ந்த மக்களைப் பகைக் கூட்டங்களாகக் கருதும் செயலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

மதங்கள் கூறிய நன்மை தரும் நெறிமுறைகளை நன்குக் கற்றுக் கொண்ட மதத்தலைவர்கள், அந்நற்கருத்துகளை மக்களுக்குக் கூறாமல், வேற்றுமையை உருவாக்கும் கருத்துகளைக் கூறித் தவறாக வழிகாட்டுதல் மக்களுக்கு நன்மை தரும் செயலன்று. இச் செயல் கரும்புச் சாற்றின் இனிமையைத் தான் மட்டும் பெற்றுக் கொண்டு, ஒன்றுக்கும் உதவாத கரும்புச் சக்கையை  மக்களுக்கு அளிப்பது போன்றதாகும். இது அழிவை உண்டாக்கும் செயலாகும். 

அன்பே நல் ஆயுதம்

அன்பு ஒன்றே மக்களை ஒன்று சேர்க்கும் ஆயுதம் ஆகும். ஆகவே மதத்தின் பெயரால் சண்டையிடுவதைத் தவிர்த்து, மதங்கள் வலியுறுத்தும் நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றி, அன்பு நிறைந்த வாழ்க்கையைப் வளர்த்தெடுப்போம் என்று அறிவுறுத்துகின்றார் பாரதிதாசன்.

  

  

 


13 கருத்துகள்: