களவு வாழ்க்கையும் கற்பு
வாழ்க்கையும்
சங்க காலச் சான்றோர்
வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் இரண்டாகப் பகுத்திருந்தனர். ஒருவனும் ஒருத்தியும்
தமக்குள் காதல் கொண்டு இன்புறும் ஒழுக்கத்தினை அகம் என்றனர். பிற வாழ்வியல் கூறுகளைப்
புறம் என்றனர். இவ் இரண்டின் அடிப்படையிலேயே இலக்கியமும் தோன்றின.
அன்பின் ஐந்திணை
சங்கச் செய்யுட்களில்
பெரும்பான்மை அகப்பாடல்களாகவே அமைந்துள்ளன. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,
பாலை என்ற ஐந்து திணைகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. இவ் ஐந்தும் அன்பின் ஐந்திணை
என்று போற்றப்படுகின்றது. பிறப்பு, குடிமை ஆகியவற்றால் ஒத்த காதலர்பால் நிகழும் காதல்
அன்பின் ஐந்திணையாகவும், ஒரு தலைக்காதல் கைக்கிளை என்றும், பொருந்தாக் காதல் பெருந்திணை
என்றும் பெயர் பெற்றன. இவ் அக வாழ்க்கை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற
வகையில் விளக்கப்பட்டுள்ளன.
களவும் கற்பும்
அகத்திணை காதல் வாழ்க்கை
களவு, கற்பு என இருவகைப் படுத்தப்பட்டுள்ளது. யாரும் அறியாத வகையில் ஒரு பெண்ணும்,
ஆணும் காதல் கொள்வது களவு என்றும், ஊரறிய திருமணம் செய்து கொண்டு வாழும் நிலையைக் கற்பு
என்றும் பிரித்துள்ளனர்.
களவு வாழ்க்கை
களவு வாழ்க்கையில் பல
நிலைகள் உண்டு. ஒரு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்ட பிறகு, அவர்களுடைய களவு வாழ்க்கை
தொடர தோழியும், பாங்கனும் உதவி செய்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துப் பகலிலும் இரவிலும் தங்கள் காதலை வளர்க்கின்றனர்.
இதற்குப் பகற்குறி, இரவுக்குறி என்று பெயர். தலைவியின் காதல் ஊராருக்குத் தெரியும்போது
அவர்கள் தலைவனையும் தலைவியையும் பழிக்கின்றனர். அதை அலர் தூற்றுதல் என்று குறிக்கின்றனர்.
தலைவியின் தாய், தன் மகளின் காதல் தெரிந்த பிறகு அவளை வீட்டில் அடைத்து வைக்கின்றாள்.
இதற்கு இற்செறிப்பு என்று பெயர். பெற்றோருக்குத் தெரிந்த பின்பு, தங்கள் காதல் நிறைவேறாதோ
என்ற அச்சத்தில் தலைவனும் தலைவியும் உடன்போக்கில் ஈடுபடுகின்றனர். அவர்களைத் தேடிப்
பெற்றோர்கள் சென்றதாகப் பல பாடல்கள் காணப்படுகின்றன. தலைவியின் பெற்றோர் தலைவியைத்
தனக்கு மணம் செய்து கொடுக்காதபோது தலைவன், தலைவியின் படத்தை எழுதி கையில் பிடித்தவாறு
ஊரறிய நடந்து செல்கின்ற நிலையை மடலேறுதல் என்று குறிக்கின்றனர். இவை எதுவும் நிகழாதபோது,
தோழி தலைவியின் காதலை, செவிலித்தாயிடமும், நற்றாயிடமும் முறைப்படி உரைத்து அவர்களின்
காதல் திருமணத்தில் முடிய பேருதவி புரிகின்றாள். இத்தகு சூழலை அறத்தொடு நிற்றல் எனத்
தமிழிலக்கியம் கூறுகின்றது. களவு வாழ்க்கையில்
தலைவன் தலைவியைப் பொருளீட்டும் பொருட்டுப் பிரிந்து செல்லுகின்ற நிலை காணப்படுகின்றது.
கற்பு வாழ்க்கை
அகத்திணையுள் திருமண
வாழ்க்கை கற்பு எனப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோர்களும் திருமணத்திற்கு
உடன்பட்டு, நல்ல நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வர். விடியற்காலையில் திருமணம்
நடைபெறும். உளுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த உணவை விருந்தினர்க்குப் பரிமாறினர்.
புதுமணல் பரப்பி, மணப்பந்தல் அமைக்கப்பட்டது. குழந்தைகளைப் பெற்றெடுத்த மகளிர் நால்வர்
மங்கல நீரால் மணமக்களை நீராட்டினர். இச்சடங்கு வதுவை நன்மணம் என்று குறிக்கப் பெறுகின்றது.
“கற்பினின்று வழுவாது பெருமையுடைய மனைக்கிழத்தி ஆகுக” என்று மகளிர் வாழ்த்தினர். தாலி
கட்டும் வழக்கம் சங்ககாலத்தில் இல்லை. திருமணநாள் அன்று மணமக்கள் மணவறையில் கூட்டப்பெற்றனர்.
திருமணமான பிறகு கணவன்
தன் மனைவியைக் கல்வி கற்பதன் பொருட்டோ, பொருள் தேடுதற் பொருட்டோ பிரிவதுண்டு. கல்விக்காக
ஏற்படும் பிரிவு மூன்றாடுகளுக்கு மேல் நீடிக்கக்கூடாது. மன்னனுடைய கடமைகைளை நிறைவேற்றும்
பொருட்டுத் தன் மனைவியை விட்டுப் பிரிந்தால் அப்பிரிவு ஓராண்டுக்கு மேல் நீடிக்கக்கூடாது.
கல்வி கற்கவும், பொருளீட்டவும், மன்னனுக்காகத் தூது செல்லவும் கணவன் பிரியும்போது மனைவி
அவனுடன் செல்லும் வழக்கம் இல்லை.
தொழில் புரிவதை ஆடவர்
தங்கள் உயிராக மதித்தனர். மகளிர் தம் கணவரை உயிராக மதித்தனர். இல்லறக் கடமைகளை நிறைவேற்றுவது
பெண்களின் தலையாய கடமையாக இருந்தது. தன் கணவன் வறுமையுற்றபோதும் அதனைத் தன் பெற்றோருக்கு
மறைத்து வாழ்வதே சிறந்த மனைவியின் பண்பாடு என்று கருதினர். தன் கணவன் தன்னை விட்டு,
பரத்தையரோடு நட்பு கொண்டபோது ஊடல் கொள்கின்றாள். ஆனால் கணவனை விட்டுப் பிரிந்து செல்ல முற்பட்டதில்லை. அவன் தவறைச் சுட்டிக்
காட்டி அவனைத் திருத்த முயற்சிப்பதாகப் பல சங்கப் பாடல்கள் காணப்படுகின்றன. தலைவியின்
ஊடலைத் தணிக்க, தோழி, செவிலி, நற்றாய், பாங்கன், பாணர்கள் உள்ளிட்ட பலர் வாயில்களாகச்
செயல்பட்டுள்ளனர்.
இல்லறத்தின் சிறப்பு
நன்மக்கட்பேறு. குழந்தையைப் பெறுவது தாயின் கடமை என்றும், அக்குழந்தைக்குக் கல்வியறிவைக்
கொடுத்து சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்துவது தந்தையின் கடமை என்றும் போற்றப்பட்டது.
விருந்தோம்பல் தம்பதியரின் தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது.