புறநானூறு
1
கெடுக சிந்தை கடிதுஇவள்
துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு
இவள்தன்னை
யானை எறிந்து களத்துஒழிந்
தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு
இவள்கொழுநன் 5
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட்
டனனே
இன்றும் செருப்பறை கேட்டு
விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து
உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய்
நீவி
ஒருமகன் அல்லது இல்லோள் 10
செருமுக நோக்கிச் செல்க
என விடுமே!
பாடியவர் - ஒக்கூர் மாசாத்தியார்.
ஒக்கூர் என்பது ஊரின் பெயர். இவர் பெண் புலவர்களுள் ஒருவர்.
திணை - வாகை. பகைவர்களைக்
கொன்று வெற்றி பெற்ற வீரர்கள் வாகைப் பூவினை அணிந்து வெற்றியைக் கொண்டாடுவர்.
துறை - மூதின் முல்லை. மறக்குடியில் பிறந்த பெண்களுக்கும் வீரம் உண்டு என்பதை இத்துறை விளக்குகிறது.
பாடல் விளக்கம்:
நாட்டில்
போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வீரம் பொருந்திய ஆண்கள் போரில் பற்கேற்கச் சென்றனர்.
பாதி பேர் இறந்தனர். வீரம் பொருந்திய மறக்குடியில் பிறந்த மகள் ஒருத்தி, தன் தந்தை
நேற்று பகைவர்களின் யானையைக் கொன்று தானும் இறந்தது கண்டு மனம் வருந்தினாள். இன்று
பசுக்கூட்டங்களைப் பகைவர் கவர்ந்து செல்லாத வண்ணம் தடுத்துப் போரிட்டதால் தன் கணவனும்
இறந்து விட்டான் என்பதை அறிந்து மனம் பதைத்தாள். ஆனால் போர்ப்பறை சத்தம் கேட்டவுடன்
மனம் தெளிந்து தன் ஒரே மகனை அழைத்து அவன் கையில் வேலை கொடுத்தாள். வெண்மையான ஆடையை
அவனுக்கு அணிவித்தாள். அவன் தலைமுடியை எண்ணெய் தடவி முடிந்தாள். பின்னர் ‘போர்க்களம்
நோக்கிப் போய் வா’ என்று அனுப்பினாள். தன்னைப் பாதுகாக்கத்
தன் மகன் மட்டுமே உள்ளான் என்ற நிலையிலும், தன் தாய் நாட்டிற்காக, சுயநலமின்றி தன்
ஒரே மகனை போருக்கு அனுப்பும் அளவிற்குச் சங்ககாலப் பெண்கள் மனவலிமை பெற்றிருந்தனர்
என்பதை இப்பாடல் காட்டுகின்றது.
ஈன்று புறந்தருதல் என்
தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக்
கடனே
வேல் வடித்துக் கொடுத்தல்
கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக்
கடனே
ஒளிறு வாள் அருஞ் சமம்
முருக்கி
களிறு எறிந்து பெயர்தல்
காளைக்குக் கடனே.
பாடியவர் - பொன்முடியார்
திணை - வாகை. பகைவர்களைக்
கொன்று வெற்றி பெற்ற வீரர்கள் வாகைப் பூவினை
அணிந்து வெற்றியைக் கொண்டாடுவர்
துறை - மூதின்முல்லை. மறக்குடியில் பிறந்த பெண்களுக்கும்
வீரம் உண்டு என்பதை இத்துறை விளக்குகிறது.
பாடல் விளக்கம்:
மறக்குடியில் பிறந்த ஒரு பெண், தாய், தந்தை,
கொல்லன், வேந்தன் ஆகியோரின் கடமைகள் குறித்துத் தன் மகனுக்கு எடுத்துரைக்கின்றாள்.
தாயின் கடமை:
மகனைப் பெற்று, வளர்த்து, பாதுகாத்து, அவனை உடலிலும் உள்ளத்திலும் வலிமையுள்ளவனாக
வளர்ப்பது ஒரு தாயின் கடமையாகும்.
தந்தையின் கடமை:
அவனைத் தன் குலத்திற்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி, அதனைப் பெறுவதற்குரிய
அறிவு ஆகியவற்றைக் கொடுத்து அறிவுள்ளவனாக வளர்ப்பது ஒரு தந்தையின் கடமையாகும்.
கொல்லனின் கடமை:
அம் மகனுக்கு வேல் முதலிய படைக்கருவிகளைச் செய்து கொடுத்தல் ஒரு கொல்லனுக்குக்
கடமையாகும்.
வேந்தன் கடைமை:
அவனும் அவன் குடும்பத்தாரும் குறைவின்றி வாழ நீர் நிலங்களைக் கொடுத்தல் அந்நாட்டை
ஆளும் வேந்தனின் கடமையாகும்.
மகனின் கடமை:
போரில் பங்கேற்று வாள் வீசி பகைவர்களைத் தோற்கடித்து, யானைகளை அடக்கி மீண்டு
வருதல் ஒரு மகனின் கடமையாகும்.
3
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர
வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ
ரன்ன
சாதலும் புதுவது அன்றே;
வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும்
இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே
மின்னொடு
வானம் தண்துளி தலைஇஇ
ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற்
பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல்
ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது
திறவோர்
காட்சியின் தெளிந்தனம்
ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும்
இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும்
இலமே.
பாடியவர் : கணியன் பூங்குன்றனார்
திணை
: பொதுவியல். வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும்,
அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
துறை: பொருண்மொழிக்காஞ்சி. துறவியர்கள் கற்று உணர்ந்த
நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.
பாடல் விளக்கம்:
- எல்லா ஊரும் நமக்கு சொந்தமான ஊரே. எல்லோரும் நம் உறவினர்களே.
- தீமையும் நன்மையும் துன்பமும் இன்பமும் பிறரால் வருவதில்லை. நாம் செய்யும் செயல்களாலேயே வருகின்றது.
- இறப்பு என்பது புதியதன்று. நாம் கருவில் தோன்றிய நாள் முதலே நம் இறப்பு தீர்மானிக்கப்பட்டதாகும்.
- வாழ்க்கை இனிமையானது என்று மகிழவும் வேண்டாம். வெறுப்பு வரும்போது துன்பமானது என்று ஒதுக்குவதும் வேண்டாம்.
- நீர் வழியே செல்லும் தெப்பம் போல, நம் உயிரானது விதியின் வழியே தான் செல்லும் என்பதை அறிஞர் தம் கருத்துகளால் அறிவோம்.
- ஆகையால், பெரியோரை மதித்தலும் வேண்டாம். சிறியோரை பழித்தலும் வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக