வியாழன், 29 ஜனவரி, 2026

பொருள் செயல் வகை - திருக்குறள்

 

திருக்குறள்

பொருள் செயல் வகை

குறள் 1

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்.

விளக்கம்

தகுதி இல்லாதவர்களையும் தகுதி உடையவராக மாற்றிவிடும் தகுதி படைத்தது பணம்.

குறள் 2

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு.

விளக்கம்

நல்ல குணம் இருந்தும் அவரிடம் பொருள் இல்லை என்றால் யாரும் அவரை மதிப்பதில்லை. நல்ல குணம் இல்லை என்றாலும் அவரிடம் பொருள் இருந்தால் எல்லோரும் அவரை மதிப்பர்.

குறள் 3

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.

விளக்கம்

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்திற்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகின்றது.

குறள் 4

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

விளக்கம்

தீய வழியில் திரட்டப்படாத செல்வம் ஒருவனுக்கு அறத்தையும், இன்பத்தையும் தரும்.

குறள் 5

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

விளக்கம்

பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனை விட்டு விலகி விடுதலே நன்று.

குறள் 6

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.

விளக்கம்

உரியவர் இல்லாத்தால் வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப்பொருளும் அரசிற்கு உரிய பொருளாகும்.

குறள் 7

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு. 

விளக்கம்

அன்பு என்கிற அன்னை பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை பொருள் என்றும் வளர்ப்புத் தாயால் வளர்வதாகும்.

குறள் 8

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை.

விளக்கம்

தன் கையில் பணம் வைத்துக் கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது மலையின் மேல் ஏறி நின்று யானைப் போரைக் காண்பது போன்றதாகும்.

குறள் 9

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

விளக்கம்

பகைவரின் ஆணவத்தை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

குறள் 10

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு.

விளக்கம்

நல்ல வழியில் மிகுதியாகப் பொருள் சேர்ப்பவர்களுக்கு அறமும் இன்பமும் தானே வந்து சேரும்.

 

 

 

 

 

 

 

 

 

வேம்பின் பைங்காய் - குறுந்தொகை

 

குறுந்தொகை

திணை: மருதம்         பாடியவர்: மிளைக் கந்தனார்.

துறை: வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.

துறை விளக்கம்: தன்னுடன் ஊடல் கொண்டிருக்கும் தலைவி, தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டி, தோழியின் உதவியை நாடுகின்றான். அதற்குத் தோழி பதில் கூறுகின்றாள்.

பாடல் 

வேம்பின் பைங்காய்என் தோழி தரினே            

தேம்பூங் கட்டி என்றனிர் இனியே

பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

வெய்ய உவர்க்கும் என்றனிர்

ஐய அற்றால் அன்பின் பாலே.

விளக்கம்

தோழி தலைவனிடம், “தலைவனே! என் தோழியாகிய தலைவி, முன்பு உன்னிடம் வேப்பங்காயைத் தந்தாலும், அவள் மீது கொண்ட காதலால், வேப்பங்காயை இனிமையான வெல்லம் என்று பாராட்டினாய். இப்போது பாரியின் பறம்பு மலையிலுள்ள சுனையில் குளிர்ச்சி மிகுந்த இனிமையான நீரைத் தந்தாலும், அதை வெப்பமுடையது என்றும், உவர்ப்புச் சுவை உடையது என்றும்  கூறுகிறாய். உமது அன்பு நிலையானதாக இல்லை” என்று கூறுகின்றாள். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் - புறநானூறு

 புறநானூறு

திணை : பொதுவியல்

துறை: பொருண்மொழிக்காஞ்சி

பாடியவர் : கணியன் பூங்குன்றனார்.

பொதுவியல் திணை :

          இப்பாடல் மக்களின் வாழ்க்கைக்குரிய செய்திகளைக் கூறுவதால் பொதுவியல் திணை ஆயிற்று.

பொருண்மொழிக்காஞ்சி:

          இப்பாடல் உலகத்திலுள்ள உயிர்களுக்கு உறுதியைத் தரக்கூடிய இம்மை மறுமைச் செய்திகளைக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆயிற்று.

 பாடிய புலவர்;

          கணியன் பூங்குன்றனார். இவர் சங்ககாலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்ட ஊரில் பிறந்தவர். கணிதத்திறமை மிகுந்தவர். ஆதலால் கணியன் பூங்குன்றனார் என்று அழைக்கப்பட்டார்.

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்

         முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”

 பாடல் விளக்கம்:

  • இவ்வுலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்குச் சொந்தமான ஊர்களாகும். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நமது உறவினர்கள். ஒருவருக்கு வரக்கூடிய நோய்களும் துன்பமும் பிறரால் வருவதில்லை.
  • நமக்கு வரக்கூடிய துன்பத்திற்கும் இன்பத்திற்கும் நாமேதான் காரணமாக அமைகிறோம். இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறத்தல் என்பது புதியது அல்ல. ஓர் உயிர் கருவில் தோன்றிய நாளிலேயே இறப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 
  • இவ்வுலக வாழ்க்கை இனியது என்று மகிழ்வதும் இல்லை. வாழ்க்கையில் துன்பம் வந்தபோது வாழ்வை வெறுப்பதும் இல்லை. 
  • வானில் மின்னல் தோன்றி குளிர்ந்த மழை பெய்கிறது. மழைப்பொழிவினால் பெருகிவரும் ஆற்று நீர் கல்லை உருட்டிவருகிறது. ஆற்றுநீரின் வழியே செல்லும் தெப்பம் போல உயிரின் நிலையானது ஊழ்வினை வழியே செல்கிறது. 
  • நல்ல நூல்களைத் தேர்ந்து படித்த சான்றோர் இதனைத் தெளிந்து கூறியுள்ளனர். எனவே பெருமை மிகுந்த பெரியோரை மதித்தலும் இல்லை, சிறுமை உடைய சிறியோரை இகழ்தலும் இல்லை. 
  • உலக உயிர்கள் அனைத்தும் தாம்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் அடைகின்றனர். 
  • இவ்வாறு இவ்வுலக வாழ்க்கையின் உண்மை நிலையினை இப்பாடல் தெளிவாக உணர்த்துகிறது.