ஞாயிறு, 31 மார்ச், 2024

செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

இதழியல் - முரசொலி கடிதம்

செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

தமிழின் சிறப்புகளை உலகோர் அறியும் வண்ணம் “உலகத் தமிழ் மாநாடு” என்ற பெயரில் பல மாநாடுகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு“ என்ற பெயரில் முதன் முதலாக கோவையில் தமிழ்மொழி மாநாட்டை நடத்திய பெருமை கலைஞர் கருணாநிதி அவர்களையே சாரும். இம்மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவையில் ஜூன் மாதம் 23 ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது. அம்மாநாடு நடப்பதற்கு முன்னர் தம் முரசொலி இதழில் “உடன்பிறப்பே“ என்ற தலைப்பில் எட்டுக் கட்டுரைகளை வழங்கினார் கலைஞர்.  “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற முதல் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள செய்திகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு காணலாம்.

கட்டுரையின் கருப்பொருள்

தமிழ் மொழியைச் செம்மொழி என அடையாளப்படுத்துவதற்கு உழைத்த அறிஞர்கள் பலர். அவர்களுள் தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்த முதல் அறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். தமிழைச் செம்மொழி என அறிவிக்க அவர் எடுத்துக் கொண்ட தொடர் முயற்சிகளை கலைஞர் கருணாநிதி அவர்கள் இக் கட்டுரையில் விவரிக்கின்றார்.

பரிதிமாற் கலைஞரின் கருத்துகள்

1902 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட செந்தமிழ் என்னும் இதழில் “உயர்தனிச் செம்மொழி“ என்ற தலைப்பில், “தென்னாட்டின்கண் சிறந்தொளிரா நின்ற நம் அமிழ்தினும் இனிய தமிழ்மொழி எவ்வாற்றால் ஆராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியே என்பது திண்ணம்” என்று விளக்கியுள்ளார். 1903 ஆம் ஆண்டு “தமிழ் மொழியின் வரலாறு“ என்ற தமது நூலில், “தமிழ் – தெலுங்கு முதலியவற்றிற்கெல்லாம் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழி என்க” என்று பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்தக் கருத்துகள் அறிஞர் பலரின் கவனத்திற்குச் சென்றன. தமிழைச் செம்மொழி என அழைக்க வேண்டும் என்று பல அறிஞர்கள் வாதிட்டனர். ஆயினும், தமிழ் மொழியைச் செம்மொழி என நூறாண்டுகளுக்கு முன்பே உறுதியாக நிலைநாட்டிய பெருமை பரிதிமாற்கலைஞரையே சாரும்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்த அரசு மரியாதை

தனியார் பொறுப்பில் இருந்த பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்தி, புதுப்பித்து நினைவு இல்லமாக்கினார். நினைவு இல்லத்தின் முகப்பில் பரிதிமாற் கலைஞரின் மார்பளவு சிலையை நிறுவினார். அந்த இல்லத்தைத் திறந்து வைத்து, “தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரிக் குரல் கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் புகழ் வாழ்க” என்று பார்வையாளர் புத்தகத்தில் கையொப்பமிட்டார். பரிதிமாற்கலைஞரின் அனைத்து நூல்களையும் அரசுடைமையாக்கினார். அவரது மரபுரிமையாளர்களுக்கு 2006ஆம் ஆண்டு 15 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கினார். 2007 ஆம் ஆண்டு பரிதிமாற்கலைஞர் நினைவு சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டார்.

பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்பணி

தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையைப் போக்க “நாடகவியல்“ என்னும் நூல் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழி உட்பட உள்நாட்டு மொழிகளைப் பாடப் பகுதியிலிருந்து நீக்கத் திட்டமிட்டபோது, திரு பூர்ணலிங்கம் அவர்களோடு இணைந்து, தமிழறிஞர்களின் வீடுதோறும் சென்று, முயன்று பல்கலைக்கழகத்தின் திட்டத்தைத் தடுத்தார். தமிழ்மொழி தொடர்ந்து பல்கலைக்கழகப் பாடமொழியாக நீடித்தது. தமிழ் மொழியின் வரலாறு என்ற தம் நூலில், வடமொழியாளர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களுடைய வேஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.  அக்கருத்துகள் யாவும், தமிழர் அனைவராலும், குறிப்பாக பெரியார், அண்ணா வழி வந்தவர்கள் அனைவராலும் நினைவு கூரத்தக்கதாகும். ஆகவேதான், சூரியநாராயண சாஸ்திரியார் அவர்களை முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் என்று அழைத்து அவர் புகழ் வாழ்க என்று தன் நெஞ்சத்து உணர்வு கலந்து வாழ்த்துவதாக இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.


குறிப்பு - முரசொலி இதழில் கலைஞர் கருணாநிதி அவர்கள் “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்ட கடிதம், மாணவர்கள் தேர்வுக்கு எளிதாகப் படிப்பதற்காகச் சுருக்கி எழுதப்பட்டுள்ளது. இதன் மூலப்பகுதி பின்வரும் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காண்க.

https://library.cict.in/uploads/files/books/4.pdf

இந்நூலை வெளியிட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மிக்க நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக