கிறித்துவர் தமிழுக்குச் செய்த தொண்டு
வணிகம் செய்வதற்காகத் தமிழகம் வந்த ஆங்கிலேயர்கள், மத மாற்றம் செய்வதற்காகத்
தமிழகத்தில் காலூன்றிய கிறித்துவர்கள் தங்கள் நோக்கம் நிறைவேற தமிழ் மொழியைக் கற்றனர்.
தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால், தமிழின் மொழிச் சிறப்பால் ஈர்க்கப்பட்டு நாளடைவில் தமிழை
வளர்க்கத் தொடங்கினர். அவர்களின் வருகையால் அச்சு இயந்திரம் தமிழகத்தில் அறிமுகமாகியது.
முதலில் கிறித்துவ சமயக் கருத்துககள் அச்சேறத் தொடங்கின. காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களும்
அச்சேறின. உரைநடை இலக்கியம் வலுப்பெற்றது. சென்னையில் சென்னைக் கல்விச் சங்கம் என்ற
அமைப்பு எல்லீஸ், மக்கன்ஸி ஆகிய ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அச்சங்கம் பல தமிழ்
நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. இச்சங்கத்தில் தமிழ் ஆசிரியர்களாக இருந்தவர்களுள் முத்துச்சாமிப் பிள்ளை, தாண்டவராய முதலியார், கொட்டையூர் சிவக்கொழுந்து
தேசிகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
தமிழ்ப்புலவர்கள் பலர் ஐரோப்பியர்களுடன் பழகிய காரணத்தால் புதிய இலக்கிய வகைகளை அறிந்தனர்.
ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டு தங்கள் புலமையை வளர்த்தனர். அவர்களோடு தமிழுக்குத்
தொண்டாற்றிய மேலைநாட்டுக் கிறித்துவர்கள் சிலரைப் பின்வருமாறு காணலாம்.
1.தத்துவப் போதகர் இராபர்ட் டி நோபிலி
மதுரையில் தங்கித் தமிழ்ப் பிராமணர்களின் கோலம் பூண்டு தமிழராகவே வாழ்ந்த
ஐரோப்பியப் பாதிரியார் இராபர்ட் டி நோபிலி
ஆவார். வடமொழி கற்று மந்திரங்களை ஓதியவர். தமிழ்மொழி கற்று, ஆத்ம நிர்ணயம், ஞானோபதேச காண்டம், மந்திரமாலை, தத்துவக்கண்ணாடி, ஏசுநாதர்
சரித்திரம் முதலிய பல உரைநடை நூல்களை இயற்றியவர்.
இன்றைய உரைநடை வளர்ச்சிக்கு இவரே முன்னோடி எனலாம். தமிழ் மீது கொண்ட பற்றால் தம் பெயரைத்
தத்துவப்போதகர் என்று மாற்றிக் கொண்டார்.
2.சீகன்பால்கு
இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். தமிழகத்திற்கு வந்து தரங்கம்பாடியில்
தங்கி அங்கு அச்சுக் கூடத்தை நிறுவி தமிழ்த்தொண்டு புரிந்தவர். பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பை
வெளியிட்டவர். இவர் வெளியிட்ட தமிழ் நூல் விவரப் பட்டியல் தமிழ்
ஆராய்ச்சி செய்பவர்களுக்கு அடிப்படை நூலாக அமைந்தது. தமிழ் இலத்தீன் அகராதி, தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கணம் ஆகியவற்றையும் படைத்தளித்தவர். நீதிவெண்பா, கொன்றை வேந்தன் ஆகிய நூல்களை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவரைத் தமிழ்நூல் பதிப்புத் துறையின் முன்னோடி என்பர்.
3.எல்லிஸ் பாதிரியார்
எல்லிஸ் பாதிரியாரின் திருக்குறள்
ஆங்கில மொழிபெயர்ப்பு மிகப் புகழ் பெற்றதாகும்.
திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களை மட்டும் இவர் மொழிபெயர்த்திருந்தாலும் ஐரோப்பிய
நாடுகள் பலவற்றிலும் திருக்குறள் பரவுவதற்குக் காரணமாக இருந்தது அவரது மொழிபெயர்ப்பே
ஆகும். இவர் இராமச்சந்திரக் கவிராயரிடம் தமிழ் கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
4.வீரமாமுனிவர்
இவர் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர். இயற்பெயர் கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி.
மதுரை சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார். சிறுகதைகள் என்ற புதிய இலக்கிய வகையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
இவரே. கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ், வடமொழி, தெலுங்கு
ஆகிய பன்மொழிப் புலமையாளர். இயேசுபிரானின் வரலாற்றைத் தேம்பாவணி என்ற காப்பியமாகப் பாடியுள்ளார்.
இந்து சமயத்திற்குக் கம்பராமாயணம், இசுலாமியருக்கு சீறாப்புராணம் போன்று கிறித்துவ
சமயத்திற்குத் தேம்பாவணி இலட்சியக் காப்பியமாகத் திகழ்கின்றது. இக்காப்பியம் 3 காண்டங்களையும்,
36 படலங்களையும், 3615 பாடல்களையும் கொண்டது.
இவர் எழுதிய எழுதிய பரமார்த்த குருகதை தமிழ்க்கதை இலக்கியத்தின் முன்னோடி
நூல் என்று கூறலாம்.
உரைநடை நூல்கள் - வேதியர்
ஒழுக்கம், வேதவிளக்கம், பேதகம் மறுத்தல், லூத்தர் இயல்பு ஆகிய உரைநடை நூல்களை இயற்றியுள்ளார்.
இலக்கண நூல் - தொன்னூல்
விளக்கம் என்ற இலக்கண நூலை இயற்றியுள்ளார்.
இந்நூல் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படுகின்றது. உலக வழக்கிலும், செய்யுள்
வழக்கிலும் காணப்படும் தமிழ் மொழி இலக்கணத்தை முறையே கொடுந்தமிழ் இலக்கணம் செந்தமிழ் இலக்கணம் என்று எழுதி அதனை இலத்தீன் மொழியிலும், ஆங்கில மொழியிலும் மொழிபெயர்த்துள்ளார்.
மொழிபெயர்ப்பு நூல் - திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்துள்ளார்.
இது உலகப் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாக விளங்குகின்றது.
அகராதி நூல்கள் - சதுகரகராதி
எனும் அகராதி நூலை வெளியிட்டுப் பிற்கால அகராதி நூல்களுக்கெல்லாம் வழிகாட்டினார். போர்த்துக்கீசியம்
– தமிழ் – இலத்தீன் அகராதி ஒன்றும் இயற்றியுள்ளார்.
சிற்றிலக்கியங்கள் - திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானை, அடைக்கலநாயகி வெண்பா
முதலிய சிற்றிலக்கியங்களையும் இயற்றியுள்ளார்.
எழுத்துச் சீர்த்திருத்தம்
அகரத்தையும் ஆகாரத்தையும் வேறுபடுத்தல்
வீரமாமுனிவர் காலத்தில் ஆகாரத்தை எழுதும் பொழுது அகரத்தின் மேல் புள்ளியிட்டு
எழுதியதை விடுத்து அகரத்திற்கு சுழியிட்டு ஆகாரத்தை எழுதினார். சான்று - அ் => ஆ
எகரத்தையும் ஏகாரத்தையும் வேறுபடுத்தல்
வீரமாமுனிவர் காலத்திற்கு முன்னால் "எ" என்னும் எழுத்து குறிலாகவும்
நெடிலாகவும் ஒலிப்புப் பெற்றது. அவர் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு காண்பிக்க
எகரத்தில் வருகின்ற மேல் கோடு நீட்டிச் சுழித்தால் அதை நெடிலாக ஒலிக்கலாம் என்று சீர்திருத்தம்
கொணர்ந்தார். சான்று - எ் => ஏ
ஒகரத்தையும் ஓகாராத்தையும் வேறுபடுத்தல்
குறிலையும் நெடிலையும் வேறுபடுத்த வீரமாமுனிவர் ஒகரத்தின் கீழே சுழி சேர்த்து
அதை நெடிலாக்கினார். சான்று - ஒ் => ஓ
உயிர்மெய்யெழுத்துச் சீர்திருத்தம்
தேன் என்பதைத் தென் என்பதிலிருந்து வேறுபடுத்த எகர ஒலி ஏகார ஒலியாக வேண்டும்.
இவ்வேறுபாட்டைக் காட்ட வீரமாமுனிவர் எகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி
அமைத்து, ஏகார ஒலி பெறச் செய்தார். சான்று - தெ்ன் => தேன்.
கோல் என்னும் சொல்லைக் கொல் என்னும் சொல்லிலிருந்து வேறுபடுத்த ஒகர ஒலி
ஓகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட முனிவர் ஒகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு
மேலே சுழி அமைத்து, ஓகார ஒலி பெறச் செய்தார். சான்று - தெ்ால் => தோல்
இம்முறையே இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றமை இவரின் தமிழ்த் தொண்டிற்குச்
சிறந்த சான்றாகும்.
ஜி.யு.போப்
ஆங்கில நாட்டைச் சேர்ந்த இவர் திருநெல்வேலி, தஞ்சாவூர், உதகமண்டலம் முதலிய
இடங்களில் தங்கித் தமிழ்த்தொண்டு புரிந்தார். தமிழ்நாட்டின் பல்வுறு பகுதிகளிலும்,
பள்ளிக்கூடங்களையும், சமயப்பள்ளிகளையும் நிறுவினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்
தமிழாசிரியராகப் பணி புரிந்து மேலை நாட்டவர்க்கும் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தினார்.
திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை முழுவதுமாக ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை ஆகிய நூல்களில் சில பாடல்களையும்
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ்ச்
செய்யுள்கள் பலவற்றைத் திரட்டி தமிழ்ச்செய்யுள் கலம்பகம் என்னும் நூலாக வெளியிட்டார்.
ஆங்கில இலக்கிய இதழ்களில் தமிழின் பெருமையை விளக்கும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்
எழுதியுள்ளார். தமிழ் மொழிபெயர்ப்புத் துளைக்கு அடிக்கல் நாட்டியவர் இவரே. ஆங்கில நாட்டில்
பிறந்தவராயினும் தமிழ் மாணவனாகளே இறுதிவரை வாழ்ந்து மறைந்த இவர், தனது கல்லறையிலும்
நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதக் கூறினார்.
கால்டுவெல்
இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். திருநெல்வேலி சரித்திரம் ன்னும் ஆங்கில
நூலையும், நற்கருணைத் தியானமாலை, தாமரைத்தடாகம் முதலிய தமிழ் நூ்களையம் இயற்றியுள்ளார்.
இலத்தீன், கிரேக்கம், ஜெர்மானியம், துளு போன்ற பல மொழிகளைக் கற்றறிந்த மொழியறிஞர்.
இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் இவரது புகழை உலகிற்குப் பறை சாற்றி வருகின்றது.
இரேனியஸ்
இவர் ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர். தமிழ் புசவும் எழுதவும் நன்கு அறிந்தவர்.
புதிய ஏற்பாடு முழுமையையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். வேத உதாரணத் திரட்டு, தமிழ்
ஞான நூல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
தமிழ்க்கிறித்துவர்கள்
வேதநாயகம் பிள்ளை
ஐரோப்பியர்
வருகையால் கிறித்துவ மதத்திற்கு மாறிய அறிஞர்களில் இவரும் ஒருவர். இவரது சொந்த ஊர்
குளத்தூர் ஆகும். இவர் மாயூரம் நீதிமன்றத்தில் முன்சீப்பாக இருந்தவர். அதனால் இவரை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைப்பர். தமிழ் இலக்கியத்தின் முதல் புதினமாகக் கருதப்படும்
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற புதினத்தை இயற்றியவர். இவரைத் தமிழ் நாவலின்
தந்தை என்றும் அழைப்பர். மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் தமிழ் கற்றவர். நீதிமன்ற சங்டங்களை
முதன்முதலில் தமிழ் எழுதினார். பெண்மதிமாலை,
சர்வசமய சமரசக்கீர்த்தனை, சத்திய வேதக் கீர்த்தனை, திருவருள்மாலை, தோத்திரமாலை என்பவை இவருடைய படைப்புகளாகும்.
ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
இவருடைய ஆசிரியர் திருப்பாற்கடல் நாதகவிராயர். இரட்சண்ய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக் குறள் என்ற நூல்களை இயற்றியுள்ளார். இவரைக் கிறித்துவக் கம்பர் என்று புகழ்வர்.
வேதநாயக சாஸ்திரியார்
பெத்லேகம் குறவஞ்சி, ஞானக்கும்மி, ஞானஏற்றப்பாட்டு, சென்னைப் பட்டினப்
பிரவேசம், ஞான தச்சன் நாடகம் என்ற பல நூற்களை
இயற்றியுள்ளார். தஞ்சை சரபோஜி மன்னனின் அவைப் புலவராகத் திகழ்ந்தார். இவருடைய கீர்த்தனைகள்
இன்றும் கிறித்துவ ஆலயங்களில் இசையுடன் பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆபிரகாம் பண்டிதர்
தமிழ் இலக்கியங்களை முறையாகப் பயின்றவர். தமிழ் இசைக்கும், மேலைநாட்டு இசைக்கும்
உள்ள வேற்றுமை, ஒற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு கருணாமிர்த சாகரம் என்னும் இசைப்
பேரிலக்கண நூலை உருவாக்கினார். இவரது நூலின் மூலம் மறைந்து போகும் நிலையில் இருந்து
வந்த தமிழ் இசைக்கு எழுச்சி ஏற்பட்டது எனலாம்.
சாமுவேல் பிள்ளை
தொல்காப்பிய நன்னூல் என்னும் நூலை
இயற்றியுள்ளார். இதில் தொல்காப்பியத்திற்கும், நன்னூலுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள்
விளக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மேலை நாட்டுக் கிறித்துவர்களும், தமிழ்க்கிறித்துவர்களும் தமிழுக்கு
ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கரியன. அவர்களால் தமிழ்ப் புத்துயிர் பெற்றது. பல புதிய இலக்கிய
வகைகள் தோன்ற வழி வகுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக