முகமதியர் ஆட்சி
தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வட இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் ஏற்பட்டன.
அலாவுதீன்
கி.பி.1290இல் தில்லியில் சுல்தானாய் இருந்தவன் ஜலாலுதீன் கில்ஜி. இவர் பண்புடைய அரசன். தன் மகளை அலாவுதீன் என்பவனுக்குத் திருமணம் செய்து வைத்தார். இராசபுத்திரர்கள் கில்ஜியை எதிர்த்தனர். அவர்களை அடக்க அலாவுதீன் அனுப்பப்பட்டார். மன்னனின் ஒப்புதலைப் பெறாமல் தென்னகத்தின் மேல் படையெடுத்தார் அலாவுதீன். 8000 வீரர்களுடன் போர் நினைவே இல்லாத அமைதியான யாதவ நாட்டின் மீது
1294இல் திடீரென போர் நிகழ்த்தினார். எதிர்பாராது தாக்குண்ட யாதவ மன்னன் அலாவுதீனுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார். இதனால் பல்வேறு பொன், முத்து, இரத்தினம், வெள்ளி, பட்டுத்துணிகள் ஆகியவற்றை யாதவ மன்னன் அலாவுதீனுக்குக் கொடுக்க நேர்ந்தது. தென்னிந்தியாவின் மீது நடந்த முதல் இசுலாமியப் படையெடுப்பு இதுவேயாகும். வெற்றிப் பொருள்களுடன் தில்லி திரும்பிய அலாவுதீன், மன்னன் ஜலாலுதீனைக் கொன்று தில்லி ஆட்சியைக் கைப்பற்றினார்.
மாலிக்காபூர்
தென்னிந்திய படையெடுப்பை மேற்கொண்டு வெற்றி பெற்ற
அலாவுதீன் கில்ஜி, தன் படைத்தளபதியான மாலிக்காபூர் தலைமையில் தேவகிரி யாதவர்களையும்,
காகதியர்களையும், போசளர்களையும் தோற்கடித்தார். மாலிக்காபூர் திருவரங்கம், மதுரை முதலிய
இடங்களைக் கொடூரமாகத் தாக்கினார். மதுரையில் வீர பாண்டியனைத் தோற்கடிக்க எண்ணி, கண்ணனூரை
நோக்கி விரைந்தார். வழியில் பொன்னும், மணியும்
ஏற்றிக் கொண்டு சென்ற 120 யானைகளைக் கைப்பற்றினார். தம் கைகளில் இருந்த நழுவிச்
சென்ற வீரபாண்டியனைத் துரத்திக் கொண்டு சிதம்பரம் விரைந்தார். அங்குப் பொன்னம்பலத்தை
அடியுடன் பேர்த்து எடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினார். ஆண்களையும் பெண்களையும்
கொன்று குவித்து வெறியாடினார். தன் கண்ணில் பட்ட கோயில்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தீ வைத்தான். தான் கைப்பற்றி இருந்த 512 யானைகள்,
5000 குதிரைகள் ஆகியவற்றுடன் மதுரையை விட்டுப் புறப்பட்டு இராமேசுவரம் சென்றார். அந்நகரை
அழித்து மக்களைப் படுகொலை செய்து, கொள்ளையடித்தார். அங்கு மசூதி ஒன்றைக் கட்டினார்.
மதுரையை ஆண்ட அலாவுதீன் இறந்ததும் அவன் பிள்ளைகளைச் சிறையில் அடைத்தார். அலாவுதீன்
மகன்களுள் ஒருவனைப் பேருக்கு மன்னனாக்கி மாலிக்காபூரே நாட்டை ஆண்டார். மணிமகுடம் சூடிய
35ஆம் நாள் மாலிக்காபூர் கொல்லப்பட்டார்.
முகமது பின் துக்ளக்
கியாசுதீன் துக்ளக்கின் மகனான பக்ருதீன் முகமது
ஜூனாகான் என்பவரே முகமது பின் துக்ளக் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதில் திறம்படச்
செயல்பட்டதால், பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டு உலுக்கான் என்ற பட்டம் பெற்றார்.
1325இல் சுல்தானைக் கொன்று விட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் காலத்தில் மதுரையில்
முழுமையாக முசுலீம் ஆட்சி நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் முசுலீம் பாதுகாப்புப் படைகள்
பல இடங்களில் நிறுவப்பட்டன. இவரிடம் பல உயிரிய
குணங்கள் இருந்தன. கணிதம், வானநூல், தத்துவம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
பாரசீக மொழியில் சில பாடல்களையும் இயற்றியுள்ளார். எளிமையாக வாழ்க்கை வாழ விரும்பிய
இம்மன்னன், இந்து மதத்தினர் மீது மிகவும் பரிவு காட்டினார். ஆற்றல் மிக்கவனாக, அறிவு
நிறைந்தவராகக் காணப்பட்டார். இவருடைய நிர்வாகச் சீர்த்திருத்தங்களில் வருவாய்த்துறை
மாற்றங்கள், தலைநகர் மாற்றங்கள், அடையாள நாணயமுறை, சமயக்கோட்பாடு, விவசாய இலாகா மாற்றங்கள்
ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
பிரோஸ் துக்ளக்
இவர் அமைதியை விரும்பினார். அனைவராலும் வெறுத்து
ஒதுக்கப்பட்ட ஜாகிர் முறையை இவர் புதுப்பித்தார். தம்மிடம் இருந்து பறிபோன தக்காணம்,
வங்காளம், சிந்து, இராஜஸ்தானம் ஆகிய மாநிலங்களை மீட்க இவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.
இவருக்கு முன் ஆட்சி செய்த அரசர்களோடு மிகவும் மாறுபட்டு இருந்தார்.
தைமூர்
1398இல் தைமூர் மேற்கொண்ட படையெடுப்பு முசுலீம்
பேரரசை தடுமாறச் செய்தது. நாட்டைச் சூறையாடியதுடன் ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றார்.
1399இல் இந்தியாவை விட்டு வெளியேறினார்.
இப்ரஹிம் லோடி
தில்லிச் சுல்தானியர்களின் கடைசி சுல்தான் இவர்.
இவருடைய பேரரசு குன்றிக் குறுகி இருந்தது. தில்லி, ஆக்ரா, சாந்தேரி, ஜான்பூர், பீகாரின்
ஒரு பகுதி ஆகிய பகுதிகளுக்கு அப்பால் இவருடைய ஆட்சி பரவவில்லை. பல பிரபுக்களை இன்னலுக்கு
ஆளாக்கி இழிவுபடுத்தினார். அவருடைய அரசியல் தந்திரமற்ற செயல்களால் சுல்தானியர்களின்
ஆட்சி முடிவுக்கு வந்தது. பாபர் 1526இல் முதல் பானிபட் போரில் இப்ரஹிம் லோடியை தோற்கடித்துக்
கொன்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக