சனி, 20 மார்ச், 2021

புறநானூறு - உண்டாலம்ம இவ்வுலகம், யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூறு

பாடல் எண் : 1

திணை : பொதுவியல்

துறை: பொருண்மொழிக்காஞ்சி

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி.

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”

பொதுவியல் திணை:

          பொதுவியல் திணை என்பது வெட்சித்திணை முதல் பாடாண் திணை வரையுள்ள ஏழு புறத்திணைகளிலும் கூறமுடியாமல் விடுபட்டிருக்கும் செய்திகளைத் தொகுத்துக் கூறுவது. போர், வெற்றி போன்ற செய்திகளைக் கூறாமல், இவ்வுலக வாழ்க்கைக்குரிய அறச்செய்திகளைக் கூறுவதால், இப்பாடல்பொதுவியல் திணை ஆயிற்று.

பொருண்மொழிக்காஞ்சி:

          வாழ்வின் நிலையாமையை விளக்கி உறுதிப்பொருள்களைக் கூறுவது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும். இப்பாடல் வாழ்க்கைக்கு நலம் தரும் அறச்செயல்களை எடுத்துக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆயிற்று.

பாடிய புலவர்:

          கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. இவர் பாண்டிய மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர். இவர் போருக்காகக் கடற்படையில் சென்றபோது கப்பல் கவிழ்ந்து கடலில் மூழ்கினார். இதனால் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எனப் பெயர் பெற்றார்.

பாடல் விளக்கம்:

          கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி சான்றோர்களின் பண்பு நலன்கள் குறித்துப் பாடிய பாடல் ஆகும். 

  • சான்றோர்கள் தேவர்களின் உணவாகிய அமிழ்தம் தவப்பயனாகவோ தெய்வத்தாலோ கிடைத்தாலும் தனியாக உண்ணமாட்டார்கள். அமிழ்தத்தை உண்டால் நீண்டநாள் வாழமுடியும், இருப்பினும் அதைத் தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கும் கொடுத்து உண்பர். 
  • யார் மீதும் வெறுப்பைக் காட்ட மாட்டார்கள். அஞ்சத் தகுந்த பழிபாவங்களுக்கு அஞ்சி வாழ்பவர்கள். ஒரு போதும் சோம்பலின்றிச் சுறுசுறுப்புடன் வாழ்பவர்கள். 
  • பழந்தமிழர்கள் புகழ் கிடைப்பதாக இருந்தால் தன் உயிரையும் கொடுப்பர். பழி என்றால் உலகம் முழுமையும் கிடைப்பதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மனக்கவலையின்றி வாழ்பவர்கள். 
  • இத்தகைய பெருமை பொருந்திய குணங்களை உடையவர்களான இவர்கள் ஒருபோதும் தமக்கு என்று முயற்சித்து வாழாமல் பிறருக்காக முயற்சித்து நல்லது செய்து வாழ்பவர்கள்.
  • இத்தகையவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.        

பாடல் எண்: 2

திணை : பொதுவியல்

துறை: பொருண்மொழிக்காஞ்சி

பாடியவர் : கணியன் பூங்குன்றனார்.

பொதுவியல் திணை :

          இப்பாடல் மக்களின் வாழ்க்கைக்குரிய செய்திகளைக் கூறுவதால் பொதுவியல் திணை ஆயிற்று.

பொருண்மொழிக்காஞ்சி:

          இப்பாடல் உலகத்திலுள்ள உயிர்களுக்கு உறுதியைத் தரக்கூடிய இம்மை மறுமைச் செய்திகளைக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆயிற்று.

 பாடிய புலவர்;

          கணியன் பூங்குன்றனார். இவர் சங்ககாலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்ட ஊரில் பிறந்தவர். கணிதத்திறமை மிகுந்தவர். ஆதலால் கணியன் பூங்குன்றனார் என்று அழைக்கப்பட்டார்.

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்

         முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”

 பாடல் விளக்கம்:

  • இவ்வுலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்குச் சொந்தமான ஊர்களாகும். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நமது உறவினர்கள். ஒருவருக்கு வரக்கூடிய நோய்களும் துன்பமும் பிறரால் வருவதில்லை.
  • நமக்கு வரக்கூடிய துன்பத்திற்கும் இன்பத்திற்கும் நாமேதான் காரணமாக அமைகிறோம். இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறத்தல் என்பது புதியது அல்ல. ஓர் உயிர் கருவில் தோன்றிய நாளிலேயே இறப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 
  • இவ்வுலக வாழ்க்கை இனியது என்று மகிழ்வதும் இல்லை. வாழ்க்கையில் துன்பம் வந்தபோது வாழ்வை வெறுப்பதும் இல்லை. 
  • வானில் மின்னல் தோன்றி குளிர்ந்த மழை பெய்கிறது. மழைப்பொழிவினால் பெருகிவரும் ஆற்று நீர் கல்லை உருட்டிவருகிறது. ஆற்றுநீரின் வழியே செல்லும் தெப்பம் போல உயிரின் நிலையானது ஊழ்வினை வழியே செல்கிறது. 
  • நல்ல நூல்களைத் தேர்ந்து படித்த சான்றோர் இதனைத் தெளிந்து கூறியுள்ளனர். எனவே பெருமை மிகுந்த பெரியோரை மதித்தலும் இல்லை, சிறுமை உடைய சிறியோரை இகழ்தலும் இல்லை. 
  • உலக உயிர்கள் அனைத்தும் தாம்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் அடைகின்றனர். 
  • இவ்வாறு இவ்வுலக வாழ்க்கையின் உண்மை நிலையினை இப்பாடல் தெளிவாக உணர்த்துகிறது.   


ஆக்கத்தில் உதவி

நன்றி - முனைவர் ஜா.கீதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாஆதர்ஷ் மகளிர் கல்லூரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக