வியாழன், 29 ஜனவரி, 2026

மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை -முக்கூடற்பள்ளு

 

முக்கூடற்பள்ளு

மூத்த பள்ளி நாட்டு வளம் உரைத்தல்

பாடல்

மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை

மிடைந்த பூகம் சுமந்து தன் காயை

சூதம் ஒன்றிச் சுமக்கக் கொடுக்கும்

சூதம் தன்கனி தூக்கும் பலாவில்

ஓதும் அந்த பலாக்கனி வாழை

உறுக்கவே சுமந்து ஒண்குலை சாய்க்கும்

மாதுளம் கொம்பு வாழை தாங்கும்

வளமை ஆசூர் வடகரை நாடே

விளக்கம்

தென்னை மரத்தின் இளநீரை, அதன் அருகில் வளர்ந்திருக்கும் பாக்கு மரம் தாங்குகின்றது. பாக்கு மரத்தின் குலைகளை மாமரங்கள் தாங்குகின்றன. மாமரங்களின் கனிகளை அருகில் வளர்ந்திருக்கும் பலா மரங்கள் தாங்குகின்றன. பலாவின் கனிகளை வாழை மரங்கள் தாங்குகின்றன. வாழை மரங்களின் குலைகளை மாதுளங் கொடிகள் தாங்குகின்றன. இத்தகைய வளம் உடையது ஆசூர் வடகரை நாடு.

ஆனாத செல்வத்து - குலசேகர ஆழ்வார்

 

குலசேகர ஆழ்வார்

பாடல்

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

விளக்கம்

அளவில்லாத செல்வத்துடன் தேவமகளிர்சூழ வானுலகத்தை ஆளுகின்ற பெரும் வாய்ப்பையும், மண்ணுலகை ஆளுகின்ற வாய்ப்பையும் நான் விரும்பவில்லை. தேன் நிரம்பிய பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் உள்ள நீர்ச்சுனையில் மீனாகப் பிறக்கும் வாய்ப்பு கிடைக்கவே தவம் இருக்கின்றேன்.

 

மண்ணில் நல்ல வண்ணம் - திருஞானசம்பந்தர் தேவாரம்

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

பாடல்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்ல அஃது கழுமல வளநகர்

பெண்ணின் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே

விளக்கம்

இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் வளமோடு இன்பமாக வாழலாம். தினமும் இறைவனை நினைத்து வழிபட்டால் குறைவில்லாத முக்தி இன்பத்தை அடையலாம். இத்தகைய நன்மையை அருள கழுமலம் என்ற ஊரில் உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருக்கின்றான்.