உயர்கல்வித்துறை - மூன்றாம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர்கல்வித்துறை - மூன்றாம் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 நவம்பர், 2024

தொழில்நுட்ப வளர்ச்சி

 

தொழில்நுட்ப வளர்ச்சி

விடுதலைக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் எண்ணற்ற பயன்கள் விளைந்தன. தொழில் துறைகள் வளர்ச்சியடைந்தன. பல தொழிற்சாலைகள் உருவாயின. அறிவுப் பெருக்கத்தால் பல புதிய புதிய இயந்திரங்கள் தோன்றின. மின் அடுப்பு, சலவை இயந்திரம், குளிர்சாதனங்கள், பாத்திரம் தூய்மை செய்யும் இயந்திரம், தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன.

வேளாண்மைத் துறை

இந்திய மக்களின் தலையாய தொழிலாக விளங்குவது வேளாண்மை. இன்று நவீன இயந்திரங்களின் மூலமாக வேளாண்மை செய்யப்படுகின்றது.  மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை கண்டறிய உணர்விகள் (சென்சார்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்களுக்குத் தேவையான அளவு மட்டுமே நீர்ப்பாய்ச்சப்படுகின்றன.  இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஜிபிஎஸ் தொழில்நுட்பம், வானிலைக் கண்காணிப்பு, தன்னியமாக்கல், ட்ரோன்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் உணவுத்துறையில் தன்னிறைவு ஏற்படுகின்றது. கனரகத் தொழில் துறை

அறிவியல் கண்டுபிடிப்புகளால் போக்குவரத்து வாகனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றை உருவாக்க பல தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இன்று பேருந்து, மகிழுந்து, இரண்டு சக்கர வண்டிகள், இரயில்கள், விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள் வெவ்வேறு வடிவங்களில் செயல்படுவதைக் காண முடிகின்றது. நடந்து செல்வோர் குறைந்து, சாமானிய மக்களும் காரில் உலா வருவதைக் காண்கிறோம். தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இவை வெற்றி பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது. இதைப் போன்று, வாகனங்களின் உதிரிப் பாகங்களை உருவாக்க எண்ணற்ற தானியங்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகையால் ஒரு வாகனத்தை உருவாக்குவது மிக எளிதான செயலாயிற்று. ஒளியின் வேகத்தில் செல்லக்கூடிய விமானங்கள், அதிவேக இரயில்கள், ஆயிரக்கணக்கான கொள்கலன்களை ஏற்றிச் செல்கின்ற கப்பல்கள் என போக்குவரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி உச்ச நிலையை எட்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்பங்கள்

இன்றைய உலகில் மிக தீவிரமாக உருப்பெற்று இயங்கிக் கொண்டிருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் உருவாகியுள்ளன. சென்னையில் முதன் முதலாக கலைஞர் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா தமிழனை தொழில்நுட்பத் துறையில் உயர்த்தியது. ஒரு செய்தியை மற்றவருக்குத் தெரிவிப்பதில் கடிதப் போக்குவரத்து தொடங்கி இன்று திறன் பேசி மூலமாக உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் நாம் உரையாட முடிகின்றது. கணினி தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மக்களின் வாழ்க்கை நவீனமயமாகிவிட்டது. நாளுக்குநாள் புதிது புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள்கள் மனிதனின் அன்றாட வேலையை மிக எளிதாக்குகின்றன. கணினியும், திறன் பேசியும் இல்லாமல் இனி உலகம் இயங்காது என்ற நிலை உருவாகியுள்ளது. இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வித்துறை

பள்ளிக்குச் சென்று கல்வி பயிலும் நிலை மாறி, வீட்டில் இருந்தபடியே கணினி மூலம் கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளது. விரும்புகின்ற நூல்களை உடனுக்குடன் வலைதளத்தில் படிக்க முடிகின்றது. பாடம் தொடர்பான ஐயங்களை வலைதளம் மூலமாகத் தீர்த்துக் கொள்வதும், பாடக் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்து அறிவைப் பெருக்கிக் கொள்வதும் மிக எளிதாகி விட்டன. வலைதளங்கள், வலையொளிகள், வலைப்பூக்கள், காணொளிகள், இணைய வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பெருகி கற்றலையும், கற்பித்தலையும் எளிதாக்கியுள்ளன.

மருத்துவத் துறை

இறைவனுக்கு அடுத்து மக்கள் நம்பிக்கைக் கொள்கின்ற இடம் மருத்துவமனை. மருத்துவத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியால், நோய்கள் தடுக்கப்படுகின்றன. கடும் நோய்கள் களையப்படுகின்றன. உயிர்கள் காக்கப்படுகின்றன. இறப்பு விகிதம் குறைகின்றன. எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் முதலிய தொழில்நுட்பங்களால் உடலுக்குள் விளைகின்ற மாற்றங்கள் கண்டறியப்பட்டு மருத்துவம் செய்யப்படுகின்றது. லேசர் கருவிகள் மூலமாக அறுவை சிகிச்சைகள் கத்தியின்றி இரத்தமின்றி நடத்தப்படுகின்றன. புதிய மாத்திரைகளின் கண்டுபிடிப்புகள் நோய்களை விரட்டுகின்றன. உடல் உறுப்புகளை இழந்தாலும், செயற்கை உடல் உறுப்புகளால் மனிதன் நிம்மதியாக நடமாட முடிகின்றது.

முடிவுரை

இன்னும் இது போன்ற பல துறைகளில் தொழில்நுட்பங்கள் தோன்றி, வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளால் பல நன்மைகள் ஒரு புறம் இருப்பினும், சில தீமைகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பங்கள் மக்களின் மிகப் பெரும் தேவைகளுள் ஒன்றாகி விட்டன. இனி வரும் காலங்களில் மனிதனின் அறிவாற்றலால் தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவில் மாற்றம் பெறும் என்பதில் ஐயமில்லை.


திங்கள், 4 நவம்பர், 2024

நிறுத்தற்குறிகள்

 

நிறுத்தற்குறிகள்

பேசுகின்றபோது சில சொற்களுக்குப் பின் இடைவெளி விடுதல், வேறு சில இடங்களில் அதிக இடைவெளி விடுதல், சொற்களையும் தொடர்களையும் ஏற்றஇறக்கத்தோடு ஒலித்தல் போன்ற முறைகளால் செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். எழுதும்போது பேச்சில் பயன்படுத்தும் மேற்கூறிய முறைகளைப் போன்று கால்புள்ளி [,], முற்றுப்புள்ளி [.], உணர்ச்சிக்குறி [!], கேள்விக்குறி [?] போன்ற குறிகளைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் நிறுத்தக்குறிகள்’ என்று கூறப்படுகின்றன. அவை பின்வருமாறு.

1.கால்புள்ளி (,)

2.அரைப்புள்ளி (;)

3.முக்கால்புள்ளி (:)

4.முற்றுப்புள்ளி (.)

5.முப்புள்ளி(...)

6. கேள்விக்குறி (?)

7. உணர்ச்சிக்குறி (!)

8. இரட்டை மேற்கோள்குறி (“ “)

9.ஒற்றை மேற்கோள்குறி (‘ ‘)

10. தனி மேற்கோள்குறி ( ‘ )

11. மேற்படிக்குறி (“)

12. பிறை அடைப்பு ( )

13. சதுர அடைப்பு [ ]

14. இணைப்புக்கோடு (வு)

15. இணைப்புச் சிறுகோடு (-)

16. சாய்கோடு (/)

17. அடிக்கோடு (_)

18. உடுக்குறி (*)

காற்புள்ளி

பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
 சான்று - ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.

விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - ஆருயிர்த் தந்தையே, வணக்கம்.

வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கம் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.

 இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.

சான்று மேலோர், கீழோர், அரசன் என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.

ஆனால், ஆயின், ஆகையால், எனவே போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி இட வேண்டும்.
சான்று - கந்தன் மிக நல்லவன்; ஆனால், அவன் படிப்பில் குறைந்தவன்.

அரைப்புள்ளி

பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
சான்று - கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள்மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.

 முக்காற் புள்ளி

சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

முற்றுப்புள்ளி

சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

சான்று - அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.

வினாக்குறி

வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.

சான்று – திருக்குறளை இயற்றியவர் யார்?

உணர்ச்சிக்குறி

மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
சான்று - போட்டியில் எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)

இடையீட்டுக் குறி     (      )   ]

ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
சான்று - திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.

பிறைக்குறி

மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
சான்று - பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.

 இரட்டை மேற்கோள் குறி

பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும் போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
சான்று - ‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.

 ஒற்றை மேற்கோள் குறி

இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
சான்று - ‘, , உ’  –  இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

 

நன்றி

https://thamizhkalanchiyam360.blogspot.com/2021/10/50-kalaichol-in-tamil.html

https://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=6


களவு வாழ்க்கையும் கற்பு வாழ்க்கையும்

 

களவு வாழ்க்கையும் கற்பு வாழ்க்கையும்

சங்க காலச் சான்றோர் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் இரண்டாகப் பகுத்திருந்தனர். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல் கொண்டு இன்புறும் ஒழுக்கத்தினை அகம் என்றனர். பிற வாழ்வியல் கூறுகளைப் புறம் என்றனர். இவ் இரண்டின் அடிப்படையிலேயே இலக்கியமும் தோன்றின.

அன்பின் ஐந்திணை

சங்கச் செய்யுட்களில் பெரும்பான்மை அகப்பாடல்களாகவே அமைந்துள்ளன. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. இவ் ஐந்தும் அன்பின் ஐந்திணை என்று போற்றப்படுகின்றது. பிறப்பு, குடிமை ஆகியவற்றால் ஒத்த காதலர்பால் நிகழும் காதல் அன்பின் ஐந்திணையாகவும், ஒரு தலைக்காதல் கைக்கிளை என்றும், பொருந்தாக் காதல் பெருந்திணை என்றும் பெயர் பெற்றன. இவ் அக வாழ்க்கை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன.

களவும் கற்பும்

அகத்திணை காதல் வாழ்க்கை களவு, கற்பு என இருவகைப் படுத்தப்பட்டுள்ளது. யாரும் அறியாத வகையில் ஒரு பெண்ணும், ஆணும் காதல் கொள்வது களவு என்றும், ஊரறிய திருமணம் செய்து கொண்டு வாழும் நிலையைக் கற்பு என்றும் பிரித்துள்ளனர்.

களவு வாழ்க்கை

களவு வாழ்க்கையில் பல நிலைகள் உண்டு. ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்ட பிறகு, அவர்களுடைய களவு வாழ்க்கை தொடர தோழியும், பாங்கனும் உதவி செய்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துப்  பகலிலும் இரவிலும் தங்கள் காதலை வளர்க்கின்றனர். இதற்குப் பகற்குறி, இரவுக்குறி என்று பெயர். தலைவியின் காதல் ஊராருக்குத் தெரியும்போது அவர்கள் தலைவனையும் தலைவியையும் பழிக்கின்றனர். அதை அலர் தூற்றுதல் என்று குறிக்கின்றனர். தலைவியின் தாய், தன் மகளின் காதல் தெரிந்த பிறகு அவளை வீட்டில் அடைத்து வைக்கின்றாள். இதற்கு இற்செறிப்பு என்று பெயர். பெற்றோருக்குத் தெரிந்த பின்பு, தங்கள் காதல் நிறைவேறாதோ என்ற அச்சத்தில் தலைவனும் தலைவியும் உடன்போக்கில் ஈடுபடுகின்றனர். அவர்களைத் தேடிப் பெற்றோர்கள் சென்றதாகப் பல பாடல்கள் காணப்படுகின்றன. தலைவியின் பெற்றோர் தலைவியைத் தனக்கு மணம் செய்து கொடுக்காதபோது தலைவன், தலைவியின் படத்தை எழுதி கையில் பிடித்தவாறு ஊரறிய நடந்து செல்கின்ற நிலையை மடலேறுதல் என்று குறிக்கின்றனர். இவை எதுவும் நிகழாதபோது, தோழி தலைவியின் காதலை, செவிலித்தாயிடமும், நற்றாயிடமும் முறைப்படி உரைத்து அவர்களின் காதல் திருமணத்தில் முடிய பேருதவி புரிகின்றாள். இத்தகு சூழலை அறத்தொடு நிற்றல் எனத் தமிழிலக்கியம் கூறுகின்றது.  களவு வாழ்க்கையில் தலைவன் தலைவியைப் பொருளீட்டும் பொருட்டுப் பிரிந்து செல்லுகின்ற நிலை காணப்படுகின்றது.

கற்பு வாழ்க்கை

அகத்திணையுள் திருமண வாழ்க்கை கற்பு எனப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோர்களும் திருமணத்திற்கு உடன்பட்டு, நல்ல நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வர். விடியற்காலையில் திருமணம் நடைபெறும். உளுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த உணவை விருந்தினர்க்குப் பரிமாறினர். புதுமணல் பரப்பி, மணப்பந்தல் அமைக்கப்பட்டது. குழந்தைகளைப் பெற்றெடுத்த மகளிர் நால்வர் மங்கல நீரால் மணமக்களை நீராட்டினர். இச்சடங்கு வதுவை நன்மணம் என்று குறிக்கப் பெறுகின்றது. “கற்பினின்று வழுவாது பெருமையுடைய மனைக்கிழத்தி ஆகுக” என்று மகளிர் வாழ்த்தினர். தாலி கட்டும் வழக்கம் சங்ககாலத்தில் இல்லை. திருமணநாள் அன்று மணமக்கள் மணவறையில் கூட்டப்பெற்றனர்.

திருமணமான பிறகு கணவன் தன் மனைவியைக் கல்வி கற்பதன் பொருட்டோ, பொருள் தேடுதற் பொருட்டோ பிரிவதுண்டு. கல்விக்காக ஏற்படும் பிரிவு மூன்றாடுகளுக்கு மேல் நீடிக்கக்கூடாது. மன்னனுடைய கடமைகைளை நிறைவேற்றும் பொருட்டுத் தன் மனைவியை விட்டுப் பிரிந்தால் அப்பிரிவு ஓராண்டுக்கு மேல் நீடிக்கக்கூடாது. கல்வி கற்கவும், பொருளீட்டவும், மன்னனுக்காகத் தூது செல்லவும் கணவன் பிரியும்போது மனைவி அவனுடன் செல்லும் வழக்கம் இல்லை.

தொழில் புரிவதை ஆடவர் தங்கள் உயிராக மதித்தனர். மகளிர் தம் கணவரை உயிராக மதித்தனர். இல்லறக் கடமைகளை நிறைவேற்றுவது பெண்களின் தலையாய கடமையாக இருந்தது. தன் கணவன் வறுமையுற்றபோதும் அதனைத் தன் பெற்றோருக்கு மறைத்து வாழ்வதே சிறந்த மனைவியின் பண்பாடு என்று கருதினர். தன் கணவன் தன்னை விட்டு, பரத்தையரோடு நட்பு கொண்டபோது ஊடல் கொள்கின்றாள். ஆனால் கணவனை விட்டுப்  பிரிந்து செல்ல முற்பட்டதில்லை. அவன் தவறைச் சுட்டிக் காட்டி அவனைத் திருத்த முயற்சிப்பதாகப் பல சங்கப் பாடல்கள் காணப்படுகின்றன. தலைவியின் ஊடலைத் தணிக்க, தோழி, செவிலி, நற்றாய், பாங்கன், பாணர்கள் உள்ளிட்ட பலர் வாயில்களாகச் செயல்பட்டுள்ளனர்.

இல்லறத்தின் சிறப்பு நன்மக்கட்பேறு. குழந்தையைப் பெறுவது தாயின் கடமை என்றும், அக்குழந்தைக்குக் கல்வியறிவைக் கொடுத்து சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்துவது தந்தையின் கடமை என்றும் போற்றப்பட்டது. விருந்தோம்பல் தம்பதியரின் தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது.

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

சமூக மறுமலர்ச்சி

 

சமூக மறுமலர்ச்சி

இந்தியா விடுதலை பெற்ற பின்னர், தமிழகத்தில் அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூக வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல நிகழ்ந்தன.

அரசியல் நிர்வாகம்

தமிழகத்தில் முடியாட்சி நீங்கிக் குடியாட்சி மலர்ந்தது. 1952இல் திரு இராசாகோபாலச்சாரியார் தமிழகத்தின் முதல்வரானார். அரசின் செயல்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடாதவாறு, அறநெறியுடன் ஆட்சி செய்ய விரும்பினார். அயல்நாட்டு மது வகைகளுக்கு விற்பனை வரி விதித்தார். பொதுக்களின் நலனை விரும்பி நிர்வாகத் துறையைக் கவனமாகக் கையாண்டார்.

1954ஆம் ஆண்டு திரு கு.காமராசர் முதல்வரானார். இவர் காலத்தில் வேளாண்மை, கல்வி, தொழில், மின்சாரம் ஆகியவற்றில் தமிழகம் தலைசிறந்து விளங்கியது. நெல்சோள உற்பத்தித் திறனில் முதன்மைப் பெற்றது. கட்டாயக்கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. ஏழைச் சிறார்களுக்கு மதிய உணவும், சீருடையும், பாடநூல்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இவர் அடித்தள மக்களின் நலனை மனதில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டார்.

1963 ஆம் ஆண்டு திரு பக்தவச்சலம் முதல்வரானார். இவர் காலத்தில் குறைந்த ஊதியம் உள்ளோருக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது.

1967ஆம் ஆண்டு திரு அண்ணாதுரை முதல்வரானார். திராவிடப் பண்பாட்டை உயர்த்தவும், தமிழர் வாழ்வு மறுமலர்ச்சி பெறவும் பாடுபட்டார். கலப்புமணத் தம்பதியரைச் சிறப்பித்துத் தங்கப்பதக்கம் வழங்கினார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார். மருத்துவக் கல்விக்கும், ஆய்வுக்கும் தனி இயக்கம் ஏற்படுத்தி, பொது நலத்திற்கும், மருத்துவத்திற்கும் தொண்டு செய்யத் தூண்டினார்.

1969ஆம் ஆண்டு திரு கருணாநிதி முதல்வரானார். மாநிலத் திட்டக் குழுவை நியமித்துப் பயிர்த்தொழிலுக்கும், பாசனத்திற்கும் பல தொண்டுகள் செய்தார். தொழுநோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளித்தல், பார்வையற்றோருக்குக் கண்ணொளி வழங்குதல், உடல் ஊனமுற்றோர்க்கு மறுவாழ்வு அளித்தல், கைம்பெண்களுக்குத் தையற்பொறி வழங்கி அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தல் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தார்.

1977ஆம் ஆண்டு திரு எம்.ஜி.இராமச்சந்திரன் முதல்வரானார். மதுவிலக்கில் தீவிரமாக ஈடுபட்டார். புயல், தீ, வெள்ளம் போன்றவற்றால் சேதமுற்ற ஏழை மக்களுக்கு விரைந்து உதவினார். வறுமையில் வாடும் தமிழ் அறிஞர்களுக்கு உதவிப் பணம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முயன்றார். ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்புற நடத்தினார். தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்க முயன்றார்.

இவ்வாறு பல முதல்வர்கள் தோன்றி அவ்வக்காலத்து ஏற்படும் தேவைக்கேற்பப் பல மாறுதல்களைக் கொணடு வந்தனர். இன்று தமிழகம் பல துறைகளில் தன்னிகரற்று விளங்குவதற்கு அவர்களே காரணம். இன்றும் செல்வி ஜெயலலிதா, திரு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முதல்வர்கள் தமிழகத்தில் தோன்றி மக்களின் நலனுக்காக அருந்தொண்டாற்றியுள்ளமை கண்கூடு. 

பொருளாதார வளர்ச்சி

விடுதலைக்குப் பிறகு நீராவி இயந்திரத்தின் மூலம் பெரிய பெரிய தொழிற்சாலைகள் பெருகின. குடிசை தொழிலாக இருந்த நூற்பும், நெசவும் தொழிற்சாலைக்கு மாறின. ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி, நிலக்கடலை போன்ற வாணிகப் பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டமையால் அவற்றின் உற்பத்திக்கு உழவர்கள் ஊக்கம் காட்டினர். ஐந்தாண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன் மூலம் தொழில் வளர்ச்சிகள் பெருக்கப்பட்டன. இத்திட்டத்தின் பயனால் உழவுத்தொழில் பல முனைகளில் வளர்ச்சி பெற்றது. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட பழுப்பு நிலக்கரித் திட்டம் பெருவெற்றி அடைந்தது. இங்குக் கிடைக்கும் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம், செயற்கை உரம், அடுப்புக்கரி ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. சென்னையில் இணைப்பு இரயில் தொழிற்சாலை, எண்ணூர் அனல் மின்சார நிலையம், திருவெறும்பூர் உயர் அழுத்தக் கொதிகலன் தொழிற்சாலை, ஆவடி டாங்கித் தொழிற்சாலை, மணலி மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை, கல்பாக்கம் மின் அணு நிலையம் முதலியவை பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தொழிலாளர் நலன் கருதி தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. தொழில் உற்பத்தியில் துணைக்கண்டத்தில் தமிழகம் மூன்றாம் இடத்தை எட்டியது.

சமூக நிலை

விடுதலைக்குப்பின் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாம், சமணம், பார்சி முதலிய சமயங்களும், நாத்திகவாதம், பகுத்தறிவாதம் முதலிய கோட்பாடுகளும் வழக்கில் இருந்தன. சாதாரண மக்கள் கல்வி, அரசியல் ஆகியவற்றின் மூலம் வெளியுலகத் தொடர்பைப் பெற்றனர். விடுதலைக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களும், ஆலைத் தொழில்களும், திரை அரங்குகளும், வாணிபமும் பெருகின. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருவோர் எண்ணிக்கை பெருகியது. ஆதரவு இழந்த முதியோருக்கு உதவித் தொகை அளிக்க அரசு முன்வந்தது. ஊரகங்களிலும், நகரங்களிலும் நூலகங்கள் பெருகின. பெண்கள் கல்விப் பயனைப் பெறும் நிலை விரிவடைந்தது. ஆசிரியைப் பணி, அலுவலகப்பணி, மருத்துவப்பணி முதலியவற்றுக்குச் செல்லும் மகளிரின் எண்ணிக்கை பெருகியது. பெண்கள் பொது வாழ்வில் பங்கு கொண்டனர். பெண்களின் உரிமைக்கென சட்டங்கள் இயற்றப்பட்டன.

நகர வாழ்க்கை, உணவு விடுதிகள், இரயில்கள், விமானங்கள், பேருந்துகள் போன்ற போக்குவரத்து வசதிகள், பல்கலைக்கழகங்கள், குழாய்த்தண்ணீர், ஆங்கில மருத்துவம், கோயில் திருவிழாக்கள் முதலியவை மக்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தின. கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், உயர்தரக் கல்வி நிலையங்கள் பன்மடங்கு பெருகின. வேளாண்மைப் பல்கலைக்கழகம், தொழில்நுட்பப் பல்கைலக்கழகம் தொடங்கப்பட்டன.

குடிநல வளர்ச்சி, சமுதாய வாழ்க்கைச் சீர்த்திருத்தங்கள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் இந்தியா முழுவதிலும் தமிழ்நாடு தலையாய இடத்தில் நிற்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையை அழிக்கக்கூடிய தீய பூசல்களோ, சுயநல இயக்கங்களோ காணப்படாமை பெரிதும் பாராட்டக்குரியது.

 -------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

           

 

 

சனி, 26 அக்டோபர், 2024

முகமதியர் ஆட்சி

 

முகமதியர் ஆட்சி

தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் ஏற்பட்டன.

அலாவுதீன்

கி.பி.1290இல் தில்லியில் சுல்தானாய் இருந்தவன் ஜலாலுதீன் கில்ஜி. இவர் பண்புடைய அரசன். தன் மகளை அலாவுதீன் என்பவனுக்குத் திருமணம் செய்து வைத்தார். இராசபுத்திரர்கள் கில்ஜியை எதிர்த்தனர். அவர்களை அடக்க அலாவுதீன் அனுப்பப்பட்டார். மன்னனின் ஒப்புதலைப் பெறாமல் தென்னகத்தின் மேல் படையெடுத்தார் அலாவுதீன். 8000 வீரர்களுடன் போர் நினைவே இல்லாத அமைதியான யாதவ நாட்டின் மீது 1294இல் திடீரென போர் நிகழ்த்தினார். எதிர்பாராது தாக்குண்ட யாதவ மன்னன் அலாவுதீனுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார். இதனால் பல்வேறு பொன், முத்து, இரத்தினம், வெள்ளி, பட்டுத்துணிகள் ஆகியவற்றை யாதவ மன்னன் அலாவுதீனுக்குக் கொடுக்க நேர்ந்தது. தென்னிந்தியாவின் மீது நடந்த முதல் இசுலாமியப் படையெடுப்பு இதுவேயாகும். வெற்றிப் பொருள்களுடன் தில்லி திரும்பிய அலாவுதீன், மன்னன் ஜலாலுதீனைக் கொன்று தில்லி ஆட்சியைக் கைப்பற்றினார்.

மாலிக்காபூர்

தென்னிந்திய படையெடுப்பை மேற்கொண்டு வெற்றி பெற்ற அலாவுதீன் கில்ஜி, தன் படைத்தளபதியான மாலிக்காபூர் தலைமையில் தேவகிரி யாதவர்களையும், காகதியர்களையும், போசளர்களையும் தோற்கடித்தார். மாலிக்காபூர் திருவரங்கம், மதுரை முதலிய இடங்களைக் கொடூரமாகத் தாக்கினார். மதுரையில் வீர பாண்டியனைத் தோற்கடிக்க எண்ணி, கண்ணனூரை நோக்கி விரைந்தார். வழியில் பொன்னும், மணியும்  ஏற்றிக் கொண்டு சென்ற 120 யானைகளைக் கைப்பற்றினார். தம் கைகளில் இருந்த நழுவிச் சென்ற வீரபாண்டியனைத் துரத்திக் கொண்டு சிதம்பரம் விரைந்தார். அங்குப் பொன்னம்பலத்தை அடியுடன் பேர்த்து எடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினார். ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து வெறியாடினார். தன் கண்ணில் பட்ட கோயில்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தீ வைத்தான். தான் கைப்பற்றி இருந்த 512 யானைகள், 5000 குதிரைகள் ஆகியவற்றுடன் மதுரையை விட்டுப் புறப்பட்டு இராமேசுவரம் சென்றார். அந்நகரை அழித்து மக்களைப் படுகொலை செய்து, கொள்ளையடித்தார். அங்கு மசூதி ஒன்றைக் கட்டினார். மதுரையை ஆண்ட அலாவுதீன் இறந்ததும் அவன் பிள்ளைகளைச் சிறையில் அடைத்தார். அலாவுதீன் மகன்களுள் ஒருவனைப் பேருக்கு மன்னனாக்கி மாலிக்காபூரே நாட்டை ஆண்டார். மணிமகுடம் சூடிய 35ஆம் நாள் மாலிக்காபூர் கொல்லப்பட்டார்.

முகமது பின் துக்ளக்

கியாசுதீன் துக்ளக்கின் மகனான பக்ருதீன் முகமது ஜூனாகான் என்பவரே முகமது பின் துக்ளக் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதில் திறம்படச் செயல்பட்டதால், பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டு உலுக்கான் என்ற பட்டம் பெற்றார். 1325இல் சுல்தானைக் கொன்று விட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் காலத்தில் மதுரையில் முழுமையாக முசுலீம் ஆட்சி நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் முசுலீம் பாதுகாப்புப் படைகள் பல இடங்களில் நிறுவப்பட்டன.  இவரிடம் பல உயிரிய குணங்கள் இருந்தன. கணிதம், வானநூல், தத்துவம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பாரசீக மொழியில் சில பாடல்களையும் இயற்றியுள்ளார். எளிமையாக வாழ்க்கை வாழ விரும்பிய இம்மன்னன், இந்து மதத்தினர் மீது மிகவும் பரிவு காட்டினார். ஆற்றல் மிக்கவனாக, அறிவு நிறைந்தவராகக் காணப்பட்டார். இவருடைய நிர்வாகச் சீர்த்திருத்தங்களில் வருவாய்த்துறை மாற்றங்கள், தலைநகர் மாற்றங்கள், அடையாள நாணயமுறை, சமயக்கோட்பாடு, விவசாய இலாகா மாற்றங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

பிரோஸ் துக்ளக்

இவர் அமைதியை விரும்பினார். அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஜாகிர் முறையை இவர் புதுப்பித்தார். தம்மிடம் இருந்து பறிபோன தக்காணம், வங்காளம், சிந்து, இராஜஸ்தானம் ஆகிய மாநிலங்களை மீட்க இவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இவருக்கு முன் ஆட்சி செய்த அரசர்களோடு மிகவும் மாறுபட்டு இருந்தார்.

தைமூர்

1398இல் தைமூர் மேற்கொண்ட படையெடுப்பு முசுலீம் பேரரசை தடுமாறச் செய்தது. நாட்டைச் சூறையாடியதுடன் ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றார். 1399இல் இந்தியாவை விட்டு வெளியேறினார்.

இப்ரஹிம் லோடி

தில்லிச் சுல்தானியர்களின் கடைசி சுல்தான் இவர். இவருடைய பேரரசு குன்றிக் குறுகி இருந்தது. தில்லி, ஆக்ரா, சாந்தேரி, ஜான்பூர், பீகாரின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளுக்கு அப்பால் இவருடைய ஆட்சி பரவவில்லை. பல பிரபுக்களை இன்னலுக்கு ஆளாக்கி இழிவுபடுத்தினார். அவருடைய அரசியல் தந்திரமற்ற செயல்களால் சுல்தானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாபர் 1526இல் முதல் பானிபட் போரில் இப்ரஹிம் லோடியை தோற்கடித்துக் கொன்றார்.

 

புதன், 16 அக்டோபர், 2024

பண்டைத் தமிழர்களின் வாணிகம்

 

பண்டைத் தமிழர்களின் வாணிகம்

உழவுத்தொழிலும், வாணிகமும் பண்டையத் தமிழரின் இருபெரும் முக்கியத் தொழில்களாக இருந்தன. வாழ்க்கை நலன்களுக்காக பல பண்டங்களும், ஏற்றமதி செய்யப்பட்ட பல பொருள்களும் தமிழ்நாட்டில் உற்பத்தியாயின.

உழவுத்தொழில் சிறப்பு

தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலாக உழவு விளங்கியது. அது மக்களுடைய வளத்துக்கும், மன்னனுடைய வளத்துக்கும் அடிப்படையாக விளங்கியது. உழவுகின்ற நிலம் செழிப்பாக இருந்தமையால் உணவுப் பண்டங்களின் விளைச்சல் வரம்பின்றிக் காணப்பட்டது. நெல்லும், கரும்பும், தென்னையும், வாழையும், மஞ்சளும், இஞ்சியும், பருத்தியும் தமிழகம் முழுவதும் பயிர் செய்யப்பட்டன. நிலத்தை உழுவதும், எரு விடுவதும், நாற்று நடுவதும், தண்ணீர் கட்டுவதும், களை எடுப்பதும், பயிரைக் காப்பதும் உழவுப் பணிகளுள் சிலவாகும்.

மருத நிலத்தில் நெல்லும் கரும்பும் முக்கியப் பயிர்களாகும். வரகும், தினையும் முல்லை நிலத்தின் முக்கியப் பயிர்கள். பழங்கள், கிழங்குகள், வள்ளிச் செடிகள் ஆகியவை குறிஞ்சி நிலத்திற்குரியவையாகும்.

உழவுத்தொழிலுக்கு நீர் வசதி அளித்தனர். காவிரியில் அணை கட்டினர். கால்வாய்கள் அமைத்தனர். குளங்கள், ஏரிகள், கிணறு ஆகியவற்றை உருவாக்கினர்

ஆநிரை மேய்த்தல்

          உழவுத்தொழிலின் ஒரு பகுதியாக ஆடு மாடுகளை மேய்த்தனர். இது ஆயர்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. கையில் கோலுடன் மந்தைகளின் பின்னால் சென்று ஆயர்கள் கடினமாக உழைத்தனர். பானைகளில் மோர், வெண்ணெய் ஆகியவற்றை விற்றனர்.

தமிழ்நாட்டினரும் அயல் நாட்டினரும்

தமிழ்நாட்டுக் கைவினைஞர்களுடன் அயல்நாட்டுத் தொழிலாளர்களும் இணைந்து பல கைவினைப் பொருட்களை உருவாக்கினர். மகத நாட்டு இரத்தின வேலைக்காரர்கள், மராட்டியக் கம்மியர், அவந்தி நாட்டுக் கொல்லர்கள், யவன நாட்டின் தச்சர்கள் ஆகியோர் தமிழ்நாட்டுக் கம்மியருடன் கூடி கண்கவரும் பொருட்களைப் படைத்தனர் என்பதை மணிமேலை குறிப்பிடுகின்றது. கோசல நாட்டு ஓவியர்களும், வத்தவ நாட்டு வண்ணக் கம்மர்களும் தமிழகத்தில் பிழைக்க வந்தனர்.

வணிகர்கள்

  • ·   ஓவியத்திற்கான வண்ணக்குழம்பு பூசு சுண்ணம், நறுமணக் கூட்டுகள், மலர் மாலைகள், சந்தனம், பச்சைக் கற்பரம் போன்ற நறுமணப் பண்டங்களை விற்பவர்களும்,
  • · பட்டு நூலாலும், எலியின் முடி, பருத்தி நூல், ஊசி ஆகியவற்றைக் கொண்டு தறியின் அச்சினைக் கட்டும் காருகர்களும்,
  • ·  பட்டு, பவளம், சந்தனம், அகில், முத்து, மணி, பொன் ஆகியவற்றை நோட்டம் பார்ப்பவர்களும்,
  • ·       நெல், புல்லரிசி, வரகு, திணை, சாமை, மூங்கிலரிசி வணிகர்களும்,
  • ·  கள் விற்கும் பெண்களும், மீன் விற்கும் பரதவரும், உப்பு விற்கும் உமணரும், வெற்றிலை வணிகரும்,
  • ·       தக்கோலம், தீம்பு, இலவங்கம், சாதிக்காய் விற்பர்களும்,
  • ·       எண்ணெய் வாணிகரும்,
  • ·       வெண்கலம், செம்புக் கலங்கள் தட்டுபவர்களும்,
  • ·       தச்சர், ஓவியர், சிற்பிகள் முதலியோரும்,
  • ·   செயற்கைப் பூங்கொத்துகள், வாடாமாலைகள், பொய்க்கொண்டைகள் செய்வோர்களும்,
  • · சிறுசிறு கைத்தொழில்களைப் பிறருக்குப் பயிற்றுவோர்களும் பூம்புகாரில் திரண்டிருந்தனர் என்பதை சிலப்பதிகாரம் கூறுகின்றது.

வணிக மக்களின் பண்பு

பல தொழிலைச் செய்யும் மக்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தொழில்முறையில் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு இல்லை. நாட்டு வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வுக்கும் தங்களின் உழைப்பு இன்றியமையாததது என்ற உணர்வே அவர்களிடம் மேலோங்கியிருந்தது. தங்கள் தொழிலை நேர்மையாக நடத்தினர்.

வணிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடித் தம் பண்டங்களை பல ஊர்களுக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்வர். இக்குழுக்களுக்கு வாணிகச் சாத்துகள் என்று பெயர். கள்வர்களுக்கு அஞ்சி அவர்கள் கூட்டமாகச் செல்வர்.

சிறந்த வாணிகம்

உடை வாணிகம், ஓலை வாணிகம், கூல வாணிகம், பொன் வாணிகம் ஆகியவை சிறப்பான வாணிகங்களாகப் போற்றப்பட்டன.

பண்டமாற்று வாணிகம்

பண்டமாற்று முறையிலே வாணிகம் நடைபெற்றது. தேன், நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீன், நறவு ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டன. கரும்பு, அவல் ஆகியவை மானின் இறைச்சிக்கும், கள்ளுக்கும் மாறின. நெய்யை விற்று எருமை வாங்கினர். உப்புக்கு நெல் மாற்றப்பட்டது. பச்சைப் பயறுக்கு ஈடாக கெடிறு என்னும் மீன் மாற்றப்பட்டது.

பண்டமாற்று முறையில் குறிப்பிட்ட பண்டத்தைக் கடனாகக் கொண்டு ஒரு காலத்திற்குப் பிறகு அதைத் திலுப்பிக் கொடுக்கும்குறியெதிர்ப்பைஎன்ற ஒரு முறை வழங்கி வந்தது.

நாணயங்கள்

பண்டமாற்று வாணிகம் இல்லாதபோது நாணயங்களைப் பயன்படுத்தி பண்டங்களை வாங்கவும் விற்கவும் செய்தனர். சங்க காலத்தில் மன்னர்கள் நாணயம் அச்சிட்டிருப்பதையும், வெளிநாட்டு வணிகர்கள் அவர்கள் நாட்டு நாணயங்களைக் கொண்டு வந்து பயன்படுத்தியதையும் அறிய முடிகின்றது.

விற்பனை செய்யப்பட்ட நிலை

சில பண்டங்கள் உற்பத்தியான இடத்திலேயே விற்பனை செய்யப்பட்டன. சில பண்டங்கள் ஊர் ஊராக எடுசத்துச் சென்று விற்றனர். உப்பு, மிளகு ஆகியவை ஊர் ஊராக விற்கப்பட்டன. பண்டங்களை வண்டிகளின் மேலும, கழுதையின் மேலும் ஏற்றிச் செல்வர். சரக்கு மூட்டைகளின் மேல் அவற்றின் அளவு அல்லது எடை பொறிக்கப்பட்டன. தாம் விற்கும் பண்டங்களைப் பற்றிய விளக்கம் எழுதிய கொடிகளை வணிகர்கள் தம் கடைகளின் மேல் பறக்க விட்டனர். வணிகச் சாத்துகள் கழுதையின் மேல் மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லும்போது அவற்றுக்குச் சுங்கம் செலுத்தினர்.

    கீழைக் கடற்கரையிலிருந்து மதுரைக்குக் கப்பலில் அகில் முதலிய நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றி வந்த யவனர்கள் அதே மரக்கலங்களில பொன் அணிகலன்களையும், புளி கருப்பட்டி சேர்ந்து பிசைந்த தீம்புளி என்ற பண்டத்தையும், மீனையும், உப்பையும், தத்தம் நாட்டுக்கு ஏற்றிச் செல்வர்.

ஏற்றுமதியும் இறக்குமதியும்

கொங்கு நாடடுத் தங்கம், பாண்டி நாட்டு முத்து, மிளகு, வாசனைப் பொருட்கள், இஞ்சி, தந்தம், ஏலம், கிராம்பு போன்றவை மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின. உயர்தரமான ஆடைகள், பட்டு ஆடைகள், விரிப்புகள், ஓவிய வேலைப்பாடுடைய பொருட்கள், வைரம், பிற விலை உயர்ந்த கற்கள் ஆகியவை வெளிநாட்டு வணிகர்களைக் கவர்ந்தன.

மேற்கு நாடுகளில் இருந்து உயர் ரக மது வகைகள், கண்ணாடிப் பொருட்கள், குதிரைகள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இலங்கையிலிருந்தும் பர்மாவிலிருந்தும் உணவுப் பொருட்கள் வந்து இறங்கின. சீனாவில் இருந்து அழகிய பட்டுகளும், சர்க்கரையும் வரவழைக்கப்பட்டன.

தங்கக்காசுகள்

அயல்நாட்டு வாணிகத்தில் தங்க நாணயங்கள் வழக்கில் இருந்தன. கணம் என்றொரு பொற்காசு சங்க காலத்தில் இருந்தது. மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்காசுகளைப் பரிசுகளாக்க் கொடுத்தனர். பெண்கள் பொற்காசுகளை மாலையாக்க் கோர்த்து அணிந்து கொண்டனர். அக்காலத்தில் இரும்புக்கும் பொன் என்று பெயர் வழங்கப்பட்டது.

அளவைகள்

வாணிகத்தில் பலவகையான அளவைகள் வழங்கி வந்தன. எடுத்தல் அளவை சிலவற்றுக்குக் கழங்கு, கழற்சிக்காய் என்று பெயர். எண் என்னும் சொல் எண்ணையும் கணிதத்தையும் குறித்தது. நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை ஆகியவற்றுக்கும் சங்க இலக்கியத்தில் சொற்கள் காணப்படுகின்றன.

துறைமுகங்கள்

தமிழகத்துத் துறைமுகங்களில் அயலார் கலங்கள் குவிந்து கிடந்தன. பொறையாறு, புகார், கொற்கை ஆகியவை சிறந்த துறைமுகங்களாகச் செயல்பட்டன. கோட்டாறு, மதுரை, முசிறி, உறையூர் ஆகியவை வெளிநாட்டு வணிகர்களின் ஆரவாரம் பெற்ற உள்நாட்டு நகரங்களாக விளங்கின. தமிழ்நாட்டில் வணிகம் சிறந்திருந்தது என்பதைப் பட்டினப்பாலை காட்டுகின்றது.