சனி, 7 மே, 2022

குகப்படலம் - சுருக்கம்

கம்பராமாயணம்

அயோத்தியா காண்டம் - குகப்படலம்

வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியை விவரிப்பதே குகப்படலம் ஆகும்.

குகனின் அறிமுகம்

இராமன் முனிவர்களுடன் இருந்தபோது, குகன் என்னும் பெயரை உடையவன் அங்கு வந்தான். அந்தக் குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன். துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். வீரக்கழலை அணிந்தவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன். பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன். தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன். சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன். அப்படிப்பட்ட குகன் முனிவர் இருப்பிடத்தில் தங்கியுள்ள இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் காணிக்கையாக எடுத்துக் கொண்டு வந்தான்.

இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல்

இராமனிடம் அன்பு கொள்ளும் குணத்தையும் உடைய குகன் தன்னுடைய சுற்றத்தார் தூரத்தே நிற்க, அம்பையும், வில்லையும், வாளையும் நீக்கிவிட்டு, இராமன் தங்கியிருந்த தவச்சாலையின் வாயிலை அடைந்தான்.

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்

வாயிலை அடைந்த குகன் தன் வருகையை உணர்த்தக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் தம்பி இலக்குமணன் அவனை அணுகி, “நீ யார்?” என்று வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி, “ஐயனே! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடன் ஆவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்என்று கூறினான்.

குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல்

இலக்குமணன்நீ இங்கேயே இருஎன்று குகனிடம் கூறிவிட்டு, தவச் சாலைக்குள் சென்று தன் தமையன் இராமனைத் தொழுது, “அரசே! தூய உள்ளம் பெற்றுள்ளவனும், தாயைக் காட்டிலும் மிக நல்லவனும், அலை மோதும் கங்கையில் செல்லும் ஓடங்களுக்குத் தலைவனுமான குகன் என்னும் ஒருவன் உன்னைக் காண்பதற்காக, தன் சுற்றத்தாருடன் வந்துள்ளான்என்று தெரிவித்தான்.

இராமனைக் கண்டு வணங்கிய குகன்

இராமனும் மனமுவந்து, “நீ அந்தக் குகனை என்னிடம் அழைத்து வாஎன்று கூறினான். இலக்குமணனும் குகனை நோக்கி, “உள்ளே வாஎன்றான். அதைக் கேட்ட குகன் விரைவாக உள்ளே சென்று, இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்தான்.

குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்

இங்கே அமர்கஎன்று குகனிடம் இராமன் கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய அந்தக் குகன், இராமனை நோக்கி, “தங்கள் உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன் என்றான். இராமன் முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.

குகனது அன்பை இராமன் பாராட்டுதல்

உள்ளத்திலே உண்டான அன்பின் தூண்டுதலால் கொண்டு வரப்பட்ட இத்தேனும் மீனும் அமிழ்தத்தைக் காட்டிலும் சிறந்தவை. நீ கொண்டு வந்தவை எவையாயினும் சரி, அவை அன்போடு பொருந்தியவை என்றால் தூய்மையானவையே!” என்று குகனிடம் கூறினான் இராமன்.

விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல்

ஆண் சிங்கம் போன்ற இராமன்நாம் இன்று இத்தவச்சாலையில் தங்கி நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ உன் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்தில் உவகையோடு தங்கிவிட்டு, விடியற்காலை நாங்கள் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருகஎன்று கூறினான்.

குகனது வேண்டுகோள்

இராமன் இவ்வாறு கூறியதும், குகன்உன்னை இந்தத் தவவேடத்தில் பார்த்த என் கண்களைப் பறித்து எறியாத பாவி நான். இந்தத் துன்பத்தோடு உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து என்னாலான அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல்

மாலை சூட்டப்பட்ட வில்லை உடைய இராமன், குகன் கூறிய கருத்தைக் கேட்டான். உடனே சீதையின் முகத்தை நோக்கி, இலக்குமணனின் திருமுகத்தை நோக்கி, அவர்கள் மனமும் குகனின் அன்பை ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்என்று கூறி கருணையினால் மலர்ந்த கண்கள் உடையவனாகி, “இனிமையான நண்பனே! நீ விரும்பியவாறு இன்று என்னோடு தங்கியிருஎன்று குகனிடம் கூறினான். குகன், இராமன்  திருவடிகளை வணங்கி, தனது சேனைப் பெருக்கை அழைத்து, அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு, தானும் வில், வாள், வேல் ஆகியவற்றுடன் அத்தவச்சாலையில் அம்மூவரையும் காவல்செய்து  நின்றான்.

இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல்

குகன் இலக்குமணனிடம் “நீ அழகிய அயோத்தி நகரை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாகஎன்று கேட்டான். இலக்குமணன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல, அதைக் கேட்டு இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான்.

இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல்

மாலை வேலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செப்பமான முறையில் செய்து, அங்கு தங்கிய இராமனும், பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற சீதையும் பரந்த பூமியில் பரப்பப்பட்ட படுக்கையில் படுத்தனர். இலக்குமணன் வில்லை ஏந்திக் கொண்டு விடியற்காலை தோன்றும் வரையிலும், கண்ணையும் இமைக்காமல் விழிப்போடு காத்து நின்றான்.

இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுதும் கண்ணீர் வழிய நிற்றல்

யானைக் கூட்டத்தைப் போலத் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றத்தாரை உடையவனும், ஓடங்களுக்குத் தலைவனுமான குகன், கண் இமைக்காது நின்ற இலக்குமணனைப் பாரத்தும், இராமன் நாணற் புல்லிலே படுத்திருக்கும் நிலையைப் பார்த்தும், கண்ணீர் அருவியைச் சொரியும் மலை போன்று நின்றான்.

குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல்

பகைவருக்கு அச்சம் தரும் தோளில் வில்லை உடைய இராமன், விடியற்காலையில் செய்ய வேண்டிய கடமைகளை விருப்பத்தோடு செய்து முடித்து, முனிவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வர அங்கிருந்து புறப்பட்டான். குகனை நோக்கி, “ஐயனே! எம்மைக் கொண்டு செல்வதற்குரிய ஒடத்தை விரைவாகக் கொண்டு வருகஎன்று கூறினான்.

இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல்

இராமன் இட்ட கட்டளையைக் கேட்ட குகன், “ஐயனே! நாங்கள் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். நாங்கள் வாழும் இடம் காடே ஆகும். நாங்கள் குறையற்றவர்கள். வலிமை பெற்றவர்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம். எங்களை உங்கள் உறவினராகக் கருதி, எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கி இருப்பாயாக. எம்மிடம் தேன் உள்ளது. தினையும் உள்ளது. மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போல் அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்குக் காடு இருக்கிறது. நீராடுவதற்குக் கங்கை இருக்கிறது. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக. இப்போதே எம்மோடு வருக. உடுத்திக் கொள்ள மெல்லிய ஆடை போன்ற தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன. தொங்கவிடப்பட்ட பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறுகுடிசைகள் உள்ளன. விரைந்து செல்ல கால்கள் உள்ளன. வில்லைப் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன. நீ விரும்பும் பொருள் ஒலிக்கும் வானத்தின் மீதுள்ள பொருளாக இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து கொடுப்போம். எனக்குப் பணிசெய்வோராகிய வில்லை ஏந்திய வேடர்கள் ஐந்நூறாயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தேவர்களைக் காட்டிலும் வலிமை பெற்றவர்கள். எங்கள் குடியிருப்பில் நீ ஒரே ஓரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவாம். அதைக் காட்டிலும் வேறான ஒரு சிறப்பு எங்களுக்கு இல்லைஎன்றான் குகன்.

மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல்

குகனது வேண்டுகோளைக் கேட்ட இராமனும் வீரனே! நாங்கள் அந்தப் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள முனிவரை வழிபாடு செய்து நாங்கள் வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்என்று கூறினான்.

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

இராமனின் கருத்தை அறிந்த குகன் விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். இராமன், சீதையோடும் இலக்குமணனோடும் அப்படகில்  றினான். பாலைப் போன்ற இனிய மொழி பேசும் சீதையும், சூரியனைப் போன்ற இராமனும், சேல் மீன்கள் வாழும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருக்க, நீண்ட கோலினால் நீரைத் துழாவிச் செலுத்தப்பட்ட அந்தப் பெரிய படகு, பல கால்களை உடைய பெரிய தண்டு போல விரைவாகச் சென்றது. படகு கரையை அடைந்தது.

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

கங்கையின் மறு கரையை அடைந்த இராமன் தன்னிடம் அன்பு கொண்ட குகனை நோக்கி, “சித்திரக் கூடத்துக்குச் செல்லும் வழியைச் சொல்லுகஎன்று கேட்டான். குகன் இராமனின் திருவடிகளை வணங்கி, “உத்தமனே! “நான் உங்களுடன் வரும் பேறு பெற்றால், தக்கபடி வழிகாட்டுவேன். காய்களையும், கனிகளையும் தேனையும் தேடிக் கொண்டு வந்து கொடுப்பேன். ஆங்காங்கே தங்குவதற்குத் தகுந்த குடில் அமைத்துக் கொடுப்பேன். ஒரு நொடிப் பொழுதும் உம்மைப் பிரிய மாட்டேன்என்று குகன் கூறினான்.

 குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

குகன் கூறிவற்றைக் கேட்ட இராமன்நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குமணன் உனக்குத் தம்பி. உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன்னே உடன் பிறந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம். இப்போது எல்லையற்ற அன்புடைய உடன்பிறந்தார்களாகிய நாம் ஐவர் ஆகிவிட்டோம்என்றான் இராமன். ஒளி வீசும் கூரிய வேலை உடையவனே! நான் காட்டில் வாழும் காலமெல்லாம் உன் தம்பியாகிய இலக்குமணன் என்னுடன் இருக்கப் போகிறான். எனவே துன்புறுதல் இல்லை. உன் இருப்பிடத்திற்குச் சென்று நான் இருந்து மக்களைக் காப்பது போலக் காப்பதற்கு உரியவன் நீ! வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்ப வடக்கு நோக்கி வரும் அந்த நாளில் உன்னிடம் உறுதியாக வருவேன். நான் சொன்ன சொல்லைத் தவற மாட்டேன்என்றான் இராமன்

குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும்

இராமன் இட்ட கட்டளையை மீறாத குகன் இராமனிடம் விடை பெற்றுக் கொண்டான். பின்பு இராமனும் இலக்குமணனும் அழகிய ஆபரணங்களை அணிந்த மயிலைப் போன்ற சீதையோடு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.


சீறாப் புராணம் - உடும்பு பேசிய படலம்

 

சீறாப் புராணம்

உடும்பு பேசிய படலம்

முகமது நபியின் வருகை

முகமது நபி அவர்களுடன் உமறு கத்தாப் என்ற வள்ளலும் தீன் என்ற இஸ்லாம் மார்க்கத்திற்கு உடையவர்கள் ஆனபின், இஸ்லாமியர்கள் யாவரும் தைரியமுடையவர்களாய், மகிழ்ச்சி அடைந்தனர். முகமது நபியை இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களின்  ஜீவனைப் போல் விரும்பினர். முகமது நபி, உமறு கத்தாப், அபுபக்கர் ஆகியோர்கள் மக்கா நகரத்திற்கு வெளியே சென்று ஒரு சோலையின்கண் தங்கியிருந்தார்கள்.

நபிகளை இயற்கை வணங்குதல்

அப்போது முகமது நபியின் அழகைப் பார்த்து அங்குள்ள கற்களும், மரங்களும், காடுகளும், பறவைகளும், விலங்கினங்களும் காட்டில்  திரியும் உயிரினங்களும் முகமது நபியைப் போற்றின. முகமது நபி அவர்கள் தங்கள் கூட்டத்தை விட்டு நீங்கி மறுநாள் வேலை கையில் ஏந்திய இஸ்லாமியர்கள் சூழ்ந்து வர வேறு ஓர் இடத்தில் சென்று தங்கினார்கள்.

வேடன் உடும்பைப் பிடித்தல்

அப்போது வில்லையும் வலையையும் உடைய ஒரு வேடன் தனது கையில் தடியுடன் காட்டில் சென்றான். வேடன் காட்டில் அலைந்து திரிந்தான்.  மான் கூட்டங்கள் தடைபடும் வண்ணம் வலைகளைக் கட்டிப் பார்த்தான். மலைகளின் குகைகளிலும் தேடிப் பார்த்தான். உணவுக்காக எந்த ஒரு விலங்கும் அவனுக்குக் கிடைக்கவில்லை. மீண்டும் அவன் சோலைகளில் தேடிய போது ஒரு பொந்தில் ஓர் உடும்பானது புகுவதைப் பார்த்து அவ்வுடும்பை வலையில் பிடித்து, கல் உடையும் வண்ணம் அடித்து தனது மார்போடு பிடித்தான்.

வேடன் நபிகளைக் கண்டு வியத்தல்

              அவ்வாறு பிடித்த உடும்பை அவ்வேடன் வலையில் கட்டி மன மகிழ்ச்சியோடு முட்கள் தங்கிய காடுகளையும், பாறைகளையும் கடந்து நடந்து வந்தபோது, இஸ்லாமியர்கள் நடுவில் வருகின்ற முகமது நபி அவர்களைக் கண்டான். அறிவையுடையவர்களான இஸ்லாமியர்களின் நடுவில் இவர் ஏன் வருகின்றார்? இவருக்குத் தொழில் என்ன? என்று  வேடன், இஸ்லாமியர்களிடம் கேட்க, அதற்கு அவர்கள், “இவர் யாவற்றிற்கும் முதன்மையான நன்மை பொருந்திய முகமது நபி” என்று கூறினர்.

முகமது நபி – வேடன் உரையாடல்

              அதைக் கேட்ட வேடன், முகமது நபியின் முன்னர் வந்து நின்று ‘நீங்கள் எந்த வேதத்திற்கு உரித்தானவர்? நீங்கள் நடத்துவது எந்த மார்க்கம்? அவற்றை எனக்குத் தெளிவாகக் கூறுங்கள்’ என்று கேட்டான். முகமது நபி வேடனைப் பார்த்து, “அழகான வேடனே, நான் இந்த உலகத்திற்குக் கடைசியாக வந்த நபி, எனக்குப் பிறகு இனிமேல் இந்த பூமியில் நபிமார்கள் யாரும் இல்லை. எனது வார்த்தையைப் பின்பற்றி தீன் என்ற இஸ்லாமிய மார்க்கத்தில் நின்றவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். இந்த வார்த்தைகளைக் குற்றமென்று சொல்பவர்கள் அக்கினி குழிகளையுடைய நரகத்தில் விழுந்து மயங்குவார்கள் என்றார். ஆதலால் இதனை நன்மை என்று உனது மனதில் நினைத்து என் நாவினில் சொல்லும் கலிமாவை ஓதி, நல்ல பதவியை அடைவாய்” என்று முகமது நபி கூறினார்.

வேடன் முனகது நபியைப் பார்த்து ‘நான் உங்களின் வார்த்தைகளை மறுக்கவில்லை. எனக்கு நீங்கள் தான் நபி என்று சொல்லும்படியாக மெய்யான சாட்சி வேண்டும்’ என்று கேட்டான். 

அதைக் கேட்ட முகமது நபி அவர்கள் ‘இந்த பூலோகத்தில் உள்ள படைப்புகளில் குறைபாடற்ற சாட்சியாக நீ கேட்பது யாது?” என்று கேட்டார். அவ்வாறு கேட்ட முகமது நபியைப் பார்த்து வேடன் “காட்டில் அகப்பட்ட ஒரு உடும்பு என்னிடம் உள்ளது. அந்த உடும்பு கூர்மையான பற்களைக் கொண்ட தன் வாயைத் திறந்து உங்களுடன் பேசினால் அதன் பின் நான் மறுத்து சொல்ல மாட்டேன்” என்று கூறினான்.

முகமது நபி அவர்கள் நல்லதென்று சிரித்து, “மலைகளில் திரிந்து நிற்கும் அந்த உடும்பை இந்தச் சபையில் விடுவாயாக” என்று கூறினார். வேடன், “நான் இந்த உடும்பைப் பிடிப்பற்குக் காட்டின் கண் திரிந்து மிகவும் இளைத்து இரண்டு கால்களும் தளர்ச்சியடைந்தேன். இதை அவிழ்த்து விட்டால் எளிதில் நம்மிடத்தில் வராது. அதனால் அதை என் மடியில் இருக்கும்படி செய்தேன்” என்று கூறினான்.

நபிகள் நாயகம் “உனது உடும்பைத் தூக்கி எனது இடத்தின் முன்பு விட்டால், அவ்வுடும்பானது அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லாது” என்று கூறினார். உடனே அந்த வேடன் தன் மடியில் நிற்கும் அவ்வுடும்பைக் கீழே விட்டான். அவ்வாறு விட்டவுடன் அவ்வுடும்பானது நெடிய தனது தலையைத் தூக்கி வாலை நிமிரும்படி செய்து முள்ளைப் போன்ற தன்னுடைய நகங்களை பூமியில் பதித்து ஊன்றி, அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லாமல் முகமது நபியைப் பார்த்து மகிழ்ந்தது.

நபிகள் நாயகம் – உடும்பு உரையாடல்

அவ்வாறு பார்த்த உடும்பை நோக்கி முகமது நபி அவர்கள், தன் வாயைத் திறந்து உடும்பை அழைத்தார். அவ்வுடும்பானது கண்களைத் திறந்து நபியைப் பார்த்துப் பிளவுடைய தன் நாக்கைத் தூக்கி பதில் பேசிற்று.

“முன்னர்  தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் பின்னர் இந்த உலகத்தில் அவதரித்து, மூன்று உலகங்களும் துதிக்கும் வண்ணம் தகுதியான நீதியை உடையவரே! தேவர்கள் வணங்கும் தங்களின் பாதங்களை தினமும் வணங்குகிறேன். தங்களின் வாயைத் திறந்து என்னை அழைத்ததற்கான காரணத்தைக் கூறுங்கள்” என்றது.

உடும்பைப் பார்த்து முகமது நபி “நீ யாரை மாறாது வணங்குகின்றாய்? என்பதை வேறுபாடு இல்லாமல் சொல்” என்று கேட்டார். உடனே அவ்வுடும்பானது, “வள்ளலே, நான் வணங்குகின்ற நாயகன் ஏகன். அவனுடைய அழகிய  சிம்மாசனமானது வானுலகத்தில் இருக்கும். அவனது ஆட்சி பூமியிலும் இருக்கும். ஒப்பில்லாத பெரியவனான அல்லாவைத் துதித்து நான் வணங்கியது சத்தியம்” என்று சொல்லிற்று.

முகமது நபி உடும்பு பேசியதைக் கேட்டு ‘நீ தருமத்துடன் சொன்னாய். ஆனால், என்னை யார் என்று மதித்தாய்?’ என்று கேட்டார். உடனே உடும்பு தனது இரட்டை நாக்குகளைத் தூக்கி பின்வருமாறு சொன்னது.

“கடல், ஆகாயம், பூலோகம், மலைகள், சூரியன் மற்றும் யாவையும் தங்கள் ஒளியில் உள்ளன. யாவற்றுக்கும் முதன்மையாய் விளங்குகின்ற அல்லாவின் அழகிய தூதர்களில் இந்த பூமியில் வந்த நபிமார்களில் பிரகாசித்து நிற்கும் மேன்மை உடையவர் நீர். கடைசியில் வந்த நபியானவர் நீங்கள். இப்பூமியில் தங்களுடைய வாக்கினால் சொல்லிய மார்க்கமே மார்க்கம். அதனைக் குற்றமறத் தெரிந்தவர்கள் சொர்க்கலோகத்தை அடைவார்கள். குற்றம் என்று கூறுபவர்கள் நரகலோகத்தில் விழுவார்கள். என்னுடைய காட்டிலுள்ள சாதிகள் எல்லாம் தங்களின் திருநாமத்தை உடைய கலிமாவைத் துதிக்கின்றன. மிகுந்த புகழ் பெற்ற உண்மையான நபிகள் நீங்களே. இவ்வுலகத்தில் வேறு நபிமார்கள் இல்லை” என்று உடும்பு சொல்லிற்று.

வேடனின் மனமாற்றம்

உடும்பு பேசியதைக் கேட்ட வேடன். மனதில் விருப்பம் அடைந்து தனது துன்பங்களை ஒழித்து நபிகளைப் பார்த்து “நானும் எனது குடும்பமும் குபிர் மார்க்கத்தினால் நாள்தோறும் செய்த பாவத்தை ஒழியுங்கள்” என்று சொல்லி நபிகளின் பாதங்களைப் பிடித்தான். நபிகள் நாயகம் தன் பாதங்களில் பற்றி நின்ற அவன் கையை எடுத்து கண்களில் பதித்து முத்தமிட்டு, மகிழ்ச்சி அடைந்து, மனம் நெகிழ கலிமாவைத் தமது வாயினால் ஓதினார்.

வேடனும் முகமது நபிகள் கூறிய கலிமாவை ஓதி முறைப்படி நடந்து இஸ்லாமியர் ஆனான்.  பின்னர் அந்த உடும்பைப் பார்த்து “நான் உன்னை நெருக்கி பிடித்தேன். உனது செய்கையினால் என்னைப் பிடித்து நெருங்கிய பாவங்களை இன்று போக்கினேன். உனது வீடாகிய பெரிய வலையின்கண் செல்” என்று சொல்லி ஆசிர்வதித்தான்.

அப்போது அந்த உடும்பானது அங்குள்ள அனைவரையும் பார்த்து மகிழ்ந்து பின்னர் தாமரை மலர் போன்ற முகம் கொண்ட முகமது நபிகளின் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து நின்றது.

உடும்பு அவ்விதம் நிற்பதைப் பார்த்த முகமது நபிகள், இனிமையான தன் வாயைத் திறந்து “நீ உனது இருப்பிடத்திற்குச் செல்வாய்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.  அதை உடும்பு தன் காதுகளால் கேட்டு மனம் மகிழ்ந்து விருப்பத்தோடு  சென்றது.

தேம்பாவணி - வளன் செனித்த படலம் சுருக்கம்

தேம்பாவணி - வளன் செனித்த படலம்

நூல் குறிப்பு

தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன. தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.

ஆசிரியர் குறிப்பு

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான் ஜோசப்பெஸ்கி. கான்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். இவர் தம் பெயரை தைரியநாதசாமிஎன மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர். 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார். திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்:

காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை, தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றைக் கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும். யோசேப்பு என்றும், சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது. அதன் நேரிய மொழிபெயர்ப்பு தமிழில் வளன் என்பதாகும்.

கதைச் சுருக்கம்:

யூதேயா நாட்டு மன்னன் சவுல். அந்நாட்டில் பிலித்தையர் என்ற இனத்தினர் திருமறையைப் பழித்தும் கடவுளை இகழ்ந்தும் வந்தனர். அரக்கன் கோலியாத் இஸ்ரேல் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான். தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றான்.

தாவீது மன்னன் சிறப்பு

  • எருசலேம் திரு நகரத்தில், தாவிது மன்னன் மகிழ்ச்சியோடு அரசு வீற்றிருந்தான். அவன் உயிர்களிடம் கருணை நிறைந்த நெஞ்சம் படைத்தவன்; மழைபோல் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவன்; மலர்களால் அணிந்த மார்பு கொண்டவன்; பொன் அணிகலன்களால் நிறைந்த மலை போல் திரண்ட புயங்களை உடையவன்.
  • அவன் மின்னலின் ஒளி தவழும் இடியை, அம்பாகப் பொழிந்த வில்லை உடையவன்; கருணை தவழும் நிழலைக் குடிகளுக்கு வழங்கும் அருள் என்னும் குடையை உடையவன்; வெளிச்சம் தவழும் ஒன்பது வகை மணிகள் பதித்த தேரை உடையவன்;  ஆண் யானை போன்ற வீரம் படைத்தவன்.
  • போர் முகத்தில் புறமுதுகிட்டு ஓடாத வலிமை கொண்டு ஆண் சிங்கம் போல் தோன்றுபவன்.
  • அவன் வேல்கொண்டு செய்யும் போரினால் எவராலும் வெல்லப் படாதவன்;  தவத்தினால் தன்னையே வென்ற தன்மை உடையவன்; வானவரும் விரும்பத்தக்க தன்மை உடையவன். தன்னை நாடி வருவோர்க்கு உதவி செய்யும் கொழு கொம்பு போன்றவன்.
  • நீதி தவறாது செங்கோல் முறையில் ஆட்சி செய்பவன்.  கல்வி நலமும், செல்வத்தின் நலமும், அறத்தின் நலமும், தேன் போன்ற இன்ப நலமும் இனிது நிறைந்தவன்.
  • தன்னோடு பகை கொள்பவருக்கு இடி போலவும், தன் கால்களில் விழுந்து துதித்து மேன்மை செய்பவருக்கு அமுது போலவும், அச்சந்தரும் தன்மை உடையவன். அத்தாவிதன் சிறுவனாய் இருந்த காலத்தில் தன்னை இகழ்ந்தவர்களுக்கு, வேல் முதலிய படைக்கருவிகள் இல்லாமலேயே தன் ஆற்றலால் துன்பம் செய்தவன்; இத்தகையவனின் வீரத்தை எடுத்துக் கூறுதல் நன்றாம்.

தாவீதின் இளமைப் பருவம் - சவூல் அரசனைப் பீலித்தேயர் எதிர்த்தல்

சூதேய நாட்டில் சவூல் என்ற மன்னன் ஆண்ட போது, மலைகளில் வாழ்ந்த பிலித்தையர் வேதத்தைப் பகைத்தவராய், அம்பு மழை பொழிந்து, போர் செய்யுமாறு எதிர்த்து வந்தனர்.

பீலித்தேயருள் இராக்கதன்

எருசலேம் திருநகர் முழுவதும் நடுங்குமாறு, வாளை ஏந்தி நின்ற பிலித்தையர் நடுவே, கருநிறம் பெற்றுப் பெருத்த மேகத்தைப் போன்ற உருவத்தைக் கொண்டு தோன்றிய கோலியாத் என்னும் கொடிய ஓர் அரக்கனும் எதிர்த்து நின்றான்.

கோலியாத்தின் தோற்றம்

  • ஒரு கரியமலை என்று சொல்லத்தக்க வகையில், வான வெளியை மூடி மறைக்கும் பெரிய இரு புயங்களுக்கு மேல் அமைந்துள்ள தலையோடு, பார்ப்போர் களிப்பையெல்லாம் அடக்கக் கூடிய சினத்தைக் காட்டிக் கொண்டு அச்சம் விளைவிக்கும் வகையில் அவனுடைய தோற்றம் இருந்தது.
  • நெடிய வாளை இடையின் ஒரு பக்கம் நெருங்கத் தொங்கவிட்டு, தோள்மீது கருமேகம் போல் பரந்த கேடயத்தைத் தாங்கி, நீண்ட ஈட்டியைக் கையில் கொண்டு, அவன் போரை எதிர் கொண்டான்.

கோலியாத்தின் கோபவுரை

நெஞ்சில் அடங்காத அகந்தை பெருகிய அவ்அரக்கன் உங்களுள் ஒருவன் இங்கு வந்து என்னுடன் போரிட வேண்டும். நானும் அவனும் தனித்தனி நின்று தாக்க வேண்டும், என்னுடன் போரிட்டுத் தோற்றவன், வென்றவனுக்கு அடிமைகள் என்று ஆகக்கடவர்,'' என்று, ஆரவார மகிழ்ச்சியால் நகைத்து, இகழ்ச்சியுடன் சொல்லி அறைகூவி அழைத்தான்.

கண்டவர் மருட்சி

அவ்வுருவம் ஒரு பெரிய மலையோ? பேயோ? பூதமோ? வேறு யாதோ? என்றவாறு அவ்வுருவத்தை இசுரவேலர் கண்டு அஞ்சினர்; கோலியாத் அறைகூவிய சொல்லைக் கேட்டபோது மயங்கினர்.

கோலியாற்றின் அகந்தை நகைப்பு

இசுரவேலர் அச்சத்தைக் கண்ட கோலியாத், செருக்குற்று அவர்கள் தொழுகின்ற ஆண்டவனைப் பகைத்தான்.

சவூல் அரசன் அறிக்கை

அவனைத் தடுப்பவர் எவருமே இல்லாமல், அவன் சொல்லிய வீர உரைகளைக் கேட்டு எவருமே நீங்கி விடுவாரென்று கண்டு, மன்னனும் தன் நெஞ்சத்தில் ஏக்கம் கொண்டான். ''எவனேனும் எதிர்கொண்டு வந்து அவ்வரக்கனை வெல்வானாயின், அப்பொழுதே நான் அவனுக்கு என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்'' என்றான்.

வீர இளைஞன் தாவீதன்

இவ்வாறாக நாற்பது நாட்களும் கடந்து சென்றபின், இளமை வாய்ந்த தாவிதன், தன் தமையன்மார் மூவர் போர் செய்யப் போயிருந்தமையால், அவர்களைக் காண ஆசையால் தொடர்ந்து அங்கு வந்து சேர்ந்து, அங்கு நடந்த யாவற்றையும் அவர்கள் அச்சத்தோடு சொல்லக் கேட்டான்.

தாவீதன் இசுரவேலரிடம் வீரமொழி விளம்பல்

அவ்வார்த்தையைக் கேட்ட தாவிதன் கொதித்து எழுந்து, ''சொல்லுக்கு அடங்காத தன்மையுடைய கடவுளை இகழ்ந்து பேச விரும்பியதன் மூலம், சாவையே விழுங்கிய அத்தீயவன் யார்?'' என்றான்.

''கையின் வலிமையினால், உள்ளத்தில் ஓங்கி எழும் பொய்யான வலிமையைக் கொண்டுள்ள ஒருவன் சினத்தினால் புகைந்து பேசிய சொல்லுக்கு அஞ்சுவது ஏனோ? உடலின் வலிமையினால் மட்டும் ஒருவனுக்கு விரும்பிய வெற்றி கிட்டுவதோ? கடவுள் தரும் வலிமையினால் சிறுவனாகிய நானுமே அவனை வெல்லுவேன்'' என்றான்.

சவூல் அரசன் வினாவும், தாவீதன் விடையும்

  • தாவிதன் சொல்லியதை அரசன் கேள்வியுற்று, ''இவனை உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள்'' என்றான்; அதன்படி சென்ற அந்த நல்ல சிறுவனைக் கண்டதும், ''நீ இறக்க எண்ணினாயோ? அவ்வரக்கனின் சீற்றத்திற்குமுன் நீ எம்மாத்திரம்!'' என்றான்.
  • அரசனது திருவடிகளை வணங்கிய தாவிதன், ‘ஐயா, கடவுளைப் பகைத்து, அவனுக்கு இயல்பாக அமைந்துள்ள ஆண்மையை மறுத்த ஒருவனை எவன்தான் வெல்ல மாட்டான்?என்று கூறினான்.
  • ''வலிமையோடு சினந்து கொல்லும் சிங்கமும் கரடியும் பாய்ந்து வந்தும், கொடுமையோடு சினந்து முழங்கும் புலியினங்களும் எதிர்கொண்டு வந்தும், காற்றாடி போல் சுழன்று என்னை எதிர்த்தபோது, அவற்றின் கழுத்தை நெரித்து நான் கொன்றேன். அறத்தைக் கெடுத்தவனாகிய இவ்வரக்கன் அவற்றைக் காட்டிலும் வலியவனோ?'' என்றான்.
  • அரசன் அவனது அரிய வீரத்தை அறிந்து வியப்புற்று ''நல்லது'' என்று இசைந்து, உரிய போருக்கு உதவவென்று விரிந்து பரவும் ஒளி பொருந்திய தனது வேலோடு வேறு பல கருவிகளையும் ஒருங்கே கொடுத்தான். தாவிதனோ, ''அவற்றோடு நடந்து செல்லும் முறையை நான் அறிகிலேன்'' என்று மறுத்து விட்டு அகன்றான்.

தாவீதன் போருக்குப் புறப்படுதல்

தானே தெரிந்தெடுத்த வாய்ப்பான ஐந்து கற்களோடு கவணையும் கையில் எடுத்துக் கொண்டு சென்றான். அங்கிருந்து நீங்கிய சிறுவனை நோக்கி யாவரும் மனத்துள் வியந்து இரங்கினர்; குருக்கள் யாவரும் வெற்றியின் ஆசையால் ஆசி மொழிகளைக் கூறினர்; தன் பக்கத்துப் படையணியை விட்டுத் தாவிதன் தனியே பிரிந்து சென்ற போது அங்கு இசுரவேலர் அனைவரும் ஒலி பெருக ஆரவாரம் செய்தனர்.

கோலியாத்தின் கோபமொழி

இசுரவேலர் ஆரவாரித்த ஓசையை அரக்கனாகிய கோலியாற்று கேட்டு, தன்னை எதிர்த்து வந்த சிறுவனைப் பழித்து, யாவரும் அஞ்சுமாறு கூர்மையான வேலோடு அணுகி வந்து, அடே! நீ என் எதிரே நிற்கவுங் கூடுமோ? நாய் நின்று, மதம் பொழியும் யானையை எதிர்த்துப் போர்வினை நடத்துமோ! அடே! சினங்கொண்டு நான் வாய் திறந்து மூச்சு விடவும்! நீ சுழன்று, நுண்ணிய தூளாய்ப் பொடிந்து, இவ்வுலகிற்கு அப்புறமுள்ள மறுவுலகிற்கே சென்று விடுவாய் !" என்றான்.

தாவீதன் மறுமொழி

சிறுவனாகிய தாவிதன் அவனை நோக்கி, "வெல்லும் தன்மையுள்ள கூர்மையான வேல் தரும் வலிமையாகிய அது ஒன்றே உன் வலிமை! நானோ தக்க சமயத்தில் ஆதரவு தரும் ஒப்பில்லா வல்லமை கொண்ட கடவுளின் வலிய கையின் துணை கொண்டு உன்னைக் கொன்று, உன் உடலை விரைவில் பறவைகளுக்கு இரையாகுமாறு செய்வேன்" என்று சொல்லிக்கொண்டே, தன் கையிலுள்ள கவணைச் சுழற்றினான்.

கோலியாற்றின் வீழ்ச்சி

தாவிதன் கல்லைக் கவணில் ஏற்றியதையும், கவணைச் சுழற்றியதையும், அக்கல்லை விரைவில் அரக்கன் மீது செலுத்தியதையும் ஒருவருமே கண்டுகொள்ளவில்லை. இடிக்கும் மேகம் போன்று அந்தக்கல் அவன் நெற்றியில் பாய்ந்ததையும், அவன் விழுந்ததையும் மட்டுமே எல்லோரும் கண்டனர்.

இறைவனைப் பழித்த இராக்கதன் தலை

போர்க்களத்தில் வீழ்ந்த அவ்வரக்கனது இடையின் ஒரு பக்கம் பொருந்தியிருந்த வாளைத் தாவிதன் உருவி, பிலித்தையரை நோக்கி, "என் இறைவன் கொண்டுள்ள வல்லமையை இதன்மூலம் உணர்ந்து கொள்ளுங்கள்!" என்று கூறி, அவனது பெரிய தலையைக் கொய்து அனைவருக்கும் தூக்கிக் காட்டினான்.

தாவீதன் அரசனாதல்

வானுலக ஆண்டவன் தந்த வல்லமையைத் தாவிதன் அடைந்து, சிறந்த அரியணையில் உயர்ந்து வீற்றிருந்து அரசன் ஆனான். செங்கோல் முறையினின்று வழுவாது நல்லாட்சி புரிந்தான். ஆண்டவன் மகிழ்ச்சியோடு ஒரு நாள் அவனுக்குத் தோன்றி, " உன் சந்ததி இடையே பல தலைமுறை கழிந்தபின் ஒரு மகனால் மகிழச் செய்வேன்’ என்றார்.

வாக்குறுதியின் வழித் தோன்றல்

  • கடவுள் வரங்களின் வளம் கொண்ட சூசையை இன்பத்தோடு தெரிந்து கொண்டார். செல்வம் ஒன்றுமே இல்லாத வறுமையாளனாய் அவனைப் பிறக்கச் செய்தார். அவனுடைய தந்தை சகோபு, தாய் நீப்பி அவள்.
  • அழகு கொண்ட நீப்பி என்னும் மங்கை, உள்ளம் மகிழ்ந்து, நல்ல கருப்பம் உற்றாள். ஆண்டவர் மிகுந்த அன்போடு ஓர் உயிரைப் படைத்து, அவளுடைய உடலினுள் செலுத்தினார்.
  • வரங்களின் தொகையால் தன் கருப்பத்தினுள் நிகழ்ந்தவற்றை அறியாதவளாய், அளவில்லாது உள்ளம் மகிழ்ந்த தாயாகிய நீப்பி என்பவள் வியப்படைந்து, தளர்வு நீங்கி எழுச்சி கொண்டாள்: பொன் போன்ற கருப்பம் முதிர்ந்து, ஒளி நிறைந்த முகத்தோடு பிறந்த மகனின் அழகைக் கண்டு, தாயாகிய நீப்பி இன்பப் பயனை அடைந்தாள்.
  • குழந்தையைக் கண்டவர் யாவரும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மேலான ஓர் இன்பமும் கொண்டனர்;  "இவன் கடவுளின் திருவடிகட்கு மகிழ்ச்சியூட்டும் குளிர்ந்த மாலை போல் ஆவான்", என்று வாழ்த்தி வெற்றி கூறினர்.
  • ஆசை மிக்க கனி போன்ற அம்மகனைப் பெற்றவள், மகனைக் கூர்ந்து நோக்கி,  "சூசையே! உயர்ந்து வளர்வாயாக!" என்று வாழ்த்தினாள். வானுலகத்து ஆண்டவன், வானுலக நலங்களைச் செய்யும் நோக்கத்தோடு அக்குழந்தையை நோக்கி, "இவன் அறத்தோடு என் மார்பில் வாடாத மாலையாய் அமைவான்," என்று கூற, அழகிய மலர் மழை பொழிந்தது. அத்தாய், மகனின் நலத்தைக் கேட்டறிந்து, இறைவனின் பாதத்தில் விழுந்து தொழுதாள்.
  • அக்குழந்தையின் அழகு மிகுமாறு அழகிய அணிகலன்களை அணிவித்தனர். மணிகள் வைத்த சதங்கையும் சிலம்பும் ஒலிக்குமாறு கால்களில் அணிவித்து, ஒளி பொருந்திய இரத்தின மோதிரத்தை விரலில் இட்டு, பசுமையான அழகிய மலர் மெத்தையில் கிடத்தி, அலைகள் திரண்ட கடல் சூழ்ந்த உலகிற்கு இவனே ஒரு திலகம் ஆவான், என்று போற்றினர். சூழ நின்றோர் சிலர், வானத்தின் மேல் உள்ள கதிரவன் இம் மண்ணுலகில் வந்து கிடக்கும் அழகிய வடிவமே இக் குழந்தை, என்பர். இன்னும் சிலர், வேதத்தை விளக்கிக் காட்டும் சுடர் விளக்கே இம்மகன், என்பர். இவ்வாறு புகழ்ச்சிகளைக் கூறி, இன்பம் எய்தினர்.

வளன் சனித்த படலம் முற்றும்.