வியாழன், 20 ஜனவரி, 2022

சூளாமணி

 

சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி  சமண சமயம் சார்ந்த நூல். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம்.  ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் எழுதப்பட்டது இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2131 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.

நூல் அமைப்பு

சூளாமணிக் காப்பியம் பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது. நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் எனப் பன்னிரு சருக்கங்களைக் கொண்டது சூளாமணிக் காப்பியம்.

நூல் ஆசிரியர்

சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர். இவர் சமண சமயத்தவர். காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன். இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்துள்ளார். மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

கதை கூறும் செய்தி

இக்கதை சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறுகிறது. இந்தப் பின்னணியில் இதன் ஆசிரியர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்.

சமணத் தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல். இந் நான்கு பிறவிகளுள் மனிதப் பிறவியில் மட்டுமே வீடுபேறு அடைவதற்கான முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டென்றும் அதனால் மனிதப் பிறவி எடுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கருதும் சமணக் கோட்பாடுகளின் வழி நின்று அதற்கான வழிமுறைகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.

காப்பியக் கதை

பரத கண்டத்தில் சுரமை நாட்டின் தலைநகர் போதன மாநகர். அதன் அரசன் பயாபதி. அவனுக்கு மிகாபதி, சசி என இரு மனைவியர். அவர்களுக்கு வெண்ணிறமான விசயன்கருநிறமான திவிட்டன்  ஆகிய இருவரும் பிறந்தனர். இவர்கள் பலராமன், கண்ணன் அவதாரமாகக் கருதப்பட்டனர். திவிட்டன் வித்தியாதர நாட்டு இளவரசியை மணப்பான் என்று நிமித்திகன் (சோதிடன்) கூறுகிறான். அதே நேரத்தில், வித்தியாதரர் (வானவர்) உலகிலுள்ள இரத நூபுரம் என்ற நகரில் ஆட்சி புரியும் சுவலனசடி தன் மகளுக்குச் சுயம்வரம் நடத்த எண்ணுகிறான். சுவலனசடியின் மகள் சுயம்பிரபை. அவளைப் பூலோகத்தில் உள்ள திவிட்டனே மணப்பான் என்று நிமித்திகன் கூறுகிறான். தன் சோதிடக் குறிப்பிற்குச் சான்றாக, திவிட்டன் ஒரு மாதத்திற்குள் ஒரு சிங்கத்தை அடக்குவான் என்கிறான். எனவே சுவலனசடிமருசி என்பவனைப் பயாபதியிடம் மணத் தூதாக அனுப்புகிறான். பயாபதியின் ஒப்புதலை அறிந்த சுவலனசடி, திவிட்டன் சிங்கத்தை அடக்குகிறானா என்பதை அறிய விரும்புகிறான். சுவலனசடி திவிட்டனுக்குப் பெண் கொடுக்க இருப்பதை அறிந்த மற்றொரு வித்தியாதர அரசன் அச்சுவ கண்டன் பயாபதியைத் தனக்குத் திறை செலுத்த ஆணையிட்டுத் தூதனுப்புகிறான். அத்தூதுவனைத் திவிட்டன் விரட்டியடித்து விடுகிறான். விரட்டியடிக்கப்பட்ட தூதுவன், அச்சுவ கண்டனிடத்தே செல்வதற்கு அஞ்சி, அவனுடைய அமைச்சனாகிய அரிமஞ்சு என்பவனிடம் சென்று திவிட்டன் செயலைக் கூறினான். அதுகேட்ட அவ்வமைச்சன் மாயவித்தையில் வல்ல அரிகேது என்பவனை மாயச் சிங்க உருவில் பயாபதி நாட்டுக்கு அனுப்பி அச்சுறுத்துகிறான். வீரன் திவிட்டன் விட்டுவிடுவானா? அம்மாயச் சிங்கத்தைக் கொல்லும் பொருட்டுத் துரத்திச் செல்கிறான். மாயச்சிங்கமாகிய அரிகேதுவோ உயிருக்குப் பயந்து, உண்மைச் சிங்கம் உறங்கும் ஒரு குகைக்குள் புகுந்து மறைந்து விடுகிறான். உண்மையான சிங்கம் குகையை விட்டு வெளிவர, திவிட்டன் அதனோடு எதிர்த்துப் போரிட்டு, அதன் வாயைப் பிளந்து கொன்று விடுகிறான்.

நிமித்திகன் கூற்று மெய்யாகி விட்டதல்லவா? சுவலனசடிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மகளைத் திவிட்டனுக்கு மணம் செய்து மகிழ்கிறான். பழியுணர்ச்சியால் குமுறுகிறான் அச்சுவ கண்டன். தன் பெரும்படையுடன் தாக்குகிறான். ஆனால் திவிட்டன் கண்ணனுடைய அவதாரமல்லவா? எனவே அவனிடம் திருமாலின் ஆயுதங்களான பாஞ்ச சன்னியமும் சக்கரமும் வந்து தாமே பொருந்தின. கருடன் வந்து அவன் தோளிலே தங்கினான். பின் கேட்கவா வேண்டும்! போரில் திவிட்டனுக்கே வெற்றி கிடைக்கிறது. வெற்றி வாகை சூடிய திவிட்டனை வாசுதேவன் என்றும், விசயனைப் பலராமன் என்றும் வாழ்த்தி முடி சூட்டினர். கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கியது போலத் திவிட்டனும் கோடிமாசிலை என்ற மலையைத் தூக்கித் தன் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தினான். உரிய காலத்தில் திவிட்டன் - சுயம்பிரபை தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர்; சுயம்பிரபை தமையன் அருக்க கீர்த்திக்கும் ஒருமகனும் மகளும் பிறக்கின்றனர் இவர்கள் வளர்ந்து திருமண வயதுக்கு வர, முறைப்படி அவர்களுக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் நடத்தப்படுகிறது. பயாபதி தன் தேவியருடன் துறவு பூண்டு தவம் மேற்கொண்டு முக்தி அடைய முயற்சி மேற்கொள்கிறான். திவிட்டன், விசயன் நாட்டை நன்முறையில் ஆளுகின்றனர். இத்துடன் இக்காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

இக்காப்பியத்தில்  இடம்பெற்றுள்ள நாட்டுச் சருக்கம், நகரச்சருக்கம், தூதுச் சருக்கம், கல்யாணச் சருக்கம், சுயம்வரச் சருக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சில பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

நாட்டுச் சருக்கம்

சுரமை நாட்டின் சிறப்பு

மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்

இஞ்சிசூழ் அணி நகர் இருக்கை நாடது

விஞ்சைநீள் உலகுடன் விழாக் கொண்டன்னது

துஞ்சுநீள் நிதியது சுரைமை என்பவே.

விளக்கம்

முகில்களால் சூழப் பெற்ற, அரிய மணிகளை உடைய கோடிக்குன்றம் என்னும் மலையை, கைகளால் தூக்கிய திருமாலின் அவதாரமெனக் கருதப்படுகின்றான் திவிட்டன். அவன் அரசு வீற்றிருக்கின்ற, மதில்கள் சூழ்ந்த அழகிய போதனம் என்னும் நகரம் தேவர் உலகத்தைக் காட்டிலும் செல்வவளத்தால் சிறப்புடைய நாடாகக் காட்சியளிக்கின்றது.

நகரச் சருக்கம்

சுரமை நாட்டுப் போதனமா நகரம்

சொன்னநீர் வளமைத் தாய சுரமை நாட்டகணி சார்ந்து

மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட

பொன்னவிர் புரிசை வேலிப்போதன மென்ப துண்டோர்

நன்னகர் நாகலோக நகுவதொத் தினிய தொன்றே.

விளக்கம்

நீர்மையும் வளப்பமும் உடைய சுரமை நாட்டின் நடுவில் அமைந்துள்ள, அந்நாட்டு அரசன் வீற்றிருந்து வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைந்து, சிற்ப நூல் வல்லவர்களால் அமைக்கப்பட்ட, அழகு விளங்குகின்ற மதிலினால் சூழப்பட்ட, போதனம் என்னும் ஊர் தேவருலகத்தை இகழ்ந்து நகைப்பதைப் போன்று பலவகைச் சிறப்புகளை உடையது. தேவருலகத்தைக் காட்டிலும் ஒரு நல்ல நகரம் நிலவுலகத்தில் உள்ளதெனில் அது போதனம் என்னும் நகரே ஆகும்.

தூது விடு சருக்கம்

பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன

மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்

திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா

வரிமருவிய மதுகரம்முண மணம் விரிவனநாகம்

பொரிவிரிவன புதுமலரென புன் குதிர்வன புறனே

விளக்கம்

நுறுமணத்தால் இனிமையுடைய மகிழ மரங்களில் தேன் பெருகியுள்ளன. அழகான மலர்கள் பொருந்தப் பெற்றுள்ளன. தேமா மரங்கள் அழகு பொருந்திய நல்ல நிழலையுடையனவாக, செந்நிறமான தளிர்களை உடையனவாகக் காணப்படுகின்றன. சுரபுன்னை மரங்கள் கோடுகள் பொருந்தியதாய் வண்டுகள் உண்ணுமாறு மணம் பொருந்திய தேன் பெருக அமைந்துள்ளன. புன்னை மரங்கள் நெற்பொரியை போன்றஅன்றலர்ந்த மலர்களைக் கொண்டு விளங்குகின்றன. வெளியெங்கும் அம்மலர்கள் உதிரப் பெற்றுள்ளன. இப்படிப்பட்ட அழகுடையதாக அச்சோலை காணப்பட்டது.

கல்யாணச் சருக்கம்

செங்கண் மால் சிங்கம்வென்று செழுமலர்த் திலகக் கண்ணி

திங்கண்வாள் வண்ணனோடுந் திருநகர்  பெயர்ந்த பின்னை

அங்கண் மாற்குரிய நங்கையரும் பெறல் அவட்குத்  தாதை

வெங்கண் மால்களிறன் னான்தன்திறம் இனிவிளம்பலுற்றேன்

விளக்கம்

    சிவந்த கண்களையுடைய திருமாலாகிய திவிட்டன், அரிமாவைக் கொன்று செழித்த மலரால் இயன்ற தலை மாலையையுடைய, திங்கள் போன்ற சிறந்த வெண்மையான நிறம் உடைய விசயனுடனே அழகிய போதன நகரத்தை அடைந்தான்.  அத்திவிட்டனுக்கு மண உரிமை உடையவளான சுயம்பிரபை என்னும் அந்நங்கைக்குத் தந்தையாகிய பெரிய யானையின் வீரத்தை ஒத்த சுவலனசடி என்னும் அரசனுடைய திறத்தை இனி கூறுகின்றேன்.

சுயம்வரச் சருக்கம்

தேவருமனிதர் தாமும் செறிகழல் விஞ்சையாரும்

மேவருந் தகைய செல்வம் விருந்து பட்டனகடோற்ற

மாவரசழித்த செங்கண் மணிவண்ணன் மகிழ்ந்த காலைத்

தாவிருஞ் செல்வமொன்று தலைவந்தது ரைக்கலுற்றேன்.

விளக்கம்

    தேவர்களும், மனிதர்களும் வீரக்கழல் கட்டிய விச்சாதாரர்களும் பெறற்கரிய பெருமையுடைய செல்வங்கள், புதுமை மிக்க இன்பங்களை தந்து நிற்க, விலங்கின் வேந்தனாகிய அரிமாவை பிளந்து கொன்ற சிவந்த கண்ணையுடைய திவிட்டன், அவ் இன்பங்களை நுகர்ந்து மகிழ்ந்திருக்கும்போது, குற்றமற்ற பெரும் செல்வம் ஒன்று திவிட்டனுக்கு இனிது வந்து எய்தியதை உரைக்கத் தொடங்குகின்றேன்.

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக