சித்தர் இலக்கியம்
மனிதர்களிடம்
காணப்படாத வியக்கத்தக்க ஆற்றல் கொண்டவர்களைச் சித்தர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள்
மெய்ஞ்ஞானம் நிரம்பியவர்கள். மருத்துவம், மந்திரம், இரசவாதம் தெரிந்தவர்கள். இறப்பை
வென்றவர்கள். கூடுவிட்டுக் கூடு பாயும் வல்லமை மிக்கவர்கள். யோகமும், ஞானமும் பற்றிப்
பல பாடல்களைப் பாடியவர்கள். இவர்களின் பாடல்கள் ஆழமான பொருள் கொண்டவை.
சித்தர்கள்
பலர் இருப்பினும் வழக்கில் பதினெண்சித்தர்கள் என்று கூறப்படும் மரபு காணப்படுகின்றது.
1.அகத்தியர் 2.இடைக்காடர்
3.உரோமமுனி 4.கருவூரார் 5.காகபுண்டர் 6.கொங்கணர் 7.கோரக்கர் 8.சட்டைமுனி 9.மச்சமுனி 10.போகர் 11.திருமூலர் 12.நந்தி 13. புண்ணாக்கீசர்
14. தேரையர் 15. யூகிமுனி 16. காலாங்கி நாதர் 17.புலத்தியர் 18. தன்வந்திரி
ஆகியோர் பதினெண்
சித்தர்கள் ஆவர். இவர்களை வகைப்படுத்துவதில் அறிஞர்களுக்கிடையே பல வேறுபாடுகள் உண்டு.
அறிஞர் இரா.மாணிக்காவசகம் அவர்கள்,
1.நந்தி 2.அகத்தியர்
3.திருமூலர் 4.புண்ணாக்கீசர் 5.புலத்தியர்
6. பூனைக்கண்ணர் 7.இடைக்காடர் 8.போகர் 9.புலிப்பாணி 10.கருவூரார் 11.கொங்கணர் 12.காலங்கி
13.அழுகண்ணர் 1 4.அகப்பேயர் 15.பாம்பாட்டி
16.தேரையர் 17.குதம்பை 18.சட்டைச்சித்தர்
என பதினெண்சித்தர்களை
வகைப்படுத்தியுள்ளார். சித்தர்களின் பட்டியலில், கடுவெளிச் சித்தர், அகப்பேய்ச்சித்தர்,
சிவவாக்கியர், பட்டினத்தடிகள், திருவள்ளுவர், சண்டேசர் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
இவர்களுள் சில சித்தர்களைக் குறித்துப் பின்வருமாறு காணலாம்.
திருமூலர்
இவர்
சித்தர் தத்துவத்தின் மூலமுதல்வர். இவர் பாடிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள்
பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் சித்தர் இலக்கியங்களில் முதன்மையான
நூலாகக் கருதப்படுகின்றது. இவர் 3000 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்றும், அரச மரத்தடியில்
யோகத்தில் இருந்தார் என்றும், ஆண்டுக்கு ஒருமுறை கண்விழித்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு பாடலாக
இயற்றி 3000 பாடல்கள் இயற்றினார் என்றும் கூறப்படுகின்றது. இத்திருமந்திரம் நிலையாமை
உண்மைகளை வலியுறுத்துகின்றது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்”
என்பன
போன்ற புகழ் பெற்ற தொடர்கள் இந்நூலில் இடம்பெற்றவையே.
அன்பும்
சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே
சிவம் என்று ஆரும் அறிகிலார்
அன்பே
சிவம் என்று ஆரும் அறிந்தபின்
அன்பே
சிவமாய் அமர்ந்தி ருந்தாரே
என்பன போன்ற பாடல்கள்
இறைத்தத்துவத்தை உணர்த்துகின்றன.
சிவவாக்கியர்
இவர்
10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராகக் கருதப்படுகின்றார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தின்
தத்துவத்தை மிக எளிமையான பாடல்களில் மக்களுக்கு உணர்த்தியவர் இவரே.
ஆன அஞ்செழுத்துகளே
அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்துகளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துகளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துகளே அடங்கலாவல் உற்றவே
என அஞ்செழுத்துகளின்
பெருமையைப் பாடுகின்றார். உருவ வழிபாட்டைக் கடிந்து பல பாடல்கள் இயற்றியுள்ளார்.
அகப்பேய்ச் சித்தர்
அலைபாயும் மனத்தின் இயல்பை பேய்க்கு உவமை
காட்டிப் பாடியதால் இவர் அகப்பேய்ச்சித்தர் என அழைக்கப்படுகின்றார். தான் என்னும் அகங்கார
உணர்வைக் கண்டு கிள்ளி எறிந்து விட்டால் மனம் அமைதியாகும் என்பதை, “நஞ்சுண்ண வேண்டாவே
அகப்பேய்” என்று பாடியுள்ளார்.
பாம்பாட்டிச் சித்தர்
பாண்டிய நாட்டில் பிறந்தவர். பாம்பாகிய
குண்டலினி சக்தியை இவர் எழுப்பியதால் இப்பெயர் பெற்றார் என்பர். மனிதனின் நிலையாமையை
இடித்துரைத்துப் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.
ஊத்தைக்
குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப்
புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த
குயவனார் அவர் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும்
ஆகாதென்று ஆடுபாம்பே
என்று மனித உடலை
மண்பாண்டத்தின் ஓட்டிற்கு உவமை கூறுகின்றார்.
அழுகுணிச்சித்தர்
இவரது
பாடல்கள் இரக்க உணர்வினைத் தூண்டும் பாங்கில் அமைந்தமையால் அழுகுணிச்சித்தர் என்று
அழைக்கின்றனர். சொல்லியழுதால் குறை தீரும் என்பது இவரது கொள்கை.
பையூரிலே
இருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரிலே
போவதற்கு வேதாந்த வீடறியேன்
என்று பாடுகின்றார்.
இடைக்காட்டுச் சித்தர்
காட்டில்
ஆடு மாடு மேய்க்கும் இடையர்கள் பாடுவது போன்று இவரது பாடல்கள் அமைந்துள்ளமையால் இடைக்காட்டுச்
சித்தர் எனப்படுகின்றார்.
மனமென்னும்
மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி
வாய்த்தது
என்று எண்ணேடா தாண்டவக்கோனே
என்பன போன்று பல
பாடல்களைப் பாடியுள்ளார். நெஞ்சோடு கிளத்தல், அறிவோடு கிளத்தல், குயிலோடு கிளத்தல்
போன்ற பல நிலைகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
குதம்பபைச் சித்தர்
குதம்பை
என்பது காதணி. குதம்பை எனும் காதணி அணிந்த மகளிரை விளித்துக் குதம்பாய் என்று இவர்
தம் பாடல்களைப் பாடியுள்ளதால் குதம்பைச் சித்தர் எனப்படுகின்றார். “மெய்ப்பொருள்
ஒன்றே கைப்பொருள்”, “கற்றவர்க்கு எத்திசைச் சென்றாலும் புகழுண்டு” என்பன போன்ற கருத்துகளைக்
கூறியுள்ளார்.
மாங்காய்ப்
பாலுண்டு மலைமேல் இருப்பவர்க்குத்
தேங்காய்ப்
பால் ஏதுக்கடி – குதம்பாய்
என்றவாறு தத்துவக்
கருத்துகளை உள்ளடக்கியதாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
கடுவெளிச்சித்தர்
கடு
என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி,
அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர்
என்று அழைக்கப்படுகின்றார்.
நல்வழிதனை
நாடு – எந்த
நாளும்
பரமனை நந்தியே தேடு
என்ற பாடலில் ஐம்புலன்களுக்கு
அடிமையாகக் கூடாது என்று அறிவுறுத்துகின்றார்.
போகர்
இவர்
போகர் ஏழாயிரம், நிகண்டு, பதினேழாயிரம், சூத்திரம் எழுநூறு, போகர் திருமந்திரம்
ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவரை அதிசயிக்கத்தக்க ஆற்றல்கள் நிறைந்தவர் என்று கூறுகின்றனர்.
சட்டைமுனி
இவர்
போகரின் மாணவர். சட்டைமுனி ஞானம், சடாட்சரக் கோவை, கலம்பகம் நூறு, ஞானநூறு, வாதநிகண்டு
ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.
கொங்கணச் சித்தர்
இவர்
பெண்களைச் சக்தியின் வடிவமாகக் கண்டவர். தாய்த் தெய்வ வழிபாட்டைப் பெரிதும் போற்றியவர்.
கற்புள்ள
மாதர் குலம் வாழ்க நின்ற
கற்பை
யளித்தவரே வாழ்க
என்ற புகழ்பெற்ற
பாடலைப் பாடியவர்.
பட்டினத்தார்
இவர்
பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை
நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்ககோடு
திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில்
திருவொற்றியூரில் சமாதியானவர்.
பத்திரகிரியார்
இவர்
பட்டினத்தாரின் சீடர். பத்திரிகிரியார் புலம்பல் என்ற பெயரில் இவர் பாடியுள்ள பாடல்கள்
உலக துன்த்தை வெறுத்து வீட்டுலக இன்பத்தை அடைவதற்கான வழிகளைக் காட்டுகின்றன.
சித்தர்களின்
இலக்கியம் பிற்காலத்தில் தாயுமானவர், இராமலிங்க அடிகளார், பாரதியார் போன்றோர் தங்கள்
கருத்துகளை எளிய வடிவில் மக்களுக்கு வழங்குவதற்கு அடிப்படையாக அமைந்தது. தமிழ் இலக்கிய
உலகில் சித்தர் இலக்கியம் ஒரு புதிய நெறியை வகுத்துத் தந்துள்ளது எனலாம்.
நன்றி - தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் சி.சேதுராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக