சீவகசிந்தாமணி
- சீவகசிந்தாமணி என்னும் காப்பியம் திருத்தக்கதேவரால் இயற்றப்பட்டது.
- சீவகன் என்பவனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டது.
- சீவகசிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது.
- வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல்.
- இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர்.
- சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும்.
- அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர்.
நூலமைப்பு
சீவக சிந்தாமணி
மொத்தம் 3145
பாடல்களைக்
கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது
பொருளாகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான
இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற
நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இக்காப்பியத்திற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு.
காப்பியக் கதை
மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும்
ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே
சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு
முத்தி பெறுகிறான்.
சீவக சிந்தாமணியில்
இடம்பெற்றுள்ள நாமகள் இலம்பகத்தில் கூறப்படும் ஏமாங்கத நாட்டின் வளம் கூறும் பத்துப்
பாடல்கள் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
ஏமாங்கத நாட்டு வளம்
பாடல் - 1
காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் நெற்றி
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழை பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே
விளக்கம்
தென்னை மரத்திலிருந்து விழுகின்ற தேங்காய்,
பாக்கு மரத்தின் உச்சியில் உள்ள தேனடையைக் கிழித்தது. பின்னர் பலாப் பழத்தைப் பிளந்து,
மாங்கனியை சிதற வைத்தது. வாழைப்பழங்களை உதிரச் செய்தது. இத்தகைய வளமுடைய நாடு ஏமாங்கத
நாடு. அதன் புகழ் திசையெங்கும் பரவியிருந்தது. (உயர்வு நவிற்சி அணி)
பாடல் - 2
இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்
கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே
விளக்கம்
பரதேசுவரர் என்னும் சக்கரவர்த்தியின் யானைக் கூட்டம் போன்ற மேகங்கள்,
அலைகளை உடைய கடல் நீரைப் பருகின. மேகங்கள் கருக்கொள்ளும் வரை மலைகளில் தங்கின. பிறகு
வானில் பரவி சிவபிரானின் சடையைப் போல மின்னி வாய்விட்டு முழங்கின.
பாடல் - 3
தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழும் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே
விளக்கம்
முகில்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்காகக் கூடி, தேன் கூடுகள் நிறைந்த
மலையுச்சியின் மேல், வெள்ளியால் செய்த வெண்மையான கோல்களை வானத்தில் வரிசையாக அமைத்தது
போன்று, மழைநீர்த் தாரைகளை நிரைத்து நறுமணத்துடன் சொரிந்தன.
பாடல் - 4
குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின்
இழியும் வெள் அருவி திரள் யாவையும்
குழுவின் மாட துகில் கொடி போன்றவே
விளக்கம்
மலையின் உச்சியிலிருந்து முழங்கி வழிந்த வெண்மையான நீர் அருவிகள் மாடங்களில் உள்ள வெண்துகிற் பொடிபோல இருந்தன. பிறைச் சந்திரனால் கிழிப்புண்டு முழவின் ஒலிபோல்
அதிர்ந்து வரும் தேனருவி செந்துகிற் கொடி போல இருந்தன. (உயர்வு நவிற்சி அணி)
பாடல் - 5
இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை
நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே
விளக்கம்
அவ் அருவிகள் மலையில் இருந்து விழும் பொழுது நீண்ட இந்திரன் மார்பில்
பிணைந்து விழுந்த முத்துவடம் போன்று காட்சியளித்தன. அவை பொன்னையும், அழகிய மணிகளையும்
சிந்துவதால் இந்திரனுடைய அணிகலப் பெட்டியைக் கவிழ்த்துக் காட்டப் பெற்ற அணிகளைப் போன்றும்
விளங்கின.
பாடல் - 6
வள்ளல் கைத்தல மாந்தரின் மால் வரை
கொள்ளை கொண்ட கொழு நிதி குப்பையை
உள்ளம் இல்லவர்க்கு ஊர்-தொறும் உய்த்து உராய்
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே
விளக்கம்
நன்மனம் கொண்ட செல்வர்களைப் போல, வெள்ளமானது மலையின் உச்சியிலிருந்து
வளம்மிக்க செல்வத்திரளை வாரிக் கொண்டு வந்து ஊர்தோறும் கொடுத்தது.
பாடல் - 7
மையல் யானையின் மு மதம் ஆர்ந்து தேன்
ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்
செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா
நைய வாரி நடந்தது நன்று-அரோ
விளக்கம்
மழை வெள்ளம், மயங்கிய யானைகளின் மும்மதங்களையும் உள்ளே நிறைத்துத் தேனைப்
பூசி, வியத்தகும் பொன் துளிகளைக் கலந்து, நறுமணச் சந்தனம், இனிய பழம் முதலிய பிறவற்றையும்
வாரிக் கொண்டு காடு வருந்தும்படி, நாடு நோக்கி நடந்தது.
பாடல் - 8
வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து என
காடு கையரி கொண்டு கவர்ந்து போய்
மோடு கொள் புனல் மூரி நெடும் கடல்
நாடு முற்றியதோ என நண்ணிற்றே
விளக்கம்
வீடுகள் இல்லாத ஊரைக் கொள்ளை கொண்ட வேந்தனைப் போல, வெள்ளமானது அலைகளாகிய
கைகளால் காட்டை அரித்து, அதனுள் கிடந்த பொருள்களைக் கவர்ந்து சென்று, பெரிய நீண்ட கடல்,
நாட்டை வளைத்துக் கொண்டதோ என்று மக்கள் வருந்தும்படி அந்நாட்டை அடைந்தது.
பாடல் - 9
திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்
நுரை எனும் மாலையை நுகர சூட்டுவான்
சரை எனும் பெயர் உடை தடம் கொள் வெம் முலை
குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே
விளக்கம்
சரை என்னும் பெயரை உடைய வெள்ளம், தன் கணவனாகிய கடலை அடைந்து, அவனுக்குச்
சூட்டுவதற்காக அருவி கொண்டு வந்த பொருள்களோடு, நுரையாகிய மாலையையும் சுமந்து கொண்டு
வந்தது.
பாடல் - 10
பழம் கொள் தெங்கு இலை என பரந்து பாய் புனல்
வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய் தலை
தழங்குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே
விளக்கம்
காய்ந்த தென்னை ஓலைகளைப் போல நெருங்க நீர் செல்லுமாறு
வாய்க்கால்களில் அவ்வெள்ளம் புகுந்து மோதுவதால் வாய்க்கால்களின் உட்கரைகள்
முரிந்தன. நீரின் வரவினை ஒலிக்கும் பம்பை என்னும் பறையினால் நாட்டு மக்களுக்கு
அறிவிக்க, சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மதகுகளிடத்தில் கூடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக