செவ்வாய், 18 ஜனவரி, 2022

பாத்திர மரபு கூறிய காதை - மணிமேகலை

 

மணிமேகலை

மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதால், இவை இரட்டைக் காப்பியங்கள் எனப்பட்டன.

காப்பிய அமைப்பு

மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்பது போலவே தொடர்ந்து வளர்ந்து முடிகிறது. மணிமேகலையின் பிறப்பையும், கோவலன் இறந்த நிலையில் அவள் இளநங்கையாய் இருத்தலையும் சிலப்பதிகாரம் சுட்டிச் செல்கிறது. அந்த இளநங்கையைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு மணிமேகலைக் காப்பியம் பாடப்படுகிறது.

பெயர்க் காரணம்

இக்காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால், இந்நூலுக்கு மணிமேகலை எனப் பெயர் வந்தது.

காப்பிய நோக்கம்

பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் மணிமேகலையாகும். மக்களிடையே பௌத்த சமய உணர்வு மேலோங்கவும், சமயக் கொள்கைகளைப் பரப்பிடவும், அதனை நடைமுறையில் பின்பற்றவும் எழுந்த சமயப் பிரச்சார விளக்க நூல் மணிமேகலை எனலாம்.

காப்பியம் கூறும் கதை

மாதவியின் மகள் மணிமேகலை. அழகும் இளமையும் உடைய மணிமேகலை இந்திர விழாவில் ஆட வருவாள் என்று பூம்புகார் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால் மாதவியோ தானும் துறவு பூண்டு, தன் மகள் மணிமேகலையையும் துறவு நெறிப்படுத்துகிறாள். மணிமேகலையைக் காணும் உதயகுமரன் என்ற சோழ இளவரசன் அவள் அழகில் மயங்கிப் பின்தொடர்கிறான். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை உதயகுமரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக மணிபல்லவம் என்ற தீவிற்குத் தூக்கிச் சென்று விடுகிறது. அங்கு மணிமேகலை ‘அமுதசுரபி’ என்ற பாத்திரத்தைப் பெறுகிறாள். அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருக்கும் அதிசய பாத்திரம் அது. மணிமேகலை அந்தப் பாத்திரத்துடன் வந்து பூம்புகாரில் அறம் செய்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான். அவனிடமிருந்து தப்ப மணிமேகலை ‘காயசண்டிகை’ என்ற கந்தருவப் பெண் வடிவம் கொள்கிறாள். இந்நிலையில் காய சண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பான் தன் மனைவியைத் தேடி வருகிறான். அவன் உதயகுமரன் மேல் சந்தேகம் கொண்டு அவனை வாளால் வெட்டி விடுகின்றான். உதயகுமரன் இறந்தவுடன் அவன் தாய் மணிமேகலைக்குக் கொடுமை பல செய்கிறாள். மணிமேகலை அவளைத் திருத்தி அறநெறியைப் பின்பற்றச் செய்கிறாள். மணிமேகலை நாடெங்கும் பௌத்த தருமத்தைப் பரப்புகிறாள். இதுவே மணிமேகலை நூல் கூறும் கதை.

மணிமேகலையில் இடம்பெற்றுள்ள பாத்திரமரபு கூறிய காதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

பாத்திர மரபு கூறிய காதை

ஆங்கு -அவற்கு ஒரு நாள், அம்பலப் பீடிகை

…… ……. …….. …..

தன்கைப் பாத்திரம் அவன்கைக் கொடுத்தலும்” (1-16)

விளக்கம்:

பூங்கொடி போன்ற நங்கையே! கலைமகள் கோயிலில் ஆபுத்திரன் தங்கியிருந்த பொழுது ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியைக் கேட்பாயாக! இரவின் நடுச்சாமம்! அறிவை மயக்கும் காரிருள்! மழைச்சாரலாகப் பெய்துகொண்டிருந்தது. அந்நேரத்தில் நீண்ட வழியில் நடந்து வந்தமையால் சோர்வுற்றோர் அங்கே வந்தனர். கண் துயிலும் ஆபுத்திரனைப் புகழ்ந்தனர்;  வணங்கினர்; எழுப்பினர்; ‘வயிற்றை எரிக்கும் பெரும் பசியால் துடிக்கிறோம்’! என்றனர். ஆபுத்திரன் அவ்வழிப்போக்கருடைய பசித்துன்பத்தை நீக்குவதற்கு வழி ஒன்றும் காணாதவனாய் மிக்க துயருற்றான். அப்பொழுது சிந்தா தேவி அவன் முன் தோன்றி, ஆபுத்திரா! கேள்! நீ வருந்தாதே! உன் துன்பம் அழிவதாக! நாடு முழுமையும் வறுமை ஏற்பட்டாலும் இவ்வரிய பாத்திரம் வறுமை அடையாது உணவு அளிக்கும் அழியா தன்மையுடையது! எழுந்து இதனை பெறுவாயாக! என்று கூறித் தன்னுடைய கையிலிருந்த பாத்திரத்தை அவன் கையில் அளித்தது.

சிந்தா தேவி! செழுங்லை நியமித்து

…… ….. …….

இழுமென் சும்மை இடைஇன்று ஒலிப்ப - (17-27)

விளக்கம்:

மனத்தில் உறைகின்ற தெய்வமே ! அழகிய கலை கோட்டத்தில் எழுந்தருளிய திருவிளக்கே! திருமகளே! வானவர்க்குத் தலைவியே! உலகில் வாழ்பவர்க்கு முதல்வியே! பிறர் உற்ற துயர் நீக்கும் அருளே! என்று பலவாறாகப் புகழ்ந்து சிந்தா தேவியை வணங்கினான். வழிப்போக்கருடைய பசியை அமுதசுரபியின் உதவியால் நீக்கினான். அந்த நாளிலிருந்து பசியால் வருந்துபவர்களுக்கு அவர்களுடைய கைகள் வருந்தும் அளவு உணவளித்து உயிர்களைப் பாதுகாக்கும் திருப்பணியைத் தொடங்கி நடத்தி வந்தான். அதனால் எப்பொழுதும் ஆபுத்திரனைச் சுற்றி மக்கள் கூட்டமும், விலங்குகள் கூட்டமும், மரத்தில் வாழும் பறவைகள் கூட்டமும் சேர்ந்து சூழ்ந்திருக்கும். பழுத்த மரத்தில் கனி உண்ணும் பறவைகள் எழுப்பும் ஓசையை போல, இரப்போர் ஆபுத்திரனைச் சுற்றி சூழ்ந்து உணவு பெற்று மகிழ்ச்சி ஆரவார ஒலி ஒலித்தனர்.

ஈண்டுநீர் ஞாலத்து இவன் -செயல் இந்திரன்

….. …. …..

உன்பெரும் தானத்து உறுபயன் கொள்கஎன-(28-35)

விளக்கம்:

கடல் சூழ்ந்த உலகில் ஆபுத்திரன் ஆற்றிய அறப்பணி விண்ணுலகில் இந்திரனின் வெண்ணிற கம்பளத்தை நடுங்கச் செய்தது. நிலவுலகில் பௌத்த சீலத்தைக் கடைப்பிடித்து கொடை, ஈகை, அறம் முதலியவற்றால் மேன்மையானோர் இருந்தாலும் அல்லது அத்தகு உயர்ந்தோருக்கு ஏதாவது துன்பம் நேர்ந்தாலும் இந்திரனுடைய இருக்கையாகிய வெள்ளை கம்பளம் நடுக்கமுறும். அக்குறிப்பறிந்து உலகில் தோன்றி அவர்களுக்கு இந்திரன் வரம் தருவான். அவ்வாறே வரம் அளிப்பதற்காகவே இந்திரன் தளர்ந்த நடையும், ஊன்றுதற்குப் பிடித்த கோலும், கூன் உடலும் உடைய ஒரு மறையோன் வடிவம் கொண்டு, ஆருயிர்க்கெல்லாம் தலைவனான ஆபுத்திரனின் முன்னர் தோன்றினான். ‘நான் இந்திரன்! உன் எண்ணம் என்ன? அறிவதற்கே வந்தேன். உன்னுடைய கொடை அறத்தின் சிறந்த பயனைப் பெற்றுக் கொள்வாயாகஎன்று இந்திரன் உரைத்தான்.

வெள்ளை மகன்போல் விலாஇற நக்குஈங்கு,

……. …… ……

யாவைஈங்கு அளிப்பன, தேவர்கோன்? என்றலும்-(36-48)

விளக்கம்

இந்திரன் கூறியதைக் கேட்ட ஆபுத்திரன் பித்துபிடித்தவன் போல விலா வெடிக்குமாறு சிரித்தான். இந்திரனை எள்ளி நகையாடினான். “உம்முடைய உலகில் வாழும் கடவுளர் காண்பதற்குரிய சிறந்த அழகு உடையவர். ஆனால் அவர்கள் எல்லோரும் இவ்வுலகத்தில் ஆற்றிய நல்லறத்தின் பயனை அங்கே நுகர்பவர்கள். அவர்களைத் தவிர அறம் செய்யும் சான்றோர், உயிர்களைப் பாதுகாப்போர், நல்ல தவமியற்றுவோர், உலகப் பற்றுகளைத்  துறப்பதற்கு முயற்சிப்போர் ஆகிய சிறந்தவர்கள் எவரும் தேவர் உலகத்தில் இல்லை. அந்த உலகத்திற்கு தலைவனானப் பெரும் வலிமையுடைய வேந்தனே! பசியால் வாடி வந்தவர்களுடைய பசி துன்பத்தை நீக்குவதால் இன்புற்ற அவர்களுடைய முக மலர்ச்சியை எனக்கு காட்டும் இந்த அட்சய பாத்திரத்தைக் காட்டிலும் உண்பன, உடுப்பன, மகளிர், நண்பர் ஆகியவற்றில் எதை அளிக்கப் போகிறாய் தேவர்கோனே! ”என்று எடுத்துரைத்தான்.

புரப்போன்போன் பாத்திரம் பொழிந்துஊன் சுரந்து -ஈங்கு

பசிப்புஉயிர் அறியாப் பான்மைத்து ஆதலின், (49-58)

விளக்கம் :

ஆபுத்திரன் தன்னை இகழ்ச்சியாகப் பழித்துரைத்ததை எண்ணி ஆயிரம் கண்களுடைய இந்திரன் வெகுண்டான். உலகில் எல்லா வளங்களும் ஓங்கி உயர்ந்து சிறக்க ஆணையிட்டான். உலகம் முழுமையும் வறுமை ஒழிந்தது. மேகங்கள் பொழியும் மழை நீரால் பல் வளங்களும் பெருகின. ஆபுத்திரனின் அட்சய கலனில் உணவு பொங்கி பொழிந்தது. ஆனால் சுரக்கும் உணவையளித்து இடுவதற்கு இரப்போர் இல்லை. அதனால் அவன் ஏமாற்றம் அடைந்து வருந்தினான். பன்னிரு ஆண்டுகாலம் உயிர்கள் மடியுமாறு பாண்டியநாடு மழைவளம் இழந்திருந்தது. இந்திரனின் ஏவலால் மேகங்கள் இடையறாது மழைபெய்ய நிலம் செழித்தது.  உயிர்களெல்லாம் பசியின் தன்மையை அறியாத சிறப்பு எய்தின.

ஆர்உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை

….. ….. …..

இருந்தாய் நீயோ என்பார் இன்மையின், (59-69)

விளக்கம் :

           ஆருயிர்களைப் பாதுகாத்து வந்த அம்பலப் பீடிகையில் உணவு பெறுவோர், உண்போர் ஆகியோருடைய ஆரவார ஒலி ஒடுங்கியது. அங்கே காமுகரும், பரத்தரும், சுற்றம் விடுத்துத் திரிவோரும், வழிப்போக்கரும், தங்கி நகையாடுவதும், வட்டாடுவதும், சூதாடுவதும், வம்பளப்பதும் ஆகிய இழிதொழில் செய்வதற்குக் கூட்டமாககக் கூடினர். கீழ்மக்கள் தடையின்றி இழி செயல்களை நடத்துவது அம்பலத்தின் வாழ்க்கை முறைமை ஆகியது. எனவே ஆபுத்திரன் அம்பலத்தில் இருந்து நீங்கினான், ஊர் ஊராகச் சென்றான். உணவு உண்போர் யாரேனும் உளரோ? என்று வினவினான். யார் இந்த அறிவிலி? என்று அனைவரும் ஆபுத்திரனை  இகழ்ந்தனர். பிறருக்கு உணவு கொடுத்து ஆதரிக்க விரும்பிய ஆபுத்திரனை நீவீர் இருக்கின்றீரோ?  என்று நலம் விசாரிப்போர் ஒருவருமில்லை.

திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள

……. …… …….

வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி,(70-79)

விளக்கம்

தன்னுடைய பெருஞ்செல்வம் அனைத்தையும் கடல் கொள்ள, யாவற்றையும் இழந்து தனியே வரும் அரசன் போல, ஆபுத்திரன் தன்னந்தனியாக கடற்கரைக்கு வந்தான். கடலில் சென்று மீண்ட மரக்கலத்தில் இருந்து வந்தவர் சிலர், அவன் முன்னர் தோன்றி அவனை வணங்கினர். பெரியோனே! சாவக நாட்டில் மழை வளம் இல்லை, உயிர்கள் பல மடிந்தன என்று உரைத்தனர். இந்திரனின் ஆணையால் உணவு ஏற்பதை பெறாமல் என்னுடைய அமுதசுரபி பயன் இழந்தது. அதனை எடுத்துக்கொண்டு அச்சாவக நாட்டுக்குச் செல்வது என் கடமை என்று எண்ணி, மகிழ்ச்சியுடன் மரக்கலத்தில் செல்வோருடன் ஏறிச் சென்றான்.

கால் விசை கடுக கடல்கலக் குறுதலின்,

சுமந்து என் பாத்திரம்?” என்றனன் தொழுது,(80-90)

விளக்கம் :

நடுக் கடலில் புயல் எழுந்து வேகமாக வீசியது, கடல் பொங்கிக் கலங்கியது. மரக்கலத்தின் மீகாமன் மணிபல்லவத்தீவிடை மரக்கலத்தைச் செலுத்தி, அதனுடைய பெரியபாயை இறக்கினான். மரக்கலம் ஒரு நாள் அங்கே தங்கியது. ஆபுத்திரன் அத்தீவில் இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் மரக்கலத்தில் ஏறி விட்டான் என நினைத்து மீகாமன் பெரியபாயை உயர்த்த, நள்ளிரவில் கடல் மரக்கலம் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் ஆறாத் துயர் அடைந்தான். இத்தீவில் உயிர் வாழ்வோர் எவருமில்லை. மண்ணுயிரைப் பாதுகாக்கும் இம்மாபெரும் பாத்திரத்தை அதன் பெருமைக்கு உரியவாறு பயன்படுத்தாது, வீணே என்னுடைய புல்லுயிரைக் காப்பதற்கு உடன்படேன். முன் செய்த தவத்தால் இப்பாத்திரத்தைப் பெற்றேன். பல்வினை ஓங்கும் நல்வினை என்னை விட்டு நீங்கியது. அதனால்தான் ஈடில்லாத் துன்பத்தில் வருந்துகிறேன். யாருமே இல்லாத இத்தீவில் பாத்திரத்தை வைத்து இருப்பதால் என்ன பயன்? என்று பலவாறாக எண்ணி வருந்தினான்.

கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியின்,

 ஆவயிற்று உதத்தனன், ஆங்கு -அவன்- தான் என்.(91-104).

விளக்கம் :

அப்பாத்திரத்தைத் தொழுது ஒவ்வோர் ஆண்டிலும் வைகாசித் திங்கள் தூய நிறைமதி நாளில் தோன்றுவாயாக! அப்பொழுது அருளும், அறமும் மேற்கொண்டு வாழும் நல்லோர் எவரேனும் இங்கு வருவாரேயானால், அவர் கையில் புகுவாயாக! என்று கூறி, அவன் உடலில் இருந்து உயிர் பிரியும் நாளில் அவனிடம் சென்ற நான் (அறவண அடிகள்) நீ உற்ற துன்பம் என்ன? என்று வினவினேன். தான் உற்ற துன்பங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறினான். கீழ்த்திசையில் தோன்றிய காரிருளை அழித்து மேலை திசையில் மறையும் கதிரவன் போல மண்ணுயிர்களைப் பாதுகாக்கும் எண்ணம் நீங்காதவனாய்  ஆபுத்திரன் மணிபல்லவத் தீவில் தன் உடலை விட்டுப் பிரிந்து சாவக நாட்டை ஆளும் பெருமுயற்சியுடைய அரசனுடைய பசு வயிற்றில் உதித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக