பிளாஸ்டிக் டப்பாவில்
பராசக்தி முதலியோர்
அறிமுகம்
தனக்கென்று ஒரு தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக
மாற்றிக் கொள்கின்ற ஒரு பெண்ணின் மனநிலையை இச்சிறுகதை சித்தரிக்கின்றது.
கதைக்கரு
கணவனை இழந்த ஒரு பெண் தான் தனி மரமான பின்பு வெளிநாட்டில் வசிக்கும்
தன் பிள்ளைகளிடம் வாழ்ந்திடச் செல்கின்றாள். தன் உடமையென அவள் கொண்டு போவது பராசக்தி
முதலிய சில கடவுள்களின் உருவச்சிலைகளை உள்ளடக்கிய ஒரு பிளாஸ்டிக் டப்பா. வெளிநாட்டுச்
சூழ்நிலை, வெவ்வேறான மனிதர்கள், விலங்குகள் எவையும் அவளைப் பாதிக்கவில்லை. எங்கு சென்றாலும்
எப்போதும் ஒரே மனநிலையில் இருந்து தன் இயல்பான ஆளுமைப் பண்பை, இரக்கக் குணத்தை வெளிக்காட்டுகின்றாள். எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்புக்குட்படாத அவளின் இந்நிலையைக் கண்டு வியந்து போன மகள்கள்
தன் தாயின் சுதந்திரத்தைத் தடை செய்ய விரும்பாமல் சொந்த ஊரிலேயே ஒரு வீடு கட்டித் தர
முடிவு செயகின்றனர். இதுவே இக்கதையின் கரு.
கதைச் சுருக்கம்
தனம், பாரதி, தினகரன் ஆகியோரின் தாய் குமுதா. தன் கணவனின் வேலை மாற்றங்களால்
அசாம், அகமதாபாத், ஒரிசா எனப் பல மாநிலங்களில் வாழ்ந்தவர். ஆனால் எங்கு சென்றாலும்,
உணவை ஆதாரமாக வைத்து, தான் இருக்குமிடத்தில் அன்பால் தனக்குப் பிடித்த சூழலைக் கட்டியெழுப்பிக்
கொள்கிறவர். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தனக்கான தெய்வங்களை உடன் வைத்துக் கொண்டு, திருமணமாகி
விவாகரத்தான தன் மகள் பாரதிக்கு ஆதரவாக இருக்க, தன் கணவனின் வேண்டுகோளுக்கு இணங்கி
அமெரிக்கா செல்கின்றார்.
பாரதியின் கடிதம்
அமெரிக்க வீட்டிற்கு வந்துள்ள தங்கள் தாயைப் பற்றி, தன் சகோதரி தனத்திற்குக்
கடிதம் எழுதுகின்றாள் பாரதி. அதில், விமானப் பரிசோதனையின் போது அவள் கொண்டு சென்ற நாரத்தங்காய்
ஊறுகாயைச் சுவைத்துப் பார்த்த விமானக் கம்பெனிக்காரர்கள் ஊறுகாய் செய்ய காண்ட்ராக்ட்
தருவதாக சொல்லி பாரதியை நச்சரித்த நிகழ்வு, பக்கத்து வீடுகளில் தாய்மையடைந்திருக்கும்
பெண்களுக்குப் பால்கோவா செய்து தருவது, குங்குமப்பூவின் மருத்துவக் குணங்களை எடுத்துரைப்பது
எனத் தன் தாய் செய்கின்ற செயல்களை விவரிக்கின்றாள். சில நேரங்களில் அவை தொல்லையாகத்
தெரிந்தாலும் அவளுடைய வரவு தனக்கு இன்பம் அளிப்பதாகக் கூறுகின்றாள். அவள் பாடுகின்ற
பாரதியார் பாடல், அவள் அழைத்ததும் வருகின்ற அணில் கூட்டங்கள், அவள் செய்து தரும் சுவையான
உணவுகள், விவாகரத்து பெற்ற தன் கணவனைச் சந்தித்துத் தனக்குத் திருமணமான பொழுது கொடுக்கப்பட்ட
சீர் வரிசைகளைத் திரும்ப வரைவழைத்தல் எனத் தன் சோர்வான நம்பிக்கையிழந்த வாழ்வை மீண்டும்
சுவையாக்கிவிட்டாள் என்று மகிழ்ந்து கடிதத்தை நிறைவு செய்கின்றாள்.
தனத்தின் கடிதம்
தன் கணவன் இறந்த பிறகு தன் மற்றொரு மகள் தனத்தின் வீட்டில் தங்க வேண்டிய
சூழல் குமுதாவிற்கு ஏற்படுகின்றது. வீட்டைக் காலி செய்துவிட்டு, அவளை அழைத்துப் போக
வந்த தனம், இதுவரை அவள் வாழ்ந்திருந்த வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்திலும் தன் தாயின்
சுவடுகள் இருப்பதை அறிந்து அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல், இரண்டு வீடு தள்ளி உபயோகத்தில்
இல்லாமல் இருக்கும் ஒரு கார்ஷெட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன் தாயின் அனைத்து உடமைகளையும்
பாதுகாப்பாக வைத்துவிட்டு, அவளின் வீணையை மட்டும் எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு
அழைத்துச் செல்கின்றாள் தனம். அப்போதும் தன் கையில் பிளாஸ்டிக் டப்பாவில் சில தெய்வங்களை
எடுத்து வைத்துக் கொண்டு செல்கின்றாள் அவளுடைய தாய். கடவுள் நம்பிக்கை இல்லாத அவர்களின்
வீட்டில், புத்தகத்திற்காக அடித்த பலகையில் தன் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள தெய்வங்களை
வைத்து வழிபடுகின்றார். இச்சூழலில் தனம் பாரதிக்குக் கடிதம் எழுதுகின்றாள். அக்கடித்ததில்,
மழைக்காலத்திற்கு ரசப்பொடி, சாம்பார் பொடி அரைப்பது, ஊறுகாய் போடுவது, செம்பருத்திப்
பூ போட்டு எண்ணெய் காய்ச்சுவது, பக்கத்து வீட்டின் உறவினர்களுக்குச் சித்த மருத்துவம்
தயாரிப்பது எனத் தன் தாய் செய்த செயல்களை விவரிக்கின்றாள். இறுதியாக, தன் சகோதரியிடம்,
நம் தாய் எங்கிருந்தாலும் தன் இயல்பை விட்டுவிடுவதில்லை. நம் வீட்டில் தங்கியிருந்தாலும்
அவள் மனதில் தனக்கென்று ஓர் இடம் இல்லை என்று அவள் மனம் துன்பமடைகின்றது. எனவே நீயும்
நானும் நம்முடைய நகைகளை விற்று இதுவரை அவள் வாழ்ந்திருந்த வீட்டை விலைக்கு வாங்கி அவளுக்குக்
கொடுத்துவிடுவோம். விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் தன் பேரப்பிள்ளைகளுடன் அவள் பொழுது
மிக இனிமையாகக் கழியட்டும் என்று கடிதத்தை முடிக்கின்றாள்.
முடிவுரை
இக்கதையில் குமுதாவிற்குத்
தேவை தன் மன விருப்பம் போல் செயல்பட தனக்கென்று ஒரு வீடு. தனக்கான ஒன்றைக் கண்டடைந்து
அதன்வழி மகிழ்கின்ற உள்ளம் தான் நிறைவான வாழ்க்கை என்ற
கருத்தை உள்ளடக்கியதாக இச்சிறுகதை காணப்படுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் எந்தவிதச்
சூழலும் தன்னைப் பாதிப்பதில்லை என்ற மனப்போக்கில், தன்இயல்பிலேயே நிறைவுகாணும்
ஆளுமையாகக் குமுதா என்ற கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார் எழுத்தாளர் அம்பை அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக