ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

TANSCHE - நாயக்கர்கள்

 

நாயக்கர்கள்

சுல்தான்களால் சைவம், வைணவம் அழிந்து கொண்டிருந்த காலத்தில் அதனை மீட்டு எடுக்க ஹரிஹரன், புக்கர் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியே விசயநகர ஆட்சி ஆகும். விசயநகர ஆட்சியின் பிரதிநிதிகளாக நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். இவர்களின் ஆட்சி செஞ்சி, தஞ்சை, மதுரை என்ற முப்பிரிவுகளைக் கொண்டது.

குமாரகம்பண உடையார்

இவர் புக்கரின் மகன். மதுரையை ஆண்ட சுல்தான்களை வென்றவர். தமிழகத்தில் செஞ்சி, தஞ்சை, வேலூர் போன்ற இடங்களைக் கைப்பற்றி விசயநகரப் பிரதிநிதியாக இருந்தான். தமிழகத்துக் கோயில்களைப் புதுப்பித்தவர். இச்செய்திகளை மதுரா விஜயம் என்ற நூலின்வழி அறிய முடிகின்றது. இந்நூலை இயற்றியவர் குமாரகம்பண உடையாரின் மனைவி கங்காதேவி ஆவார்.

விசயநகரப் பேரரசும் தமிழகத்து நாயக்கர்களும்

சுதந்திரமாகச் செயல்பட எண்ணிய நாயக்கர்கள் விசயநகரப் பேரரசுக்குக் கப்பம் கட்ட மறுத்தனர். இதனால் கிருஷ்ணதேவராயர் கோபம் கொண்டு தமிழகத்தின் மீது படையெடுத்தார். அதன் பிறகு செஞ்சியில் வையப்ப நாயக்கனும், தஞ்சையில் விசயராகவ நாயக்கனும், மதுரையில் வெங்கடப்ப நாயக்கனும் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். கிருஷ்ண தேவராயருக்குப் பின் அவனது தம்பி அச்சுதராயன் விசயநகரப் பேரரசை ஆண்டான். இவன் இறந்தபிறகு அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தை நாயக்கர்கள் பயன்படுத்திக் கொண்டனர். சுதந்திரமாக நாட்டை ஆண்டனர். மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கன் நிர்வாகச் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்து நாயக்கர்களின் வலிமையை நிலைநாட்டினார்.

செஞ்சி நாயக்கர்கள்

பாகுகிருஷ்ணப்ப நாயக்கனின் வழிவந்தவர்கள் செஞ்சி நாயக்கர்கள். இவர்கள் பாலாற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டனர்.  பாகுகிருஷ்ணப்ப நாயக்கனுக்குப் பின் சூரப்ப நாயக்கன், கிருஷ்ணப்ப நாயக்கன், கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் ஆகியோர் ஆண்டனர். தில்லையில் கூத்த பெருமாள் ஆலயத்தின் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை நாயக்கர்கள்

திம்மப்ப நாயக்கன், செவப்ப நாயக்கன், அச்சுதப்ப நாயக்கன், இரகுநாத நாயக்கன், விசயராகவ நாயக்கன் ஆகியோர் தஞ்சையை ஆண்ட நாயக்கர்கள் ஆவர். மைசூர் உடையார்கள் மதுரையைத் தாக்கியபோது அவர்களுக்கு விசயராகவ நாயக்கன் துணை புரிந்துள்ளான். இறுதியில் நாயக்கன் சொக்கநாதன் தஞ்சையைக் கடுமையாகத் தாக்கினான். விசயராகவ நாயக்கன் கொல்லப்பட்டான். தஞ்சையில் சொக்கநாதன் அழகிரி நாயக்கனை அரியணை அமரச் செய்தான். பிறகு மதுரையுடன் தஞ்சை இணைக்கப்பட்டது. நாயக்கர்வழி வந்த செங்கமலதாசுக்குப் பீசப்பூர் சுல்தான் துணை புரிந்தார். எக்கோசியின் தலைமையில் அழகிரி நாயக்கனை வென்று தஞ்சை செங்கமதாசுக்கு வழங்கப்பட்டது. பின்பு எக்கோசிக்கே தஞ்சையை ஆளும் எண்ணம் ஏற்பட்டதால் தஞ்சை மராட்டியரின் கீழ் கொண்டு வரப்பட்டது.  தஞ்சை நாயக்கர் குறித்து சோழ மண்டலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

மதுரை நாயக்கர்கள்

விசுவநாத நாயக்கன், கிருஷ்ணப்ப நாயக்கன், முத்து கிருஷ்ணப்ப நாயக்கன், திருமலை நாயக்கன், சொக்கநாத நாயக்கன், இராணி மங்கம்மாள் ஆகியோர் மதுரை நாயக்கர்கள் ஆவர்.

விசுவநாத நாயக்கன்

இவன் கிருஷ்ணதேவராயரின் தளபதி நாகமநாயக்கனின் மகன். இவன் மதுரையின் மீது போர் தொடுத்து வெற்றி கண்டு, தன்னுடைய தளவாய் அரியநாதரின் துணை கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்தான். இவருடைய காலத்தில் திருச்சியும் மதுரையும் இணைந்து இருந்தது. திருச்சி சீரங்கநாதர் ஆலயத்தை மூன்று இலட்சம் செலவில் சீரமைத்தார் என அங்குள்ள கோயில் கல்வெட்டு காட்டுகின்றது. இவன் தனது ஆட்சிப் பரப்பை 72 பாளையங்களாகப் பிரித்து ஆண்டான். தெலுங்கர்களும், கன்னடர்களும், பாண்டியர் பரம்பரையினரும் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் போரின்போது மன்னர்களுக்கு உதவுமாறு பணிக்கப்பட்டனர். பாளையக்காரர்கள் பாளையத்தின் வருவாயை மூன்றில் ஒருபாகம் மன்னனுக்கும், ஒரு பாகம் நிர்வாகச் செலவுக்கும் பயன்படுத்தினர்.

கிருஷ்ணப்ப நாயக்கன்

இவன் விசுவநாத நாயக்கனின் மகன். இவனுடைய காலத்தில் விசயநகரத்துக்கும் பாமினி சுல்தான்களுக்குமிடையே தலைக்கோட்டையில் போர் நடைபெற்றது. அதில் இராமராயன் கொல்லப்பட்டான். அப்போரில் அரியநாதர் தலைமையில் படையை அனுப்பினான். திருமலைராயனுக்கு அவனுடைய பேரரசை மீட்க உதவினான். இவன் பெயரில் கிருஷ்ணாபுரம் என்ற நகர் ஏற்படுத்தப்பட்டது. திருவேங்கடநாதர் ஆலயத்திற்கும், மதுரை மீனாட்சி ஆலயத்திற்கும் திருப்பணிகள் செய்தான்.

அரியநாதர்

விசுவநாத நாயக்கர் தொடங்கி குமார கிருஷ்ணப்ப நாயக்கர் வரை நாயக்கர்களுக்குப் பெரும் உதவி புரிந்தவர் இவர். குமார கிருஷ்ணப்ப காலத்தில் உயிர் நீத்தார். இவர் நினைவாக மதுரை ஆயிரங்கால் மண்டபத்தின் முன் குதிரை மேல் அரியநாதர் அமர்ந்து இருப்பதுபோல் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

முத்து கிருஷ்ணப்ப நாயக்கன்

இவன் விசுவப்ப நாயக்கனின் மகன் ஆவார். இவன் காலத்தில் இராமேசுவரத்தில் திருடர்கள் தொல்லை அதிகமாக இருந்தமையால் அங்கு சடையத்தேவரை குறுநில மன்னனாக்கினார். கோயில்களுக்கு 13 கிராமங்களைத் தானமாகக் கொடுத்துள்ளார். சடையத்தேவர் சேதுபதி என்று அழைக்கப்பட்டார். இவர் காலத்தில் இராபர்–டி-நொபிலி மதுரைக்கு வந்தார்.

திருமலை நாயக்கன்

நாயக்கர் வரலாற்றின் கதிரவன் என்று போற்றப்படுபவர் திருமலை நாயக்கன். இவன் முத்து வீரப்பனின் மகன் ஆவார். மதுரையைத் தலைநகராகக் கொண்டார். சுயாட்சியை விரும்பியதால் விசயநகரப் பேரரசுக்கு எதிரியானார். இவர் அரசியல் சூழ்ச்சிகளில் வல்லவர். மைசூர், வேணாடு, இராமநாதபுரம், வேலூர் ஆகிய இடங்களில் போர் செய்து வெற்றி பெற்றார். இவருடைய காலத்தில் நடைபெற்ற மூக்கறுப்புப் போரால் மக்கள் பலர் மடிந்தனர். கோயில் திருப்பணிகளிலும், அரண்மனைகள் கட்டுவதிலும் ஆர்வம் கொண்டார். பாழ்பட்டுக் கிடந்த கோயில்களைச் செப்பனிட்டு அழகுபடுத்தினார். ஆண்டு ஒன்றுக்குப் பெருவிழாக்கள், சிறுவிழாக்கள் நடத்தி மதுரையை விழா நகரமாக்கினார். மதுரையில் அழகிய தெப்பகுளம், புதுமண்டபம், ஆவணி மூலை, இராயர் கோபுரம் ஆகியவை இவருடைய சீரிய பணிக்குச் சான்றுகளாகும். மதுரையின் மற்றொரு சிறப்பு திருமலை நாயக்கர் மகால் ஆகும். கங்காவதாரணம், நளசரித நாடகம், நீலகண்ட விசயம் ஆகிய பல புகழ் பெற்ற நூல்களைப் படைத்துள்ளார். அவருடைய அறப்பணிகளும், கலைப்பணிகளும், இறவாப் புகழை தந்தன.

சொக்கநாத நாயக்கன்

திருமலைக்குப் பிறகு சிறப்பான ஆட்சி புரிந்தவன் சொக்கநாத நாயக்கன் ஆவான். பீசப்பூர் அரசர்களை வெற்றி கொண்டான். தஞ்சை, செஞ்சி, வேலூர் போன்றவற்றைக் கைப்பற்றிய சிவாஜி மதுரையைக் கைப்பற்ற திருச்சி கொள்ளிட ஆற்றில் முகாமிட, அவனுக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் கொடுத்து படையெடுப்பைத் தவிர்த்தான். பாளையக்காரர்கள் துணை கொண்டு திருச்சியைக் கைப்பற்றிய ருசுதும்கானைக் கொன்று வெற்றி கண்டான். இவரது காலத்தில் ஜான் பிரிட்டோ மதுரையில் சமயத் தொண்டாற்றினார்

சொக்கநாதனுக்குப் பின் அரங்க கிருட்டி முத்து வீரப்பன், செஞ்சி சம்போஜி, மைசூர் சிக்கராய உனடயார், தஞ்சை எக்கோசி, இராமநாதபுரம் கிழவன் சேதுபதி ஆகியோர் மதுரையை ஆள நினைத்துப் போரிட்டனர்.

இராணி மங்கம்மாள்

அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் மடிந்த சில மாதங்களில் அவருடைய புதல்வன் விசயரங்க சொக்கநாதன் அரியணையில் அமர்த்தப்பட்டார். ஆயினும், அவருடைய பாட்டியும், சொக்கநாதனின் மனைவியுமான மங்கம்மாள் ஆளுநராக ஆட்சி நடத்தினார். முகலாயர்களின் வலிமையையும், நாயக்கர்களின் பலவீனத்தையும் உணர்ந்த மங்கம்மாள், முகலாய மன்னனுக்குப் பணிந்து, திறை செலுத்த இணங்கி, உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவருடைய உதவியை நாடினார். மராட்டியர்களிடத்தில் இழந்த பகுதிகளை மீட்டுக் கொண்டார். சமயப் பொறையுடன் அனைத்துச் சமயங்களையும் ஆதரித்தார். இதனால் நாட்டு மக்கள் தாங்கள் விரும்பும் சமயத்தைப் பின்பற்றும் உரிமையைப் பெற்றனர். நீர்நிலைகளை உருவாக்குதல், சாலைகள் அமைத்தல், சாலையில் நிழல் தரும் மரங்கள் நடுதல், சத்திரங்கள் அமைத்தல், அன்னச் சாவடிகள் அமைத்தல், தண்ணீர்ப்பந்தல் நிறுவுதல் உள்ளிட்ட பல அரும்பணிகளைச் செய்தார்.

விசயரங்க சொக்கநாத நாயக்கன்

இராணி மங்கம்மாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தார். அரசக் கடமை தவறி பக்தி நெறியில் வாழ்ந்தார். நாடு எங்கும் பூசல் நிகழ்ந்தது. எங்கும் வாரிசுரிமை போட்டி நிலவியது. பிறகு விசயரங்க சொக்கநாத நாயக்கனின் மனைவி மீனாட்சி ஆட்சியில் அமர்ந்தார். இறுதியில் சாந்தாசாகிப் மதுரையைக் கைப்பற்றியதால் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

நாயக்கரின் ஆட்சி முறை

நாயக்கர்கள் மன்னருக்கு அடுத்தபடியாக இருந்த அமைச்சர், தளபதி ஆகிய பதவிகளை ஒன்றாக்கி தளவாயாக மாற்றினர். தளவாய்க்கு அடுத்தபடியாக வருவாய் அதிகாரியான பிரதானி நிதி அமைச்சருக்கு இணையானவராக அமர்த்தப்பட்டார். பிரதானிக்கு அடுத்தபடியாக இராசயம் என்ற உயர் அதிகாரி இருந்தார். இவர்கள் நீங்கலாக கணக்கன் தணிக்கை அதிகாரியாகவும், தானாபதி அரசப் பிரதிநிதியாகவும் விளங்கினர்.

பேரரசு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மாநிலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டன. மாகாணா, சீமை என்ற பெயரில் பல கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. கிராமங்களின் பெயர்கள் மங்கலம், சமுத்திரம், குடி, ஊர், புரம், குலம், குறிச்சி, பட்டி எனப்பட்டன. கர்ணம், மணியக்காரன், தலையாரி எனக் கிராம அதிகாரிகள் இருந்தனர்.

திண்ணைப் பள்ளிகள் வழக்கத்தில் இருந்தன. சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மொழிகள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது.

இந்தோ சாரசானிய முறையில் அரண்மனைகள் கோட்டைகள் கட்டப்பட்டன. நெல்லை கூத்தப்பர் ஆலயம் இவர்களுடைய காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.

இலக்கியம்

வீரகவிராயரின் அரிச்சந்திர புராணம், அதிவீரராம பாண்டியனின் நைடதம், இலிங்கபுராணம், மகாபுராணம், கூர்மபுராணம், பதிற்றுப்பத்தந்தாதி, வரதுங்க ராம பாண்டியனின் கொக்கோகம், ஞானபிரகாசரின் திருவொற்றியூர் புராணம், நமச்சிவாயப் புலவரின் சிதம்பர வெண்பா, எல்லப்ப நாவலரின் அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், குமரகுருபர சுவாமிகளின் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், இரத்தினக் கவிராயரின் மச்ச புராணம், புலவராற்றுப்படை ஆகிய நூல்கள் எழுந்தன. சைவ சித்தாந்த நூல்களும், சிவஞான போத உரைகளும் தோன்றின. அமிர்த கவிராயர், சர்க்கரைப் புலவர் ஆகியோரும் நாயக்கர் காலப் புலவர்களாவர். சூரப்பநாயக்கன் அரண்மனையில் வாழ்ந்த புலவர் சீனிவாச தீட்சிதர் பவன புருடோத்தமம் என்ற நாடகத்தை இயற்றியுள்ளார்.  

 

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

TANSCHE - பல்லவர் வரலாறு

 

பல்லவர் வரலாறு

தமிழர்களின் அகப்புறப்பண்பாடு, கலைசார் வாழ்வியல் மற்றும் சமய நெறிகளில் ஏற்படுத்திய தாக்கம் தமிழர் வாழ்வியலை அறம் சார்ந்து நகர்த்தியது. தமிழ்ச் சமய நெறிகளும், சிற்பம், ஓவியம் போன்ற கலைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இடைக்காலப் பக்தி இலக்கியப் பண்பாட்டை அறிய வழி செய்கின்றன. அத்தகைய பண்பாட்டை முன்நிறுத்திய பல்லவர்களின் வரலாற்றைப் பின்வருமாறு காணலாம்.

பல்லவ மன்னர்கள்

சாதகவாகன அரசில் குறுநில மன்னர்களாக இருந்த பல்லவர்கள், சாதகவாகனர்களின் வீழ்ச்சிக்குப்பின் தங்களைத் தனி அரசாக அறிவித்துக் கொண்டனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டனர். வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே தென்பெண்ணை வரையிலும் ஆட்சி செய்தனர். களப்பிரர்களுடன் போர் நடத்தி அவர்களை வென்று தமிழகத்தை ஆண்டனர். இவர்களுடைய பட்டயங்களும் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் பிராகிருத மொழியில் அமைந்துள்ளன. வடமொழி மற்றும் வேதம் கற்பிக்கப்பட்டது. பல குடைவரைக் கோயில்கள், கற்றளிகள் அமைக்கப்பட்டன.

அரசியல் வரலாறு

சிவக்கந்தவர்மன் என்னும் பல்லவன் முதன்முதலில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். அவருக்குப் பின் குமாரவிஷ்ணு, முதலாம் சிம்ம வர்மன், இரண்டாம் சிம்மவர்மன் ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர்.

சிம்மவிஷ்ணு

சிம்மவர்மனின் மகன் சிம்மவிஷ்ணு. கி.பி.6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல்லவ நாட்டை ஆண்டார். களப்பிரர், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது ஆணை செலுத்தினார் என்று காசக்குடிச் செப்பேடு கூறுகின்றது.

முதலாம் மகேந்திரவர்மன்

 சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரன். ஆதியில் சமண மதத்தில் இருந்த மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரிடம் ஈடுபாடு கொண்டு சைவ மதத்திற்குத் திரும்பினார். செந்தக்காரி (கோயில் கட்டுபவன்), மத்தவிலாசம் (இன்பம் விரும்புபவன்), சித்திரகாரப்புலி (ஓவியர்க்குப் புலி), சங்கீர்ணசதி, விசித்திரசித்தன் போன்ற விருதுகளை ஏற்றுக் கொண்டவர்.

முதலாம் நரசிம்மவர்மன்

காஞ்சிப் பல்லவர்களுள் மிகச் சிறந்தவர் முதலாம் நரசிம்மவர்மனே ஆவார். இவர் மகேந்திரவர்மனின் புதல்வன். சாளுக்கியர்களுடன் போராடி மாபெரும் வெற்றி கண்டவர். இலங்கை மீது கண்ட வெற்றியும், சீனப்பயணி யுவான்சுவாங்கின் காஞ்சி வருகையும், மாமல்லபுரத்துத் திறந்த வெளி கலைக்கூடம் உருவாக்கப்பட்டதும் இவர் காலத்துக் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகும். தம் படைத்தலைவர் பரஞ்சோதியைப் கொண்டு புலிகேசி மன்னனை வெற்றி கொண்டு வாதாபி கொண்டான் என்ற பட்டப்பெயர் பெற்றார். இந்த பரஞ்சோதியே சிறுதொண்ட நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

இரண்டாம் மகேந்திரன்

நரசிம்மனின் மகன் இரண்டாம் மகேந்திரன். இரண்டே ஆண்டுகளுள் இவருடைய ஆட்சி முடிவுக்கு வந்தது. நான்மறைகள் பயிலக் கல்வி நிலையங்களை நிறுவினார்.

முதலாம் பரமேஸ்வரன்

இரண்டாம் மகேந்திரனின் மகன் முதலாம் பரமேசுவரன். இவர் சிவ பக்தனாக விளங்கி அறப்பணிகளைச் செய்தார்.

இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் இராசசிம்மன்

பரமேசுவரனுக்குப் பின் பட்டத்துக்கு வந்தவர். இவர் ஆட்சி செய்த நாற்பது ஆண்டுகள் பல்லவர் நாட்டில் அமைதி நிலவியது. கலை உலகம் போற்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பினார். இராசசிம்மன் பனைமலை, மாமல்லபுரக் கற்றளிகள் ஆகியவற்றையும் அமைத்தார். இவர் காலத்தில் தண்டி என்ற வடமொழிப் புலவர் காவ்ய தர்ஸம் என்ற நூலை இயற்றினார். இந்நூலை வழிநூலாகக் கொண்டே தமிழில் தண்டியலங்காரம் என்னும் நூல் இயற்றப்பட்டது.  இவருக்குப்பின் இரண்டாம் பரமேசுவரவர்மன் அரியணை ஏறினார்.

நந்திவர்மன்

இரண்டாம் பரமேசுவரனுக்குப் பின் இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் ஆட்சிக்கு வந்தார்.  இவர் வைணவ சமயத்தின்பால் ஈடுபாடு கொண்டவர். இவர் காலத்தில் கல்வி வளர்ச்சி பெற்றது. காஞ்சி முத்தேசுவரர் கோவில், வைகுண்டப் பெருமாள் கோயில், உதயசந்திர மங்கலம் தானம் ஆகியவற்றை உருவாக்கினார் என உதயேந்திரச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

மூன்றாம் நந்திவர்மன்

இவருக்குப் பின் மூன்றாம் நந்திவர்மன் அரியணை ஏறினார். இவர்மேல் நந்திக்கலம்பகம் என்னும் நூல் பாடப்பட்டது. கொங்கர், சோழர்களை வென்றதால் இவன் கொண்கன் சோணாடன் எனப் புகழப்பட்டார். இவர் சுந்தரர் காலத்தவர்.

மூன்றாம் நந்திவர்மனுக்குப் பிறகு அபராஜிதன் நிருதுபங்கன் அரியணை ஏறினார். இவருக்குப் பின் சோழர்களின் ஆதிக்கம் பெருகியது. ஆதித்த சோழன் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றியதால் பல்லவர்கள் வலிமை குன்றியது.

பல்லவர்களின் சமய நெறி

குடைவரைகளை அமைத்தும் சமணப்படுக்கைகளை அமைத்தும் சமணத்தை ஆதரித்தனர். சைவமும் வைணவமும் தழைத்தோங்கின. முதலாம் மகேந்திரவர்மனும் முதலாம் நரசிம்மவர்மனும் சைவத்தை ஆதரித்தனர். இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வைணவ சமயத்தை ஆதரித்தார். பல்லவர் கலத்தில் சைவ, சமணப் பூசல்கள் அதிக அளவில் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான சமணர்கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். காஞ்சி கையலாயநாதர் கோயில், முத்தேசுவரர் கோவில், வைகுண்டப் பெருமாள் கோயில் ஆகியன பல்லவர்கள் கொடுத்த சமயக்கொடையாகும்.

ஆட்சி அமைப்பு

பல்லவப் பேரரசு மண்டிலம், கோட்டம், நாடு, ஊர் என்ற நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஊராட்சி மன்றங்களும் இருந்துள்ளன. சைவ, வைணவக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலதானங்கள் தேவதானம் என்றும், சமண பௌத்த சமயங்களுக்கு வழங்கப்பட்ட இறையிலி நிலங்கள் பள்ளிச்சந்தம் என்றும் வழங்கப்பட்டன. மங்கலம், குடி, பிரம்மதேயம், பிரம்மபுரி என்ற பெயர் கொண்ட சிற்றூர்கள் பிராமணர்களுக்கென்று உருவாக்கப்பட்டது. வேளாண்மை மற்றும் கைத்தொழில் சார்ந்த தொழில்களுக்குப் பல வரிகள் விதிக்கப்பட்டன.

வரலாற்றுச் சான்றுகள்

பல்வலர் கால வரலாற்றை அறிய கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் உறுதுணையாக அமைகின்றன. அவர்கள் உருவாக்கிய கோயில், குடவரையில் காணப்படும் செய்திகள் பல்லவர்களின் கொடைப்பண்பை உணர்த்துகின்றன. பல்லவர் கால கல்வெட்டுகள் மகேந்திரவாடி, தளவானூர், பல்லாவரம், திருச்சி, திருக்கழுக்குன்றம், மாமண்டூர், மண்டகப்பட்டு, சித்தன்னவாசல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், மெய்க்கீர்த்திகள் அரசப்பாராம்பரியத்தையும், போர், படை, கொடை போன்ற செய்திகளையும் கூறுகின்றன. பல்லவர் கால நாயணங்களும் இடைக்காலத் தமிழ் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன.

இலக்கியங்கள்

பல்லவர் காலத்தில் சில அறநூல்கள் தோன்றின. பெருங்கதை, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, பாரதவெண்பா, திருமந்திரம், திருமுறைகள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரியபுராணம், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், தண்டியலங்காரம் முதலான பல இலக்கியங்கள் தோன்றின.