செவ்வாய், 5 நவம்பர், 2024

TANSCHE - தொழில்நுட்ப வளர்ச்சி

தொழில்நுட்ப வளர்ச்சி

விடுதலைக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் எண்ணற்ற பயன்கள் விளைந்தன. தொழில் துறைகள் வளர்ச்சியடைந்தன. பல தொழிற்சாலைகள் உருவாயின. அறிவுப் பெருக்கத்தால் பல புதிய புதிய இயந்திரங்கள் தோன்றின. மின் அடுப்பு, சலவை இயந்திரம், குளிர்சாதனங்கள், பாத்திரம் தூய்மை செய்யும் இயந்திரம், தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன.

இயந்திரங்களின் வகைகள்

இயந்திரவியலில் இயந்திரங்கள் இரு முக்கிய வகைப்படும். அவை, மரபு சார்ந்தவை, மரபு சாராதவை.

மரபு சார்ந்தவை

திரும்புமைய இயந்திரங்கள், எந்திரமைய இயந்திரங்கள், அலைவுமைய இயந்திரங்கள், இணைவுமைய இயந்திரங்கள்.

மரபு சாராதவை

சீரொளி இயந்திரங்கள், நீர்த்தாரை இயந்திரங்கள், கேளா ஒலி இயந்திரங்கள், சிராய்ப்புத்தாரை இயந்திரங்கள், மின்மவியல் இயந்திரங்கள், மின்கசிவு இயந்திரங்கள், மின்வேதி இயந்திரங்கள்.

இந்திய விடுதலைக்குப் பிறகு ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த இந்திய ஒன்றிய அரசு, இந்தியா பொருளாதார நிலையில் வளர்ச்சி அடைய அரும்பாடுபட்டது. இதன் காரணமாக ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கி பல்வேறு துறைகளில் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது. இன்றைய இந்தியா கண்டிருக்கும் வளர்ச்சி என்பது திட்டமிட்ட வளர்ச்சி எனில் மிகையில்லை. குறிப்பாகத் தமிழ்நாடு மாநிலத்தின் வளர்ச்சியானது இந்தியாவின் இதர மாநிலங்கள் அனைத்தையும் விஞ்சி நிற்பதாக உள்ளது. அதைப் பின்வருமாறு காணலாம்.

வேளாண்மைத் துறை

வேளாண்மையே பொருளாதார அமைப்பின் அடிப்படையாகும். ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, நெல்லை முதலிய பகுதிகள் வேளாண்மையில் சிறப்புடன் விளங்குகின்றன. இந்தியா விடுதலை அடைந்தபிறகு பவானி சாகர் அணை, அமராவதி அணை, மணிமுத்தாறு அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, ஆழியாறு அணை, சேர்வலாறு அணை போன்ற பெரிய அணைக்கட்டுகள் தமிழகத்தில் கட்டப்பட்டன. விடுதலைக்குப்பின் தமிழகத்தில் கரும்பு, நெல், பருத்தி, சோளம், கம்பு போன்ற விளைபொருட்களில் ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டதால், தமிழகத்தில் 1971க்கு முன்பாகவே உணவுத் துறையில் தன்னிறைவு ஏற்பட்டது. இதனால் இந்தியாவிலேயே பசுமைப் புரட்சி கண்ட இரண்டாவது மாநிலமாத் தமிழகம் விளங்குகின்றது.

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக நீர்வள ஆதாரங்களைப் பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், கால்நடை நலன் காத்தல், பால் உற்பத்தியைப் பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல் போன்ற திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன.

தொழில்துறை வளர்ச்சி

தமிழ்நாடு இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமாகும். இது பலதரப்பட்ட உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உற்பத்தி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் (டிட்கோ), தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி), தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (டான்சிட்கோ) ஆகியவை இணைந்து மாநிலத்தில் தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன. வேளாண்மை முதன்மைத் தொழிலாக விளங்கியபோதிலும், மக்கள் பிற தொழில்களிலும் ஈடுபட்டிருந்தனர். அத்தொழில்களைக் கனரகத் தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள் என்று பிரிக்கலாம்.

கனரகத் தொழில் துறை

நெசவு ஆலைகளே பெருந்தொழில் கூடமாக விளங்கி வந்த நிலை மாறி சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி செய்யும் தொழில்கள் பெருகின. மத்திய மாநில அரசுகள் துப்பாக்கித் தொழிற்சாலை, டாங்குகள் கட்டும் தொழிற்சாலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை என்ற புதிய கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன.

சிறுதொழிலும் தொழிற்பேட்டையும்

சிறுதொழில்கள் பெருமளவு பெருகியுள்ளன. அம்பத்தூர், கிண்டி, இராணிப்பேட்டை, அரக்கோணம், மார்த்தாண்டம், திருச்சி, காரைக்குடி, ஓசூர் முதலிய இடங்களில் உருவான தொழில்பேட்டைகள் குறிப்பிடத்தக்கன.

தொழிற்சாலைகள்

பஞ்சாலைத்தொழில் கோவை, மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய மாவட்டங்களில் சிறந்து விளங்குகின்றது. சர்க்கரை மற்றும் கரும்பு ஆலைத்தொழில் கிராமப்புற முன்னேற்றத்திற்குச் சாலை வசதி, மின்சார வசதி, வேலைவாய்ப்ப அளிப்பது ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது. டால்மியாபுரம், தாழையூத்து, சங்ககிரி போன்ற இடங்களில் சிமெண்ட் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. போக்குவரத்து ஊர்திகள் உற்பத்தி செய்யும் தொழில் சாலைகளில் அசோக் லேலாண்ட், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கன. மாதவரம், ஆம்பூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் தோல் பொருள் உற்பத்தி மையங்கள் உள்ளன.

மத்திய அரசு நிறுவனங்கள்

விடுதலைக்குப்பின் தமிழகத்தில் பல மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவற்றுள் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்துஸ்தான் டெல்லி பிரிண்டர்ஸ் லிமிடெட், உரத் தொழிற்சாலை, எஃகு தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்லை ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.

மின் உற்பத்தி

பேசின்பிரிட்ஜ் அனல்மின் நிலையம், மேட்டூர் நீர் மின் நிலையம் முதலியன உருவாக்கப்பட்டன. 1957இல் தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்பாக்கம் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல்மின் நிலையம் போன்றவை துவங்கப்பட்டன.

பேருந்து மற்றும இரயில் போக்குவரத்து

1972இல் பல்லவன் போக்குவரத்து கழகம் உருவானது. நெல்லை முதல் நாகர்கோவில் வரை, திண்டுக்கல் முதல் கருவூர் வரை, சேலம், தர்மபுரி முதல் பெங்களூர் வரை புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன.

தகவல் தொழில்நுட்பங்கள்

தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் உருவாகியுள்ளன. ஹவாய் தீவுகளில் 1990ஆம் ஆண்டு 2 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 1999இல் பன்மடங்கு அதிகரித்தது. அன்றைய முதல்வர் மு.கருணாநிதி முதல்வராக நடத்திய தமிழ் இணைய மாநாடும் ஒரு முக்கியமான சாதனையாகும். 2000இல் சென்னையில் தரமணியில் முதன் முதலாக கலைஞர் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா தமிழனை தொழில்நுட்பத் துறையில் உயர்த்தியது. கோவையிலும் அதே போன்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது. நாளுக்குநாள் புதிது புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள்கள் மனிதனின் அன்றாட வேலையை மிக எளிதாக்குகின்றன. கணினியும், திறன் பேசியும் இல்லாமல் இனி உலகம் இயங்காது என்ற நிலை உருவாகியுள்ளது. இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்பக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சிக்கு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம்

இத்திட்டத்தில், தகுதி வாய்ந்த நபர்களுக்குத் தரமான மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் குடும்பத்தின் நிதிச்சுமை பெருமளவு குறைக்கப்படுவதால் ஏழை எளிய மக்களுக்குப் பயனுள்ளதாக அமைகின்றது.

நான் முதல்வன் திட்டம்

இத்திட்டம் 2022ஆம் ஆண்டு திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான முயற்சியாக இத்திட்டம் செயல்படுகின்றது.

முடிவுரை

இன்னும் இது போன்ற பல துறைகளில் தொழில்நுட்பங்கள் தோன்றி, வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பங்கள் மக்களின் மிகப் பெரும் தேவைகளுள் ஒன்றாகி விட்டன. இனி வரும் காலங்களில் மனிதனின் அறிவாற்றலால் தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவில் மாற்றம் பெறும் என்பதில் ஐயமில்லை.

திங்கள், 4 நவம்பர், 2024

நிறுத்தற்குறிகள்

 

நிறுத்தற்குறிகள்

பேசுகின்றபோது சில சொற்களுக்குப் பின் இடைவெளி விடுதல், வேறு சில இடங்களில் அதிக இடைவெளி விடுதல், சொற்களையும் தொடர்களையும் ஏற்றஇறக்கத்தோடு ஒலித்தல் போன்ற முறைகளால் செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். எழுதும்போது பேச்சில் பயன்படுத்தும் மேற்கூறிய முறைகளைப் போன்று கால்புள்ளி [,], முற்றுப்புள்ளி [.], உணர்ச்சிக்குறி [!], கேள்விக்குறி [?] போன்ற குறிகளைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் நிறுத்தக்குறிகள்’ என்று கூறப்படுகின்றன. அவை பின்வருமாறு.

1.கால்புள்ளி (,)

2.அரைப்புள்ளி (;)

3.முக்கால்புள்ளி (:)

4.முற்றுப்புள்ளி (.)

5.முப்புள்ளி(...)

6. கேள்விக்குறி (?)

7. உணர்ச்சிக்குறி (!)

8. இரட்டை மேற்கோள்குறி (“ “)

9.ஒற்றை மேற்கோள்குறி (‘ ‘)

10. தனி மேற்கோள்குறி ( ‘ )

11. மேற்படிக்குறி (“)

12. பிறை அடைப்பு ( )

13. சதுர அடைப்பு [ ]

14. இணைப்புக்கோடு (வு)

15. இணைப்புச் சிறுகோடு (-)

16. சாய்கோடு (/)

17. அடிக்கோடு (_)

18. உடுக்குறி (*)

காற்புள்ளி

பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
 சான்று - ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.

விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - ஆருயிர்த் தந்தையே, வணக்கம்.

வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கம் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.

 இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.

சான்று மேலோர், கீழோர், அரசன் என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.

ஆனால், ஆயின், ஆகையால், எனவே போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி இட வேண்டும்.
சான்று - கந்தன் மிக நல்லவன்; ஆனால், அவன் படிப்பில் குறைந்தவன்.

அரைப்புள்ளி

பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
சான்று - கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள்மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.

 முக்காற் புள்ளி

சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

முற்றுப்புள்ளி

சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

சான்று - அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.

வினாக்குறி

வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.

சான்று – திருக்குறளை இயற்றியவர் யார்?

உணர்ச்சிக்குறி

மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
சான்று - போட்டியில் எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)

இடையீட்டுக் குறி     (      )   ]

ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
சான்று - திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.

பிறைக்குறி

மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
சான்று - பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.

 இரட்டை மேற்கோள் குறி

பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும் போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
சான்று - ‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.

 ஒற்றை மேற்கோள் குறி

இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
சான்று - ‘, , உ’  –  இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

 

நன்றி

https://thamizhkalanchiyam360.blogspot.com/2021/10/50-kalaichol-in-tamil.html

https://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=6


களவு வாழ்க்கையும் கற்பு வாழ்க்கையும்

 

களவு வாழ்க்கையும் கற்பு வாழ்க்கையும்

சங்க காலச் சான்றோர் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் இரண்டாகப் பகுத்திருந்தனர். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல் கொண்டு இன்புறும் ஒழுக்கத்தினை அகம் என்றனர். பிற வாழ்வியல் கூறுகளைப் புறம் என்றனர். இவ் இரண்டின் அடிப்படையிலேயே இலக்கியமும் தோன்றின.

அன்பின் ஐந்திணை

சங்கச் செய்யுட்களில் பெரும்பான்மை அகப்பாடல்களாகவே அமைந்துள்ளன. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. இவ் ஐந்தும் அன்பின் ஐந்திணை என்று போற்றப்படுகின்றது. பிறப்பு, குடிமை ஆகியவற்றால் ஒத்த காதலர்பால் நிகழும் காதல் அன்பின் ஐந்திணையாகவும், ஒரு தலைக்காதல் கைக்கிளை என்றும், பொருந்தாக் காதல் பெருந்திணை என்றும் பெயர் பெற்றன. இவ் அக வாழ்க்கை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன.

களவும் கற்பும்

அகத்திணை காதல் வாழ்க்கை களவு, கற்பு என இருவகைப் படுத்தப்பட்டுள்ளது. யாரும் அறியாத வகையில் ஒரு பெண்ணும், ஆணும் காதல் கொள்வது களவு என்றும், ஊரறிய திருமணம் செய்து கொண்டு வாழும் நிலையைக் கற்பு என்றும் பிரித்துள்ளனர்.

களவு வாழ்க்கை

களவு வாழ்க்கையில் பல நிலைகள் உண்டு. ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்ட பிறகு, அவர்களுடைய களவு வாழ்க்கை தொடர தோழியும், பாங்கனும் உதவி செய்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துப்  பகலிலும் இரவிலும் தங்கள் காதலை வளர்க்கின்றனர். இதற்குப் பகற்குறி, இரவுக்குறி என்று பெயர். தலைவியின் காதல் ஊராருக்குத் தெரியும்போது அவர்கள் தலைவனையும் தலைவியையும் பழிக்கின்றனர். அதை அலர் தூற்றுதல் என்று குறிக்கின்றனர். தலைவியின் தாய், தன் மகளின் காதல் தெரிந்த பிறகு அவளை வீட்டில் அடைத்து வைக்கின்றாள். இதற்கு இற்செறிப்பு என்று பெயர். பெற்றோருக்குத் தெரிந்த பின்பு, தங்கள் காதல் நிறைவேறாதோ என்ற அச்சத்தில் தலைவனும் தலைவியும் உடன்போக்கில் ஈடுபடுகின்றனர். அவர்களைத் தேடிப் பெற்றோர்கள் சென்றதாகப் பல பாடல்கள் காணப்படுகின்றன. தலைவியின் பெற்றோர் தலைவியைத் தனக்கு மணம் செய்து கொடுக்காதபோது தலைவன், தலைவியின் படத்தை எழுதி கையில் பிடித்தவாறு ஊரறிய நடந்து செல்கின்ற நிலையை மடலேறுதல் என்று குறிக்கின்றனர். இவை எதுவும் நிகழாதபோது, தோழி தலைவியின் காதலை, செவிலித்தாயிடமும், நற்றாயிடமும் முறைப்படி உரைத்து அவர்களின் காதல் திருமணத்தில் முடிய பேருதவி புரிகின்றாள். இத்தகு சூழலை அறத்தொடு நிற்றல் எனத் தமிழிலக்கியம் கூறுகின்றது.  களவு வாழ்க்கையில் தலைவன் தலைவியைப் பொருளீட்டும் பொருட்டுப் பிரிந்து செல்லுகின்ற நிலை காணப்படுகின்றது.

கற்பு வாழ்க்கை

அகத்திணையுள் திருமண வாழ்க்கை கற்பு எனப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோர்களும் திருமணத்திற்கு உடன்பட்டு, நல்ல நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வர். விடியற்காலையில் திருமணம் நடைபெறும். உளுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த உணவை விருந்தினர்க்குப் பரிமாறினர். புதுமணல் பரப்பி, மணப்பந்தல் அமைக்கப்பட்டது. குழந்தைகளைப் பெற்றெடுத்த மகளிர் நால்வர் மங்கல நீரால் மணமக்களை நீராட்டினர். இச்சடங்கு வதுவை நன்மணம் என்று குறிக்கப் பெறுகின்றது. “கற்பினின்று வழுவாது பெருமையுடைய மனைக்கிழத்தி ஆகுக” என்று மகளிர் வாழ்த்தினர். தாலி கட்டும் வழக்கம் சங்ககாலத்தில் இல்லை. திருமணநாள் அன்று மணமக்கள் மணவறையில் கூட்டப்பெற்றனர்.

திருமணமான பிறகு கணவன் தன் மனைவியைக் கல்வி கற்பதன் பொருட்டோ, பொருள் தேடுதற் பொருட்டோ பிரிவதுண்டு. கல்விக்காக ஏற்படும் பிரிவு மூன்றாடுகளுக்கு மேல் நீடிக்கக்கூடாது. மன்னனுடைய கடமைகைளை நிறைவேற்றும் பொருட்டுத் தன் மனைவியை விட்டுப் பிரிந்தால் அப்பிரிவு ஓராண்டுக்கு மேல் நீடிக்கக்கூடாது. கல்வி கற்கவும், பொருளீட்டவும், மன்னனுக்காகத் தூது செல்லவும் கணவன் பிரியும்போது மனைவி அவனுடன் செல்லும் வழக்கம் இல்லை.

தொழில் புரிவதை ஆடவர் தங்கள் உயிராக மதித்தனர். மகளிர் தம் கணவரை உயிராக மதித்தனர். இல்லறக் கடமைகளை நிறைவேற்றுவது பெண்களின் தலையாய கடமையாக இருந்தது. தன் கணவன் வறுமையுற்றபோதும் அதனைத் தன் பெற்றோருக்கு மறைத்து வாழ்வதே சிறந்த மனைவியின் பண்பாடு என்று கருதினர். தன் கணவன் தன்னை விட்டு, பரத்தையரோடு நட்பு கொண்டபோது ஊடல் கொள்கின்றாள். ஆனால் கணவனை விட்டுப்  பிரிந்து செல்ல முற்பட்டதில்லை. அவன் தவறைச் சுட்டிக் காட்டி அவனைத் திருத்த முயற்சிப்பதாகப் பல சங்கப் பாடல்கள் காணப்படுகின்றன. தலைவியின் ஊடலைத் தணிக்க, தோழி, செவிலி, நற்றாய், பாங்கன், பாணர்கள் உள்ளிட்ட பலர் வாயில்களாகச் செயல்பட்டுள்ளனர்.

இல்லறத்தின் சிறப்பு நன்மக்கட்பேறு. குழந்தையைப் பெறுவது தாயின் கடமை என்றும், அக்குழந்தைக்குக் கல்வியறிவைக் கொடுத்து சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்துவது தந்தையின் கடமை என்றும் போற்றப்பட்டது. விருந்தோம்பல் தம்பதியரின் தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது.