பன்னிரு
திருமுறைகள்
பன்னிரு
திருமுறைகள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடப்பட்டவை. பத்தாம்
நூற்றாண்டில் இராசராசச் சோழன், கோவில்களில் வாய்மொழியாகப் பாடப்பட்ட தேவாரப் பாடல்களைத் தொகுக்க
எண்ணினார். நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோயிலில் தேவாரப்
பாடல்கள் இருப்பதை அறிந்தார். தேவாரம் பாடிய மூவர் வந்தால் மட்டுமே அறையின் கதவைத்
திறக்க முடியும் என்ற நிலையில், தேவார மூவரையும் சிலை
வடிவில் அங்குக் கொண்டு வந்து நிறுத்தி அறையின் கதவைத் திறக்கச் செய்தார். அங்கே
ஓலைச்சுவடிகள் பல செல்லரித்திருந்ததைக் கண்டு மனம் வருந்தி எஞ்சியவற்றைப்
பாதுகாத்து நம்பியாண்டார் நம்பியிடம் ஒப்படைத்தார். கி.பி.பதினோராம் நூற்றாண்டில்
நம்பியாண்டார் நம்பி அவற்றை பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார். பின்னர் அநபாயச்
சோழனின் வேண்டுகோளுக்கிணங்கிச் சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம்
பன்னிரெண்டாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.
திருமுறை - விளக்கம்
திரு என்றால் தெய்வீக நூல் என்று பொருள்படும். முறை என்றால் வாழ்வினை நெறிப்படுத்தக்கூடிய நூல் என்று பொருள்படும். வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பல கருத்துகள் தாங்கிய தெய்வீக நூல் என்ற
பொருள்பட திருமுறை என்ற பெயர் விளங்குவதாயிற்று.
தேவாரம் -
விளக்கம்
தே + ஆரம் = தேவாரம். தேன் போன்ற இனிமையான பாடல்களை இறைவனுக்கு அணிகலனாகச்
சூட்டியமையால் தேவாரம் எனப்பட்டது.
தேவார மூவர்
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடிய பெரியோர்கள் ஆவர். இவர்கள் பாடிய
பதிகங்கள் யாவும் தேவாரம் என்ற பெயரால் அறியப்படுகின்றன.
பன்னிரு
திருமுறைகளின் தொகுப்பு
1,2,3ஆம் திருமுறைகள்
திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1,2,3ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது.
4,5,6 ஆம் திருமுறைகள்
திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 4,5,6ஆ-ம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இவரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.
7ஆம் திருமுறை
சுந்தரர் பாடிய பாடல்கள் 7ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது.
8ஆம்
திருமுறை
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
9ஆம் திருமுறை
திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருசோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை ஆகும்.
10ஆம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பக்தியோடு யோகாசன முறைகளையும் எடுத்துக் கூறுகிறது.
இந்நூலுக்குத் திருமந்திர மாலை, தமிழ் மூவாயிரம் என்னும் வேறு பெயர்களும்உண்டு. திருமந்திரம் 9 தந்திரங்களும் 232 அதிகாரங்களும் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றிய திருமூலர் திருவாவடுதுறை அரச மரத்தடியில் யோகம் இருந்தார். ஆண்டுக்கு ஒருமுறை விழித்தெழுந்து ஒரு பாடல் வீதம் 3000 பாடல்கள் பாடியதாகக் கூறப்படுகிறது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற புகழ் பெற்ற தொடர் இந்நூலில் இருந்தே பெறப்பட்டது.
11ஆம் திருமுறை
திருஆலவாயுடையார், காரைக்கால்அம்மையார், ஐயடிகள்காடவர்கோன்,சேரமான்பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர்,இளம்பெருமாள்அடிகள், அதிராவடிகள்,பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய பதினோரு நபர்களால் பாடிய பாடல்கள் 11-ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 11-ஆம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
12ஆம்
திருமுறை
63 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றி சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர்
புராணம் 12-ஆம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.
சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர். உத்தமச்
சோழப் பல்லவன் என்ற பட்டம் பெற்றவர். அநபாயச் சோழன்
சிந்தாமணி நூலின் மேல் விருப்பம் கொண்டிருந்ததைக் கண்டு அம்மன்னனைச் சைவத்தின்
மீது திருப்ப சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடினார் என்பர். திருத்தொண்டர் புராணமே நாளடைவில் பெரியபுராணம் என வழங்கப்பட்டு வருகிறது.
சுந்தரர் பாடிய
திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும்
கொண்டு சேக்கிழார் பெரியபுராணம்பாடியுள்ளார். இந்நூல் 3 சருக்கங்களையும் 4286 பாடல்களையும்
கொண்டுள்ளது.
பன்னிரு திருமுறைகளின்
சிறப்புப் பெயர்கள்
· முதல் திருமுறையின் முதல் பாடல் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ‘ஓ’ என்பது பிரவண மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது. பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் ‘உலகெல்லாம்’ என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ‘ம்’ என்பது பிரவண மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது. எனவே, இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன.
பன்னிரு திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 10ஆம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 11ஆம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. 12ஆம் திருமுறை பாடல்கள் 63 நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.
Thanks for your information
பதிலளிநீக்கு