திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
திராவிட இயக்கத்தால் தமிழ்
இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. மேடைத்தமிழ், இதழியல் தமிழ், திரைத்தமிழ், அறிவியல்
தமிழ், ஆட்சித்தமிழ் உள்ளிட்ட என்ற புதிய இலக்கியச் சிந்தனைகள் உருப்பெற்றன.
திராவிட இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள்
திராவிட இயக்கத்தை வளர்த்தெடுக்க
கவிதைகள், உரைகள், மேடைப் பேச்சுகள், சிறுகதைகள், நாடகங்கள் முதலிய இலக்கிய வகைகள்
பயன்பட்டன. அவ்வகையில் பேரறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, உவமைக் கவிஞர்
சுரதா, நாஞ்சில்நாதன், கண்ணதாசன், வாணிதாசன், முடியரசன், கவிஞர் தமிழ்ஒளி, அப்துல்
ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், நிர்மலா சுரேஷ், கவிஞர் கனிமொழி, தமிழச்சி தங்க
பாண்டியன், கவிஞர் சல்மா உள்ளிட்ட பலர் திராவிட இயக்கத்தின் கருத்துகளைத் தங்கள் படைப்புகளின்
வாயிலாக வெளிப்படுத்தினர். அவர்களுள் குறிப்பிடத்தக்க சான்றோர்களான பெரியார், அண்ணா,
கலைஞர் ஆகியோர் குறித்து பின்வருமாறு காணலாம்.
பெரியாரும் மொழிச் சீர்த்திருத்தமும்.
பெரியார் என்று மதிப்புடன்
அழைக்கப்படுகின்ற ஈ.வெ.ராமசாமி அவர்களால் தமிழ் எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
உயிர் எழுத்தான “ஐ“ என்பதை “அய்“ என்றும், “ஔ“ என்பதை “அவ்“ என்றும் எழுதுமாறு வலியுறுத்தினார்.
சான்றாக, “ஐயா“ என்பதை “அய்யா“ என்றும், “ஔவை“ என்பதை “அவ்வை“ என்றும் எழுதி, அவ்வழக்கத்தை
நடைமுறைப்படுத்தினார். மேலும், மெய் எழுத்துகளில் சில உயிர்மெய்க் குறியீடுகளான ஐ,
உ, ஊ, ஒ, ஓ என்ற எழுத்துகளுடன் கூடி வருகின்ற எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ்
எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றும், அதன் மூலம் தமிழ்க் கற்பதும் தட்டச்சு
செய்வதும் எளிதாகும் என்றும் அறிவித்து, அதற்கான வரி வடிவங்களைத் தானே உருவாக்கி தன்னுடைய
அச்சகத்திலும் பயன்படுத்தினார். இவருடைய இச்சீர்த்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்றுக்
கொண்டு 1978ஆம் ஆண்டு அதனை நடைமுறைப்படுத்தியது. மேலும், பெரியாரின் சிந்தனைகள் பல
இதழ்களில் தலையங்கங்களாக இடம் பெற்றுள்ளன. மேடையிலும், தலையங்கக் கட்டுரையில் அவர்
பயன்படுத்திய எளிய தமிழ், படிப்போரைக் கவர்ந்தது.
மேடைத்தமிழும் பேரறிஞர் அண்ணாவும்
அண்ணாவின் மேடைப் பேச்சுகள்
இலக்கியமாக மதிக்கப்படுகின்றன. அவருடைய உரைகள் கவிதை நடையில், இலக்கியச் செழுமை மிக்கதாக
அமைந்திருப்பது சிறப்பு. இன்று மேடைப் பேச்சு ஒரு கலையாக மதிக்கப்படுவதற்கு அண்ணாவின்
உரைகளும் ஒரு காரணமாகும். மேடைப் பேச்சில் தனக்கென்று ஓரு புதிய வழியை ஏற்படுத்திக்
கொண்டு மக்கள் மனதில் சீர்த்திருத்த கருத்துகளை விதைத்தார். வேலைக்காரி, ஓர் இரவு,
நீதி தேவன் மயக்கம் உள்ளிட்ட புரட்சி மிகுந்த நாடகங்களையும், செவ்வாழை, சொர்க்கத்தில்
நரகம், பிடி சாம்பல் முதலிய சிறுகதைகளையும், இரங்கூன் ராதா, பார்வதி பி.ஏ முதலிய நாவல்களையும்
எழுதித் தமிழுலகிற்குப் புத்துயில் அளித்தார். “தம்பிக்கு“ என்ற பெயரில் அவர் எழுதிய
கடிதங்கள் சமுதாயத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையை வௌிப்படுத்துகின்றன.
திரைப்படங்களில் இவரது உரையாடல் அடுக்கு மொழியில் அமைந்து மக்களிடையே பெரும் எழுச்சியை
ஏற்படுத்தியது. அதனால் “அடுக்கு மாழி அண்ணா” என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
திரைத்தமிழும் கலைஞரும்
தமிழ்
மொழியின் வளர்ச்சிக்குப் பல்வேறு படைப்புகள் மூலம் தொண்டாற்றியவர் கலைஞர் கருணாநிதி.
ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் முதலிய நாவல்கள் அவரது
சமத்துவ சிந்தனைகளை வெளிக்காட்டின. விஷம் இனிது, சித்தார்த்தன் சிலை உள்ளிட்ட சிறுகதைகள்
சமய மறுப்புக் கொள்கைகளை வலியுறுத்தின. இவருடைய “அணில் குஞ்சு” என்ற சிறுகதை மதநல்லிணக்கத்தை
எடுத்துக்காட்டுகின்றது. நாடகத்துறையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட கலைஞர் நாடகத்தைப்
படைப்தோடன்றி நடிக்கவும் செய்தார். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை மையமாகக்
கொண்டு மந்திரிகுமாரி என்ற நாடகத்தைப் படைத்தார். பிற்காலத்தில் இது திரைப்படமாகவம்
வெளிவந்தது. உதயசூரியன், நானே அறிவாளி, புனித ராஜ்யம் உள்ளிட்ட நாடகங்கள் அரசியல் பிரச்சார
நாடகங்களாக வெளிவந்தன. இவருடைய நாடகங்கள் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும் அங்கத
வகையில் அமைந்தவை. திரைத்துறையில் வசனங்களின் மூலம் புதிய வரலாறு படைத்தவர் கலைஞர்.
மனோகரா, மந்திரிகுமாரி, பூம்புகார், பராசக்தி முதலிய திரைப்படங்களின் வசனங்கள் மாறுபட்ட
கோணத்தில் தமிழை அடையாளம் காட்டின. அவருடைய “குறளோவியம்“ மிகச் சிறந்த படைப்பாகப் போற்றப்படுகின்றது.
எளிய முறையில் பாமர மக்களும் படித்து இன்புற, “தொல்காப்பியப் பூங்கா“ என்ற நூலை எமுதியுள்ளார்.
மூவரின் தமிழ் மாநாடுகள்
பெரியார்,
பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய மூவரும் தங்களின் படைப்பால் தமிழுக்குத் தொண்டு செய்ததோடு,
பல்வேறு மாநாடுகளை நடத்தித் தமிழ் மொழியை உலகரங்கிற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்களாகப்
போற்றப்படுகின்றனர். பெரியாரின் திருக்குறள் மாநாடு, அறிஞர் அண்ணாவின் உலகத்தமிழ் மாநாடு,
கலைஞரின் செம்மொழி மாநாடு ஆகியவை தமிழின் மொழி வளமையை, இலக்கணச் சிறப்பை, இலக்கியச்
செழுமையை உலக அறிஞர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. குறிப்பாக, இன்றைய கணினி உலகில்
தமிழை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் “தமிழ் இணையம் 1999” என்ற பெயரில்
மாநாட்டை நடத்திய பெருமை கலைஞரையே சாரும். கணினித்தமிழை வளர்த்தெடுக்கும் நோக்கில்
“தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய பெருமையும் கலைஞருக்கு உண்டு. இதனால் அறிவியல்
துறையில் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக