திருக்குறள்
பொருள் செயல் வகை
குறள் 1
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
விளக்கம்
தகுதி இல்லாதவர்களையும் தகுதி உடையவராக மாற்றிவிடும்
தகுதி படைத்தது பணம்.
குறள் 2
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
விளக்கம்
நல்ல குணம் இருந்தும் அவரிடம் பொருள் இல்லை என்றால்
யாரும் அவரை மதிப்பதில்லை. நல்ல குணம் இல்லை என்றாலும் அவரிடம் பொருள் இருந்தால் எல்லோரும்
அவரை மதிப்பர்.
குறள் 3
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
விளக்கம்
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில்
இருந்துவிட்டால் நினைத்த இடத்திற்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட
முடிகின்றது.
குறள் 4
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
விளக்கம்
தீய வழியில் திரட்டப்படாத செல்வம் ஒருவனுக்கு அறத்தையும், இன்பத்தையும் தரும்.
குறள் 5
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
விளக்கம்
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனை விட்டு விலகி விடுதலே நன்று.
குறள் 6
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
விளக்கம்
உரியவர் இல்லாத்தால் வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப்பொருளும் அரசிற்கு உரிய பொருளாகும்.
குறள் 7
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
விளக்கம்
அன்பு என்கிற அன்னை பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை பொருள் என்றும் வளர்ப்புத் தாயால் வளர்வதாகும்.
குறள் 8
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
விளக்கம்
தன் கையில் பணம் வைத்துக் கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது மலையின் மேல் ஏறி நின்று யானைப் போரைக் காண்பது போன்றதாகும்.
குறள் 9
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
விளக்கம்
பகைவரின் ஆணவத்தை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
குறள்
10
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
விளக்கம்
நல்ல வழியில் மிகுதியாகப் பொருள் சேர்ப்பவர்களுக்கு
அறமும் இன்பமும் தானே வந்து சேரும்.