TANSCHE - தொழில்நுட்ப வளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TANSCHE - தொழில்நுட்ப வளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 நவம்பர், 2024

TANSCHE - தொழில்நுட்ப வளர்ச்சி

தொழில்நுட்ப வளர்ச்சி

விடுதலைக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் எண்ணற்ற பயன்கள் விளைந்தன. தொழில் துறைகள் வளர்ச்சியடைந்தன. பல தொழிற்சாலைகள் உருவாயின. அறிவுப் பெருக்கத்தால் பல புதிய புதிய இயந்திரங்கள் தோன்றின. மின் அடுப்பு, சலவை இயந்திரம், குளிர்சாதனங்கள், பாத்திரம் தூய்மை செய்யும் இயந்திரம், தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன.

இயந்திரங்களின் வகைகள்

இயந்திரவியலில் இயந்திரங்கள் இரு முக்கிய வகைப்படும். அவை, மரபு சார்ந்தவை, மரபு சாராதவை.

மரபு சார்ந்தவை

திரும்புமைய இயந்திரங்கள், எந்திரமைய இயந்திரங்கள், அலைவுமைய இயந்திரங்கள், இணைவுமைய இயந்திரங்கள்.

மரபு சாராதவை

சீரொளி இயந்திரங்கள், நீர்த்தாரை இயந்திரங்கள், கேளா ஒலி இயந்திரங்கள், சிராய்ப்புத்தாரை இயந்திரங்கள், மின்மவியல் இயந்திரங்கள், மின்கசிவு இயந்திரங்கள், மின்வேதி இயந்திரங்கள்.

இந்திய விடுதலைக்குப் பிறகு ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த இந்திய ஒன்றிய அரசு, இந்தியா பொருளாதார நிலையில் வளர்ச்சி அடைய அரும்பாடுபட்டது. இதன் காரணமாக ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கி பல்வேறு துறைகளில் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது. இன்றைய இந்தியா கண்டிருக்கும் வளர்ச்சி என்பது திட்டமிட்ட வளர்ச்சி எனில் மிகையில்லை. குறிப்பாகத் தமிழ்நாடு மாநிலத்தின் வளர்ச்சியானது இந்தியாவின் இதர மாநிலங்கள் அனைத்தையும் விஞ்சி நிற்பதாக உள்ளது. அதைப் பின்வருமாறு காணலாம்.

வேளாண்மைத் துறை

வேளாண்மையே பொருளாதார அமைப்பின் அடிப்படையாகும். ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, நெல்லை முதலிய பகுதிகள் வேளாண்மையில் சிறப்புடன் விளங்குகின்றன. இந்தியா விடுதலை அடைந்தபிறகு பவானி சாகர் அணை, அமராவதி அணை, மணிமுத்தாறு அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, ஆழியாறு அணை, சேர்வலாறு அணை போன்ற பெரிய அணைக்கட்டுகள் தமிழகத்தில் கட்டப்பட்டன. விடுதலைக்குப்பின் தமிழகத்தில் கரும்பு, நெல், பருத்தி, சோளம், கம்பு போன்ற விளைபொருட்களில் ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டதால், தமிழகத்தில் 1971க்கு முன்பாகவே உணவுத் துறையில் தன்னிறைவு ஏற்பட்டது. இதனால் இந்தியாவிலேயே பசுமைப் புரட்சி கண்ட இரண்டாவது மாநிலமாத் தமிழகம் விளங்குகின்றது.

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக நீர்வள ஆதாரங்களைப் பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், கால்நடை நலன் காத்தல், பால் உற்பத்தியைப் பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல் போன்ற திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன.

தொழில்துறை வளர்ச்சி

தமிழ்நாடு இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமாகும். இது பலதரப்பட்ட உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உற்பத்தி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் (டிட்கோ), தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி), தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (டான்சிட்கோ) ஆகியவை இணைந்து மாநிலத்தில் தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன. வேளாண்மை முதன்மைத் தொழிலாக விளங்கியபோதிலும், மக்கள் பிற தொழில்களிலும் ஈடுபட்டிருந்தனர். அத்தொழில்களைக் கனரகத் தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள் என்று பிரிக்கலாம்.

கனரகத் தொழில் துறை

நெசவு ஆலைகளே பெருந்தொழில் கூடமாக விளங்கி வந்த நிலை மாறி சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி செய்யும் தொழில்கள் பெருகின. மத்திய மாநில அரசுகள் துப்பாக்கித் தொழிற்சாலை, டாங்குகள் கட்டும் தொழிற்சாலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை என்ற புதிய கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன.

சிறுதொழிலும் தொழிற்பேட்டையும்

சிறுதொழில்கள் பெருமளவு பெருகியுள்ளன. அம்பத்தூர், கிண்டி, இராணிப்பேட்டை, அரக்கோணம், மார்த்தாண்டம், திருச்சி, காரைக்குடி, ஓசூர் முதலிய இடங்களில் உருவான தொழில்பேட்டைகள் குறிப்பிடத்தக்கன.

தொழிற்சாலைகள்

பஞ்சாலைத்தொழில் கோவை, மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய மாவட்டங்களில் சிறந்து விளங்குகின்றது. சர்க்கரை மற்றும் கரும்பு ஆலைத்தொழில் கிராமப்புற முன்னேற்றத்திற்குச் சாலை வசதி, மின்சார வசதி, வேலைவாய்ப்ப அளிப்பது ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது. டால்மியாபுரம், தாழையூத்து, சங்ககிரி போன்ற இடங்களில் சிமெண்ட் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. போக்குவரத்து ஊர்திகள் உற்பத்தி செய்யும் தொழில் சாலைகளில் அசோக் லேலாண்ட், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கன. மாதவரம், ஆம்பூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் தோல் பொருள் உற்பத்தி மையங்கள் உள்ளன.

மத்திய அரசு நிறுவனங்கள்

விடுதலைக்குப்பின் தமிழகத்தில் பல மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவற்றுள் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்துஸ்தான் டெல்லி பிரிண்டர்ஸ் லிமிடெட், உரத் தொழிற்சாலை, எஃகு தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்லை ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.

மின் உற்பத்தி

பேசின்பிரிட்ஜ் அனல்மின் நிலையம், மேட்டூர் நீர் மின் நிலையம் முதலியன உருவாக்கப்பட்டன. 1957இல் தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்பாக்கம் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல்மின் நிலையம் போன்றவை துவங்கப்பட்டன.

பேருந்து மற்றும இரயில் போக்குவரத்து

1972இல் பல்லவன் போக்குவரத்து கழகம் உருவானது. நெல்லை முதல் நாகர்கோவில் வரை, திண்டுக்கல் முதல் கருவூர் வரை, சேலம், தர்மபுரி முதல் பெங்களூர் வரை புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன.

தகவல் தொழில்நுட்பங்கள்

தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் உருவாகியுள்ளன. ஹவாய் தீவுகளில் 1990ஆம் ஆண்டு 2 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 1999இல் பன்மடங்கு அதிகரித்தது. அன்றைய முதல்வர் மு.கருணாநிதி முதல்வராக நடத்திய தமிழ் இணைய மாநாடும் ஒரு முக்கியமான சாதனையாகும். 2000இல் சென்னையில் தரமணியில் முதன் முதலாக கலைஞர் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா தமிழனை தொழில்நுட்பத் துறையில் உயர்த்தியது. கோவையிலும் அதே போன்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது. நாளுக்குநாள் புதிது புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள்கள் மனிதனின் அன்றாட வேலையை மிக எளிதாக்குகின்றன. கணினியும், திறன் பேசியும் இல்லாமல் இனி உலகம் இயங்காது என்ற நிலை உருவாகியுள்ளது. இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்பக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சிக்கு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம்

இத்திட்டத்தில், தகுதி வாய்ந்த நபர்களுக்குத் தரமான மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் குடும்பத்தின் நிதிச்சுமை பெருமளவு குறைக்கப்படுவதால் ஏழை எளிய மக்களுக்குப் பயனுள்ளதாக அமைகின்றது.

நான் முதல்வன் திட்டம்

இத்திட்டம் 2022ஆம் ஆண்டு திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான முயற்சியாக இத்திட்டம் செயல்படுகின்றது.

முடிவுரை

இன்னும் இது போன்ற பல துறைகளில் தொழில்நுட்பங்கள் தோன்றி, வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பங்கள் மக்களின் மிகப் பெரும் தேவைகளுள் ஒன்றாகி விட்டன. இனி வரும் காலங்களில் மனிதனின் அறிவாற்றலால் தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவில் மாற்றம் பெறும் என்பதில் ஐயமில்லை.