தொல்காப்பியப் பூங்கா - கலைஞர் கருணாநிதி
எழுத்து – முதல் நூற்பா
தொல்காப்பியப்
பூங்கா என்ற நூலில் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொல்காப்பியத்தின் நூற்பாக்களுக்குப்
புதுமையான முறையில் விளக்கம் அளிக்கின்றார். அவற்றுள் எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவிற்குக்
கலைஞர் இயற்றியுள்ள கற்பனை நயத்தைப் பின்வருமாறு காணலாம்.
தொல்காப்பியரின் கனவில் அணிவகுத்த
எழுத்துகள்
தொல்காப்பியர்
“எழுத்து“ என ஓலையில் எழுதிவிட்டு, சிந்தனை உறக்கத்தில் இருந்தார். எல்லா மொழிகளுக்கும்
ஒலிதான் மூலம் என்பதால் தொல்காப்பியரின் கனவில் ஒலி எழுப்பியவாறு எழுத்துகள் நடந்து
வந்து அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அணிவகுத்து நின்றன. முன்வரிசையில் அ,
ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய எழுத்துகளும், பின்வரிசையில் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்
ஆகிய எழுத்துகளும் அணிவகுத்தன.
குற்றியலிகரமும் குற்றியலுகரமும்
அப்போது சுவர்
ஓரமாக இரு நிழல்கள் தோன்றி ஒலி எழுப்பின. அவற்றின் ஒலி சற்று குறுகியதாகக் கேட்டமையால்
தொல்காப்பியர் விழி திறந்து நோக்கினார்.
ஒரு நிழல் – என் பெயர்
இகரம் என்றது
மற்றொரு நிழல் – என் பெயர்
உகரம் என்றது.
தொல்காப்பியர் அந்த நிழல்களைப்
பார்த்து “நீங்கள் குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற வரிசையில் இடம் பெறுவீர்கள்.
முதல் எழுத்துகள் முப்பதின் வரிசையில் உங்களை அமர வைக்க முடியாது” என்று கூறிவிட்டார்.
ஆய்த எழுத்து
அப்போது கம்பு
ஒன்றை ஏந்திக் கொண்டு ஒரு புதுமையான உருவம் தோன்றி, “இந்த முப்பதோடு என்னை இணைக்க ஒப்புகிறீர்களா?”
என்று கேட்டது. தொல்காப்பியர், “நீ ஆயுதம் ஏந்தி ஆய்த எழுத்தாக வந்தாலும் உன்னை முதல்
வரிசையில் நிற்க வைத்து விடுவேன் என்று நினைப்பா?” என்று கேட்டார். அவரது கோபம் உணர்ந்த
ஆய்த எழுத்து, “ஐயனே என்னை முதல் வரிசையில் வைக்காவிட்டாலும், முக்கியமான சமயங்களில்
நான் உதவிக்கு வருவேன்” என்று அடக்கமாகக் கூறியது. தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக்
கொண்டே எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை எழுதி முடித்துவிட்டு, “நீ எனக்கு உதவிட வருகிறேன்
என்றாயா? நல்ல வேடிக்கை” என்று புன்னகை புரிந்தவாறு கூறினார். “ஆமாம்! தாங்கள் எழுதிய
முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டீர்களே! என்று மகிழ்ச்சியாகத் துள்ளிக்
குதித்தது. தொல்காப்பியர் தாம் எழுதியதைத் திரும்பப் படித்தார்.
“எழுத்தெனப்
படுப
அகர முதல்
னகர ஈறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்து
வரல் மரபின் மூன்றலங்கடையே” (எழுத்து, நூல் மரபு- 1)
“அவைதாம்
குற்று
இயல் இகரம், குற்று இயல் உகரம்
ஆய்தம்
என்ற
முப்பால்
புள்ளியும் அவற்றோர் அன்ன” (எழுத்து, நூல் மரபு – 2)
அதில் “முப்பஃ தென்ப” என்ற
தொடரில் ஆய்த எழுத்து அமர்ந்து கொண்டதை அவரும் வியப்புடன் நோக்கி நிறைவான மகிழ்ச்சி
கொண்டார்.
விளக்கம்
தமிழ் எழுத்துகளுள்,
உயிர் எழுத்துப் பன்னிரெண்டும், மெய் எழுத்து பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள்
முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. குறுகிய ஒலியைக் கொண்ட இகரம் குற்றியலிகரம்
என்றும், குறுகிய ஒலியைக் கொண்ட உகரம் குற்றியலுகரம் என்றும், “ஃ“ என்ற எழுத்து ஆய்த
எழுத்து என்றும் கூறப்படுகின்றன. இவை மூன்றும் சார்பெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.
இவை தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல், பிற எழுத்துகளோடு பொருந்தி வரும் தன்மை கொண்டவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக