ஞாயிறு, 27 அக்டோபர், 2024

சமூக மறுமலர்ச்சி

 

சமூக மறுமலர்ச்சி

இந்தியா விடுதலை பெற்ற பின்னர், தமிழகத்தில் அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூக வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல நிகழ்ந்தன.

அரசியல் நிர்வாகம்

தமிழகத்தில் முடியாட்சி நீங்கிக் குடியாட்சி மலர்ந்தது. 1952இல் திரு இராசாகோபாலச்சாரியார் தமிழகத்தின் முதல்வரானார். அரசின் செயல்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடாதவாறு, அறநெறியுடன் ஆட்சி செய்ய விரும்பினார். அயல்நாட்டு மது வகைகளுக்கு விற்பனை வரி விதித்தார். பொதுக்களின் நலனை விரும்பி நிர்வாகத் துறையைக் கவனமாகக் கையாண்டார்.

1954ஆம் ஆண்டு திரு கு.காமராசர் முதல்வரானார். இவர் காலத்தில் வேளாண்மை, கல்வி, தொழில், மின்சாரம் ஆகியவற்றில் தமிழகம் தலைசிறந்து விளங்கியது. நெல்சோள உற்பத்தித் திறனில் முதன்மைப் பெற்றது. கட்டாயக்கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. ஏழைச் சிறார்களுக்கு மதிய உணவும், சீருடையும், பாடநூல்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இவர் அடித்தள மக்களின் நலனை மனதில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டார்.

1963 ஆம் ஆண்டு திரு பக்தவச்சலம் முதல்வரானார். இவர் காலத்தில் குறைந்த ஊதியம் உள்ளோருக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது.

1967ஆம் ஆண்டு திரு அண்ணாதுரை முதல்வரானார். திராவிடப் பண்பாட்டை உயர்த்தவும், தமிழர் வாழ்வு மறுமலர்ச்சி பெறவும் பாடுபட்டார். கலப்புமணத் தம்பதியரைச் சிறப்பித்துத் தங்கப்பதக்கம் வழங்கினார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார். மருத்துவக் கல்விக்கும், ஆய்வுக்கும் தனி இயக்கம் ஏற்படுத்தி, பொது நலத்திற்கும், மருத்துவத்திற்கும் தொண்டு செய்யத் தூண்டினார்.

1969ஆம் ஆண்டு திரு கருணாநிதி முதல்வரானார். மாநிலத் திட்டக் குழுவை நியமித்துப் பயிர்த்தொழிலுக்கும், பாசனத்திற்கும் பல தொண்டுகள் செய்தார். தொழுநோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளித்தல், பார்வையற்றோருக்குக் கண்ணொளி வழங்குதல், உடல் ஊனமுற்றோர்க்கு மறுவாழ்வு அளித்தல், கைம்பெண்களுக்குத் தையற்பொறி வழங்கி அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தல் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தார்.

1977ஆம் ஆண்டு திரு எம்.ஜி.இராமச்சந்திரன் முதல்வரானார். மதுவிலக்கில் தீவிரமாக ஈடுபட்டார். புயல், தீ, வெள்ளம் போன்றவற்றால் சேதமுற்ற ஏழை மக்களுக்கு விரைந்து உதவினார். வறுமையில் வாடும் தமிழ் அறிஞர்களுக்கு உதவிப் பணம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முயன்றார். ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்புற நடத்தினார். தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்க முயன்றார்.

இவ்வாறு பல முதல்வர்கள் தோன்றி அவ்வக்காலத்து ஏற்படும் தேவைக்கேற்பப் பல மாறுதல்களைக் கொணடு வந்தனர். இன்று தமிழகம் பல துறைகளில் தன்னிகரற்று விளங்குவதற்கு அவர்களே காரணம். இன்றும் செல்வி ஜெயலலிதா, திரு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முதல்வர்கள் தமிழகத்தில் தோன்றி மக்களின் நலனுக்காக அருந்தொண்டாற்றியுள்ளமை கண்கூடு. 

பொருளாதார வளர்ச்சி

விடுதலைக்குப் பிறகு நீராவி இயந்திரத்தின் மூலம் பெரிய பெரிய தொழிற்சாலைகள் பெருகின. குடிசை தொழிலாக இருந்த நூற்பும், நெசவும் தொழிற்சாலைக்கு மாறின. ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி, நிலக்கடலை போன்ற வாணிகப் பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டமையால் அவற்றின் உற்பத்திக்கு உழவர்கள் ஊக்கம் காட்டினர். ஐந்தாண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன் மூலம் தொழில் வளர்ச்சிகள் பெருக்கப்பட்டன. இத்திட்டத்தின் பயனால் உழவுத்தொழில் பல முனைகளில் வளர்ச்சி பெற்றது. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட பழுப்பு நிலக்கரித் திட்டம் பெருவெற்றி அடைந்தது. இங்குக் கிடைக்கும் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம், செயற்கை உரம், அடுப்புக்கரி ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. சென்னையில் இணைப்பு இரயில் தொழிற்சாலை, எண்ணூர் அனல் மின்சார நிலையம், திருவெறும்பூர் உயர் அழுத்தக் கொதிகலன் தொழிற்சாலை, ஆவடி டாங்கித் தொழிற்சாலை, மணலி மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை, கல்பாக்கம் மின் அணு நிலையம் முதலியவை பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தொழிலாளர் நலன் கருதி தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. தொழில் உற்பத்தியில் துணைக்கண்டத்தில் தமிழகம் மூன்றாம் இடத்தை எட்டியது.

சமூக நிலை

விடுதலைக்குப்பின் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாம், சமணம், பார்சி முதலிய சமயங்களும், நாத்திகவாதம், பகுத்தறிவாதம் முதலிய கோட்பாடுகளும் வழக்கில் இருந்தன. சாதாரண மக்கள் கல்வி, அரசியல் ஆகியவற்றின் மூலம் வெளியுலகத் தொடர்பைப் பெற்றனர். விடுதலைக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களும், ஆலைத் தொழில்களும், திரை அரங்குகளும், வாணிபமும் பெருகின. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருவோர் எண்ணிக்கை பெருகியது. ஆதரவு இழந்த முதியோருக்கு உதவித் தொகை அளிக்க அரசு முன்வந்தது. ஊரகங்களிலும், நகரங்களிலும் நூலகங்கள் பெருகின. பெண்கள் கல்விப் பயனைப் பெறும் நிலை விரிவடைந்தது. ஆசிரியைப் பணி, அலுவலகப்பணி, மருத்துவப்பணி முதலியவற்றுக்குச் செல்லும் மகளிரின் எண்ணிக்கை பெருகியது. பெண்கள் பொது வாழ்வில் பங்கு கொண்டனர். பெண்களின் உரிமைக்கென சட்டங்கள் இயற்றப்பட்டன.

நகர வாழ்க்கை, உணவு விடுதிகள், இரயில்கள், விமானங்கள், பேருந்துகள் போன்ற போக்குவரத்து வசதிகள், பல்கலைக்கழகங்கள், குழாய்த்தண்ணீர், ஆங்கில மருத்துவம், கோயில் திருவிழாக்கள் முதலியவை மக்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தின. கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், உயர்தரக் கல்வி நிலையங்கள் பன்மடங்கு பெருகின. வேளாண்மைப் பல்கலைக்கழகம், தொழில்நுட்பப் பல்கைலக்கழகம் தொடங்கப்பட்டன.

குடிநல வளர்ச்சி, சமுதாய வாழ்க்கைச் சீர்த்திருத்தங்கள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் இந்தியா முழுவதிலும் தமிழ்நாடு தலையாய இடத்தில் நிற்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையை அழிக்கக்கூடிய தீய பூசல்களோ, சுயநல இயக்கங்களோ காணப்படாமை பெரிதும் பாராட்டக்குரியது.

 -------------------------------------------------------------------------------------------------------------------


குறிப்பு

இக்கருத்துகள் யாவும் தமிழக வரலாறும் பண்பாடும் – வே.திசெல்லம்தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை ஆகிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மாணவர்களின் நலன் கருதி அந்நூல்களில் உள்ள கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதியே இத்தளம் செயல்படுகின்றது.

ஆகவேமாணவர்கள் தவிர்த்து இத்தளத்தைக் காண்பவர்கள் படிக்கவும்புரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிரஇத்தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே எடுத்து நூலாக்கம் செய்வதோகைடு நூலாக்கம் செய்வதோவலையொளியில் பதிவு செய்வதோ கூடாது என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். புரிதலுக்கு நன்றி.

           

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக