வெள்ளி, 11 ஜூலை, 2025

TANSCHE - அயல்நாட்டுத் தொடர்புகள்

 

அயல்நாட்டுத் தொடர்புகள்

தமிழகம் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு. தமிழர்கள் உழைத்து வாழ்ந்தவர்கள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப கடல் கடந்து தங்கள் உழைப்பைப் பதிவு செய்தவர்கள். எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் உள்ளிட்ட பல நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். அத்தொடர்பை வெளிநாட்டவர் குறிப்புகளும், சங்க இலக்கியங்களும் உணர்த்துகின்றன. தமிழர்கள் அரசு அமைக்கவும், வணிகம் மேற்கொள்ளவும், மதம் சார்ந்தும் புலம் பெயர்ந்துள்ளனர். கடல் கடந்து வணிகம் செய்தோரை பதினெண் விசயத்தார், திசை ஆயிரவர் என்று அழைத்தனர்.

நாடெங்கும் பரவிய தமிழர்கள்

கொரியாவில் தமிழ் நிலப்பெண் ஒருவர் அரசியாக இருந்துள்ளார். ஜப்பான், தாய்லாந்து, கனடா, உருகுவே, கலிஃபோர்னியா, மலேசியா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் போன்ற நாடுகள் மற்றும் தீவுகளின் பூர்வ குடிகளாகத் தமிழர் இருந்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கொரியா சென்ற மூன்று பெண்கள் நெல் விளைவித்தல், கடலில் முத்துக் குளித்தல் முதலிய தொழில்களை அந்நாட்டு மக்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

கடல் வாணிகம்

பழங்காலத் தமிழர் மேற்கே கிரீஸ், ரோமாபுரி, எகிப்து முதலாக கிழக்கே சீனா வரையில் கடல் வாணிகம் செய்துள்ளனர். பாலஸ்தீனம், மெசபடோமியா போன்ற நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஆசிய நாடுகளில் தமிழகத்தின் ஏலம், மிளகு, இலவங்கம் ஆகியவற்றுக்கு மிகுந்த தேவை அக்காலத்தில் இருந்த்தை உணர்ந்து அப்பொருட்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்து பெரும் பொருள் ஈட்டினர்.

முத்துகளும், சங்குகளை அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களும் கப்பல் வணிகர்கள் கொண்டு வந்த நவதானியங்களும் உப்பு இட்டுப் பதப்படுத்திய மீன்களைத் தங்கள் நாவாய்களில் ஏற்றிக் கொண்டு தமிழகத்து வணிகர்கள் அயல்நாடுகளுக்குச் சென்று அவற்றை அங்கு விற்றுத் திரும்பும்போது குதிரை முதலியவற்றை ஏற்றிக் கொண்டு திரும்பினர் என்பதை மதுரைக்காஞ்சியின் வரிகள் எடுத்துரைக்கின்றன.

யவனரும் தமிழரும்

முசிறித் துறைமுகம் கப்பல் உள்ளே வருவதற்கு ஆழமில்லாத துறைமுகம். ஆகவே யவனரின் பெரிய கப்பல்கள் கரைக்கு வரமுடியாமல் கடலில் நின்றன. தமிழர்கள் மிளகை ஏற்றிக் கொண்ட தோணிகளில் ஏறி கப்பலை அடைந்தனர். மிளகு மூட்டைகளை ஏற்றி விட்டு அதற்கு விலையாக பொன் கட்டிகளை வாங்கி வந்தனர் என்பதை “யவனர் தந்த வினைமாண் நன்கலம்” என்று பரணர் பாடுகின்றார்.

யவனர் மரக்கலங்களில் கொண்டு வந்த நறுமணம் மிகுந்த மதுவை பாண்டிய மன்னர் பருகி மகிழ்ந்தான் என்பதை, “யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்” என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.

முடிவுரை

உலக நாடுகளில் தமிழும் தமிழரும் மேம்பட்டிருப்பதற்கு பண்டைய வாணிகத் தொடர்பும் அவர்கள் கைக்கொண்ட வணிக அறமும் கடல் கடந்து பயணித்த அறிவாற்றலும் மனத்துணிவும் காரணமாகும்.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக