வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

TANSCHE - பல்லவர் வரலாறு

 

பல்லவர் வரலாறு

தமிழர்களின் அகப்புறப்பண்பாடு, கலைசார் வாழ்வியல் மற்றும் சமய நெறிகளில் ஏற்படுத்திய தாக்கம் தமிழர் வாழ்வியலை அறம் சார்ந்து நகர்த்தியது. தமிழ்ச் சமய நெறிகளும், சிற்பம், ஓவியம் போன்ற கலைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இடைக்காலப் பக்தி இலக்கியப் பண்பாட்டை அறிய வழி செய்கின்றன. அத்தகைய பண்பாட்டை முன்நிறுத்திய பல்லவர்களின் வரலாற்றைப் பின்வருமாறு காணலாம்.

பல்லவ மன்னர்கள்

சாதகவாகன அரசில் குறுநில மன்னர்களாக இருந்த பல்லவர்கள், சாதகவாகனர்களின் வீழ்ச்சிக்குப்பின் தங்களைத் தனி அரசாக அறிவித்துக் கொண்டனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டனர். வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே தென்பெண்ணை வரையிலும் ஆட்சி செய்தனர். களப்பிரர்களுடன் போர் நடத்தி அவர்களை வென்று தமிழகத்தை ஆண்டனர். இவர்களுடைய பட்டயங்களும் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் பிராகிருத மொழியில் அமைந்துள்ளன. வடமொழி மற்றும் வேதம் கற்பிக்கப்பட்டது. பல குடைவரைக் கோயில்கள், கற்றளிகள் அமைக்கப்பட்டன.

அரசியல் வரலாறு

சிவக்கந்தவர்மன் என்னும் பல்லவன் முதன்முதலில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். அவருக்குப் பின் குமாரவிஷ்ணு, முதலாம் சிம்ம வர்மன், இரண்டாம் சிம்மவர்மன் ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர்.

சிம்மவிஷ்ணு

சிம்மவர்மனின் மகன் சிம்மவிஷ்ணு. கி.பி.6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல்லவ நாட்டை ஆண்டார். களப்பிரர், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது ஆணை செலுத்தினார் என்று காசக்குடிச் செப்பேடு கூறுகின்றது.

முதலாம் மகேந்திரவர்மன்

 சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரன். ஆதியில் சமண மதத்தில் இருந்த மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரிடம் ஈடுபாடு கொண்டு சைவ மதத்திற்குத் திரும்பினார். செந்தக்காரி (கோயில் கட்டுபவன்), மத்தவிலாசம் (இன்பம் விரும்புபவன்), சித்திரகாரப்புலி (ஓவியர்க்குப் புலி), சங்கீர்ணசதி, விசித்திரசித்தன் போன்ற விருதுகளை ஏற்றுக் கொண்டவர்.

முதலாம் நரசிம்மவர்மன்

காஞ்சிப் பல்லவர்களுள் மிகச் சிறந்தவர் முதலாம் நரசிம்மவர்மனே ஆவார். இவர் மகேந்திரவர்மனின் புதல்வன். சாளுக்கியர்களுடன் போராடி மாபெரும் வெற்றி கண்டவர். இலங்கை மீது கண்ட வெற்றியும், சீனப்பயணி யுவான்சுவாங்கின் காஞ்சி வருகையும், மாமல்லபுரத்துத் திறந்த வெளி கலைக்கூடம் உருவாக்கப்பட்டதும் இவர் காலத்துக் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகும். தம் படைத்தலைவர் பரஞ்சோதியைப் கொண்டு புலிகேசி மன்னனை வெற்றி கொண்டு வாதாபி கொண்டான் என்ற பட்டப்பெயர் பெற்றார். இந்த பரஞ்சோதியே சிறுதொண்ட நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

இரண்டாம் மகேந்திரன்

நரசிம்மனின் மகன் இரண்டாம் மகேந்திரன். இரண்டே ஆண்டுகளுள் இவருடைய ஆட்சி முடிவுக்கு வந்தது. நான்மறைகள் பயிலக் கல்வி நிலையங்களை நிறுவினார்.

முதலாம் பரமேஸ்வரன்

இரண்டாம் மகேந்திரனின் மகன் முதலாம் பரமேசுவரன். இவர் சிவ பக்தனாக விளங்கி அறப்பணிகளைச் செய்தார்.

இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் இராசசிம்மன்

பரமேசுவரனுக்குப் பின் பட்டத்துக்கு வந்தவர். இவர் ஆட்சி செய்த நாற்பது ஆண்டுகள் பல்லவர் நாட்டில் அமைதி நிலவியது. கலை உலகம் போற்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பினார். இராசசிம்மன் பனைமலை, மாமல்லபுரக் கற்றளிகள் ஆகியவற்றையும் அமைத்தார். இவர் காலத்தில் தண்டி என்ற வடமொழிப் புலவர் காவ்ய தர்ஸம் என்ற நூலை இயற்றினார். இந்நூலை வழிநூலாகக் கொண்டே தமிழில் தண்டியலங்காரம் என்னும் நூல் இயற்றப்பட்டது.  இவருக்குப்பின் இரண்டாம் பரமேசுவரவர்மன் அரியணை ஏறினார்.

நந்திவர்மன்

இரண்டாம் பரமேசுவரனுக்குப் பின் இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் ஆட்சிக்கு வந்தார்.  இவர் வைணவ சமயத்தின்பால் ஈடுபாடு கொண்டவர். இவர் காலத்தில் கல்வி வளர்ச்சி பெற்றது. காஞ்சி முத்தேசுவரர் கோவில், வைகுண்டப் பெருமாள் கோயில், உதயசந்திர மங்கலம் தானம் ஆகியவற்றை உருவாக்கினார் என உதயேந்திரச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

மூன்றாம் நந்திவர்மன்

இவருக்குப் பின் மூன்றாம் நந்திவர்மன் அரியணை ஏறினார். இவர்மேல் நந்திக்கலம்பகம் என்னும் நூல் பாடப்பட்டது. கொங்கர், சோழர்களை வென்றதால் இவன் கொண்கன் சோணாடன் எனப் புகழப்பட்டார். இவர் சுந்தரர் காலத்தவர்.

மூன்றாம் நந்திவர்மனுக்குப் பிறகு அபராஜிதன் நிருதுபங்கன் அரியணை ஏறினார். இவருக்குப் பின் சோழர்களின் ஆதிக்கம் பெருகியது. ஆதித்த சோழன் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றியதால் பல்லவர்கள் வலிமை குன்றியது.

பல்லவர்களின் சமய நெறி

குடைவரைகளை அமைத்தும் சமணப்படுக்கைகளை அமைத்தும் சமணத்தை ஆதரித்தனர். சைவமும் வைணவமும் தழைத்தோங்கின. முதலாம் மகேந்திரவர்மனும் முதலாம் நரசிம்மவர்மனும் சைவத்தை ஆதரித்தனர். இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வைணவ சமயத்தை ஆதரித்தார். பல்லவர் கலத்தில் சைவ, சமணப் பூசல்கள் அதிக அளவில் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான சமணர்கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். காஞ்சி கையலாயநாதர் கோயில், முத்தேசுவரர் கோவில், வைகுண்டப் பெருமாள் கோயில் ஆகியன பல்லவர்கள் கொடுத்த சமயக்கொடையாகும்.

ஆட்சி அமைப்பு

பல்லவப் பேரரசு மண்டிலம், கோட்டம், நாடு, ஊர் என்ற நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஊராட்சி மன்றங்களும் இருந்துள்ளன. சைவ, வைணவக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலதானங்கள் தேவதானம் என்றும், சமண பௌத்த சமயங்களுக்கு வழங்கப்பட்ட இறையிலி நிலங்கள் பள்ளிச்சந்தம் என்றும் வழங்கப்பட்டன. மங்கலம், குடி, பிரம்மதேயம், பிரம்மபுரி என்ற பெயர் கொண்ட சிற்றூர்கள் பிராமணர்களுக்கென்று உருவாக்கப்பட்டது. வேளாண்மை மற்றும் கைத்தொழில் சார்ந்த தொழில்களுக்குப் பல வரிகள் விதிக்கப்பட்டன.

வரலாற்றுச் சான்றுகள்

பல்வலர் கால வரலாற்றை அறிய கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் உறுதுணையாக அமைகின்றன. அவர்கள் உருவாக்கிய கோயில், குடவரையில் காணப்படும் செய்திகள் பல்லவர்களின் கொடைப்பண்பை உணர்த்துகின்றன. பல்லவர் கால கல்வெட்டுகள் மகேந்திரவாடி, தளவானூர், பல்லாவரம், திருச்சி, திருக்கழுக்குன்றம், மாமண்டூர், மண்டகப்பட்டு, சித்தன்னவாசல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், மெய்க்கீர்த்திகள் அரசப்பாராம்பரியத்தையும், போர், படை, கொடை போன்ற செய்திகளையும் கூறுகின்றன. பல்லவர் கால நாயணங்களும் இடைக்காலத் தமிழ் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன.

இலக்கியங்கள்

பல்லவர் காலத்தில் சில அறநூல்கள் தோன்றின. பெருங்கதை, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, பாரதவெண்பா, திருமந்திரம், திருமுறைகள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரியபுராணம், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், தண்டியலங்காரம் முதலான பல இலக்கியங்கள் தோன்றின.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக