பழந்தமிழ் இலக்கியங்களில் உயிரியல்
உயிரியல் என்பது உயிரினங்களைப் பற்றிய அறிவியல் ஆகும். தன்னைச் சுற்றியிருக்கும் உயிரினங்கள் குறித்த அறிவைத் தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதற்கு, அவர்கள் வகுத்த ஐந்திணையின் கருப்பொருள்கள் சான்றுரைக்கின்றன. நடமாடும் உயிரினங்களோடு, தாவர வகை உயிரினங்களின் தன்மையையும், அவற்றின் இயல்புகளையும் அறிந்து பயன்படுத்தினர் என்பதற்கு இலக்கியங்கள் பல சான்றுரைக்கின்றன.
உயிர்களின் பகுப்பு முறை
தொல்காப்பியர் உயிர்களை ஆறு வகைப்படுத்தியுள்ளார்.
|
அறிவு நிலை |
அறிகின்ற ஆற்றல் |
உயிர்கள் |
|
ஓர் அறிவு |
தொடுதல்
உணர்வு |
புல், மரம் |
|
ஈரறிவு |
உற்று அறிதல், சுவைத்தல் |
நத்தை, சிப்பி |
|
மூவறிவு |
உற்று அறிதல், சுவைத்தல், நுகர்தல் |
கறையான், எறும்பு |
|
நான்கறிவு |
உற்று அறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல் |
வண்டு, தும்பி |
|
ஐந்தறிவு |
உற்று அறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் |
விலங்கினங்கள் |
|
ஆறறிவு |
உற்று அறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் |
மனிதன் |
தாவரவியல்
தாவரங்களுக்கு உயிர், உணர்வு, அறிவு என்பவை உண்டு என இந்தியத் தாவரவியல் மேதை ஜெகதீஸ் சந்திரபோஸ் நிரூபித்துக்
காட்டியுள்ளார். ஆனால், தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் கூறியுள்ளார். சங்க இலக்கியமான நற்றிணை தாவரங்களுக்குப் புரிந்து கொள்ளும் உணர்வு இருக்கிறது என்று கூறுகின்றது. “புன்னை மரத்தைத் தன் தங்கையாக நினைத்து, இம்மரத்தின் முன் உன்னுடன் காதல் புரிய வெட்கமடைகின்றேன்” என்று தலைவி தலைவனிடம் கூறுகின்றாள். இதனை, ‘நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று அன்னை கூறினள்“ என்ற பாடல் தெரிவிக்கின்றது. இதன் மூலம் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது.
தமிழர்கள் தாவரங்களை மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர். வேம்பு, மரா போன்றவற்றின் தழைகள் மருந்துகளாகவும், கிருமி நாசினிகளாகவும் பயன்பட்டன. மருந்தாகப் பயன்பட்டாலும் மரத்தை முழுவதுமாக அழித்து அதிலிருந்து மருந்தைப் பெறுதல் கூடாது என்பது தமிழர் கொள்கை. இதனை, “மரம்சா மருந்தும் கொள்ளார்” என்று நற்றிணை கூறுகின்றது. இதே போன்று குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள் கூறப்பட்டுள்ளன. இவை யாவும் தமிழர்களின் தாவரவியல் அறிவைக் காட்டுகின்றன.
விலங்கியல்
பண்டைத் தமிழிலக்கியங்களில் விலங்குகளின் உடற்கூற்றியல், அவற்றின் செயல்பாடுகள், பண்புகள், பயன்கள், அவற்றை வயப்படுத்தும் முறைகள், விலங்குகளுக்கான மருத்துவம் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, யானை, குதிரை, எருது, பசு, மான், ஆடு, நரி, புலி, குரங்கு, பன்றி முதலிய விலங்குகள் குறித்தும், பாம்பு, பல்லி போன்ற ஊர்வன குறித்தும், மீன்கள், ஆமை போன்ற நீர்வாழ் உயிர்கள் குறித்தும் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.
பெரிய விரல்களையும் சிவந்த முகத்தினையும், வெண் பற்களையும் சூலுற்ற பெண் குரங்கை, “கருவிரல் செம்முக வெண்பல் சூல் மந்தி பருவிரலால் பைஞ்சுனை” (திணைமாலை.101) என்ற பாடல் காட்டுகின்றது. “யானை அறிந்தறிந்து பாகனையே கொல்லும்“என்று யானையின் இயல்பை நாலடியார் கூறுகின்றது. காட்டுப்பன்றியின் தலை உரல் போல் காணப்படும் என்பதை மதுரைக்காஞ்சியும், புறநானூறும் குறிப்பிடுகின்றன.
இதுபோன்ற கருத்துகளால் விலங்கினங்களைக் குறித்த அறிவைத் தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகின்றது.
மேலும், நாய், ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளைத் தன் வயப்படுத்தி, தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் தமிழர்கள். அவ்வகையில் ஆடு, மாடுகள் வேளாண்மைக்கும், யானை, குதிரை போன்றவை போருக்கும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. விலங்குகளை வேட்டையாடவும், இல்லப் பாதுகாப்பிற்காகவும் நாய்கள் பழக்கப்பட்டன. நண்டுக் குஞ்சுகள் பிறக்கும்போது தாய் நண்டு இறந்துவிடும் என்பதை, “கூற்றம் ஆம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு” என்று சிறுபஞ்ச மூலம் தெரிவிக்கின்றது. இவை யாவும் தமிழரின் விலங்கியல் அறிவைப் பறை சாற்றுகின்றன.
பறவையியல்
பறவைகளின் உடலமைப்பு, ஒலி எழுப்புகின்ற தன்மை, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து அடையாளப்படுத்தப் படுகின்றன்றன. பறவைகள் புள் என்ற சொல்லால் அழைக்கப்பட்டுள்ளன. பார்ப்பு, பிள்ளை, பறழ், குட்டி ஆகியவை பறவைகளின் இளமைப் பெயர்களாக அறியப்படுகின்றன. பெண் இனப் பறவைகள் பெடை, பேடை, பெட்டை, அளகு என்றும், ஆண் இனப் பறவைகள் சேவல், ஏற்றை என்றும் வழங்கப்பட்டமையைத் தொல்காப்பியம் கூறுகின்றது.
பறவைகளின் பறக்கும் திசையைக் கண்டும், அவற்றின் குரலைக் கேட்டும் இயற்கை நிகழ்வுகளைக் கணித்தனர். எனவேதான் புள் என்ற சொல்லிற்கு நன்னிமித்தம் என்ற பொருளும் காணப்படுகின்றது.
சங்க இலக்கியத்தில் 58 பறவைகள் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சங்கம் மருவிய நூல்களில் 6 பறவைகள் குறித்துப்
பேசப்பட்டுள்ளன. ஐந்து திணைகளுக்குரிய பறவைகளைப் பின்வருமாறு
காணலாம்.
|
குறிஞ்சி |
கிளி, மயில், மலையுறை குருவி,
வங்கா |
|
முல்லை |
கானக்காழி, குயில், துக்கணாங்குருவி,
புறா, மாடப்புறா, மணிப்புறா,
|
|
மருதம் |
காக்கை, கோழி, குருவி |
|
நெய்தல் |
அன்னம், குருகு, நாரை,
கொக்கு, சிரல், கடல் காக்கை |
|
பாலை |
ஆந்தை, வானம்பாடி, குரால்,
கூகை, கழுகு, பருந்து |
பூநாரையில் இருந்து உள்ளான் வரை ஏறக்குறைய 22 நீர்ப் பறவைகளைப் பற்றிய செய்திகளைச்
சங்கப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர். 3 வகையான வல்லூறு,
2 வகையான காக்கை, 5 வகையான புறாக்கள்,
3 வகையான பிணம் தின்னிக் கழுகுகள், 2 வகையான கழுகுகள்
குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. மைனா
என்ற பறவையை தமிழ்ப் புலவர்கள் “நாகணவாய்ப்புள்” என்று குறிப்பிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் பறவைகள் ஒன்றுகூடி
சேர்ந்து செல்வதை, “ஓசனித்தல்“என்ற சொல்லால்
குறிக்கின்றனர்.
ஆந்தை
ஆந்தையைப் பேரறிவு உள்ள பறவையாகத் தமிழர்கள் கருதியுள்ளனர். எனவேதான் சிறைக்குடி ஆந்தையார்,
பிசிராந்தையார், ஓதல் ஆந்தையார் என அறிவில் சிறந்த
புலவர்களின் பெயர்களில் ஆந்தையின் பெயரை இணைத்துள்ளனர். ஆந்தையை,
குரால், குடிஞை, ஊமன்,
ஆண்டலை, பகண்டை, சிறுகூகை,
சாக்குருவி எனப் பல்வேறு பெயர்களில் அழைத்துள்ளனர். பெரிய ஆந்தையான கொம்பன் ஆந்தையை “பெரும் புள்”
என்று பெயரிட்டு அழைத்துள்ளனர்.
குருவி
சிட்டுக்குருவி குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில்
காணப்படுகின்றன. புறநானூற்றில் உள்ள குரீஇ என்ற சொல்லே மருவி குருவி என்றானது என்பர்.
“குன்றத்து இருந்த குரீஇ இனம் போல்”
என்ற பாடலடியில்
ஆண்குருவி வீட்டில் வாழ்கின்ற பறவையாக வாழ்வதைக் காட்டுகின்றது. “தூக்கலாம் குரீஇத் தூங்கு கூடு” என்ற புறநானூற்று அடி தூக்கணாங்குருவியின் கூட்டைச் சுட்டுகின்றது. இதேபோன்று நற்றிணை, குறுந்தொகை, சீவக சிந்தாமணி ஆகிய இலக்கியங்கள் குருவிகளின்
வாழ்வியலைக் கூறுகின்றன.
மயில்
சங்க இலக்கியங்கள் மயிலை அழகுக்கு ஒப்பமைப்படுத்தியுள்ளன. ஒரு சில இடங்களில் மயிற் போர்
நடைபெற்றதையும், போர்க்கருவியான வில்லில் மயில் தோகையைப் பயன்படுத்தியிருப்பதையும்
பதிவு செய்துள்ளன. “மயில் ஓரன்ன சாயல்” (நற்றிணை 301), “சிகை மயிலாத் தோகை விரித்தாடுநரும்”
(பரிபாடல் 9), “மயில் கண்டன்ன மடநடை மகளிர்”
(திருமுருகாற்றுப்படை) என்பன போன்ற வரிகள் மயிலின்
சிறப்பை உணர்த்துகின்றன.
அன்னம்
சங்க இலக்கியச் சான்றுகளின்படி அன்னம் நீரிலும்
நிலத்திலும் வாழ்ந்த ஒரு வெண்ணிறப் பறவை. இது சிவந்த கால்களைக் கொண்டது. வலிமையான சிறகுகளை உடையது. எகினம் என்ற பறவையோடு சேர்ந்து
விளையாடும். வானத்தில் கூட்டமாக நெடுந்தொலைவு பறக்கும்.
பெண் அன்னத்தின் நடை அழகாக இருக்கும். அன்னம் பொதிய
மலையில் வாழ்ந்துள்ளது. குளம், குட்டைகளில்
மேயும். கடற்கரை மணல் மேடுகளில் தங்கும்.
பறவைகளுக்குப் பயிற்சி
பறவைகளுக்கும் பயிற்சிகள் கொடுத்து பழக்கப்படுத்தப்பட்டன.
·
மன்னன் பாரி அரண்மனையில் பாசறையமைத்து உள்ளிருந்த காலத்தில் அரண்மனைப் பறவைகளின் கூட்டம் காலையில் வெளியில் சென்று நெற்கதிர்களைக் கொண்டு வந்து தந்தது என்பதை அகநானூறு 303 ஆவது பாடல் காட்டுகின்றது.
·
எயினன் மிஞிலியுடன் நிகழ்ந்த போரில் வீழ்ந்தபோது பறவைகள் ஒன்றுகூடி வானில் நின்று அவன் மீது கதிரவன் ஒளிபடாமல் காத்தன என்பதை அகம்
208ஆவது பாடல் தெரிவிக்கின்றது.
·
கிளிகளுக்கு மறைகள் பழக்கப்பட்டன என்பதை பட்டினப்பாலை 261 கூறுகின்றது.
கடல்சார் உயிரினங்கள்
சங்க இலக்கியங்களில் நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய பதிவுகள் 35 இடங்களில் காணப்படுகின்றன. நண்டு, அலவன் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சுட்டப்பெற்றுள்ளது என்பதை,
“கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்“(சிறுபாணாற்றுப்படை),
“அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்” (நற்றிணை 35), கரை ஆடு அலவன் (அகநானூறு 260) என்ற இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
பூச்சிகள்
இதுவரை
1.3 மில்லியன் பூச்சி இனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் புழு பூச்சிகள் குறித்த நுட்பமான செய்திகள் காணப்படுகின்றன. பூச்சிகளின் செயல்பாடுகள், உடலமைப்பு, சிறப்புத் தன்மைகள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. வண்டு, தும்பி, தேனீ, சிதர், சிலந்தி, கோபம் முதலிய பூச்சியிகள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. பூச்சிகளுக்குத் துன்பம் இழைக்காத வாழ்வியலைத் தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதற்கு அகநானூற்றுப் பாடல்
(4) விளக்கமுரைக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக