சனி, 14 செப்டம்பர், 2024

அகழ்வாராய்ச்சியில் தமிழும் தமிழரும்

 

அகழ்வாராய்ச்சியில் தமிழும் தமிழரும்

தமிழர்களின் வரலாற்றை அறிய புதைபொருள் ஆய்வுகளும், அகழாய்வுகளும் பெரும் துணை புரிகின்றன. நீலகிரி, ஆதிச்சநல்லூர், வெள்ளலூர், அரிக்கமேடு, புகார், பையம்பள்ளி, கொடுமணல், ஓடை, பொருந்தல், புலிமான் கொம்பை, தேனூர், கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலமாக தமிழரின் பண்பாட்டு நிலைகளும், நாகரிக வளர்ச்சியும் விளக்கம் பெறுகின்றன. அவற்றுள் குறிப்பாக ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் மூலமாகப் பெறப்பட்ட செய்திகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு காணலாம்.

ஆதிச்ச நல்லூர்

தாமிரபரணி நதிக்கரையின் முகத்துவார நகரான கொற்கையில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ளது ஆதிச்சநல்லூர். கடந்த இரு நூற்றாண்டுகளாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு பல ஆச்சரியங்களைத் தந்து கொண்டிருக்கின்றது. தாமிரபரணி நதிக்கரையில் இருப்பதால் இதைபொருணை பண்பாடுஎன்று அழைக்கின்றனர். 2010ஆம் ஆண்டு இந்தியன் ஜர்னல் ஆஃப் சயின்ஸ் இதழில், கனிமச் சுரங்கங்களும், தொழிற்சாலைகளும் நிறைந்த நகரமாக ஆதிச்சநல்லூர் இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1876ஆம் ஆண்டு இங்கு முதன்முதலில் ஆய்வு செய்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரூ ஜாகர் என்பவராவார். இங்கே எலும்புகள், வெண்கலம் மற்றும் செப்புப் பொருள்களை அவர் அகழ்ந்ததாகவும், இங்கிருந்து பெர்லின் நகருக்குக் கிட்டத்தட் 10,000 பொருட்களை அள்ளிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. அதன்பின் அலெக்ஸாண்டர் ரீ, லாபிக், ஹெண்டர்சன் போன்றோர் இங்கு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். 1899 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் ரியா என்ற ஆய்வாளர், செப்பு மற்றும் பொன் பொருட்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றார். அவரது ஆய்வில் கிடைத்த பொருட்களில் பல சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

2004-2005 ஆம் ஆண்டு டி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தொல்லியல் துறையின் அகழாய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கே கிடைத்திருக்கும் இரும்பு, எஃகுப் பொருள்கள், உருக்காலையின் கரி போன்றவை இந்த மக்கள் இரும்பை மிக அழகாகப் பயன்படுத்தியவர்கள் என்று தெளிவாக்குகின்றது. பல்லவர் கால நாணயங்களில் உள்ளதைப் போல ஆதிச்ச நல்லூர் பொருள்களில் தகரத்தின் அளவு 20 சதவீதமாக உள்ளது. இதனால் கனிம வளத்தைப் பயன்படுத்துவதில் தமிழர்கள் வல்லவர்கள் என்பது தெரிகின்றது.

ஆதிச்ச நல்லூர் கடற்கரை நகரமாக அல்லது துறைமுகமாக இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதில் மக்கள் வாழ்ந்த பகுதி கோட்டைக்குள் உள்ளது. கோட்டையின் மதிற்சுவர் இன்றும் தெளிவாத் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குடியிருப்புப் பகுதி தனியாகவும், தொழிற்சாலைப் பகுதி தனியாகவும் இருந்துள்ளது. சிவப்பு மண் கொண்ட தரையில் சாணம் பூசி பயன்படுத்தியுள்ளனர்.

கிடைத்த பொருட்கள்

நீள்கூம்பு வடிவிலான முதுமக்கள் தாழியில் தங்கம், செப்பு, வெண்கலப் பொருட்கள், அரிசி, நெல், துணித்துண்டுகள், இரும்பு ஆயுதங்கள் ஆகியவை கிடைத்துள்ளனமனித எலும்புக் கூடுகள், இரும்பிலான கத்தி, வேல்கம்பு முனை, 8 கைகள் கொண்ட கொக்கி, அரிவாள், மண்வெட்டி, அம்மிக்கல் போல நான்கு கால்களைக் கொண்ட அரவையும் குழவிகளும் கிடைத்துள்ளன. இறந்தவர்களின் தலையில் கட்டும் மெல்லிய பட்டங்கள், வெண்கலத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த ஜாடிகள், விளக்குகள், கிண்ணங்கள், வெண்கல சலங்கை மணிகள், செம்பு மோதிரங்கள், செம்பு கை வளையல்கள் ஆகியவை கிடைத்துள்ளன. அரிசி, நெல், சாமை போன்றவற்றை இறந்தவர்களுடன் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இங்கு ஆதி தாய் செப்புப் படிமம் கண்டெடுக்கப்பட்டதால் தாய்த் தெய்வ வழபாடு இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. வேளாண்மை, போர்த்தொழில், கொல்லர்கள், கப்பல் தொழில் என்று பல தொழில்களில் தேர்ந்த ஒரு பண்பட்ட நாகரிகமாக இருந்திருக்கின்றது பொருணை பண்பாடு.

அரிக்கமேடு

புதுச்சேரிக்குத் தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் வலக்கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. இங்கு 1700களில் பழம்பொருள்களைத் தேடி அலைந்த முதல் நபர் லீ ஜெண்டைல் என்ற பிரெஞ்சு ஆய்வாளர் ஆவார். ஆனால் அதன் பின் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் கழித்து துப்ரெயில் என்ற தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளரது முன்னெடுப்பின் பேரில் 1940களில் மார்டிமர் வீலர் என்ற ஆய்வாளர் புதுவையை அடுத்த அரிக்கமேட்டில் அகழாய்வுகளைத் தொடங்கினார். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பணியாற்றிய டாக்டர் .ஐயப்பன் அவர்கள், துப்ரெயில் மற்றும் வீலரை அரிக்க மேட்டில் அகழாய்வு செய்யும் சாத்தியக்கூறு இருக்கிறது என்று வழிகாட்டி அழைத்துச் சென்றார்.

கிடைத்த பொருட்கள்

சாயத் தொட்டி, மண்பாண்டங்கள், ரோமானிய மணிகள், சிவப்பு நிற இத்தாலிய அர்ரடைன் மண்பாண்டங்கள், கருப்பு நிற பாண்டங்கள், சங்கு வளையல்கள், மணிகள், சுடுமண் மணிகள், சுடுமணி உருவங்கள் என்று கலவையாகக் கிடைத்த பொருள்களின் நடுவில் ரோமானியக் குடுவைகளின் பகுதிகளும், கைப்பிடிகளும் கிடைத்துள்ளன. மேலும், ரோமானிய நாணயங்களும், சங்ககால சோழர் நாணயங்களும் கிடைத்துள்ளன. அரிக்கமேடு அகழாய்வுகளில் தொன்மையான தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதன் முதலில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கிடைத்த இடமாக அரிக்கமேடு விளங்குகின்றது.

ஏற்றுமதியும் இறக்குமதியும்

மிளகு, பட்டு, பருத்தி ஆகியவற்றை கிரேக்கம் மற்றும் பண்டைய ரோமுக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து உயர்ரக மதுவினை இறக்குமதி செய்துள்ளனர் என்பதை அவ் அகழாய்வு காட்டுகின்றது. கிரேக்கர்களும் இத்தாலியர்களும் தங்கள் ஒயினைக் கலங்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். சங்க இலக்கியமான புறநானூற்றில்,

யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்

பொன்செய் புனைகலத்து ஏந்தி (56)

என்ற வரி காணப்படுகின்றது. இதனால் இது யவனர் கொண்டு வந்த மது என்பது தெளிவாகின்றது.

கீழடி

மதுரைக்குக் கிழக்கே 12 கி.மீ தொலைவில் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது கீழடி. பழைய கல்வெட்டுகள் காட்டுகின்ற குந்திதேவி சதுர்வேதி மங்கலம் என்ற கொந்தகை ஊரின் பகுதிகள்தான் இன்றைய கீழடியும், பள்ளிச் சந்தையும் ஆகும். பள்ளிச்சந்தை மேட்டுப் புஞ்சை என்று அழைக்கப்பட்ட மண்மேடுகளில்தான் இன்று அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. களம், கொந்தகை பகுதிகளில் முதுமக்கள் தாழிகள் கிடைத்ததால் அப்பகுதி கீழடியில் வசித்து வந்து பண்டையத் தமிழர்களின் ஈமக் காடாக இருக்கலாம் என்று கூறுகின்றார் தொல்லியல் துறை ஆய்வாளர் திரு.அமர்நாத். 110 ஏக்கர் பரப்பரளவு கொண்ட இந்தப் பெரும் மேடு முழுவதும் தென்னை மரங்களால் நிரம்பியுள்ளது. “இன்று இத்தனைப் பொருள்கள் அகழப்பட்டு ஒரு பெரும் நாகரிகம் பற்றிய தகவல் வெளிவந்திருக்கின்றது என்றால் அதற்கு இந்தத் தென்னை மரங்கள்தான் காரணம்என்று கூறுகின்றார் அமர்நாத். தோப்புகள் அமைந்த காரணத்தால் பள்ளிச்சந்தை நகரமயமாகவில்லை.

கிடைத்த பொருட்கள்

முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் கிட்டத்தட்ட 5800 பொருட்கள் கிடைத்துள்ளன. கட்டடப் பகுதிகள், தமிழி எழுத்துகளும் கீறல்களும் கொண்ட பாறை ஓடுகள், கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், செப்புக் காசுகள், மணிகள், சுடுமண் சிற்பங்கள், தங்க அணிகலன்கள், முத்துகள், தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புகள் என்று இங்குக் கிடைத்த தொல்லியல் பொருட்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தன. இதுவரை தமிழகத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில்தான் தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள் அதிகம் கிடைத்துள்ளன. மேலும், தந்தம் கொண்டு அமைக்கப்பட்ட சீப்புகள் முதன்முறையாக தமிழகத்தில் கீழடியில்தான் கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைத்த கட்டட அமைப்புகளில் வர்க்க வேறுபாடு இல்லை. சாதாரண மக்களும் தந்தத்தாலான பொருள்களைப் பயன்படுத்தியுள்ளனர். செல்வச் செழிப்புடன் மக்கள் இங்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது.

அகழாய்வில் தொய்வு

தொல்லியல் துறை ஆய்வாளர் திரு அமர்நாத் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஸ்ரீரமணன் தலைமையில் நடைபெற்றன. முக்கியப் பொருட்கள் கிடைக்காததால் ஆய்வைக் கைவிடுவதாக அறிவித்தனர். இந்த நிலையில் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் கீழடி அகழ்வாய்வைத் தொடர வேண்டும் என்று வழக்கு தொடுத்தார் வழக்கறிஞர் கனிமொழி. அதன் பின் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி இந்தியத் தொல்லியல் துறை அனுமதி வழங்கிய பின்பு தமிழக அரசு ஆய்வுகளைத் தொடர்ந்தது.

அகழாய்வின் போக்கு

தமிழகத் தொல்லியல் துறை நான்காம், ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் செங்கல் கட்டடப் பகுதிகள், உறைகிணறு, வடிகால் குழாய்கள் என்று மண்ணுக்கடியில் ஒரு நகரத்தின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வுகளில் கிடைத்த மண்பாண்டங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. இதே போன்று தமிழி எழுத்துகள் எழுதப்பட்ட பானை ஓடுகளும் பகுப்பாய்வுக்கு ட்படுத்தப்பட்டன. இதன் மூலம், தமிழர்கள் வாழ்ந்த காலம் பின்னோக்கித் தள்ளப்பட்டது. அக்காலத்தில் வாழ்ந்த தமிழருக்கு மொழியை எழுதவும் தெரிந்திருக்கின்றது என்பது புலனானது. 2600 ஆண்டுகளுக்கு முன் ஆதன், அதன், குவிரன், உதிரன், இயனன், சேந்தன், அவதி என்று பானை ஓடுகளில் பெயர்களை எழுதும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தது தமிழ்ச் சமூகம்.

தமிழர்களின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் நோக்கில் தமிழக அரசு மதுரையில் கீழடி அருங்காட்சியகம் ஒன்று அமைத்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

              ----------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம், தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை, ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை - நிவேதிதா லூயிஸ் ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவே, மாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, இத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோ, கைடு நூலாக்கம் செய்வதோ, வலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.