சனி, 12 ஜூலை, 2025

TANSCHE - சங்க கால ஆட்சி முறை

 

சங்க கால ஆட்சி முறை

கற்காலங்களில் தலைமை வகித்த ஆண் அல்லது பெண் அவர்கள் சார்ந்த குழுவின் தலைவராக இருந்தனர். உணவு தேடி அலைந்த காலத்தில் ஆண்களும் பெண்களும் வேட்டையாடிக் கொண்டு வரும் உணவுகளைக் குழுவின் உறுப்பினர்களுக்குத் தக்கபடி பகிர்ந்து அளித்தனர்.

பெண்வழிச் சமூகமும் ஆண்வழிச் சமூகமும்

அக்காலத்தில் பெண்களே தலைமை தாங்கியதால் பெண்வழிச் சமூகம் இயங்கியது. பெண் வழிச் சமூகம் இருந்த காலத்தில் உணவு சேகரிப்புப் போதாமை ஏற்பட்டதால், உற்பத்தி பணியை ஆண்கள் கையில் எடுத்து வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டனர். அதன் பிறகே ஆண்வழிச் சமூகம் தோன்றியது.

இனக்குழுக்கள்

தலைமை தாங்கிய பெண்கள் பெண் தெய்வங்களாகவும், அணங்கு முதலிய காவலர்கள் காவல் தெய்வங்களாகவும், தலைமை தாங்கிய ஆண்களின் முன்னோர்கள் தமிழ்க்கடவுளர்களாகவும் உருமாற்றம் பெற்றனர். முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை முதலானோர் நிலக்கடவுள்களாயினர்.

இனக்குழுத் தலைவர்கள்

இனக்குழுத் தலைவர்களில் சிலர் பிற்காலத்தில் கடையேழு வள்ளல்களாக விளங்கிய குறுநில மன்னர்களாக விளங்கினர்வறண்ட நிலத்தில் குடியிருந்த தமது குழுவினரைப் பாதுகாத்தவர்கள்  சிற்றூர் மன்னர்கள் ஆயினர். குறுநில மக்களின் இனக்குழுத் தலைவர்கள் குறுநில மன்னர்கள் ஆயினர். குறுநிலங்களை ஒருங்கிணைத்த பெருநிலத் தலைவர்கள் வேந்தர்கள் ஆயினர். இவர்கள் யாவரும் அறநெறிப்படியே ஆட்சி செய்துள்ளனர்.

சங்க கால ஆட்சி முறை

சங்க கால வேந்தர்கள் சட்டத்திட்டங்களை இயற்றினர். வறியவர், இரவலர் போன்ற புதுக் குழுக்கள் சமூகத்தில் ஏற்பட்டன. வரிசையறிதல், குறி எதிர்ப்பு  போன்ற புதிய பண்பாடுகள் தோன்றின.

சங்க காலத்தில் மன்னராட்சி நிலவியது. சேர, சோழ, பாண்டியர்கள் மூவேந்தர்கள் என அறியப்பட்டனர். அதியமான் நெடுமான் அஞ்சி, பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், நள்ளி முதலிய சிற்றரசர்களும் ஆட்சி புரிந்துள்ளனர்.

மன்னனின் மூத்த மகன் அடுத்த ஆட்சி அதிகாரத்திற்குரிய தகுதியையும் உரிமையையும் பெற்றிருந்தான். இளைய அரச குமாரர்களுக்கு இளங்கோ, இளங்கோசர், இளஞ்செழியன், இளஞ்சேரல், இளவெளிமான், இளவிச்சிக் கோன் போன்ற பெயர்கள் வழக்கில் இருந்தன.

அரசர்கள் நீதி, நற்குணம் ஆகிய பண்பாடுகளுடன் ஆட்சி செய்தனர். கொடுங்கோல் மன்னர்களும் இருந்துள்ளனர் என்பதை, “காய்நெல்லறுத்துக் கவளம் கொளிஎனத் தொடங்கும் சங்கப் பாடல் உணர்த்துகின்றது.

அமைச்சர்கள்

அரசனுக்கு உதவி புரிய அமைச்சர்கள் இருந்தனர். தலைமை அமைச்சரும் அவருடன் பல அலுவர்களும் இருந்தனர். இவர்கள் கற்றிந்தவர்களாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் திகழ்ந்தனர்.

ஆலோசனைக் குழுக்கள்

மன்னர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென்று குழுக்கள் இருந்தன. அவை எண்பேராயம், ஐம்பெருங்குழு என்று அழைக்கப்பட்டன. இக்குழுக்கள் அடங்கிய அமைப்புக்குபதினெண் சுற்றம்என்று பெயர். கல்வியாளர்களும், தூய உள்ளம் கொண்டவர்களும், ஒழுக்கத்தில் சிறந்தவர்களும், உண்மையே பேசுபவர்களுமே இக்குழுவின் உறுப்பினராகும் தகுதி பெற்றனர். மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற நூல்களில் இச்செய்திகள் காணப்படுகின்றன. மதுரைக்காஞ்சி நாற்பெருங்குழுவைப் பற்றிப் பேசுகின்றது.

எண்பேராயம்

  • கரணத்தியலவர் - அரசின் பெருங்கணக்கர்
  • கருமகாரர்             - செயலர்
  • கனகச் சுற்றம்       - பொருட் பாதுகாப்பு அதிகாரி
  • கடைக்காப்பாளர் அரண்மனைக் காப்போர்
  • நகரமாந்தர்           - நகரில் வாழும் மக்களில் சிறந்த தலைவர்
  • படைத்தலைவர்   - காலாட்படைகளின் தலைவர்
  • யானை வீரர்          - யானைப் படைத் தலைவர்
  • இவுளி மறவோர்  - குதிரைப்படைத் தலைவர்

ஐம்பெருங்குழு

  • கணியர்கள் (காலக் கணிப்பாளர்கள்),
  • படைத்தலைவர்
  • தூதுவர்
  • ஒற்றர்
  • அமைச்சர்

மன்னனைப் பொறுத்தே மக்கள் நலம் இருந்தது. மக்கள் நலத்தின் மீது அரசர்கள் கவனமுடன் செயலாற்றினர். ஒற்றர் வாயிலாக மக்கள் நிலையை அறிந்து பணியாற்றினர். ஒற்றர்களை வேறு ஓர் ஒற்றர் கொண்டு ஆராய்ந்து உண்மை அறிந்தனர்.

ஊராட்சி

சங்க காலத்தில் ஊராட்சியே முதன்மையாகப் போற்றப்பட்டது. ஊர்களில் மக்கள் கூடும் இடம் மன்றம், பொதியில், அம்பலம், அவை என்ற பெயர்களில் விளங்கின. பொதியில் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது என்றும், பெரிய மரத்தடியில் பொதியில் கூடியது என்றும் இலக்கியங்கள் சான்றுரைக்கின்றன. மன்றம் அல்லது பொதியில் என்னும் அமைப்புகள் மக்களின் வழக்குகளைத் தீர்த்தன. அக்கூட்டத்தில் வயது முதிர்ந்தவர் தலைவராக இருந்தார். ஊர்ப்பொது காரியங்களிலும், சமூக நலத்திட்டங்களிலும் மன்றத்தார் பொறுப்பேற்றனர். ஊரின் சில பகுதிகள் சேரிகள் எனப்பட்டன. மக்கள் சேர்ந்து வாழ்ந்தால் அவை சேரி எனப்பட்டன. செய்யும் தொழில் அடிப்படையில் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். (-டு) பறைச்சேரி, பார்ப்பணச்சேரி, இடைச்சேரி.

நகராட்சி

சங்க காலத்தில் தமிழகத்தில் சில நகரங்கள் இருந்தன. ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் என இருந்தமைபோல் நகரங்களிலும் பட்டினம், பாக்கம் எனச் சில இடங்கள் இருந்தன. பட்டினம் என்பது கடற்கரை நகரம் ஆகும். பாக்கம் என்பது பட்டினத்தின் ஒரு பகுதி ஆகும். சங்க காலத்தில் காவிரிபூம்பட்டினம், கொற்கை, மதுரை, வஞ்சி, கரூர், முசிறி, காஞ்சி முதலிய நகரங்கள் சிறந்த நகரங்களாக இருந்தன. நகரங்கள் வணிகத்தினாலும் தொழில் சிறப்பினாலும் வளமுற்றிருந்தன. மதுரை மாநகரின் தெருக்கள் அன்றாடம் தூய்மைப்படுத்தப்பட்டன. மன்னர்களின் அரண்மனைகள் அக்கறையுடன் பாதுகாக்ப்பட்டன. மக்களை ஊர்க்காவலர்கள் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தனர்.

 

வெள்ளி, 11 ஜூலை, 2025

TANSCHE - அயல்நாட்டுத் தொடர்புகள்

 

அயல்நாட்டுத் தொடர்புகள்

தமிழகம் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு. தமிழர்கள் உழைத்து வாழ்ந்தவர்கள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப கடல் கடந்து தங்கள் உழைப்பைப் பதிவு செய்தவர்கள். எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் உள்ளிட்ட பல நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். அத்தொடர்பை வெளிநாட்டவர் குறிப்புகளும், சங்க இலக்கியங்களும் உணர்த்துகின்றன. தமிழர்கள் அரசு அமைக்கவும், வணிகம் மேற்கொள்ளவும், மதம் சார்ந்தும் புலம் பெயர்ந்துள்ளனர். கடல் கடந்து வணிகம் செய்தோரை பதினெண் விசயத்தார், திசை ஆயிரவர் என்று அழைத்தனர்.

நாடெங்கும் பரவிய தமிழர்கள்

கொரியாவில் தமிழ் நிலப்பெண் ஒருவர் அரசியாக இருந்துள்ளார். ஜப்பான், தாய்லாந்து, கனடா, உருகுவே, கலிஃபோர்னியா, மலேசியா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் போன்ற நாடுகள் மற்றும் தீவுகளின் பூர்வ குடிகளாகத் தமிழர் இருந்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கொரியா சென்ற மூன்று பெண்கள் நெல் விளைவித்தல், கடலில் முத்துக் குளித்தல் முதலிய தொழில்களை அந்நாட்டு மக்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

கடல் வாணிகம்

பழங்காலத் தமிழர் மேற்கே கிரீஸ், ரோமாபுரி, எகிப்து முதலாக கிழக்கே சீனா வரையில் கடல் வாணிகம் செய்துள்ளனர். பாலஸ்தீனம், மெசபடோமியா போன்ற நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஆசிய நாடுகளில் தமிழகத்தின் ஏலம், மிளகு, இலவங்கம் ஆகியவற்றுக்கு மிகுந்த தேவை அக்காலத்தில் இருந்த்தை உணர்ந்து அப்பொருட்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்து பெரும் பொருள் ஈட்டினர்.

முத்துகளும், சங்குகளை அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களும் கப்பல் வணிகர்கள் கொண்டு வந்த நவதானியங்களும் உப்பு இட்டுப் பதப்படுத்திய மீன்களைத் தங்கள் நாவாய்களில் ஏற்றிக் கொண்டு தமிழகத்து வணிகர்கள் அயல்நாடுகளுக்குச் சென்று அவற்றை அங்கு விற்றுத் திரும்பும்போது குதிரை முதலியவற்றை ஏற்றிக் கொண்டு திரும்பினர் என்பதை மதுரைக்காஞ்சியின் வரிகள் எடுத்துரைக்கின்றன.

யவனரும் தமிழரும்

முசிறித் துறைமுகம் கப்பல் உள்ளே வருவதற்கு ஆழமில்லாத துறைமுகம். ஆகவே யவனரின் பெரிய கப்பல்கள் கரைக்கு வரமுடியாமல் கடலில் நின்றன. தமிழர்கள் மிளகை ஏற்றிக் கொண்ட தோணிகளில் ஏறி கப்பலை அடைந்தனர். மிளகு மூட்டைகளை ஏற்றி விட்டு அதற்கு விலையாக பொன் கட்டிகளை வாங்கி வந்தனர் என்பதை “யவனர் தந்த வினைமாண் நன்கலம்” என்று பரணர் பாடுகின்றார்.

யவனர் மரக்கலங்களில் கொண்டு வந்த நறுமணம் மிகுந்த மதுவை பாண்டிய மன்னர் பருகி மகிழ்ந்தான் என்பதை, “யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்” என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.

முடிவுரை

உலக நாடுகளில் தமிழும் தமிழரும் மேம்பட்டிருப்பதற்கு பண்டைய வாணிகத் தொடர்பும் அவர்கள் கைக்கொண்ட வணிக அறமும் கடல் கடந்து பயணித்த அறிவாற்றலும் மனத்துணிவும் காரணமாகும்.