செவ்வாய், 5 நவம்பர், 2024

தொழில்நுட்ப வளர்ச்சி

 

தொழில்நுட்ப வளர்ச்சி

விடுதலைக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் எண்ணற்ற பயன்கள் விளைந்தன. தொழில் துறைகள் வளர்ச்சியடைந்தன. பல தொழிற்சாலைகள் உருவாயின. அறிவுப் பெருக்கத்தால் பல புதிய புதிய இயந்திரங்கள் தோன்றின. மின் அடுப்பு, சலவை இயந்திரம், குளிர்சாதனங்கள், பாத்திரம் தூய்மை செய்யும் இயந்திரம், தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன.

வேளாண்மைத் துறை

இந்திய மக்களின் தலையாய தொழிலாக விளங்குவது வேளாண்மை. இன்று நவீன இயந்திரங்களின் மூலமாக வேளாண்மை செய்யப்படுகின்றது.  மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை கண்டறிய உணர்விகள் (சென்சார்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்களுக்குத் தேவையான அளவு மட்டுமே நீர்ப்பாய்ச்சப்படுகின்றன.  இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஜிபிஎஸ் தொழில்நுட்பம், வானிலைக் கண்காணிப்பு, தன்னியமாக்கல், ட்ரோன்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் உணவுத்துறையில் தன்னிறைவு ஏற்படுகின்றது. கனரகத் தொழில் துறை

அறிவியல் கண்டுபிடிப்புகளால் போக்குவரத்து வாகனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றை உருவாக்க பல தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இன்று பேருந்து, மகிழுந்து, இரண்டு சக்கர வண்டிகள், இரயில்கள், விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள் வெவ்வேறு வடிவங்களில் செயல்படுவதைக் காண முடிகின்றது. நடந்து செல்வோர் குறைந்து, சாமானிய மக்களும் காரில் உலா வருவதைக் காண்கிறோம். தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இவை வெற்றி பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது. இதைப் போன்று, வாகனங்களின் உதிரிப் பாகங்களை உருவாக்க எண்ணற்ற தானியங்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகையால் ஒரு வாகனத்தை உருவாக்குவது மிக எளிதான செயலாயிற்று. ஒளியின் வேகத்தில் செல்லக்கூடிய விமானங்கள், அதிவேக இரயில்கள், ஆயிரக்கணக்கான கொள்கலன்களை ஏற்றிச் செல்கின்ற கப்பல்கள் என போக்குவரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி உச்ச நிலையை எட்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்பங்கள்

இன்றைய உலகில் மிக தீவிரமாக உருப்பெற்று இயங்கிக் கொண்டிருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் உருவாகியுள்ளன. சென்னையில் முதன் முதலாக கலைஞர் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா தமிழனை தொழில்நுட்பத் துறையில் உயர்த்தியது. ஒரு செய்தியை மற்றவருக்குத் தெரிவிப்பதில் கடிதப் போக்குவரத்து தொடங்கி இன்று திறன் பேசி மூலமாக உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் நாம் உரையாட முடிகின்றது. கணினி தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மக்களின் வாழ்க்கை நவீனமயமாகிவிட்டது. நாளுக்குநாள் புதிது புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள்கள் மனிதனின் அன்றாட வேலையை மிக எளிதாக்குகின்றன. கணினியும், திறன் பேசியும் இல்லாமல் இனி உலகம் இயங்காது என்ற நிலை உருவாகியுள்ளது. இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வித்துறை

பள்ளிக்குச் சென்று கல்வி பயிலும் நிலை மாறி, வீட்டில் இருந்தபடியே கணினி மூலம் கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளது. விரும்புகின்ற நூல்களை உடனுக்குடன் வலைதளத்தில் படிக்க முடிகின்றது. பாடம் தொடர்பான ஐயங்களை வலைதளம் மூலமாகத் தீர்த்துக் கொள்வதும், பாடக் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்து அறிவைப் பெருக்கிக் கொள்வதும் மிக எளிதாகி விட்டன. வலைதளங்கள், வலையொளிகள், வலைப்பூக்கள், காணொளிகள், இணைய வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பெருகி கற்றலையும், கற்பித்தலையும் எளிதாக்கியுள்ளன.

மருத்துவத் துறை

இறைவனுக்கு அடுத்து மக்கள் நம்பிக்கைக் கொள்கின்ற இடம் மருத்துவமனை. மருத்துவத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியால், நோய்கள் தடுக்கப்படுகின்றன. கடும் நோய்கள் களையப்படுகின்றன. உயிர்கள் காக்கப்படுகின்றன. இறப்பு விகிதம் குறைகின்றன. எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் முதலிய தொழில்நுட்பங்களால் உடலுக்குள் விளைகின்ற மாற்றங்கள் கண்டறியப்பட்டு மருத்துவம் செய்யப்படுகின்றது. லேசர் கருவிகள் மூலமாக அறுவை சிகிச்சைகள் கத்தியின்றி இரத்தமின்றி நடத்தப்படுகின்றன. புதிய மாத்திரைகளின் கண்டுபிடிப்புகள் நோய்களை விரட்டுகின்றன. உடல் உறுப்புகளை இழந்தாலும், செயற்கை உடல் உறுப்புகளால் மனிதன் நிம்மதியாக நடமாட முடிகின்றது.

முடிவுரை

இன்னும் இது போன்ற பல துறைகளில் தொழில்நுட்பங்கள் தோன்றி, வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளால் பல நன்மைகள் ஒரு புறம் இருப்பினும், சில தீமைகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பங்கள் மக்களின் மிகப் பெரும் தேவைகளுள் ஒன்றாகி விட்டன. இனி வரும் காலங்களில் மனிதனின் அறிவாற்றலால் தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவில் மாற்றம் பெறும் என்பதில் ஐயமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக