வெள்ளி, 3 அக்டோபர், 2025

TANSCHE - மொழிப் போராட்டங்கள்

மொழிப் போராட்டங்கள்

ஓர் இனத்து மக்கள் தம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் தம் தாய்மொழியே இடம்பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் மொழியை எதிர்த்துப் போராடும் போராட்டமே மொழிப் போராட்டம் எனப்படுகின்றது. தமிழ் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தும் வடமொழி, இந்தி ஆகிய மொழிகளை எதிர்த்துத் தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்மொழிக் காப்பிற்கான முன்னெடுப்புகள்

தொல்காப்பியர் காலத்திலேயே வடமொழி தமிழில் கலந்து விட்டதைத் தொல்காப்பிய நூற்பா தெரிவிக்கின்றது. வடவர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்து போர் புரிந்தமையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. வடவரின் படையெடுப்புக்கு ஆட்படாத பாண்டிய நாட்டில் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கப்பட்டது. அதை முச்சங்களில் தமிழைக் காக்க எடுக்கப்பட்ட முன்னெடுப்பு எனலாம்.

குறிஞ்சிப் பாட்டின் குறிப்பில் ஆரிய அரசனுக்குத் தமிழ் அறுவுறுத்துவதற்குக் கபிலர் பாடியது என்று கூறியுள்ளமையும் தமிழ்ப் பண்பாட்டை நிலை நிறுத்தும் முன்னெடுப்பு ஆகும்.

கம்பர் தம் கம்பராயமாணத்தில் தசரதன்தயரதன், அகஸ்தியர்அகத்தியர், தூஷணன்தூடணன், கௌசல்யாகோசலை எனத் தமிழ்ப்படுத்தி இயற்றியிருப்பதும் தமிழ்மொழி காக்கும் செயலே ஆகும்.

கி.பி.12 – 15ஆம் நூற்றாண்டில் வடமொழிக் கலப்பு அதிகமானதால், உரையாசிரியர்கள் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு உரை எழுதித் தமிழைக் காத்தனர்.

இவை யாவும் மொழிப் போராட்டங்கள் அல்ல எனினும், இவை பிற்காலத்தில் மொழிப்போராட்டம் தோன்ற அடித்தளம் இட்டன எனலாம். மொழிப் போராட்டத்திற்கான முன் நிகழ்வுகள்

கி.பி.18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமிநாத தேசிகர் தமிழ்மொழி குறித்து இழிவுபடுத்தியது, தமிழ்ப் புலவர்களிடையே கோபத்தை மூட்டியது. 

1856இல் கால்டுவெல் என்ற அறிஞர் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் தமிழ்மொழி வடமொழியிலிருந்து தோன்றியது அன்று. அது தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது என்று ஆராய்ந்து நிலைநாட்டினார். இது தமிழ் அறிஞர்களைத் தலைநிமிரச் செய்தது. பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை தமிழ்த்தாய்க்கு இறைவணக்கம் பாடினார்.

1920ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்று தமிழவேள் உமா மகேஸ்வரன் தீர்மானம் கொண்டு வந்தார்.

மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட பலரும் தமிழுக்காக உழைத்தனர்.

மொழிப்போராட்டங்கள்

மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், திரு.வி. போன்ற அறிஞர் பெருமக்களின் அரிய முயற்சியால் வடமொழியின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் வட இந்தியர்களின் செல்வாக்கும் இந்தி ஆதிக்கமும் அதிகமானது. மொழிப் போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக மாறியது. மொழிப் போராட்டத்தை, இந்திய விடுதலைக்கு முந்தைய மொழிப் போராட்டம் என்றும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய மொழிப் போராட்டம் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம்.

இந்திய விடுதலைக்கு முந்தைய மொழிப் போராட்டம்

இந்திய விடுதலைக்கு முந்தைய மொழிப் போராட்டம் 1938ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த இராஜாஜி என்பவர் கொண்டு வந்த இந்திமொழி கட்டாயச் சட்டத்தால் ஏற்பட்டது. இதை எதிர்த்து தலைவர்களும் மக்களும் போராடினர். தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த அறிஞர்களும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அறிஞர்களும் தலைவர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் உயிர் நீத்த தாளமுத்து, நடராசன்

கைது செய்யப்பட்ட பலர் சிறைச்சாலையில் பல கொடுமைகளுக்கு ஆளாகினர். அவர்களுள் தாளமுத்து, நடராசன் என்ற இருவரின் உடல் நலம் மிகவும் மோசமானது. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்கிறோம் என்ற காவல்துறையின் கோரிக்கையை இருவரும் ஏற்கவில்லை. இதனால் நடராசன் சிறையிலேயே உயிர் விட்டார். அடுத்து சில மாதங்களில் தாளமுத்துவும் சிறையிலேயே உயிர் துறந்தார்.  தேவநேயப் பாவாணர்கட்டாய இந்திக் கல்விக் கண்டனம்என்ற நூலை எழுதினார். மக்கள் போராட்ட முயற்சியால் 1940இல் இச்சட்டத்தைத் திரும்பப் பெற்றது இராஜாஜி அரசு.

விளைவுகள்

தமிழ் உணர்ச்சி மக்களிடம் பரவியது

தமிழ்மொழி உயர்ந்த நிலைக்கு உயர்ந்தது.

பெரியாரின் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.

இந்திய விடுதலைக்குப் பிந்தைய மொழிப் ரோட்டங்கள்

1948இல் ஆந்திரம், கேரளா, கர்நாடகா பகுதிகளில் இந்தி கட்டாயம் என்றும், தமிழகப் பகுதிக்கு மட்டும் இந்தி விருப்பப் பாடம் என்றும் சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு. இதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியதால் தமிழ்நாட்டில் மட்டும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

1963இல் கொண்டு வரப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தில், 1965 ஆண்டு முதல் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரலாம் என்று கூறப்பட்டது. தொடரலாம் என்பதற்குப் பதில் தொடரும் என்று கூறியதால் எதிர்ப்புக் கிளம்பியது.

இதன் விளைவாக 1965இல் மிகப்பெரிய மொழிப் போராட்டம் உருவானது.

மறைமுகக் காரணங்கள்

தமிழ் மக்களின் வாழ்வியலில் இருந்து தமிழை மெல்ல மெல்ல ஒதுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றன.

கோயில்களில் இறைவன் இறைவி பெயர்கள் வடமொழியில் மாற்றப்பட்டன.

இறைவன் முன் ஓதப்படும் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் மாறின.

மக்கள் கூடி வாழும் ஊர்ப்பெயர்கள் சமஸ்கிருதமானது.

வணிகக் கடைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றன.

திருமணச் சடங்குகளில், இசைமேடைகளில் ஆடல் கலைகளில், பயிற்று மொழியில், சட்ட மொழியில் சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகள் முன்னிறுத்தப்பட்டன.

இவை யாவும் தமிழ் ஆர்வலர்களின் உள்ளத்தில் துன்பத்தை ஏற்படுத்தின.

உண்மைக் காரணம்

1963ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தில் தொடரலாம், தொடரும் என்ற சொற்கள் காரணமாக எழுந்த விவாதம் நாடாளுமன்றத்தில் பெரியதாக வெடித்தது. நேரு மறைந்த பின்னர், லால்பகதூர் சாஸ்திரி மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது மும்மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

போராட்ட நிகழ்வுகள்

இந்திய இரசியலமைப்பு தந்த காலக்கெடு ஜனவரி 26, 1965 ஆகும். இக்காலம் நெருங்க நெருங்க போராட்ட உணர்வு மிகுதியானது. தமிழ்நாட்டில் தி.மு. தலைமை ஏற்றுப் போராட்டத்தை நடத்தியது.

தமிழ்நாடு முழுவதும் வன்முறைகளும், தீ வைப்பும் இந்தியைத் தார் கொண்டு அழித்தலும், ஊர்வலங்களும் தொடர்ந்தன.

காவல்துறை எச்சரிக்கை, தடியடி, கண்ணீர்ப் புகைகுண்டு வீசுதல், துப்பாக்கிச் சூடு எனப் பல துயரங்கள் நிகழ்ந்தன.

1965ஆம் குடியரசு தினத்தைக் கருப்பு தினமாகக் கொண்டாட தி.மு. அழைப்பு விடுத்தது.

இப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, மதியழகன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காளிமுத்து, நா.காமராசன், விருதுநகர் சீனிவாசன் போன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன் போன்றோர் தீக்குளித்தனர்.

கீரனூர் முத்து உள்ளிட்டோர் இறந்தனர்.

சிவகங்கை ராஜேந்திரன் போன்றோர் காவலரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர்.

இதனால் வேதனைப்பட்ட அண்ணாதுரை போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து முன்னெடுத்தனர்.

போராட்டத்தை அடக்க முடியாமல் அரசு தவித்தது. இறுதியாக இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியும், ஆங்கிலமும் சமமாகத் தொடரும் என்று நடுவண் அரசு அறிவித்தது. போராட்டம் ஓய்ந்தது.

விளைவுகள்

சாதியாலும் மதத்தாலும் பிளவுபட்ட தமிழர்கள் தமிழால் இணைந்தனர்.

இந்தி எதிர்ப்பு மெல்ல மெல்ல காங்கிரஸ் எதிர்ப்பாக மாறியது.

தி.மு.. மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றது.

தாய்மொழியின் தேவையைத் தென்னிந்திய மாநிலங்கள் நன்கு உணர்ந்தன.

பிற போராட்டங்கள்

1986இல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திக்கு முதன்மை கொடுக்கும் நவோதயா பள்ளிகளை மாநிலங்களில் நிறுவிட முயன்றார். அப்போது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு ஏற்பட்டது. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

2014இல் நரேந்திரமோடி பிரதமராக இருந்தபோது அரசு அதிகாரிகள் இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார். அதுவும் மொழிப்போராட்டத்திற்கு வழிவகுத்தது.

இன்று முதல்வராக இருக்கின்ற திரு மு..ஸ்டாலின் மீண்டும் ஒரு மொழிப் போராட்டத்திற்கு வழிவகுக்காதீர் என்று அறிக்கை விடுகின்றார். இதுவும் மொழிப்போராட்டமாக வெடித்துவிடும் என்னும் எச்சரிக்கையே ஆகும்.

இன்று அறிவியல் முன்னேற்றத்தால் மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்துவிட்ட பிறகு அவரவர்கள் தத்தம் தாய் மொழியிலேயே பேசலாம்.  நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் தம் தாய்மொழியிலேயே பேசுகின்றர். அவர்களுடைய பேச்சுகள் உடனடியாக மொழிபெயர்க்கப்படுகின்றன. எனவே, இன்றைய காலத்தில் இந்தித் திணிப்பு தேவையற்றது.

 

 


சனி, 13 செப்டம்பர், 2025

முதலாழ்வார் மூவர்

  

முதலாழ்வார் மூவர்

பொய்கையாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று

விளக்கம்

“பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.


பூதத்தாழ்வார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

விளக்கம்

“பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.

 

பேயாழ்வார்

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

விளக்கம்

“பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.

 

 

 

 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

TANSCHE - நாயக்கர்கள்

 

நாயக்கர்கள்

சுல்தான்களால் சைவம், வைணவம் அழிந்து கொண்டிருந்த காலத்தில் அதனை மீட்டு எடுக்க ஹரிஹரன், புக்கர் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியே விசயநகர ஆட்சி ஆகும். விசயநகர ஆட்சியின் பிரதிநிதிகளாக நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். இவர்களின் ஆட்சி செஞ்சி, தஞ்சை, மதுரை என்ற முப்பிரிவுகளைக் கொண்டது.

குமாரகம்பண உடையார்

இவர் புக்கரின் மகன். மதுரையை ஆண்ட சுல்தான்களை வென்றவர். தமிழகத்தில் செஞ்சி, தஞ்சை, வேலூர் போன்ற இடங்களைக் கைப்பற்றி விசயநகரப் பிரதிநிதியாக இருந்தான். தமிழகத்துக் கோயில்களைப் புதுப்பித்தவர். இச்செய்திகளை மதுரா விஜயம் என்ற நூலின்வழி அறிய முடிகின்றது. இந்நூலை இயற்றியவர் குமாரகம்பண உடையாரின் மனைவி கங்காதேவி ஆவார்.

விசயநகரப் பேரரசும் தமிழகத்து நாயக்கர்களும்

சுதந்திரமாகச் செயல்பட எண்ணிய நாயக்கர்கள் விசயநகரப் பேரரசுக்குக் கப்பம் கட்ட மறுத்தனர். இதனால் கிருஷ்ணதேவராயர் கோபம் கொண்டு தமிழகத்தின் மீது படையெடுத்தார். அதன் பிறகு செஞ்சியில் வையப்ப நாயக்கனும், தஞ்சையில் விசயராகவ நாயக்கனும், மதுரையில் வெங்கடப்ப நாயக்கனும் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். கிருஷ்ண தேவராயருக்குப் பின் அவனது தம்பி அச்சுதராயன் விசயநகரப் பேரரசை ஆண்டான். இவன் இறந்தபிறகு அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தை நாயக்கர்கள் பயன்படுத்திக் கொண்டனர். சுதந்திரமாக நாட்டை ஆண்டனர். மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கன் நிர்வாகச் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்து நாயக்கர்களின் வலிமையை நிலைநாட்டினார்.

செஞ்சி நாயக்கர்கள்

பாகுகிருஷ்ணப்ப நாயக்கனின் வழிவந்தவர்கள் செஞ்சி நாயக்கர்கள். இவர்கள் பாலாற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டனர்.  பாகுகிருஷ்ணப்ப நாயக்கனுக்குப் பின் சூரப்ப நாயக்கன், கிருஷ்ணப்ப நாயக்கன், கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் ஆகியோர் ஆண்டனர். தில்லையில் கூத்த பெருமாள் ஆலயத்தின் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை நாயக்கர்கள்

திம்மப்ப நாயக்கன், செவப்ப நாயக்கன், அச்சுதப்ப நாயக்கன், இரகுநாத நாயக்கன், விசயராகவ நாயக்கன் ஆகியோர் தஞ்சையை ஆண்ட நாயக்கர்கள் ஆவர். மைசூர் உடையார்கள் மதுரையைத் தாக்கியபோது அவர்களுக்கு விசயராகவ நாயக்கன் துணை புரிந்துள்ளான். இறுதியில் நாயக்கன் சொக்கநாதன் தஞ்சையைக் கடுமையாகத் தாக்கினான். விசயராகவ நாயக்கன் கொல்லப்பட்டான். தஞ்சையில் சொக்கநாதன் அழகிரி நாயக்கனை அரியணை அமரச் செய்தான். பிறகு மதுரையுடன் தஞ்சை இணைக்கப்பட்டது. நாயக்கர்வழி வந்த செங்கமலதாசுக்குப் பீசப்பூர் சுல்தான் துணை புரிந்தார். எக்கோசியின் தலைமையில் அழகிரி நாயக்கனை வென்று தஞ்சை செங்கமதாசுக்கு வழங்கப்பட்டது. பின்பு எக்கோசிக்கே தஞ்சையை ஆளும் எண்ணம் ஏற்பட்டதால் தஞ்சை மராட்டியரின் கீழ் கொண்டு வரப்பட்டது.  தஞ்சை நாயக்கர் குறித்து சோழ மண்டலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

மதுரை நாயக்கர்கள்

விசுவநாத நாயக்கன், கிருஷ்ணப்ப நாயக்கன், முத்து கிருஷ்ணப்ப நாயக்கன், திருமலை நாயக்கன், சொக்கநாத நாயக்கன், இராணி மங்கம்மாள் ஆகியோர் மதுரை நாயக்கர்கள் ஆவர்.

விசுவநாத நாயக்கன்

இவன் கிருஷ்ணதேவராயரின் தளபதி நாகமநாயக்கனின் மகன். இவன் மதுரையின் மீது போர் தொடுத்து வெற்றி கண்டு, தன்னுடைய தளவாய் அரியநாதரின் துணை கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்தான். இவருடைய காலத்தில் திருச்சியும் மதுரையும் இணைந்து இருந்தது. திருச்சி சீரங்கநாதர் ஆலயத்தை மூன்று இலட்சம் செலவில் சீரமைத்தார் என அங்குள்ள கோயில் கல்வெட்டு காட்டுகின்றது. இவன் தனது ஆட்சிப் பரப்பை 72 பாளையங்களாகப் பிரித்து ஆண்டான். தெலுங்கர்களும், கன்னடர்களும், பாண்டியர் பரம்பரையினரும் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் போரின்போது மன்னர்களுக்கு உதவுமாறு பணிக்கப்பட்டனர். பாளையக்காரர்கள் பாளையத்தின் வருவாயை மூன்றில் ஒருபாகம் மன்னனுக்கும், ஒரு பாகம் நிர்வாகச் செலவுக்கும் பயன்படுத்தினர்.

கிருஷ்ணப்ப நாயக்கன்

இவன் விசுவநாத நாயக்கனின் மகன். இவனுடைய காலத்தில் விசயநகரத்துக்கும் பாமினி சுல்தான்களுக்குமிடையே தலைக்கோட்டையில் போர் நடைபெற்றது. அதில் இராமராயன் கொல்லப்பட்டான். அப்போரில் அரியநாதர் தலைமையில் படையை அனுப்பினான். திருமலைராயனுக்கு அவனுடைய பேரரசை மீட்க உதவினான். இவன் பெயரில் கிருஷ்ணாபுரம் என்ற நகர் ஏற்படுத்தப்பட்டது. திருவேங்கடநாதர் ஆலயத்திற்கும், மதுரை மீனாட்சி ஆலயத்திற்கும் திருப்பணிகள் செய்தான்.

அரியநாதர்

விசுவநாத நாயக்கர் தொடங்கி குமார கிருஷ்ணப்ப நாயக்கர் வரை நாயக்கர்களுக்குப் பெரும் உதவி புரிந்தவர் இவர். குமார கிருஷ்ணப்ப காலத்தில் உயிர் நீத்தார். இவர் நினைவாக மதுரை ஆயிரங்கால் மண்டபத்தின் முன் குதிரை மேல் அரியநாதர் அமர்ந்து இருப்பதுபோல் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

முத்து கிருஷ்ணப்ப நாயக்கன்

இவன் விசுவப்ப நாயக்கனின் மகன் ஆவார். இவன் காலத்தில் இராமேசுவரத்தில் திருடர்கள் தொல்லை அதிகமாக இருந்தமையால் அங்கு சடையத்தேவரை குறுநில மன்னனாக்கினார். கோயில்களுக்கு 13 கிராமங்களைத் தானமாகக் கொடுத்துள்ளார். சடையத்தேவர் சேதுபதி என்று அழைக்கப்பட்டார். இவர் காலத்தில் இராபர்–டி-நொபிலி மதுரைக்கு வந்தார்.

திருமலை நாயக்கன்

நாயக்கர் வரலாற்றின் கதிரவன் என்று போற்றப்படுபவர் திருமலை நாயக்கன். இவன் முத்து வீரப்பனின் மகன் ஆவார். மதுரையைத் தலைநகராகக் கொண்டார். சுயாட்சியை விரும்பியதால் விசயநகரப் பேரரசுக்கு எதிரியானார். இவர் அரசியல் சூழ்ச்சிகளில் வல்லவர். மைசூர், வேணாடு, இராமநாதபுரம், வேலூர் ஆகிய இடங்களில் போர் செய்து வெற்றி பெற்றார். இவருடைய காலத்தில் நடைபெற்ற மூக்கறுப்புப் போரால் மக்கள் பலர் மடிந்தனர். கோயில் திருப்பணிகளிலும், அரண்மனைகள் கட்டுவதிலும் ஆர்வம் கொண்டார். பாழ்பட்டுக் கிடந்த கோயில்களைச் செப்பனிட்டு அழகுபடுத்தினார். ஆண்டு ஒன்றுக்குப் பெருவிழாக்கள், சிறுவிழாக்கள் நடத்தி மதுரையை விழா நகரமாக்கினார். மதுரையில் அழகிய தெப்பகுளம், புதுமண்டபம், ஆவணி மூலை, இராயர் கோபுரம் ஆகியவை இவருடைய சீரிய பணிக்குச் சான்றுகளாகும். மதுரையின் மற்றொரு சிறப்பு திருமலை நாயக்கர் மகால் ஆகும். கங்காவதாரணம், நளசரித நாடகம், நீலகண்ட விசயம் ஆகிய பல புகழ் பெற்ற நூல்களைப் படைத்துள்ளார். அவருடைய அறப்பணிகளும், கலைப்பணிகளும், இறவாப் புகழை தந்தன.

சொக்கநாத நாயக்கன்

திருமலைக்குப் பிறகு சிறப்பான ஆட்சி புரிந்தவன் சொக்கநாத நாயக்கன் ஆவான். பீசப்பூர் அரசர்களை வெற்றி கொண்டான். தஞ்சை, செஞ்சி, வேலூர் போன்றவற்றைக் கைப்பற்றிய சிவாஜி மதுரையைக் கைப்பற்ற திருச்சி கொள்ளிட ஆற்றில் முகாமிட, அவனுக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் கொடுத்து படையெடுப்பைத் தவிர்த்தான். பாளையக்காரர்கள் துணை கொண்டு திருச்சியைக் கைப்பற்றிய ருசுதும்கானைக் கொன்று வெற்றி கண்டான். இவரது காலத்தில் ஜான் பிரிட்டோ மதுரையில் சமயத் தொண்டாற்றினார்

சொக்கநாதனுக்குப் பின் அரங்க கிருட்டி முத்து வீரப்பன், செஞ்சி சம்போஜி, மைசூர் சிக்கராய உனடயார், தஞ்சை எக்கோசி, இராமநாதபுரம் கிழவன் சேதுபதி ஆகியோர் மதுரையை ஆள நினைத்துப் போரிட்டனர்.

இராணி மங்கம்மாள்

அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் மடிந்த சில மாதங்களில் அவருடைய புதல்வன் விசயரங்க சொக்கநாதன் அரியணையில் அமர்த்தப்பட்டார். ஆயினும், அவருடைய பாட்டியும், சொக்கநாதனின் மனைவியுமான மங்கம்மாள் ஆளுநராக ஆட்சி நடத்தினார். முகலாயர்களின் வலிமையையும், நாயக்கர்களின் பலவீனத்தையும் உணர்ந்த மங்கம்மாள், முகலாய மன்னனுக்குப் பணிந்து, திறை செலுத்த இணங்கி, உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவருடைய உதவியை நாடினார். மராட்டியர்களிடத்தில் இழந்த பகுதிகளை மீட்டுக் கொண்டார். சமயப் பொறையுடன் அனைத்துச் சமயங்களையும் ஆதரித்தார். இதனால் நாட்டு மக்கள் தாங்கள் விரும்பும் சமயத்தைப் பின்பற்றும் உரிமையைப் பெற்றனர். நீர்நிலைகளை உருவாக்குதல், சாலைகள் அமைத்தல், சாலையில் நிழல் தரும் மரங்கள் நடுதல், சத்திரங்கள் அமைத்தல், அன்னச் சாவடிகள் அமைத்தல், தண்ணீர்ப்பந்தல் நிறுவுதல் உள்ளிட்ட பல அரும்பணிகளைச் செய்தார்.

விசயரங்க சொக்கநாத நாயக்கன்

இராணி மங்கம்மாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தார். அரசக் கடமை தவறி பக்தி நெறியில் வாழ்ந்தார். நாடு எங்கும் பூசல் நிகழ்ந்தது. எங்கும் வாரிசுரிமை போட்டி நிலவியது. பிறகு விசயரங்க சொக்கநாத நாயக்கனின் மனைவி மீனாட்சி ஆட்சியில் அமர்ந்தார். இறுதியில் சாந்தாசாகிப் மதுரையைக் கைப்பற்றியதால் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

நாயக்கரின் ஆட்சி முறை

நாயக்கர்கள் மன்னருக்கு அடுத்தபடியாக இருந்த அமைச்சர், தளபதி ஆகிய பதவிகளை ஒன்றாக்கி தளவாயாக மாற்றினர். தளவாய்க்கு அடுத்தபடியாக வருவாய் அதிகாரியான பிரதானி நிதி அமைச்சருக்கு இணையானவராக அமர்த்தப்பட்டார். பிரதானிக்கு அடுத்தபடியாக இராசயம் என்ற உயர் அதிகாரி இருந்தார். இவர்கள் நீங்கலாக கணக்கன் தணிக்கை அதிகாரியாகவும், தானாபதி அரசப் பிரதிநிதியாகவும் விளங்கினர்.

பேரரசு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மாநிலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டன. மாகாணா, சீமை என்ற பெயரில் பல கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. கிராமங்களின் பெயர்கள் மங்கலம், சமுத்திரம், குடி, ஊர், புரம், குலம், குறிச்சி, பட்டி எனப்பட்டன. கர்ணம், மணியக்காரன், தலையாரி எனக் கிராம அதிகாரிகள் இருந்தனர்.

திண்ணைப் பள்ளிகள் வழக்கத்தில் இருந்தன. சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மொழிகள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது.

இந்தோ சாரசானிய முறையில் அரண்மனைகள் கோட்டைகள் கட்டப்பட்டன. நெல்லை கூத்தப்பர் ஆலயம் இவர்களுடைய காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.

இலக்கியம்

வீரகவிராயரின் அரிச்சந்திர புராணம், அதிவீரராம பாண்டியனின் நைடதம், இலிங்கபுராணம், மகாபுராணம், கூர்மபுராணம், பதிற்றுப்பத்தந்தாதி, வரதுங்க ராம பாண்டியனின் கொக்கோகம், ஞானபிரகாசரின் திருவொற்றியூர் புராணம், நமச்சிவாயப் புலவரின் சிதம்பர வெண்பா, எல்லப்ப நாவலரின் அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், குமரகுருபர சுவாமிகளின் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், இரத்தினக் கவிராயரின் மச்ச புராணம், புலவராற்றுப்படை ஆகிய நூல்கள் எழுந்தன. சைவ சித்தாந்த நூல்களும், சிவஞான போத உரைகளும் தோன்றின. அமிர்த கவிராயர், சர்க்கரைப் புலவர் ஆகியோரும் நாயக்கர் காலப் புலவர்களாவர். சூரப்பநாயக்கன் அரண்மனையில் வாழ்ந்த புலவர் சீனிவாச தீட்சிதர் பவன புருடோத்தமம் என்ற நாடகத்தை இயற்றியுள்ளார்.