புறநானூறு
திணை : பொதுவியல்
துறை: பொருண்மொழிக்காஞ்சி
பாடியவர் : கணியன் பூங்குன்றனார்.
பொதுவியல் திணை :
இப்பாடல் மக்களின் வாழ்க்கைக்குரிய செய்திகளைக் கூறுவதால் பொதுவியல் திணை ஆயிற்று.
பொருண்மொழிக்காஞ்சி:
இப்பாடல் உலகத்திலுள்ள உயிர்களுக்கு உறுதியைத் தரக்கூடிய இம்மை மறுமைச் செய்திகளைக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆயிற்று.
கணியன் பூங்குன்றனார். இவர் சங்ககாலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்ட ஊரில் பிறந்தவர். கணிதத்திறமை மிகுந்தவர். ஆதலால் கணியன் பூங்குன்றனார் என்று அழைக்கப்பட்டார்.
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”
- இவ்வுலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்குச் சொந்தமான ஊர்களாகும். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நமது உறவினர்கள். ஒருவருக்கு வரக்கூடிய நோய்களும் துன்பமும் பிறரால் வருவதில்லை.
- நமக்கு வரக்கூடிய துன்பத்திற்கும் இன்பத்திற்கும் நாமேதான் காரணமாக அமைகிறோம். இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறத்தல் என்பது புதியது அல்ல. ஓர் உயிர் கருவில் தோன்றிய நாளிலேயே இறப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
- இவ்வுலக வாழ்க்கை இனியது என்று மகிழ்வதும் இல்லை. வாழ்க்கையில் துன்பம் வந்தபோது வாழ்வை வெறுப்பதும் இல்லை.
- வானில் மின்னல் தோன்றி குளிர்ந்த மழை பெய்கிறது. மழைப்பொழிவினால் பெருகிவரும் ஆற்று நீர் கல்லை உருட்டிவருகிறது. ஆற்றுநீரின் வழியே செல்லும் தெப்பம் போல உயிரின் நிலையானது ஊழ்வினை வழியே செல்கிறது.
- நல்ல நூல்களைத் தேர்ந்து படித்த சான்றோர் இதனைத் தெளிந்து கூறியுள்ளனர். எனவே பெருமை மிகுந்த பெரியோரை மதித்தலும் இல்லை, சிறுமை உடைய சிறியோரை இகழ்தலும் இல்லை.
- உலக உயிர்கள் அனைத்தும் தாம்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் அடைகின்றனர்.
- இவ்வாறு இவ்வுலக வாழ்க்கையின் உண்மை நிலையினை இப்பாடல் தெளிவாக உணர்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக