ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

நெடுநல்வாடை

நெடுநல்வாடை

பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

கோவலர் வாடையால் துன்புறுதல்

வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்        

நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ

மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்

கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

கூதிர்க் கால நிலை

மாமேயல் மறப்ப மந்தி கூரப்

பறவை படிவன வீழக் கறவை       

கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்

குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்      

ஊரின் செழிப்பு

புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்

பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்

பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி       

இருங்களி பரந்த ஈர வெண்மணற்

செவ்வரி நாரையொ டெவ்வாயுங் கவரக்

கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப்

பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை

அகலிரு விசும்பில் துவலை கற்ப   

அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த

வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க

முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற்

கொழுமடல் அவிழ்ந்த குரூஉக்கொள் பெருங்குலை

நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு  

தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற

நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்

குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க

முழுவலி மாக்கள் 

மாட மோங்கிய மல்லன் மூதூர்

ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்    

படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள்

முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு

தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத்

தண்துளி பேணார் பகலிறந்து

இருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதர  

மாலைக் கால வழிபாடு

வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்

மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்

பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து   

அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து

இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ

நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது

மல்லல் ஆவணம் மாலை யயர     

மனையுறை புறாக்கள்

மனையுறை புறவின் செங்காற் சேவல்     

இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது

இரவும் பகலும் மயங்கிக் கையற்று

மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்        

 குளிர் காலத்தில் பயன்படா பொருட்கள்

கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்

கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக  

வடவர் தந்த வான்கேழ் வட்டம்

தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்

கூந்தல் மகளிர் கோதை புனையார்

பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்

தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து    

இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்

கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த

செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்

சிலம்பி வானூல் வலந்தன தூங்க

வானுற நிவந்த மேனிலை மருங்கின்        

வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்

நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்

போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக்

கல்லென் துவலை தூவலின் யாவரும்

தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்        

பகுவாய்த் தடவில் செந்நெருப் பார

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்

தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை

கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்

கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் 

காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து

கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்       

அரசியின் அரண்மனை

மனை வகுத்த முறை

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்

இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்

பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து   

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்

தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்

பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து   

கோபுர வாயில்

ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்

பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத்  

துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு

நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்

போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்

தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற்

கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து          

ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை

வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்

குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில் 

முற்றமும் முன்வாயிலும்

திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்

தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து    

நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை

குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்        

அரண்மனையில் எழும் ஓசைகள்

பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி

புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு

நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக் 

கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்

கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயல

ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்

கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை

நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில    

அந்தப்புரத்தின் அமைப்பு

யவனர் இயற்றிய வினைமாண் பாவை

கையேந் தையகல் நிறையநெய் சொரிந்து

பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி

அறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப்

பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப் 

பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது

ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்

வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு

வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்

வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ     

மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்

செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்

உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்

கருவொடு பெயரிய காண்பி னல்லில்     

அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்

தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்        

இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்

பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து

சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன்

கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு

தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்   

புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு

உள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப்

பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்        

கட்டிலின்மேல் அமைந்த படுக்கை

மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு

முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப்       

புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்

தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து

ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்

வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து

முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்த       

மெல்லிதின் விரிந்த சேக்க மேம்படத்      

 அரசி மலரணையில் வீற்றிருத்தல்

துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி

இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்

காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்

தோடமை தூமடி விரித்த சேக்கை  

ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப்

பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து

நன்னுதல் உலறிய சின்மெல் லோதி

நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்

வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற்       

பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை

வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து

வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்

செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்

பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல்      

அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு

புனையா ஓவியங் கடுப்பப் புனைவில்     

சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்

தளிரேர் மேனித் தாய சுணங்கின்

அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை

வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின்         

மெல்லியல் மகளிர் நல்லடி வருட

நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல்

செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்

குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி

இன்னே வருகுவர் இன்துணை யோரென 

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து 

தலைவியின் வருத்த மிகுதி

நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்

ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்

புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக    

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து

முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா

மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி

செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்   

புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு         

இன்னா அரும்படர் தீர விறறந்து

இன்னே முடிகதில் அம்ம மின்னவிர்       

பாசறையில் அரசன் நிலை

ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை

நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக்       

களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்

ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து

வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்

தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்

பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல       

வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு

முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்

மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு

பருமங் களையாப் பாய்பரிக் கலிமா

இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப

புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ

வாள்தோள் கோத்த வன்கட் காளை

சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து

நூல்கால் யாத்த மாலை வெண்குடை

தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப       

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்

சிலரொடு திரிதரும் வேந்தன்

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. 

 பாடல் விளக்கம்

கோவலர் வாடையால் துன்புறுதல்

பருவம் தவறாமல் பெய்யும் கார்காலத்து மேகம் தான் கிடந்த மலையை வலப்பக்கமாகச் சுற்றிச் சூழ்ந்து எழுந்தது. உலகம் குளிரும்படியாக மழையைப் பெய்தது. மழை மிகுதியாகப் பெய்தமையால் கோவலர் அம்மழையை வெறுத்துத் தம் ஆநிரைகளை மேட்டுநிலம் நோக்கி ஓட்டிச் சென்றனர். தாம் பழகிய இடத்தை விட்டு வந்ததற்காக வருந்தினர். அவர்கள் அணிந்திருந்த வெண்காந்தள் மலரில் இருந்து நீரை்த்துளி அவர்களின் உடம்பின் மீது பட்டு, குளிரை அதிகப்படுத்தியது. பனியோடு சேர்ந்து வாடைக்காற்றும் வீசியதால் நெருப்பை மூட்டி அதன் அருகே தம் பற்கள் கொட்ட நடுங்கியவண்ணம் குளிர் காய்ந்தனர். 

கூதிர்க் கால நிலை

  மழையின் காரணமாக விலங்குகள் மேய்ச்சல் தொழிலைக் கைவிட்டன. குரங்குகள் குளிரால் நடுங்கித் மரத்திற்கு மரம் தாவ முடியாமல் நடுங்கின. மரத்தில் வாழும் இயல்புடைய பறவைகள் காற்று மிகுதியால் நிலத்தில் விழுந்தன. பசுக்கள் தம் கன்றுகள் பால் உண்ணாதபடி உதைத்தன. மலையையும் குளிர்விப்பதைக் போன்றிருந்தது அக்கூதிர் காலம்.

ஊரின் செழிப்பு

முசுண்டைக் கொடியில் பொறிப்பொறியாக வெண்ணிறப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அதனோடு புதர் வேலியில் பீர்க்கம் பூ பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. ஈர மணலில் இருக்கும் பசுமை நிறக் கால்களை உடைய கொக்கு, சிவந்த கால்களை உடைய நாரை ஆகியவை எளிமையாகக் கவர்ந்துண்ணும்படி கயல் மீன்களை ஆற்று வெள்ளம் அடித்து வந்தது.  வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர் வளைந்து தொங்குகிறது. பாக்கு மரத்தில் காய்கள்  முற்றித் தொங்குகின்றன. காட்டில் பூத்திருக்கும் குளிர்கால மலர்களில் பனித்துளிகள் தூங்குகின்றன. 

முழுவலி மாக்கள்

பழமையான வளமான அவ்வூரில் மாடமாளிகைகள் ஓங்கியிருந்தன. ஆறு போன்ற அகன்ற தெருக்கள் காணப்படுகின்றன. முழு வலிமை பெற்று முறுக்கான உடல் கொண்ட காவல் புரியும் மக்கள், படலைப் பூ மாலையைத் தலையில் சூடியுள்ளனர். அவர்கள் வண்டு மொய்க்கும் தேறல் பருகியிருக்கிறார்கள். தம் மேல் சிந்தும் பனித் துளிகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. முன்னும் பின்னும் தொங்கவிடப்பட்ட ஆடையை அணிந்தவர்களாய், மாலைப் பொழுதில் தம் மனம் விரும்பிய இடத்தில் திரிகின்றனர்.

மாலையில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்

சங்கு வளையல்களை அணிந்த முன்கையினையும், மூங்கில் போன்ற தோள்களையும், மென்மையான சாயலையும் , முத்துப் போன்ற பற்களையும் உடைய பெண்கள் பிச்சிப் பூவைப் பறித்து வைக்க, தட்டில் உள்ள அரும்புகள் மலர்ந்து மணம் கமழ்வதைக் கண்டு மாலைப்பொழுது வந்துவிட்டது என்பதை அறிந்தனர். இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் திரியைத் திரித்து விட்டு விளக்கு ஏற்றுகின்றனர். நெல்லும் மலரும் தூவி, மாலைக்காலத்தை வழிபடுகின்றனர்.

மனையுறைப் புறாக்கள்

வீட்டில் இருக்கும் புறாக்கள் தான் இன்புறும் பெண்புறாவுடன் வெளியு சென்று இரை தேடி உண்ணாமல் இரவு பகல் அறியாமல் மயங்கின. மதலைப் பள்ளியில், மாட இருக்கையில் இடம் மாறி மாறி உட்காருகின்றன. இரவிலும் பகலிலும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டு மயங்கிக் கிடக்கின்றன.

குளிர் காலத்தில் பயன்படா பொருட்கள்

காவல் பொருநு்திய அகன்ற வீடுகளில் பணி செய்யும் பணியாளர்கள் வெப்பம் தரும் மணக்கூட்டுப் பொருட்களை அரைக்கின்றனர். வடநாட்டு மக்கள் தந்த வட்டமான சந்தனக் கல்லும், தென்னாட்டுச் சந்தனக் கட்டையும் அரைக்கப்படாமல் தூங்குகின்றன. (சந்தனம் குளுமைக்காகப் பூசப்படுவது ஆகையால் குளிர் காலத்தில் பயனற்றுக் கிடக்கிறது) மகளிர் நிறைந்த பூக்கள் கொண்ட மாலைகளைத் தோளில் அணிந்துகொள்ளவில்லை. சிலவாகிய ஒரிரு பூக்களையே தலையில் செருகிக்கொண்டனர்.  நெருப்பில் அகில் கட்டைத் துகள்களையும், வெண்ணிற அயிரையும் (சாம்பிராணியையும்) போட்டுப் புகைத்து உலர்த்திக் கொண்டனர். கைத்தொழில் கலைஞன் கம்மியன் செய்து தந்த செந்நிற வட்ட விசிறி விரிக்கப்படாமல் சுருக்கித் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் சிலந்திப் பூச்சி கூடு கட்டும் அளவுக்குப் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. மேல்மாடத்தில் தென்றல் வீசும் சன்னல்கள் திறக்கப்படாமல் தாழிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வாடைக்காற்றின் நீர்த் துவலை தூவிக்கொண்டே இருந்ததால் யாரும் கூம்பிய கன்னல் சொம்பில் குளிர்ந்த நீரைப் பருகவில்லை. மாறாக அகன்ற வாயை உடைய தடவில் (தடா வட்டி) சுடச்சுட வெந்நீரைப் பருகினர். ஆடல் மகளிர்க்குப் பாட்டுப் பாடவேண்டிய நிலை வந்தபோது, பாடலுக்கு யாழிசை கூட்டவேண்டிய நிலையில், யாழ் நரம்பு குளிர் ஏறிக் கிடந்ததால், அவற்றைச் சூடாக்கும் பொருட்டு, யாழ் நரம்புகளை மகளிர் தம் குவிந்து திரண்ட முலை முகடுகளில் தேய்த்துச் சூடேற்றிக் கொண்டனர். காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர் புலம்பிக்கொண்டிருந்தனர். பெருமழையோடு கூதிர்க் குளிர் வீசிக்கொண்டிருந்தது.

அரசியின் அரண்மனை

மனை வகுத்த முறை

அரசிக்கு மனை அரண்மனைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டது. கட்டடக்கலை நூலில் தேர்ச்சி பெற்ற கலைஞன் அரசிக்கு மனை வகுத்தான். கயிறு கட்டி மனையைப் பிரித்துக் காட்டினான். நிறுத்தியும் கிடத்தியும் ஒரே கோலை மடித்து வைத்து சூரியனின் நிழல் ஒன்றன் நிழல் மற்றொன்றின்மீது படும்படி நிறுத்துவது இருகோல் குறிநிலை. ஏறும் பொழுதாகவும், இறங்கும் பொழுதாகவும் இல்லாத நண்பகலில் இருகோல் குறிநிலை நிறுத்தி அவன் நிலத்தின் திசையைக் கணித்துக்கொண்டான். திசைமுகத்துக்கு ஏற்பக் கயிறு கட்டி, சுவர் அமைக்க அடிக்கோடு போட்டுக்கொண்டான்.  தெய்வத்தை வாழ்த்திய பின்னர் மனையை வகுத்துக் காட்டினான்.

கோபுர வாயில்

வளைந்த முகடுகளை உடைய மனை. அதில் யானை வெற்றிக் கொடியுடன் புகும் அளவுக்கு உயர்ந்தோங்கிய நிலைவாயில். குன்றைக் குடைந்தது போல் தோன்றும் நிலைவாயில். அதில் இரட்டைக் கதவு. கதவைத் தாங்கும் இரும்பு ஆணி. அரக்கு சேர்த்துப் பிணித்த மரக்கதவு. அதற்கு ‘உத்தரம்என்னும் நாள்மீனின் பெயர் கொண்ட நிலை. நிலையில் குவளைப்பூவின் மொட்டு போல் கலைத்திற வேலைப்பாடுகள். கதவுக்குத் தாழ்ப்பாள். இவற்றையெல்லாம் செய்தமைத்தவன் ‘கைவல் கம்மியன். தாழ்ப்பாளும், கதவைத் தாங்கும் இரும்பாணியும் எளிதாக இயங்கும் பொருட்டு ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய்ப் பூச்சு. – இப்படி அந்த வாயில் அமைக்கப்பட்டிருந்தது.

முற்றமும் முன்வாயிலும்

அரசி அரண்மனைக்குத் ‘திருநகர்என்று பெயர். அதன் முன்புறமும் பின்புறமும் முற்றம். வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மணல் பரப்பப்பட்டுள்ள முற்றம். அதில் வெண்ணிற எகினமும், அன்னமும் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.

அரண்மனையில் எழும் ஓசைகள்

கட்டிக் கிடப்பதை விரும்பாத குதிரைகள் புல் உணவைத் விரும்பாமல் தம் துணையை எண்ணிக் கனைத்தன. நிலா முற்றத்தில் மகரமீன் வாயிலிருந்து நீர் விழுவது போல் அமைக்கப்பட்டிருந்த கிம்புரிப் பகுவாய். அதன் வழியாக ‘அம்பணம்என்னும் தொட்டியில் விழும் ஒலி அருவியின் ஒலி போன்றிருந்தது. அருகே தோகை மயில்களின் ஆராவார ஒலி கொம்பூதும் ஒலி போல் இருந்தது.  

அந்தப்புரத்தின் அமைப்பு

அரசியின் கருவறையில் பாவை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பாவை விளக்கு யவனர் கலைஞர்களால் செய்யப்பட்டது. ஐந்து திரிமுனைகள் கொண்டது. பருமனான திரியிடப்பட்டு அது எரிந்துகொண்டிருந்தது. அது ஒளி மங்கும்போதெல்லாம் எண்ணெய் ஊற்றித் தூண்டப்பட்டது. அங்கே பல்வேறு படுக்கைகள் இருந்தன. அதற்குள் அரசன் தவிர வேறு எந்த ஆணும் செல்வதில்லை. அது மலை போல் தோன்றும் மனை. அதில் மலைமேல் வானவில் கிடப்பது போல் துணிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன. அது வெள்ளி போல் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட வெள்ளை மாளிகை. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இருந்தது. அதில் வளைந்து வளைந்து கொடி படர்வது போல் மணிகள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த மனைக்குக் கருவறை என்று பெயர்.

அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்

அரசியின் கட்டிலின் கால்கள் 40 ஆண்டுகள் நிறைந்த யானையின் தந்தத்தால் செய்யப்பட்டவை. யானைகள் உணர்வில் மாறுபட்டு ஒன்றோடொன்று போரிடும்போது முரிந்த தந்தங்கள் அவை. அவற்றில் கலைவல்லவன் உளியால் தோண்டி வேலைப்பாடுகளைச் செய்திருந்தான். இரட்டை இலை வேலைப்பாடுகள் அதில் செய்யப்பட்டிருந்தன. மகளிர் முலைகள் போல் குட அமைப்புகளும், வெங்காயம் முளைப்பது போன்ற அமைப்புகளும் அதில் இருந்தன. அந்தக் கட்டிலைப் ‘பாண்டில்என்று வழங்கினர்.


கட்டிலின்மேல் அமைந்த படுக்கை

சன்னலில் முத்துச் சரங்கள் தொங்கின. மெல்லிய நூல்களில் கோக்கப்பட்டவை அந்த முத்துச் சரங்கள். படுக்கைக் கட்டிலின் தகட்டுத் தளத்தில் புலி உருவப் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அது புதையும்படி பல்வகை மயிர்களைத் திணித்து உருவாக்கப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. மெத்தையின் துணியில் வயமான் (சிங்கம்) வேட்டையாடுவது போலவும், முல்லைப்பூ பூத்திருப்பது போலவும் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட மெத்தை மேல் அரசி இருந்தாள்.

படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்

மெத்தையின் மேல் மற்றொரு மெத்தை. மேல்மெத்தையில் அன்னத்தின் சிறகுகள் திணிக்கப்பட்டிருந்தன. ஆண் பெண் அன்னங்கள் உறவு கொண்டபோது உதிர்ந்த இறகுகள் அவை. அதன் மீது தலையணை, சாயணை முதலியவற்றை இட்டு நன்குக் கஞ்சியிட்டுத் தேய்க்கப்பட்ட துணியை, விரித்திருந்தனர். 

கோப்பெருந்தேவியின் நிலை

அரசியின் முலைமேல் முத்தாரம் என்னும் அணிகலன் இருந்தது. அதன் மேல் பின்புறத் தலைப்பின்னலை முன்புறமாக வளைத்துப் போட்டிருந்தாள். அவளது தலைவன் அப்போது அங்கு இல்லை. சில முடிகள் அவள் நெற்றியில் பறந்துகொண்டிருந்தன. குழைகளைக் கழற்றி வைத்துவிட்டதால் வெறுங்காது துளையுடன் காணப்பட்டது. பொன்வளையல்கள் கழன்றுவிட்டதால் வளையல் இருந்த அழுத்தம் தோளில் காணப்பட்டது. முன்கையில் சங்கு-வளையலும், காப்புக்காகக் கட்டிய கடிகைநூலும் இருந்தன. வாளைமீன் வாய் போல் பிளந்திருக்கும் மோதிரத்தை விரல்களில் அணிந்திருந்தாள். சிவப்பு நிறத்தில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இடையிலே உடுத்தியிருந்த அழகிய ஆடை அழுக்குப் பிடித்திருந்தது. வடிவம் மட்டும் வரைந்து வண்ணம் தீட்டப்படாத புனையா ஒவியம் (sketch) போலக் காணப்பட்டாள் அரசி.

சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்

பணிப்பெண்கள் அவளது காலடிகளைத் தடவிக்கொடுத்தனர். அவர்களுடன் ஆங்காங்கே நரைமுடி தோன்றும் கூந்தலை உடைய செவிலியர், “உன் துணைவர் இப்பொழுதே வந்துவிடுவார்என்று அவளுக்கு விருப்பமான சொற்களைப் பேசினர். அவற்றைக் கேட்டு ஆறுதலடையாமல் கலங்கினாள் அரசி.

தலைவியின் வருத்த மிகுதி

அவளது படுக்கைக்கு மேலே விதானம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேல்கட்டியின் கால்கள் முலை வடிவு வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. மேல்கட்டித் துணியில் மெழுகு பூசப்பட்டு அதில் சந்திரன் உரோகினி என்னும் பெண்ணைத் தழுவும் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்து அரசி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். அப்போது கடைக்கண்ணில் தோன்றிய கண்ணீர்த் துளியைத் தன் செவ்விய விரல்களால் துடைத்துத் தெரித்துக்கொண்டாள். 

கொற்றவையை வேண்டல்

மன்னன் பணி முடித்துத் திரும்பினால் அன்றித் தலைவியின் துன்பம் நீங்காது. ஆதலால் தலைவியின் துயர் தீரும் பொருட்டு பாசறைத் தொழில் விரைவில் முடிக எனக் கொற்றவையைத் தோழியர் வேண்டினர்.

பாசறையில் அரசன் நிலை

    போர்த்தொழில் திறம் பெற்ற யானை, தன் கையை நிலத்தில் போட்டுக்கொண்டு புரளும்படி  போரிட்ட ஆடவர், புண் பட்டுக் கிடப்பதைக் காண அரசன் வெளியே வந்தான். வடக்கிலிருந்து காற்று வீசும்போதெல்லாம் பாண்டில் விளக்கில் எரியும் சுடர் தெற்குப்பக்கமாக வணங்கியது. வேப்பந்தழை கட்டிய வேலுடன் அறிமுகம் செய்யும் முன்னோன் காட்டிக்கொண்டே முன்னே சென்றான். அரசன் பெருஞ்செய் ஆடவரைக் கண்டான். முதுகில் மணி தொங்கும் பெண் யானைகளைக் கண்டான். இருக்கைப் பருமம் களையப்படாத குதிரைகளைக் கண்டான். சேறு பட்டுக் கிடந்த தெருவில் நடந்தான். காற்றில் நழுவும் வேலாடையைத் தன் இடக்கையில் தழுவிக்கொண்டு, மெய்க்காப்பாளனின் தோளில் கையை வைத்துக்கொண்டு சென்றான். அவனது வெண்கொற்றக்குடை வீசும் வாடைத்துளிகளை மறைத்து அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தது. அந்த நள்ளிரவு நேரத்தில், அவன் தன் படுக்கையில் இல்லாமல் சிலரோடு திரிந்து கொண்டிருந்தான். இதுவே அவன் பாசறைத் தொழில். இந்தப் பாசறைத்தொழில் உடனடியாக முற்றுப் பெற வேண்டும். தலைவியின் துன்பம் தீர வேண்டும்.


நன்றி  - 

தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ்ச்சுரங்கம், தமிழ்நூலகம்

 


மனையறம் படுத்த காதை

 

சிலப்பதிகாரம்

புகார்க் காண்டம்

மனையறம் படுத்த காதை

எழுநிலை மாடத்தின் பள்ளிக் கட்டிலின் மீது

கோவலனும் கண்ணகியும் வீற்றிருத்தல்

உரைசால் சிறப்பின், அரைசு விழை திருவின்,

பரதர் மலிந்த, பயம் கெழு, மா நகர்-

முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்

வழங்கத் தவாஅ வளத்தது ஆகி,

அரும் பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்

ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம்

கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட:

குலத்தில் குன்றாக் கொழுங் குடிச் செல்வர்,

அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர்

உத்தர - குருவின் ஒப்பத் தோன்றிய

கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்

மயன் விதித்தன்ன மணிக் கால் அமளிமிசை,

நெடு நிலை மாடத்து இடை நிலத்து, இருந்துழி -       

தென்றலைக் கண்டு மகிழ்ந்து நிலா-முற்றம் போதல்

கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை,

வயல் பூ வாசம் அளைஇ; அயல் பூ

மேதகு தாழை விரியல் வெண் தோட்டு,

கோதை மாதவி, சண்பகப் பொதும்பர்,

தாது தேர்ந்து உண்டு; மாதர் வாள் முகத்துப்

புரி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்று;

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து,

மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த

கோலச் சாளரக் குறுங் கண் நுழைந்து,

வண்டொடு புக்க மண வாய்த் தென்றல்

கண்டு, மகிழ்வு எய்தி, காதலின் சிறந்து,

விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்

நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி,     

இருவரும் இன்புற்றிருத்தல்

சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்

கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,

முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்

கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,

வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த

வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு

கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,

தாரும் மாலையும் மயங்கி, கையற்று,

தீராக் காதலின் திரு முகம் நோக்கி,

கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:

கண்ணகியின் நலத்தைக் கோவலன் பாராட்டுதல்

குழவித் திங்கள் இமையவர் ஏத்த

அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,

உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,

பெரியோன் தருக - திரு நுதல் ஆக என:

அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்

படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,

உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்

இரு கரும் புருவம் ஆக ஈக்க:

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,

தேவர் கோமான் தெய்வக் காவல் -

படை நினக்கு அளிக்க - அதன் இடை நினக்கு இடை என:

அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,

இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -

அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்

செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?     

கண்ணகியைப் புகழ்தல்

மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்

சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;

அன்னம், நல் - நுதல்! மெல் நடைக்கு அழிந்து,

நல் நீர்ப் பண்ணை நளி மலர்ச் செறியவும்;

அளிய - தாமே, சிறு பசுங் கிளியே -

குழலும், யாழும், அமிழ்தும் குழைத்த நின்

மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,

மட நடை மாது! நின் மலர்க் கையின் நீங்காது

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின:   

                                              நலம் பாராட்டல்

நறு மலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்

மறு இல் மங்கல அணியே அன்றியும்,

பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?

பல் இருங் கூந்தல் சில் மலர் அன்றியும்,

எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?

நான நல் அகில் நறும் புகை அன்றியும்,

மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?

திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,

ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?

திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்

இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?      

காதல் மொழிகள்

மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசு அறு விரையே! கரும்பே! தேனே!

அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!

பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!

மலையிடைப் பிறவா மணியே என்கோ?

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?

யாழிடைப் பிறவா? இசையே என்கோ?

தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை-என்று

உலவாக் கட்டுரை பல பாராட்டி,

தயங்கு இணர்க் கோதை - தன்னொடு தருக்கி,

வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் -  

கோவலனும் கண்ணகியும் நடத்திய இல்லறம்

வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி

மறப்பு - அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும்,

விருந்து புறந்தரூஉம் பெரும் தண் வாழ்க்கையும்,

வேறுபடு திருவின் வீறு பெறக் காண,

உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க,

யாண்டு சில கழிந்தன, இல் பெருங்கிழமையின் -

காண் தகு சிறப்பின் கண்ணகி - தனக்கு - என். 

வெண்பா

தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்

காமர் மனைவி எனக் கைகலந்து, நாமம்

தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - மண்மேல்

நிலையாமை கண்டவர் போல், நின்று.

 

விளக்கம்

புகார் நகரின் செல்வச் சிறப்பு

 புகழும் செல்வமும் உடைய பரதர்கள் மிகுதியாக வாழும் பூம்புகார் நகரம், எல்லா பயன்களும் கொண்ட  மாநகரமாக விளங்கியது. உலகினர் எல்லோரும் ஒன்று கூடி வந்தாலும், அவர்கள் விரும்பும் விருந்தினைச் சலிப்பின்றி அள்ளி வழங்கும் வளம் உடையது. கடல் வழியாகவும், தரை வழியாகவும் வாணிபம் செய்து, அரும்பொருட்கள் ஆயிரமாயிரம் கொண்டு வந்து குவிக்கின்ற, செல்வச் செழுமையுடைவர்களாக அங்கிருந்த வாணிகர்கள் திகழ்ந்தனர். அத்தகைய செல்வத்தால், துருவ நட்சத்திரம் போன்று விளங்கிய கண்ணகியும், அவளுடைய கணவன் கோவலனும் தருமங்கள் பல செய்து வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புடைய தம்பதியர், அத்திருநகரில் எழுநிலை மாடமொன்றின்,நான்காம் மாடத்தில், மயனே செய்தது போன்ற அழகிய கால்களுடைய கட்டிலின் மேல் அமர்ந்திருந்தனர்.

தென்றல் வருகை

செங்கழுநீர் மலர், ஆம்பல் மலர், குவளை மலர், தாமரை மலர், வயல்வெளி நீர்நிலை மலர்கள், தாழையின் விரிந்த வெண்ணிறப் பூவிதழ்கள், செண்பகச்சோலையில் அழகு மாலை போன்று இதழ்விரித்து மலர்ந்திருக்கும் குருக்கத்தி மலர்கள் ஆகியவற்றின் தாதினை எல்லாம் தேடிச் சென்று வாரி உண்டு, மகளிரின் சுருண்ட கூந்தலின் நறுமணம் நுகர்ந்திட வண்டுகள் சுழன்று திரிந்தன. அவ்வண்டுகளுடன், தென்றலும், தம்பதியர் வீட்டினுள், முத்து மணிகளால் அணிசெய்த சாலரமொன்றின் (கதவின்) வழியாக நுழைந்தது. தென்றலின் வரவைக்கண்ட கோவலனும் கண்ணகியும் மிகவும் மகிழ்ந்து, காதலின் மிகுதியால் இணைந்திட விரும்பி, மன்மதன் வீற்றிருக்கும், தம் எழுநிலை மாடத்தின் நிலா முற்றத்துக்கு ஏறிச் சென்றனர்.

தம்பதியர் இன்புற்றிருத்தல்

     வாசனைப் பூம்படுக்கையின் மேல் கோவலனும், கண்ணகியும் சென்று அமர்ந்தனர். கோவலன் கண்ணகியின் பெரிய தோள்களில், வரிக்கோலமாய்க் கரும்பையும், வல்லிகொடியையும் எழுதினான். இந்த காட்சி, உலகம் முழுவதையும், தம் கதிர்களால் ஒளியேற்றுகின்ற சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து இருந்ததைப் போல இருந்தது. மல்லிகைப் பூக்களால் தொடுத்த மாலையினைக் கண்ணகி அணிந்திருந்தாள். கோவலன், செங்கழுநீர் மாலையினை அணிந்திருந்தான். இருவர் மார்பிலும் இருந்த மாலைகள், தம்முள் கலந்து மயங்கின. அந்நிலையில் தழுவியிருந்த கைகளைச் சற்றே தளர்த்தவனாக, ஆராத காதலுடன், தன் மனைவியின் முகத்தைக் கோவலன் நோக்கினான். அவள் நலனைப் பாராட்டத் தொடங்கினான்.

கண்ணகியின் நலம் பாராட்டல்

  • இளம்பிறையானது, சிவபெருமானின் சடைமேல் இருக்கும் பெருமையினை உடையது. ஆனால் அது, திருமகளான உன்னுடன் பாற்கடலில் பிறந்ததால், அது உனக்கே உரியது என இறைவன், அதனை உன் நெற்றியாகத் தந்தானோ?
  • போர்க்களத்தில் தம்மை எதிர்க்கும் பகைவர்க்கு, படைகலங்கள் வழங்கிப் போர் புரிய சொல்லும் ஒரு முறை உண்டு. அதைப்போலவே மன்மதன் தானும் தம் கரும்புவில்லை, உன் இரு புருவங்களாகத் தந்தானோ?
  • தேவருண்ணும் அமிழ்தத்திற்கு முன்னே பிறந்த இலக்குமி நீ என்பதால், இந்திரன் தன் கையில் கொண்ட வச்சிரப்படையை உன் இடையாகத் தந்தானோ?
  • ஆறுமுகம் கொண்ட  முருகன் என்னுடன் போர் புரிய வேண்டிய அவசியமில்லை. அப்படி இருந்தும், உன்னைக் கண்டு நான் துன்புற வேண்டும் என்பதற்காக, தன் அழகிய வேலை, உன் இரு கண்களாகத் தந்தானோ?

சாயல், நடை, பேச்சு

  • கரிய பெரிய தோகை உடைய, நீல நிறம் கொண்ட மயில், உன் அழகிய சாயலுக்கு அஞ்சி தோற்றுக் காட்டுக்குள் சென்று அடைந்து விட்டது!
  • அன்னம், உன் மென்மையான நடைக்கு அஞ்சி செயலிழந்து, வயல்களிடையே மலர்ந்திருக்கும் மலர்களிலே சென்று ஒளிந்து கொண்டது!
  • உன் மொழிக்கு சிறிய கிளி தோற்றுப் போய்விட்டது. குழலிசையோடு, யாழிசையோடு அமிழ்தமும் குழைத்தாற்போன்ற உன் மழலை பேச்சிற்கு அவை வருந்தி சோர்ந்தன.
  • எனினும் மென்னடையினை உடைய மாதரசியே! உன் பேச்சின் இனிமையைத் தாமும் கற்பதற்காக, உன்னுடனேயே தங்கி, உன்னை வெறுத்துப் பிரிந்து போகாமல் இருகின்றன.

அணிகலன்கள் வேண்டுமோ!

  • நறுமண மலரினை சூடிய கோதையே! உன்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர், உன் இயற்கை அழகு இருக்க, உன் மாங்கல்ய அணி மேலும் அழகு சேர்த்திருக்க, இன்னும் பல அணிகலன்களை உனக்கு அணிவித்தது ஏன்?
  • உன் கருங்கூந்தலுக்குச் சில மலர்கள் மட்டும் சூட்டினால் போதும் என்றிருக்க, மாலையையும் சூட்டியிருக்கின்றனரே! அம்மாலையோடு அவர்களுக்கு என்ன உறவோ?
  • உன் கூந்தலை மணமாக்க அகிற்புகையின் நறுமணமொன்றே போதும் என்றிருக்க, வாசனையூட்டுவதற்காகக் கஸ்தூரிக் குழம்பு கொண்டு வந்ததன் உள்நோக்கம் தான் என்ன? 
  • அழகுத்திரு மார்புகளுக்கு அணி செய்திட, தீட்டிய கோலங்களே போதும் என்றிருக்க, முத்து வடம் கொணர்ந்தவர்க்கு, அதனுடன் உள்ள உரிமைதான் என்ன?
  • நிலவு போன்ற உன் முகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பிடவும், சிறிதான நின் இடை துவண்டு வருந்திடவும், மென்மேலும் உன் மீது அணிகலன்கள் பூட்டுகின்றனரே, இவர்களுக்கு என்னதான் நேர்ந்தது?

போற்றிப் புகழ்தல்

  • குற்றமற்ற பொன்னே! வலம்புரிச் சங்கிலே பிறந்த முத்து போன்றவளே! குற்றமற்ற மணப்பொருள் தரும் தெய்வ மணமே! இனிமையான கரும்பை போன்றவளே! தேனினும் இனிமையுடையவளே! பெறுவதற்கு அருமையான பாவையே! இன்னுயிர் காக்கும் மருந்தே! பெருங்குடி வணிகனின் பெருமை வாய்ந்த மகளே!
  • உன்னை, ‘மலையிடையிலே பிறவாத மணியே!’,என்று சொல்வேனோ? ‘அலையிடையே பிறவாத அமிழ்தமே!’,என்று சொல்வேனோ? ‘யாழிடையே பிறவாத இசையே!’,என்று சொல்வேனோ? நீண்டு தாழ்ந்த கருங்கூந்தல் உடைய பெண்ணே! நின்னை நான் எவ்வாறு பாராட்டுவேனோ?

தனிமனை புகுதல்

    இன்னும் பல முடிவில்லாத பாராட்டுகளை நவின்றான் கோவலன். பூமாலை அணிந்த கண்ணகியும், தாரினை அணிந்த கோவலனும் இன்பத்தில் திளைத்தனர். இவ்வாறு, கண்ணகியுடன் கோவலன் இல்லறம் நடத்தி வந்த அக்காலத்தில் ஒரு நாள், கோவலனின் அன்னை, தம்பதியர், சுற்றத்துடன் இணைந்து வாழ்தல்; துறவியரை பேணுதல்; விருந்தினரை உபசரித்தல் ஆகிய பெருமைகளுடன், இல்வாழ்க்கையும் சிறப்புப் பெற்று, மென்மேலும் பல்வேறு செல்வங்களும் பெற விரும்பி, அவர்களைத் தனிக் குடும்பமாக அமர்த்த எண்ணினாள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளுடனும், பணியாட்களுடனும், அவர்கள் தனிக் குடும்பம் நடத்த ஏற்பாடு செய்தார். தம்பதியரும், அவ்வாறே தனிமனை புகுந்து, இன்புற்று வாழ்ந்தனர். கண்ணகி பேணிய இல்லறப் பாங்கினை கண்டவர் பாராட்ட, ஆண்டுகள் சில கழிந்தன.

வெண்பா

“உலக வாழ்கையில் நிலையாமை உறுதி” என்ற உண்மையை அறிந்தவர் போல,  தம்முள் பிரிதலின்றி இணைந்து இன்புற்று வாழ்ந்தனர்.  பாம்புகள் ஒன்றோடொன்று பிணைந்து தழுவிப் பிரியாது இருப்பது போலவும்,  காமனும் ரதியும் ஒருவரோடொருவர் பிரியாது தழுவி கிடந்தது போலவும், இன்பங்கள் முழுதும் துய்த்திடும் நோக்கில், மனம் ஒன்றிக் கலந்தவராக வாழ்ந்து வந்தனர்.