ஞாயிறு, 31 மார்ச், 2024

வேலைக்காரி – அறிஞர் அண்ணா

 

வேலைக்காரி – அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவால் 1947 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாடகம், 1949ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. இத்திரைப்படத்தில் கே.ஆர்.இராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், எம்.வி.இராஜம்மா, வி.என்.ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

வட்டியூர் ஜமீன்தார் வேதாச்சலம் பணவெறியும் ஜாதி வெறியும் பிடித்தவர். அவருக்கு சரசு, மூர்த்தி என இரண்டு பிள்ளைகள். சரசு தான் செல்வந்தரின் மகள் என்ற ஆணவம் கொண்டு, தன் வீட்டு வேலைக்காரியாகிய அமிர்தத்தை எப்போதும் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கின்றாள். மூர்த்தி நல்ல பண்புள்ளம் கொண்டவன். சரசு அமிர்தத்தைக் குறை கூறும்போதெல்லாம் மூர்த்தி அவளுக்காகப் பரிந்து பேசுகின்றான்.

அமிர்தம் – மூர்த்தி காதல் கொள்ளுதல்

அமிர்தத்தின் தந்தை முருகேசன் வேதாச்சலத்தின் நம்பிக்கையான பணியாள். அவர் தன் மகளுக்கு வயதான ஒருவரை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்கின்றார். அமிர்தம் அத்திருமணத்தை மறுக்கின்றாள். வேதாச்சலமும், சரசுவும் முருகேசனுக்கு ஆதரவாக பேச, மூர்த்தி அமிர்தத்திற்கு ஆதரவாக பேசுகின்றான். மாப்பிள்ளை வீட்டினர் அமிர்தத்தைப் பெண் பார்க்க வருகின்றனர். அப்போது மூர்த்தி தந்த யோசனையின் பேரில் தன் முகத்தை அலங்கோலமாக்கிக் கொண்டு நிற்கின்றாள் அமிர்தம். இப்படிப்பட்ட பெண் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்தை நிறுத்துகின்றனர். நாளடைவில் மூர்த்தியும் அமிர்தமும் காதல் கொள்கின்றனர்.

சுந்தரம் பிள்ளை தற்கொலை செய்து கொள்ளுதல்

          அந்த ஊரில் மானத்திற்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுந்தரம் பிள்ளை வேதாச்சலத்திடம் கடன் வாங்குகின்றார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் வேதாச்சலம் சுந்தரம் பிள்ளையின் வீட்டிற்கு வந்து அவரைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுப்பதாக மிரட்ட, சுந்தரம்பிள்ளை அவரிடம் கெஞ்சுகின்றார். வேதாச்சலம் மனம் இரங்காதது கண்டு, அவமானம் தாங்காமல் தன் வீட்டு மரக்கிளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கின்றார்.

சுந்தரம் பிள்ளையின் மகன் ஆனந்தன் வருகை

          தேயிலைத் தோட்டத்தில் இரவும் பகலும் உழைத்து, 200 ரூபாய் சம்பாதித்துக் கொண்டு, தன் தந்தை சுந்தரம் பிள்ளைக்கு ஒரு கடை வைத்துக் கொடுக்கும் ஆவலோடு தன் சொந்த ஊருக்குத் திரும்பும் ஆனந்தன் வழியில் தன் நண்பன் மணியோடு உரையாடிக் கொண்டு வருகின்றான். வீட்டிற்குச் சென்றபோது தன் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு கதறுகின்றான். தன் தந்தையின் கையில் இருநு்த கடிதத்தைக் கண்டு, இதற்கெல்லாம் காரணம் வேதாச்சலம் என்பதை அறிகின்றான். அவரைப் பழிவாங்கத் துடிக்கின்றான்.

மணி ஆனந்தனுக்கு அறிவுரை கூறுதல்

ஆனந்தன் வேதாச்சலத்தைக் கொலை செய்வதற்காகக் கத்தியைத் தீட்டுகின்றான். இதைக் கண்ட மணி ஆனந்தனுக்கு அறிவுரை கூறுகின்றான். “பழி வாங்கும் திட்டத்தை விட்டுவிடு. அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைக்க வேண்டும். ஊரார் முன்பாக அவனைத் தலைகுனிய வைக்க வேண்டும். அதற்கான வழியை நாம் செய்ய வேண்டும்” என்று கூற, ஆனந்தனும் மணி சொல்வது சரி என்று ஒப்புக் கொள்கின்றான்.

ஆனந்தன் தற்கொலைக்கு முயலுதல்

வேலை செய்யும் இடத்தில் ஆனந்தன் ஒருவனிடம் கடன் வாங்க, கடன் கொடுத்தவர் ஆனந்தனைத் தகாத வார்த்தையில் பேசி, உன் தந்தைபோல நீயும் எங்கேயாவது சாக வேண்டியதுதானே” என்று கூற மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கின்றான் ஆனந்தன். ஆனால் அவன் மனசாட்சி அவனைக் கேள்வி கேட்கின்றது. அந்த சமயத்தில் மணியும் வந்து விட, மணியிடம் புலம்புகின்றான் ஆனந்தன். அப்போது “காளியின் அருள் வேதாச்சலம் போன்ற செல்வந்தனுக்குத் தான் கிடைக்கும் உன்னைப்போன்ற ஏழைக்கு எப்படி கிடைக்கும்” என்று கூற, ஆனந்தன் நேரே காளியின் கோயிலுக்குச் சென்று, காளியிடம் ஆவேசமாகப் பேச ஆட்கள் வந்து அவனை விரட்டுகின்றனர். பொதுமக்கள் ஆனந்தனை துரத்துகின்றனர். இதைக் கண்ட மணி, ஒரு பாழுங்கிணற்றைக் காண்பித்து அதில் நீ ஒளிந்து கொள் என்று கூற ஆனந்தனும் ஒளிந்து கொள்கின்றான்.

ஆனந்தனைத் தேடி மணியும் வர, இருவருக்கும் ஒரு மூட்டை கண்ணில் படுகின்றது. அம்மூட்டையில் இறந்த உடல் ஒன்றைக் காண்கின்றனர். மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் அதில் உள்ள மனிதன் ஆனந்தன் மாதிரியே இருக்கின்றார். கூடவே அவரது நாட்குறிப்பும் கிடைக்கின்றது. அதன் மூலம் அவருடைய பெயர் பரமானந்தம் என்றும், அவர் மிகப் பெரும் செல்வந்தர் என்றும், அவருடைய தாயார் கண் பார்வை அற்றவர் என்றும், விலை உயர்ந்த வைரங்கள் அவனிடம் இருந்தததால் அதை அறிந்த எவனோ அவனைக் கொலை செய்துள்ளான் என்றும் அறிகின்றனர்.

ஆனந்தன் பரமானந்தனாக மாறுதல்

வேதாச்சலத்தைப் பழிவாங்க இதுவே சரியான வழி என்று எண்ணிய மணி, ஆனந்தனைப் பரமானந்தனாக மாற்றுகின்றான். இருவரும் பரமானந்தன் வீட்டிற்குச் செல்கின்றனர். பரமானந்தனின் தாயாரைச் சந்திக்கின்றனர். வெளியூருக்குச் சென்ற மகன் திரும்பிவிட்டான் என்று எண்ணி அந்தத் தாய் மகிழ்ச்சி கொள்கின்றாள். தன் மகனுக்கு வேதாச்சலத்தின் மகள் சரசாவை மணம் பேச வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கின்றாள். அதனை ஏற்ற மணி, வெளிநாட்டுக்குச் சென்ற பரமானந்தன் சொந்த ஊர் திரும்பியிருக்கின்றான் என்பதைச் செல்வந்தர் பலருக்குத் தெரியப்படுத்த ஒரு பார்ட்டி நடத்தலாம் என்று யோசனை கூற, தாயும் சம்மதிக்கின்றாள். அதன்படி வேதாச்சலம் அந்த பார்ட்டியில் கலந்து கொள்கின்றார். அவனுடைய செல்வமும், பரமானந்தனின் அழகும் அவரை ஈர்க்கின்றது. தன் மகள் சரசாவைப் பரமானந்தனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்.  

பரமானந்தன் வேதாச்சலத்தைப் பழி வாங்குதல்

 பரமானந்தன் வேடத்தில் இருக்கும் ஆனந்தன் வேதாச்சலத்தின் மீதான தன் பழியைத் தீர்த்துக் கொள்ள தன் மனைவியைப் பலவாறு கொடுமைப்படுத்துகின்றான். பொய்யாகக் குடித்து, பல பெண்களுடன் தொடர்பு இருப்பது போல நடித்துத் தன் மாமனார் வேதாச்சலத்தின் நற்பெயரைக் கெடுக்கின்றான். அமிர்தத்திடம் தவறாக நடப்பதுபோல காட்டி, மூர்த்திக்கும் தன் மாமனாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகின்றான். இதனால் மூர்த்தி வீட்டை விட்டு வெளியேறுகின்றான். சென்னை சென்று தன் நண்பரின் உதவியைப் பெற்ற பிறகு அமிரத்தத்தைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து விட்டுச் செல்கின்றான்.

அமிர்தம் பாலுவின் மகளாக மாறுதல்

அமிர்தத்தைத் தனது கிராமத்திற்கு அழைத்துச் சென்று யாருக்காவது மணமுடிக்கலாம் என்று அவரது தந்தை திட்டமிடுகின்றார். அதைக் கவனித்த அமிர்தம் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். தான் ஏறி வந்த லாரியின் முதலாளி சொல்லுக்கிணங்க பழம் விற்கும் தொழிலைச் செய்கின்றாள். அப்போது ஒரு நாள் தெருவில் பழம் விற்றுக் கொண்டிருக்கும்போது, பாலு முதலியார் என்பவர், அவளைக் கண்டு தன் மகள் சுகிர்தம் நீதான் என்று கூறி, வலுக்கட்டாயமாக அவளை ஒரு மருத்துவமனைக்கு இழுத்துச் செல்கின்றார். அங்கே மருத்துவர் இருவரையும் புரிந்து கொண்டு, அமிர்தத்திடம், “இவர் ஒரு விபத்தில் தன் மகளை இழந்து விட்டார். அதனால் அவருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டு உன்னைத் தன் மகளாக எண்ணுகின்றார்” என்று கூற, அமிர்தம் அவரைத் தன் தந்தைபோல பாவித்து, தன்னால் ஆன உதவி செய்து அவரைக் குணமாக்குகின்றாள். குணமான பின்பு பாலு முதலியார் அவளுடைய வாழ்க்கையின் அவல நிலையைக் கேட்டு, தன் மகளாக அவளை ஏற்றுத் தன் வீட்டிலேயே வாழச் செய்கின்றார்.

மூர்த்தியின் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்றல்

தங்களிடம் உதவி கேட்டு வந்த மூர்த்தியை அவனுடைய  நண்பர்கள் நிராகரிக்கின்றனர். அமிர்தம் இறந்துவிட்டதாகத் தவறான செய்தியைக் கேள்விப்படுகின்ற மூர்த்தி மனமுடைந்து போகின்றான். நண்பர்களின் நிராகரிப்பும், காதலித்தவளின் மரணமும் அவனைத் துன்புறுத்துகின்றது. அதனால் மன அமைதி பெற யோகி நடத்துகின்ற ஆசிரமத்திற்குச் செல்கின்றார். யோகி உண்மையான ஆன்மிகவாதி அல்ல என்பதைக் கண்டுபிடிக்கின்றார். இருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் யோகி இறந்து விட, மூர்த்தி கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றார். இதை அறிந்த ஆனந்தன் வட இந்திய வழக்கறிஞராக மாறுவேடத்தில் வந்து, “யோகி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்றும், நடந்தது கொலை அல்ல தற்காப்புக்காக நடந்த சண்டையில் அவர் உயிரிழக்க நேரிட்டது“என்று வாதிடுகின்றார். நீதிமன்றம் மூர்த்தியை விடுதலை செய்கின்றது.

மகிழ்ச்சியான முடிவு

பாலு முதலியாரின் வீட்டில் இருக்கும் சுகிர்தம், வேதாச்சலம் வீட்டின் பணிப்பெண் அமிர்தம்தான் என்பதை மணியின் மூலமாக ஆனந்தன் தெரிந்து கொள்கின்றான். ஆனந்தன் தன் வழக்காடியதற்குக் கட்டணமாக பாலுவின் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். சுகிர்தம் என்ற பெயரில் இருக்கும் அமிர்தத்தை மூர்த்தி திருமணம் செய்து கொள்கின்றார்.

இறுதியாக, வேதாச்சலத்திடம், தான் யார் என்பதையும், தன் தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்பதற்காகவே சரசாவை திருமணம் செய்து கொண்டு அவளைக் கொடுமைப்படுத்தியதாகவும், ஜாதி வெறியை அடக்கவே, அமிர்தத்திற்கும் மூர்த்திக்கும் திருமணத்தை நடத்தினேன் என்றும் ஆனந்தன் விவரிக்கின்றான். இவற்றையெல்லாம் கேட்ட வேதாச்சலம் தன் தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்கின்றார். யாரும் தன்னை ஒதுக்கிவிட வேண்டாம் என்று கூறி, தன் ஜாதி வெறியும், பணத்திமிரும் ஒழிந்து விட்டது என்பதை வெளிப்படுத்த, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று நாட்டு மக்களுக்கு உரைப்போம்” என்று கூறுவதோடு நாடகம் நிறைவுறுகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக