மணிமேகலை
விழா அறை காதை
உலகந்
திரியா ஓங்குயர் விழுச்சீர்ப்
பலர்புகழ்
மூதூர்ப் பண்புமேம் படீஇய
ஓங்குயர்
மலயத் தருந்தவ னுரைப்பத்
தூங்கெயி
லெறிந்த தொடித்தோட் செம்பியன்
விண்ணவர்
தலைவனை வணங்கிமுன் னின்று
மண்ணகத்
தென்றன் வான்பதி தன்னுள்
மேலோர்
விழைய விழாக்கோ ளெடுத்த
நாலேழ்
நாளினும் நன்கினி துறைகென
அமரர்
தலைவன் ஆங்கது நேர்ந்தது
கவராக்
கேள்வியோர் கடவா ராகலின்
மெய்திறம்
வழக்கு நன்பொருள் வீடெனும்
இத்திறந்
தத்தம் இயல்பினிற் காட்டும்
சமயக்
கணக்கருந் தந்துறை போகிய
அமயக்
கணக்கரும் அகலா ராகிக்
காந்துரு
வெய்திய கடவு ளாளரும்
பரந்தொருங்
கீண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங்
குழுவும் எண்பே ராயமும்
வந்தொருங்கு
குழீ இ வான்பதி தன்னுள்
கொடித்தேர்த்
தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த
பூதம் விழாக்கோள் மறப்பின்
மடித்த
செவ்வாய் வல்லெயி றிலங்க
இடிக்குரல்
முழக்கத் திடும்பை செய்திடும்
தொடுத்தபா
சத்துத் தொல்பதி நரகரைப்
புடைத்துணும்
பூதமும் பொருந்தா தாயிடும்
மாயிரு
ஞாலத் தரசுதலை யீண்டும்
ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்கென
வச்சிரக்
கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை
யானைப் பிடர்த்தலை யேற்றி
ஏற்றுரி
போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண்
விளிக்குங் குருதி வேட்கை
முரசுகடிப்
பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திருவிழை
மூதூர் வாழ்கென் றேத்தி
வான மும்மாரி
பொழிக மன்னவன்
கோள்நிலை
திரியாக் கோலோ னாகுக
தீவகச்
சாந்தி செய்தரு நன்னாள்
ஆயிரங்
கண்ணோன் தன்னோ டாங்குள
நால்வேறு
தேவரும் நலத்தகு சிறப்பில்
பால்வேறு
தேவரும் இப்பகுப் படர்ந்து
மன்னன்
கரிகால் வளவன் நீங்கியநாள்
இந்நகர்
போல்வதோர் இயல்பின தாகிப்
பொன்னகர்
வறிதாப் போதுவ ரென்பது
தொன்னிலை
யுணர்ந்தோர் துணிபொரு ளாதலின்
தோரண வீதியுந்
தோமறு கோட்டியும்
பூரண கும்பமும்
பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும்
பலவுடன் பரப்புமின்
காய்க்குலைக்
கமுகும் வாழையும் வஞ்சியும்
கொடி
வல்லியுங் கரும்பும் நடுமின்
பத்தி
வேதிகைப் பசும்பொற் றூணத்து
முத்துத்
தாமம் முறையொடு நாற்றுமின்
விழவுமலி
மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல்
மாற்றுமின் புதுமணற் பரப்புமின்
கதலிகைக்
கொடியுங் காழூன்று விலோதமும்
மதலை மாடமும்
வாயிலும் சேர்த்துமின்
நுதல்விழி
நாட்டத் திறையோன் முதலாப்
பதிவாழ்
சதுக்கத்துத் தெய்வமீ றாக
வேறுவேறு
சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறறி மரபின்
அறிந்தோர் செய்யுமின்
தண்மணற்
பந்தருந் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய
நல்லுரை அறிவீர் பொருந்துமின்
ஒட்டிய
சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டிமண்
டபத்துப் பாங்கறிந் தேறுமின்
பற்றா
மாக்கள் தம்முட னாயினும்
செற்றமுங்
கலாமுஞ் செய்யா தகலுமின்
வெண்மணற்
குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல்
துருத்தியுங் தாழ்பூந் துறைகளும்
தேவரு
மக்களும் ஒத்துடன் றிரிதரு
நாலேழ்
நாளினும் நன்கறிந் தீரென
ஒளிறுவாள்
மறவருந் தேரும் மாவும்
களிறுஞ்
சூழ்தரக் கண்முர சியம்பிப்
பசியும்
பிணியும் பகையும் நீங்கி
வசியும்
வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
அணிவிழா
அறைந்தனன் அகநகர் மருங்கென்.
காதையின் சுருக்கம்
புகார் நகரத்தினை வளமுடைய நகராக மாற்ற விரும்பிய அகத்தியர், சோழ நாட்டு
அரசனாகிய தூங்கெயில்
எறிந்த தொடித்தோட் செம்பியனிடம், தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு
நாட்கள் விழா எடுக்குமாறு கூறினார். இந்திர விழா எடுக்கத் தவறினால் நகருக்குத்
துன்பம் ஏற்படும் என்று சமயவாதிகளும் கூற மன்னன் அதற்கு இசைந்தான். இச்செய்தியை வள்ளுவன்
முரசு அறைந்து மக்களுக்குத் தெரிவித்தான். முரசு கொட்டும்முன் “நாட்டில் பசி, பிணி,
பகை இல்லாமல் மழையும் வளமும் நிறையட்டும்” என்று வாழ்த்தி, நகரின் பல பகுதிகளில் விழா
பற்றிய செய்தியினைக் கூறி முடித்தான்.
இந்திர விழா
நாவலந் தீவிலுள்ள மக்கள் அனைவரும் பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாதிருக்க,
தெய்வத்தை வணங்கிச் செய்யும் பெருவிழாவே இந்திர விழாவாகும்.
விழா வரலாறு
புகார் நகரம் பழம் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது. ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய
மக்கள் பலரும் அந்நகரைப் போற்றுவர். பழஞ்சிறப்பு வாய்ந்த நகரின் புகழ் மேலும் சிறப்புற
வேண்டும் என்று அருந்தவ முனிவர் அகத்தியர் நினைத்தார். அப்புகார் நகர் மேலும் வளமுடன்
பொலிவடைய வேண்டுமானால் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்க
வேண்டும் என புகார் நகரை ஆட்சி செய்த மன்னன் தொடித்தோட் செம்பியனிடம் கூறினார். உடனே அதற்கு இசைவு அளித்து, விழா சிறப்புடன் நடைபெற
ஏற்பாடு செய்தான் மன்னன். செம்பியன் வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்து கொள்ள தேவர்
தலைவனாகிய இந்திரனும், மற்றுமுள்ள தேவர்களும் விழாத் தொடங்கிய இருபத்தெட்டு நாட்களிலும்
புகார் நகரத்திலே வந்து தங்கியிருந்தனர். கேள்வி ஞானம் உடைய சான்றோர்கள், உயர்வு மிக்க
இந்த இந்திர விழாவினை ஒரு போதும் தவறவிட மாட்டார்கள்.
· இம்மை, மறுமைப் பயன்களை உணர்ந்தவரும், நால்வகை உறுதிப் பொருள்களின் உண்மை அறிந்த
வரும் ஆன சமயக் கணக்கர்,
· காலம் கணிக்கும் சோதிடர்,
· தம் தேவ உருவினை மறைத்து மனித உருவம் கொண்ட கடவுளர்கள் (தேவர்கள்),
· பன்மொழி பேசும் வேற்று நாட்டினர்,
· ஐம்பெருங் குழுவினர், எண் பேராயத்தினர் ஆகியோர் ஒன்று கூடி விழா நடத்த முடிவு
செய்யஅரசவையில் கூடினர்.
(ஐம்பெருங் குழு : அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர்,
தூதுவர், சாரணர் ஆகிய ஐவரைக் கொண்ட குழு.
எண்பேராயம் : கரணத்து இயலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைக்
காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர் எனப்படும் எண்மரைக்
கொண்ட குழு.)
இவ்விழாவினை வழக்கம்போல் நடத்தாவிடில் புகார் நகருக்கும், மக்களுக்கும் துன்பம்
வந்து சேரும். கொடி பறக்கும் தேரினையும், படைப் பெருக்கத்தினையும் கொண்ட கொற்றவனாகிய
முசுகுந்த மன்னனுக்கு முன்னாள் ஏற்பட்ட துயரத்தினைப் போக்கியது இப்புகார் நகரத்து நாளங்காடி
(பகல் நேரக் கடைத்தெரு)ப் பூதம். அப்பூதம் தனக்கு விழாவினை வழக்கம்போல் எடுக்காவிட்டால்,
சிவந்த வாயினை மடித்துத் தன் வலிமையான பற்கள் வெளியேதோன்ற, இடியின் முழக்கம் போன்று
குரலெடுத்து முழக்கமிட்டு, மக்களுக்கும், புகார் நகருக்கும் துன்பத்தைச் செய்துவிடும்
என்று சான்றோர்கள் கூறினர். மேலும், பாவிகளைப் பாசத்தால் (கயிற்றினால்) பிடித்து உண்ணும்
சதுக்கப் பூதமும் இப்புகார் நகரை விட்டு நீங்கி விடும். ஆதலால் இந்திர விழாவுக்கான,
கால்கோள் விழாவினைச் (தொடக்க விழா) செய்யுங்கள் என்றனர் சமய வாதிகள்.
வள்ளுவன் முரசு அறைந்து அறிவித்தல்
வாளேந்திய வீரர்கள், தேர்ப் படையினர், குதிரைப் படையினர், யானைப் படையினர் ஆகிய
நால்வகைப் படையினரும் சூழ்ந்து வந்து கொண்டிருக்க, முதுகுடிப் பிறந்த வள்ளுவன் (முரசறைவோன்)
வச்சிரக் கோட்டத்தில் உள்ள முரசினை யானையின் கழுத்திலே ஏற்றி, குறுந்தடி கொண்டு முரசறைந்து,
இந்திர விழா நடைபெற இருப்பதனைப் புகார் நகர மக்களுக்குப் பின்வரும் செய்திகளைக் கூறி
அறிவித்தான்.
முதலில் திருமகள் விரும்பி உறைகின்ற மூதூரான இப்புகார் நகரம் வாழ்க என்று வாழ்த்தினான்.
பின் மாதந்தோறும் மூன்று முறை தவறாது மழை பொழிவதாகுக என்றான். ஞாயிறு, திங்கள் முதலிய
கோள்கள் தம்நிலையில் மாறுபடா வண்ணம் மன்னவன் செங்கோலனாக ஆகுக என்று அரசனை வாழ்த்தி
முரசறைந்து தெரிவித்தான்.
தீவகச் சாந்தி விழா கொண்டாடப்படும் நாட்களில், ஆயிரம் கண்களை உடைய இந்திரன்
தலைமையாக வீற்றிருப்பான். அங்கே வசுக்கள் எண்மர், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர்
பதினொருவர், மருத்துவர் இருவர் ஆகிய முப்பத்து மூவர் எனப்படும் நால்வகைத் தேவர்களும்,
பல பிரிவினரான தேவ கணத்தினர் பதினெண்மரும் உடனிருந்து விழாவினைச் சிறப்புச் செய்வர்.
மன்னன் கரிகால்
வளவன், பகைவரை வெல்லக் கருதி, வடதிசை நோக்கிப் போனபோது, இப்புகார்
நகரம் வெறுமையாகிப் பொலிவிழந்து காணப்பட்டது. அதுபோலத் தேவர்கள் அனைவரும் இந்திர விழா
காண புகார் நகருக்கு வந்தமையால், அவர்களின் பொன்னகரமான அமராபதியும் பொலிவிழந்து
காணப்பட்டதாகச் சான்றோர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
வள்ளுவன் முரசறைந்து வாழ்த்திய பிறகு, மக்களுக்கு, நகரை அழகுபடுத்தும் முறையைக் கூறினான்.
1. கொடிகள் விளங்கும் வீதிகளிலும், குற்றமற்ற கோயில் வாயில்களிலும் பூரணக் கும்பங்களும், பாவை விளக்குகளும் மற்றும் பல வகையான மங்கலப் பொருள்களுடனே பரப்புங்கள்;
2. வாழை, கரும்பு, கமுகு, வஞ்சிக்கொடி, பூங்கொடி ஆகியவற்றைக் கட்ட வேண்டிய இடங்களில் கட்டுங்கள்;
3. விழாக் கோலம் நிறைந்த வீதிகளிலும், மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதுமணலைப் பரப்புங்கள்;
4. சிறுசிறு கொம்புகளில் கட்டும் கொடி முதலானவற்றை மாடங்களிலும் வாயில்களிலும் கட்டுங்கள்;
5. நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் முதலாக இந்நகருக்குள்ளே (புகார் நகரம்) வாழும் சதுக்கத் தெய்வமான சதுக்கப் பூதம் ஈறாக உள்ள கோயில்களில் எல்லாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை முறைப்படி செய்யுங்கள் என்று மக்களுக்கு விரிவாகக் கூறி முரசறைந்தான்.
பட்டி மண்டபம்
1. குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல் தரும் மரங்களின் கீழ் அமைந்துள்ள ஊர்ப் பொதுவிடங்களிலும் நல்லுரைகள் அறிந்தவர்கள் உரையாற்றுங்கள்;
2. தத்தம் சமயத்தில் பொதிந்த தத்துவங்கள் சிறந்தவை என்றால், பட்டி மண்டபத்து ஏறி வாதிட்டுப் பயன் காணுங்கள்;
3. பகை மக்களோடும் பகையும், கோபமும் கொள்ளாமல் அவரை விட்டு அகன்று செல்லுங்கள்;
4. வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை ஆகிய இடங்களில் தேவர்களும் மக்களும் சமமாக உலவிக் கொண்டு இருங்கள்.
5. இவை அனைத்தையும் இந்திர விழா நடக்கும் இருபத்தெட்டு நாட்களிலும் எங்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள்.
இவ்வாறு வள்ளுவன் முரசறைந்து மக்களுக்குத் தெரிவித்தான்.
வாழ்த்துக் கூறுதல்
பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும் என முடிவில் வாழ்த்தினான். இவ்வாறெல்லாம் புகார் நகரில் உள்ள பட்டினப்பாக்கத்துப் பகுதிகள் அனைத்திலும் விழா அணி பற்றிய செய்தியினை வள்ளுவன் முரசறைந்து தெரிவித்தான்.
நன்றி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக