தனிப்பாடல்
தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிப்பாடலுக்குத்
தனிச்சிறப்பு உண்டு. பல்வேறு புவலர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுத்
தனிப்பாடல் திரட்டு என்று பெயர் பெற்றுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள சில புலவர்கள்
குறித்துப் பின்வருமாறு காணலாம்.
ஔவையார்
தமிழ் இலக்கியங்களில் ஔவையார் என்ற பெயரில்
பல புலவர்கள் காணப்படுகின்றனர். சங்காலத்தில், இடைக்காலத்தில், பிற்காலத்தில் என ஒளவையார்
பெயரில் இலக்கியங்கள் இருக்கின்றன. தனிப்பாடல் திரட்டில் இவர் பாடியதாக எண்பது பாடல்கள்
காணப்படுகின்றன.
காளமேகப் புலவர்
கும்பகோணத்தை அடுத்த நந்திபுரத்தில்
பிறந்தவர். இயற்பெயர் வரதன். காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு. இறைவியின் அருளால் காளமேகம்
போன்று கவிதைகள் வழங்கியதால் காளமேகப் புலவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆசு கவி பாடுவதில்
(நினைத்தவுடன் பாடுவது) வல்லவர். வசை பாடுவதிலும் வல்லவர். அதனால், “ஆசு கவியால் அகில
உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்” என்று புகழப்பட்டவர். இவருடைய பாடல்கள் நகைச்சுவை
மிகுந்தவை. இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சரசுவதி மாலை, திருவானைக்கா
உலா, சித்திர மடல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
இரட்டைப் புலவர்கள்
இளஞ்சூரியர், முதுசூரியர்
என்ற இரட்டையர்களே இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் ஒருவர்
முடவர், மற்றொருவர் பார்வை அற்றவர். காலம் கி.பி15ஆம் நூற்றாண்டு. “கண்பாயக் கலம்பகத்திற்கு
இரட்டையர்கள்” என்று போற்றப்படுகின்றனர். பார்வையற்றவரின் தோளில் முடவர் அமர்ந்து கொண்டு
வழிகாட்ட இருவரும் பயணம் செய்வர். பாடல்களில் முதல் இரண்டு அடியை ஒருவர் பாடப் பின்னிரண்டடியை
மற்றொருவர் பாடி முடிப்பது இவர்களின் வழக்கமாகும். தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகமும்,
ஏகாம்பரநாதர் உலா, கச்சிக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.
அந்தகக் கவி வீரராகவ முதலியார்
தொண்டை நாட்டில் பொன்விளைந்த
களத்தூரில் பிறந்தவர். காலம் கி.பி17ஆம் நூற்றாண்டு. வசை பாடுவதில் வல்லவர். பார்வையற்றவர்.
சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்ற மாலை, திருவாரூர் உலா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
சத்தி முத்தப் புலவர்
கும்பகோணத்தை
அடுத்த சத்திமுத்தம் என்ற ஊரில் பிறந்தவர். வறுமையில் வாடிய இப்புலவர் பாண்டிய மன்னன்
மாறன் வழுதியிடம் பரிசில் பெறச் சென்றார். மழையில் மாட்டிக் கொண்டு ஒரு குட்டிச் சுவரின்
அருகில் ஒதுங்கியிருக்கும்போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டார். தன் மனைவிக்கு நாரையைத்
தூதாக அனுப்புவதுபோல் “நாராய் நாராய் செங்கால் நாராய்” என்ற பாடலைப் பாடினார். நகர
சோதனையில் ஈடுபட்டிருந்த மாறன் வழுதி இப்பாடலின் உவமைக்கு மகிழ்ந்து, அப்புலவனின் வறுமை
தீர்த்ததாகக் கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக